9.8.05

திருநள்ளாற்றுக்காக வந்த பிரான்சுத் தங்கையுடன்...

இப்பவும் நான் சுறுசுறுப்பாக இயங்கிகொண்டுதான் இருக்கிறேன். மதிய உணவு உண்டபின் சற்று நேரம் ஓய்வெடுப்பது, எனக்கும் பழக்கம் தான். ஆனால் ஒரு மாதமாக ஓய்வு எனக்கு 'டாட்டா' காட்டிவிட்டது காரணம், என் ஓரே தங்கை பிரான்சிலிருந்து விடுமுறைக்கு வந்திருப்பதுதான். ஒவ்வோர் ஆண்டும் வருபவள்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புதிய நேர்த்திக்கடனோடு வருவதில் அவளுக்கு இணை அவளேதான். இந்த முறை, தன் மூத்த மகளோடும் வருங்கால மருமகனோடும் வந்திருந்த அவளுக்குப் புதிய நேர்த்தி. திருநள்ளாற்றுக்குப் போய், அங்குள்ள நளதீர்த்தத் திருக்குளத்தில் தன் மகளும் வருங்கால மருமகனும் முழுக்குப் போட்டு , அணிந்துவரும் (பிரான்சில் வாங்கிய) புத்தாடைகளை அந்தக் குளத்திலேயே கழித்து விடுவதென்பதுவே அது. இது மாதிரியான நேர்த்திகளால் லாபம்தான், மற்றவர்களுக்கு. இப்படிக் கழிக்கும் துணிகள் பத்து லட்சம் ரூபாய் ஆண்டு ஏலத்துக்குப் போவதுடன் புத்துணர்ச்சியும் புதுப்பொலிவும் 'ஊட்ட'ப்பெற்று, வாரக் கடைசிகளில் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் 'ஓஹோ'வென கூட்ட நெரிசலுடன் நடத்தப்படும் ஞாயிறு அங்காடிகளில் நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன என்று சனீஸ்வரர் தரிசனப் பகுதியைக் கவனிக்கும் முக்கியமானவர் ஒருவரால் கிசுகிசுக்கபட்டதைப் பட்டவர்த்தனமாக அதிகாரி ஒருவர் பரசியமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். போதாதற்கு, அந்த 'முக்கியம்' சனீஸ்வரர் சந்நிதிக்கு இடதுபுறம் சற்றுத்தள்ளி அமர்ந்துகொண்டு பிரசாதம் தருவதுபோல் உடல்மொழியை உருவாக்கிக் கொள்வாராம். சனீஸ்வரரை மெய்மறந்து துதித்துக்கொண்டிருக்கும் பக்தைகளின் கவனத்தை ஈர்த்து, சந்நிதியைவிட்டே அவர்களை வெளியேற்றிவிட்டு, தன் 'சகா'க்களைப் பார்த்து "எப்படி என் சாமர்த்தியம்?" என்பதுபோல் சேட்டைவேறு செய்வாராம். இதைமட்டும் கொஞ்சம் வேதனையோடு சொன்னார். பாவம், அவர் மனைவியும் பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவர்போல் இருக்கிறது. என் 'பிரான்சுத் தங்கை' அதுகுறித்தெல்லாம் சட்டையே செய்யாமல் தன் காரியத்திலேயே குறியாக இருந்தாள். நான் நினைத்ததற்கு மாறாக அவளின் மகளும் வ.மருமகனும் ஆனந்தமாகவே அந்த எண்ணைக்குளத்தில் "முங்கி முங்கி" எழுந்து துணிகழித்து மாற்றுத்துணியணிந்தனர். "ஏண்டீ! நீ மட்டும் முங்கவில்லையா?" என்று நான் கேட்டதற்கு ஒரு மாதிரி முறைத்துவிட்டு, "நாந்தான் மாத்தத் துணி கொண்டு வரலியே! நீயாவது ஞாபகப்படுத்தக்கூடாதா?" என்று என்மேலேயே பழி போட்டாள். அதுவும் அவளுக்குக் கைவந்த தந்திரம். அதைக்கேட்ட அவள் மகளுக்கும் வ.மருமகனுக்கும் ஒருவித திருப்தி -முகத்தில். பிறகு என்ன? நெற்றுத் தேங்காயின் கண்ணொன்றின் 'பொக்கை'மேல் கட்டிக்கற்பூரம் ஏற்றி க் குளத்துப்பிள்ளையார் கோயில் வலதுபுறம் அமைக்கப்பட்டுள்ள 'கண்ணேறுகழி கற்சுவர்'மீது எறிந்து 'சூறை' தெறித்தார்கள். இவையெல்லாம்-- கூட வந்த புதுவை வீடியோ நண்பர் ஒருவரால் 'சிறப்பாக' படம் பிடிக்கப்பட்டன. பிரான்சுக்குத் திரும்பியபின் கணவருக்கும் குடும்ப நண்பர்களுக்கும் போட்டுக்காட்டினால்தான் விடுவார்களாம். எப்படியோ தங்கைக்குத் திருப்தி; எனக்கு இன்னும் அவளோடு இப்படிப்போய்வந்த அசதியும் அலுப்பும் நீங்கவில்லை. ம்..ம்..சொல்ல மறந்துவிட்டேனே.. அந்த சனிக்கிழமை திருநள்ளாற்றுக்கு வந்த பக்தகோடிகளின் எண்ணிக்கை, எங்களையும் சேர்த்து(!) 1,50,000-த்தையும் தாண்டியதாம்! இது எப்படி இருக்கு?

No comments: