16.10.11

சோளக் கொல்லைப் பொம்மை!

சோளக் கொல்லைப் பொம்மை!
- ம.இலெனின் தங்கப்பா


சோளக் கொல்லைப் பொம்மை!
முறைக்குது பார் நம்மை.

ஆளைப் போல மிடுக்கு.
அட்டைக்கத்தி முடுக்கு.
தாளில் தங்க மினுக்கு.
தலை தான் கொஞ்சம் ஒடுக்கு.
காளி கோயில் பூதம் போலக்
காவல் காத்து நிற்கும் பொம்மை. - சோளக் கொல்லைப் பொம்மை!

சட்டித்தலை மேலே
சவரி முடி ஒட்டிப்
பட்டை நாமம் தீட்டிப்
பல் இளித்துக் காட்டி
நெட்டி மாலை போட்டுக் கந்தல்
சட்டை மாட்டி விட்ட பொம்மை. - சோளக் கொல்லைப் பொம்மை!

ஓலையாலே நாக்கு,
ஒட்டு வைத்த மூக்கு,
போலி மீசை முறுக்கு,
புள்ளி குத்தி இருக்கு.
காலை மாலை இரவு பகல்
கண் விழித்து நிற்கும் பொம்மை. - சோளக் கொல்லைப் பொம்மை!

வாயைப் பாரு சப்பை;
வைக்கோல் பொதி தொப்பை;
சாய மாலை காற்றில்
சலசலக்க ஆட்டிப்
பேயைப் போல இரவு நேரம்
பிள்ளைகளை மிரட்டும் பொம்மை. - சோளக் கொல்லைப் பொம்மை!