24.8.11

தங்கப்பா ஐயாவின் 'சோளக்கொல்லைப் பொம்மை' நூலுக்கு சாகித்திய அகாதெமி பரிசு கிடைத்திருப்பதை அறிந்து பெருமகிழ்வுற்றேன். அதுதொடர்பாக, திரு ஏர்வாடி இராதாகிருட்டிணன் அவர்களுக்கு வேண்டிய திரு இளவரசு என்பாரின் வேண்டுகோளுக்கு இணங்கிய தங்கப்பா அவர்களை, நான் இணையமுலாவு நடுவத்துக்கு அழைத்துச் சென்று, என் மின்னஞ்சல் வழி அவர் படத்தை அனுப்பி வைத்தபொழுது, நாற்பத்திரண்டு காலமாக அவருடன் கொண்ட நட்பின் புதிய பருமானமாக அவர்தம் எளிமையும் இயல்பான அணுகுமுறையும் மென்மேலும் கூர்மைபெற்று ஒளிர்வதை உணர்ந்தேன். (ஒளிப்படம்: புதுவை இளவேனில்)
அன்புள்ள நண்பருக்கு வணக்கம். புள்ளுவக்குடி பள்ளிக்கட்டடத் திறப்புவிழவைப்பற்றிய உங்கள் பதிவைப் பார்த்து மகிழ்ந்தேன். மகிழ்ச்சி. நம் மக்கள் பயன்பெற அவர்கள் இபப்டி உதவுவது சந்தோஷமாக உள்ளது. * தற்செயலாக உங்கள் பதிவில் பேராசிரியர் வெங்கடராமன் கட்டுரையை ஒட்டி யாரும் எழுதவில்லை என்கிற பதிவையும் பார்த்தேன். வெங்கடராமன் நூல் பற்றி திண்ணையில் நான் விரிவாகவே எழுதியிருந்தேன். அவர் குறிப்பிட்ட பிறகுதான் ஆவுடை அக்காள் பாடல்தொகுப்பை வாங்கிப் படித்துவிட்டு, அதையொட்டி ஒரு விரிவான க்ட்டுரையை எழுதியிருந்தேன். அக்கட்டுரை உங்கள் நூலகம் இதழில் அப்போது வெளிவந்தது. அதன் இணைப்பு அப்போது கீற்று இணைய தளத்தில் இருந்தது. இன்னும் இருக்கிறதா இல்லையா தெரியவில்லை. ஓய்விருக்கும்போது நீங்கள் ஒருமுறை ப்டித்துப் பாருங்கள். * அன்புடன் பாவண்ணன்

22.8.11

பின்வரும் இடுகையிலுள்ள கல்வராயன்மலை, புள்ளுவக்குடியில் பிரான்சு நார்மண்டிப் பள்ளி மாணவியர் கட்டியுள்ள பள்ளியின் இயற்கையான சூழல். இதன் திறப்புவிழாவில் எம்மைத் தலைமையேற்கச் செய்த(பிரான்சு நார்மண்டிப் பள்ளி)தலைமாணவியர் செல்வி நதியாவுக்கும்;'SOLEIL INDIEN'பொறுப்பாளர் திரு நேரு கிருட்டிணன் அவர்களுக்கும் நனிநன்றியேம்.
கல்வராயன்மலை, 'புளுவபாடி' என்றழைக்கப்படும் புள்ளுவக்குடியில் சென்ற 18ஆம் நாளன்று(18/08/2011)பிரான்சு நார்மண்டிப் பள்ளி மாணவ - மாணவியர் தம் பணித்திட்டத்தின்கீழ்க் கட்டிய மலைமக்களின் சிறார்க்கான் பள்ளியின் திறப்பு விழாவில் நானும் என் துணைவியார் கலாவதியும்(முகநூல்:Calavady Batmanabin)தலைமைப் பொறுப்பேற்றோம். பிரான்சு திராசுபூர் திரு வே.துக்காராம், வண்ணத் துணிப்பட்டியை வெட்டித் திறந்து வைத்தார். 'SOLEIL INDIEN' பொறுப்பாளர் திரு நேரு கிருட்டிணன் அனைத்து ஏற்பாடுகளையும் ஒழுங்கு செய்திருந்தார்.நார்மண்டிப் பள்ளி மாணவ மாணவியரின் அன்பும் அவர்களை மேற்பார்வை செய்திருந்த தோழியர் செல்வி நதியா துக்காராமின் தோழமையும் எம்மைத் திகைக்க வைத்தன. மேலாக, நவீனா துக்காராம்(திராசுபூர், பிரான்சு), உமேஷ் (சென்னை)அவர்களும் எம்மை அங்கு எல்லா ஏற்பாடுகளுக்கும் உட்படுத்தி அன்புடன் உடனிருந்தனர்.[சுவரில் பதிக்கப்பெற்றுள்ளவை - பள்ளியைக் கட்டி முடித்த பிரெஞ்சு மாணவ மாணவியரின் கைப்பதிவுகள்.]