1.11.05

தித்திக்கிறதா தீபாவளி?

விடிவதற்கு மிக முன்பே தொலைபேசி கிணுகிணுக்கிறது. மணி 02:12. பிரான்சிலிருந்து சந்தோஷக்குரல், "ஹேப்பி தீபாவளி" சொல்கிறது. மைத்துனியின் குரல். "இப்பொழுது அங்கே மணி என்ன?" என்று, தூக்கக் கலக்கத்துடன் துணைவியார் கேட்கிறார். ஸ்பீக்கரில் "பத்து மணி! நீங்க'ள்லாம் இன்னும் தீபாவளி கொண்டாட ஆரம்பிக்கலையா?" என்று உற்சாகத்துடன் பதில் வருகிறது. அவர்களுக்கு இருக்கிற உற்சாகம் எங்களுக்கு அன்னியமாகவும், ஏன், திகைப்பாகவும்கூட இருக்கிறது. புதுவையிலிருந்து என் மைத்துனி பிரான்சுக்குச்சென்று 'செட்டில்' ஆகி இருபத்தெட்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. 'உற்சாக'த்தின் அக்கா, அதுதான் என் துணைவியார், இன்னும் தூக்கம் தோய்ந்திருக்கும் குரலில் கூறத் தொடங்கினார். "சின்ன வயசிலேதான் தீபாவளி எனக்குச் சந்தோஷமா இருந்துச்சு! அம்மாவும் பாட்டியும் இதே நேரம், இரண்டு மணிக்கு எழுந்திருச்சு, நல்ல சூடா விறகடுப்பில தண்ணி வச்சுக் குளிச்சிட்டு, எங்களையும் எழுப்பி, குளிக்க வச்சிருவாங்க. வடைக்கு மாவை பாட்டி ஆட்டுக்கல்'லுல அரைச்சிட்டுருப்பாங்க.. அம்மா 'சொய்யான்' உருண்டைக்கு 'ரெடி' பண்ணிட்டிருப்பாங்க... கடலைப்பருப்பும் வெல்லமும் தேங்காயும் கலந்த வாசனை 'கமகம'ன்னு வரும்.. பாட்டி மாவ' அரைச்சுட்டு வடை சுடறதுக்கு 'ரெடி' பண்ணுவாங்க..வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை எல்லாத்த'யும் அரிவாள்மனையில அரிஞ்சு வடைக்கு தயார் பண்ணுவாங்க..அம்மா பூஜை வேலை'லாம் பாத்துட்டிருப்பாங்க..சுவாமி முன்னாலே ஒரு மனை வச்சு, புதுத்துணிகள்'லாம் எடுத்து, மறக்காம நாலு மூலை'லயும் மஞ்சள் வச்சு, படைக்கறதுக்கு வைப்பாங்க.. கூடவே மாமா வீட்'ல இருந்து வந்த பட்டாசையும் படையலுக்கு வைப்பாங்க.. இதுக்கிடை'ல பாட்டி வடையையும் சொய்யான் உருண்டையையும் சுட்டு எடுத்திருப்பாங்க.. தலைவாழை எலை'ல சூடான வடை, இட்லி, சொய்யான் எல்லாம் வச்சு சுவாமிக்குப் படைப்பாங்க.. எங்களுக்கு புது 'டிரெஸ்ஸை' எப்படா கொடுப்பாங்க'ன்னு காத்துட்டிருப்போம்.. அதை உடுத்திட்டு.. காலை'ல அஞ்சு ஆறு மணிக்குள்ள அக்கம் பக்கத்துக்குப் போய் இனிப்பெல்லாம் கொடுத்துட்டு வருவோம்.. அவங்களும் கொடுக்க வீட்டுக்கு வருவாங்க.." இந்த நடுநிசி ஃபோன் வாழ்த்து, பிரான்சும் ஜெர்மனியும் சந்திக்கும் இடத்தருகே ஸ்திராஸ்பூரில் வாழ்ந்துகொண்டிருக்கும் என் மைத்துனியிடமிருந்து வந்து, மேலே கண்ட நினைவலைகளைத் துணைவியாரிடம் உசுப்பிவிட்டது.. அந்தக் காலத்தில் இது போல 'ஹேப்பி தீபாவளி' 'சுலோகன்'கள் கூவப்பட்டதில்லை. ஆனால் தீபாவளி மகிழ்ச்சியாக இருந்தது.. அன்னிய மண்ணில் அவர்கள் தீபாவளியை இயல்பாகக் கொண்டாடும்பொழுது சொந்த மண்ணில் வாழும் நாம் அப்படிக் கொண்டாட முடியவில்லை என்று துணைவியார் வருத்தப்பட்டார். இதில் தொலைக்காட்சியின் நாராசக் குரல் வேறு தொல்லைப்படுத்துவதில் முன்னணியில் நிற்கிறது. தொடர்பில்லாதவர்கள் எல்லாம் 'ஹாய்!' என்று ஆரம்பித்து இடுப்பை இலேசாக ஆட்டிக்கொண்டும் 'மூஞ்சி'யை அஷ்டகோணல் ஆக்கிக்கொண்டும் வாய் வெந்துபோன உச்சரிப்பில் "பட்டும படாமலே..தொட்டும் தொடாமலே.." 'ஸ்லாங்க்' கலந்த ஆங்கிலம் விரவிய சொற்களைப் போட்டு உளற, வெடித்து முடித்த பிள்ளைகளும் தாய்மார்களுமாக, கூடமெல்லாம் நிரம்ப, தொ.கா. பெட்டியின்முன் குழுமி 'அதுகளை'ப் பார்த்துக் கொண்டும், 'அதுக'ளின் விநோதமான குரல்நசிவையும் 'கூழ்கூழ்' உச்சரிப்பையும் இரசித்துக் கொண்டும், மற்றவர்கள்மேல் செலுத்தவேண்டிய கவனம் இழந்து பொய்யுலகம் ஒன்றில் மூழ்கிப் போவார்கள். இன்னொரு வீட்டில் இன்னொரு பக்கம். 'டீப்பா'யின்மேல் 'விடுதலை' நாளேடு விரிந்து கிடக்கும். முகப்பில் 'அசுரன் மலர்' - 'அசுரன் சிறப்பிதழ்' என்ற வாசகம் பெரிய எழுத்துகளில் தென்படும். "தீபாவளி என்னும் ஆரியப் பண்பட்டுப் படையெடுப்பைத் தோலுரிக்கும் வகையில்..." என்று தொடங்கி அந்த வீட்டுக்கு வெளியிலும் அக்கம் பக்கத்திலும் நிகழ்பவற்றுக்குச் சம்பந்தமே இல்லாமல் சொற்றொடர்கள் ஓடும்... புது தில்லி போன்ற இடங்களில் 'குண்டுகள்' வெடித்த பாதிப்பில் உயிர், உடைமைகள், வியாபாரம் இழந்தவர்களின் வீடுகளில் சோகம் ததும்பும். அது கொஞ்சமும் உறைக்காமல் 'மதம்' பிடித்தவர்கள் பலவித ஆட்டம் போடுவார்கள். ஆண்டுக்காண்டு தீபாவளி வரும்; தடிமனான, வண்ணங்கள் பல குழைந்த தீபாவளி மலர்கள் வரும்; 'அசுரன் சிறப்பிதழ்'களும் ஆங்காங்கு தென்படும். கொண்டாடாதவர்கள், சொந்தங்களிடமிருந்து வாழுமிடத்திலேயே அன்னியப்படுத்தப்பட்டு 'இருப்பார்'கள்...அவர்களுக்கும் இனிப்பும் பலகாரங்களும் கொடுக்கப்படும். அவர்களும் தின்று வைப்பார்கள். சிந்தனை மறந்து தூக்கம் வரும். ஆழ்ந்த உறக்கத்தில் தமிழர்கள் சிரிப்பார்கள்.

2 comments:

நளாயினி said...

வாசித்த முடித்தபோது பெருமூச்சொன்று நாசிவழி. ஆனாலும் உங்கள் பழைய தீபாவளியை தரிசித்த அனுபவம். நன்றி. சொய்யான் உருண்டை அதென்னது?

அ. பசுபதி (தேவமைந்தன்) said...

கடலைப்பருப்பைக் குழைவாக வேகவைத்து, வெல்லம் தேங்காய்த் துருவல் ஏலக்காய்ப் பொடி சேர்த்து- இம் மூன்றையும் கலந்து சிறுசிறு உருண்டைகளாக செய்து வைத்துக்கொண்டு, மைதா மாவை தோசை மாவு பக்குவத்தில் கரைத்து(விரும்பினால் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளலாம்) கடலைப் பருப்பு உருண்டைகளை மாவில் துவைத்து எண்ணையில் பொரித்து எடுத்து சாப்பிடவேண்டிய நல்ல பலகாரம் - சொய்யான்.