15.5.06

ஆன்மீகம்: தருமச்சாலை

தருமச்சாலை -சன்மார்க்கச் சாதனையாளர் கோவை அ. குருநாதன் வள்ளற்பெருமான் சன்மார்க்க சபையை 1865-ஆம் ஆண்டில் நிறுவிய பின்னர், இறுக்கம் இரத்தினம் முதலியார் முதலிய மெய்யன்பர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க, சிதறிக்கிடந்த தம் பாடல்களைத் திரட்டித்தந்து, அவற்றை வெளியிட ஒப்புதல் தந்தார். அதைத் தொடர்ந்து 1867-ஆம் ஆண்டு பிப்ருவரி மாதத்தில் அப்பாடல்கள் “திருவருட்பா” எனும் பெயரில் நான்கு திருமுறைகளாக வகுக்கப்பெற்று வெளியிடப்பட்டன. அதே மாதத்தில்தான், அதாவது 2.2.1867 அன்று, வடலூர் - பார்வதிபுரத்தைச் சேர்ந்த 40 அன்பர்கள் தங்கள் 80 காணி நிலத்தை வள்ளலாருக்குத் தானமாக எழுதிக் கொடுத்தனர். அதனை ஏற்ற அவர் அந்த நிலப்பகுதிக்கு ‘உத்தர ஞான சிதம்பரம்’ எனப் பெயரிட்டார். அவர் வாழ்ந்த காலம் பஞ்சங்கள் நிலவியிருந்த காலம். எந்தவித ஆதாரமுமற்ற ஏழை எளியவர்களும், வழிப்போக்கர்களும் பசிக்கொடுமையால் படும் வேதனையைக்கண்டு மனம் பதைத்து, அவர்களின் பசிப்பிணியைப் போக்க திருவுளங் கொண்டார். தருமச்சாலை ஒன்றே இதற்கு வழி என்று எண்ணியிருந்த சமயத்தில், தானமாகக் கிடைத்த அந்த நிலம் அவருக்கு மிகவும் பயன்பட்டது. நிலம் கிடைத்த நாலாவது மாதத்திலேயே, அதாவது 23.5.1867 ( வைகாசி 11) அன்று, தருமச்சாலைக்கான கால்கோள் விழாவும், அன்னதானத் தொடக்க விழாவும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. அவ்விழாக்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். தருமச்சாலைக் கட்டடம் கட்டுவதன் காரணமாக கருங்குழியை விட்டு வந்த வள்லலார், 1867-இலிருந்து 1870-வரை மூன்றாண்டுகளுக்கு தருமச்சாலையைத் தன் இருப்பிடமாகக் கொண்டார். தருமச்சாலைக்கு முதன்முதலில் ‘சமரச வேத தருமச்சாலை’ என்று அவர் பெயரிட்டார். பிற்காலத்தில், 18.7.1872 அன்று ‘சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை’ என்று அவரே பெயர்மாற்றம் செய்தார். தருமச்சாலைக் கட்டடத்தில் வள்ளலார் ஏற்றிய ‘திருவடிப் புகழ்ச்சி’யும், தருமச்சாலையைப் பற்றி அவர் அருளிய பாடல்களும் கல்வெட்டுகளில் பதிக்கப் பெற்றுள்ளன. வழிபாட்டு மேடையில் ஆண்டவருக்கான ஞானசிம்மாசனமும், வள்ளலாரின் உருவச்சிலையும், அணையாவிளக்கும், ‘அருட்பெருஞ்ஜோதி அகவல்’ மூல ஏடும் அன்பர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. அன்பர்களும் கூட்டங் கூட்டமாக வந்து கண்டுகளித்து மனநிறைவுடன் திரும்பிச் செல்கின்றனர். கடும் பசியுள்ளவன் உண்ணும் உணவில்தான் இறைவனைக் காண்பான். அவன் பசியுடன் இருக்கும் பொழுது எந்த போதனையும் அவனுடைய செவியில் புகாது. அவன் கடைத்தேற, அவனுக்கு முதலில் வேண்டுவது உணவுதான். பசித்தோரின் பசிப்பிணியைப் போக்குவதன் மூலமாகவே ஒருவன் ஆண்டவரின் பேரருளைப் பெறக்கூடுமே அல்லாமல், பூஜை, ஜபம், யாகம் போன்றவற்றால் அன்று. இரக்கமே உயிர் எனக் கொண்ட வள்ளலார் பசிவேதனை கொண்ட ஏழை மக்களின் துயர்துடைக்க தருமச்சாலையைக் கண்டார். தனக்குப் பின்னரும், தொய்வில்லாமல் தொடர்ந்து நடைபெற அணையா அடுப்பை ஏற்றிவைத்தார். 138 ஆண்டுகள் கடந்தும் இன்னும் அந்த அடுப்பு எரிந்துகொண்டு, ஏழை மக்களின் பசித்தீயை அணைத்துக் கொண்டிருக்கிறது. தான் போதித்ததை, தானே செயலாற்றிக் காட்டிய, உலகங் கண்ட, முதல் துறவி அவர்!

No comments: