23.11.05

அருளியின் 'நம் செம்மொழி'-அருஞ்சுவை மொழி வரலாற்று நூல்

தஞ்சையில் உள்ள தமிழ்ப் பல்கலைக் கழகத் தூயதமிழ் அகராதிகள் துறைத் தலைவரும் மொழியியல் ஆய்வறிஞரும் என் மேனாள் மாணாக்கரும் உழுவலன்பரும் ஆகிய அருளி அவர்கள் எழுதி உருவாக்கிய 'நம் செம்மொழி ' என்னும் செறிவான நூல் புதுச்சேரிக் கதிர்காமம் முருகனடியார் திருமண மண்டபத்தே இவ்வாண்டு[2005] சூலைத் திங்கள் முப்பதாம் நாள் சிறப்பாக வெளியிடப்பெற்றது. என் நூலாய்வு உட்பட ஆய்வுரைகளும் வாழ்த்துரைகளும் திட்பநுட்பமாக இடம் பெற்றன. சென்ற ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்பொழுது, தமிழ்நாட்டிலுள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சிகளும் தத்தம் தேர்தல் அறிக்கைகளில் "தமிழைச் செம்மொழி ஆக்குவோம்!" என்பதை - மக்கள்/வாக்காளர்கள் முன்வைத்த தம் செயல்முடிபுத் தீர்மானங்களுக்குள் முதன்மையானதாய் அறிவித்தன. நாற்பது இடங்களிலும் 'ஒன்றுபட்ட முற்போக்குக் கூட்டணி' வெற்றி பெற்றது. எனவே இக் கூட்டணி, தாங்கள் எதை முன் வைத்து ஆட்சிக்கு வந்தார்களோ, அந்தச் செம்மொழிக் கோரிக்கையை 'குறைந்த பட்ச'ச் செயல்திட்டத்தில் ஒன்றாக இணைத்தது. இந்தியக் குடியரசுத் தலைவர், ''நடுவண் அரசு தமிழைச் செம்மொழியாக அறிவிக்கும்!" என்று தெரிவித்தார். 17. 09. 2004 -ஆம் நாள் ''தமிழ் செம்மொழி'' என்று அறிவிக்கப் பெற்றது. பரிதிமாற்கலைஞர்க்கும் மு.சி. பூரணலிங்கம் அவர்களுக்கும் பின்னர் - 1918 -ஆம் ஆண்டு சிவக் கொண்முடிபு(சைவ சித்தாந்த) மாநாட்டில் நிறைவேற்றப்பெற்ற தீர்மானத்திலேயே இதற்கான வித்து இருப்பதைச்சுட்டி [பக்கம் 15] அங்கிருந்தே அதுதொடங்கி நிகழ்ந்தவற்றை மொழி - இன - அரசியற் பார்வை கொண்ட கூர்மையான ஆய்வுக்கு உட்படுத்துகிறார் அருளி. இந்நூலில் இருபது பக்கம் முன்முகமொழிவும் இந்நூலொடு எட்டுப் பக்கம் அருஞ்சொற்பொருள் அகரவரிசையும் உள்ளன. சுவையான நடையில், ஐயிலக்கணப் பரிமாச் செலவில், செறிந்தும் விரைந்தும் வாசிக்கப்பெறக்கூடியதாய் நூல்முழுதும் இயல்கிறது. முன்முகமொழிவில் 'செம்' என்னும் செம்மைக் கருத்துவேர், ஒளிக்கருத்துவேர் அடிப்படையில் செம்மொழி என்ற சொல்லின் வயணமான விளக்கம், விரிவாகச் சொல்லப் பெறுகிறது. செய்>செய்ம்>செம் என்ற சிவப்புக் கருத்தடிப்படை[ஒ.நோ. வெய்> (வெம்மைக் கருத்து) வெய்>வெய்ம்>வெம் [வெம்+மை>வெம்மை]யில்தான் சிவனும் நிறம் பெற்றான்; முருகனும் அவ்வாறே எனில் சிவனும் முருகனும் ஒருவனே என்பதைச் சான்றொன்று காட்டுவதற்காக இலேசாகத் தொட்டுக்கொண்டு செல்லும் பொழுதும் அருளி அவர்களின் ஆய்வுத்திறன் பளிச்சென வெளிப்படுகின்றது. 'பானைச் சோற்றுக்குப் பதமாக ஓரவிழ் காட்டுதல்போல்' இங்கு அப்பகுதியைப் பதிவு செய்கிறேன். ''....[சிவப்பு!...கொள்ளையழகு கொழிக்கும் திருநிறம்! கனலின் நிறம்! கனிந்த கனியின் கவர்ச்சி நிறம்! கதிரவனின் நிறம்! ஒளிகாலும் கவின் நிறம்! ( தாங்களே படைத்து உருவாக்கிக்கொண்டு பராவிய இறைத்திருமேனியையும் இந்நிறத்தால் நிறைத்தே ''சிவன்'' என்றவாறு சுட்டித் தூக்கி நிறுத்தித் தொழுதனர், நம் தமிழவர்!... ) அவனை, இச் சிவப்புக் கருத்து அடிப்படையிலேயே, 'சேய்' என்றும், "சேயோன்" என்றும் குறிப்பிட்டனர்! "சேய்" என்பதற்குக் "குழந்தை" என்பதுவும் ஒரு பொருளாகலின், அதனைத் தவறுதலாகத் தூக்கியெடுத்து நிறுத்தி, " அச்சிவனுக்கு மகனாக, மற்றொரு (பயல்) பையல் இருக்கிறான்!" "அவனே இவன்!" (இம் முருகன்! ) - எனத் தம் மதமயக்கிற் கட்டி மருண்டு மருகி உருகி உவந்தேத்தித் தொடரலாயினர்! அவையெலாம் ஒருபுறங் கிடப்பனவாகுக! ...] முன்னரே 'தமிழ் செம்மொழி ' என்ற கோட்பாட்டை வலியுறுத்திய பரிதிமாற்கலைஞரும், மு,சி,பூரணலிங்கம் அவர்களும், பின்னர்த் தொடர்ந்து தமிழறிஞர்களும் பல்வேறு தமிழ் மொழியினக்காப்பு அமைப்புகளும் அதைச் செம்மொழியாக்க மேற்கொண்ட முயல்வுகள் கோவையாய்த் திண்ணிதின் விளக்கப் பெற்றுள்ளன. 17-09-2004 -ஆம் நாள்சார்ந்த அறிவிப்பிலுள்ள குழப்பங்களும் விரகு(வஞ்சகங்)களும் இலக்கு மாறாமல் சுட்டப்பெற்றுள்ளன. ஆங்கிலேயரே அடுத்தவர்களை ஏய்ப்பதில் வல்லுநர்கள்; அவர்களையும் ஏய்த்து ''சமற்கிருதம் தெய்வமொழி, மீயுயர் செம்மொழி!'' என்று நம்பச் செய்த/செய்யும் ஆரியர் பரப்புரை(பிரச்சார)த் திறனையும் தகுந்த தளங்களை வைத்துச் சுட்டுகிறார் அருளி. 'கல்' எனும் நம்மொழி வேர்ச்சொல் 'கிளாசிக்'[Classic] என்ற ஆங்கிலச் சொல்லுக்கும் அடிப்படையாகியுள்ள வயணம் செம்மையாகச் சித்திரிக்கப்பெற்றுள்ளது.. வேர்வளஞ்செறிந்த மீமொழியான தமிழ், அறிவாராய்ச்சியியலின்[Epistemology] ஆவணமூலமாகவும் திகழ்வதைச் சான்றுகாட்டி எண்பிக்கிறார் நம் அருளி. பாரசீகம், அரபிக்கு மேலடுத்தவாறு நிற்கும் செம்மொழிகள் ஆறு என்று உலகோர் கருதும் தமிழ் - கிரேக்கம் - இலத்தீனம் - சீனம் - ஈபுரு என்னும் எபிரேயம் - சமற்கிருதம் ஆகியவற்றினுள் "உயிர்ப்பொடும், ஊட்டத்தொடும், செம்மாப்பொடும், சீரொடும், சிறப்பொடும், தொல்பழந்திருவொடும், கலங்குறாக் கருவொடும், வலத்தொடும், நலத்தொடும், ஒட்பொடும், திட்பொடும், உலகந் தழீஇஅய நட்பொடும், எண்ணத்தினிக்கும் இனிய பொட்பொடும் உலவி உவப்புறுத்துவதாக, நம் தெள்ளிய தீந்தமிழே இன்று - நன்று நீடிநின்று நிமிர்ந்தெழுந்து நடைசிறந்து இயங்கி வருகின்றமையை, முதலில் நந்தமிழர் நெஞ்சம்நிறக்க உணர்தல் வேண்டும்!" என்று எண்பதாம் [நிறைவுப்] பக்கத்தில் மொழிந்துள்ளதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! நூலின் இறுவாய்த் தலைப்பு, "தமிழிருப்பின் நாம் இருப்போம்! தமிழிறப்பின் நாமும் இறப்போம்!" என்ற தமிழுணர்வும் தன்மானமும் நிரம்பிய தலைப்பு ஆகும். சொல்கிறார் அருளி - "பேணவும் - பற்றவும் - பெருமைப்பட்டுக்கொள்ளவும் - பெருமிதங்கொள்ளவும் பீடுநிரம்பவுமாக நம் ஒவ்வொருவருக்கும் முன்னீடாக இதுவே நிற்கின்றது! நமக்கு உலகநிலையில் முகவரியும் வழங்கித் தகவெழவுஞ் செய்கின்ற ஆற்றல் ஊற்று, இது! தமிழிருப்பின் - நாமிருப்போம்! தமிழிறப்பின் - நாமுமிறப்போம்! - என்பதை, நாம் உள்ளத்திற்கொண்டு ஒழுகுதல் வேண்டும்! "நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!" என்ற தன்மானத் தமிழாசிரியர் பாவேந்தரின் வரி எவ்வளவு உண்மையானது என்பதை இவ்விடத்தில் நாம் ஒருகணம் சிந்திப்போமாக!...."என்று முற்றுப்பெற்றாமல் தொடர்வதாக, நம் செம்மொழி பற்றிய செயல்பாட்டைப் போலவே, தொடர்வதாக - நிறைகிறது 'நம் செம்மொழி' நூல். நூல் வயணம், கிடைக்குமிடம்: [நூற்பதிப்புரிமைப் பக்கங்களில் உள்ளவாறு]ஆசிரியர்: அருளி நூற்பெயர்: நம் செம்மொழிபதிப்பு: தி.பி. 2036 ஆடவை 3 -ஆம் நாள் 17-06-2005 (முதற் பதிப்பு)பக்கங்கள்: 80வெளியீடு: "வேரியம்" - பதிப்பகம், 'அகராதியகம்,' 502 (466) - வழுதாவூர் சாலை, முத்தரையர்பாளையம், புதுச்சேரி - 605 009. இந்தியா.விலை: உருவா. 25/- (இருபத்தைந்து உருவா.)

2 comments:

கொடைக்கானல் said...

மிகவும் விவரமாக எழுதியிருக்கிறீர்கள். இதற்குப் பிறகும் அந்தப் புத்தகத்தை வாங்கி படிக்காமல் இருக்க முடியுமா?

Michaelpillai said...

பயன் மிக்க நூலுக்கான நல்லுரை.