24.4.18

இன்று காலை 09:10மணிக்குத் தான் விழித்தேன். நேற்றிரவு 9 மணிக்கெல்லாம் தூங்கிவிட்டேன். குப்பை வண்டிக்காரம்மா விசிலடித்துப் பார்த்துவிட்டுப் போய்விட்டார்கள். குப்பைப்பையை எடுத்துக்கொண்டு கோலக்கார அரங்கசாமி நாயக்கர் பள்ளி வரை சென்று அங்குள்ள பெரிய குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு ஆட்டுக்கறிக் கடையைத் தாண்டியிருப்பேன். அதனருகில் உள்ள கடையிலிருந்து புட்லாயி அம்மா, "என்னப்பா இந்த வேக்காட்டுல..." என்று கடைக்குள் கூப்பிட்டு விசிறிக்கொள்ள பனைஓலை விசிறி கொடுத்தார். அப்போது பாரத்து, கோவை நண்பரிடமிருந்து ஃபோன் வந்தது. அவர், நான் தூங்கிய 12 மணிக்குள் பலமுறை ஃபோனடித்தாராம். விவரம் சொன்னேன். " பசுபதி.. இந்த வயசில் இவ்வளவு தூக்கம் கூடாது.. உங்க அண்ணி இப்படித்தான் உறங்கி இறந்து போனாங்க.." என்றார். புருவத்தில் வினாக்குறியுடன் புட்லாயி அம்மா "என்னவாம் அப்பா?" என்றார். "ஓண்ணுமில்லை'ம்மா" என்று கிளம்பினேன். 'பத்திரம் பத்திரம்' என்று அனுப்பினார். குப்பென்று வியர்த்தது. சட்டையெல்லாம் தொப்பலாக நனைந்து போனது. கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸ் படிக்கட்டில் ஆறுதலாக உட்கார்ந்து.. அப்புறம் பொடிநடையாக வழக்கறிஞர் அன்பழகன்(பி.ஜே.பி.) கடைவரை நடந்து, மொட்டான் போடச்சொல்லி உட்கார்ந்து ஃபோன் விவரம் சொல்ல சிரித்தார். "நல்லாத் தூங்குனாத்தான் உடம்பு நல்லாருக்கும் சார்..." என்று சொன்னார். பி.ஜே.பி. பரப்புரை படம்போட்ட விசிறிகள் சிலவும் வாழைப்பழங்களும் தந்தனுப்பினார். வீட்டுக்கு வந்து இரும்பு கேட்டைத் திறந்து பார்த்தால், அன்பழகன் வெளியே நின்று பார்த்துக்கொண்டே இருக்கிறார். அன்பு.
#இருக்கும்போதே அக்கம்பக்கம் ஊரார் அன்பு செலுத்த வாழ்ந்துவிட வேண்டும். செத்தபின் இறுதிப்பயணத்தின்போது தலைக்குப் பின் கடனே என எத்தனைப் பேர் வந்தாலென்ன.. வராவிட்டாலென்ன?
#lifebeforedeath

No comments: