14.11.08

உலகமயமாதலின் தாக்கத்திலிருந்து தமிழினத்தை மீட்பது எவ்வாறு? - ஊடகங்களும் மின்வெளியும் - தேவமைந்தன் "உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்!" என்னும் வள்ளலாரின் விண்ணப்பத்திலுள்ள 'உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுதல்' என்னும் தீமையை முழுவதுமாகக் கடைப்பிடித்தலையே தம் உயிர்க் கோட்பாடாகக் கொண்டு செயல்படுபவை இன்றைய தமிழ் ஊடகங்கள். இல்லையென்றால், ஓராண்டுக்கு ஓராயிரம் கோடி உரூபாக்களைக் குறிப்பிட்டதோர் அலைவரிசைக் கட்டமைப்பினால் அள்ள முடியுமா? தமிழர்களில் பலர் மொழி-இன உணர்வில்லாதவர்கள் என்ற குற்றச்சாற்றைத் தமிழ்ப்பணியாளர்கள் மக்கள்முன் வைப்பது சிலருக்கு வழக்கமாக உள்ளது. 'ஆனந்த விகடன்' கிழமையிதழ் அண்மையில் மேற்கொண்டதொரு கருத்துக் கணிப்பின்படி, அக்குற்றச்சாற்று தவறானது என்பது உறுதியாகியுள்ளது. காசுசேர்க்கும் நோக்கம் மட்டுமே கொண்ட வழிகளில், பெரிய - சிறிய திரைப்படங்கள்/தொடர்கள், அவற்றுள் நடித்துக் காசுதிரட்டும் நடிகையர்/நடிகர் குறித்தே நாள்முழுவதும் பார்வையாளர்களின் மூளைகளில் கருத்தியல்/படிமத் திணிப்பைத் தொடர்ந்து திட்டமிட்டு நடத்தும் ('மக்கள் தொலைக்காட்சி' நீங்கலாக) இன்றைய தமிழ் ஊடகங்களின் தாக்கத்தையும் மீறி, அறுபது விழுக்காட்டுத் தமிழர்கள், தங்களுக்கு இன-மொழி உணர்வு இருக்கிறதென்று புலப்படுத்தியுள்ளார்கள். ஆனால், இவர்கள் அனைவரும் இளைய தலைமுறையினர் அல்லர்; நெடுங்காலமாய் நிலவி வந்த திரைப்பட/திரைநடிகர் கவர்ச்சி/தலைமை மிகை ஈடுபாடு முதலான கொடுமைகளுக்கும் மேற்பட்டு, இன்றைய இளைய தலைமுறையினருள் பெரும்பான்மையினர், [முன்பெல்லாம் ஏந்துமிக்கவர்களும் செல்வம் மிகுந்தவர்களும் மட்டுமே பங்கேற்று வந்த] 'ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்' 'மானாட மயிலாட' முதலான பண்பாட்டுச் சீரழிவுகளில் உள்ளமிழந்து ஈடுபடுவதை ஊக்குவிக்கும் நோக்கமொன்றே இன்றைய தொ.கா. அலைவரிசைகளில் பலவற்றுக்கு இருப்பதைக் காண்கிறோம். ஒருபக்கம் விளம்பர வருமானம்; மறுபக்கம் எண்ணிக்கையில் மிகுந்தவர்களும் தொலைக்காட்சி அலைவரிசைகளை நாள்முழுவதும் பார்க்கும் ஈடுபாடு கொண்டவர்களுமான நடுத்தரக் குடும்ப இளையவர்களின் மன அலைச்சல்களுக்கு வடிகால் வகுப்பதன் வழி பார்வையாளர் எண்ணிக்கையைப் பெருக்குதல் என்ற இரண்டு செயல்பாடுகளில் இவை முனைந்திருப்பதை உணர்கிறோம். அதாவது, இந்த அலைவரிசைக் குழுமங்களின் முதலாளியர், தமிழகத்தின் வருங்காலத் தலைமுறையின் வளவாழ்வையும் மன-இன-மொழி நலங்களையுமே தம் சொந்த நலன்களுக்காக இரையாக்கி வருகின்றனர். 1927ஆம் ஆண்டு தொலைக்காட்சியை அமெரிக்க அறிவியலார் பார்ன்சுவொர்த்(Farnsworth,P.T.) கண்டுபிடித்து, அதனைப் பயன்படுத்தத் தொடங்கிய ஐம்பது ஆண்டுகளிலேயே அதை வெறுத்த அமெரிக்கர், 'முட்டாள் பெட்டி'(Idiot Box) என்று அதற்குப் பகடிப்பெயரிட்டு அழைத்தனர். பார்வையாளர்கள், தொ.கா. நிகழ்ச்சிகளுக்கு மெல்ல மெல்ல அடிமையாகி விடுவதால் அதற்கு அந்தப் பெயர். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, தென்மார்க் பிரான்சு நாடுகளின் திரைப்படங்களின் எழுத்துப்படி(script)களில், தொலைக்காட்சி பார்ப்பவர்களை நையாண்டி செய்யும் உரையாடல்களைத் திறமையாக அமைத்து அவர்களைத் திருத்தினர். தென்மார்க்குப் படமொன்றில், கதைத்தலைவியானவள், தலைவனிடம் தங்கள் இருவருக்குள் போதுமான அளவு திருமணப் பொருத்தம் உள்ளதா என்று கலந்துரையாடி அறிய முற்படுவாள். அவ்வாறு அவள் அவனை உசாவும் உசாவுதல்களுள் ஒன்று, "இயற்கைக் காட்சிகளில் ஈடுபடாமல், வீட்டுக் கூடத்தில் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்க்கும் வழக்கம் உங்களுக்கு உண்டா?" என்பதாகும். உலகமயமாதலின் உச்சக்கட்டம் - 'நுகர்வோர் பண்பாடு' என்ற ஒன்றை உருவாக்கி, அதை மேன்மேலும் வளர்ப்பது என்பதை இத்தொடரின் முந்திய கட்டுரைகளில் கண்டோம். ஊடகங்களில், குறிப்பாகத் தொலைக்காட்சியைப் பொறுத்தவரை, அதன் அலைவரிசை முதலாளியர்க்குப் பொருள்குவிப்பதில் முதன்மையாகப் பணிபுரியும் விளம்பரங்கள்(commercials), உலகில் உயிர்வாழும் மாந்தர் இனத்தில் ஆற்றல் மிக்க சரிபாதியாக விளங்கும் பெண்களை நுகர்வோராக(consumer) மட்டுமே மாற்றி ஆக்கும் கயமையைக் காண்கிறோம். விலைமிகுந்த - அழகுப்பொருள்களையும் வண்ணவண்ணத் துணிகளையும் பயன்படுத்தி ஓர் ஆடவனைக் கவர்வதையே தம் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டவர்கள் பெண்கள் என்னும் மாயத்தோற்றத்தையும்; மாமியார்களின் மனங்கவரும் அளவுக்கு, புதிய புதிய பொருள்களையும் கருவிகளையும் விலைக்கு வாங்கித் துவைப்பதையும் சமைப்பதையுமே தங்களின் 'ஆன்ம ஈடேற்ற'மாகக் கொள்ளவேண்டியவர்கள் அவர்கள் என்ற கட்டாயத்தையும்; தங்கள் கணவன்மார்களின் ஏந்துகளைப் பார்த்துக்கொள்ள மட்டுமே உயிர்த்திருப்பவர்கள் என்ற 'தெளி'வையும்; தங்களின் குழந்தைகள் எவ்வளவு அழுக்குப் பண்ணினாலும் இன்முகத்துடன் 'மாயமந்திரம்'போல் குறிப்பிட்டதொரு வணிக நிறுவனம் உருவாக்கும் வழலைத் தூளை/கட்டியைப் பயன்படுத்தி 'வெள்ளைவெளே'ரென அவர்களின் துணிகளைத் துவைத்துப் போடுவதற்காகப் பிறந்தவர்கள் தாங்கள் என்ற 'மெய்ஞ்ஞான'த்தையும் - மற்றவர்களுக்கு மட்டுமல்லாமல், பாதிக்கப்படும் அவர்களுக்கே உண்டாக்குபவை. ஆனால், பலதரப்பட்டவர்களும் பெரும்பான்மையானவர்களுமான உழைக்கும் மகளிர் குறித்தும் அவர்களின் பன்முகப்பட்ட இன்னல்கள் இடுக்கண்கள் பற்றியும் எவ்வகைக் கவலையும் படாதவை தொ.கா. விளம்பரங்கள். இந்தக் கருத்தை, இந்தியாவில் தொலைக்காட்சி பரவத் தொடங்கிய காலத்திலேயே(1976-1986) மக்கள் தொடர்பியல் ஆய்வாளர்களான சிபான் முகர்சியும் சுபத்ரா பானர்சியும் பதிவு செய்திருக்கிறார்கள்.(மேலும் அறிய: Jiban Mukherjee, Advertising in India. Subrata Banerjee, Advertising and Small Newspapers.) 1959ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் நடுவண் அரசின் தில்லித் தொலைக்காட்சியும் 1975ஆம் ஆண்டு சென்னைத் தொலைக்காட்சியும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தொடங்கின. 01-01-1976 முதல், அரசின் தொலைக்காட்சி அலைவரிசைகளில் வணிக விளம்பரங்கள் ஒளிபரப்பாகின. அதற்கு முப்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பின், நிகழ்வில், வணிக விளம்பரங்கள், தனியார் தொ.கா. அலைவரிசைகள் பலவற்றை ஒவ்வொரு நகரத்திலும் உருவாக்கி வருவதற்குக் கரணியம் 'கம்பிவடத் தொ.கா. முறை'யே ஆகும். இதனால் ஆதிக்கவாதிகளும் செல்வந்தருமான சிலரின் கைப்பிடியிலுள்ள 'கார்ப்பரேட்' என்று சொல்லப்படும் கூட்டுக் வணிகக் குழுமம்சார் நிறுவனங்களிடம் தொலைக்காட்சி என்றதொரு மக்கள் தொடர்புக் கருவியே முடங்கிப் போயிருப்பதை ஊடக ஆய்வாளர்கள் உணர்வர். இப்பொழுது தமிழ்நாட்டு அரசு, அதை ஒழுங்கமைக்கத் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகின்றது. ஏனெனில், தேர்தல்களின் போக்கையும் நேரிவைப்பக(வாக்குவங்கி)இருப்பையும் மாற்றும் வல்லமை அந்தக் குழுமங்களுக்கு இருப்பதையும், அந்த வல்லமை தனக்காதரவாக இல்லாமையும் நிகழ் அரசுக்கு உறைத்திருக்கிறது. மற்றபடி, மக்கள் நலன்குறித்த கவலை எதுவும் இல்லை. இக்கட்டுரையில் பிறிதோரிடத்தில் சொல்லியிருப்பதுபோல், தென்மார்க்கு பிரான்சு போன்ற நாடுகளில் மக்களிடையே தொ.கா. தொடர்பாக நிலவி வரும் விழிப்புணர்வு நம்மவர்களுக்கும் வந்தால்தான், இந்த ஆற்றல்மிக்க ஊடகத்தின் தாக்குதலால் தம் சொந்த இயல்புகளை இழக்காமல், தமிழினம் முன்னேற முடியும். 'மக்கள் தொலைக்காட்சி' அலைவரிசையில், 'கற்போம் கணினி' போன்ற பயன்மிக்க தொடர்களைக் குறித்து - அறிந்து கொள்ளும் ஆர்வம்கூட இல்லாத தமிழர்களுக்கு இதை எப்படியாவது புரிய வைக்க வேண்டும். சாரமற்ற தொ.கா. நிகழ்ச்சிகளில் தமிழர்கள் தம் பொன்னான பொழுதைப் போக்காமல், அறிவுக்கும் வாழ்க்கைக்கும் பயன்தரும் பணிகளில் ஈடுபாடு கொள்ள ஊடகங்கள் வழியாகவே பயிற்றுவித்தல் வேண்டும். தமிழ்ப் புலவர்களும் அறிஞர்களும்(குறிப்பாக முதியவர்கள்) மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பிவரும் 'கற்போம் கணினி' நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்து, முதற்கட்டமாகத் தமக்கென்று ஒரு மின்னஞ்சலையாவது திறந்துகொண்டு, அந்நிகழ்ச்சியின் பயிற்றாசிரியர் கபிலன் ஐயா மொழிவதுபோல் இன்றைய மின்வெளி(Cyberspace) உலகில் தங்களுக்கான முகவரியொன்றைப் பெற முயல வேண்டும். 'தமிழ்க்காவல்' போன்ற வலைத்தளங்களைக் கணினியில் திறந்து பார்க்கக் கற்றுக் கொள்வதுடன், மற்றவர்களுக்குப் பரிந்துரைக்கவும் கற்பிக்கவும் முன்வர வேண்டும். தவிர, கணினி - இணைய உலகில் இன்று மிகவும் பயன்தரும் 'தேடல்'(Search) ஏந்தைப் பயன்படுத்தி, வீட்டில் பழைய புத்தகக் குவியல்களையும் அவற்றால் விளையும் அடுக்குத் தும்மல்களையும் தவிர்த்து, அதே பொழுதில் உலகெங்கும் நிரம்பியுள்ள நூலறிவையும் தமிழ் - தமிழர் பற்றிய செய்திகளையும் உடனுக்குடன் பெற்றுப் பயன் பெறவும் பயன்படுத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும். நாளேடுகளிலும் தொ.கா. அலைவரிசைகளிலும் [வேறுவழியில்லாமல், அவர்கள் வெளியிட்டு வரும்] இணையம், கணினி பற்றிய பல்வேறு புதிய செய்திகளையும் படித்து, இல்லக் கணினியில் அந்த மென்பொருள்களைச் சேர்த்துப் பயன்பெற வேண்டும். தமிழுக்குப் பாடாற்றும் வலைப்பதிவுகள் பற்பல இன்றுள்ளன. தமக்கு வேண்டியவர்களின் வலைப்பதிவுகளை மட்டும் பார்ப்பதை விட்டு விட்டு, மற்றவர்களின் வலைப்பதிவுகளையும் கண்டு-கற்கும் பழக்கத்தை வலைப்பதிவர்களும் வாசிப்பாளர்களும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களின் பதிவுகளுக்குத் தங்கள் கருத்தைப் பின்னூட்டம் செய்யும் பண்பாட்டையும் தங்களுக்குள் உருவாக்கி வளர்த்துக்கொள்ள வேண்டும். தமிழறிஞர்களும் புலவர்களும் தங்களுக்கென்று வலைப்பதிவொன்றை உருவாக்கிக்கொண்டு, தங்கள் கருத்தைப் பரந்த அளவில் உலகத் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்ள முயலவேண்டும். இதற்கெனப் புதுச்சேரி போன்ற நகரம் ஒவ்வொன்றிலும் நிகழ்த்தப்பெறும் வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறைகளில் தன்முனைப்பின்றிப் பங்கு பெற்றுப் பயில வேண்டும். மரபிலக்கணம் பயின்ற புலவர்களும் பேராசிரியர்களும், 'சந்தவசந்தம்' போன்ற இணையக் குழுமங்களில் பங்கேற்று, பரிமாறப்பெறும் மரபிலக்கணக் கருத்துகளுடன் தங்கள் கருத்துகளையும் முன்வைத்துப் பயன் தரவும் பெறவும் வேண்டும். இங்கு நான் குறிப்பிட்டுள்ள ஒவ்வொன்றும் - காசு செலவழிக்கத் தேவையில்லாத, முற்றிலும் இலவயமான முயற்சிகளே. இரண்டு விரல்களால் பழைய மைத்தூவலைப் பயன்படுத்தி எழுதுங்கள். வேண்டாமென்று சொல்லவில்லை. கூடவே, தமிழ்நாட்டுத் தமிழர்கள்போல் பல்வகை உடைமைகள்/ஏந்துகளோடு இனிமையுற்று வாழாமல், சொந்த மண்ணில் இயல்பாக வாழும் வாய்ப்பைக் கூடப் பெறாமல் ஏதிலிகளாகி வேற்று நாடுகளுக்கு புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் - பற்பல பாடாற்றிப் பல்வேறு அரிய முயற்சிகள் செய்து, இலவயமாகத் தமிழ் உலகுக்கு அளித்து வரும் தமிழ் மென்பொருள்களைப் பயன்படுத்தியாவது "பத்து விரல்களால்" தமிழைக் கணினிவழி எழுதப் பழகுங்கள். இதுவே, இன்றைய நிலையில் 'உலகத்தோடு ஒட்ட ஒழுகல்'(திருக்குறள் 140) மட்டுமல்லாமல், உலகமயமாதல் நம்மை வென்று எங்கோ மூலையில் ஒதுக்கிவைத்து விடாமல் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் வழியும் ஆகும். ***************** நன்றி: தமிழ்க்காவல்.நெட், தி.ஆ.2039 - துலை 1 (17/10/2008)