26.10.05

ஐயே மெத்தக் கடினம்!

எத்தனை எத்தனை விளம்பரங்கள்! கதிர் தொலைக்காட்சி (சன் டிவி) முதல் எல்லாவற்றிலும் காலைப் பொழுதில் சிறுவர் சிறுமியர் உடம்பை எப்படி எப்படியோ வளைக்கிறார்கள். ஒரு பெரியவர் எதை எதையோ பேசுகிறார். வைத்த கண் வாங்காமல், சோபாவில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு நம் வீட்டுச் சிறுவர் சிறுமியர் சிலர் அதைப் பார்க்கிறார்கள்... முகத்தில் எவ்விதச் சலனமும் இல்லாமல். பலர் 'ரிமோட்'டை அழுத்தி, கிழவனார்க்கும் அவர் பேச்சைக் கேட்டு வளைந்து கொடுத்துக் கொண்டிருக்கும் சிறுபிள்ளைகளுக்கும் விடை கொடுத்துவிட்டு, கதிர் இசை (சன் மியூசிக்)யைச் சின்னத்திரையில் 'ஹாய்' என்று பாதிக் கொட்டாவியாகத் தொடங்கிப் பாட்டும் கூத்தும் பார்க்கவைக்கும் தொகுப்பாயினியின் பழகுதமிழில் சிந்தையிழக்கிறார்கள். "அம்மா! ஜிம்முக்குப் போய்வாறேன்!" என்று இளைஞர்கள் இளைஞைகள் 'கஜினி'யின் 'ஒரு மாலை இளவெயில் நேர'த்தைக் காலையிலேயே பாடிக்கொண்டு கிளம்புகிறார்கள். காசுக்குக் காசு..கவர்ச்சிக்குக் கவர்ச்சி..ஜிம்கள்..அழகு நிலையங்கள்..பாரம்பரிய யோகா - பயிற்சிமையங்கள்....பள்ளி-கல்லூரிகளில் 'டெமான்ஸ்ட்ரேஷன்'கள்.. வயசான வாத்தியாரோ, பேராசிரியரோ, தலைமை ஆசிரியர்களோ ஆங்காங்கு அவ்வப்பொழுது நம்மை முறைத்துக் கொண்டு(' ஏ, மாபாவிகளே!' 'லுக்') அந்த மழித்த யோகா வாத்தியாருக்கு 'அறிமுகம்' என்ற பேரில் வாய்க்கு வந்தபடியெல்லாம் விளாசித் தள்ளுவார்கள். மத்தியான சாப்பாட்டினைப் பொறுத்த மட்டில் அவரவர் தலைவிதிக்கேற்ப நெளிவார்கள், கிறங்குவார்கள், திடீரென்று 'கெட்ட சொப்பனம்' கண்டு அதிர்ந்து விழித்துக் கொள்வார்கள் - பிள்ளைகள், பள்ளிகளில்... ஒரு மாதிரி, சக மாணவ மாணவியரைக் கண்டு - முறையே இளிப்பார்கள், வழிவார்கள் கல்லூரிகளில். இவற்றையெல்லாம் பார்க்காமலேயே, தன் 'நந்தனார் சரித்திரக் கீர்த்தனை'யில் கோபாலகிருஷ்ண பாரதியார் பற்பல ஆண்டுகளுக்கு முன்பே நந்தனார் பாடுவதுபோல் பாடிவைத்தார்: "ஐயே மெத்த கடினம் - உமதடிமை ஐயே மெத்த கடினம் பொய்யாத பொன்னம்பலத்து ஐயா நீ இருக்குமிடம் நையாத மனிதருக்கு உய்யாது கண்டு கொள்ளும்!... ஐயே மெத்த கடினம்..." தேவையா இதெல்லாம்? வள்ளலார் கேட்டார் அல்லவா? "உம்மை இப்பூமியில் பிறப்பிக்கத்தெரிந்தவருக்கு, காதையும் மூக்கையும் குத்திவிட்டு அனுப்பத் தெரியாதா?" என்று.

1 comment:

b said...

நன்றாக எழுதுகிறீர்கள்.

இந்த ஜிம்முக்குப் போவதில் இன்னொரு வசதி இருக்கிறது. என் நண்பன் ஆனந்த் என்று பெயர். உடம்பை புஷ்டியாக அடிக்கடி ஜிம் செல்வான். அப்படி போன இடத்தில் பனியனைக் கழட்டி உடம்பைக் கவர்ச்சி காட்டியே எதிர்வீட்டு கவிதாவைக் கணக்கு செய்துவிட்டான் போல. அதன்பின் அவன் வேலைக்காக எங்கோ சென்றுவிட அந்தப் பெண் என்னைக் கூப்பிட்டு மூக்கைச் சிந்தியபடி, 'என்னாங்க.. ஒங்க கூட்டாளி இப்ப எங்கங்க இருக்காருன்னு?'ன்னு கேட்டுச்சி.

அதன்பின் என்னாச்சுன்னு தெரில. இப்ப அவன் எஸ்.ஐயா திருச்சில இருக்கான்.