30.3.06

நேரம் கேட்டால் கூடச் சொல்லாதே!

நேரம் கேட்டால்கூடச் சொல்லாதே! -தேவமைந்தன் பேருந்துக்கு நின்றிருந்தேன். காத்திருந்த கூட்டத்தில் ஒருவர் தன் கடிகாரம் சரிசெய்யும் நோக்கம் தெரியக் காட்டி, நேரம் கேட்டார். ஆகப் பொறுப்பாயும் துல்லியமாயும் சமயம் சொன்னேன். அடுத்து, புன்னகைத்துக் கொண்டே அருகில் வந்தவர் பேச்சுக் கொடுத்தார். பேருந்து வரும்வரை பேசுவோம்என்று பேசி நின்றேன். பையப்பைய நான் இருக்கும் தெரு, இல்லத்தின் எண் பேச்சின் ஊடே அவரிடம் சென்றன. நாள்கள் சில காணாமல் போயின. ஒரு நாள் மாலை ஆறு மணி இருக்கும். வந்தார். அகம்முகம் மலர்ந்து அவர் வரவை ஏற்றேன். என்னைப் பேச விடாமல் கோடை மழையாய்ப் பொழியத் தொடங்கினார்: “சார்! நான் அன்னைக்கே சொல்லணும்’னு நெனச்சேன். நீங்கள்’லாம் இப்படி டைம்வேஸ்ட் பண்ணி இண்டர்நெட்டு, ஈஸைன்’ட்டு எழுதறதும் ப்ரெளஸ் பண்ண்றதுமா’ நாள’யும் பொழுத’யும் கொல்’றது தேவ’யா? நா’ பாருங்க! சாதனையாளன்! நா’ இல்லாம எங்க இண்டஸ்ட்ற்றி நடக்காது.. நாங்கள்’லாம் டெக்னிகல்! நீங்க’ள்லாம் ஜென்ரல்! ஒங்க ஜென்ரல் விஷயமெல்லாம் எனக்குத் தெரியாது.. தெரிஞ்சுக்க எனக்கு டைமும் இல்லே. என் டெக்னிகல் ஸ்கில் பக்கம் நீங்கள்ளாம் மழைக்குக்கூட ஒதுங்க முடியாது...” மேலும் பொறுக்க முடியாமல் மறித்தேன். “இப்ப நீங்க என்ன விஷயமா வந்தீங்க?”- முகங் கறுத்தவர் சொன்னார்: “ஒண்ணுமில்ல சார்! எங்க’ ப்ரெஷ்ஷர் குக்கர் ப்ராடக்ட் பற்றி டிஸ்கஸ் பண்ண டெல்லிவரை போகணும்; கொஞ்சம் பைனான்ஸ் பண்ணுங்க; இம்போர்ட் ஆர்டர் கெடச்சதும் ரீபே பண்ணிடுவேன்..” மறுமொழி உரைத்தேன்: “நீங்கள்’லாம் டெக்னிகல்; நாங்கள்’லாம் ஜென்ரல்; ஒங்க லெவ’லுக்கு என்னா’ல ஒசர முடியற காலம் வந்தால், ஒதவி செய்யப் பாக்கிறேன் சார்! இப்ப நீங்க போங்க!...” ‘போயிட்டு வாங்க!’ என்று சொல்லப்படவும் கொடுப்பினை இல்லாதவர், முறைத்துக் கொண்டே போனார். இப்பொழுதெல்லாம் யாராவது எங்கேயாவது நேரம் கேட்கப் போவதாகத் தெரிந்தாலே போதும், நான் மாயமனிதன்தான். ********************************************************************************

19.3.06

ஒரு தத்துவத்தின் பரிணாமம் -- தேவமைந்தன்

“உலகத்தில் வாழ்வோர் இருவேறு வகையினர். பணமூட்டைகள் குவிப்பவர் ஆகஇருப்பவர் வேறு; தெளிவான அறிவுஉடையவர் ஆகவிளங்குபவர் வேறு;” என்றார் திருவள்ளுவர். பிற்காலத்து அறிவாளி வேய்ன் டபிள்யூ டையர் சொன்னார்: "செய்பவர் ஒருவகை; செய்யாதோர் மறுவகை. இந்த இரண்டே வகையினர்தாம் இருக்கிறார்கள் உலகில்!" பெரிய திரையும் சின்னத் திரையும் மாறி மாறிக் கொட்டிய நஞ்சு உச்சிக்கு ஏறிய நிகழ்யுக அறிவுக் கொழுந்து சொன்னது: "ஒலகத்தில இருக்கிறது'களெ ரெண்டே வகையா'ப் பிரிச்சுறலாம் - ஒண்ணு 'சொணை;' இன்னொண்ணு 'சொறி.'

14.3.06

ஆன்மாவை ஈடேற்ற போட்டாபோட்டி!

இப்பொழுதெல்லாம் நம் ஆன்மா ஈடேறுமா என்ற கவலை நமக்கு வேண்டுவதே இல்லை. போட்டி போட்டுக்கொண்டு நம் ஆன்மாக்களைக் கரையேற்ற, நிறையப்பேர் வலுக்கட்டாயமாக நம் உதவிக்கு வருகிறார்கள்.சென்னைக்கு நண்பர் காரில் சென்றுகொண்டிருந்த பொழுது அவரே இதுகுறித்துப் பேசி, "நீலாங்கரைக்குத் திருப்பவா[காரை]?" என்று முயன்றபொழுது, மிகுந்த பணிவுடன் அவர் முயற்சியைத் தடுத்து ஒரு பாபாவிடமிருந்து தப்பித்து உறவினர் இல்லம் போய்ச் சேர்ந்தேன். அடுத்தநாள் சென்னையில் எனக்குத் தெரிந்த பேராசிரிய அம்மையாருடன் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தபொழுது, அவர் இது குறித்துப் பேசி,"இங்கேதானே இருக்கிறீர்கள்? நாளை ஞாயிற்றுக்கிழமைதானே? எங்கள் வீட்டு ஹாலில் நாளை காலை ஒன்பதுக்கு ஒரு ஃபங்ஷன்! வந்துவிட்டுப் போங்கள்!" என்று தோழமையுடன் வேண்டுகோள் விடுக்க, தட்டமுடியாமல் போனேன். அங்கே 'பஜன்' நடந்துகொண்டிருந்தது. போச்சு! அங்கே புன்னகையுடன் இன்னொரு பாபா படம். பல மொழிகளில் பாடல்கள். போனால் போகிறது என்று தமிழில் ஒரு சிறு பாடல். அவசர அவசரமாகப் பாடி முடித்துப் பெருமூச்சுவிட்டார், பட்டுசேலை மற்றும் அணிகளின் கனமும் கூடிய பெரிய அம்மா ஒருவர். அங்கிருந்தும் தப்பினேன். இன்றுவரை இன்னும் பாபாக்கள் சிலரை வழிகாட்டிகளாகக் கொண்ட நண்பர்கள் பலரின் வற்புறுத்தலால் அவர்கள் அழைத்த இடங்களுக்கெல்லாம் போய், அவர்கள் சொல்லுவனவற்றையும் பொழிவனவற்றையும் மொழிபெயர்ப்பவற்றையும் கேட்டுக் கேட்டு என் ஆன்மா, "அப்பா, கொஞ்சம் ஆளைவிடு!" என்று கெஞ்சும்பொழுது, மூன்று அழைப்பிதழ்கள் அஞ்சலில் வந்துள்ளன. ஒன்று மலையடிவார யோகியின் சீடரான என்னூர் நண்பர் அனுப்பியது; அடுத்தது, கேரள அம்மாவின் அடியவரான என் குடும்பத் தோழியார் விடுத்தது; மற்றது, தமிழ்ச் சிவனிய மரபின் சித்தாந்தக் கொள்கைகளில் ஆழ்ந்த ஓர் அமைப்பில் 'ஆக்டிவ் மெம்பர்' ஆகவுள்ள என் சகோதரர் அழுத்தமான குறிப்புடன் 'வந்தாகவேண்டும்' என்ற உத்தியோக தோரணையில் அனுப்பியுள்ளது. எதற்குப் போனால் என் ஆன்மா கரையேறும்? பேசாமல் ரஜினிநடித்த 'பாபா' குறுந்தகடு வாங்கி அந்த நேரத்தில் வீட்டிலேயே இருந்து பார்த்துவிடவேண்டியதுதான்.

9.3.06

சித்தரும் சூஃபியரும்

சித்தர் என்ற தமிழ்ச்சொல்லுக்கு கைகூடுகை பெற்றோர் என்று பொருள். கைகூடுகை என்பது அறிவில் தெளிவு. தெளிவு என்பது விளக்கம், துலக்கம், மன அமைவு, நற்காட்சி, ஆராய்வு என்ற பொருள்களைக் கொண்டது. சித்தி என்ற சொல்லுக்கு கைகூடுகை, வீடுபேறு என்றெல்லாம் பொருள்கள் உள்ளன. சூஃபியர் என்ற சொல் சூஃபி என்ற அரபுமொழிச் சொல்லின் ஆக்கம். அரபுமொழியில் ‘சூஃப்’ என்ற சொல் கம்பளி(wool)யைக் குறிக்கும். பின்னர் அச்சொல்லே ‘கம்பளியை உடையவன்’ (a man of wool) என்ற பொருள் குறிக்கும் ‘சூஃபி’ என்னும் சொல்லை அரபுமொழி இலக்கியத்துக்குத் தந்தது. படிப்படியாக, பாரசீகத்தில் முசுலீம் மெய்ப்பொருளியலும் ஆதனிய மறையியலும் இணைந்தவொரு முறையைப் பின்பற்றுகின்ற ஒருவரை அச்சொல் குறிக்கலானது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சூஃபிய மெய்யுணர்வாளர்களோடு பாரசீக ‘சூஃபியாக்கள்’ என்ற மெய்யுணர்வாளர்களையும் இக்கட்டுரையில் இணைத்தே காணலாம். எண்மாப்பேறு (அட்டமாசித்தி) நுண்மை, பருமை, மென்மை, விண்டன்மை [பொன்போலக் கனமாதல்], விரும்பியதெய்தல், [மற்றவர்களையும் மற்றவற்றையும்] தன்வயமாக்கல், நிறைவுண்மை[கூடுவிட்டுக்கூடுபாய்தல்], ஆட்சியனாதல்[விரும்பியவற்றையெல்லாம் நிறைவுறுத்திப் பட்டறிதல்] என்பவை எண்மாப் பேறுகள். எண்மாப்பேறுகள் கொண்டோர்தாம் சித்தர் - சூஃபியரா? கைகூடுகை என்பதற்கு, பொதுவான மாந்தருக்குக் கிடைக்காத அரிய பேறு என்ற பொருளையே பொதுமக்கள் எப்பொழுதும் கற்பித்து வருகிறார்கள். மாந்தருக்கு இயல்பானவற்றில் உள்ள நாட்டத்தைவிடவும் இயல்புக்கு மீறியவற்றில் நாட்டம் மிகுதி. அதனால்தான் தமிழ்ச்சித்தர்களுக்கு எண்மாப்பேறுகள் போதா என்று அறுபத்து நான்கு வகைச்சித்துக்களை உடைமையாக்கி மனநிறைவடைந்தனர். ஞானவெட்டியான், இயாகோப்பு வைத்தியவாதசூத்திரம் ஆகிய நூல்களும் இதற்கான குறிப்பைத் தருகின்றன. [இதுகுறித்தும் சித்துக்கள் வகைகளின் வயணமும் அறிய: முனைவர் க.நாராயணன், சித்தர் தத்துவம், புதுச்சேரி, 1988, 2003- ப.49+] சூஃபியாக்கள் [பாரசீக சூஃபி மெய்யுணர்வாளர்] பரம்பொருளை ‘உண்மை” என்றே சுட்டுகின்றனர். ‘தன்னுணர்வு கொண்ட விழைவு,’ ‘அழகு,’ ‘ஒளி’ அல்லது ‘எண்ணம்” என்ற முந்நிலையில் அவர்கள் கடவுளை வைத்துச் சுட்டுவதாக அல்லாமா இக்பால் அவர்கள் கூறியுள்ளார். [Dr.Shaik Muhammad Iqbal, The Development of Metaphysics in Persia, London. மேற்கோள்: தேசமானிய, டாக்டர். ஏ.எம். முகம்மத் சகாப்தீன், இறைவனும் பிரபஞ்சமும், கொழும்பு-7. 1995.] ஆதனிய வழியில் மிகுந்த முன்னேற்றம் அடைந்த சூபிய மெய்யுணர்வாளர்களுக்குப் பொதுவான மாந்தருக்குக் கிடைக்காத பற்பல அரிய ஆற்றல்கள் அருளப்பெற்றிருப்பதாகப் பலர் நம்புகிறார்கள். குறைந்த அளவு, தொலைவிலுணர்தல்[Telepathy] திறவோர் காட்சி[Clairvoyance] தொலைவியக்கம்[Telekinesis] ஆகிய அரிய ஆற்றல்களேனும் அவர்களுக்கு இருந்தாக வேண்டும் என்று பெரும்பாலோர் எதிர்பார்க்கிறார்கள். “... அதாவது மனிதத் தன்மைக்கு மீறினவர்களாக...”( பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள், தொகுப்பாசிரியர்; வே. ஆனைமுத்து, 1974. ப.1348.) இடர்களையும் நோய்களையும் நீக்கிக்கொள்ள ‘தர்கா’க்களுக்கும் ‘சியார’ங்களுக்கும் மதவேறுபாடின்றிப் பொதுமக்கள் செல்வதும் வழக்கமாகவுள்ளது. குறிப்பாக மாணிக்கப்பூரில் தோன்றிய நாகூர் ஆண்டகையின் இடமான நாகூர் தர்காவுக்கும்; முத்துப்பேட்டை முதலான இடங்களுக்கும் பயணம் மேற்கொள்பவர்களைச் சொல்லலாம். இவற்றையெல்லாம் பெரியார் அவர்கள் விரிவாகக் கண்டித்திருக்கிறார்கள்.(மேலது: பக்.1372,1379.) பதினெண்மர்தாம் சித்தர்களா? மரபு வழியாக 1.அகத்தியர் 2.போகர் 3.கயிலாயநாதர் 4.கோரக்கர் 5.திருமூலர் 6. சட்டைமுனி 7.கொங்கணர் 8.கூன்கண்ணர் 9.இடைக்காடர் 10.நந்தீசுவரர் 11.புண்ணாக்கீசர் 12.உரோமர் 13.மச்சமுனி 14.கூர்மமுனி 15.கமலமுனி 16.வாசமுனி 17.பிரமமுனி 18.சுந்தரானந்தர் ஆகியோரும் இவர்கள் அல்லாமல் கருவூரார், புலத்தியர், புசுண்டர், இராமதேவர், தன்வந்திரி, கபிலர் முதலானோரையும் சித்தர் என்று நிரற்படுத்துவர். இந்நிரலைக் கூர்மையாக ஒரு முறை நோக்கினால் போதும். மனம் போன போக்கில் எவரோ வகைப்படுத்தியது இது என்று உணரலாம். வேதம், மதம் - இரண்டையும் மறுத்தவர்கள் வேதத்தையும் மதத்தையும் எதிர்த்த சித்தர்களுள் அகப்பேய்ச் சித்தர், சிவவாக்கியர், பாம்பாட்டிச் சித்தர், திருவருட்பிரகாச வள்ளலார் ஆகியோர் மிகவும் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்கள் வாழ்ந்த காலம் நிகழ்குமுகாயம்போல் வேத-மத எதிர்ப்பாளர்களுக்குப் பாதுகாப்புத் தராதது. இவர்களின் கொள்கைத் துணிவு பெரிதும் போற்றத்தக்கது. சித்தருள் சீர்திருத்தச் சிற்பியார் மறுப்பாளராக மட்டும் இல்லாமல் உடன்பாட்டு முறையில் சீர்திருத்தங்கள் பலவற்றுக்கு வித்திட்ட துணிவு வள்ளாலாருக்குத்தான் இருந்தது. அவர் அவ்வாறு ஆற்றியவை:- 1. நாட்டிலும் குமுகாயத்திலும் வீட்டிலும் ஒருமைப்பாடு நிலவப் பாடுபட்டார். 2. சாதி, மத, குல வேறுபாடுகள் ஒழிய எழுத்தாலும் பேச்சாலும் பாடாற்றினார். 3. வகுப்பு வேற்றுமை என்பது புண்ணிய பாவங்களால் இயற்கையாக விளைவது என்ற கருத்துப் பரப்புரையை வன்மையாகச் சாடினார். 4. அறிவுக் கல்வியும் ஆதனியற் கல்வியும் பெற மகளிர்க்கு உரிமை உண்டு என்று வெளிப்படையாக அறிவித்தவர். 5. கோயிலுக்குள் புகலாகாது என்று தமிழருள் பலரை மதக்கோட்பாட்டினர் கருத்துப் பரப்பலாலும் வன்முறையாலும் தடுத்துக் கொண்டிருந்த காலத்தில், உலகில் வாழும் எல்லாரும், சமய-மத வேறுபாடு எதுவுமின்றி, சென்று கூடி வழிபடக்கூடிய நன்னெறி மெய்யியப் பேரறிவுக் கழகத்தை உருவாக்கியவர். 6. கிழக்கிந்தியக் குழுமத்தின் வழி இங்கிலாந்துப் பேரரசு நாவலந்தீவினுள் நுழைந்து அறிவடிப்படையாலும் அதிகார அடிப்படையாலும் மாந்தரை அடிமைப்படுத்திய காலத்தில் ‘கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக, அருள் நயந்த சன்மார்க்கர் ஆள்க!’ என்ற முழக்கத்தை முன்வைத்தவர். 7. உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கத்தை முதன்முதலாகக் கண்டித்தவர். 8. எல்லாவற்றுக்கும் மேலாக, தனிமாந்தன் தன் உடலோம்ப வேண்டிய முறைமைகளையும் ‘நித்திய கரும விதி’ என்ற தலைப்பின்கீழ் வகுத்ததுடன், திருமூலர் வழியில் உடம்பாரையும் உயிராரையும் காப்பதற்கென்றே ‘மூலிகை குண அட்டவணை,’ ‘சஞ்சீவி மூலிகைகள்,’ ‘மருத்துவக் குறிப்புகள்’ என்ற மூன்றையும் ஆராய்ந்து தொகுத்தவர். 9. வள்ளலார், ஆங்காங்கே தூக்கி எறிந்தவை போக, அன்பர்களால் தொகுக்கப் பெற்ற பாட்டுகள் மட்டும் எட்டாயிரத்துக்கும் மேற்பட்டவை. பெரும் பாவலராகவும் தமிழகத்தின் முதல் புரட்சிப் பாவலராகவும் திகழ்ந்திருக்கிறார். 10. பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு ஆவன படைத்தளித்தவர். 11. மேற்குறிப்பிட்டுள்ளனவற்றுக்கெல்லாம் கொடுமுடியாகத் தன் தாய்மொழியாம் தமிழே உலகிலுள்ள மொழிகளுக்கெல்லாம் முதன்மொழி என்பதைச் ‘சத்தியப் பெரு விண்ணப்ப’த்தில் அறிவித்திருக்கிறார். “எந்தையுனைப் பாடி மகிழ்ந்து இன்புறவே வைத்தருளிச் செந்தமிழை வளர்க்கின்றாய்!” என்றுபாடி, “அருச்சனை பாட்டேயாகும்” என்ற சேக்கிழார் முழக்கத்தை மேலும் கூர்மைப்படுத்தியவர். 12. ‘மனுமுறை கண்ட வாசகம்’ இயற்றி விதிக் கொள்கையை அறிவுக் கோட்பாட்டால் வென்று காட்டியவர். [இந்நூலில் மாந்தநேயம், அரசியல் தெளிவு முதலிய ஒட்ப திட்பங்கள் நிரம்பியுள்ளன.] பட்டினத்தார் கூற்றுப்படி, வள்ளலார் சித்தர் ஆவாரா? சித்தர்களின் புறத்தோற்றம் இயல்பானதாகத்தான் இருக்கும், குறிப்பாகவும் சிறப்பாகவும் எதுவும் தோன்றாது என்பதை, “வேர்த்தால் குளித்துப், பசித்தால் புசித்து, விழி துயின்று பார்த்தால் உலகத் தவர்போல் இருப்பர் பற்று அற்றவரே!” (பட்டினத்தார் பாடல்கள்: பொது. பா.19) என்ற பட்டினத்தார் பாடலும் [“மாத்தானவத்தையும்” என்று தொடங்கும் இப்பாடலைத்தான் குமரி முதல் வேங்கடம் வரையிலுள்ள இடு-சுடுகாடுகளில் பணிபுரிவோர் தவறாது பாடுவோர்; ‘பிதாமகன்’ என்ற தமிழ்த் திரைப்படத்திலும் இப்பாடல் இடம்பெறுகிறது] வேறுபாடான தோற்றம் இருக்கக் கூடும் என்பதை, “பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்து, இட்ட பிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி, நரிபோல் உழன்று, நன்மங்கையரைத் தாய்போல் கருதித், தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச் சேய்போல் இருப்பர்கண்டீர்! உண்மை ஞானம் தெளிந்தவரே!” (மேலது, பா.35) என்ற அவர்தம் பாடலும் சித்திரிக்கின்றன. (வளரும்...) (நன்றி: ‘வெல்லும் தூயதமிழ்’ இலக்கிய மாத இதழ், 2037, கும்பம் [மார்ச்சு 2006])

4.3.06

எது மேல்?

முகத்தை மறைத்து, முகவரி மாற்றி, மற்றவர் ஆக்கம் மனதினுள் வெறுத்து; நானே தெரிந்தவன், நானே எழுத்து, நானே அரசியல், நானே சரித்திரம், நானே உலகம்; எனக்கே தெரியும்; லண்டனும் யு.எஸ்’சும் எவனுக்குத் தெரியும்? என்று அன்றாடம் தனக்குள் ளாகவே முணுமுணுத்து இருக்கும் முதுமை மேலா? அடித்தவன் காலடி அமர்ந்திட மறுத்து; அடிபட்டவர்களை அன்புடன் அணைத்து, நொந்தழும் கண்ணீர் நாடியே துடைத்து, காய்ந்த வயிற்றைக் கனிவுடன் நிரப்பி, இழந்த நம்பிக்கையை - பழகிப் பேசியும், பாசம் பரிவு நேசம் காட்டியும் - மீண்டுமே ஊட்டி; பண்ணை மனத்தால் பாதகப் பட்ட நந்தன் சொந்தமாய் நாளும் அலைந்து; உந்தும் வேண்டாம், ஊர்தியும் வேண்டாம், ரதம் - அதன் நினைப்போ வேண்டவே வேண்டாம்! என்றே உங்கள் நுகத்தடி மறுப்பதால், மனிதம் மலர்ந்திடும் முகத்துடன் நலியும் இளமை மேலா?

ஆதியில் உண்மை இருந்தது!

ஆதியில் உண்மை இருந்தது. பேசக் கற்றுக்கொண்டார்கள் மனிதர்கள். மொழியும் கட்டமைந்தது. சொற்கள் மனிதரிடையே பரிமாறிய மறுகணம் பொய் பிறந்தது. கொண்டாடும் வழக்கமும் பிறந்தது. மனிதர்கள் பொய்யைத் தோள்களில் தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள். கொண்டாடவே உண்மை தெய்வம் ஆனது. - தேவமைந்தன்

1.3.06

வேலைகொடு! எங்களை வாழவிடு!!- தேவமைந்தன்

காட்டுவளம் பாதிபோச்சு - யாராலே? நாட்டுவளம் மறுநாடுபோச்சு - எவராலே? படிச்சு முடிச்சவர்க்கு வேலையில்லே எங்கேயும் காலி இல்லே - ஏன் மூளையில்லே - யாருக்கும் மூளையில்லே? வாக்கு கேக்க வர்றவங்க யாரிடமும் காசுகுடு'ன்னு கேக்கறதுக்கு வாய்வருது! - எம்புள்ளைக்கி வேலகுடு'ன்னு கேக்கமட்டும் மனம்வருது! ஊரில் உள்ள புள்ளங்க எல்லாருக்கும் வேலகுடு - பின்னவந்து வோட்'டெக் கேளு - இன்னு சொல்றதுக்கு மனம்வருதா? யாராச்சுக்கும் வாய்வருதா? மனித வளம் மிகுந்ததுங்க - ஒலகம் காட்டுவளங் கூட மிகுந்ததுங்க! முதல் வளத்தெ மிஷினக்கொண்டு கூறுபோட்றான்.. அடுத்தவளத்தை அணையக்கட்டி அழிச்சுப்போட்றான்... அ'தாங்க... பட்டுக்கோட்டை கண்ணாலசுந்தரம் பாடிவச்சாரு.. "அவன் சோறு போடறான்! இவன் கூறு போடறான்!"ன்னு...... கூடவே கோடிகாட்னாரு! சோறுபோட்ற நெனெப்புள்ளவர்க்கு ஓட்டுப் போடுங்க! கூறுபோட்ற நெனெப்புள்ளவங்க'கிட்ட காசு வாங்குங்க! - ஐயாமாரே! வேண்டாமின்னு சொல்லாம காசை வாங்குங்க! ******