21.10.18

institut francais Pondicherry library

institut francaise Pondicherry (ifP)
All of my articles in websites are from the materials provided by this institution. I thank the Librarian, Asst.Librarians - Monsieur Saravanane, Monsieur Ramanujam and others who extended their wholehearted cooperation to me.
This is the sacred place where I met GOPALAIYYAR('Gopalayyan' he used to name him) and Pulavar VILLIANUR VENKATESAN.

நிகழ் உலகம்!

கருவறைக்குள் முடங்கிக்
கிடந்த கிடப்பே மேல்.
- தேவமைந்தன்

18.10.18

மோனஞானம் ~ ஓர் இணர்

'எதை வெறுக்கிறோமோ, அதையே பின்னர் விரும்புகிறோம். எதை விரும்புகிறோமோ, அதையே ஒரு காலத்தில் வெறுக்கிறோம். எதிரெதிரான உணர்ச்சிகளே நம் உள்ளத்தை ஆட்டி வைக்கின்றன. அதனால்தான் மெய்ஞ்ஞானிகளும் சித்தர்களும் கடைசியில் மௌனமாகி விடுகின்றனர். உலகியலை ஆழ்ந்து கற்று அறிந்ததன்பின் அருணகிரிநாதர், *ஆசா நிகளம் துகள் ஆயினபின்
பேசா அநுபூதி பிறந் ததுவே!* என்று நுணுக்கமாக உரைப்பதும் இதையே.'

10.10.18

அறிவியல் ஒன்றே கடவுள்!

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காமை; கடந்த ஆட்சியில் ஒப்பந்த|தொகுப்பூதிய முறையில் வேலைகொடுக்கப் பட்டவர்களின் நியமனங்களை ரத்து செய்தல்; தங்களுக்கு வாக்களித்த மக்களுக்குத் தந்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விடுதல்; அவர்களுக்குத் தரப்பட்டிருக்கும் மானியங்களை நயவஞ்சகமாகப் பிடுங்குதல்; நம்பிய மக்களின் வயிற்றில் அடித்துவிட்டு பொதுமேடைகளில் நடிகநடிகைகளே அசந்து போகும்படியாக, அரசியல் பங்காளிகளுடன் முகம்விரியச் சிரித்துக் காட்டுதல். இவை, நீதிநூல்கள் நம்மை வற்புறுத்திய அறமதிப்பீடுகள் அனைத்தும் அறவே வீழ்ந்துவிட்டன என்பதற்கான அடையாளங்கள் அல்லாமல் வேறென்ன? பார்க்கப்போனால், இன்றைய நிலையில் நம் நாட்டின் வலிமையான எதிர்க்கட்சிகளாக ~ முகநூல் வாட்சப் யூடியூப் முதலான வலைத்தளங்கள் மட்டுமே உயிர்ப்போடு இயங்கி வருகின்றன. இவற்றையும் கெடுப்பதற்கென்றே, கோட்டு சூட்டுப் போட்டுக்கொண்டு அடையாளம் கிடைக்காத இடங்களிலிருந்து, நாம் இன்னும் சிற்சில ஆண்டுகளில் அழிந்துபோவோம் என்று இனவழிப்பு ஆரூடங்கள் சொல்லிக்கொண்டவாறே தங்கள் வசதிகளை மட்டும் மேலும் பெருக்கியவாறு இருக்கிறது'கள் - சில புதிய 'அருள் வாக்கு'கள்.
மக்கள் தொடர்பு சாதனங்கள் அசுரவளர்ச்சி அடைந்து கொண்டே வருகின்றன. இருந்தும் திருந்தாத அரசியல்வாணர்களின் அரசியல் முகவர்கள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து தம் கட்சியின் தேர்தல் வீணடிப்புகளுக்காக கரன்சிகளைக் குவிக்கிறார்கள்.
நிகழ் சமூகத்திலும் தம்மிடமுள்ள உபரிப்பணத்தை உருப்படியாகச் செலவிடாமல், சகமாந்தரை வீழ்த்தவும் சிதைக்கவும் தற்கொலைகளுக்காளாக்கவும் *பயன்* படுத்தும் தீயவர்களைப் படைக்கிறார்கள்.
*மனித சுயநலத் தீவிரவாத*த்தால் அழிவுக்கு உள்ளாக்கப்படும் கானுயிர்களும்; அளவிறந்த சூழல்மாசுகளால் நோயெதிர்ப்பாற்றலைக் கூட இழந்துவாடும் அனைத்துலக மக்களும்; அந்த அழிவிழப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளும் கார்ப்பரேட் முதலாளித்துவமும் மென்மேலும் வெற்றிபெற்று வருகின்றன. திரைப்படத்துறையும் திரையரங்கங்களும் புதிய கடன்காரர்களை உற்பத்தி செய்வதில் முன்னணியில் இருக்கின்றன.
இந்த நிலையில் ஆத்திக மடத்துத் தலைவர்கள் போலவே ஆகிவரும் நாத்திக(மடத்துத்) தலைவர்கள், தம் பெரியோர்- சமூகச் சீர்திருத்தத்துக்காகச் சேர்ந்த நிதிக்குவைமேல் 'மான'ம் மிகுந்து வீரமாக உட்கார்ந்து கொண்டு மணிமணியான புத்தகங்களை 'மாட்டிக்கெண்டவனை'ச் செலவுசெய்யவைத்து இலட்சக்கணக்கில் வெளியிடும் 'நம்பிக்கைச் சுரண்டல்' வேறு.
**கரப்பான்பூச்சிகளைப் பார்த்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள்** என்று ஆர்.ஈ.தான்சி என்னும் நரம்பியல் பௌதிக ஆய்வாளர் அறிவுறுத்துவதைக் கடைப்பிடிக்க வேண்டியதுதான்.
**********************
முழுமையான அறிவியல் நோக்கும் போக்கும் மட்டுமே இந்த நாசகாரக் கும்பல்களிடமிருந்து நம்மை நாம் காத்துக்கொள்ளும் ஒரே வழி.

#அறிவியல் #நோக்கு #மட்டுமே #நம்மை #காக்கும்

(This also appears in Devamaindan's Timeline in Facebook)

27.9.18

ஐந்து தூண் மண்டபம்!

ஐந்து தூண்கள் உள்ள மண்டபத்தைக் கண்டிருக்கிறீர்களா? அது, நடக்கவும் பேசவும் அவதானித்திருக்கிறீர்களா?
அந்த ஐந்து தூண்களுக்கும் 'சால்பு' என்று பெயர். அவற்றின் இயல்புகள்:
1. அன்பு (LOVE)
வேண்டியவர் வேண்டாதார் யாரிடமும் காட்டப்படும் அன்பு.
2. நாணம் (MODESTY)
நிகழ்சமுதாயத்தில் மற்றவர் யாருக்கும் நேர்முகமாகவோ மறைமுகவோ தீமை செய்ய வெட்கப்படுதல்.
3. ஒப்புரவு (ALTRUISM)
சகமாந்தர் அனைவரையும் சமமாக உணர்தல்.
4. கண்ணோட்டம் (COMPASSION) சக உயிர் எதுவாயினும் அவற்றை/அவர்களை நேசித்தல்.
5. வாய்மை (TRUTHFULNESS)
நிகழ்சமூகத்தில் வெறியர்களிடம் யாரையும் காட்டிக்கொடுக்காத வாய்மை மொழிதல்.
இத்தகைய ஐந்து சால்பு எனும் தூண்கள் காலங்காலமாய்த் தாங்குகிற மண்டபங்களை மட்டுமே 'சான்றோர்'கள் என்று சொல்ல வேண்டும்.
மற்றவர்கள் நம்மைப் போன்ற சாமானிய மக்களே.
------------------------------------------------
*அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண்*
*The pillars of excellence are five -- love, modesty,
Altruism, compassion, truthfulness*

#Tirukural #nobility #சான்றாண்மை #nobles #சான்றோர்

10.9.18

*காந்திக் கணக்கு* - தலைகீழாக மாற்றிவிட்டார்கள்!

காந்திக் கணக்கு
----------------------------
காந்தி கடைசிவரை சில்லறைச் செலவுகளை எண்ணி எண்ணி கணக்கு வைத்திருந்தார். பிறரிடமும் அதேபோல பைசாக்கணக்கு கேட்டார். கடைசி காங்கிரஸ் தொண்டனும் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைத்திருக்க வேண்டும் என அவர் எதிர்பார்த்தார். அவரது கணக்கு கேட்கும் போக்கில் மனம் வெறுத்து 'மகாத்மாக்களை வழிபடலாம். சேர்ந்து பணியாற்ற முடியாது' என்று கணக்குப்புத்தகங்களை அவர் முன் வீசிவிட்டு ராஜாஜி வெளியிருக்கிறார். ஆனால் 'ஒரு பைசா என்பது பல லட்சம் ரூபாயின் முதல் அலகு' என காந்தி எண்ணினார். ...ஒரு விஷயத்தைச் செய்ய மிகச் செலவுகுறைந்த வழி என்ன என்பதையே எப்போதும் அவர் கவனித்தார்.
- இன்றைய காந்தி.

7.9.18

என் இணையதள குரு.
Professor Pas Pasupathy
Professor Emeritus,
University of Toronto.
Canada.


"தன்னைத்தான் காந்தி இந்தியா முழுக்கக் கொண்டு சென்றார். நூற்றுக்கணக்கான ரயில் நிலையங்களில் மூன்றாம் வகுப்புப் பெட்டியின் வாசலில் விரதத்தால் மெலிந்த கரிய உடலுடன் வந்து நின்று, தன் கருணைமிக்க கண்களில் நகைச்சுவை ஒளிரும் சிரிப்புடன் மக்களை நோக்கி கும்பிட்டார். அதுவே இந்தியா முழுக்க சென்று சேர்ந்த செய்தி."

24.4.18

இன்று காலை 09:10மணிக்குத் தான் விழித்தேன். நேற்றிரவு 9 மணிக்கெல்லாம் தூங்கிவிட்டேன். குப்பை வண்டிக்காரம்மா விசிலடித்துப் பார்த்துவிட்டுப் போய்விட்டார்கள். குப்பைப்பையை எடுத்துக்கொண்டு கோலக்கார அரங்கசாமி நாயக்கர் பள்ளி வரை சென்று அங்குள்ள பெரிய குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு ஆட்டுக்கறிக் கடையைத் தாண்டியிருப்பேன். அதனருகில் உள்ள கடையிலிருந்து புட்லாயி அம்மா, "என்னப்பா இந்த வேக்காட்டுல..." என்று கடைக்குள் கூப்பிட்டு விசிறிக்கொள்ள பனைஓலை விசிறி கொடுத்தார். அப்போது பாரத்து, கோவை நண்பரிடமிருந்து ஃபோன் வந்தது. அவர், நான் தூங்கிய 12 மணிக்குள் பலமுறை ஃபோனடித்தாராம். விவரம் சொன்னேன். " பசுபதி.. இந்த வயசில் இவ்வளவு தூக்கம் கூடாது.. உங்க அண்ணி இப்படித்தான் உறங்கி இறந்து போனாங்க.." என்றார். புருவத்தில் வினாக்குறியுடன் புட்லாயி அம்மா "என்னவாம் அப்பா?" என்றார். "ஓண்ணுமில்லை'ம்மா" என்று கிளம்பினேன். 'பத்திரம் பத்திரம்' என்று அனுப்பினார். குப்பென்று வியர்த்தது. சட்டையெல்லாம் தொப்பலாக நனைந்து போனது. கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸ் படிக்கட்டில் ஆறுதலாக உட்கார்ந்து.. அப்புறம் பொடிநடையாக வழக்கறிஞர் அன்பழகன்(பி.ஜே.பி.) கடைவரை நடந்து, மொட்டான் போடச்சொல்லி உட்கார்ந்து ஃபோன் விவரம் சொல்ல சிரித்தார். "நல்லாத் தூங்குனாத்தான் உடம்பு நல்லாருக்கும் சார்..." என்று சொன்னார். பி.ஜே.பி. பரப்புரை படம்போட்ட விசிறிகள் சிலவும் வாழைப்பழங்களும் தந்தனுப்பினார். வீட்டுக்கு வந்து இரும்பு கேட்டைத் திறந்து பார்த்தால், அன்பழகன் வெளியே நின்று பார்த்துக்கொண்டே இருக்கிறார். அன்பு.
#இருக்கும்போதே அக்கம்பக்கம் ஊரார் அன்பு செலுத்த வாழ்ந்துவிட வேண்டும். செத்தபின் இறுதிப்பயணத்தின்போது தலைக்குப் பின் கடனே என எத்தனைப் பேர் வந்தாலென்ன.. வராவிட்டாலென்ன?
#lifebeforedeath

22.4.18

பிஞ்சுக் குழந்தையின்
பஞ்சுப் பாதங்கள்
நெஞ்சில் உதைத்தன.
சொர்க்கம் கண்டேன்.
- தேவமைந்தன்
19.4.2018

23.3.18

முன்பின் தெரியாத ஒருவனின் வாழ்க்கை - ஆந்திரேயி மக்கீன்
தமிழில்: எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி
காலச்சுவடு பதிப்பகம், திசம்பர், 2017.
----------------------------------------------
அசல் நாவல் வெளியீடானதற்கு எட்டு ஆண்டுகளுக்குப் பின் காலச்சுவடு புண்ணியத்தாலும் எஸ்.ஆர். கிருஷ்ணமுர்த்தி மொழியறிவுழைப்பாலும் இந்த அற்புதமான நாவலின் குறும்பதிப்பு வாசகர் கையில்.
இந்தக் கதையைச் சொல்லி வரும் ஷுட்டோவ் ரஷ்யநாட்டினன். பிரான்சுக்குப் புலம்பெயர்ந்தவன். முதிர்நடுவயதுக்காரன். எழுத்தாளன். பிரஞ்சில் எழுதுபவன். முப்பதாண்டுகளுக்குமேல் பிரான்சில் இருந்து எழுதிவாழ்கிறான். தற்செயலாக மகள் வயதே உள்ள லெயா என்ற பெண்ணுக்கு உதவப்போய் அவளுடைய காதலனாகவுமாகிறான். வேறுவிதத்தில் சொன்னால், லெயா அவனைப் பயன்படுத்திக் கொள்கிறாள். தன் வயதுக்குத் தக்க உடல்வளம் வசதியுள்ள இன்னொருவன் கிடைக்கும் வரை. இவனுக்கேற்ப வாழ்தலின் தருணங்களில், மற்ற ரஷ்ய எழுத்தாளர்களைவிட செக்காவ்வின் எழுத்துகள் குறித்த விவாதங்களில் ஈடுபடுகிறாள். தன்னை அறிவுத்திருப்திப்படுத்த லெயா இப்படியெல்லாம் பேசுவதை அறியாத முதிர்மூளையால் நெருடலாகவும் தன்னொத்த எழுத்தாளர்களிடம் விவாதம் பண்ணுவதுபோலவும் அவளிடம் பேசி லெயாவின் வெறுப்பையும் சந்திக்கிறான். செக்காவ் சிறுகதைக்குக் கூறிய முடிவிலக்கணத்தைக் காதல் உறவின முறிவுக்கு லெயா மேற்கோள் மொழியும் அளவு, காரணமாகிக் கொள்கிறான் ஷூட்டோவ். அவன் பெயரையே லெயா விமர்சனத்துக்குட்படுத்தும் அளவு வெறுப்பேற்றி விடுகிறான். விளைவு காதல் நிரந்தரமுறிவு. புதிய இளங்காதலனோடு லெயா பிரிந்துபோய்விடுகிறாள். மனம் முறியும் வேளையில், வழக்கமாக எல்லோருக்கும் வருவது போல, பூர்விக நாடும் அந்நாட்டின் பூர்விகக் காதலி யானாவும் ஷுட்டோவின் மனவெளியில் செறிந்து நினைவுக்கு அழுத்தமாக வருகிறார்கள். யானாவுக்குப் போன் பேசிவிட்டு, விமானம் பிடித்து ரஷ்யாவுக்கு மீள்கிறான் கதைசொல்லிவரும் ஷுட்டோவ். தோராயமாக முப்பத்தோராண்டு காலஇடைவெளிக்குப்பின் ரஷ்யாவின் இருத்தல் நிலைகள் அமெரிக்க வாழ்நிலைபோல நவீனமாயிருத்தலுக்கும்; பழைய காதலி யானா பெரிய புள்ளியாகி உள்ள நிலைமைக்கும்; அவள் மகன் விலாத் அத்தருணம் பொருளாதார & புகழ் வெற்றியுடன் கூடிய பதிப்பகத்தானாக நிலைநிற்றலுக்கும் ஈடுகொடுக்க ஏராளமான 'சிலுவைப்பாடுகள்' படுகிறான். யானா அவனை ஏற்க மறுக்கவில்லை. ஆனால் அன்னியனாகத் தன்னுடன் ஒருபக்கம் வாழ்ந்திருக்க விடுகிறாள். அவள் சகவாச தோஷமும் பிரபலமும் பன்முகப்பட்ட அரசியல் மேட்டுக்குடித் துறுதுறுப்பும் ஷுட்டோவை வாயடைத்துப்போக வைக்கின்றன. பரிதாபத்துக்குரிய அவனைப் பக்கத்திருத்தி, நேரமொதுக்கி, நவீன புத்தகப்பதிப்பின் உயிர்நிலையான சந்தைப்படுத்தலைப் 'பழம்பெருச்சாளி'யாகவே நீடிக்கும் ஷுட்டோவ் அறியுமாறு கற்பிக்கிறான் விலாத். அந்த இடங்கள் எல்லாம் அட்டகாசம் போங்கள். எனக்கு எஸ்.ரா. தொடர்பான சென்னை புக்ஃபேர் அடுத்த மனுஷ்யபுத்திரனனின் இராயல்டி - விளக்க - ஒளிக்காணல்கள் பம்மிப்பம்மி ஓர்மைக்கு வந்தன. ஏனோ விலாத்தையும் நண்பர் மனுஷ்யபுத்திரனாகக் காண முடிந்ததற்கு ஆந்திரேயி மக்கீன்தான் காரணம். சரி விடுங்கள். விலாத்துக்கு இன்னொரு பொறுப்பு. பென்ஷன் வாங்கும் செவியடைத்த & பேசாதவொரு முதியவரைக் கண்காணித்தல். தொடர்பான நுட்பங்களுக்குப் போக வேண்டாம். படித்துத் தெரிந்து கொள்ளட்டும். விலாத்தாலும் அவன் தாய் யானாவாலும் முதியோரில்லத்துக்குத் தாட்டிவிடத் திட்டமிடப்படலினூடு அவர்களோடு "இருக்கிற" முதியவர்... ஷுட்டோவுக்கு மட்டும் செவிகேட்டு வாய்பேசுகிற, ஒருமணித் தியாலத்தில் தன் சாதனை வாழ்வை ஷுட்டோவுக்குச் சொல்கிறவர். அந்த அற்புதத் தருணங்களை நமக்கு உண்டாக்குபவளான விலாத்தின் காதலிக்கு நன்றி. வோல்ஸ்கி என்ற அந்தப் பெரியவர் பட்ட பாடுகள் அமரமானவை. இரண்டாமுலகப் போரில், லெனின்கிராட் என்ற பூர்வப்பெயர் மாற்றப்பட்ட செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் முற்றுகைக் காலமான, மனிதநேயம் மாய்ந்து இருபது லட்சம் மக்கள் மாய்க்கப்பட்ட காலகட்டத்தில் போர்க்களத்தில் நிராயுதபாணியாகிவிட்ட ஜெர்மானிய இளைஞனை அமைதியாகப் போகவிடுதலாகட்டும்; அதையடுத்த தூய்மையரசியல் வெறியுடன் அப்பாவிகளைச் சிறைப்படுத்தும் - வதைப்படுத்தும் - சுட்டுக்கொல்லும் 'The Great Purge' என்றழைக்கப்பட்ட தலைவர் ஸ்டாலினின் கொடுமை ஓங்கிய காலகட்டமாகட்டும் ~ போரிசைக் கலைஞராகவும் போராலும் 'பர்'ஜாலும் வாடிவதங்கிச் சீரழிந்த மனிதர்களைக் கொண்டும் அனாதை மற்றும் மாற்றுத் திறன்கொண்ட ஏதிலிப்பிள்ளைகளைக் கொண்டும் நாடகங்கள் இசைநிகழ்ச்சிகள் நடத்திய பெருஞ்சாதனையாளர். மானுடக் கொடுமையின் வகைமாதிரிகள் எல்லாவற்றுக்கும் ஆளான, அனாதைப் பிள்ளைகளைக் காப்பாற்ற இராணுவத்தாருக்கு வேசியாக மாறி, தன்னுடலை சிதைவுக்குட்படுத்திக் கொண்ட, லெனின்கிராட் முற்றுகைப் போரிலும் பின்தொடர்ந்த 'great purge'இலும் 'மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்று'ப் போன்ற மென்மையும் பெண்மையும் மேன்மையும் இயல்புகளாகக் கொண்ட, மிலா என்ற 'அரியவகை மானுட'ப் பிறவியை ஆன்ம - இயற்கை - வான ரீதியாகக் காதலித்தவர். வோல்ஸ்கி ~ லியா காதல் அற்புதமானது. தெய்வீகக் காதல் என்று மட்டும் கொச்சைப்படுத்தக் கூடாதது. இவ்விருவரையும் நேசிக்கும், இவ்விருவராலும் நேசிக்கப்படும் சிவப்பு முடிச்சிறுவனை மறக்க முடியுமா? அவர்கள் வாழப்புகும் 'இஸ்பா' வீட்டின் சூழலைத்தான் மறக்க முடியுமா? அரசியல் தூய்மைப்படுத்தும் காலத்தில் வோல்ஸ்கியால் பயிற்றுவிக்கப்படும் போரனாதைச் சிறுவர்களுக்குக் கொடுக்கப்படும் கடும் ஒத்திகைக்குப்பின்னான நாடகத்தை கல்வி ஆய்வாளரான 'மூக்கொழுகும் தடிச்சி'யானவள், வர்க்கவோர்மையற்றது என்று கத்திக் கூப்பாடு போட்டு - பின்னர் இரசிக்கும் நிலைப்பாடுகளைப் பாராட்டவா? விளைவாக வோல்ஸ்கிக்குக் கிட்டும் விருதையும் பதவியையும் அவர் துச்சமென மதித்து ஏற்காமல் விட்டு விடுவதைச் சொல்லவா? ஸ்டாலின் இறப்புக்கு முந்திய பத்தாண்டுப்போதில்(decade) தாமிருவரும் சிறைப்பட்டபோது சுமத்தப்பட்ட இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளையெல்லாம் தானொருத்தியே ஏற்று உலகை நீத்தாலும்; உருப்படியான கலைத்தொண்டு ஆற்றவல்ல வோல்ஸ்கி என்ற காதலனைக் குறைந்த தண்டனை பெறவைத்துக் காப்பாற்றும் மிலா என்ற அந்தக் காதலி/தாய்/வேசி/தியாகி ஆனவள், மெய்யான வாசகரின் நெஞ்சைத் தன் தியாகக்குருதியால் சேற்றுழவு செய்வது நிச்சயம். இதையெல்லாம் கேட்டதோடு நில்லாமல், விலாத்துக்கும் யானாவுக்கும் மறைத்த அப்பொன்னிரவுப் பொழுதில், நன்றி மறவாமல், ஒரு விடாக்கண்டனான டாக்சி ஓட்டுநரைக் கெஞ்சிக் கூத்தாடி, பெரியவர் வோல்ஸ்கியின் இறந்தகாலக் காதல் குறியீடான வானத்தின்கீழ் உயிர்ப்புடன் ஓடும், பெரியவர் வோல்ஸ்கி 'லெனின்கிராட் முற்றுகை'யின்போது நாடக நிகழ்ச்சிகளை நடத்திய, அந்த ஆற்றுக்கு அழைத்துச் சென்று, அவரை ஆதனாரப் பாட்டுப் பாடவைத்து, "அந்தப் பாட்டுத்தான் அவன் பார்த்த எல்லாவற்றுக்கும் அடிப்படை அர்த்தத்தைத் தருவதை" உள்வாங்கி, மீண்டும் அவரை விலாது இருந்த இடத்துக்கே போய்ச் சேர்க்கிறான் ஷுட்டோவ். வம்பனான அந்த டாக்சி ஓட்டுநருங்கூட அந்தச் சம்பவத்தால் வாழ்வின் மெய்யான அர்த்தத்தை நன்றியுடன் அனுபவிக்கிறான். இதன் பின்னென்ன... முதியோரில்லத்துக்கு பெரியவர் 'தாட்ட'ப்படுகிறார். ஐந்தே நிமிடத்தில் தன் பொருள்களையெல்லாம் எடுத்துக்கொண்டு ஷூட்டாவும் வேளியேறுவதை அவன் பழைய காதலியின் மகன் விலாத், தடுப்பதில்லை.
ஷுட்டோவ் பிரான்சுக்கு விமானத்தில் திரும்புகையில் 'வோல்ஸ்கி வாழ்ந்த சகாப்த'தத்தை, பயங்கரமான அந்த சோவியத் காலகட்டத்தைத் தன் எழுத்தாள நெஞ்சில் சுமக்கிறான். பின்வருமொரு செப்டம்பர் மாதத்தில் ரஷ்யாவுக்குத் திரும்பும் ஷுட்டோவ், வோல்ஸ்கி சேர்க்கப்பட்ட ' முதியோர் இல்லத்'துக்குப் போகிறான். செயிண்ட்பீட்ர்ஸ்பர்க்கில் அதன் முந்திய பெயரான லெனின்கிராட் கொடிய ஊழியின் பிரதிநிதியான வோல்ஸ்கி இறந்துபோனதை பிரான்சிலேயே அறிந்த பிறகுதான் போகிறான். முதியோர் இல்லத்தின் கல்லறைகளில் வோல்ஸ்கியினதைத் தேடுகிறான். கல்லறை எதிலும் பெயர் முதலிய விவரமேதுமில்லை. காவலாளி காட்டிய சமாதிகளில் ~ 'u.w.' 'unknown woman' 'முன்பின் தெரியாத பெண்'; 'u.m.' 'unknown man' 'முன்பின் தெரியாத ஆண்' ~~ என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தன. மனித வாழ்க்கை அத்துணைப் பரிவற்று சுருக்கப்பட்டிருந்தமை ~ ஷுட்டோவுக்குச் சொல்லொணா வருத்தத்தைத் தந்தது. வோல்ஸ்கிக்கு அவர் அனைத்து விவரங்களுமடங்கிய நினைவுத்தூண் வைக்க விரும்பியதைப் பணியாள் ஒருவனிடம் ஏற்பாடு செய்து, அடுத்தநாள் அதற்கு அவன் ஒப்புதலும் தந்த பிறகு ஷுட்டோவ் யோசிக்கிறான்.... அப்படியே முழுவிவரங்களைப் பதித்தாலும் 'முன்பின் தெரியாத ஒருவன்' என்ற பதத்தைவிட என்ன அதிகமாகப் பயனாகப் போகிறது? ... ஷூட்டோவ் எழுந்து வெளியேறும்போது, எழுதப்படவேண்டிய உரிய வாசகங்கள் மனத்திரையில் தோன்றுகின்றன. " 'அடையாளம் தெரியாத பெண்களும்' 'அடையாளம் தெரியாத ஆண்களும்' காதலித்தனர், ஆனால் அவர்கள் சொல்ல நினைத்த வார்த்தைகள் சொல்லப்படாமல் போய்விட்டன..."
எல்லாம் முடிந்து வீடுதிரும்பும்போது,
பின்லாந்து வளைகுடாப் பனிமூட்டம் வழியே ஒரே பார்வையில் அவன் அதுவரை கண்டிராத அகண்ட வானவெளியைப் பார்க்கிறான் ஷூட்டோவ்.
அது வெறும் பெரும் அகண்ட வான்வெளியல்ல. தங்கள் பிரிவுகளின்போது உற்றுப் பார்த்து வோல்ஸ்கியும் அவர் காதலி மிலாவும் பிரிவுத்துன்பமற்றுக் கலந்த வானம்தான்.
-------------------------------------------
தேவமைந்தன்
Puducherry Annan Pasupathy (Facebook)