14.3.06

ஆன்மாவை ஈடேற்ற போட்டாபோட்டி!

இப்பொழுதெல்லாம் நம் ஆன்மா ஈடேறுமா என்ற கவலை நமக்கு வேண்டுவதே இல்லை. போட்டி போட்டுக்கொண்டு நம் ஆன்மாக்களைக் கரையேற்ற, நிறையப்பேர் வலுக்கட்டாயமாக நம் உதவிக்கு வருகிறார்கள்.சென்னைக்கு நண்பர் காரில் சென்றுகொண்டிருந்த பொழுது அவரே இதுகுறித்துப் பேசி, "நீலாங்கரைக்குத் திருப்பவா[காரை]?" என்று முயன்றபொழுது, மிகுந்த பணிவுடன் அவர் முயற்சியைத் தடுத்து ஒரு பாபாவிடமிருந்து தப்பித்து உறவினர் இல்லம் போய்ச் சேர்ந்தேன். அடுத்தநாள் சென்னையில் எனக்குத் தெரிந்த பேராசிரிய அம்மையாருடன் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தபொழுது, அவர் இது குறித்துப் பேசி,"இங்கேதானே இருக்கிறீர்கள்? நாளை ஞாயிற்றுக்கிழமைதானே? எங்கள் வீட்டு ஹாலில் நாளை காலை ஒன்பதுக்கு ஒரு ஃபங்ஷன்! வந்துவிட்டுப் போங்கள்!" என்று தோழமையுடன் வேண்டுகோள் விடுக்க, தட்டமுடியாமல் போனேன். அங்கே 'பஜன்' நடந்துகொண்டிருந்தது. போச்சு! அங்கே புன்னகையுடன் இன்னொரு பாபா படம். பல மொழிகளில் பாடல்கள். போனால் போகிறது என்று தமிழில் ஒரு சிறு பாடல். அவசர அவசரமாகப் பாடி முடித்துப் பெருமூச்சுவிட்டார், பட்டுசேலை மற்றும் அணிகளின் கனமும் கூடிய பெரிய அம்மா ஒருவர். அங்கிருந்தும் தப்பினேன். இன்றுவரை இன்னும் பாபாக்கள் சிலரை வழிகாட்டிகளாகக் கொண்ட நண்பர்கள் பலரின் வற்புறுத்தலால் அவர்கள் அழைத்த இடங்களுக்கெல்லாம் போய், அவர்கள் சொல்லுவனவற்றையும் பொழிவனவற்றையும் மொழிபெயர்ப்பவற்றையும் கேட்டுக் கேட்டு என் ஆன்மா, "அப்பா, கொஞ்சம் ஆளைவிடு!" என்று கெஞ்சும்பொழுது, மூன்று அழைப்பிதழ்கள் அஞ்சலில் வந்துள்ளன. ஒன்று மலையடிவார யோகியின் சீடரான என்னூர் நண்பர் அனுப்பியது; அடுத்தது, கேரள அம்மாவின் அடியவரான என் குடும்பத் தோழியார் விடுத்தது; மற்றது, தமிழ்ச் சிவனிய மரபின் சித்தாந்தக் கொள்கைகளில் ஆழ்ந்த ஓர் அமைப்பில் 'ஆக்டிவ் மெம்பர்' ஆகவுள்ள என் சகோதரர் அழுத்தமான குறிப்புடன் 'வந்தாகவேண்டும்' என்ற உத்தியோக தோரணையில் அனுப்பியுள்ளது. எதற்குப் போனால் என் ஆன்மா கரையேறும்? பேசாமல் ரஜினிநடித்த 'பாபா' குறுந்தகடு வாங்கி அந்த நேரத்தில் வீட்டிலேயே இருந்து பார்த்துவிடவேண்டியதுதான்.

No comments: