10.10.18

அறிவியல் ஒன்றே கடவுள்!

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காமை; கடந்த ஆட்சியில் ஒப்பந்த|தொகுப்பூதிய முறையில் வேலைகொடுக்கப் பட்டவர்களின் நியமனங்களை ரத்து செய்தல்; தங்களுக்கு வாக்களித்த மக்களுக்குத் தந்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விடுதல்; அவர்களுக்குத் தரப்பட்டிருக்கும் மானியங்களை நயவஞ்சகமாகப் பிடுங்குதல்; நம்பிய மக்களின் வயிற்றில் அடித்துவிட்டு பொதுமேடைகளில் நடிகநடிகைகளே அசந்து போகும்படியாக, அரசியல் பங்காளிகளுடன் முகம்விரியச் சிரித்துக் காட்டுதல். இவை, நீதிநூல்கள் நம்மை வற்புறுத்திய அறமதிப்பீடுகள் அனைத்தும் அறவே வீழ்ந்துவிட்டன என்பதற்கான அடையாளங்கள் அல்லாமல் வேறென்ன? பார்க்கப்போனால், இன்றைய நிலையில் நம் நாட்டின் வலிமையான எதிர்க்கட்சிகளாக ~ முகநூல் வாட்சப் யூடியூப் முதலான வலைத்தளங்கள் மட்டுமே உயிர்ப்போடு இயங்கி வருகின்றன. இவற்றையும் கெடுப்பதற்கென்றே, கோட்டு சூட்டுப் போட்டுக்கொண்டு அடையாளம் கிடைக்காத இடங்களிலிருந்து, நாம் இன்னும் சிற்சில ஆண்டுகளில் அழிந்துபோவோம் என்று இனவழிப்பு ஆரூடங்கள் சொல்லிக்கொண்டவாறே தங்கள் வசதிகளை மட்டும் மேலும் பெருக்கியவாறு இருக்கிறது'கள் - சில புதிய 'அருள் வாக்கு'கள்.
மக்கள் தொடர்பு சாதனங்கள் அசுரவளர்ச்சி அடைந்து கொண்டே வருகின்றன. இருந்தும் திருந்தாத அரசியல்வாணர்களின் அரசியல் முகவர்கள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து தம் கட்சியின் தேர்தல் வீணடிப்புகளுக்காக கரன்சிகளைக் குவிக்கிறார்கள்.
நிகழ் சமூகத்திலும் தம்மிடமுள்ள உபரிப்பணத்தை உருப்படியாகச் செலவிடாமல், சகமாந்தரை வீழ்த்தவும் சிதைக்கவும் தற்கொலைகளுக்காளாக்கவும் *பயன்* படுத்தும் தீயவர்களைப் படைக்கிறார்கள்.
*மனித சுயநலத் தீவிரவாத*த்தால் அழிவுக்கு உள்ளாக்கப்படும் கானுயிர்களும்; அளவிறந்த சூழல்மாசுகளால் நோயெதிர்ப்பாற்றலைக் கூட இழந்துவாடும் அனைத்துலக மக்களும்; அந்த அழிவிழப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளும் கார்ப்பரேட் முதலாளித்துவமும் மென்மேலும் வெற்றிபெற்று வருகின்றன. திரைப்படத்துறையும் திரையரங்கங்களும் புதிய கடன்காரர்களை உற்பத்தி செய்வதில் முன்னணியில் இருக்கின்றன.
இந்த நிலையில் ஆத்திக மடத்துத் தலைவர்கள் போலவே ஆகிவரும் நாத்திக(மடத்துத்) தலைவர்கள், தம் பெரியோர்- சமூகச் சீர்திருத்தத்துக்காகச் சேர்ந்த நிதிக்குவைமேல் 'மான'ம் மிகுந்து வீரமாக உட்கார்ந்து கொண்டு மணிமணியான புத்தகங்களை 'மாட்டிக்கெண்டவனை'ச் செலவுசெய்யவைத்து இலட்சக்கணக்கில் வெளியிடும் 'நம்பிக்கைச் சுரண்டல்' வேறு.
**கரப்பான்பூச்சிகளைப் பார்த்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள்** என்று ஆர்.ஈ.தான்சி என்னும் நரம்பியல் பௌதிக ஆய்வாளர் அறிவுறுத்துவதைக் கடைப்பிடிக்க வேண்டியதுதான்.
**********************
முழுமையான அறிவியல் நோக்கும் போக்கும் மட்டுமே இந்த நாசகாரக் கும்பல்களிடமிருந்து நம்மை நாம் காத்துக்கொள்ளும் ஒரே வழி.

#அறிவியல் #நோக்கு #மட்டுமே #நம்மை #காக்கும்

(This also appears in Devamaindan's Timeline in Facebook)

No comments: