16.10.23

அகதியாக அப்பா...

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் பர்மா அகதியாகக் கோவைக்கு வந்தபின் அப்பாவுக்கு ஆறுதல் மிகவும் தேவைப்பட்டிருக்கிறது. மறுகுடியமர்த்தச் சான்றிதழ்(Repatriate certificate) பெறுவதற்காகச் சென்னைக்குச் சென்றிருக்கிறார். ஊழலற்ற அரசு இருந்ததால் போன அன்றே சான்றிதழ் கிடைத்திருக்கிறது. அடுத்து, தனக்குப் பிடித்த சுவாமி விவேகானந்தரின் இந்தப் புத்தகத்தை 29/6/1946 அன்று வாங்கிக்கொண்டு கோவை திரும்பியிருக்கிறார். அதில் தன் பர்மா நிறுவனமான ஓரியண்டல் நிட்டிங் ஃபேக்டரி முத்திரை குத்தியிருக்கிறார். ஏராளமான செல்வம், இரண்டு கார்கள் எல்லாமிழந்து, எங்களை 'ஐராவதி' என்ற கப்பலில் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பிவிட்டு, தன் நண்பர்களான கண.முத்தையா செட்டியார், வெ.சாமிநாத சர்மா முதலானோரோடு சிரபுஞ்சி வழியே நடைப்பயணமாக காஷ்மீர் வழியாக இந்தியா வந்திருக்கிறார் தந்தை இரங்கூன் பி.கே. அண்ணார். இதைத் திண்ணை.காம் வலையேட்டில் கட்டுரையாக எழுதியிருக்கிறேன். திண்ணை.காம் வலையேட்டின் முன்னை ஆசிரியரான திருவாளர் கோபால் ராஜாராம் பெருமைப்படுத்திப் பதிப்பித்தார். பி.கே.அண்ணன் என்று நான் தட்டெழுதியதைத் திருத்தி 'ஒரு மனிதரின் வாழ்க்கை: பி.கே.அண்ணார்' என்ற தலைப்பில் வெளியிட்டார். அப்போது அவர் அமெரிக்கா, நியூ ஜெர்சியில் பணியாற்றினார். என் தந்தை மீதிருந்த அன்பால், நாகரத்தினம் கிருஷ்ணாவின் புகழ்மிக்க நாவல் 'நீலக்கடல்' குறித்த என் வயணமான  கட்டுரையை வெளியிட்டபோது அட்டைப்படமாக என் படத்தை வெளியிட்டார். அகதியான தந்தையைப் பற்றி ஒரு பேராசிரியர் இவ்வளவு ஆழமாக எழுதியிருந்தார் என்ற அன்பாலும் நாகரத்தினம் கிருஷ்ணாவின் 'நீலக்கடல்' குறித்த கட்டுரையைப் பாராட்டுமுகமாகவும் என் படத்தை வெளியிட்டதாக அவர் குடும்பத் திருமணத்தின்போது அறிந்து கொண்டேன்.