28.4.06
திபேத்தியப் பழமொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும்
திபேத்தியப் பழமொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும்
பேராசிரியர் அ.பசுபதி (தேவமைந்தன்)
இமயமலை விசும்பைத் தொட்டுவிடுவதுபோல் காட்சியளிக்கும் நிலப்பகுதியின் உட்பக்கம் விரிந்து பரந்து கிடக்கும் பனிப்பாலைவனமான மலைப்பகுதி, ‘இலே’[Leh] எனப்பெறும் இலடாக்கின் தலைநகர் ஆகும். இந்த ‘இலே’ நகரில் எப்பொழுதும் மிகையான குளிரும் மிகையான வெப்பமும் மாறி மாறி நிலவும்.
மக்களின் பண்பாடு உருவான வகை
இந்திய ஒன்றியத்தின் ஆகப்பெரிய மாநிலம் (முன்பு மாவட்டம் என்றே அழைக்கப்பெற்றது) இலடாக்கு; அதேபொழுது அதன் மக்கள் தொகையோ மிகவும் குறைவு. இப்பொழுது உள்ள மக்கள் தொகை மிகுதி .
1971-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பெற்ற கணக்கீட்டில், இலடாக்கின் 95,876 ச.அ.மா. பரப்பில், நூற்றைந்தாயிரம் மக்களே வாழ்ந்தனர் என்று உள்ளது. உணவையும், விலங்கினங்களுக்கான தீனியையும் வேண்டும் அளவுக்குமேல் உருவாக்கிய மக்கள் அவர்கள்.
கிழக்குத் துருக்கித்தானத்திலிருந்து பயணம் செய்து வரும் ஒட்டக வண்டியொழுகைக்கும், மாந்தருக்கும், அவர்கள் இவர்ந்துவரும் குதிரைகளுக்கும், கோவேறு கழுதைகளுக்கும் போதும் போதும் என்கிற அளவு உணவும் தீனியும் தந்த பின்பும் தங்களுக்கும் தங்கள் வீட்டு விலங்குகளுக்கும் உணவும் தீனியும் மிகுந்திருப்பதைக் கண்டு நிறைவுடன் வாழ்ந்த மக்கள்.
வடக்கே துருக்கித்தானமும்; கிழக்கே சீனமும்; தெற்கே குலு, அமிர்தரசு முதலான இந்திய நகரங்களும்; மேற்கே ஆப்கானித்தானமும், காசுமீரமும் என்ற நிலவியல் நிலையில், ‘இலே’ நகரம், நடுவண் ஆசிய வணிகத்திற்கு ஏற்ற நடுவமாகும். நெடும் பயணத்தால் களைத்துவரும் ஒட்டகங்களுக்கு நல்ல உணவும் நீரும் ஓய்வும் பண்டுவமும் அளிக்கும் புகலிடமுமாகும். இத்தகைய சூழலில், திபேத்திய மொழி மக்களின் பண்பாடு, முற்றிலும் உணவு- உடை- உறையுள் தொடர்பானதாகவும்; மாந்தரை விருந்தோம்புதல் என்பதற்கும் மேலாக விலங்குகளை விருந்தோம்புதல் என்பதைச் சார்ந்ததாகவும் அமைந்திருக்கிறது.
திபேத்தியப் பழமொழிகளுக்கும் தமிழ்ப் பழமொழிகளுக்கும் உள்ள முகாமையான வேறுபாடு
தமிழ்ப் பழமொழிகளில் பெரும்பான்மையும் தூயதமிழ்ச் சொற்களே காணப் பெறுகின்றன. ஒலிப்பும் அவ்வாறே. ஆனால் திபேத்தியப் பழமொழிகளிலோ மிகவும் இயல்பாக திபேத்தியம் அல்லாத மொழிகளின் சொற்கள் ஊடுருவியுள்ளன. எந்த அளவுக்கு மொழி ஊடுருவல் நிகழ்ந்துள்ளது என்றால் ஏற்கெனவே பழமொழிகளில் இருந்த தூய திபேத்தியச் சொற்கள் அகற்றப்பட்டு, அங்கே காசுமீரி, இந்துத்தானி அல்லது துருக்கி மொழிச்சொற்கள் இடம்பெற்று விட்டன.
என்ன கரணியம்?
நிலவியல் அடிப்படையிலும் மொழிநிலையிலும் வேறுபட்ட மக்களுக்கு இடமும் உணவும் தரும் பண்பாடு திபேத்தியருக்கு இருந்ததால், மெல்ல மெல்ல “ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியது போல” ஆனது. பழமொழிகளுக்கே இந்த நிலை என்றால், திபேத்திய மொழி என்ன ஆகியிருக்கும் என்று சொல்லவும் வேண்டுமோ? இதனால்தான் அவர்களின் பழமொழி - “வருகைதரும் நல்ல வணிகப் பெருமக்களுக்குத் தோழமை காட்டு; களவாணியை விரட்டியடி!” (மறைத்திரு செர்கான் தொகுப்பு: எண்.644) என்று கூறுகிறது. வணிகத்தோடு வந்த மொழிதானே தமிழில் கலப்புக்குக் கரணியமானது? “வந்தவரெல்லாம் சந்தையில் குடியா?” என்ற தமிழ்ப் பழமொழி, சற்றொப்ப இதே கருத்தை உணர்த்துகிறது. திபேத்தில் நான்கு திசைகளிலிருந்தும் வேற்று நாட்டவரும் இனத்தவரும் எளிதில் புக நேர்வதால் அங்கு பழமொழி சற்று விரிவானதாக இருந்து, “களவாணியை விரட்டியடி!” என்பதும் இணைகிறது. இன்று மேற்கு வங்கத்தில் இந்நிலை இருப்பதைப் பார்க்கலாம்.
ஒத்த கருத்து; உணர்த்தல் வேறு!
திபேத்தியப் பழமொழியொன்று, “தன் விரலை வெட்டிக் கொண்டாலும், குருதி வீணாகாமல் பார்த்துக் கொள்வான்!”(மேலது: எண்.656) என்று சொல்கிறது. கஞ்சன் எனப்படும் இவறன்மை உடையவனைக் குறித்துக் கூறப் பெறுவது இது. “அறுத்த விரலுக்குச் சுண்ணாம்பு தடவமாட்டான், ஆண்டி வந்தாலும் பிச்சை போடமாட்டான்!” என்ற தமிழ்ப் பழமொழி, ஒத்த கருத்தை உடையது; ஆனால் உணர்த்துவது வேறாயிருக்கிறது. இந்தப் பழமொழி, ‘கழகப் பழமொழி அகரவரிசை’ நூலுள்(ப.27:எண்.798) இவ்வாறு உள்ளது. மக்கள் வழக்குகள், “அறுந்த விரலுக்குச் சுண்ணாம்பு கிடையாது,” “அறுத்த விரலுக்குச் சுண்ணாம்பு தரமாட்டான்” என்பவையே. ஒத்த கருத்துடைய விரல் குறித்த பழமொழிகள் தமிழிலும் திபேத்தியத்திலும்தாம் உள்ளன. ஆப்பிரிக்கப் பழமொழி ஒன்று, “வெறும் கையை நக்குவாரில்லை” என்று கையளவு போகிறது. அவ்வளவுதான்.( சான்றுகள்: ப. இராமசாமி, உலகப் பழமொழிகள், வள்ளுவர் பண்ணை, சென்னை 1964: சு. இலட்சுமி நாராயணன், உலகப் பழமொழிகள், வானதி, சென்னை 1994). தன் விரலை வெட்டிக் கொண்டாலும், குருதி வீணாகாமல் பார்த்துக் கொள்வதென்பது ‘இலே’ நகரின் குளிர்மிகுந்த பொழுதில் கூடுமானதே.
உயர்ந்தோர் குறித்த திபேத்திய - தமிழ்ப் பழமொழிகள்
“இறப்பைச் சந்திக்கவே நேர்ந்தாலும் சொந்த நல்லியல்பிலிருந்து வழுவ மாட்டார்கள் நேர்மையாளர்கள்!”(மறைத்திரு செர்கான் தொகுப்பு: எண்.988) என்ற திபேத்தியப் பழமொழி, பழமொழி இயல்பில் குன்றி, பொன்மொழி போலத் தெரிகிறது.
“மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் / உயிர்நீப்பர் மானம் வரின்” (திருக்குறள்: 969) என்ற திருக்குறள் கருத்தினைத் திபேத்தியர் அறிந்திருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. கவரிமா என்பதைக் கவரிமான் என்று சொல்லக்கூடாது என்றார் மொழிஞாயிறு பாவாணர். ஏனெனில் கவரிமா என்பது குளிர் மிகுந்த நிலப்பகுதியில் மட்டுமே வாழக்கூடியது; ஆப்போலும் தோற்றம் உடையது என்றார் அவர். ஆனால், தமிழ் மரபுரையில், அவர் நேரிலுரைத்த இக்கருத்து காணப்பெற்றிலது.
விலங்குகள் உடம்பில் மயிர் முளைப்பது தொடர்பாக..
திபேத்தியருக்குச் சினம் வந்தால் மற்றவரை “உடம்பில் மயிர் முளைக்காத விலங்கே!” என்று திட்டுவார்களாம். சூழலுக்கும் விலங்கு வளர்ப்பு - விலங்கு விருந்தோம்பல் பண்பாட்டுக்கும் ஏற்பவே வசைமொழியும் பிறக்கும் என்பது மாந்தவியல் பேரறிஞரான மலினோவ்சுகியின் கருத்து.
ஓரிடத்தில் விருந்துச்சாப்பாடு போடுகிறார்கள் என்றால் விழுந்தடித்துக் கொண்டு ஓடுபவர்களைக் குறித்து, “உடம்பில் மயிர்முளைக்காத பன்றியைப் போன்றவர், உணவுக்குப் பின்னால் ஓடத்தானே செய்வர்?” என்றொரு திபேத்தியப் பழமொழி சொல்கிறது.(மேலது, எண்:991)
இழிந்தோரும் விலங்குகளும்
“அடுத்தவர் நலம் எண்ணாதோர், விலங்குகள் போல்வர்” (அதே நூல்: எண்:989), “பருகவும் தின்னவும் மட்டுமே அறிவன விலங்குகள்” (அதே நூல், எண்:990), “சோம்பேறிக் கழுதைக்குப் புல்லைத் தின்னவும் தெரியாது” [எளிதில் களைத்துப் போகிறவனை இவ்வாறு சொல்வர் திபேத்தியர்] (அதே நூல், எண்:367] என்பவை போன்ற பழமொழிகள் எண்ணற்றவை.
‘இலே’ நகரிலும் இலடாக்கு, இலஃகௌல், இசுபிட்டி, நாரிசு சுகோர்-க்சும் ஆகிய ஊர்களிலும் விலங்குகளை வைத்து மாந்தரைச் சுட்டும் பழமொழிகள் எண்ணில என்கிறார் மறைத்திரு செர்கான் அவர்கள்.
தட்ப வெப்பம் விளைவாக...
மிகுந்த குளிர்வீசும் நிலையைப் பெரும்பாலும் பட்டறிவதால்[மிகுந்த வெப்பமும் நிலவும் என்பதை ஏற்கெனவே பார்த்தோம்] திபேத்திய மக்கள், தாம் என்ன சொல்லியும் திருந்தாதவர்களிடம் பின்வரும் பழமொழியைச் சொல்வர்:
“மூக்கின்மேல் குளிர்ந்த காற்று மோதும்பொழுதுதான், உனக்கு அறிவு வரும்!” .(மேலது, எண்: 392)
கடினமான பட்டறிவு அவர்களுக்கு ஏற்படும்பொழுது,
“மண்டைத்தோல் கழன்று மலைகளுக்குப் போகிறது!”
என்ற பழமொழியைச் சொல்வர்.
மடங்களின் தலைவர்கள் பற்றி ..
திபேத்தில் இலாமாசரி என்றழைக்கப்பெறும் மடங்களும் இலாமாக்களின் தலைவர்களும் எப்படிப்பட்டவர்களாம்?
“மடத்தில் வளரும் நாயை அடிக்காதே,
மதகுருவின் பகையைத் தேடாதே!”
இதை அடியொற்றி இன்னொரு பழமொழியும் உண்டு. “ஒருபொருள் மிகவும் தேவையென்று வரும்பொழுது (மடத்தில் வளரும்) நாயின் மலமும் கிடைக்காது!”(அதே நூல், எண்:172)
இலையுதிர்காலத்தில் பால்வளமும் வீட்டு நாய்களும்
வீட்டில் வளர்க்கப்பெறும் நாய்களைப் பற்றிய பழமொழியொன்று:
“இலையுதிர்காலத்தின்பொழுது, உன் நாய்க்கு மோரைத் தராதே!”
இதன் கரணியம், ‘இலே’(Leh) நகரில் இலையுதிர்காலத்தின் பொழுது பால்வளம் மிகுந்திருக்கும் என்பது.
காலமும் மண்ணும் மக்களும் விலங்குகளும் எந்த அளவு திபேத்தில் இணைந்து உள்ளன என்பதை இதன்வழி உணர முடிகிறது.
“பதியெழு வறியாப் பழங்குடி”
இலடாக்கில் வாழும் மக்கள், தம் நாட்டை விடுத்து அயல்நாட்டை விரும்புகிறவர்களை வெறுக்கிறார்கள்:
“நீ சென்று இருந்து வாழ்ந்து பார்க்காத நாடு,
உனக்கு மிகவும் இனிமையானதே!”
என்பது அதற்கான திபேத்தியர் பழமொழி . இன்னும் எத்தனையோ பழமொழிகள் திபேத்தில் புழங்கினாலும், ஆயிரம் பழமொழிகளை மட்டுமே தொகுத்திருக்கிறார் மறைத்திரு செர்கான். அவற்றுள்ளும் சிலவற்றையே இக்கட்டுரையில் கண்டோம்.
துணைநூல்: Rev. J. Gergan, A Thousand Tibetan Proverbs and Wise Sayings, 1976. நன்றி: பிரஞ்சு நிறுவன ஆராய்ச்சி நூலகம் ( Research Library,Institut Francaise, Pondichery)
நன்றி: 'வெல்லும் தூயதமிழ்' (இலக்கிய மாத இதழ்) புதுச்சேரி-605009.
சித்தரும் சூஃபியரும் - நிறைவுப் பகுதி
சித்தரும் சூஃபியரும்
பேராசிரியர் அ. பசுபதி
(தேவமைந்தன்)
தொடர்ச்சி ...
சித்தர் பாடல்களில் கலப்படம்
சித்தர் பாடல்களின் பதிப்புகளிலும் அதற்கு முன்னர் அவற்றைச் செவிவரலாறாகக் கேட்டு எழுதிய பதிவுகளான ஓலைச்சுவடிகளிலும் காலந்தோறும் கலப்படம் நிகழ்ந்து வந்திருக்கிறது. அதனால்தான் கயிலாயக் கம்பளிச்சட்டைமுனி நாயனார் போன்ற சித்தர் பாடல்களில் முன்னுக்குப் பின் முரண்களும் கருத்தோர்மைச் சிதைவும் மிகவும் கொடுமையாக ஏற்பட்டுள்ளன. சான்று:
“மயங்குவான் பொன்தேடப் புரட்டுப் பேசி
மகத்தான ஞானமெல்லாம் வந்த தென்பான்;
தயங்குவான் மண்ணாலே சார்வு காணான்
சாதகமா யோகத்திற் சார்ந்தே னென்பான்”
என்றும்,
“ஆரப்பா உலகத்தில் ஞானி யுண்டோ?
ஆராய்ந்து நான்கண்டே னென்பார் கோடி;
ஏரப்பா உழுத(ல்)லோவெள் ளாமை யாகும்?
ஏரில்லான் அறுத்தடித்த கதையும் ஆச்சே!”
என்றும் வருபவை அவருடையவை.
ஏரண ஞாயம் சுட்டும் கலப்படம்
மேலே உள்ள பாட்டின் மூன்றாவதும் நான்காவதும் ஆன அடிகளில் கயிலாயக் கம்பளிச்சட்டைமுனி நாயனார் உலகோர்முன் வைக்கும் ஏரண ஞாயம் மிகவும் துல்லியமானது. ‘அங்கை நெல்லி’யெனும் மற்றொரு ஞாயம் போல ‘நெற்றியடி’ அடிப்பது. கொங்குப்புலவர் ஆன நா. வையாபுரியாரின் தலைமாணாக்கர் அறிஞர் கு. நடேச(க் கவுண்ட)ர் இயற்றிய ‘நியாயக் களஞ்சியம்’ என்ற அரிய நூலை முழுவதுமாக வாசித்தால், இதில் பொதிந்துள்ள ஏரண ஞாயம் ‘பொறி தட்டியது போல’ப் புலனாகும். இவ்வாறு ஆழ்ந்தகன்ற நுட்பத்துடன் பாடிய கம்பளிச்சட்டைமுனிச் சித்தரின் மற்றொரு அல்லது கடைசிப் பாடலாகப் பதிப்புகள் பலவற்றுள் வந்துள்ள மற்றொரு பாடல் இதோ:
“மெளனமென்றீர் எனையாண்ட தட்சிணாமூர்த்தி
மலர்பணிந்தே ஞானமது நூறுஞ் சொன்னேன்
மெளனமென்ற நாதாக்கள் பதத்தைப்போற்றி
வகையோடே நிகண்டாக வாதஞ் சொன்னேன்
மெளனமென்றீர் ஞானம்பொய் யென்று சொல்லி
வாகான செயமண்டி போட்டே நூற்றில்
மெளனமென்ற சமரசத்தான் மக்காள் மக்காள்
வாகான ஞானமுறை முற்றுங் காணே”
கயிலாயக் கம்பளிச் சட்டைமுனி நாயனாரின் முந்திய பாடல் பகுதிகளின் பொருள்கோளுக்கும் இதற்கும் எத்தனை வேறுபாடு?
சித்தர், சித்த மருத்துவர், ‘ஆயுள்வேத’ மருத்துவர்.. அடையாளக் குழப்பம்
தெரிந்தே செய்தார்களா அல்லது தெரியாமல் செய்துவிட்டார்களா என்று தெரிந்துகொள்ள முடியாத ஓர் அடையாளக் குழப்பம் சித்தர் என்பதற்கும் சித்தமருத்துவர் என்பதற்கும் இடையில் உள்ளது. சித்தர்கள் இயற்கை மருத்துவர்களாகவோ, தமிழ் மருத்துவர்களாகவோ திகழ்ந்திருக்கலாம்; தம்மைச் சார்ந்த குமுகத்திற்கு இவ்வகையில் அவர்கள் உதவியிருக்கலாம். சித்த மருத்துவர்களும் ‘ஆயுள்வேத’ மருத்துவர்களும் தொழில்முறை மருத்துவர்கள். அவர்களைச் சித்தர் என்று கொள்ளல் ஏற்புடையதா?
“சித்தர் களஞ்சியம்”
நம் புதுச்சேரியிலுள்ள பிரஞ்சு நிறுவன நூலகத்தில் ஒரு பழைய நூல் உள்ளது. அதன் பெயர் “சித்தர் களஞ்சியம்.” குடந்தை பரஞ்சோதி மருத்துவசாலை பொன்னம்பலனார் (K.S. பொன்னம்பலம் என்றுள்ளது) இயற்றியது. ‘பாரம்’ என்பது எட்டுப் பக்கங்களாக இருந்த பிரித்தானியர் காலத்தில் அச்சியற்றப்பெற்றது. அந்நூலுக்கு மதிப்புரை ‘பார்த்துரை’ என்ற பெயரில் உள்ளது. வழங்கியவர் ‘யதார்த்தவசனி’ இதழாசிரியர் தி(டி).வி. கோவிந்தசாமி(ப் பிள்ளை) அவர்கள்.
சித்தர் களஞ்சியத்தின் பார்த்துரை
அந்தப் ‘பார்த்துரை’யின் பகுதி வருமாறு:
“கும்பகோணம் வைத்திய இரத்தினம் எனும் நற்பெயர் படைத்த ஆயுள்வேத பண்டித சிகாமணியாகிய மகா-ள-ள-ஸ்ரீ பொன்னம்பல பண்டிதர் பிரசுரம் செய்துள்ள “சித்தர் களஞ்சியம்” என்னும் நன்னாமம்பூண்ட நூல்பிரதி ஒன்றை நாம் பார்வையிட்டோம். சகல சித்திகளையும் அடைபவர் சித்தர் எனினும் ஆயுள்வேதியர்க்கு சித்தர்நூல் இன்றியமையாத துணைக்கருவியாகும்...”
குழப்பம்
மேலே சாய்வெழுத்தில் வந்த பகுதி, சித்தர்நூலைத் துணைக்கருவி என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. “சித்தர் களஞ்சியம்” நூலிலோ ஓகமுறைகளும் இருக்கை[ஆசனம்] முறைகளும் மருத்துவ முறைகளுமே உள்ளன. ‘காப்பு நேரிசை வெண்பா,’ ‘விநாயகர் துதி,’ ‘பரமசிவ வணக்கம்,’ ‘அம்பிகை தோத்திரம்” என்று தொடங்கி, ‘சித்தர்கள் தோத்திரம்” கட்டளைக் கலித்துறையில் படைக்கப்பெற்று, ‘வழிபடு குருவணக்கம்,’ ‘குருவணக்கம்,’ ‘அவையடக்கம்,’ ‘சரிதை’[சரியை அன்று], ‘கிரியை,’ ‘யோகம்,’ என்ற தலைப்புகளில் பாயிரம் அமைந்து, ‘அதிகாரியின் இலக்கணம்’[ஓகம் செய்யும் அதிகாரம் பெற்றவர்] என்று நூலின் தொடக்கம் ஐந்தாம் பக்கத்தில்தான் அமைகிறது. இந்தப் பக்கங்களுக்கு முன் உரோமன் எழுத்துகளில் பதினாறு பக்கங்கள் நூலைப் பற்றியவை. அவற்றுள் கடைசி மூன்று, ‘விஷயசூசிகா’ என்னும் பொருளடக்கம். எழுபத்தாறு தலைப்புகளில் நூல் இயன்றுள்ளது. எங்கும் ஓகமும் மருத்துவமுமே.
தெளிவான சூஃபியர் வயணங்கள்
சித்தர் குறித்த சிதைவு நூல்கள் இங்கு விற்பனை செய்யப்பெறுவதுபோல் சூஃபியாக்கள் குறித்து எழுதவோ எழுதியதைப் பதிக்கவோ முடியாதபடி பாரசீக மொழிவாணர்களும் அமீரகவாணரும் வளைகுடா நாடுகளில் வாழ்வோரும் விழிப்புடன் இருக்கிறார்கள். குர் ஆன் அருளப்பெற்ற வகை குறித்து எவ்வகைக் குழப்பமும் சூஃபியருக்கு இல்லை. பதிப்புகள் எவற்றிலும், ஏன், இணைய/வலைத் தளங்களிலும் கூட முரண் சிறிதுகூடப் பார்க்க முடியாது.
வலையிதழ்ப் பதிப்பும் அச்சிதழ்ப் பதிப்பும் - விழித்துக் கொள்க!
இங்கு இதைக் குறிப்பிட வேண்டிய அகத்தியம் இருக்கிறது. ‘இருவேறு உலகத்தியற்கை’ என்று வள்ளுவர் மொழிந்தமை நிகழ் உலகில் வேறு ஒன்றனுக்கும் பொருந்தும். அதுவே எழுத்துலகம். ஒருபக்கம் அச்சிதழ். மறுபக்கம் இணைய இதழ். இரண்டின் அமைப்பு முறையும் வேறுவேறு. அண்மையில் என் படைப்பைத் ‘திண்ணை’ வலையிதழின் இல்லப் பக்கத்[Home]தில் தேடிய நண்பர் சுட்டியைக் கீழிறக்கி மற்றொரு தலைப்பைப் பார்க்காததால் தவறவிட்டார். அச்சிதழ் அவ்வாறன்று அல்லவா? ஆனால் அச்சிதழ் ஆசிரியர்கள், தொடர்ந்து பன்முகமாகப் பரவி வரும் வலை இதழ்களை நோக்கத் தவறினால், அவர்களின் படைப்புகளும் அவர்கள் இதழ்களில் வரும் வேறு படைப்புகளும் படைப்பாளர் பெயர் மாற்றப்பட்டோ, நடை மாற்றப்பட்டோ வேறு எழுத்தாளர் பெயரில் பதிவாகி விடுவதை அவர்களால் தவிக்க இயலாது. ‘சைபர்வெளி’யில் எதிர்காலம் இவர் படைப்பை ‘அவர்’ படைப்பாகவே ஐம்பதாண்டுக் காலத்திற்குப்பின் சுட்டும். இதே நிலை, வலை இதழ்களுக்கு இப்பொழுதே நேர்கிறது. இணையத்தில் வாய்த்துள்ள ஏந்துகளுள் ஒன்றான ‘தேடல்’[Search] என்பதை பயன்படுத்தி, புகழ்மிக்க தமிழ் எழுத்தாளர் ஒருவர், அறிவியல்சார் வலைத்தளங்களிலிருந்து வேண்டிய பகுதிகளைத் தெரிவு செய்து[Select] படி[Copy]பண்ணி, பின் அவற்றை ஒட்டி[Paste], பின்னர் தன் நடைக்கு மாற்றி கட்டுரைகளை அடுத்தடுத்து அறிவியல் தொடர்பாக வெளியிட்டு வருவதை ‘விடுதலை’ இதழின் விழிப்புணர்வுக் கட்டுரையொன்று அம்பலப்படுத்தியது. வலைத்தளங்களில் அவற்றை ஆய்ந்து பதிவிட்டோர், இரவும் பகலும் எத்துணைத் தொல்லைப் பட்டிருப்பர்?
சூஃபியம் - முரண் இன்மை - வலைச் சான்று
இணையஉலாவுபுலங்களுக்குச்[browsingcentres]செல்வோர்[இக்கட்டுரையாசிரியரும் உலாவுபுலங்களிலிருந்து இணையப்பணி புரிபவர்களுள் ஒருவர்தான்], உலாவியில் “கூகிள்.கோ.இன்”[google.co.in] என்று முகவரியைத் தட்டெழுதுக. வரும் ‘கூகி’ளின் தேடல் இல்லப் பக்கத்தில் ‘தமிழ்’ என்று ஆங்கிலத்தில் உள்ள சொல்லைச் சொடுக்குக. ‘கூகிள்’ உங்களுக்குத் தமிழில் நீங்கள் தட்டெழுதும் எதையும் தேடித்தர அணியமாகிவிடும். ‘சூஃபியம்’ என்று இடுங்கள்.இப்பொழுது,‘தமிழோவியம்’[http://www.tamiloviyam.com]வலையிதழ்
வெளியிட்டுள்ள “தொடர்: அமானுடகேள்விகளும்,அரைகுறை ஞானிகளும்[குர்ஆன் அருளப்பட்ட விதம்]” என்ற விரிவான விளக்கம் தோன்றும். திருக்குர்ஆன் அருளப்பெற்ற முறை குறித்தும், சூஃபியாக்கள் இறைவேதத்தின் உண்மையான பின்னணியை அறிந்து வைத்தவர்களே என்பது குறித்தும் அத்தொடர் தெளிவாக மொழிகிறது. சித்தர்கள் கூறியவை குறித்து இத்தகைய திண்ணிய, கட்டுப்பாடான, ஒழுங்கான, ஓர்மையுடன் கூடிய பதிப்பு முயற்சியே இன்றைய தேவையாகும்.
***********************************
(நன்றி: வெல்லும் தூயதமிழ் - இலக்கிய மாத இதழ் மேழம் 2037 / மே 2006)
5.4.06
மாடல்ல! மனுஷிதான் நான்! - மங்கை பசுபதியின் கவிதை
மாடல்ல! மனுஷிதான் நான்!
-மங்கை பசுபதி
மாடல்ல, நீங்கள்
பல்பிடித்து விலைபேச!
ஆடல்ல நீங்கள்
விரல்மறைத்து விலைபேச!
உம்மைப்போல் நாங்கள்
உயிருள்ள பிறவிகள்தாம்!
ஐரோப்பா மண்டலத்தில்
பிறந்திருந்தால் நாங்கள்;
விலைபேச வருவீரா?
வரும்நேரம், நாங்கள்
வீட்டில்தான் இருப்போமா?
இருந்தாலும் -
உம்மைத்தான் மதிப்போமா?
காலம்தான் மாறிடினும்
இந்தியர்கள் மாறவில்லை!
“கழிப்பிடம் சென்றுவந்தால்
கைகழுவவேண்டும்” என்று
விளம்பரங்கள் இந்தநாளும்
‘பிரச்சார பாரதி’யில்!
கைகழுவி வாருங்கள் - பின்னர்
பெண்ணின்விலை பேசுங்கள்!
பீகார், ராஜஸ்தான்,
ம.பி., உ.பி. -
இங்கெல்லாம்
கற்றவர் விகிதம் குறைவு!
தமிழகம் கேரளம்
வங்கம்இம் மூன்றும் - கல்வி
அறிவு பெற்றோர் அதிகம்
கொண்டும்
திருந்தவிலை இன்னும்தான்
முழுதாய்!
முப்பத்து மூன்று
பெர்செண்ட் இன்னும்
சித்திக்க வில்லையே
பையா! நீ
ஆணாக வில்லையே
இன்னும்! - நல்ல
ஆணாக இருப்பவர்கள்
பெண்களுக்கு - முந்தி
ஏற்ற இடம்
தருவார்கள் அன்றோ?
பெண்ணை மதிக்காத தேசம்
பாழ்பட்டுப் போகும் என்று
மண்ணில் உரக்கவே சொல்லுங்கள்!
தனைப்பெற்ற தாயைப்
போன்றவர்கள் பெண்கள் - என்று
உணராத ஆணுமொரு ஆணா?- தன்னை
மதிக்காமல் வாழ்பவளும் பெண்ணா?
நன்றி: திண்ணை.காம்
3.4.06
சித்தரும் சூஃபியரும் - தொடர்ச்சி
சித்தரும் சூஃபியரும்
-பேராசிரியர் அ. பசுபதி
(தேவமைந்தன்)
சென்ற இதழின் தொடர்ச்சி..
ஆனால் வள்ளலாரோ தன் உடல்முழுவதையும் வெண்மையும் தூய்மையும் நிரம்பிய ஆடையால் போர்த்துக் கொண்டே இயங்கியவர்; தலையையும் எப்பொழுதும் முக்காட்டிட்டுக் கொண்டவர். தன் அன்றாட வாழ்வில் உணவு முதலிய எல்லாச்செயல்களிலும் தூய்மையையும் ஒழுங்கையும் கடைப்பிடித்தவர். அவ்வாறு இல்லாதவர்கள் உயிரிரக்க ஒழுக்க[சீவகாருண்ணிய ஒழுக்க]த்தையோ அறச்செயல்களையோ உணவுவழங்குகை[அன்னதானம்]யையோ செய்யலாகாது என்ற கண்டிப்பை விதித்தவர். ஆகவே, பட்டினத்தார் புகன்ற சித்தர்களின் அகத்தோற்றம்தான் வள்ளலாருக்குப் பொருந்துமே தவிரப் புறத்தோற்றம் பொருந்தாது. பட்டினத்தார் கூற்றுப்படி வள்ளலார் சித்தர் ஆவதோடு மட்டுமல்லாமல், பட்டினத்தார்தம் சித்தர் விளக்கத்தில் உள்ள புறத்தோற்றத்துக்கும் சீர்திருத்தம் வகுத்தார் என்க.
சூஃபியியம் எவ்வாறு தோன்றியது?
சூஃபியியம் எவ்வாறு தோற்றம் கொண்டது என்பதற்கு முனைவர் க. நாராயணன் அரிய விளக்கம் தருகிறார்: “நம்பிக்கை அதிகாரம் ஆகிய இரு இரும்புக் கரைகளிடையே இசுலாமியச் சமய ஆறு ஓடியது. தடுக்கவோ திசை திருப்பவோ தடைகள் ஏதும் இல்லாத ஆறுபோல் இசுலாம் இயங்கியது. இசுலாமியச் சமயக் கருத்துக்களை முழுமையாக நம்பி நடைமுறைப்படுத்த வேண்டுமே தவிர ஏன் எதற்கு என்ற வினாக்கள் தொடுத்து ஆராயக்கூடாது. மரபாக வரும் இசுலாமியச் சமுதாயப் பழக்க வழக்கங்கள் ‘குர்-ஆன்’ எனும் சமயச் சட்ட நூலுக்கு விளக்கங்களாயின. ‘குர்-ஆன்’ நூலை மீறிய எண்ணங்களை இசுலாம் ஏற்காது. ‘குர்-ஆன்’ தீர்ப்பே இறுதித் தீர்ப்பு. “இசுலாத்தின் இறுக்கமான நம்பிக்கையும் அதிகாரமும் புதிய சிந்தனைகட்கு இடமளிக்கவில்லை. குர்-ஆன் கூறும் சட்டம், காலங்காலமாக வழங்கி வரும் மரபுகள், இசுலாமியச் சமுதாய ஒப்புதல் என்பனவற்றின் செல்வாக்கும் அதிகாரமும் புதிய எண்ணங்கள் எழத் தடைகளாயிருந்தன.”(Harold Titus, Living Issues in Philosophy, p.)
ஆமைவேகத்திலும் திரைமறைவிலுமாக சில சிந்தனையாளர்கள் புதிய எண்ணங்களை எழுப்பிச் சமயப் புரட்சிக்கு வித்திட்டனர். இசுலாத்தின் பழைமைப் போக்கு மெல்ல மாறத் தொடங்கியது. நம்பிக்கையும் பகுத்தறிவும் முரண்படும் கட்டங்களில் இசுலாமிய ஞானிகள் சிலர் சமயக் கட்டுப்பாடுகளை மீறிச் சிந்தித்தனர். இறைவனிடம் சரண் புகுந்து அடிமைப் பணி புரிவதைக் காட்டிலும் அருளின் உருவமாக விளங்கும் இறைவனுடன் கலந்து ஐக்கியப்படுவதே சிறந்ததென்றும் அத்தகு ஐக்கியத்திற்குத் துணை செய்யுமாறு சமயங்கள் இயங்க வேண்டும் என்றும் புதிய சிந்தனையாளர் கூறினர். சூஃபியியம் தொடங்கிற்று.”(சித்தர் தத்துவம், மூன்றாம் பதிப்பு 2003, புதுச்சேரி.8., ப.202)
சித்தாடல் முதலியவற்றை எதிர்த்த சூஃபியார்
அபூ-யாசித் என்ற சூஃபியார் எட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் ஒன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியிலும் வாழ்ந்தவர். இறைவனோடு தம்மை இணைத்துக் கொள்வதைத் தவிர சித்தாடல், மந்திர தந்திரச் செயல்கள் புரிவதில் ஈடுபடல் முதலானவற்றில் சூஃபியர் ஈடுபடக் கூடாது என்று எச்சரிக்கிறார். (மேலது, ப.207)
சித்தாடல் வல்லவர்கள் குறித்து...
“சித்தாடல் வல்லவர்கள்தாம் சித்தர், ஆனால் சித்தாடல் புரிபவர் எல்லாம் சித்தர் அல்லர்” என்ற ஓர் ஏரணக் கூற்று, சித்தர் மெய்ப்பொருள் உண்ர்ந்தாரிடத்தே நின்று நிலவி வருகிறது. இதற்குமேல் சித்தாடல் குறித்தும் சித்தர் குறித்தும் நாம் மன்றாட வேண்டுவது இல்லை.
சித்தர்-சூஃபியர் கருத்து ஒப்பீடு
சித்தர் திருமூலரின் கருத்தும் சூஃபியார் குணங்குடி மசுத்தான் சாகிபு அவர்களின் கருத்தும் பல இடங்களில் ஒத்துப்போவதைக் காண வியப்பாக உள்ளது. காட்டாக,
“ஊனாகி ஊனினுயி ராகியெவ் வுலகுமாய்
ஒன்றா யிரண்டு மாகி
உள்ளாகி வெளியாகி யொளியாகி யிருளாகி
ஊருடன் பேரு மாகிக்
கானாகி மலையாகி வளைகடலு மாகியலை
கானக விலங்கு மாகிக்
கங்குல்பக லாகிமதி யாகிரவி யாகிவெளி
கண்டபொரு ளெவையு மாகி
நானாகி நீயாகி அவனாகி அவளாகி
நாதமொடு பூத மாகி
நாடுமொளி புரியஅடி யேனுமுமை நம்பினேன்
நன்மைசெய் தாளுதற்கே
வானோரும் அடிபணி தலுள்ளநீர் பின்தொடர
வள்ளல்இற சூல்வரு கவே
வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண்
மணியே முகியித் தீனே!”
[குணங்குடி மசுத்தான் சாகிபு பாடல்கள்: பா.3]
என்ற பாடலின் கருத்தோர்மையைப் பின்வரும் திருமூலர் பாடல்கள் காலத்தாலும் இடத்தாலும் முன்னரே கொண்டுள்ளன:
“புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப்
புகுந்துநின் றான்புகழ் வாய்இதழ் வாகிப்
புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப்
புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே.
தானே திசையொடு தேவரு மாய்நிற்குந்
தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்குந்
தானே கடல்மலை யாதியு மாய்நிற்குந்
தானே உலகில் தலைவனு மாமே.
உடலாய் உயிராய் உலகம தாகிக்
கடலாய்க் கார்முகில் நீர்பொழி வானாய்
இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகி
அடையார் பெருவழி அண்ணல்நின் றானே.”
[திருமந்திரம் -- இரண்டாம் தந்திரம்:10:காத்தல், பா.1-3]
பீருமுகம்மது அப்பா அவர்கள்
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சூஃபியருள், அப்பா அவர்கள் பாடிய பாடல்கள் அடங்கிய தொகுப்புகளுள் ஒன்று ‘ஞானரத்தினக் குறவஞ்சி’ ஆகும். அதில் சிங்கன் சிங்கி உரையாடலாக அரும்பெருங்கருத்துக்களை எளிமையான தமிழில் எடுத்துக் கூறியிருக்கிறார். சான்று:
“ என்ன விதமாகத் தன்னை மறப்பது சிங்கி? -
அது ஒன்றைப் பொருந்தி ஒடுங்கி இருப்பது சிங்கா!
என்ன விதமாக ஒன்றைப் பொருந்தலாம் சிங்கி? -
அது எல்லாம் மறந்து இருளாய் இருப்பது சிங்கா! “
கண்புருவப் பூட்டும் புருவ நடு - வில் உவமையும்
வள்ளலார், திருவருட்பா - ஆறாம் திருமுறையில் ‘கண்புருவப் பூட்டு’ என்ற தலலப்பில் பதினொரு தாழிசைகளில், சித்தர்கள் மிகவும் முகாமையாகக் குறிப்பிடும் நுண்ணுறுப்பு ஒன்றை விளக்குவார். திருக்குர்ஆனில் இதுவே உவமை அடிப்படையில் இடம்பெறுவதாக தேசமானிய, டாக்டர் ஏ. எம். முகம்மத் சகாப்தீன் தக்க சான்றோடு விளக்குவார்.
கண்புருவப்பூட்டு
“ கையறவி லாதுநடுக் கண்புருவப் பூட்டு
கண்டுகளி கொண்டுதிறந் துண்டுநடு நாட்டு
ஐயர்மிக உய்யும்வகை அப்பர்விளை யாட்டு
ஆடுவதென் றேமறைகள் பாடுவது பாட்டு”
என்று வள்ளலார் இந்த நுண்ணுறுப்பைக் குறித்து விளக்குவார். ‘நுண்’ என்பது இங்கே ‘நுண்ணுட’லைக் குறிக்கும். செருமானியரான ஆனிமன் ஒப்பண்டு[ஓமியோபதி] மருத்துவத்தை இந்த நுண்ணுடல் அடிப்படையில்தான் உருவாக்கினார் என்பது கருதப்பெறத் தக்கது.
கண்புருவப் பூட்டுக்கு வேறுபெயர்கள்
‘சிற்சபை,’ ‘சிற்றம்பலம்,’ ‘விந்து,’ ‘முச்சுடர்,’ ‘முச்சந்தி,’ ‘சபாத்துவாரம்,’ ‘மணிமேடை,’ ‘நெற்றிக்கண்,’ ‘கபாடம்,’ ‘சுழிமுனை,’ ‘சூன்யப்பகுதி,’ ‘பிரமரந்திரம்,’ ‘மகாமேரு,’ ‘மயானம்,’ ‘வரை,’ ‘அம்பலம்,’ முதல் இன்னும் பல பெயர்கள் புருவநடுவுக்கு உள்ளன.[முனைவர் இரா.மாணிக்கவாசகம், சித்தர்கள் பரிபாசை அகராதி, பக்.230-231.]
சூஃபியாக்கள் சுட்டும் திருக்குர்ஆன் உவமை
இத்தகைய இறைமருமத்தை இறைவன் நபிகள் நாயகம் அவர்களுக்கு வெளிப்படுத்தினான் என்று சூஃபியாக்கள் கூறுவர். அதற்கு அடிப்படையாகப் பின்வரும் திருக்குர்ஆன் பகுதியைக் குறிப்பிடுவார்கள்:
“நெருங்கிப் பின்னர் அருகே வந்தார், வளைந்த வில்லின் இருமுனைகளைப் போல் அல்லது அதைவிடச் சமீபமாக அந்த நெருக்கம் இருந்தது. பிறகு அவன் தான் அறிவிக்க வேண்டியவற்றைத் தன் அடியாருக்கு அறிவித்தான்.(53:8-10).” நபிகள் நாயகம் இவ்வுரை வெளியாகும்பொழுது இறைவனுடன் நேர் தொடர்பு நிலையில் இருந்தார் எனவும் அந்நிலையில் இறைவன் ஒரு தெய்வீக மருமத்தை நபியவர்களுக்கு வெளிப்படுத்தினான் எனவும் சூஃபியாக்கள் கூறுவர். இந்திய நாட்டு சூஃபியாக்கள் சிலர் இவ்விதமான இறைஞானத்தை அடையும் ஓர் உறுப்பையும் குறிப்பிடுகின்றனர். இது இரண்டு புருவங்களுக்கு நடுவில் இருக்கும் பகுதியில்(இடையில்) இயங்கும் ஒரு ஞான அங்கமாகும் என்றும், திருக்குர்ஆன், இவ்விரு புருவங்களையும் உவமை அடிப்படையில் இவ்வில்லுக்கு ஒப்பிட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுவர். சூஃபித்துவ நெறியில், இறைவனை ஓர் ‘ஏகாந்த சிந்தனை’ என்றும் ஒளியென்றும் ‘ஆக்கும் சக்தி’யென்றும் வண்ணிக்கப்பெற்றிருக்கிறது.[இறைவனும் பிரபஞ்சமும், இலங்கை 1995, ப.108.]
(நன்றி: வெல்லும் தூயதமிழ்[இலக்கிய மாத இதழ்] 2037, மீனம்[ஏப்பிரல் 2006] பக். 19 - 22.)
2.4.06
அவனைத் தெரியும்தானே?...-தேவமைந்தன்
மூலைக்கடையில் ஒற்றைச் சிகரெட்டுக்காய்
மெலிந்த சட்டைப் பையைத் துழாவுகிறானே, பார்!
அவன் எல்லாருக்காகவும் எழுதி எழுதி,
சொல்லிச் சொல்லிச்
சலித்துப் போய்விட்டான். அவனுக்கு
என்ன தெரியும் என்று இறுமாப்புடன் கேட்கிறாய்.
பலபல விளக்கங்களை அந்த
அப்பாவியிடம் தொடர்ந்து கோருகிறாய்.
உன்னைப்போல் அவன்
அறிவுஜீவியா, என்ன?
அவனுக்கு மார்க்ஸையும் லெனினையும்
வள்ளுவனையும் மட்டுமே தெரியும்.
அதுவும் தெளிவாக மட்டுமே.
க்யூபாவின் கஷ்டங்களின்பொழுது
அரிசியைத் திரட்டி அனுப்பச் சேர்ந்த
சாதாரணமானவர்கள் கூட்டத்தில் ஒருவன் அவன்.
சகமானுட ஜென்மங்களின் பாடுகள்
சகமனிதர்களின் ‘லோல்படுதல்’கள், ‘லொங்கழிதல்கள்’
மட்டுமே அறிந்துணர்ந்த அவனையும்
அவன் உறுதி என்று நம்பும்
இடதுசாரிக் கொள்கையையும் நீயும் உன் விமர்சனப்
பிதாமகரும் புரிந்து கொள்ளாமல்
உங்களுக்கென்றே இருக்கும்
பெரு,சிறு பத்திரிக்கைகளின்
பரவல் பலங்கொண்டு சாடுவதில்தான்
மெய்யாக சிறுபிள்ளைத்தனம் தெரிகிறது.
கொழுத்த புத்தகங்களை
உருவாக்க உதவும் அரசாங்க சம்பளமும்;
‘ரிச்’சாக வெளியிட்டு உலகெங்கும்
ஆள்பிடித்துப் பரப்பும்
பிரத்தியேக சாமர்த்தியமும்;
ஆதிக்க வெறிப்போடு பழைய தோழர்களை
அவமதிக்கும் ஏக்கழுத்தமும்
அவனுக்கு இல்லைதான்.
அவனுக்குத் தெரிந்ததாக
எனக்குத் தெரிந்ததெல்லாம்
ஒன்றே ஒன்றுதான். ஆம்.
அழுத்திவைக்கப்பட்டவர்களின்,
ஒடுக்கப்பட்டவர்களின்,
எந்த ஆட்சியிலும்
சுரண்டப்படுபவர்களின் கண்ணீர்
அவன் கன்னங்களில் மட்டுமல்ல,
எழுத்துகளிலும் வழியும்.
30.3.06
நேரம் கேட்டால் கூடச் சொல்லாதே!
நேரம் கேட்டால்கூடச் சொல்லாதே!
-தேவமைந்தன்
பேருந்துக்கு நின்றிருந்தேன்.
காத்திருந்த கூட்டத்தில் ஒருவர்
தன் கடிகாரம் சரிசெய்யும்
நோக்கம் தெரியக் காட்டி,
நேரம் கேட்டார்.
ஆகப் பொறுப்பாயும் துல்லியமாயும்
சமயம் சொன்னேன்.
அடுத்து, புன்னகைத்துக் கொண்டே
அருகில் வந்தவர் பேச்சுக் கொடுத்தார்.
பேருந்து வரும்வரை பேசுவோம்என்று
பேசி நின்றேன். பையப்பைய நான்
இருக்கும் தெரு, இல்லத்தின் எண்
பேச்சின் ஊடே அவரிடம் சென்றன.
நாள்கள் சில காணாமல் போயின.
ஒரு நாள் மாலை ஆறு மணி இருக்கும்.
வந்தார். அகம்முகம் மலர்ந்து அவர்
வரவை ஏற்றேன்.
என்னைப் பேச விடாமல்
கோடை மழையாய்ப்
பொழியத் தொடங்கினார்:
“சார்! நான் அன்னைக்கே
சொல்லணும்’னு நெனச்சேன்.
நீங்கள்’லாம் இப்படி டைம்வேஸ்ட் பண்ணி
இண்டர்நெட்டு, ஈஸைன்’ட்டு
எழுதறதும் ப்ரெளஸ் பண்ண்றதுமா’
நாள’யும் பொழுத’யும் கொல்’றது தேவ’யா?
நா’ பாருங்க! சாதனையாளன்!
நா’ இல்லாம எங்க இண்டஸ்ட்ற்றி நடக்காது..
நாங்கள்’லாம் டெக்னிகல்! நீங்க’ள்லாம் ஜென்ரல்!
ஒங்க ஜென்ரல் விஷயமெல்லாம் எனக்குத் தெரியாது..
தெரிஞ்சுக்க எனக்கு டைமும் இல்லே.
என் டெக்னிகல் ஸ்கில் பக்கம் நீங்கள்ளாம்
மழைக்குக்கூட ஒதுங்க முடியாது...”
மேலும் பொறுக்க முடியாமல் மறித்தேன்.
“இப்ப நீங்க என்ன விஷயமா வந்தீங்க?”-
முகங் கறுத்தவர் சொன்னார்:
“ஒண்ணுமில்ல சார்! எங்க’ ப்ரெஷ்ஷர்
குக்கர் ப்ராடக்ட் பற்றி
டிஸ்கஸ் பண்ண டெல்லிவரை போகணும்;
கொஞ்சம் பைனான்ஸ் பண்ணுங்க;
இம்போர்ட் ஆர்டர் கெடச்சதும்
ரீபே பண்ணிடுவேன்..”
மறுமொழி உரைத்தேன்:
“நீங்கள்’லாம் டெக்னிகல்; நாங்கள்’லாம் ஜென்ரல்;
ஒங்க லெவ’லுக்கு என்னா’ல
ஒசர முடியற காலம் வந்தால்,
ஒதவி செய்யப் பாக்கிறேன் சார்!
இப்ப நீங்க போங்க!...”
‘போயிட்டு வாங்க!’ என்று சொல்லப்படவும்
கொடுப்பினை இல்லாதவர்,
முறைத்துக் கொண்டே போனார்.
இப்பொழுதெல்லாம் யாராவது எங்கேயாவது
நேரம் கேட்கப் போவதாகத் தெரிந்தாலே போதும்,
நான் மாயமனிதன்தான்.
********************************************************************************
19.3.06
ஒரு தத்துவத்தின் பரிணாமம் -- தேவமைந்தன்
“உலகத்தில் வாழ்வோர்
இருவேறு வகையினர்.
பணமூட்டைகள் குவிப்பவர்
ஆகஇருப்பவர் வேறு;
தெளிவான அறிவுஉடையவர்
ஆகவிளங்குபவர் வேறு;”
என்றார் திருவள்ளுவர்.
பிற்காலத்து அறிவாளி
வேய்ன் டபிள்யூ டையர் சொன்னார்:
"செய்பவர் ஒருவகை;
செய்யாதோர் மறுவகை.
இந்த இரண்டே வகையினர்தாம்
இருக்கிறார்கள் உலகில்!"
பெரிய திரையும்
சின்னத் திரையும்
மாறி மாறிக் கொட்டிய நஞ்சு
உச்சிக்கு ஏறிய
நிகழ்யுக அறிவுக் கொழுந்து
சொன்னது:
"ஒலகத்தில இருக்கிறது'களெ
ரெண்டே வகையா'ப் பிரிச்சுறலாம் -
ஒண்ணு 'சொணை;'
இன்னொண்ணு 'சொறி.'
14.3.06
ஆன்மாவை ஈடேற்ற போட்டாபோட்டி!
இப்பொழுதெல்லாம் நம் ஆன்மா ஈடேறுமா என்ற கவலை நமக்கு வேண்டுவதே இல்லை. போட்டி போட்டுக்கொண்டு நம் ஆன்மாக்களைக் கரையேற்ற, நிறையப்பேர் வலுக்கட்டாயமாக நம் உதவிக்கு வருகிறார்கள்.சென்னைக்கு நண்பர் காரில் சென்றுகொண்டிருந்த பொழுது அவரே இதுகுறித்துப் பேசி, "நீலாங்கரைக்குத் திருப்பவா[காரை]?" என்று முயன்றபொழுது, மிகுந்த பணிவுடன் அவர் முயற்சியைத் தடுத்து ஒரு பாபாவிடமிருந்து தப்பித்து உறவினர் இல்லம் போய்ச் சேர்ந்தேன். அடுத்தநாள் சென்னையில் எனக்குத் தெரிந்த பேராசிரிய அம்மையாருடன் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தபொழுது, அவர் இது குறித்துப் பேசி,"இங்கேதானே இருக்கிறீர்கள்? நாளை ஞாயிற்றுக்கிழமைதானே? எங்கள் வீட்டு ஹாலில் நாளை காலை ஒன்பதுக்கு ஒரு ஃபங்ஷன்! வந்துவிட்டுப் போங்கள்!" என்று தோழமையுடன் வேண்டுகோள் விடுக்க, தட்டமுடியாமல் போனேன். அங்கே 'பஜன்' நடந்துகொண்டிருந்தது. போச்சு! அங்கே புன்னகையுடன் இன்னொரு பாபா படம். பல மொழிகளில் பாடல்கள். போனால் போகிறது என்று தமிழில் ஒரு சிறு பாடல். அவசர அவசரமாகப் பாடி முடித்துப் பெருமூச்சுவிட்டார், பட்டுசேலை மற்றும் அணிகளின் கனமும் கூடிய பெரிய அம்மா ஒருவர். அங்கிருந்தும் தப்பினேன். இன்றுவரை இன்னும் பாபாக்கள் சிலரை வழிகாட்டிகளாகக் கொண்ட நண்பர்கள் பலரின் வற்புறுத்தலால் அவர்கள் அழைத்த இடங்களுக்கெல்லாம் போய், அவர்கள் சொல்லுவனவற்றையும் பொழிவனவற்றையும் மொழிபெயர்ப்பவற்றையும் கேட்டுக் கேட்டு என் ஆன்மா, "அப்பா, கொஞ்சம் ஆளைவிடு!" என்று கெஞ்சும்பொழுது, மூன்று அழைப்பிதழ்கள் அஞ்சலில் வந்துள்ளன. ஒன்று மலையடிவார யோகியின் சீடரான என்னூர் நண்பர் அனுப்பியது; அடுத்தது, கேரள அம்மாவின் அடியவரான என் குடும்பத் தோழியார் விடுத்தது; மற்றது, தமிழ்ச் சிவனிய மரபின் சித்தாந்தக் கொள்கைகளில் ஆழ்ந்த ஓர் அமைப்பில் 'ஆக்டிவ் மெம்பர்' ஆகவுள்ள என் சகோதரர் அழுத்தமான குறிப்புடன் 'வந்தாகவேண்டும்' என்ற உத்தியோக தோரணையில் அனுப்பியுள்ளது. எதற்குப் போனால் என் ஆன்மா கரையேறும்? பேசாமல் ரஜினிநடித்த 'பாபா' குறுந்தகடு வாங்கி அந்த நேரத்தில் வீட்டிலேயே இருந்து பார்த்துவிடவேண்டியதுதான்.
9.3.06
சித்தரும் சூஃபியரும்
சித்தர் என்ற தமிழ்ச்சொல்லுக்கு கைகூடுகை பெற்றோர் என்று பொருள். கைகூடுகை என்பது அறிவில் தெளிவு. தெளிவு என்பது விளக்கம், துலக்கம், மன அமைவு, நற்காட்சி, ஆராய்வு என்ற பொருள்களைக் கொண்டது. சித்தி என்ற சொல்லுக்கு கைகூடுகை, வீடுபேறு என்றெல்லாம் பொருள்கள் உள்ளன.
சூஃபியர் என்ற சொல் சூஃபி என்ற அரபுமொழிச் சொல்லின் ஆக்கம். அரபுமொழியில் ‘சூஃப்’ என்ற சொல் கம்பளி(wool)யைக் குறிக்கும். பின்னர் அச்சொல்லே ‘கம்பளியை உடையவன்’ (a man of wool) என்ற பொருள் குறிக்கும் ‘சூஃபி’ என்னும் சொல்லை அரபுமொழி இலக்கியத்துக்குத் தந்தது. படிப்படியாக, பாரசீகத்தில் முசுலீம் மெய்ப்பொருளியலும் ஆதனிய மறையியலும் இணைந்தவொரு முறையைப் பின்பற்றுகின்ற ஒருவரை அச்சொல் குறிக்கலானது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சூஃபிய மெய்யுணர்வாளர்களோடு பாரசீக ‘சூஃபியாக்கள்’ என்ற மெய்யுணர்வாளர்களையும் இக்கட்டுரையில் இணைத்தே காணலாம்.
எண்மாப்பேறு (அட்டமாசித்தி)
நுண்மை, பருமை, மென்மை, விண்டன்மை [பொன்போலக் கனமாதல்], விரும்பியதெய்தல், [மற்றவர்களையும் மற்றவற்றையும்] தன்வயமாக்கல், நிறைவுண்மை[கூடுவிட்டுக்கூடுபாய்தல்], ஆட்சியனாதல்[விரும்பியவற்றையெல்லாம் நிறைவுறுத்திப் பட்டறிதல்] என்பவை எண்மாப் பேறுகள்.
எண்மாப்பேறுகள் கொண்டோர்தாம் சித்தர் - சூஃபியரா?
கைகூடுகை என்பதற்கு, பொதுவான மாந்தருக்குக் கிடைக்காத அரிய பேறு என்ற பொருளையே பொதுமக்கள் எப்பொழுதும் கற்பித்து வருகிறார்கள். மாந்தருக்கு இயல்பானவற்றில் உள்ள நாட்டத்தைவிடவும் இயல்புக்கு மீறியவற்றில் நாட்டம் மிகுதி. அதனால்தான் தமிழ்ச்சித்தர்களுக்கு எண்மாப்பேறுகள் போதா என்று அறுபத்து நான்கு வகைச்சித்துக்களை உடைமையாக்கி மனநிறைவடைந்தனர். ஞானவெட்டியான், இயாகோப்பு வைத்தியவாதசூத்திரம் ஆகிய நூல்களும் இதற்கான குறிப்பைத் தருகின்றன. [இதுகுறித்தும் சித்துக்கள் வகைகளின் வயணமும் அறிய:
முனைவர் க.நாராயணன், சித்தர் தத்துவம், புதுச்சேரி, 1988, 2003- ப.49+]
சூஃபியாக்கள் [பாரசீக சூஃபி மெய்யுணர்வாளர்] பரம்பொருளை ‘உண்மை” என்றே சுட்டுகின்றனர். ‘தன்னுணர்வு கொண்ட விழைவு,’ ‘அழகு,’ ‘ஒளி’ அல்லது ‘எண்ணம்” என்ற முந்நிலையில் அவர்கள் கடவுளை வைத்துச் சுட்டுவதாக அல்லாமா இக்பால் அவர்கள் கூறியுள்ளார். [Dr.Shaik Muhammad Iqbal, The Development of Metaphysics in Persia, London. மேற்கோள்: தேசமானிய, டாக்டர். ஏ.எம். முகம்மத் சகாப்தீன், இறைவனும் பிரபஞ்சமும், கொழும்பு-7. 1995.]
ஆதனிய வழியில் மிகுந்த முன்னேற்றம் அடைந்த சூபிய மெய்யுணர்வாளர்களுக்குப் பொதுவான மாந்தருக்குக் கிடைக்காத பற்பல அரிய ஆற்றல்கள் அருளப்பெற்றிருப்பதாகப் பலர் நம்புகிறார்கள். குறைந்த அளவு, தொலைவிலுணர்தல்[Telepathy] திறவோர் காட்சி[Clairvoyance] தொலைவியக்கம்[Telekinesis] ஆகிய அரிய ஆற்றல்களேனும் அவர்களுக்கு இருந்தாக வேண்டும் என்று பெரும்பாலோர் எதிர்பார்க்கிறார்கள். “... அதாவது மனிதத் தன்மைக்கு மீறினவர்களாக...”( பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள், தொகுப்பாசிரியர்; வே. ஆனைமுத்து, 1974. ப.1348.)
இடர்களையும் நோய்களையும் நீக்கிக்கொள்ள ‘தர்கா’க்களுக்கும் ‘சியார’ங்களுக்கும் மதவேறுபாடின்றிப் பொதுமக்கள் செல்வதும் வழக்கமாகவுள்ளது. குறிப்பாக மாணிக்கப்பூரில் தோன்றிய நாகூர் ஆண்டகையின் இடமான நாகூர் தர்காவுக்கும்; முத்துப்பேட்டை முதலான இடங்களுக்கும் பயணம் மேற்கொள்பவர்களைச் சொல்லலாம். இவற்றையெல்லாம் பெரியார் அவர்கள் விரிவாகக் கண்டித்திருக்கிறார்கள்.(மேலது: பக்.1372,1379.)
பதினெண்மர்தாம் சித்தர்களா?
மரபு வழியாக 1.அகத்தியர் 2.போகர் 3.கயிலாயநாதர் 4.கோரக்கர் 5.திருமூலர் 6. சட்டைமுனி 7.கொங்கணர் 8.கூன்கண்ணர் 9.இடைக்காடர் 10.நந்தீசுவரர் 11.புண்ணாக்கீசர் 12.உரோமர் 13.மச்சமுனி 14.கூர்மமுனி 15.கமலமுனி 16.வாசமுனி 17.பிரமமுனி 18.சுந்தரானந்தர் ஆகியோரும் இவர்கள் அல்லாமல் கருவூரார், புலத்தியர், புசுண்டர், இராமதேவர், தன்வந்திரி, கபிலர் முதலானோரையும் சித்தர் என்று நிரற்படுத்துவர். இந்நிரலைக் கூர்மையாக ஒரு முறை நோக்கினால் போதும். மனம் போன போக்கில் எவரோ வகைப்படுத்தியது இது என்று உணரலாம்.
வேதம், மதம் - இரண்டையும் மறுத்தவர்கள்
வேதத்தையும் மதத்தையும் எதிர்த்த சித்தர்களுள் அகப்பேய்ச் சித்தர், சிவவாக்கியர், பாம்பாட்டிச் சித்தர், திருவருட்பிரகாச வள்ளலார் ஆகியோர் மிகவும் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்கள் வாழ்ந்த காலம் நிகழ்குமுகாயம்போல் வேத-மத எதிர்ப்பாளர்களுக்குப் பாதுகாப்புத் தராதது. இவர்களின் கொள்கைத் துணிவு பெரிதும் போற்றத்தக்கது.
சித்தருள் சீர்திருத்தச் சிற்பியார்
மறுப்பாளராக மட்டும் இல்லாமல் உடன்பாட்டு முறையில் சீர்திருத்தங்கள் பலவற்றுக்கு வித்திட்ட துணிவு வள்ளாலாருக்குத்தான் இருந்தது. அவர் அவ்வாறு ஆற்றியவை:-
1. நாட்டிலும் குமுகாயத்திலும் வீட்டிலும் ஒருமைப்பாடு நிலவப் பாடுபட்டார்.
2. சாதி, மத, குல வேறுபாடுகள் ஒழிய எழுத்தாலும் பேச்சாலும் பாடாற்றினார்.
3. வகுப்பு வேற்றுமை என்பது புண்ணிய பாவங்களால் இயற்கையாக விளைவது என்ற கருத்துப் பரப்புரையை வன்மையாகச் சாடினார்.
4. அறிவுக் கல்வியும் ஆதனியற் கல்வியும் பெற மகளிர்க்கு உரிமை உண்டு என்று வெளிப்படையாக அறிவித்தவர்.
5. கோயிலுக்குள் புகலாகாது என்று தமிழருள் பலரை மதக்கோட்பாட்டினர் கருத்துப் பரப்பலாலும் வன்முறையாலும் தடுத்துக் கொண்டிருந்த காலத்தில், உலகில் வாழும் எல்லாரும், சமய-மத வேறுபாடு எதுவுமின்றி, சென்று கூடி வழிபடக்கூடிய நன்னெறி மெய்யியப் பேரறிவுக் கழகத்தை உருவாக்கியவர்.
6. கிழக்கிந்தியக் குழுமத்தின் வழி இங்கிலாந்துப் பேரரசு நாவலந்தீவினுள் நுழைந்து அறிவடிப்படையாலும் அதிகார அடிப்படையாலும் மாந்தரை அடிமைப்படுத்திய காலத்தில் ‘கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக, அருள் நயந்த சன்மார்க்கர் ஆள்க!’ என்ற முழக்கத்தை முன்வைத்தவர்.
7. உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கத்தை முதன்முதலாகக் கண்டித்தவர்.
8. எல்லாவற்றுக்கும் மேலாக, தனிமாந்தன் தன் உடலோம்ப வேண்டிய முறைமைகளையும் ‘நித்திய கரும விதி’ என்ற தலைப்பின்கீழ் வகுத்ததுடன், திருமூலர் வழியில் உடம்பாரையும் உயிராரையும் காப்பதற்கென்றே ‘மூலிகை குண அட்டவணை,’ ‘சஞ்சீவி மூலிகைகள்,’ ‘மருத்துவக் குறிப்புகள்’ என்ற மூன்றையும் ஆராய்ந்து தொகுத்தவர்.
9. வள்ளலார், ஆங்காங்கே தூக்கி எறிந்தவை போக, அன்பர்களால் தொகுக்கப் பெற்ற பாட்டுகள் மட்டும் எட்டாயிரத்துக்கும் மேற்பட்டவை. பெரும் பாவலராகவும் தமிழகத்தின் முதல் புரட்சிப் பாவலராகவும் திகழ்ந்திருக்கிறார்.
10. பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு ஆவன படைத்தளித்தவர்.
11. மேற்குறிப்பிட்டுள்ளனவற்றுக்கெல்லாம் கொடுமுடியாகத் தன் தாய்மொழியாம் தமிழே உலகிலுள்ள மொழிகளுக்கெல்லாம் முதன்மொழி என்பதைச் ‘சத்தியப் பெரு விண்ணப்ப’த்தில் அறிவித்திருக்கிறார். “எந்தையுனைப் பாடி மகிழ்ந்து இன்புறவே வைத்தருளிச் செந்தமிழை வளர்க்கின்றாய்!” என்றுபாடி, “அருச்சனை பாட்டேயாகும்” என்ற சேக்கிழார் முழக்கத்தை மேலும் கூர்மைப்படுத்தியவர்.
12. ‘மனுமுறை கண்ட வாசகம்’ இயற்றி விதிக் கொள்கையை அறிவுக் கோட்பாட்டால் வென்று காட்டியவர். [இந்நூலில் மாந்தநேயம், அரசியல் தெளிவு முதலிய ஒட்ப திட்பங்கள் நிரம்பியுள்ளன.]
பட்டினத்தார் கூற்றுப்படி, வள்ளலார் சித்தர் ஆவாரா?
சித்தர்களின் புறத்தோற்றம் இயல்பானதாகத்தான் இருக்கும், குறிப்பாகவும் சிறப்பாகவும் எதுவும் தோன்றாது என்பதை,
“வேர்த்தால் குளித்துப், பசித்தால் புசித்து, விழி துயின்று
பார்த்தால் உலகத் தவர்போல் இருப்பர் பற்று அற்றவரே!”
(பட்டினத்தார் பாடல்கள்: பொது. பா.19)
என்ற பட்டினத்தார் பாடலும் [“மாத்தானவத்தையும்” என்று தொடங்கும் இப்பாடலைத்தான் குமரி முதல் வேங்கடம் வரையிலுள்ள இடு-சுடுகாடுகளில் பணிபுரிவோர் தவறாது பாடுவோர்; ‘பிதாமகன்’ என்ற தமிழ்த் திரைப்படத்திலும் இப்பாடல் இடம்பெறுகிறது]
வேறுபாடான தோற்றம் இருக்கக் கூடும் என்பதை,
“பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்து, இட்ட பிச்சையெல்லாம்
நாய்போல் அருந்தி, நரிபோல் உழன்று, நன்மங்கையரைத்
தாய்போல் கருதித், தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச்
சேய்போல் இருப்பர்கண்டீர்! உண்மை ஞானம் தெளிந்தவரே!”
(மேலது, பா.35)
என்ற அவர்தம் பாடலும் சித்திரிக்கின்றன. (வளரும்...)
(நன்றி: ‘வெல்லும் தூயதமிழ்’ இலக்கிய மாத இதழ், 2037, கும்பம் [மார்ச்சு 2006])
4.3.06
எது மேல்?
முகத்தை மறைத்து,
முகவரி மாற்றி,
மற்றவர் ஆக்கம்
மனதினுள் வெறுத்து;
நானே தெரிந்தவன்,
நானே எழுத்து,
நானே அரசியல்,
நானே சரித்திரம்,
நானே உலகம்;
எனக்கே தெரியும்;
லண்டனும் யு.எஸ்’சும்
எவனுக்குத் தெரியும்?
என்று அன்றாடம்
தனக்குள் ளாகவே
முணுமுணுத்து இருக்கும்
முதுமை மேலா?
அடித்தவன் காலடி
அமர்ந்திட மறுத்து;
அடிபட்டவர்களை
அன்புடன் அணைத்து,
நொந்தழும் கண்ணீர்
நாடியே துடைத்து,
காய்ந்த வயிற்றைக்
கனிவுடன் நிரப்பி,
இழந்த நம்பிக்கையை -
பழகிப் பேசியும்,
பாசம் பரிவு
நேசம் காட்டியும் -
மீண்டுமே ஊட்டி;
பண்ணை மனத்தால்
பாதகப் பட்ட
நந்தன் சொந்தமாய்
நாளும் அலைந்து;
உந்தும் வேண்டாம்,
ஊர்தியும் வேண்டாம்,
ரதம் - அதன் நினைப்போ
வேண்டவே வேண்டாம்!
என்றே உங்கள்
நுகத்தடி மறுப்பதால்,
மனிதம் மலர்ந்திடும்
முகத்துடன் நலியும்
இளமை மேலா?
ஆதியில் உண்மை இருந்தது!
ஆதியில் உண்மை இருந்தது.
பேசக் கற்றுக்கொண்டார்கள்
மனிதர்கள்.
மொழியும் கட்டமைந்தது.
சொற்கள்
மனிதரிடையே பரிமாறிய
மறுகணம்
பொய் பிறந்தது.
கொண்டாடும்
வழக்கமும் பிறந்தது.
மனிதர்கள்
பொய்யைத் தோள்களில்
தூக்கிவைத்துக்
கொண்டாடினார்கள்.
கொண்டாடவே
உண்மை
தெய்வம் ஆனது.
- தேவமைந்தன்
1.3.06
வேலைகொடு! எங்களை வாழவிடு!!- தேவமைந்தன்
காட்டுவளம் பாதிபோச்சு - யாராலே?
நாட்டுவளம் மறுநாடுபோச்சு - எவராலே?
படிச்சு முடிச்சவர்க்கு வேலையில்லே
எங்கேயும் காலி இல்லே - ஏன்
மூளையில்லே - யாருக்கும்
மூளையில்லே?
வாக்கு கேக்க வர்றவங்க யாரிடமும்
காசுகுடு'ன்னு கேக்கறதுக்கு வாய்வருது! - எம்புள்ளைக்கி
வேலகுடு'ன்னு கேக்கமட்டும் மனம்வருது!
ஊரில் உள்ள புள்ளங்க எல்லாருக்கும்
வேலகுடு - பின்னவந்து
வோட்'டெக் கேளு - இன்னு
சொல்றதுக்கு மனம்வருதா?
யாராச்சுக்கும் வாய்வருதா?
மனித வளம் மிகுந்ததுங்க - ஒலகம்
காட்டுவளங் கூட மிகுந்ததுங்க!
முதல் வளத்தெ மிஷினக்கொண்டு கூறுபோட்றான்..
அடுத்தவளத்தை அணையக்கட்டி அழிச்சுப்போட்றான்...
அ'தாங்க...
பட்டுக்கோட்டை கண்ணாலசுந்தரம் பாடிவச்சாரு..
"அவன் சோறு போடறான்!
இவன் கூறு போடறான்!"ன்னு......
கூடவே கோடிகாட்னாரு!
சோறுபோட்ற நெனெப்புள்ளவர்க்கு
ஓட்டுப் போடுங்க!
கூறுபோட்ற நெனெப்புள்ளவங்க'கிட்ட
காசு வாங்குங்க! - ஐயாமாரே!
வேண்டாமின்னு சொல்லாம
காசை வாங்குங்க!
******
26.2.06
சூரியனாய் வெளியே வா!
உன்னிடம்
மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்படுவதால்தான்
கடும் விமர்சனத்திற்கு நீ
ஆளாக வேண்டிவருகிறது.
செத்துப்போன நாயை
எவரேனும் உதைப்பதை
பார்த்திருக்கிறாயா?
அட, அதுபோல நீ
இருந்தால் அது உன் இருத்தலைத்தான்
அர்த்தப்படுத்துமா?
கல்லாக உன்னை
இருக்கச் சொல்பவர்கள்,
படியாக உன்னை ஆக்கிப்
பாதம் பதித்து மேலேறவே
அப்படிச் சொல்கிறார்கள்.
தாய்க்கு
எல்லாப் பிள்ளைகளும் உசத்திதான்.
உன்வழியில் நீ உழை.
பெற்ற தாய்க்குச் சோறுபோடு.
வாழும்பொழுதே
வேண்டிய துணிமணி
வாங்கித்தா.
போனபிறகு கோடிபோர்த்தி
என்ன லாபம்?
அவரவர் அவரவர் வழியில்
போகட்டும்.
முடியாது என்பதற்கு
மறுபக்கம்தான்
முடியும் என்பது.
முடங்கச் சொல்பவர்கள்
உன்னை அடங்கச் சொல்கிறவர்கள்
உன்னை அடக்கம் செய்கிறார்கள் -
நீ வாழும்பொழுதே...
ஆமாம்.
திரைகள் கிழி.
தடைகள் தகர்.
விண்மீனாய் அல்ல,
ஒரு சூரியனாய் வெளியில் வா.
19.2.06
யோசிக்கக் கூட நேரமில்லை!
நெஞ்சறிந்து நாம் சொல்லும் பொய்களில் ஒன்றுதான், "எனக்கு யோசிக்கக்கூட நேரமில்லை!" என்பது. இதை அண்ணல் காந்தியடிகள் சொல்லவில்லை. மண்டைக்குள் அணுகுண்டுக்கான சிந்தனை குடைந்துகொண்டிருந்த ட்ரூமன் மொழியவில்லை. நாம் கூசாமல் சொல்லுகிறோம்.
விவேகானந்தர் சொன்னார்; "எனக்கு நேரமே இல்லை என்று சொல்பவர்களுக்கு, ஏதாவது ஒரு காரணம் வைத்து, வழக்கறிஞர் ஒருவர் மூலம் 'சம்மன்' அனுப்பிப் பாருங்கள்! அவர்களுக்கு நேரம் இருக்கிறதா இல்லையா என்று தெரியவரும்." ஆனால், இந்தக் காலத்தில் சம்மனுக்கும் 'டேக்கா' கொடுக்கத் தெரிந்து கொண்டார்கள்......
தன் 'சமாதியோகம்' பற்றிய சொற்பொழிவில்[பின்னர் இது நூல்வடிவிலும் வெளிவந்துவிட்டது] சுவாமி சிவானந்தர் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார். காலம் என்பது என்ன என்றும், நமக்கு நேரம் எவ்வளவு - எப்படியெல்லாம் - போகிறது என்பதைப்பற்றித் துல்லியமாக அறிந்துணர வேண்டுமென்றால், ஒரு 40 நாள்கள் கால அளவு [விடுமுறையில்தான்] செய்தித்தாள் பார்க்காமல்[டி.வி. குறித்து அவர் அந்தக் காலத்தில் அவசியமில்லாததால் சொல்லவில்லை] யாருடைய கடிதமும் வாசிக்காமல், எதையும் எழுதாமல் படிக்காமல், யாருடனும் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து பார்க்கவேண்டும் என்றார். அந்த அனுபவம்தான் சமாதியோகம் என்பது என்ன என்பதை இலேசாகப் புரிந்துகொள்வதற்கான அடையாள முயற்சி என்றும் தெரிவித்தார்.
அன்றாடம் அதிகாலையிலேயே செய்திக்குப்பை அபிஷேகமும் இரவு படுக்கையில் உருளும்வரை பிம்பங்களின் குளியலும் நமக்கு நாமே நடத்திக்கொண்டும் 'ஃபாஸ்ட் ஃபுட்' கடைகளுக்குச் சென்று நம் இரைப்பைக்கும் குடலுக்கும் மாசும் நஞ்சும் ஊட்டிக்கொண்டும் 'வாழ்கிற' நமக்கு இதெல்லாம் காதில் ஏறுமா என்ன?
வள்ளுவர் குறள்மொழிந்தார்:
"ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல"
16.2.06
ஆதிக்கச் சக்திகளின் நுண்ணரசியல் தொடங்கும் இடம்`
குழந்தை வளர்ந்துவிட்டதால் அடாத அடம்பிடிக்கக் கற்றுக்கொண்டுவிட்டது. சந்தைக்குப்போனபொழுது கண்டதெல்லாம் கேட்டது. நல்லவேளையாக, பஞ்சுமிட்டாய்க்காரர் மணியடித்துக்கொண்டே போக, குழந்தையின் கவனம் அங்கே தாவியது. இரண்டே பஞ்சுமிட்டாய்கள். சமாதானம் ஆனது. இனி, அடுத்து சந்தைக்கு அழைத்து வரும்வரை எனக்கு அதுகுறித்த கவலை இல்லை.
இது குடும்பம்.. அரசாங்கம் தன் ஊழியர்களுக்கு அவ்வப்பொழுது சலுகைகள் அறிவிப்பதும் இதே பஞ்சு மிட்டாய்க் கதைதான். சில சமயங்களில் மர்மமான மிரட்டல்கள்.. குழந்தையிடம் அப்பா சொல்வார்: "அதோ! அங்கே பார்! மூக்கொழுகிட்டு ஒரு குழந்தெ போகுதில்ல.. அது'க்கு டிரஸ் கூட அவங்க அம்மா அப்பா வாங்கித் தறலெ.. பாத்தியா..ஒனக்கு நாங்க எத்தனெ எத்தனெ கலர்லெ எவ்வளவு விதவிதமா வாங்கித் தந்துருக்கோம். நீ இப்பிடியே அடம் புடிச்சா பேசாமே அந்தக் குழந்தெயெ எடுத்துக்கிட்டு ஒன்னெ அவங்க அம்மா அப்பா'ட்டே வுட்டுட்டுப் போயிடுவோம்!.'' அது போதும் இந்தக் குழந்தையை அரண்டு போக வைப்பதற்கு. அரசும் இதே போலத்தான். இன்னும் வேலையில்லாத எண்ணற்ற இளைஞரின் - இளைஞியரின் கோபத்தையும் ஆத்திரத்தையும் வேலைநிறுத்தம் செய்துகொண்டிருக்கும் அரசூழியர்மேல் திருப்பிவிடும். அவர்களைக் காட்டிக் காட்டியே இவர்களைத் தன் வழிக்குத் திருப்பிவிடும்.
இல்லத்தில், துணைவியார்க்குக் கணவர்மேல் நம்பிக்கை குறையும்பொழுது, கணவர் புத்திசாலியானால், தன் முழுச்சம்பளத்தையும் தன் துணைவியாரிடமே கொடுத்து, சமாதானம் மேற்கொண்டுவிடுவார். அப்புறம், அவ்வப்பொழுது, இல்லத்தரசியின் கையிலிருந்து- தன் செலவுக்கு முன்னிலும் அதிகத் தொகை பெயருமாறு செய்துகொள்வார். அவரின் துணைவியாரோ....ம்..ம்.. அவஸ்தைப் பட்டாலும் ஆதிக்கசுகம் போல் ஆகுமா என்று தேற்றிக்கொள்ளவேண்டியதுதான். அதேதான் அரசியலிலும். கஜானாவைக் காலி செய்து வைத்துவிடும் இந்தக் கட்சித்தலைவர் தேர்தலை 'ரிலாக்ஸ்'டாக எதிர்கொள்ள, பதவிக்கு வரத்துடிக்கும் எதிர்க்கட்சித்தலைவர் 'டென்ஷ'ன்மிக எதிர்கொள்வார்.
இங்கே மாதம்தோறும்,அங்கே ஐந்தாண்டுதோறும்.
வித்தியாசம் அதுமட்டும்தானே!
12.2.06
தெளிவு- தேவமைந்தன்
தெளிவு
-தேவமைந்தன்
ஏதேதோ சாப்பிடுகிறோம். ஏதேதோ குடிக்கிறோம். எங்கெங்கோ போகிறோம். யார்யாருடனோ என்ன என்னவெல்லாமோ பேசுகிறோம்; சிரிக்கிறோம்; சிரிக்க வைக்கிறோம்; புண்படுகிறோம்; புண்படுத்துகிறோம்;
மகிழ்கிறோம்; மகிழ்விக்கிறோம்; வருந்துகிறோம்; வருத்துகிறோம்... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
மாட்டிக்கொள்ளுதல்கள்(commitments) பல: உடன்பாடுகளோ பற்பல; வாக்குறுதிகள் மேலும் பல; நமக்கென்றே அவற்றை மீறிக்கொள்ள ஒரு தனிப்பாணியைக் கண்டுபிடித்துக் கொள்கிறோம். மீறுகிறோம்; ‘அப்பாடா’ என்று நிம்மதி அடைகிறோம்.
பிறகென்ன? தூங்குகிறோம். நிம்மதியாகவா? இல்லை, பகல்நேர வாழ்க்கையைவிடவும் அபத்தமான கனவுகளோடு. “உங்கள் நண்பர்கள் யார்யார் என்று காட்டுங்கள்; நீங்கள் யாரென்று சொல்லிவிடுகிறேன்!” என்ற அறிவுமொழி ‘அரதப் பழசு.’ புதுமொழி என்ன தெரியுமா? “உங்கள் கனவுகள் எவைஎவை என்று சொல்லுங்கள்; நீங்கள் யாரென்று சொல்லிவிடுகிறேன்!...”
“நீங்கள் வாசிக்கும் புத்தகங்கள் எவை?” என்ற கேள்விக்கு ‘இல்லாத புத்தகங்க’ளின் பட்டியலைக் கொடுத்து தப்பிவிடமுடிவதுபோல, கனவுகள் விஷயத்தில் செய்துவிட முடியாது. கண்களெ காட்டிக் கொடுத்து விடும்.
சந்திக்கும் உங்கள் நண்பர் ஒவ்வொருவரிடமும் கேட்டுப் பாருங்கள். “தெளிவு’ என்றால் என்ன? கொஞ்சம் சொல்லுங்கள்!” என்றுதான்.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கம் தருவார்கள்... என் தமிழ் ஆசான் அந்தச் சொல் இடம்பெறும் பாடல் ஒன்றைச் சொல்லிக் காட்டியிருந்தார். யாரிடம் வேண்டுமானாலும் அதன் விளக்கத்தைக் கேட்டுப் பார்க்கலாம் என்றும் சலுகை தெரிவித்திருந்தார்.
என் ஊரில் பெரியவர் ஒருவரிடம் இதை நான் கேட்டேன். அவர் பெயரே வேடிக்கையானது. ‘பேயன்பழத் தாத்தா.’ இயற்கை மருத்துவர். எந்த நோயாய் இருந்தாலும், கிழக்குப் பக்கமாக மோட்டுவளையைப் பார்த்து, ஏதேதோ முணுமுணுத்துவிட்டு, அவர் கட்டிலுக்கு உட்பக்கமாக, வெளியே ஒரு பகுதி வாயைக் காட்டிக் கொண்டிருக்கும் அண்டா ஒன்றில் கைவிட்டு, நன்கு பழுத்துக் கறுத்திருக்கும் பேயன்பழம் ஒன்றைத் தருவார். பலபேருக்கு நோய் குணமாயிற்று.
‘பேயன்பழத் தாத்தா’ தனக்கென்று திட்டவட்டமான முடிபுகளைக் கொண்டிருந்தார்.. “தெளிவு’ன்னா இன்னா’ன்னுதா’ன கேட்ட?” என்று சொல்லிவிட்டு சாதிக்காய்ப் பெட்டி ஒன்றைத் திறந்தார். உள்ளே திருநீறு மணந்துகொண்டிருந்த ஒரு பழைய புத்தகத்தை எடுத்துத் தந்தார்.
அது ‘திருமந்திரம்.’
“பிரி, அந்த 139 – ஆம் பாட்டெ.. ஆங்ங்.. பட்டுக்கயிறு சாத்தி வச்சிருப்பன்’ல.. அந்தப் பக்கத்தெ எடு...” அவர் பேசியது இன்னும் என் செவிகளில் ‘ரீங்காரம்.’ இசைபோல இருக்கும் அவர் பேச்சு.. வாசித்துக் காட்டச் சொன்னார். வாசித்ட முறையைத் திருத்தினார். “ஆங்.. பாட்டெல்லாம் இப்ப்’டிப் படிக்கக் குடாதே.. திருத்தமா, ஒப்புராவா ஓசை நிரவி, படி!”
“ தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே”
படித்தேன். பொருள் கேட்டேன். எனக்கு அப்பொழுது பன்னிரண்டு வயதிருக்கும்.
ஒருமாதிரி மருமமாக சிரித்தார். “பொருள் சொல்ல்’றதா.. சொன்னா எல்லா’ வெளங்காது.. நீயா படி.. ஒவ்வொரு தாட்டியும் படி.. ஒவ்வொரு வசில’யுந்தான்.. புதிசு புதிசா வெளங்கும்.. ஒவ்வொரு தீவாளிக்கும் பொங்கலுக்கும் ஒனக்கு புதிசு புதிசா’த் துணியெடுத்துத் தர்’றாங்கள்’ல.. அதுமாதிரி ‘குரு’ ஒனக்கு ஒவ்வொரு தாட்டியும் புதிசு புதிசா பொருள் வெளங்கறமாதிரி கத்துக் கொடுப்பார்..” என்றார்.
“தாத்தா!.. ‘குரு’ன்னா வாத்தியாரா? ... கேட்டேன்.
“ம்ம்.. அப்ப்”டியும் வச்சுக்கோ.. ஒவ்வொரு சமயம், ஒவ்வொரு குரு..” என்று கண்களை அழுத்தமாக மூடியவாறு எங்கோ சஞ்சரித்த குரலில் பேசினார்.
“பசுவதீ! இதெல்லாம் ‘டக்’னு முன்னாலெ எடுத்து வைக்கிற சமாச்சாரம் இல்லே’ப்பா.. ஒன் வாழ்க்கை’லே..அட என்னாப்பா.. ஒவ்வொருத்தங்க வாழ்க்கை’லே அடிபட்டு அடிபட்டு தெளிஞ்சு எந்திரிக்குறபோது வர்’றதுதாம்ப்பா தெளிவு..அட..ஒஞ்சாமி மட்டும் இல்ல.. அது ஒனக்கு அப்பப்ப அடி விழறபோது தருது பாரு.. ஒரு பாடம்.. அதுக்கு இன்னொரு பேர் தெளிவு.. அதெக் குடுக்குது பாரு.. அதான் குரு.. குரு’ன்னு இன்னார்தான், இதுதான்’னு இல்ல.. அதென்னவோ ஒரு உபநிசத்து’ங்றாங்க..அதுல சொல்’றாராம் ஒரு ரிசி..அதாம்’ப்பா..முனிவரு.. தனக்கு சாமி, ஆசாமி’ல இருந்து ‘வேசி வரை’ல இருபத்தாறு குருமாருங்க’ங்றாராமல்ல’ப்பா..சொலவம் வருதாமல்ல அப்பிடி?...”
அவர் அன்று இதைச் சொன்னபொழுது விளங்கியதைவிட முப்பது வயதில், நாற்பது வயதில், ஐம்பது வயதில் மேலும் அதிக அதிகமாக விளங்கியது; விளங்கியது என்பதைவிடவும் உறைத்தது என்று சொல்லுவது மிகவும் பொருத்தம். ஒரே பாட்டு, ஒரே சொலவம், ஒரே சொலவடை, ஒரே செய்யுள், ஒரே கவிதை, ஒரே பழமொழி - ஆண்டுகள் பல ஆக ஆக வேறு வேறு அர்த்தம் தருகிறதே..எப்படி?
******************************
நன்றி: திண்ணை.காம். வாசித்து மின்னஞ்சல் விடுத்த அன்பர்களின் கருத்துகள் சிலவற்றை ஏற்று, சற்றுத் திருத்தி மாற்றிய பதிவு.
10.2.06
மீன் -தேவமைந்தன்
அன்பரே, தற்பொழுது என் பரிணாமம்
இந்த 'ஜங்க்' காலத்துக்கு ஏற்பவே.
பொருளாதாரம் - அகம்புறம்,
வீட்டிலிருந்து நாடு,
நாட்டிலிருந்து வீடு.. வீங்கி.
சதா விளம்பரங்கள் துண்டித்தும்
தொடர்ந்து தொடர்கள் பார்த்து--
அழுது, விசும்பி, சிரித்து, அதே வசனங்களை
வாய்ப்பு நேர்கையில் விடாதென் குடும்பத்திலும் விளம்பி---
வேறுவீடு பார்த்து, தனிவிலகிப்போய்,
என்னிலிலிருந்தே என்னை விலகவைக்கும் - வினோத
ஊடக வார்த்தைகளுக்கெல்லாம் விடாமல் செவிகொடுத்து,
கடனோ உடனோ கால்பிடித்து கைபிடித்து வாங்கி;
'இங்க்லீஷ் பேப்பர்' வாங்கி, அப்படியே
மடித்த மடிப்புக் குலையாமல் அடுக்கியே வைத்து
'வெய்ட்'டுக்குப் போட்டு; அற்பச் சிறுதொகை
அதையும் கூட அடுத்தபெருஞ் செலவுக்கு
அச்சாரமாக்கும் நடுத்தரக் குடிமகன்,
வேறுஎன் செய்வேன்? விலகியே வாழ்வேன்.
சம்பளம் வாங்கும் வேலைப் பொறுப்பும்
ஒழுங்காய் வாழும் வாழ்க்கைப் பொறுப்பும்
சுற்றிச் சூழும் நீர்போல் எனக்கு.
எதிரிகள் பலப்பலர்.
விலகி விலகியே நீச்சல் அடிப்பேன்.
நண்பர்கள் மாறுவர் நாளும் எனக்கு.
எவர் என்ன ஆனாலும் எப்படிப் போனாலும் எனக்கென்ன?
"பயன்பெறு; தூக்கியெறி" - என்பதுஎன்
புனித வாசகம்.
''பயன்பெற வாயாத யாரும் எதிர்வந்தால்
பாராமல் போயே பழகு'' - அடியேனின்
புதிய குறள்.
தகவமைப்பு உயிர்களை உருவாக்கும்
என்பது அறிவியல். என்றால் நிகழ்உலகில்
மீனாகவே இருப்பேன் நான்.
************************************************************
நன்றி: வார்ப்பு.காம்
''மற்றவர்கள் நரகம்......'' - -தேவமைந்தன்
'உயர்ந்த நீதியை வழங்கும் என்று
மக்கள் நம்பும் நீதிமன்ற வாயிலும்
கொடுமை என்று அவர்களே அஞ்சும்
நரக வாயிலும் ஒன்றே; ஏனெனில்
எந்தப் பொழுதில் போக நேரினும்
திறந்தே இருக்கும் அவ்விரு வாயிலும்'
என்பது ஆங்கில நாட்டார் பழமொழி.
அரைமணி நேர வானப் பயணத்
தொலைவு மட்டுமே உள்ள பிரான்சு
முழுவதும் போற்றும் சிந்தனை யாளர்
ழான்போல் சார்த்(த)ரோ
பலபடி மேலே போனார்.
'நரகம் என்பது வேறே எங்கும்
இல்லை; இந்த உலகில் வாழும்
ஒவ்வொரு வருக்கும் உண்மையில் நரகம்
மற்றவர் மட்டுமே' --
என்றார். அதனை விளக்கும்
அமர நாடகம் 'மீள முடியாது.'
இனிய சுதந்திரம் இன்னும் உயிருடன்
இருக்கும் நாட்டின் இரவு விடுதியில்
அரவு நடனம் ஆடும் மகளிரும்
விடுப்புப் போட்டுப் பார்த்து ரசிக்கும்
அரிய நாடகம். அதனை
அடிக்கடி படித்தும் அரங்கம் சென்று
பார்த்தும் வியந்தும் பலபட அதனை
'வியாக்யானம்' பண்ணியும்
யூரோ'வின் மாற்று மதிப்பைப் பற்றிக்
கொஞ்சமும் கவலை கொள்ளாது என்னுடன்
தொலைபேசும் எனது நெருங்கிய உறவினர்
ஒருவர் குறித்துநான் மற்றுமோர் உறவிடம்
உயர்த்திச் சொன்னேன். ''அவரா?''
என்று கேட்டுப் பல்லைக் கடித்தவர்,
''எங்கள் இல்லம் ஒவ்வொன் றுக்கும்
வந்துஅவர் தங்கிப் போனபின் வந்திடும்
'டெலிஃபோன் பில்'லைக் கண்டு
கதவின் சந்தில் கைவரல் விட்டதால்
நொந்தழும் பிள்ளைபோல் சர்வமும் வெறுத்து
வாய்த்தவ ளிடமும் வாங்கிக் கட்டி
வாடும் பாவிகள் நாங்கள்...
சொன்னதாய் அவரிடம் மறக்காமல் சொல்லும்:
''மற்றவர்கள் நரகம்'- அவருக் கென்றால்,
எங்கள் அத்தனைப் பேர்க்கும்
அவர் ஒருவர்தான் நரகம்.''
சந்தேகம் மெல்லப் புகுந்தது எனக்குள்..
ழான்போல் சார்த்தர் இப்படி எவர்க்கும்
'டெலிபோன் பில்'லைக் கட்டியழ நேர்ந்ததோ?......
******
நன்றி: திண்ணை.காம்
7.2.06
என் முதல் நாள் கல்லூரிப்பணி அநுபவம்- தேவமைந்தன்
என்னை இது தொடர்பாக எழுதவைத்தவர் சுதாகர். ''அனுபவம் வழுக்கை விழுந்தபின் கிடைக்கும் சீப்பு'' என்ற சொலவடை ஒன்றையும் சொல்லியிருந்தார். அது கல்லூரிக் கல்வி அநுபவத்துக்குப் பொருந்தாது என்று நினைக்கிறேன். என் தலைக்குப் பொருந்தவே பொருந்தாது. ''டையடிக்கக் கூடாதா?'' என்று நண்பர்கள் நொந்துபோய்க் கேட்கும்படியான தலைதான். நரைத்துப் போனதற்கும் பரம்பரைதான் காரணமே தவிர, செய்த பணி அல்ல.
நேற்று பின்மாலைப் பொழுதிலும்கூட, பல்கலை. ஆய்வு செய்யும் என் பழைய மாணவர் நெடுநேரம் தொலைபேசியிருந்தார். அவருடைய மேற்பார்வையாளரிடமிருந்து[guide] விலகி அவ்வப்பொழுது, தாயைத்தேடி ஓடிவரும் கன்றுபோல், வீடு வருவார். நெடுநேரம் பேசியிருந்து, மீண்டும்
தன்னுடைய ஊக்கம் என்ற 'பேட்டரி'யை 'ரீசார்ஜ்' செய்து போவார்.
என் 21 -ஆவது வயது முடிந்த சில மாதங்களில் புதுவை அரசுக் கல்லூரிப்பணியில் சேர்ந்துவிட்டதற்குக் காரணம் -- தொடக்கப் பள்ளி நிலையிலேயே 'டபிள் ப்ரமோஷன்' இருமுறை வாங்கிவிட்டதும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் 1969 ஏப்ரலில் எம்.ஏ. தேர்வெழுதிவிட்டு 'டைபாய்'டில் விழுந்து தேறும்பொழுது வந்த 'ரிசல்ட்'டில் உச்ச மதிப்பெண் பெற்ற கையோடு, சைதாப்பேட்டையில் என் பி.ஏ. அரசியல்(B.A. Political Science) ஆசிரியர் பேரா.தியாகராஜனைச் சந்தித்து ஆசீர்வாதம் வாங்கப்போக, அன்று சனிக்கிழமையாக இருக்க, அவர் தான் வாசித்துக் கொண்டிருந்த 'இந்தியன்
எக்ஸ்பிர'ஸின் சனிக்கிழமை சிறப்புப் பிரதியில் புதுவை மாநில அரசின் கல்விச்
செயலர் திரு ஜெயின் அவர்கள் தந்திருந்த விளம்பரத்தைக் காட்டி, அவரே வெள்ளைத்தாள் ஒன்றில் விண்ணப்பம் எழுத, நான் [செய்ததெல்லாம்] கையெழுத்திட்டு ‘கவர்’ வாங்கி அதில் அதைப்போட்டு அஞ்சல் தலை ஒட்டி அஞ்சல் செய்து விட்டதும் என்ற 'மிகவும் - தற்செயலான - சங்கிலித் தொடர் நிகழ்ச்சி'(Synchronicity) மட்டுமே.
''உரிய பொழுதில் எதுவும் பழுக்கும்'' என்று என் அம்மா சொல்வார்கள். அது நடந்தது. அவ்வளவுதான். அடுத்த சில நாட்களில் புதுச்சேரி நேர்காணல்.. புதுச்சேரி மாநிலம் என்பதால் என் திறமைக்கு வேலை கிடைத்தது.
முதல்நாள் கல்லூரிக்குப்போய் முதல்வரிடம் உரியவற்றைத் தந்துவிட்டு, முதல் கையெழுத்தைப் போட்டுவிட்டு, துறைக்குச் செல்லும் வழியில், ' நோட்டீஸ் போர்ட்' பார்க்கலாமே என்று போய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு தடித்த கை, என் தோள்மேல் விழுந்து பற்றிக்கொண்டது. திரும்பினேன். ஆஜானுபாகுவாக மாணவர் ஒருவர். நானும் அவரும் அடுத்தடுத்து நின்றால் 10 போல் இருப்போம். நல்ல வேளை........ ஒன்று கூட... ' 'என்னப்பா கம்ராது! (பிரஞ்சில் ‘தோழா!’) என்ன... இன்னைக்குத்தான் வரீயா! என்ன குரூப்பு? தா பாரு! திரும்பி போறபோது நேரா பூடாதே! அதோ அந்த கொன்ன[கொன்றை] மரம் பக்கம் வந்து போவியாம்..[ரேகிங்]'' என்றார் அவர். ''சரிங்க! நான் நாலாம் க்ரூப்பு'ங்க(பி.யூ.சி. [எ] புகுமுக வகுப்பு - 1969-ஆம் ஆண்டு) வந்துடறேங்க!'' என்று சொன்ன பிறகுதான் அவர் 'பிடி' நெகிழ்ந்தது.. ''அக்காங்..'' என்று விடுவித்து அனுப்பினார். துறைக்குப் போனபின் சிரித்துக் கொண்டே வரவேற்ற தலைவர் பேரா. ம.ரா. பூபதி, எனக்குக் கொடுத்த முதல் வகுப்பே அந்த நாலாம் குரூப்'தான்.
போய் வருகைப் பதிவெடுத்தபொழுது அகரவரிசைப்படி முதலாவதாக இருந்த மாணவர், பெயர் சொன்னதும், ஆஜானுபாகுவாக எழுந்து, ஆனால் சங்கடத்துடன் நெளிந்து வளைந்து நின்றார். தோளில் கை போட்டு அழைத்தவர். நான் காட்டிக் கொடுக்கவில்லை. அதற்கப்புறம் அவர் என் முதலாவது மாணவராக மட்டுமே நடந்துகொள்ளாமல் தொடர்ந்து தோழராகவே நடந்து கொண்டார்.
36 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இன்னும் பசுமையாக இருக்கிறது அந்த முதல் நாள்; முதல் வகுப்பு.
******
நன்றி: மரத்தடி மடற்குழு.
வளர்ந்திருக்கிறேன், ஐயா! -தேவமைந்தன்
அடையாளம் தெரியாதவராய்
வாழ்வதில் அர்த்தம் உண்டு.
அடையாளம் தெரிவதில்
முரண்பாடு முனைந்து நிற்கும்.
அடையாளங்களால் குலைப்பதும்
எதிர்வில் குலைந்துபோக நேர்வதும்
வினை - எதிர்வினை.
நெற்றியில் தீட்டப்படாவிட்டாலும்
மார்பில் அது பூட்டப்படாவிட்டாலும்
இனம் சாதி குலம் எல்லாம்
நாட்டுடன், அடையாள ஆதிக்கங்களே.
அடையாளம் முதலில் சுகமாகலாம்.
பின்னால் அது பிசாசாய்ப் பீடிக்கும்.
பதவி பலகை புத்தகம் சொற்கள்
உதவி வாக்குறுதி செய்தி தகவல் -
எல்லாம் மர்மக் கைகால் விலங்குகள்.
அடுத்த ஊரில் நகரில் மாநகரில்
அடையாளம் தெரியாதவனாய் உலவுவதில்
உள்ள அனுபவத்தை உணர்ந்த பின்பும்
சொந்த வாழ்க்கையில் சுமப்பதேன்
அடையாளங்கள்?
(போன்சாய் மனிதர்கள், 1993. சிறிய மாற்றங்களுடன்.)
Subscribe to:
Posts (Atom)