26.2.06

சூரியனாய் வெளியே வா!

உன்னிடம் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்படுவதால்தான் கடும் விமர்சனத்திற்கு நீ ஆளாக வேண்டிவருகிறது. செத்துப்போன நாயை எவரேனும் உதைப்பதை பார்த்திருக்கிறாயா? அட, அதுபோல நீ இருந்தால் அது உன் இருத்தலைத்தான் அர்த்தப்படுத்துமா? கல்லாக உன்னை இருக்கச் சொல்பவர்கள், படியாக உன்னை ஆக்கிப் பாதம் பதித்து மேலேறவே அப்படிச் சொல்கிறார்கள். தாய்க்கு எல்லாப் பிள்ளைகளும் உசத்திதான். உன்வழியில் நீ உழை. பெற்ற தாய்க்குச் சோறுபோடு. வாழும்பொழுதே வேண்டிய துணிமணி வாங்கித்தா. போனபிறகு கோடிபோர்த்தி என்ன லாபம்? அவரவர் அவரவர் வழியில் போகட்டும். முடியாது என்பதற்கு மறுபக்கம்தான் முடியும் என்பது. முடங்கச் சொல்பவர்கள் உன்னை அடங்கச் சொல்கிறவர்கள் உன்னை அடக்கம் செய்கிறார்கள் - நீ வாழும்பொழுதே... ஆமாம். திரைகள் கிழி. தடைகள் தகர். விண்மீனாய் அல்ல, ஒரு சூரியனாய் வெளியில் வா.

19.2.06

யோசிக்கக் கூட நேரமில்லை!

நெஞ்சறிந்து நாம் சொல்லும் பொய்களில் ஒன்றுதான், "எனக்கு யோசிக்கக்கூட நேரமில்லை!" என்பது. இதை அண்ணல் காந்தியடிகள் சொல்லவில்லை. மண்டைக்குள் அணுகுண்டுக்கான சிந்தனை குடைந்துகொண்டிருந்த ட்ரூமன் மொழியவில்லை. நாம் கூசாமல் சொல்லுகிறோம். விவேகானந்தர் சொன்னார்; "எனக்கு நேரமே இல்லை என்று சொல்பவர்களுக்கு, ஏதாவது ஒரு காரணம் வைத்து, வழக்கறிஞர் ஒருவர் மூலம் 'சம்மன்' அனுப்பிப் பாருங்கள்! அவர்களுக்கு நேரம் இருக்கிறதா இல்லையா என்று தெரியவரும்." ஆனால், இந்தக் காலத்தில் சம்மனுக்கும் 'டேக்கா' கொடுக்கத் தெரிந்து கொண்டார்கள்...... தன் 'சமாதியோகம்' பற்றிய சொற்பொழிவில்[பின்னர் இது நூல்வடிவிலும் வெளிவந்துவிட்டது] சுவாமி சிவானந்தர் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார். காலம் என்பது என்ன என்றும், நமக்கு நேரம் எவ்வளவு - எப்படியெல்லாம் - போகிறது என்பதைப்பற்றித் துல்லியமாக அறிந்துணர வேண்டுமென்றால், ஒரு 40 நாள்கள் கால அளவு [விடுமுறையில்தான்] செய்தித்தாள் பார்க்காமல்[டி.வி. குறித்து அவர் அந்தக் காலத்தில் அவசியமில்லாததால் சொல்லவில்லை] யாருடைய கடிதமும் வாசிக்காமல், எதையும் எழுதாமல் படிக்காமல், யாருடனும் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து பார்க்கவேண்டும் என்றார். அந்த அனுபவம்தான் சமாதியோகம் என்பது என்ன என்பதை இலேசாகப் புரிந்துகொள்வதற்கான அடையாள முயற்சி என்றும் தெரிவித்தார். அன்றாடம் அதிகாலையிலேயே செய்திக்குப்பை அபிஷேகமும் இரவு படுக்கையில் உருளும்வரை பிம்பங்களின் குளியலும் நமக்கு நாமே நடத்திக்கொண்டும் 'ஃபாஸ்ட் ஃபுட்' கடைகளுக்குச் சென்று நம் இரைப்பைக்கும் குடலுக்கும் மாசும் நஞ்சும் ஊட்டிக்கொண்டும் 'வாழ்கிற' நமக்கு இதெல்லாம் காதில் ஏறுமா என்ன? வள்ளுவர் குறள்மொழிந்தார்: "ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல"

16.2.06

ஆதிக்கச் சக்திகளின் நுண்ணரசியல் தொடங்கும் இடம்`

குழந்தை வளர்ந்துவிட்டதால் அடாத அடம்பிடிக்கக் கற்றுக்கொண்டுவிட்டது. சந்தைக்குப்போனபொழுது கண்டதெல்லாம் கேட்டது. நல்லவேளையாக, பஞ்சுமிட்டாய்க்காரர் மணியடித்துக்கொண்டே போக, குழந்தையின் கவனம் அங்கே தாவியது. இரண்டே பஞ்சுமிட்டாய்கள். சமாதானம் ஆனது. இனி, அடுத்து சந்தைக்கு அழைத்து வரும்வரை எனக்கு அதுகுறித்த கவலை இல்லை. இது குடும்பம்.. அரசாங்கம் தன் ஊழியர்களுக்கு அவ்வப்பொழுது சலுகைகள் அறிவிப்பதும் இதே பஞ்சு மிட்டாய்க் கதைதான். சில சமயங்களில் மர்மமான மிரட்டல்கள்.. குழந்தையிடம் அப்பா சொல்வார்: "அதோ! அங்கே பார்! மூக்கொழுகிட்டு ஒரு குழந்தெ போகுதில்ல.. அது'க்கு டிரஸ் கூட அவங்க அம்மா அப்பா வாங்கித் தறலெ.. பாத்தியா..ஒனக்கு நாங்க எத்தனெ எத்தனெ கலர்லெ எவ்வளவு விதவிதமா வாங்கித் தந்துருக்கோம். நீ இப்பிடியே அடம் புடிச்சா பேசாமே அந்தக் குழந்தெயெ எடுத்துக்கிட்டு ஒன்னெ அவங்க அம்மா அப்பா'ட்டே வுட்டுட்டுப் போயிடுவோம்!.'' அது போதும் இந்தக் குழந்தையை அரண்டு போக வைப்பதற்கு. அரசும் இதே போலத்தான். இன்னும் வேலையில்லாத எண்ணற்ற இளைஞரின் - இளைஞியரின் கோபத்தையும் ஆத்திரத்தையும் வேலைநிறுத்தம் செய்துகொண்டிருக்கும் அரசூழியர்மேல் திருப்பிவிடும். அவர்களைக் காட்டிக் காட்டியே இவர்களைத் தன் வழிக்குத் திருப்பிவிடும். இல்லத்தில், துணைவியார்க்குக் கணவர்மேல் நம்பிக்கை குறையும்பொழுது, கணவர் புத்திசாலியானால், தன் முழுச்சம்பளத்தையும் தன் துணைவியாரிடமே கொடுத்து, சமாதானம் மேற்கொண்டுவிடுவார். அப்புறம், அவ்வப்பொழுது, இல்லத்தரசியின் கையிலிருந்து- தன் செலவுக்கு முன்னிலும் அதிகத் தொகை பெயருமாறு செய்துகொள்வார். அவரின் துணைவியாரோ....ம்..ம்.. அவஸ்தைப் பட்டாலும் ஆதிக்கசுகம் போல் ஆகுமா என்று தேற்றிக்கொள்ளவேண்டியதுதான். அதேதான் அரசியலிலும். கஜானாவைக் காலி செய்து வைத்துவிடும் இந்தக் கட்சித்தலைவர் தேர்தலை 'ரிலாக்ஸ்'டாக எதிர்கொள்ள, பதவிக்கு வரத்துடிக்கும் எதிர்க்கட்சித்தலைவர் 'டென்ஷ'ன்மிக எதிர்கொள்வார். இங்கே மாதம்தோறும்,அங்கே ஐந்தாண்டுதோறும். வித்தியாசம் அதுமட்டும்தானே!

12.2.06

தெளிவு- தேவமைந்தன்

தெளிவு -தேவமைந்தன் ஏதேதோ சாப்பிடுகிறோம். ஏதேதோ குடிக்கிறோம். எங்கெங்கோ போகிறோம். யார்யாருடனோ என்ன என்னவெல்லாமோ பேசுகிறோம்; சிரிக்கிறோம்; சிரிக்க வைக்கிறோம்; புண்படுகிறோம்; புண்படுத்துகிறோம்; மகிழ்கிறோம்; மகிழ்விக்கிறோம்; வருந்துகிறோம்; வருத்துகிறோம்... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். மாட்டிக்கொள்ளுதல்கள்(commitments) பல: உடன்பாடுகளோ பற்பல; வாக்குறுதிகள் மேலும் பல; நமக்கென்றே அவற்றை மீறிக்கொள்ள ஒரு தனிப்பாணியைக் கண்டுபிடித்துக் கொள்கிறோம். மீறுகிறோம்; ‘அப்பாடா’ என்று நிம்மதி அடைகிறோம். பிறகென்ன? தூங்குகிறோம். நிம்மதியாகவா? இல்லை, பகல்நேர வாழ்க்கையைவிடவும் அபத்தமான கனவுகளோடு. “உங்கள் நண்பர்கள் யார்யார் என்று காட்டுங்கள்; நீங்கள் யாரென்று சொல்லிவிடுகிறேன்!” என்ற அறிவுமொழி ‘அரதப் பழசு.’ புதுமொழி என்ன தெரியுமா? “உங்கள் கனவுகள் எவைஎவை என்று சொல்லுங்கள்; நீங்கள் யாரென்று சொல்லிவிடுகிறேன்!...” “நீங்கள் வாசிக்கும் புத்தகங்கள் எவை?” என்ற கேள்விக்கு ‘இல்லாத புத்தகங்க’ளின் பட்டியலைக் கொடுத்து தப்பிவிடமுடிவதுபோல, கனவுகள் விஷயத்தில் செய்துவிட முடியாது. கண்களெ காட்டிக் கொடுத்து விடும். சந்திக்கும் உங்கள் நண்பர் ஒவ்வொருவரிடமும் கேட்டுப் பாருங்கள். “தெளிவு’ என்றால் என்ன? கொஞ்சம் சொல்லுங்கள்!” என்றுதான்.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கம் தருவார்கள்... என் தமிழ் ஆசான் அந்தச் சொல் இடம்பெறும் பாடல் ஒன்றைச் சொல்லிக் காட்டியிருந்தார். யாரிடம் வேண்டுமானாலும் அதன் விளக்கத்தைக் கேட்டுப் பார்க்கலாம் என்றும் சலுகை தெரிவித்திருந்தார். என் ஊரில் பெரியவர் ஒருவரிடம் இதை நான் கேட்டேன். அவர் பெயரே வேடிக்கையானது. ‘பேயன்பழத் தாத்தா.’ இயற்கை மருத்துவர். எந்த நோயாய் இருந்தாலும், கிழக்குப் பக்கமாக மோட்டுவளையைப் பார்த்து, ஏதேதோ முணுமுணுத்துவிட்டு, அவர் கட்டிலுக்கு உட்பக்கமாக, வெளியே ஒரு பகுதி வாயைக் காட்டிக் கொண்டிருக்கும் அண்டா ஒன்றில் கைவிட்டு, நன்கு பழுத்துக் கறுத்திருக்கும் பேயன்பழம் ஒன்றைத் தருவார். பலபேருக்கு நோய் குணமாயிற்று. ‘பேயன்பழத் தாத்தா’ தனக்கென்று திட்டவட்டமான முடிபுகளைக் கொண்டிருந்தார்.. “தெளிவு’ன்னா இன்னா’ன்னுதா’ன கேட்ட?” என்று சொல்லிவிட்டு சாதிக்காய்ப் பெட்டி ஒன்றைத் திறந்தார். உள்ளே திருநீறு மணந்துகொண்டிருந்த ஒரு பழைய புத்தகத்தை எடுத்துத் தந்தார். அது ‘திருமந்திரம்.’ “பிரி, அந்த 139 – ஆம் பாட்டெ.. ஆங்ங்.. பட்டுக்கயிறு சாத்தி வச்சிருப்பன்’ல.. அந்தப் பக்கத்தெ எடு...” அவர் பேசியது இன்னும் என் செவிகளில் ‘ரீங்காரம்.’ இசைபோல இருக்கும் அவர் பேச்சு.. வாசித்துக் காட்டச் சொன்னார். வாசித்ட முறையைத் திருத்தினார். “ஆங்.. பாட்டெல்லாம் இப்ப்’டிப் படிக்கக் குடாதே.. திருத்தமா, ஒப்புராவா ஓசை நிரவி, படி!” “ தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே” படித்தேன். பொருள் கேட்டேன். எனக்கு அப்பொழுது பன்னிரண்டு வயதிருக்கும். ஒருமாதிரி மருமமாக சிரித்தார். “பொருள் சொல்ல்’றதா.. சொன்னா எல்லா’ வெளங்காது.. நீயா படி.. ஒவ்வொரு தாட்டியும் படி.. ஒவ்வொரு வசில’யுந்தான்.. புதிசு புதிசா வெளங்கும்.. ஒவ்வொரு தீவாளிக்கும் பொங்கலுக்கும் ஒனக்கு புதிசு புதிசா’த் துணியெடுத்துத் தர்’றாங்கள்’ல.. அதுமாதிரி ‘குரு’ ஒனக்கு ஒவ்வொரு தாட்டியும் புதிசு புதிசா பொருள் வெளங்கறமாதிரி கத்துக் கொடுப்பார்..” என்றார். “தாத்தா!.. ‘குரு’ன்னா வாத்தியாரா? ... கேட்டேன். “ம்ம்.. அப்ப்”டியும் வச்சுக்கோ.. ஒவ்வொரு சமயம், ஒவ்வொரு குரு..” என்று கண்களை அழுத்தமாக மூடியவாறு எங்கோ சஞ்சரித்த குரலில் பேசினார். “பசுவதீ! இதெல்லாம் ‘டக்’னு முன்னாலெ எடுத்து வைக்கிற சமாச்சாரம் இல்லே’ப்பா.. ஒன் வாழ்க்கை’லே..அட என்னாப்பா.. ஒவ்வொருத்தங்க வாழ்க்கை’லே அடிபட்டு அடிபட்டு தெளிஞ்சு எந்திரிக்குறபோது வர்’றதுதாம்ப்பா தெளிவு..அட..ஒஞ்சாமி மட்டும் இல்ல.. அது ஒனக்கு அப்பப்ப அடி விழறபோது தருது பாரு.. ஒரு பாடம்.. அதுக்கு இன்னொரு பேர் தெளிவு.. அதெக் குடுக்குது பாரு.. அதான் குரு.. குரு’ன்னு இன்னார்தான், இதுதான்’னு இல்ல.. அதென்னவோ ஒரு உபநிசத்து’ங்றாங்க..அதுல சொல்’றாராம் ஒரு ரிசி..அதாம்’ப்பா..முனிவரு.. தனக்கு சாமி, ஆசாமி’ல இருந்து ‘வேசி வரை’ல இருபத்தாறு குருமாருங்க’ங்றாராமல்ல’ப்பா..சொலவம் வருதாமல்ல அப்பிடி?...” அவர் அன்று இதைச் சொன்னபொழுது விளங்கியதைவிட முப்பது வயதில், நாற்பது வயதில், ஐம்பது வயதில் மேலும் அதிக அதிகமாக விளங்கியது; விளங்கியது என்பதைவிடவும் உறைத்தது என்று சொல்லுவது மிகவும் பொருத்தம். ஒரே பாட்டு, ஒரே சொலவம், ஒரே சொலவடை, ஒரே செய்யுள், ஒரே கவிதை, ஒரே பழமொழி - ஆண்டுகள் பல ஆக ஆக வேறு வேறு அர்த்தம் தருகிறதே..எப்படி? ****************************** நன்றி: திண்ணை.காம். வாசித்து மின்னஞ்சல் விடுத்த அன்பர்களின் கருத்துகள் சிலவற்றை ஏற்று, சற்றுத் திருத்தி மாற்றிய பதிவு.

10.2.06

மீன் -தேவமைந்தன்

அன்பரே, தற்பொழுது என் பரிணாமம் இந்த 'ஜங்க்' காலத்துக்கு ஏற்பவே. பொருளாதாரம் - அகம்புறம், வீட்டிலிருந்து நாடு, நாட்டிலிருந்து வீடு.. வீங்கி. சதா விளம்பரங்கள் துண்டித்தும் தொடர்ந்து தொடர்கள் பார்த்து-- அழுது, விசும்பி, சிரித்து, அதே வசனங்களை வாய்ப்பு நேர்கையில் விடாதென் குடும்பத்திலும் விளம்பி--- வேறுவீடு பார்த்து, தனிவிலகிப்போய், என்னிலிலிருந்தே என்னை விலகவைக்கும் - வினோத ஊடக வார்த்தைகளுக்கெல்லாம் விடாமல் செவிகொடுத்து, கடனோ உடனோ கால்பிடித்து கைபிடித்து வாங்கி; 'இங்க்லீஷ் பேப்பர்' வாங்கி, அப்படியே மடித்த மடிப்புக் குலையாமல் அடுக்கியே வைத்து 'வெய்ட்'டுக்குப் போட்டு; அற்பச் சிறுதொகை அதையும் கூட அடுத்தபெருஞ் செலவுக்கு அச்சாரமாக்கும் நடுத்தரக் குடிமகன், வேறுஎன் செய்வேன்? விலகியே வாழ்வேன். சம்பளம் வாங்கும் வேலைப் பொறுப்பும் ஒழுங்காய் வாழும் வாழ்க்கைப் பொறுப்பும் சுற்றிச் சூழும் நீர்போல் எனக்கு. எதிரிகள் பலப்பலர். விலகி விலகியே நீச்சல் அடிப்பேன். நண்பர்கள் மாறுவர் நாளும் எனக்கு. எவர் என்ன ஆனாலும் எப்படிப் போனாலும் எனக்கென்ன? "பயன்பெறு; தூக்கியெறி" - என்பதுஎன் புனித வாசகம். ''பயன்பெற வாயாத யாரும் எதிர்வந்தால் பாராமல் போயே பழகு'' - அடியேனின் புதிய குறள். தகவமைப்பு உயிர்களை உருவாக்கும் என்பது அறிவியல். என்றால் நிகழ்உலகில் மீனாகவே இருப்பேன் நான். ************************************************************ நன்றி: வார்ப்பு.காம்

''மற்றவர்கள் நரகம்......'' - -தேவமைந்தன்

'உயர்ந்த நீதியை வழங்கும் என்று மக்கள் நம்பும் நீதிமன்ற வாயிலும் கொடுமை என்று அவர்களே அஞ்சும் நரக வாயிலும் ஒன்றே; ஏனெனில் எந்தப் பொழுதில் போக நேரினும் திறந்தே இருக்கும் அவ்விரு வாயிலும்' என்பது ஆங்கில நாட்டார் பழமொழி. அரைமணி நேர வானப் பயணத் தொலைவு மட்டுமே உள்ள பிரான்சு முழுவதும் போற்றும் சிந்தனை யாளர் ழான்போல் சார்த்(த)ரோ பலபடி மேலே போனார். 'நரகம் என்பது வேறே எங்கும் இல்லை; இந்த உலகில் வாழும் ஒவ்வொரு வருக்கும் உண்மையில் நரகம் மற்றவர் மட்டுமே' -- என்றார். அதனை விளக்கும் அமர நாடகம் 'மீள முடியாது.' இனிய சுதந்திரம் இன்னும் உயிருடன் இருக்கும் நாட்டின் இரவு விடுதியில் அரவு நடனம் ஆடும் மகளிரும் விடுப்புப் போட்டுப் பார்த்து ரசிக்கும் அரிய நாடகம். அதனை அடிக்கடி படித்தும் அரங்கம் சென்று பார்த்தும் வியந்தும் பலபட அதனை 'வியாக்யானம்' பண்ணியும் யூரோ'வின் மாற்று மதிப்பைப் பற்றிக் கொஞ்சமும் கவலை கொள்ளாது என்னுடன் தொலைபேசும் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் குறித்துநான் மற்றுமோர் உறவிடம் உயர்த்திச் சொன்னேன். ''அவரா?'' என்று கேட்டுப் பல்லைக் கடித்தவர், ''எங்கள் இல்லம் ஒவ்வொன் றுக்கும் வந்துஅவர் தங்கிப் போனபின் வந்திடும் 'டெலிஃபோன் பில்'லைக் கண்டு கதவின் சந்தில் கைவரல் விட்டதால் நொந்தழும் பிள்ளைபோல் சர்வமும் வெறுத்து வாய்த்தவ ளிடமும் வாங்கிக் கட்டி வாடும் பாவிகள் நாங்கள்... சொன்னதாய் அவரிடம் மறக்காமல் சொல்லும்: ''மற்றவர்கள் நரகம்'- அவருக் கென்றால், எங்கள் அத்தனைப் பேர்க்கும் அவர் ஒருவர்தான் நரகம்.'' சந்தேகம் மெல்லப் புகுந்தது எனக்குள்.. ழான்போல் சார்த்தர் இப்படி எவர்க்கும் 'டெலிபோன் பில்'லைக் கட்டியழ நேர்ந்ததோ?...... ****** நன்றி: திண்ணை.காம்

7.2.06

என் முதல் நாள் கல்லூரிப்பணி அநுபவம்- தேவமைந்தன்

என்னை இது தொடர்பாக எழுதவைத்தவர் சுதாகர். ''அனுபவம் வழுக்கை விழுந்தபின் கிடைக்கும் சீப்பு'' என்ற சொலவடை ஒன்றையும் சொல்லியிருந்தார். அது கல்லூரிக் கல்வி அநுபவத்துக்குப் பொருந்தாது என்று நினைக்கிறேன். என் தலைக்குப் பொருந்தவே பொருந்தாது. ''டையடிக்கக் கூடாதா?'' என்று நண்பர்கள் நொந்துபோய்க் கேட்கும்படியான தலைதான். நரைத்துப் போனதற்கும் பரம்பரைதான் காரணமே தவிர, செய்த பணி அல்ல. நேற்று பின்மாலைப் பொழுதிலும்கூட, பல்கலை. ஆய்வு செய்யும் என் பழைய மாணவர் நெடுநேரம் தொலைபேசியிருந்தார். அவருடைய மேற்பார்வையாளரிடமிருந்து[guide] விலகி அவ்வப்பொழுது, தாயைத்தேடி ஓடிவரும் கன்றுபோல், வீடு வருவார். நெடுநேரம் பேசியிருந்து, மீண்டும் தன்னுடைய ஊக்கம் என்ற 'பேட்டரி'யை 'ரீசார்ஜ்' செய்து போவார். என் 21 -ஆவது வயது முடிந்த சில மாதங்களில் புதுவை அரசுக் கல்லூரிப்பணியில் சேர்ந்துவிட்டதற்குக் காரணம் -- தொடக்கப் பள்ளி நிலையிலேயே 'டபிள் ப்ரமோஷன்' இருமுறை வாங்கிவிட்டதும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் 1969 ஏப்ரலில் எம்.ஏ. தேர்வெழுதிவிட்டு 'டைபாய்'டில் விழுந்து தேறும்பொழுது வந்த 'ரிசல்ட்'டில் உச்ச மதிப்பெண் பெற்ற கையோடு, சைதாப்பேட்டையில் என் பி.ஏ. அரசியல்(B.A. Political Science) ஆசிரியர் பேரா.தியாகராஜனைச் சந்தித்து ஆசீர்வாதம் வாங்கப்போக, அன்று சனிக்கிழமையாக இருக்க, அவர் தான் வாசித்துக் கொண்டிருந்த 'இந்தியன் எக்ஸ்பிர'ஸின் சனிக்கிழமை சிறப்புப் பிரதியில் புதுவை மாநில அரசின் கல்விச் செயலர் திரு ஜெயின் அவர்கள் தந்திருந்த விளம்பரத்தைக் காட்டி, அவரே வெள்ளைத்தாள் ஒன்றில் விண்ணப்பம் எழுத, நான் [செய்ததெல்லாம்] கையெழுத்திட்டு ‘கவர்’ வாங்கி அதில் அதைப்போட்டு அஞ்சல் தலை ஒட்டி அஞ்சல் செய்து விட்டதும் என்ற 'மிகவும் - தற்செயலான - சங்கிலித் தொடர் நிகழ்ச்சி'(Synchronicity) மட்டுமே. ''உரிய பொழுதில் எதுவும் பழுக்கும்'' என்று என் அம்மா சொல்வார்கள். அது நடந்தது. அவ்வளவுதான். அடுத்த சில நாட்களில் புதுச்சேரி நேர்காணல்.. புதுச்சேரி மாநிலம் என்பதால் என் திறமைக்கு வேலை கிடைத்தது. முதல்நாள் கல்லூரிக்குப்போய் முதல்வரிடம் உரியவற்றைத் தந்துவிட்டு, முதல் கையெழுத்தைப் போட்டுவிட்டு, துறைக்குச் செல்லும் வழியில், ' நோட்டீஸ் போர்ட்' பார்க்கலாமே என்று போய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு தடித்த கை, என் தோள்மேல் விழுந்து பற்றிக்கொண்டது. திரும்பினேன். ஆஜானுபாகுவாக மாணவர் ஒருவர். நானும் அவரும் அடுத்தடுத்து நின்றால் 10 போல் இருப்போம். நல்ல வேளை........ ஒன்று கூட... ' 'என்னப்பா கம்ராது! (பிரஞ்சில் ‘தோழா!’) என்ன... இன்னைக்குத்தான் வரீயா! என்ன குரூப்பு? தா பாரு! திரும்பி போறபோது நேரா பூடாதே! அதோ அந்த கொன்ன[கொன்றை] மரம் பக்கம் வந்து போவியாம்..[ரேகிங்]'' என்றார் அவர். ''சரிங்க! நான் நாலாம் க்ரூப்பு'ங்க(பி.யூ.சி. [எ] புகுமுக வகுப்பு - 1969-ஆம் ஆண்டு) வந்துடறேங்க!'' என்று சொன்ன பிறகுதான் அவர் 'பிடி' நெகிழ்ந்தது.. ''அக்காங்..'' என்று விடுவித்து அனுப்பினார். துறைக்குப் போனபின் சிரித்துக் கொண்டே வரவேற்ற தலைவர் பேரா. ம.ரா. பூபதி, எனக்குக் கொடுத்த முதல் வகுப்பே அந்த நாலாம் குரூப்'தான். போய் வருகைப் பதிவெடுத்தபொழுது அகரவரிசைப்படி முதலாவதாக இருந்த மாணவர், பெயர் சொன்னதும், ஆஜானுபாகுவாக எழுந்து, ஆனால் சங்கடத்துடன் நெளிந்து வளைந்து நின்றார். தோளில் கை போட்டு அழைத்தவர். நான் காட்டிக் கொடுக்கவில்லை. அதற்கப்புறம் அவர் என் முதலாவது மாணவராக மட்டுமே நடந்துகொள்ளாமல் தொடர்ந்து தோழராகவே நடந்து கொண்டார். 36 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இன்னும் பசுமையாக இருக்கிறது அந்த முதல் நாள்; முதல் வகுப்பு. ****** நன்றி: மரத்தடி மடற்குழு.

வளர்ந்திருக்கிறேன், ஐயா! -தேவமைந்தன்

அடையாளம் தெரியாதவராய் வாழ்வதில் அர்த்தம் உண்டு. அடையாளம் தெரிவதில் முரண்பாடு முனைந்து நிற்கும். அடையாளங்களால் குலைப்பதும் எதிர்வில் குலைந்துபோக நேர்வதும் வினை - எதிர்வினை. நெற்றியில் தீட்டப்படாவிட்டாலும் மார்பில் அது பூட்டப்படாவிட்டாலும் இனம் சாதி குலம் எல்லாம் நாட்டுடன், அடையாள ஆதிக்கங்களே. அடையாளம் முதலில் சுகமாகலாம். பின்னால் அது பிசாசாய்ப் பீடிக்கும். பதவி பலகை புத்தகம் சொற்கள் உதவி வாக்குறுதி செய்தி தகவல் - எல்லாம் மர்மக் கைகால் விலங்குகள். அடுத்த ஊரில் நகரில் மாநகரில் அடையாளம் தெரியாதவனாய் உலவுவதில் உள்ள அனுபவத்தை உணர்ந்த பின்பும் சொந்த வாழ்க்கையில் சுமப்பதேன் அடையாளங்கள்? (போன்சாய் மனிதர்கள், 1993. சிறிய மாற்றங்களுடன்.)

சொந்த வேர்கள் - தேவமைந்தன்

அன்புமிக்க தோழி ! வாழ்க்கைக்குப் பொருள்தான் என்ன அவரவர் விளக்கம் தவிர்ப்பாய் ! பிறர்சார்ந்து வாழும்வரை வாழ்க்கைக்குப் பொருளில்லை. நமக்காகப் பிறர்முடிவை எடுக்கு மட்டும் நம்கையில் நம்வாழ்க்கை இருப்ப தில்லை. கற்றகல்வி நலம்வீசும் விழிகளினால் உன்வாழ்வை எதிர்நோக்கு. இதுவரை இருந்தஉன் ஈரமான விழிமாற்று. நயமுள்ள கவிதைகள் நயம்காண எவரையும் எதிர்பார்க்க மாட்டா. எதிர்வந்து சுழலும் வெளிச்ச மெய்ம்மைகள் வழிகாட்டும் உனக்கு. பொருளியல் விடுதலைதான் காலூன்றச் செய்யும். தன் சொந்த வேர்களால் இந்தமண் ஊடுருவி நிற்பதுவே பேரின்பம். ....................................................................................................................................................................................................................................................... (போன்சாய் மனிதர்கள், 1993) (புதுச்சேரி.காம் 2005)

உடம்புடனே சொர்க்கம் புகுந்தேன் - தேவமைந்தன்

தென்றலாய் ஒரு தேன்மூச்சு கழுத்தின் விளிம்புகள் வருடும் காது மடல்களைக் கூசும் மேலிதழ் நாசி இடையில் மேலும் கீழும் நடுவுமாய் நிலவும் முகநிலம் அதன்மேல் விளையாடும் மோவாய் பதியும் மென்சுளை குறுகுறுக்கும் முன்கழுத்து பிடரிலும் பரவும் அது கன்னம் வருடும் பிஞ்சு விரல்கள் முதிரா இளஞ்சொல் ''தா..தா..''என்னும் கள்ளமிலா விழிகள் கதைபல பேசும் மலரும் உடம்புடன் புகுந்தேன் சொர்க்கம் ********** நன்றி: மரத்தடி.காம்

2.2.06

சாதனை -தேவமைந்தன்

மலைகள் ஏறி, சிகரம் தொடுகிறீர்கள். பனியில் சறுக்கி வித்தை காட்டுகிறீர்கள். மாரதான், டிரையத்லான், அக்ரொபேட்டிக்ஸ், ஜிம்னாஸ்ட்டிக்ஸ்.. இன்னும் இன்னும் எத்தனை எத்தனைத் துறைகளில் எல்லாம் நித்தமும் சாதனை! எல்லாம் எதற்காக? கின்னஸ், லிம்கா, ஏ.எக்ஸ்.என்., நேட்.ஜியோ., இன்னம் பலவற்றில் இடமே பிடிக்க. நாங்களோ என்றால் -- கீழை நடுத்தர வகுப்பில் "தோன்றி" அரசுப் பள்ளி, கல்லூரி, பல்கலை பரமபத வாழ்வின் பாம்புகள் தப்பியும், கொடுக்கும் சம்பளம் பெறவே நாளும் கருக்கலில் எழுந்து, கிடைத்ததைத் தின்று, காத்து நின்று, கருத்தாய்ப் பிடித்த நகர நரகப் பேருந்தில் திணிந்து, இடிபல வாங்கி, இளித்து முறைத்து, நிறுத்தம் தாண்டி உமிழப் பட்டு, பணியில் அவனிவன் ஏச்சும் பேச்சும், தோழர் தோழியர் ஏளனப் பார்வை, விடலைப் பையன் கடலை உடைப்பு, எல்லாம் கடந்து, மீண்டும் மாலை இரும்பு வண்டியின் இமிசைகள் தாங்கி, இல்லம் திரும்பினால் - "அம்மா! மிட்டாய் வாங்கி வந்தியா? ஏம்மா! மருந்து வாங்கி வந்தியா? அக்கா! நாளைக்கு ஃபீஸ் கட்டணும்!? என்ற நெருப்பு வளையங்கள் புகுந்து, தண்ணீர் பிடித்து, சமைத்து வைத்து, பரிமாறி, கழுவி, ஊற்றி மூடி - "பஞ்ச" வாசப் படுக்கையில் படுத்து, கனவில் மட்டும் ராஜாத்தி யாக வாழ்கிற சாதனை வெறுமே பூமியில் "இருத்த"லுக்காக. சிகரம் தொட்ட சாதனை யாளரே! எங்கள் “அன்றாடம்” தொடுகிற தைரியம் உண்டோ உமக்கு? சொல்வீரே. நன்றி: திண்ணை.காம்

மொழியாக்கம்: எழுத்து...கவிஞர் குஞ்ஞுன்னி

எழுத்து என்பது எழுதப் பெறுவது மட்டுமே அன்று - சோராது எழுச்சி தருவதே எழுத்து. வலிமை என்பது பேசுவதில் இல்லை; சொற்களை அடக்கி ஆள்வதில்தான் உயிர்த்திடும் வலிமை. எந்தவொரு சொல்லின் எல்லையும் எதுவரை தெரியுமா? அந்த வானம் வரையிலே. கவிஞர் ஒருவருக்கு, தான் படைத்தவற்றுள் ஆகச்சிறந்த கவிதை எது? தான் மட்டுமே. கவிஞர் வேண்டாமா? கவிஞரைப் பற்றிய தகவலும் தரவுமே போதுமா? உயர்வான கவிஞர் உரைப்பார் கவிதைகள் உறங்கும் பொழுதிலும் கூடவே. படைக்க வேண்டுமே என்றொரு கவிதை நமக்காகவே காத்திருக்கிறதா? இல்லை, படைத்து முடிந்துவிட்டதாய்த்தான் ஒரு கவிதை உள்ளதா? நன்றி: திண்ணை.காம்