18.2.11

தமிழ் ஒருங்குகுறி: கரவு வினைகளும் காப்பு முயற்சிகளும்! - தமிழநம்பி உலகளாவிய அளவில் கணிப்பொறியில் எல்லாரும் எல்லா எழுத்து முறைகளையும் எழுதவும் படிக்கவும் இயலும்வகை ஏற்படுத்தப்பட்ட எழுத்துத் தகைமைக் குறியீடே ஒருங்குகுறி (அல்லது ஒருங்குறி) ஆகும். தமிழ்நாட்டரசு கடந்த ஆண்டு நடத்திய தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் ஒருங்குகுறியை ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தது பலருக்கும் தெரிந்திருக்கும். ஒருங்குகுறி குழுமக்கூட்டிணைப்பு (Unicode consortium) என்னும் அமைப்பே உலகிலுள்ள மொழிகளின் எழுத்துக்களுக்கு ஒருங்குகுறி உருவாக்கிப் பேணுகின்றது. வணிக நோக்குள்ள கணிப்பொறி நிறுவனங்கள் இணைந்து உலக எழுத்துமுறைகளைத் தகைமைப்படுத்த ஏற்படுத்தியதே இவ்வமைப்பாகும். இதில் பல்வேறுநாட்டு அரசுகளும், கணிப்பொறி, மொழி தகுதியுடைய தனியரும் அமைப்பாரும் உறுப்பினராக உள்ளனர். இவ் அமைப்பில் உறுப்பினராக இருந்த தமிழ்நாட்டரசு இடையில் கட்டணம் செலுத்தத் தவறியதால் உறுப்பாண்மையை இழந்துள்ளதாகவும், இப்போது கட்டணம் செலுத்தி உறுப்பினராக முயல்வதாகவும் கேள்விப்படுகிறோம். கிரந்தத்திற்கு ஒருங்குகுறி உருவாக்க வேண்டுமென ஒருங்குகுறிக் குழுமக்கூட்டமைப்பிற்கு அனுப்பப்பட்ட முன்மொழிவுகளில், மூன்று முன்மொழிவுகள் தமிழ்மொழிக்குப் பெருங்கேடு விளைவிப்பனவாகும். தமிழைச் சிதைத்து அழிக்கக்கூடியனவாகும். அவற்றுள் முதலாவது, காஞ்சி சங்கரமட சிரீரமணசர்மா, 26 கிரந்தக் குறிகளை ஒருங்குகுறித் தகைமைபாட்டுக்குள் கொண்டுவந்து அதனைத் ‘தமிழ் நீட்சி அல்லது நீட்டித்த தமிழ்’ என்று வழங்கவேண்டுமென 10.07.2010 நாளிட்டு அனுப்பிய முன்மொழிவாகும். இம் முன்மொழிவும் தமிழுக்குக் கெடுதி செய்யும் பிறவும் கனடா நாட்டுப் பேராசிரியர் செல்வகுமார் மற்றும் சிலரின் முயற்சியால் பலருக்குத் தெரிய, 2010 அக்குதோபர் பிற்பகுதியில் உலகோர் அனைவர்க்கும் தெரிந்தது. ஒருங்குகுறி அறிஞர் திரு. முத்து. நெடுமாறன் அளித்த உடனடி விளக்க மறுப்பினை ஏற்று ஒருங்குறிக் குழுமக்கூட்டிணைப்பு சிரீரமண சர்மாவின் மேற்கூறிய முன்மொழிவைப் புறக்கணித்துவிட்டது. தமிழுக்குக் கேடு விளைவிக்கும் இரண்டாவது முன்மொழிவு, நா.கணேசன் என்பார் (அமெரிக்காவில் ‘நாசா’ வில் வேலை செய்வதால் இவரை நாசா கணேசன் என்றுங் கூறுகின்றனர்), 68 கிரந்தக் குறியீடுகளோடு தமிழ் எழுத்துக்கள் எ, ஒ, ழ, ற, ன என்னும் ஐந்துடன் எகர உயிர்மெய்க் குறி, ஒகர உயிர்மெய்க் குறி ஆகிய இரண்டையும் சேர்த்து 7 தமிழ்க் குறிகளை கிரந்தத் தொகுப்பில் கலந்து 75 குறிகளைக் கொண்ட கிரந்தத்தமிழ்க் கலவைக் குறியிடுகளை உருவாக்க வேண்டும் என்று கூறியதாகும். நா.கணேசனுக்கும் சிரீரமணசர்மாவுக்கும் இடையே ஏற்பட்ட தருக்கத்தால் குழம்பிப்போன ஒருங்குகுறிக் குழுமக்கூட்டிணைப்பு, இம் முன்மொழிவை எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில், அக் குழுமக்கூட்டிணைப்பு இந்திய நடுவணரசின் உதவியை நாடியது. தமிழைத் தாரைவார்த்துக் கிரந்தத்தை நிலை நிறுத்தும் நா.கணேசன் முன்மொழிவில் சிறசிறு மாற்றங்கள் செய்து, ‘மணிப்பவள மொழிக்காகவும், சமற்கிருத மொழிக்காகவும்’ தமிழ் கலந்த கிரந்தக் குறியீட்டை ஏற்படுத்துமாறு ஒருங்குகுறி குழுமக்கூட்டிணைப்பிற்கு இழதிய அரசு தனது முன்மொழிவைத் தந்தது. இம் முன்மொழிவு, மேற்கூறிய 75 குறிகளுடன் வேறு சில குறிகளையும் இணைத்து 89 குறிகள் கொண்டிருந்தது. இதுவே, தமிழுக்குக் கேடு விளைவிக்கும் மூன்றாவது முன்மொழிவானது. நடுவணரசில் இத்துறைக்குப் பொறுப்பாக இருந்த தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் நடுவண் அமைச்சர் ஆ.இராசா இவ்வளவு நடந்தும், இவை தாய்த்தமிழின் அழிவிற்கு அடிகோலுபவை என்ற அக்கறை கொண்டிருந்ததாகவே தெரியவில்லை. நவம்பர் 2010 தொடக்கத்தில் ஒருங்ககுகுறி குழுமக்கூட்டிணைப்பு நடுவணரசின் முன்மொழிவு குறித்து முடிவெடுக்க இருந்த நிலையில், தமிழ்நாட்டிலும், உலகின் பிற பகுதிகளிலுமிருந்த செய்தியறிந்த தமிழர் கிளர்ந்தெழுந்தனர். அறிஞர் இராம.கி., பேரா.இ.மறைமலை, இ.திருவள்ளுவன், விடுதலை கி.வீரமணி ஆகியோர் முயற்சியால் தமிழ்நாட்டரசு 3.11.2010-இல் அறிஞர் கருத்தறியும் கூட்டம் நடத்தியது. இக் கூட்டத்தில் ஒருமனத்தோடு எடுத்த தீர்மானத்தின்படி முதல்வர் இந்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். இதன் விளைவாக இந்திய அரசு ஒருங்குகுறிக் குழுமக்கூட்டிணைப்பிற்குக் கிரந்தத்தோடு தமிழ்க் குறியிடுகளைக் கலப்பது தொடர்பாகத் தீர்மானிக்க இருந்த கூட்டத்தைத் தள்ளிவைக்குமாறு மடல் விடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், தமிழ்க்காப்பு இயக்கங்கள் சார்பில் சென்னையில், “ஒருங்குகுறியில் கிரந்தத் திணிப்பும் தமிழ்க்காப்பும்” என்ற தலைப்பில் நடைபெற்ற அரிய மாநாடு, தமிழ்க்காப்புத் தீர்மானங்களை நிறைவேற்றி தொடர்புடைய அனைவர்க்கும் விடுத்தது. தமிழ்நாட்டரசு, ஓய்வு பெற்ற நயனகர் திரு. மோகன் தலைமையில் தமிழ் ஒருங்குகுறி அமைப்பு குறித்து அனைத்துக் கருத்துக்களையும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கக் கீழ்க்காணும் 14 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளதாக 18.1.2011-இல் அறிவித்தது. பேரா.இராசேந்திரன், துணைவேந்தர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம். முனைவர் வா.செ.குழந்தைசாமி, முன்னாள் துணைவேந்தர் பேரா. மு.ஆனந்தகிருட்டிணன், தலைவர், ஐ.ஐ.டி., கான்பூர் பேரா. பொன். கோதண்டராமன் (பொற்கோ) முனைவர் ஐராவதம் மகாதேவன் இ.ஆ.ப., (ஓய்வு) பேரா. சோ.ந.கந்தசாமி, செம்மொழித்தமிழாய்வு நடுவண் நிறுவனம் பேரா.கே.நாச்சிமுத்து, உலகத்தமிழ்ச்செம்மொழி தொல்காப்பியர் பேரவை பேரா. அ. அ. மணவாளன், செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம் முனைவர் ப. அர. நக்கீரன், இயக்குநர், தமிழ்இணையக் கல்விக்கழகம், சென்னை முனைவர் மு. பொன்னவைக்கோ, முதன்மைக் கல்வி அதிகாரி, எசு.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலைக் கழகம், காட்டாங்குளத்தூர் திரு. வைரமுத்து, தமிழ் அறிஞர், பாவலர் திரு. அரவிந்தன், தகவல் தொழில்நுட்ப வல்லுநர், சிங்கப்பூர் திரு. மணி. மணிவண்ணன், முதுநிலை இயக்குநர் (கணினி) முனைவர் என். தெய்வசுந்தரம், சென்னை. தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் சார்பில், 27.12.2010 அன்று காஞ்சிபுரத்தில், தமிழ் ஒருங்குகுறியில் கிரந்த எழுத்துக்களைக் கலக்கமுனையும் சங்கர மடத்தைக் கண்டித்துப் பெருமுழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சையில் 9.1.2011-இல் தாளாண்மை உழவர் இயக்கம், தமிழ்மக்கள் புரட்சிக் கழகம் முதலியோரால் தமிழ் ஒருங்குறியில் கிரந்தத் தாக்குதலைக் கண்டித்து மாநாடு நடைபெற்றது. புதுவையில் 30.01.2011-இல், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில், தமிழ் ஒருங்குகுறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாடு திரு.இரா.சுகுமாரன் முயற்சியில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்உரிமைக் கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் 4.2.2011-இல் பெருந்திரளானோர் கலந்து கொண்ட பெருமுழக்க ஆர்ப்பாட்டம் சென்னைப் பொது மருத்துவமனை எதிரில் நடந்தது. இவை தவிர, மறைமலைநகர், ஈரோடை, சேலம் போன்ற இடங்களிலும் தமிழ் ஒருங்ககுகுறியில் கிரந்தத்தால் விளையவிருக்கும் கேட்டை எதிர்த்துப் பொதுக்கூட்டங்களும் முழக்க ஆர்ப்பாட்டங்களும் பரவலாக நடந்துள்ளன. கிரந்தக்கலப்பை எதிர்க்கும் தமிழ்க்காப்புப் பரப்புரை ஊர்தி, ஓசூரிலிருந்து சென்னை நோக்கி விழிப்புணர்வூட்டிச் சென்றதைச் செய்தித்தாள்கள் விளக்கின. சென்னையிலும், தஞ்சையிலும், புதுவையிலும் நடந்த மாநாடுகளில் திருவாளர்கள் இராம.கி, பேரா.தெய்வசுந்தரம், இ.திருவள்ளுவன், ‘தென்மொழி’ பூங்குன்றன் ஆகியோர் செய்திகளைச் சிறப்பாக விளக்கி, வினாக்களுக்கும் விளக்கம் தந்தனர். பேரா. தெய்வசுந்தரம், நடுவணரசின் முன்மொழிவு தமிழ்மொழிக்கு எதிரானது மட்டுமன்று, தமிழ்த் தேசிய உணர்வுக்கு எதிரான வல்லாண்மை நடவடிக்கை என்றும் இந்துமதவெறியின் வெளிப்பாடு என்றும் மாநாடுகளில் விளக்கி கூறிவருகிறார். ஐயா இராம.கி., ஒளிப்பட உதவியுடன், எழுத்தில் தொடங்கி, ஒருங்குகுறி குறித்தும் இற்றைச் சிக்கல் குறித்தும் தெளிவாக மாநாடுகளில் விளக்கி வருகிறார். தஞ்சைத் தாளாண்மை உழவர் இயக்கம் அறிஞர் கருத்துக்களைத் தொகுத்து “ஒருங்குறித் தமிழ் மெய்யும் மீட்பும்” என்ற தலைப்பில் அரிய நூலை அச்சிட்டு வெளியிட்டுள்ளது. இணையத்தில், ‘நயனம்’, ‘வளவு’ வலைப்பதிவுகளில் நாக.இளங்கோவனும் இராம.கியும் விளக்கமாக எழுதியுள்ளனர். இன்னும் ‘தமிழ்நிலம்’, ‘தமிழநம்பி’, ‘புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்’ போன்ற வலைப்பதிவுகளிலும் விழிப்புணர்வுக் கட்டுரைகட்டுகள் எழுதப்பட்டுள்ளன. ‘வல்லமை’ வலைப்பதிவில் பெரியண்ணன் சந்திரசேகரன், செல்வக்குமார், தெய்வசுந்தரம் ஆகியோரின் அரிய விளக்கங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் ‘தென்மொழி’, ‘முதன்மொழி’ போன்ற இதழ்களும் புதுவைத் ‘தெளிதமிழ்’, ‘நற்றமிழ்’ இதழ்களும் கிரந்த ஒருங்குகுறிக் குறியீட்டு முயற்சியின் வழியே தமிழை சிதைத்தழிக்கும் முயற்சியைக் கண்டித்துள்ளன. தொடர்ந்து தமிழ்நாடெங்கும் நடுவணரசின் முன்மொழிவுக்கு எதிரான இயக்க நிகழ்வுகள் நடந்து வருகின்றன. தமிழநாட்டரசு அமைத்துள்ள குழு 12.2.2011 அன்று கூட இருப்பதாக அறிகிறோம். இக்குழு உறுப்பினர்களில் நா.கணேசனின் முன்மொழிவை ஏற்போர் பெரும்பான்மையராக உள்ளவாறு அமர்த்தப் பெற்றுள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. தமிழ்நாட்டரசு இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து உறுப்பினர்களைத் தேர்ந்துள்ளதா? - என்ற கவலை தமிழர் நெஞ்சை வருத்தி வருகிறது. நா.கணேசனுக்கு வேண்டியவரும் சமற்கிருதச் சார்புடையவரும் ஆகிய கொங்குப் பகுதித் தொழில்வல்லாரின் உறவினரும் அவருக்குக் கட்டுப்பட்டவர்களும் குழுவில் இடம்பெற்றுள்ளதாகக் கேள்விப்படுகிறோம். தமிழ்நாட்டரசு தமிழ்க் காப்பில் கவனம் செலுத்தவேண்டும். தமிழ் ஒருங்குகுறித் தொகுப்பில் கிரந்தம் கலக்கக்கூடாது. அவ்வாறே, கிரந்தக் கொத்தில் தமிழ் எழுத்துக் குறியீடுகள் இடம்பெறக் கூடாது. கிரந்த ஒருங்ககுகுறி தனியே இடம்பெற்றால், அதற்கு முதன்மைப் பன்மொழித் தளத்தில் (BMP) இடமளிக்கவே கூடாது. இதற்கு மாறாகக் கருத்துரைப்போர் எவரையும் வரலாறு மன்னிக்காது; அவர்கள் தீராப்பழி சுமக்க வேண்டியவர்களாவர் என்பதை வலியுறுத்துகின்றோம். இனக் காப்பில் தமிழ்நாட்டரசு இழைத்த இரண்டகத்தால் தமிழர் நெஞ்சில் ஏற்பட்டுள்ள கொதிப்பை, மொழிக்காப்பால் ஓரளவேனும் தணிக்க முனையட்டும். --------------------------------------------------------------------------------------------------------------------- (consortium : an association of several companies – The Compact Oxford Reference Dictionary) ___________________________________________________________________________ நன்றி உரைப்பு: இக்கட்டுரை எழுத உதவியாகச் சில செய்திகளுக்கு விளக்கம் அளித்தது திரு நாக. இளங்கோவனாரின் வலைப்பதிவு. அவருக்கு நம் நன்றி. அவர் வலைப்பதிவு: http://nayanam.blogspot.com ------------------------------------------------------------------- Copyright thinnai.com நன்றி உரைப்பு:‘தமிழநம்பி’வலைப்பதிவு http://thamizhanambi.blogspot.com