25.6.07

புதுச்சேரி வட்டாரம்-வரலாறு சார்ந்த நாவல்கள்: 'நீலக்கடல்' குறிப்பாக...

புதுச்சேரி வட்டாரம்-வரலாறு சார்ந்த நாவல்கள்: 'நீலக்கடல்' குறிப்பாக... - தேவமைந்தன் 1673ஆம் ஆண்டு, பிரெஞ்சினர் தாங்கள் இந்தியாவில் முதன்முதலாகக் காலூன்றத் தேர்ந்து கொண்ட நிலப்பகுதியே புதுச்சேரி. காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளும் உள்ளடங்கியது இந்த மாநிலம். முன்னர் பிரெஞ்சினர் ஆளுகைக்கு உட்பட்டிருந்த சந்திரநாகூர் 1954ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்துடன் இணைக்கப்பட்டது. காரைக்கால், புதுச்சேரியிலிருந்து 140 கி.மீ தொலைவில் தெற்கில் தமிழ்நாட்டின் பொறையாறு அருகில் உள்ளது. மாகி மலபார் கடற்கரைப் பகுதியில், அதாவது அரபுக் கடல் பகுதியில் கேரளத்தின் தலைச்சேரிக்கு ஏழு கி.மீ. அருகில் உள்ளது. ஏனாம், ஆந்திர மாநிலத்தில் காகினாடாவுக்குத் தெற்கில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அருகில் உள்ளது. புதுச்சேரியைப் போலவே ஏனாமுக்குக் கிழக்கிலும் வங்காள விரிகுடா உள்ளது. சுருக்கமாகச் சொன்னால் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலப்பகுதிகளில் மூன்று வங்காள விரிகுடாவை ஒட்டியும் ஒரு பகுதி அரபுக் கடலை ஒட்டியும் உள்ளன. 1673ஆம் ஆண்டில் பிரஞ்சுக் கிழக்கிந்தியக் கும்பெனி தன் வாணிகத் தொடர்பைத் தொடங்கியது. 1721இல் மொரீஷியசும் மாகியும் அடுத்த பத்தாமாண்டில் ஏனாமும், அதற்கு ஏழு ஆண்டுகள் கழித்து காரைக்காலும் பிரெஞ்சினரால் கையகப்படுத்தப் பட்டன. 1814 ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட வெர்சேல்ஸ் அமைதி உடன்படிக்கைக்குப் பின்னால் ஆங்கிலேயர் வசமிருந்த பிரெஞ்சிந்தியப் பகுதிகள் பிரெஞ்சினரிடமே ஒப்படைக்கப்பெற்றன. இந்திய நாடு விடுதலை பெற்றதை அடுத்துத் தானும் விடுதலைப் போரில் தீவிரமாகக் குதித்த புதுச்சேரி மாநிலம் 1954, நவம்பர் 1 முதல் விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது. இதையே 'இணைப்புத் தீர்மான ஒப்பந்தம்'(De-facto settlement) என்பார்கள். இதனால் எழுந்த சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள 1956இல் ஒப்பந்தம் ஒன்று இந்திய பிரெஞ்சு நாடுகளுக்கு இடையில் உருவாக்கப்பெற்றது. விளைவாக 1962, ஆகஸ்ட் 16இல் 'நடைமுறை அதிகார மாற்ற ஒப்பந்தத்தில்' (De-jure transfer) இந்தியப் பிரதமர் நேருவும் பிரஞ்சுத் தூதுவரும் கையொப்பமிட்டனர். அந்த நாள்தான் புதுச்சேரியின் விடுதலை நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1963இல், இந்திய அரசியலமைப்புச் சட்டம் - ஏழாவது திருத்தத்தின்படி புதுச்சேரி இந்திய நடுவண் அரசின் ஆட்சிப் பகுதியானது. இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவைக்கு ஓர் உறுப்பினரும், மாநிலங்கள் அவைக்கு ஓர் உறுப்பினரும் தேர்ந்தெடுத்து அனுப்பும் உரிமை புதுச்சேரி மாநிலத்துக்கு வழங்கப்பெற்றது மேலே கொடுக்கப்பட்டிருப்பது, ஆகவும் சுருக்கமான வரலாறு. விரிவான வரலாற்றை விரும்புவோர் முனைவர் சு. தில்லைவனம் அவர்களின் 'புதுவை வரலாறும் பண்பாடும்' 'தமிழகம் புதுவை வரலாறும் பண்பாடும்' போன்ற நூல்களில் விரிவாக அறிந்து கொள்ளலாம். ஆனந்தரங்கப் பிள்ளை சொஸ்தலிகிதம் என்னும் தினப்படி சேதிகுறிப்பு(தன் முதல் தொகுதியின் மேலட்டையில் 'சொஸ்த லிகிதம்' என்றுதான் அவர் குறிப்பிட்டிருந்தார்*) முதலான ஆவணங்கள், கல்வெட்டுகள் பலவற்றிலிருந்து அரிதின் முயன்று நெய்யப்பெற்றவை அந்த நூல்கள். இன்னுமொரு சுவையான செய்தி. புதுச்சேரியில், கடந்த 1910களில் 'புதுவைக் கலைமகள்' என்ற 'மாத சஞ்சிகை' நடந்து கொண்டிருந்தது. தமிழ்நாட்டில் வித்தியாபானு, விவேகபானு, விவேகபோதினி, வித்யாவிஹாரிணி முதலிய அதே தன்மையுள்ள தமிழ் இலக்கியப் பணியில் ஈடுபாடுள்ள இதழ்கள் நடத்தப்பட்டு வந்தன. 1916ஆம் ஆண்டில், 'புதுவைக் கலைமக'ளில், அதன் ஆசிரியர் தம்பி புருஷோத்தமன், 'ரமணி' என்ற நாவலைக் கண்டித்து எழுதினார்: அந்தத் திறனாய்வுரையின் தலைப்பு 'குணாகுணவாராய்ச்சி''(புதுவைக் கலைமகள்--[1916] தம்பி புருஷோத்தமன்) என்பதாகும். சொற்போக்கிலும் பொருட்போக்கிலும் 'ரமணி' போன்ற நாவல்கள் எவ்வளவு நடைமுறைக்கு முரண்போக்கில் போயின என்பதை அதில் காட்டினார். தம் கதாபாத்திரங்கள் மாறுவேடம் போட்டுவிட்டால் போதும்.. ஏற்கெனவே அவர்களுடன் மிகவும் நெருங்கிப் பழகியவர்களுக்குக் கூட அவர்களைத் தெரியாமல் போய்விடும் என்ற அக்கால நாவலாசிரியர்கள் குடித்த மனப்பாலுக்கு மருந்து வழங்கினார். "உலக வழக்கிற்கு முரண்படாதனவாயும், தேசாசாரத்தைத் தழுவினவாயும், பொது சனங்களின் நடவடிக்கைகட்குப் பொருந்தினவாயும், காலதேச நிச ரூப வர்த்தமானங்கட்கு ஒத்தனவாயுமுள்ள கற்பனைக் கதைகளே நாவல் எனப்படும்" என்று சாராம்சமாக நாவலுக்கு இலக்கணம் எழுதினார். இந்த அடிப்படையிலேயே - தன் எதிர்பார்ப்பை மிகவும் சிறப்பாக நிறைவேற்றும் வகையில் நாவல்கள் தன் ஊரிலேயே பின்னர் படைக்கப்படும் என்று தம்பி புருஷோத்தமன் நினைத்திருப்பாரா! நாகரத்தினம் கிருஷ்ணாவின் 'நீலக்கடல்' நாவலில் பிரஞ்சுத் தீவான மொரீஷியஸ் முதலானவற்றின் வரலாற்று அடிப்படைகளுக்கு 'Les Tamouls A L'lleMaurice - Ramoo SooriaMoorthy,' 'Les Indienes A L'lle de France,' 'A Lougnon - (Correspondance du Conseil Superieur de Boubob et de la Compagne des Indes)' முதலான பற்பல நேரடி ஆவணங்களே சான்று காட்டப் பெற்றுள்ளன. புதுச்சேரியின் சூழல், பேச்சுவழக்கு அதாவது வட்டார வழக்குச் சொற்கள் நிரம்பிய 'ஆண்களும் பெண்களும்'(1985) என்ற நாவலைப் பிரபஞ்சன் எழுதினார். பிரான்சுக்குப் போய்வரும் தமிழர்களைக் குறித்தும் பிரஞ்சுப் பண்பாடு குறித்தும் நிரம்பவே கவலைப்பட்டிருக்கிறார் பிரபஞ்சன். ஜவஹர்லால் நேரு 'பிரஞ்சுப் பண்பாட்டின் சாளரம்' என்று புதுச்சேரியைப் பற்றிச் சொன்னதையும் வேதனையோடு நினைத்துப் பார்த்திருக்கிறார். "என் தலைமுறையில் ஜவஹர்லால் நேரு சொன்ன பிரஞ்சுக் கலாச்சாரத்தின் ஜன்னலை நாடிப் பார்த்திருக்கிறேன். சாயங்காலம் ஆனால் பாருக்குச் சென்று குடிப்பதைத் தவிர எங்கள் பிரஞ்ச் தொடர்புடைய தமிழர்கள் வேறு ஒன்றையும் கற்று வைத்துக் கொள்ளவில்லை. இவர்கள் பேசும் மொழியில் சில பிரஞ்ச் சொற்களைக் கலந்து பேசுகிறார்களே அன்றி பிரஞ்சின் இதயம் எங்கும் காணக் கிடைக்கவில்லை. மேலோட்டமான வாழ்க்கைப் போக்கில் பிரஞ்ச் பண்பாட்டுக் கூறுகள் எங்கள் மேல் படிந்திருக்கின்றன என்பது மெய்தான்!" என்று பிரபஞ்சன் மொழிவது 'எழுத்தாளர் தர்ம'த்துக்கு ஏற்றதே.(அரவிந்தாசிரமத்தில் வாழ்ந்து 'வைகறை' என்ற ஆசிரமக் காலாண்டிதழை வெளியிட உதவிய பி. கோதண்டராமன் சென்ற எழுபதுகளில் எழுதிய 'எழுத்தாளர் தர்மம்' என்ற சிறந்த புத்தகம், இங்கே நினைவுகூரத் தக்கது) "எங்கள் தமிழர்கள் இந்த இரண்டு நூற்றாண்டுத் தாகத்தின் விளைவால் மதத்தை மாற்றிக் கொண்டார்கள்; பிரான்சுக்குப் போய் உத்தியோகம் பார்த்தார்கள்; காசு சம்பாதித்தார்கள். அன்றி பிரான்சிலிருந்து தமிழ் மண்ணுக்கு என்ன கொண்டுவந்து சேர்த்தார்கள்? தமிழர்களின் வாழ்க்கைக் கண்ணோட்டத்தின் மீது பிரான்ஸ் சிந்தனை ஆட்சி செலுத்தவில்லை. மாற்றி அமைத்துவிடவில்லை. உன்னதமான பிரான்சின் கலைகள், இலக்கியங்கள், பல்வேறு பயன்பாடான வாழ்க்கை நெறிகள் எங்கள் மண்ணுக்கு இறக்குமதியாகி, எங்கள் ரத்தத்தில் கலந்து கொண்டனவா, இல்லை" என்று பிரபஞ்சன் சொல்லியதும் குறிப்பிடத்தக்கது. இருபதாண்டுகளுக்குப் பின்னர் வெளிவந்துள்ள நாகரத்தினம் கிருஷ்ணாவின் 'நீலக்கட'ல்(திண்ணை.காம் வலையேட்டில் நெடுங்காலம் தொடராக வெளிவந்து அச்சில் ஐந்நூறு [தெமி 1x8] பக்கங்கள் நிரம்பிய நாவல் - முன்னுரைகள் நீங்கலாக...) அந்தப் போலி வாழ்க்கையை வாய்ப்புக் கிடைக்குமிடத்திலெல்லாம் வெளிப்படுத்தியுள்ளார். இப்பொழுது, திண்ணை.காம்-இல் தொடராக வெளிவரும் 'மாத்தா ஹரி'' இன்றும் புதுச்சேரியில் நீடிக்கும் அந்த 'சொல்தா வாழ்க்கை'யின் ஆடம்பரத்தை அப்பட்டமாகச் சித்திரிக்கின்றன. சொல்தாக் குடும்பங்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்த எனக்கு, வேம்புலி நாயக்கர் மருமகளைப் பற்றிய நுணுக்கமான ஒலி+ஒளி+வாசனைச் சித்திரிப்பு மிகவும் சரியாகவே பட்டது.(ப.316) பிரபஞ்சனின் 'மகாநதி'' (1990) இரண்டு தலைமுறைகளைப் பற்றிய நாவல். பிரஞ்சு இந்தியாவின் காலகட்டத்தைச் சார்ந்தது ஒன்று. புதுச்சேரி - விடுதலைப் போராட்டத்திலிருந்து விடுதலை பெற்றது வரையிலுமானது மற்றது. கள்ளுக்கடை நடத்தி வசதியாக வாழ்ந்த கோவிந்தன், தான் ஏற்றுக்கொண்ட அண்ணல் காந்தியின் கொள்கைகளால் அதை மூடிவிட்டு இட்டளிக்கடை வைத்துப் பிழைக்கும் வறுமைநிலைக்குத் தள்ளப்படுவதும், அவரால் முன்னுக்கு வந்தவர்கள் அரசியல் விளையாட்டில் உயர்ந்து போவதும் அந்த நிலையிலும் தன் மனத்தைத் தூய்மையாக அவர் வைத்துக்கொள்ள விரும்புவதும் அதன் கதைப்பின்னல். பிரபஞ்சனின் 'மானுடம் வெல்லும்(1991) என்ற நாவல் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க புதுச்சேரி வரலாற்று நாவல். இதன் கதை சுழலும் காலகட்டம் 1735 ஆமாண்டு முதல் 1743 வரையுள்ள ஏழரை ஆண்டுக் காலகட்டம். குவர்னதோர் துய்மா, அவரின் முதன்மை துபாஷ் பெத்ரோ கனகராய முதலியார், சிறிய துபாஷ் ஆனந்தரங்கம் பிள்ளை, அவர்தம் துணைவியார் மங்கத்தாய், அவர்தம் நண்பர் நாகாபரண பண்டிதர் முதலான பல பாத்திரங்கள் இதில் உலா வருகின்றன. தாசியாகப் பிறந்தாலும் தன் நியாயமான வாழ்க்கைக்காகப் போராடும் கோகிலாம்பாள் இதில் குறிப்பிடத்தக்கவள். வானம் தொட்டுவிடும் தூரத்தில் இருப்பதாகப் படுகிறது அவளுக்கு. அப்படியே கையை உயர்த்தினாள். வானம் கைக்கு வசப்படவில்லை - என்று அறிமுகம் ஆவாள் கோகிலாம்பாள். அதன் விளைவோ என்னவோதான் அடுத்த நாவல் வானம் வசப்படும் என்று உருவானது. அவளையும் அவள் இசையாற்றலையும் நன்கு புரிந்து கொண்டு உயர்த்தும் வேதபுரீசுவரர் கோயில் பஞ்சாட்சரக் குருக்கள், ஆறு ரூபாய் கடனுக்காகச் சிறையிலடைக்கப்பட்டு காதுகள் அறுக்கப்பட்ட சின்னக் கறுப்பு அவனால் எட்டு ரூபாய்க்கு விற்கப்பட்ட அவன் மகள் மானங்காத்தாள், தன் மகளை நினைத்துக் கொண்டே மனநலமிழந்த பேச்சி முதலான அவலக் கதைமாந்தர் அன்றைய புதுச்சேரியை நினைவுபடுத்துகின்றனர். மதரீதியாகப் புரட்சி செய்யும் சீமான் ஐயரும்(மேனாள் சிறுவன் குருசு), தகுதி இல்லாதவர்களிடம் தகுதியில்லாத பொருள்களைக் கேட்கச் சொல்லித் தன் நடுப் பிராயக் கணவனான தளபதி ராகுஜியை நிர்ப்பந்தித்து அவை கிடைத்தபின் அலட்சியம் செய்யும் இளம் பெண் மோஹனா, பிரஞ்சுக்காரனாகப் பிறவாமல் தமிழனாகப் பிறந்ததற்கு மனம் புழுங்கி வாடும் வாகட வரதன் முதலியோரும் குறிப்பிடத்தக்கவர்களே. தண்டுக்கீரை என்ற ஆண்பெயர், அவன் மனைவியான வெள்ளப்பூண்டு என்ற பெண்பெயர், அவர்களின் மகனான கொடுக்காப்புளி என்ற பிள்ளைப் பெயர் ஆகியவை அந்தக் காலப் பெயர்களை, குறிப்பாகப் பொருளியலாலும் சனாதன தர்மத்தாலும் ஒடுக்கப்பட்டவர்களை நினைவு படுத்துகின்றன. பிரபஞ்சனின் 'வானம் வசப்படும்' என்ற நாவல் 'மானுடம் வெல்லும்' என்பதன் தொடர்ச்சியே போன்று புதுச்சேரி வரலாற்றைச் சித்திரிப்பதாகும். ஆனந்தரங்கப்பிள்ளை, மங்கை அம்மாள் (அவர் தயாரிக்கும் இரவுத் தாம்பூல விளக்கம் பக்.36-37), பானுகிரஹி, அவள் சேடி நீலவேணி, குவர்னர் துரை துய்ப்ளெக்ஸ், மதாம் (ழான்) துய்ப்ளெக்ஸ், பாதிரியார் பெனுவா சாமியார், ரங்கம்மாள், குருசு(குசினி வேலை) முதலான கதை மாந்தர் பலர் இந்த நாவலில் வருகின்றனர். அளவிலும் பெரியது இது. இதன் தொடர்ச்சியாக புதுச்சேரியின் நிகழ்காலத்தையும் புதுவைத் தொழிலாளர் போரட்டங்களையும் பிரபஞ்சன் மூன்றாம் பாகமாகச் சொல்வதாக இருந்தார் என்று நினைக்கிறேன்.(மானுடம் வெல்லும் முன்னுரை, கடைசிப் பகுதி) 'வானம் வசப்படும்,' ஆனந்தரங்கப்பிள்ளையின் முழு வாழ்க்கையைச் சொல்வதாகவும், 1942ஆம் ஆண்டு தொடங்கி அடுத்த இருபதாண்டுக் கால, புதுச்சேரி, தமிழக அரசியல், மற்றும் தமிழக உழைப்பவர் வரலாற்றைப் புலப்படுத்துவதாகவும் உள்ளது. இதன் இறுதிப் பகுதியில், சேசு சபைச் சாமியார்களின் தூண்டுதலால் மதாம் துய்ப்ளெக்ஸ் (ழான்) தன் கணவரிடம் சொல்லி சம்பாக் கோயிலை இடிக்கச் சொன்னதும். அதற்கேற்ப குவர்னர் துய்ப்ளெக்ஸ் முசே பராதியிடம், அவ்வாறு - சம்பா (ஈசுவரன்) கோவிலை இடிக்க ஆட்கள், அதற்கு மேற்பார்வை பார்க்க தமது இஞ்சினீர் முசே எழர்போல்டு, தமது பாதிரி கொர்து ஆகியோரை இடிக்கும் நாளுக்கு முந்திய இரவே சம்பா கோவிலுக்குள் புதுச்சேரி மக்கள் அறியாதவண்ணம் தங்கிக் கொள்ளுமாறு செய்வித்ததும் பிறவும் உணர்ச்சி பூர்வமாகச் சொல்லப்பட்டுள்ளது. அதே சமயம் முசே கொடுதி வீட்டுக்கு அருகில் இருக்கப்பட்ட மசூதியை இடிக்கக் குவர்னர் சொன்னதற்கு, துலுக்கர் படைத் தலைவனும் மாயே(மாகி)க்காரனுமான அப்துல் ரகுமான் அதை ஆவேசத்தோடு எதிர்த்ததுடன், குவர்னரிடமே சென்று உறுதியுடனும் நெஞ்சுரத்துடனும் முழக்கமிட்டு, "மசூதியை இடிக்க வேண்டாம்!" என்று தன் உத்தரவைத் தானே குவர்னர் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு செய்ததும் அருமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.(வானம் வசப்படும், பக்.659-668) தவிர, அப்துல் ரகுமான் சாதித்ததை, "துலுக்கர்தமை, தமிழருக்கு வேறாகப் பிரித்துப் பேசியும் எழுதியும் இருக்கிற"(மேற்படி, ப.681-அடிக்குறிப்பு) ஆனந்தரங்கப்பிள்ளை சாதிக்க முடியாமல் மதாம் ழானுக்கும் குவர்னர் துய்ப்ளெக்ஸுக்கும் ஒத்துப்போன வயணமெல்லாம் அடுத்து வரும் பக்கங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.(ப.669+) தினமணி கதிரில் தொடர்ந்து வெளியான 'நேசம் மறக்கவில்லை நெஞ்சம்' நாவல், புதுச்சேரியில் விடுதலைக்குப் பின் நிலவி வருகின்ற சொல்தா வாழ்க்கையில், ஓர் எளிய பெண்ணைப் பிரஞ்சுக்குடியுரிமை பெற்ற இளைஞன் ஒருவன் மெய்யாகவே காதலித்த பின்பும் அவளுக்கு நிகழும் அவலத்தைக் காட்டுவது. இதைத் தொடராக வரும்பொழுது வாசித்தேன். தொடராக வரும்பொழுது நாவலொன்றை வாசிப்பதில் நினைவுத் தொடர்ச்சி சற்றேனும் அற்றுப் போகாமலிராது அல்லவா? புதுச்சேரி வாழ்க்கையை சமூக எதார்த்த நோக்கில் சித்திரிக்கும் நாவல்களைப் படைப்பதில் குறிப்பிடத் தக்கவர் பாவண்ணன் ஆவார். 1987இல் 'வாழ்க்கை ஒரு விசாரணை' நாவலில் புதுச்சேரி மண்ணின் மனிதர்களை அசலாக நடமாடவிட்ட திறம் மிக்கவர். நல்லவனாக இருந்தால் இந்த நாசகார சமூகத்தில் என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதைக் குடிகாரனாக இருந்தாலும் எவர் வம்புக்கும் போகாதவனும் மானமுள்ள உழைப்பாளியுமான காளியப்பன் என்ற கதைமாந்தன் மூலம் மட்டுமல்ல அவனைச் சார்ந்தவர்களைக் கொண்டும் சித்திரித்திருக்கிறார் பாவண்ணன். வடிவேலுத் தாத்தா, மங்காத்தா,ரங்கன், அருக்காணி, கண்ணம்மா போன்ற கதைமாந்தரும் இந்த நாவலின் எதார்த்தப் பாத்திரங்களே. வடிவேலுத் தாத்தா தன் சூழலின் நிகழ்வுகளையே கதைகளாக்கிச் சொல்லும் திறமையை இயல்பாகப் பெற்றவர். எவருக்கும் அஞ்சாதவருங்கூட. "நீ சொத்து சேரு. ஊடு கட்டு. ஆயிரம் பணக்காரனாக இரு. வேணாம்ல. அதிகார மசுரு இன்னா வாழுதுங்கறேன்?" என்ற அவரது கேள்வியில் விரிவாகச் சொல்ல முடியாத சமூக ஆதிக்க மனிதர்களின் வரலாறும் அவர்களின்முன் மானமுள்ளவன் வாழவேண்டிய திடமும் ஆகச் சுருக்கமாக மொழியப்பட்டு விடுகின்றன. பாவண்ணனின் முழுவீச்சிலான புதுச்சேரிச் சமூக விமரிசனச் சித்திரிப்பைச் 'சிதறல்கள்(1990)' நாவலில் காணமுடியும். சென்ற எண்பதுகளின் முதற்பாதியில் புதுச்சேரியின் முதன்மையான மூன்று ஆலைகள் மூடப்பட்டதனால் ஆலைத் தொழிலாளர் குடும்பங்கள் சிதறிப்போனதே அதன் கருப்பொருள். அந்தக் காலகட்டத்தில் அத்தகைய சிதறல்களைக் காணநேர்ந்த எங்களுக்கு, அந்த நாவல் மேலுமதிகமான சோகத்தை விளைவித்தது மறக்க முடியாத வேதனை. புதுச்சேரியில் பிரஞ்சியர் ஆலை தொடங்கிய வரலாறு இதில் வயணமாகச் சொல்லப்பெறுவதும் குறிப்பிடத் தக்கது. பாவண்ணனின் 'ஒரு மனிதரும் சில வருஷங்களும்(1989),' மனிதர் தம் சகமனிதர்களை நம்பிச் செயல்படுவதால் விளையும் தனிமனிதச் சோகத்தை நேரடியாக உணர்த்திக் காட்டியது. தங்கை கணவருக்குச் செய்யும் கடன் உதவியால் கடனாளியாகித் தானும் சிதைந்து தன் அன்பான குடும்பத்தையும் சிதைவுக்கு உள்ளாக்கும் ரங்கசாமி நாயக்கர் கடைசியில் ஊரைவிட்டே காணாதுபோய்விடும் அவலம் வாசிப்பவர் நெஞ்சத்தையும் சிதறடித்துவிடும். பாவண்ணன் படைத்த 'இது வாழ்க்கை அல்ல(1988)' என்ற நாவல், வெகு எளியதாக எங்கும் காணக் கூடியதும் குடும்பங்கள் பலவற்றில் நிகழ்வதுமான மாமியார் மருமகள் போராட்டத்தை மையமிட்டுச் சித்திரிப்பது. நாவலாசிரியனின் கதைசொல்லும் திறனின் உச்சத்தை அந்த நாவலில், சாதாரணமான கதைப்பின்னலைத் தெரிவு செய்துகொண்டதன் உத்தி மூலமே சாதித்துக் காட்டினார் பாவண்ணன். கேசவன் என்ற கதைப்பாத்திரம் தனது துணைவியிடமும் தாயாரிடமும் மாட்டிக் கொண்டு படும் உளைச்சல்கள் புதுச்சேரியில் மட்டுமே நிகழ்வதல்ல.. அல்லவா? ஆகக் கசப்பானதும் வறட்சியானதுமானதொரு பொல்லாத வாழ்க்கையை நிர்ப்பந்தமாகச் சுமக்க நேரும் புதுச்சேரி கிராம-நகர மக்களே பாவண்ணனின் படைப்புலகத்தில் உயிர்ப்பானவர்கள். புதுச்சேரி வரலாற்று நாவல்களில் தன் முன்னோடிகளைப் படைத்தவர்களாலும் வலையேட்டு(திண்ணை.காம்) வாசகர்களாலும் பின்னர் அச்சுநூல் வாசகர்களாலும் ஒப்ப ஒருமையுடன் தலையசைத்துப் பாராட்டப்பெறும் நாவல் 'நீலக்கடல்'(அச்சு வடிவம்: திசம்பர் 2005) ஆகும். திண்ணை இணைய இதழும் ஆசிரியர் குழுவும் அவர்கள் தந்த அணைப்பும் ஆதரவும் இந்த நாவலின் வெற்றிக்குப் பின்னால் உள்ள உருவாக்கத்தில் அகத்தியமான பங்கு வகிக்கின்றன.(ப.14) "ஒரு சரித்திர நாவல் போலத் தோன்றுகிறது இது. ஆனால் வரலாற்று நாவல் என அறிந்தவைகளிலிருந்து இது மாறுபட்டும் இருக்கிறது. சோழ பாண்டிய ராஜ்யங்களின் மகோன்னதங்கள், வைர முடிகள், வாள் சண்டைகள், இலக்கண ஒழுங்கு பிசகாத பழந்தமிழ் வசனங்கள், வாளிப்பான உடற்கட்டு கொண்ட இளவரசிகள், சண்டை போடுவது ஒன்றையே மூச்சாகவும், தொழிலாகவும் கொண்ட பலசாலி இளவரசர்கள், அவர்களை விடவும் பலசாலிகளான குதிரைகள், யானைகள், அரசியல் மற்றும் அந்தப்புர சூழ்ச்சிகள்(இவைகள் ஒன்றா அல்லது வேறுவேறா), ஒற்றர்கள், பைராகிகள் ஆகியன இதில் இல்லை. ஆனாலும் இது வரலாற்று நாவல்தான் ஒரு வகையில்" என்று சொல்லும் பிரபஞ்சன்('உண்மையும் இனிமையும் கூடிய வரலாற்று நாவல்': நீலக்கடல், ப.7), அடுத்து அந்த வரலாற்றுத் தளத்தைத் தெளிவாக விளக்கியிருக்கிறார். பதினெட்டாம் நூற்றாண்டின் பிரஞ்சிந்தியத் தமிழனின் வரலாறு, புதுச்சேரி வரலாறு, தமிழில் இதுவரை அறியப்படாத மொரீஷியஸ் வரலாறு என்ற மூன்று வரலாறுகளும் ஜீவநதிகளாய் இயங்கி 'நீலக்கட'லில் ஐக்கியமாகின்றன. பதினான்காம், பதினெட்டாம் நூற்றாண்டு, இருபத்தொன்றாம் நூற்றாண்டு என மூன்று நூற்றாண்டுகளைத் தன் கால அளவாக, உயிர்ப்பு வெளியாகக் கொண்டுள்ளது 'நீலக்கடல்.' பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியப் பெருங்கடலின் தொப்புளாகத் தெரியும் மொரீஷீயஸ் தீவில் நாவல் தொடங்குகிறது. பத்தாம் நூற்றாண்டில் அரபியர்கள் கண்டெடுத்து 'டினா அரோபி'(Dina Arobi) என்று வியந்து பெயரிட்டழைத்த நிலமுத்து. பின்னர் கி.பி.1500இல் 'அன்னத் தீவு' என்று போர்த்துகீசியர்களாலும் 1598இல் 'மொரீஸ்' என்று [தங்கள் இளவரசர் நினைவாக] டச்சுக்காரர்களும் 1715இல் 'பிரஞ்சுத் தீவு' என்று பிரஞ்சுக்கார்களாலும் பெயர்சூட்டு விழா நடத்தப்பட்ட தீவு. அதைப் பிரஞ்சுக்கார்களிடமிருந்து இந்திய வணிகம் நடத்தக் கி.பி.1810இல் கைப்பற்றிய ஆங்கிலேயர் மீண்டும் சூட்டிய பெயரே மொரீஷியஸ். ("பெயரில் என்ன இருக்கிறது!" என்று விதண்டாவாதம் பேசுபவர்கள் கவனிக்க வேண்டிய சேதி இது.) ஆம். "பெயர் சூட்டியதிலும், வளத்தை உறிஞ்சியதிலும் ஐரோப்பியருக்கு இருந்த அக்கறைகளின் வரலாறுகளைவிட அத்தீவுக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துத் தவழவிட்ட தமிழரின் உதிர இலக்கியம் உயர்ந்தது."(ப.13) அந்த மொரீஷியஸ் பூர்வ குடிகளான தமிழரின் வரலாற்றைக் கதைபோலச் சொல்வதே நாகரத்தினம் கிருஷ்ணாவின் முதல் நோக்கம். தெய்வானை, தமிழ்நாட்டில் நாயக்கர் வம்ச வாரிசாக இருந்தும், காமாட்சியம்மாளால் சீனுவாச நாயக்கர் துணையோடு மொரீஷியசுக்குத் தப்பி வருவதும், நாவலிறுதியில் அவர்களோடு தமிழ்நாட்டுக்கே திரும்புவதும் வரலாற்றுப் புனைகதை மட்டுமே. ஆனால் தேவயானி எனும் தெய்வானையைச் சுற்றி மொரீஷியசும் காஞ்சி மாநகரும் திருச்சிராப்பள்ளியும் சுழலுகின்றன. கச்சியப்பர் மகளாகப் பிறக்கிறாள், ஒரு பிறவியில். நாயக்க மாதேவி ஆகவேண்டியவளாகப் பிறந்து, இன்னொரு பிறவியில் தான் 'கருமாறி 'ப் பாய்வதற்குக் காரணமான(விவரம்:ப.29) பக்திக்குரிய காமாட்சி அம்மனின் அவதாரமேயொத்த காமாட்சியம்மாளால் கரைசேர்க்கப்பெறுகிறாள். தாந்திரிக நிலையில் "வனத்திலிருந்து கடுந்தவமியற்றுவதைவிட, இளம்பெண்ணின் கடிதடத்திலிருந்து பேரின்பத்திற்குப் போகும் வழியை உணரக்கூடிய நாயகன் நாயகி மார்க்கத்து யோகி"(ப.440)யாகவும், நாயக்க மன்னர்கால தளவாய் வெங்கடாச்சாரியாகவும், பிரஞ்சுத்தீவில் அருணாசலத் தம்பிரானாகவும் ஏககாலத்தில் இயங்கும் - கச்சியப்பர் மகளாகப் பிறந்து பால்ய விவாகத்தில் தெய்வானை கைப்பிடிக்க நேர்ந்த சொக்கேசன், எந்தப் பிறவியிலும் அவள் - தன் மனத்துக்குகந்த பெர்னார் ஃபோந்த்தேனைக் கைப்பிடிக்க விடாமல் (மாந்திரீக முறைகளில் பெர்னாரின் மனவியலும் வாழ்வியலும் கெடுத்து) பார்த்துக் கொள்கிறான். வானவன் பல்லவரையன் திருக்குமாரன், பார்த்திபேந்திர பல்லவரையனாக(ப.477) வெற்றிவேந்தனாக விளங்கியபொழுதும் போர்க்களத்தில் இறந்துபோய்ப் பருவுடல் அடிப்படையில் தேவயானியை(கச்சியப்ப சிவாச்சாரியார் மகளான தேவயானியை)ச் சேரமுடியாமல் பார்த்துக் கொள்வதுடன் 'கருமாறிப் பாய்வ'தான அவளின் பிரார்த்தனையையும் கொச்சைப்படுத்தி, காமாட்சியம்மன் கோயிலருகிலுள்ள சக்கரதீர்த்தத் தடாகத்தில் தலை குப்புறத் தள்ளி விடுகிறான். இப்படிப்பட்ட, வஞ்சகத்தால் மட்டுமல்ல - தாந்திரீக மாந்திரீக வல்லமைகளிலும் தலைசிறந்த எதிர்த் தலைவனை(Anti Hero) 'நீலக்கடல்' நாவலில்தான் பார்க்க முடிகிறது. சரி. 'நீலக்கட'லின் தொடக்கக் காட்சியைக் கொஞ்சம் பார்ப்போம். "சுற்றிலும் மலைத்தொடர்கள், அவற்றைத் தழுவி, பிரிவதற்கு மனமின்றி சுற்றிவரும் வெண்மையும் கருமையும் கலந்த மேகம்.. வடமேற்கில் கடல் - நீலக்கடல். கடல் நோக்கிக் காதலுடன் இறங்கிவரும் நிலம் - நெய்தல் நிலம், பெயர் போர் லூயி (Port Louis - லூயி துறைமுகம்). கடல் - தெய்வானை. காதலுடன் இறங்கிவரும் போர் லூயி நெய்தல் நிலம்தான் பெர்னார் குளோதன்.(பெர்னார் ஃபோந்தேனின் எள்ளுப் பாட்டன்.) பெண்மையும் கடலும் ஒன்றே என்ற உருவகநிலையில் - தெய்வானை தேவயானியாக, நீலக்கடல் எப்படி இந்த நாவலுக்கு முக்கியமோ அவ்வளவுக்கு பெர்னார் குளோதனுக்கு முப்பிறவிகளிலும் முக்கியமானவள். அங்கே தெய்வானை கடலை ஒட்டிக் காத்திருப்பதாகக் கதை தொடங்குகிறது. யாருக்காகக் காத்திருக்கிறாள்? பெர்னாருக்காக அல்ல; தனக்காக. அவனைத் தேடவில்லை. தன்னையே தேடிக் கொண்டிருக்கிறாள். "தனியொருவளாகத் தொப்புள் கொடியைக் கைகளிற் பற்றித் தேடிக்கொண்டிருக்கிறாள்."(பக்.31-32) தன் வேரினைத் தேடிக் களைத்துப் போனவள் அவள் மட்டுமா? காலையிலிருந்து மாலைவரை அடிமை வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு நொந்தலுத்துக் காளான்களென ..முளைத்துக் கிடக்கும் கபான்கள் எனப்படும் - மரப்பலகைகளால் உருவாக்கப்பட்டு கூரைகளில் இலை தழைகள் போட்டு மூடியிருந்த மனிதர்கள் என்று இன்னும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள நாள்தோறும் பின்மாலைக்குப்பின் அடுத்தநாள் வைகறை வரை தங்களுக்கு உதவிக்கொண்டிருந்த அவரவர் கூடுகளுக்குத் திரும்புபவர்களும் அப்படித்தான். "கடலை ஒட்டிய நெய்தல் நகரங்களான போர்(ட்) லூயி(ஸ்), புதுச்சேரி பற்றிய புதினமெனினும் காஞ்சீபுரமும் வருகின்றது. கடலுக்கும் காஞ்சிக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?"(ப.13) என்று கேட்டுக்கொண்டு அதற்கு ஓர் இருத்தலியல் விளக்கம் தருகிறார் நாவலாசிரியர். ஆனால் இதற்கு எளியதொரு நிலவியல் காரணம் உண்டு. புதுச்சேரி அமைவிடம்(location) பற்றிய "புதுச்சேரியின் கிழக்கில் வங்காள விரிகுடாவும், ஏனைய மூன்று திசைகளில் காஞ்சீபுரம் மாவட்டமும் அமைந்துள்ளது" என்ற நிலவரைவுக் குறிப்பே போதுமானது.(மத்திய ஆட்சிப்பகுதிகள் - 6: புதுச்சேரி. qu.in 'மனோரமா இயர்புக்') 'நீலக்கடல்' குறித்துப் பதிவொன்றை இங்கே செய்வது நலம். இந்த நாவலில் நேர் எழுத்தாகவும் இணை எழுத்தாகவும் மறைமெய்ம்மையியல்(mysticism) ஊடுபாவப்படுகிறது. இதே உணர்வை இன்னொருவர், அரசியல்வாதி, வேறுவகையில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் பெயர் மிகயில் செர்ரனோ(Miguel Serrano). 'உண்மையைத் தேடி உலகெங்கும் பயணம் செய்தவர்.' அரசியல் துறையில் இராஜதந்திரி. அரசியல் பணி தவிர்ந்த அனைத்துப் பொழுதுகளிலும் மறைமெய்ம்மையையே தேடி அலைந்தவர். இந்தியாவில், அவர் குமரி முதல் இமயம் வரை பயணம் செய்து பலதிறப்பட்ட சாதுக்களையும் யோகிகளையும் சந்தித்தார். புதுச்சேரி அரவிந்தாசிரமம், திருவண்னாமலை ரமணாசிரமம் உட்பட இமயமலையின் சித்தாசிரமம்(இதன் இருப்பையே இந்தியப் பகுத்தறிவு மன்றத்தினர் [I.R.A.] மறுப்பார்கள்) வரை சென்று பல்வேறு அனுபவங்களைப் பெற்று அவற்றை 'The Serpent Of Paradise' என்ற தன் நூலில் பதிவு செய்துள்ளார். ஜே.கிருஷ்ணமூர்த்தியை இங்கிலாந்தில் சந்தித்திருந்தபொழுதும் மீண்டும் இந்தியாவில் சந்தித்து அவரைப் பற்றிய தன் கோணத்தை ஆறு பக்கங்களில் பதிவு செய்திருக்கிறார். அதாவது, மறைமெய்ம்மை குறித்த தன் தேடலில், மறைமெய்ம்மையை முற்றாக ஒதுக்கித்தள்ளும் அவரையும் விட்டுவைக்காமல் ஆராய்ந்திருக்கிறார். நீட்ஷே, "சொர்க்கத்தை எட்டி உயரும் மரமொன்றுக்கு, நரகத்தை நோக்கித் தாழும் வேர்கள் இருக்கத்தானே வேண்டும்?" என்று வாதிட்டதைத் தன் பதிவுக்குத் தோரண வாயிலாகக் கட்டியவர். 'தாந்திரிக மைதுனம்' என்ற சடங்கைப் பற்றி(Chapter 15: THE SEARCH: The City of the Eternal Wedding, pp.91-92) அவர் செய்துள்ள பதிவுக்கு எதிர்மறையாக உள்ளது - 'நீலக்கட'லில் அலை - 46இல் இடம்பெறும் சொக்கேசனின் விரிவான விளக்கம். தன்னைத் தாந்திரீகவாதி என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் அவன், உண்மையில் தாந்திரீகத்துக்குப் பகைவனாக இருக்கிறான். " The Tantric is forbidden to practice love passionately or compulsively. This is a rule permitted only to the woman, since she is the active participant and because she represents the feminine aspect of the universe and the creative side of Siva himself. She is Shakti or Kundalini"(op.cit.p.91) என்பது செர்ரனோவின் பதிவு. வியக்கத்தக்க மற்றுமொரு பதிவு வேறுபாடு நாகரத்தினம் கிருஷ்ணாவுக்கும் மிகயில் செர்ரனோவுக்கும் உள்ளது. 'நீலக்கட'லின் பக்கம் 23இல் வரும் இரண்யலோகத்துப் பெண்ணின் நுண்-பருவுடல் எழுத்தோவியமும் 'சொர்க்கத்தின் சர்ப்ப'த்தின் பக்கம் 120-121இல் இடம்பெறும் (கஜுராஹோ அருகிலுள்ள கடலில் தான் நீந்தும்பொழுது செர்ரனோ சந்திக்கும்) சிறுத்தைக் கண்ணியின் நுண்-பருவுடல் எழுத்தோவியமும் ஒன்றே போல் உள்ளன. 'நீலக்கட'லில் அமானுஷ்யமானதாக வருவது, 'சொர்க்கத்தின் சர்ப்பத்'தில் புலனுணர்வாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்செயலாகத்தான் இந்த இருவேறு பதிவு ஒற்றுமை வேற்றுமைகள் நிகழ்ந்திருக்கக் கூடும். மிகயில் செர்ரனோவும், ஆங்கிலத்தில் அவர் புத்தகத்தை மொழிபெயர்த்த ஃப்ரேங்க் மக் ஷேனும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. 'நீலக்கடல்' நாவல் கதைப்பின்னலின் மையக்கற்றையின் நிறைவுறுத்தலை(காரைக்கால் வெடிமருந்துக் கிடங்கு விபத்து) ஆனந்தரங்கப் பிள்ளை சொஸ்தலிகித தினப்படி சேதிகுறிப்பைக் கொண்டே நாகரத்தினம் கிருஷ்ணா முடித்திருப்பது மறுக்க முடியாத ஆதாரமாக உள்ளது. பெர்னார் குளோதன் வடிவை எடுத்துக் கொண்டு இப்பொழுது சொக்கேசன் வருகிறான். அடுத்தபடியே பெர்னார் குளோதனும் வந்து விடுகிறான். அவன் குரலைக் கேட்டதும், தன்னிடம் வந்தவன் அந்நியன் என்பதான தெய்வானையின் முன்னுணர்வு சரியென்று ஆகிவிடுகிறது. ஆனால் அப்பொழுதும் முன்புபோல் அசுரமிருகமே, அந்நியமே வென்றிருக்கிறது. கொடும் வெடிவிபத்தில் "பின்னையும் .. வெள்ளைக்காரரும் தமிழரும் சேதமுண்டு... மற்றபடி பூரண ஆயுசாயிருந்தபேரெல்லாரும் தப்பினார்கள்" என்பதான ஆனந்தரங்கப் பிள்ளையின் குறிப்பு, மறைமுகமாக பெர்னார் குளோதன் - தெய்வானையின் மொரீஷியஸ் காதல் வளர்ச்சி காரைக்காலில் தோற்றொழிந்ததைக் காட்டுகிறது. ஆனாலும், பெர்னார் ஃபோந்த்தென் தன் நிகழ்பிறவியில் - தன் எள்ளுப்பாட்டன்(பெர்னார் குளோதன்) பிறவியை - வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக உருப்பெறும் கச்சியப்ப சிவாச்சாரியார் நினைவுஇல்லம் ஆகிய 'காஞ்சி மனை'யில், அதன் நிர்வாகி'யாக நிகழ்பிறவியெடுத்திருக்கும் தேவயானி என்ற தெய்வானையைச் சந்திப்பதன் மூலம் தொடர்வதான குறிப்புடன் நாவலின் கதை முடிகிறது. பின்தொடரும் 'அடங்கல்' - மொரீஷியசில் 2002, ஜனவரி 21ஆம் நாள் பின்னிரவில் உருவான 'தினா' புயலினால் விளந்த பலவகையான சேதங்களைப் பட்டியலிடுகிறது. 'உயிர்ச்சேதம்' பற்றிய குறிப்பில் பிரான்சு நாட்டின் லியோன் நகரைச் சார்ந்த சுற்றுலாப் பயணி டானியல்(30வயது), மொரீஷியஸ் பாம்ப்ளிமூஸ் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பு மொதிலி மகள் சின்னத்தம்பு தேவானை(23 வயது) இருவரும் குறிப்பிடப் பெறுவது மறைமெய்ம்மையை நாவலுக்குப் புறத்திலும் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறது. தொடர்ந்து வரும் பகுதியில்(இறுவாய்) நாவலாசிரியர் நம்முன் வந்து காலதத்துவத்தை எடுத்துரைக்கிறார்.(பக்.518-520) "பிறப்பென்று ஒன்றிருந்தால் இறப்பு இல்லாமலா? பார்த்திபேந்திரனோ, தேவயானியோ, பெர்னார் குளோதனோ, தெய்வானையோ, நீங்களோ நானோ சந்தித்தே ஆகவேண்டியிருக்கிறது"(ப.519) என்ற வரிசையில் பெர்னார் ஃபோந்தெனையும் தேவயானியையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான். ஒரு சுற்று முற்றுப்பெற்றுவிடும். இந்த நாவலில் இழைந்தோடும் இணைத்தந்திக்கம்பி - கனவுகளைக் குறித்த தீவிரமான தேடல்.. பெர்னாரின் 'பட்டபின்பும் துளிர்ப்பதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளும் முயற்சி''யை வேலு கொச்சைப்படுத்திய பொழுது, தன் நாட்டினரான பிரெஞ்சினர் முன்பெல்லாம் தீவிரமாக ஈடுபட்டார்களே அந்த மண்தேடும் முயற்சியல்ல தன் முயற்சி.. பிரெஞ்சுக்காரனாகப் பிறந்தும் மண்ணில் தன் வேர்தேடும் முயற்சி என்று பெர்னார் ஃபோந்த்தேன், நண்பன் வேலுவிடம் சொல்கிறான். இந்தியத் தமிழனான பொழுதும் தன் மரபுவழிப்பட்ட ஆய்வுகளை அறவே மதிக்காத வேலுவிடம் - சிக்மண்ட் பிராய்டு, கார்ல் குஸ்தாவ் யுங், மிஷல் ழூவே, அனாதோல், தெபேஃப் போன்ற உளவியல் அறிஞர்கள் கனவுகளைப் பற்றிக் கூறியவற்றையெல்லாம் மொழிந்து அவையெல்லாம் யூகங்களே, உண்மைகள் இந்திய நாட்டில்தான் பேணப்பெற்று வருகின்றன, அவற்றைத் தேடும் அக்கறை தனக்குண்டு என்று தெளிவாகத் தெரிவித்து விடுகிறான். (பக் 107-108) நாவலின் கடைசிப் பத்தி, வேதாந்தமும் ஜே.கிருஷ்ணமூர்த்தியும் இயற்கை ஈடுபாட்டாளர்களும் எதார்த்த நிகழ்வுகளுக்குக் காரணம் காட்டுவது போன்ற தொனியில் உள்ளது. "நீங்களோ நானோ உறவு பாராட்டுவது எதற்காகவென்று அறிவோம். உறவையும் நட்பையும் நாம் கொண்டாடுவது, பரஸ்பர சுயநலங்களின் தேவைக்காக"(ப.519) என்பது ஒரு சான்று. உலகம் இயங்குவது தத்துவங்களால் அல்ல. செயல்பாடுகளால். பறவை, தன் சுயதேவைக்காகத்தான் எச்சமிடுகிறது. அதில் ஒரு விதை, தக்க சூழல் கிடைத்ததும் மரமாக முளைத்து வளர்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொருவரும் இயல்பாகத் தம் நலம் விழைந்து வாழ்ந்தாலே போதும். சொக்கேசன்கள் உருவாகவே முடியாது. அப்படிப் பார்த்தால் "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!" என்ற பிரார்த்தனையும் சுயநலத் தேவையே. அப்பொழுதுதான் அவ்வாறு வேண்டுபவரும் நலமாக வாழ முடியும் அல்லவா?" அறிஞர் இ.ஜி.கரனின் (E.G. Garan) 'உளவியலுக்கான சார்பியல்' (Relativity for Psychology) என்ற உளவியல்-மெய்ப்பொருள் ஆய்வை நாவலாக மாற்றி அனைவரையும் படிக்க வைத்தவர் ஜான் இர்விங். 'The World According To Garp' என்பது அந்த நாவலின் தலைப்பு. நாகரத்தினம் கிருஷ்ணா, தன் கடும் உழைப்பினாலான நாவலிறுதியில், மனிதநேயம்-செயல்பாடு ஆகியவற்றுக்கு முரணானவும் நம்மைச் செயலற்றவர்களாக(inert) ஆக்கிவிடக் கூடியனவுமாகிய தத்துவங்களை உயர்த்திப்பிடிப்பது திகைப்பையே தருகிறது. மெய்யாக நாம் இயற்கையை மதிக்க வேண்டும் என்றால் எந்த ஒன்றையும் தத்துவார்த்தப்படுத்தாமல் பணிசெய்து கொண்டே போவதுதான் சரி. "தன்கடன் அடியேனையும் தாங்குதல்/ என்கடன் பணி செய்து கிடப்பதே." இதில் 'தன்' என்பது ஏன் இயற்கையாக இருக்கக் கூடாது? இயற்கை, வாழ்க்கை, பால், ஊழ், முறை, தெய்வம் முதலிய சொற்கள் எல்லாமும் ஒருபொருள் பலபெயர்களாகத்தானே நம் மரபிலக்கணமும் ஏற்கிறது... 'நீலக்கடல்' நாவலின் இறுதி வரியாக நாகரத்தினம் கிருஷ்ணாவே தரும், 'தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்ற கணியன் பூங்குன்றன் பாட்டு(புறநானூறு 192) சொல்வது என்ன? "எமக்கு எல்லாம் ஊர்; எல்லாரும் சுற்றத்தார்; கேடும் ஆக்கமும் தாமே வரின் அல்லது, பிறர் தர வாரா; நோதலும் அது தீர்தலும் அவற்றை ஒப்பத் தாமே வருவன; சாதலும் புதியதன்று; கருவில் தோன்றிய நாளே தொடங்கியுள்ளது; வாழ்தலை இனிது என்று உவந்ததும் இலம்; ஒரு வெறுப்பு வந்த இடத்து இன்னாது என்று இருத்தலும் இலம்; மின்னுடனே மழை குளிர்ந்த துளியைப் பெய்தலால் அமையாது, கல்லை அலைத்து ஒலிக்கும் வளவிய பேர்யாற்று நீரின் வழியே போம் மிதவை(தெப்பம்) போல அரிய உயிர் ஊழின் வழியே படும் என்பது நன்மைக்கூறுபாடு அறிவோர் கூறிய நூலாலே தெளிந்தேம் ஆகலான், நன்மையின் மிக்கவரை மதித்தலும் இலேம்; சிறியோரைப் பழித்தல் அம் மதித்தலினும் இலேம்"(டாக்டர் உ.வே.சாமி நாதையர் பதித்த பழைய உரை, ப.348) என்பதுதானே தமிழரின் தலையாய மெய்யுணர்வு? இல்லையெனில், வள்ளுவர் இரண்டு குறள்களாக மெய்ப்பொருள் குறித்து ஆக்கியிருப்பாரா? எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் (குறள் 355) எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்(குறள் 423) மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று அவர் எழுதியதை அறத்துப்பாலுக்கு (மெய்யுணர்தல்) முதலாவதும் பொருட்பாலுக்கு அடுத்ததுமாக(அறிவுடைமை) பால்வேறு அதிகாரம்வேறு என்று பிரித்தது பரிமேலழகரின் 'சாமர்த்தியம்.' எத்தன்மைத்து ஆயினும் என்பது அறிவியல்(science) யார்யார்வாய்க் கேட்பினும் என்பது உலகியல் என்று மு.வ. ஒருமுறை புதுச்சேரிக்கு (அனைத்திந்திய கல்லூரித் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கில் பங்கேற்க) வந்தபொழுது தெளிவாகச் சொன்னார். 'நீலக்கட'லின் ஆசிரியர் இரு நடைகளில் கதை சொல்லிப் போகிறார்: 1.புதுச்சேரியின் பதினெட்டாம் நூற்றாண்டுப் பேச்சு நடை. ஆனந்தரங்கப் பிள்ளையின் 'சொஸ்த லிகித'மான 'தினசரிப்படி சேதிக் குறிப்'பில் காணக்கிடைக்கும் நடை. 2. ஆசிரியரின் சொந்த மொழிநடை. சில பக்கங்களில் சட்டென்று இவ்விரு நடைகளும் தடம் மாறுவதை இரசித்து வாசிக்க இயல்கிறது. இந்த நடைவேற்றுமை இந்த நாவலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதைத்தான் புதுவைக் கலைமகள் திங்களிதளில் 1917ஆம் ஆண்டு ரா.வாசுதேவன் 'Narrative' என்பதை மனத்துள் கொண்டு 'நவிலல்' என்று பயன்படுத்தி இருக்கிறார். ரா.வாசுதேவன்(1917) கருத்துப்படி ஆசிரியரின் நவிலலே(narration) நாவலை உயர்த்திப் பிடிக்கிறது. கதை, கதைப்பின்னல்(plot) எல்லாம் அடுத்தபடிக்குத்தான். 'நீலக்கட'லின் கதையை அப்படியே எடுத்துக்கொண்டு இன்னொருவர் நாவல் புனைந்தால் "இந்தப்படிக்குப் படித்துப்போட" முடியாது. இலத்தீன் இலக்கியக் கலைச்சொல்லான purpureus...pannus என்பதற்கு விளக்கமான நடை நாகரத்தினம் கிருஷ்ணாவின் (மேலே நான் குறிப்பிட்டுள்ள) நடை. இந்தக் கலைச்சொல், கி.மு. முதல் நூற்றாண்டில் ஹொரேஸால் இயற்றப்பெற்ற 'Ars Poetica' என்ற செய்யுள் இலக்கியக் கலைநூலில் இடம் பெற்றது. இதன் ஆங்கில மொழியாக்கம் 'Purple Patch' என்பது. "It signifies a marked heightening of style in rhythm, diction, repetitions, and figurative language that makes a passage of verse or prose -- especially a descriptive passage -- stand out from its context"(M.H.Abrams 1971) என்ற அதன் விளக்கத்தைப் பார்த்தால் எந்த அளவு ஹொரேஸின்(1st Century BC) கலைச்சொல், நாகரத்தினம் கிருஷ்ணாவின் நடைக்குப் பொருத்தமாக இருக்கிறது எப்படி என்று 'நீலக்கட'லை ஆழ்ந்து வாசித்தவர்கள் வியப்பார்கள். 'நீலக்கட'லின் இயல்களின் முடிவில் அடிக்குறிப்புப் போல் "நண்பனே!" என்று தொடங்கித் தொடர்ந்துவரும் நுண்ணுடல்-பருவுடல்கள் தமக்குள் மாற்றமாடும் உரையாடல்கள் புதுமையாகவும், அதேபொழுது, சிவஞானபோதம்-சிவஞானசித்தியார் சுபக்கம் பரபக்கங்கள் புலப்படுத்தும் சிவனிய மெய்ப்பொருள் நிரம்பியதாகவும் உள்ளது. ஒவ்வோர் இயலின் தொடக்கத்திலும், இடையில் - கதைமாந்தர் கூற்றுகளாகவும் மரபுரீதியான உலக ஞானிகள்-பிரெஞ்சுச் சிந்தனையாளர்கள்-ஆட்சியாளர்கள்-மறைமெய்ம்மையாளர்கள்-தமிழ்ச் சித்தர்கள்-சங்கப் புலவர்கள்-பக்தியுகப் பாவலர்கள்-மெய்ஞ்ஞானிகளின் மேற்கோள்களும், ஏற்றப் பாட்டுகள் - கப்பற் பாட்டுகளின் பகுதிகளும் பொருத்தப்பாட்டுடன் தரப்பெற்றுள்ளன. முழுதும் பிரெஞ்சிலேயே தரப்பட்டுள்ள மேற்கோள்கள் திண்ணை.காம் வலையேட்டில் வருகையில் புலம்பெயர்ந்த தமிழர்களில் பிரெஞ்சு மொழி அறிந்தவர்கள் புரிந்து கொண்டு இயலில் வரும் கதைநிகழ்ச்சிப் போக்குடன் பொருத்திப் பார்த்து உள்வாங்கிக் கொள்ளல் இயலும். ஆனால் அச்சுவடிவில் அவ்வாறு வரும்பொழுது, புதுச்சேரி முதலான பிரெஞ்சுமொழி கற்பிக்கப்படும் இடங்களில் உள்ள இளைய தலைமுறை புரிந்து கொள்ளாது. புதுச்சேரிக்கடுத்து அதிகம் பிரஞ்சு மொழி பயிலப்படும் இடம் கோயம்புத்தூர். கொங்குத் தமிழ் போல கொங்குப் பிரஞ்சும், புதுவைத் தமிழ் போலப் புதுவைப் பிரஞ்சும் நடைமுறையில் உள்ளது என்பதை எத்தனைப்பேர் அறிந்திருப்பார்கள்! கோவையில் இளைய தலைமுறை மிகுதியும் பிரஞ்செடுத்துப் படிப்பதன் காரணம் மிக அதிகமாக மதிப்பெண் பெறுவதற்கே.("ஏனுங்கண்ணா, இந்தத் தமிழ் வாத்தியானுங்க ஏனுங்கண்ணா அவங்கவங்க ஜேப்பியிலிருந்து எடுத்துக் காசு குடுக்குறமாதிரி அளந்தளந்து மார்க்கு போடறாங்க?").. "மிசியே! போன்சூருங்க!" என்பது கொங்குப் பிரஞ்சுக்கும்; "முசியே ஆறுமுகம் இப்ப ரெப்போசேரிட்டுக்கினு'ருப்பார், இப்ப போயி இம்சைபண்ணிக்கினு'ருக்காதே.. இன்னா! கண்டுபுடிச்சிக்கினியா?" (காரைக்காலில் "என்ன புள்ளா!"வும் சேரும்) என்பது புதுவைப் பிரஞ்சுக்கும் சான்று. பிரஞ்சையும் ஆங்கிலம் போலப் புழக்கத்திலிருந்தும் கல்வித் திட்டத்திலிருந்தும் நீக்கிவிடவே புதுவையிலுள்ள தமிழியக்கங்கள் முயன்று வருகின்றன. அதனால், மக்கள் தொலைக்காட்சியை "தமிழ் மக்கள் அனைவரும் பார்க்கவேண்டிய தொலைக்காட்சி - மக்கள் தொலைக்காட்சி!" என்றும் தமிழோசையை "நாங்க படிச்சாச்சு..நீங்க..?" என்று விளம்பரங்கள் வருவது மட்டுமல்லாமல் புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்தவர்களிடம் மட்டுமல்லாமல் மற்றவர்களிடமும் ஆங்கிலத்தையும் பிரஞ்சையும் தவிர்க்கும் ஊடகங்கள் செல்வாக்குப் பெற்று வருகின்றன. அசல் பிரஞ்சுக்கார்கள் அழகாகத் தமிழ் பேசுவதை அங்காடிகளில் கடை வைத்திருப்போரும் உணவகங்களில் பணியாற்றுவோரும் உணர்ந்திருக்கிறார்கள். பிரான்சிலிருந்து ஒவ்வோராண்டும் விடுமுறையில் வந்து பொது இடங்களில் இலவசமாகக் காட்சிப் பொருள்களாகும் புதுச்சேரித் தமிழர்கள் பலர்(சிலர் விதிவிலக்குகள்)- குறிப்பாகப் பெண்கள் தெருக்களின் பிளாட்பாரங்களில் தங்களுக்குத் தெரிந்தவர்களைப் பார்க்கும்பொழுது கடைப்பிடிக்கும் பிரஞ்சுப் பண்பாட்டுக்கே உரிய பழக்க வழக்கங்களும் ஒவ்வொரு கடையாக ஏறிப் பண்ணும் சேட்டைகளும் பேசும் பிரஞ்சும் எல்லோரும் கிண்டலடிக்கும் பொருள்களாகி விட்டன. அண்மையில் என் (பிரஞ்சுப்பேராசிரிய நண்பரிடம்) லெபெனானிலிருந்து இங்கு சில மாதங்களே தங்கவந்த அம்மையார் ஒருவர் (பிரஞ்சு வழியாக) மிகுந்த ஈடுபாட்டுடன் தமிழ் கற்றுக்கொண்டதும் வேலையாட்கள் முதலான பலரிடமும் தமிழே பேசிச் சென்றதும் இதற்குச் சான்று. உதவிய நூல்கள்(அகர வரிசைப்படி): *ஆலாலசுந்தரம், இர. ஆனந்தரங்கப் பிள்ளை காலத் தமிழகம் (1736 - 61). GRS பதிப்பகம், 11, இரண்டாவது தெரு, கைலாஸ் நகர், லாஸ்பேட்டை, புதுச்சேரி - 605 008. முதற் பதிப்பு. ஆகஸ்ட் 1999. கிருஷ்ணா, நாகரத்தினம், நீலக்கடல், சந்தியா பதிப்பகம், ஃப்ளாட் ஏ, நியூடெக் வைபவ், 57 - 53ஆவது தெரு, அசோக் நகர், சென்னை - 600 083. முதற் பதிப்பு. 2005. சண்முகசுந்தரம், முனைவர் சு., தமிழில் வட்டார நாவல்கள். காவ்யா, 16, 17ஆவது 'E' குறுக்கு, இந்திரா நகர், பெங்களூர் - 560 038. முதற் பதிப்பு. 1991. சாமிநாதையர், டாக்டர் உ.வே., புறநானூறு மூலமும் பழைய உரையும். டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், திருவான்மியூர், சென்னை - 600 041. ஏழாம் பதிப்பு. 1971. சுந்தரராஜன்(சிட்டி), பெ.கோ., சிவபாதசுந்தரம், சோ., தமிழ் நூறாண்டு வரலாறும்,வளர்ச்சியும், கிறிஸ்தவ இலக்கிய சங்கம். முதற் பதிப்பு. 1977. தில்லைவனம், முனைவர் சு., தமிழகம்-புதுவை வரலாறும் பண்பாடும், சிவசக்திப் பதிப்பகம், 4, பாண்டியன் வீதி, சாந்தி நகர், இலாசுப்பேட்டை, புதுச்சேரி - 605 008. முதற் பதிப்பு 15-06-2004. விற்பனை உரிமை: நன்மொழிப் பதிப்பகம், 41, கங்கை வீதி, வசந்த் நகர், புதுச்சேரி - 605 008. பிரபஞ்சன், மானுடம் வெல்லும், கவிதா பப்ளிகேஷன், த.பெ. எண்:6123, 8, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டிபஜார் சென்னை - 600 017. இரண்டாம் பதிப்பு. 1995. (முதற் பதிப்பு 1990) பிரபஞ்சன், வானம் வசப்படும், கவிதா பப்ளிகேஷன், சென்னை - 600 017. மூன்றாம் பதிப்பு. 1999. (முதற் பதிப்பு 1993) பிரபஞ்சன், நேசம் மறக்கவில்லை நெஞ்சம். தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது. Abrams, M.H., A Glossary of Literary Terms, Seventh Edition 2001. Harcourt India Pvt. Ltd. New Delhi. First Published by Harcourt, Inc. 1999. Serrano, Miguel., The Serpent Of Paradise(The Story of an Indian Pilgrimage), Translated by Prank MacShane. Bell Books - Vikas Publishing house Pvt Ltd., Delhi 110006. 5 Daryaganj, Ansari Road,1975. First published in 1974 by Routledge and Kegan Paul Ltd.,London. நன்றி: 'நீலக்கடல்' நாவலை என் மறுவாசிப்புக்கும் உரத்த வாசிப்புக்கும் உட்படுத்திய புதுச்சேரி எழுத்தாளர் ப.ரா.கலாவதிக்கு. **** நன்றி: திண்ணை.காம்

2.6.07

மொழிபெயர்ப்பும் நிகழ்நிலையில் நாம் கடக்க வேண்டிய தடைச்சுவர்களும்

மொழிபெயர்ப்பும் நிகழ்நிலையில் நாம் கடக்க வேண்டிய தடைச்சுவர்களும் - தேவமைந்தன் மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பஞ்சமில்லை என்கிறார்கள். "ஒரு கணிப்பொறி, அதற்கு மின்னஞ்சல் இணைப்பு, இவை இருந்தால் போதும், வீட்டிலேயே உங்களுக்குத் தொழில்!" என்ற விளம்பரத்தைப் 'பதிப்புத் தொழில் உலகம்' என்ற திங்களிதழில் மூன்று மாதங்களுக்கு முன் பார்த்ததிலிருந்து மொழிபெயர்ப்புத் தொடர்பான கேள்விகள் பற்பல, உள்ளத்தில் எழலாயின. சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்துக்கு தோராயமாக 750 பேர், வீட்டிலிருந்தவாறே மொழிபெயர்த்து அனுப்புகிறார்களாம். ஆங்கிலப் புலமை, தமிழில் புலமை, தமிழில் எழுதும் ஆற்றல் ஆகியவை இந்த வேலைக்கு அடிப்படைகள் என்றும் இதனால் மாதந்தோறும் எட்டாயிரம் ரூபாய் வரையில் வருவாய் பெற முடியும் என்றும் மேலதிகமான செய்தி சொல்லுகிறது. தொடர்ந்து, " தமிழரின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்புப் பணி உடனடித் தேவை. ஆங்கிலத்திலிருந்து மட்டுமல்ல, உலக மொழிகள் பலவற்றிலிருந்து தமிழுக்கு நேரடியாக மொழிபெயர்க்கும் ஆற்றல் பெற்றவர்கள் தமிழருள் பெருகினால், தமிழரின் வாழ்வு சிறக்கும். தாய்மொழியிலேயே யாவையும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புப் பெருகும். தமிழ்ப் பதிப்பாளர் பலர் மொழிபெயர்ப்பாளரைத் தேடுகின்றனர்" என்றும் அச்செய்தி சொன்னது. "மராத்தி மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பவர் தேவைப்படுகிறார். தெரிந்தால் சொல்லுங்கள். வருமானம் உண்டு" என்று மேற்செய்தியை நான் வாசித்த சில நாள்களில் என்னிடம் இளம்பாரதி தெரிவித்தார். எழுபத்திரண்டு வயதுக்கு மேலாகும் நண்பர் இளம்பாரதி இப்பொழுது புதுச்சேரியில் இருக்கிறார். சாகித்திய அகாதெமிக்காக ஆனந்தரங்கம் பிள்ளை அவர்களின் நாட்குறிப்பு மடலங்களை இந்தியில் மொழிபெயர்த்து வருகிறார். அந்த நாட்குறிப்பில் இடம் பெற்றுள்ள பல பிரஞ்சுச் சொற்களையும் அவற்றுக்குரிய பொருளையும் நண்பர்களிடம் கவனமாகக் கேட்டுக் கொள்கிறார். பிரஞ்சு ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியையும் புதுவை மொழியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணையையும் இது தொடர்பாகப் பெற்றுக் கொள்கிறார். ஏன் இதை இங்கு சொல்கிறேன் என்றால் வேற்று மொழியிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து வேற்று மொழிக்கும் மொழிபெயர்க்கும் போது 'நேரடியாக மொழிபெயர்க்கும் ஆற்றல்' மட்டுமே போதாது; அணிசேர்ந்து பணியாற்றவும் (team work) வேண்டியிருக்கிறது என்பதை வெளிப்படுத்தத்தான். எந்திரத்தனமாக மொழிபெயர்ப்பவர்களையே பெரிய நிறுவனங்களும் (foundations)விரும்புகின்றன. சொன்ன நாள்களுக்குள் மொழிபெயர்த்துத் தந்துவிட வேண்டும். அவர்கள் 'அங்கீகரிக்கப் படுவார்கள்.' உயிரோட்டம் உள்ள ஒரு மொழிபெயர்ப்பை ஒருமுறை பார்த்தேன். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் 'Freedom from the Known' என்ற அருமையான சிந்தனை நூலை ராஜம் என்பவர் மொழிபெயர்த்திருந்தார். 'ஓரியண்ட் லாங்மேன்ஸ்' வெளியிட்ட ஒரே தமிழ் வெளியீடு என்றும் சொன்னார்கள். ஆங்கிலப் புத்தகத்தை அருகில் வைத்துக் கொண்டு தமிழாக்கத்தை வாசித்தேன். திகைத்துப் போனேன். மொழிபெயர்ப்பாளரான ராஜம் அவர்களை எனக்குத் தெரியாது. அப்பொழுது கேள்விப்பட்டதே இல்லை. எனக்குத் தெரிந்த ராஜம் அவர்கள், மிகவும் மலிவாக ஒரு ரூபாய், ஒன்றேகால் ரூபாய் விலைக்கு மிகவும் நேர்த்தியான அச்சில் நல்ல தாளில் சங்க இலக்கியம் முதற்கொண்டுள்ள தமிழிலக்கியங்களைத் 'தமிழ்கூறு நல்லுல'குக்கு வழங்கியவர். மொழிபெயர்ப்பாளர் ராஜம் அவர்தானா? அதைப் போன்ற உயிரோட்டமுள்ள மொழியாக்கங்களைத் தங்கப்பா (திண்ணையில் இவர் மொழியாக்கங்கள் குறித்து விரிவாக ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்) இளம்பாரதி, மதனகல்யாணி, பாவண்ணன், ஸ்ரீராம் முதலான மிகச் சிலரிடமே பார்க்க முடிகிறது. காரணம், இவர்கள் மொழிபெயர்ப்பைப் பணியாகவும் தவமாகவும் செய்கிறார்கள். 'மய்யழிக் கரையோரம்', 'இந்துலேகா,' 'உம்மாச்சு,' கயிறு' முதலான எட்டு மலையாள மொழியாக்கங்களும் 'கௌசல்யா,' படிப்பு,' அனல் காற்று,' முதலான ஆறு தெலுங்கு மொழியாக்கங்களும்' 'சிமெண்ட் மனிதர்கள்' முதலான கன்னட மொழியாக்கங்களும் 'உலகை மாற்றிய புதுப்புனைவுகள்' முதலான நான்கு ஆங்கில மொழியாக்கங்களும் இளம்பாரதியின் பணிகள். 'வலசை போகிறேன்' என்ற அண்மை மொழியாக்கத் தொகுப்பில் முதல் பகுதியில் சல்லாராதாகிருஷ்ண சர்மாவின் முப்பது தெலுங்குக் கவிதைகளும் அடுத்த பகுதியில் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உள்ள ஆருத்ர, புலிகண்ட்டி கிருஷ்ணா ரெட்டி, அனிசெட்டி சுப்பாராவ், வரவர ராவ்(தெலுங்கு), அம்ருதா ப்ரீதம், அமரேந்த்ர நாராயண், ராமாவதார் தியாகி(இந்தி), பிரகாச ஹலகேரி, சி.பி.கே.(கன்னடம்), சுகதகுமாரி(மலையாளம்), சர் டி. வியாட்(ஆங்கிலம்) ஆகியோர் கவிதைகளும் நேரடியாக அந்த அந்த மொழிகளிலிருந்து இளம்பாரதியால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. கிரீஷ் கார்னாடின் 'நாகமண்டலம்' நாட்டார் கதையின் நாடக வடிவம். இதை நேரடியாகக் கன்னடத்திலிருந்து பாவண்ணன் தமிழாக்கம் செய்துள்ளார். அருமையான மொழியாக்கம். இதைப் புரிந்து கொள்ள கன்னட மொழிவாணரான நண்பர் உதவினார். இதே போன்ற நாடகங்களான 'பலிபீடம்' என்ற வரலாற்று நாடக மொழியாக்கத்தையும் 'அக்னியும் மழையும்' என்ற தொன்மக் கதை நாடக மொழியாக்கத்தையும் ஒப்பிட்டு வாசிக்க இன்னும் வாய்க்கவில்லை. இப்படி ஒப்பிட்டு மொழியாக்கங்களை வாசிப்பது பெரும் மனநிறைவு தரும். எனக்கு இளம் வயது முதலே இது தொடர்பாக உதவும் நண்பர்கள் உள்ளார்கள்; அதனால் நானே முயன்று பல மொழிகளை முழுமையாக உள்வாங்கிக் கொள்வது தடைப்பட்டது. தகழியின் 'கயறு' புதினத்தின் சுருக்க வடிவத்தையே இளம்பாரதி தமிழாக்கினார். இருந்தாலும் அதையும் முகுந்தனின் 'மய்யழிக் கரையோரம்' நாவலையும் (முழுமையான மொழியாக்கம்) ஒப்பிட்டு வாசித்த பொழுது சொல்ல முடியாத புரிதல் உணர்வு ஏற்பட்டது. 'வேண்டாத வேலை' என்று இதை எனக்கு வேண்டியவர்கள் சொன்ன பொழுது, "நீங்கள் தொ.கா. தொடர்களாகப் பார்த்துத் தீரவில்லையா?" என்று கேட்டிருக்கலாம்தான். வலை ஏடுகளில் அத்தகைய மொழிபெயர்ப்புத் தவத்திலும் பணியிலும் முழுமூச்சாக ஈடுபட்டிருப்பது திண்ணை.காம் இணைய இதழேயாகும். புதுப்புனைவுகள் மட்டுமல்லாமல் ஆழமான சொந்தச் சிந்தனைகளையும் சமூகத்துக்குக் கொடையளிக்கும் அறிவியல் மேதைகளையும் அவர்களின் ஆக்கங்களைக் குறித்த விருப்பு வெறுப்பற்ற திறனாய்வுகளையும் முதன்மையாக இடம்பெறச் செய்தவரும், தானும் அத்தகைய மொழியாக்க அடிப்படையிலான கட்டுரைகளைப் புனைவதில் வழிவகுத்தவரும் தளம் அமைத்துக் கொடுத்தவரும் கோபால் ராஜாராம் அவர்கள்தாம் என்பதில் இன்னொரு கருத்து இருக்க இயலாது. இல்லையெனில் கனடா சி.ஜெயபாரதன்,முனைவர் இரா. விஜயராகவன், அரவிந்தன் நீலகண்டன், தைவான் டாக்டர் இரா. சீனிவாசன், அசுரன், செழியன், செல்வன் முதலானோரின் மொழியாக்கவழி அறிவியல் தொழில்நுட்பக் கட்டுரைகளை வாசிக்கும் வாய்ப்பு என்னைப் போன்ற பலருக்கும் கிடைத்திருக்காது. அத்தகைய கட்டுரைகள் பலவற்றின் வெளிப்பட்டியலில் யாரெழுதினார் என்ற ஆசிரியர் பெயர் குறிக்கப் பெறாவிடில் அவை கோபால் ராஜாராம் எழுதியவையே என்று தீர்மானித்துக் கொள்ளலாம். திண்ணை.காம் வலையேட்டைத் தொடக்க முதல் வாசித்து வந்தவர்களுக்கு இது தெரியும். மொழிபெயர்ப்பின் பிரம்மாண்டமான அகலத்தையும் அது அந்த எல்லைகளையும் தாண்டி மொழியாக்கத்தின் அப்பால்வெளியாகப் பார்வைப் புலனுக்கும்(visual transcreation) விருந்தளிக்கும் படப்பதிவாக மாற்றும் வித்தையை கனடா சி.ஜெயபாரதன், தான் உருவாக்கும் 'எகிப்தின் எழிலரசி' கிளியோபாட்ரா எனும் பேரங்க நாடகத்தில் சாதித்துக் காட்டியுள்ளதும் இங்கே மறவாமல் குறிப்பிடத் தக்கது. மானுடவியல் அறிஞரும் குறிப்பாகக் 'கலாசாரப் பொருள்முதல்வாதம்' என்ற தனித்தன்மை வாய்ந்த தனது ஆய்வுமுறையை மானுடவியல் துறையில் நிறுவியவருமான மார்வின் ஹாரிஸ்(1927-2001) அவர்களின் - நுட்பம் நிரம்பிய பண்பாட்டுப் புதிர்களுக்கான விளக்கங்களை - 'பசுக்கள், பன்றிகள், போர்கள், சூன்யக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள்' என்கிற பதினொரு கட்டுரைகளை, வாசிப்பவர்கள் மருளா வண்ணம் மொழியாக்கம் செய்தவர் துகாராம் கோபால்ராவ் ஆவார். எப்படி இவர்கள் இருவரும் பாரி பூபாலனும் ஆசிரியர்களாக இருக்கும் பொழுது பின்னணியில் இந்து, சாந்தாராம் ஆகியோர் பக்க பலமாக நின்று திண்ணை.காம் தொடர்ந்து வெளிவர உதவினார்களோ(பார்க்க: இந்நூல் பாகம்-1 பதிப்புரை: கோபால் ராஜாராம் 20 டிசம்பர் 2005) அது போல மார்வின் ஹாரிஸின் புத்தகத்தையும் தந்து, படித்துப் பார்க்கவும் செய்து, நியூ ஜெர்சி'யில் உள்ள எடிசனிலிருந்து துகாராம் கோபால்ராவ் அவர்கள் அக்கட்டுரைகளை விடாமல் அனுப்புமாறு செயலூக்கம் புரிந்தவரும் பின்னர் அவை பதினொன்றையும் இரு பாகங்கள் கொண்ட புத்தகமாகப் பதிப்பித்தவரும் கோபால் ராஜாராம் அவர்களே ஆவார். என்னைப் போன்ற இலக்கியக் கட்டுரையாளர்களும் படைப்பாளர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் ( நாகரத்தினம் கிருஷ்ணா, புதுவை ஞானம், கிரிதரன் ராஜகோபாலன், கௌரிகிருபானந்தன் முதலானோர்) திண்ணை.காம் கருத்துக் களத்தில், விடுதலையான சிந்தனைக் குடும்பத்தில் இணையக் காரணமானவரும் அவரே. இது புகழ்ச்சியில்லை. உண்மை. மனநோய் மருத்துவத்துக்கு எதிர்ப்பான இயக்கத்தில்(anti psychiatry movement) முதன்மையானவரும் அந்தக் கலைச்சொல்லையே அறிமுகப்படுத்தியவருமான டேவிட் கூப்பரின் கருத்தாடலைத் தமிழுலகுக்குத் தன் மொழிபெயர்ப்பின் வழி கொண்டு வந்தவர் லதா ராமகிருஷ்ணன். சி. மோகனை ஆசிரியராகக் கொண்ட 'புனைகளம்' (எண்:2) என்ற காலாண்டிதழில் அம்மொழியாக்கத்தை வாசித்தபொழுது வியப்படைந்தேன். அவர், திண்ணை.காம் இணைய இதழுடன் தொடர்பு கொண்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது. ஆர். சிவகுமார் மொழிபெயர்த்த 'நாகரிகத்தை பீன்ஸ் காப்பாற்றிய விதம்' என்ற உம்பர்த்தொ ஈகோவின் கட்டுரை (காலச்சுவடு 28: ஜனவரி - மார்ச் 2000) இன்னும் என் நினைவில் தடம் பதித்திருக்கிறது. அரவிந்தன் தன் 'மொழி - மொழிபெயர்ப்பு -இலக்கிய மொழிபெயர்ப்பு' என்ற கட்டுரையில் (காலச்சுவடு 86: பிப்ரவரி 2007) பகிர்ந்து கொண்ட செய்திகள், எனக்கும் பிரஞ்சு - தமிழ் மொழிபெயர்ப்பாளரான முனைவர் சு.ஆ.வே. நாயகருக்கும் (நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் பொழுதும்) உரத்துச் சிந்திக்க வேண்டிய கருத்துகள் ஆயின. ஆ.இரா.வேங்கடாசலபதி, பாரதிதாசன் படைப்பான 'அமைதி'(1946)யை 'Tranquillity: a mute play' என்ற தலைப்பில் 1987ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, த. கோவேந்தனால் வெளியிடப்பட்ட பொழுதே வாசிக்கும் வாய்ப்பு ம.இலெ. தங்கப்பாவால்(தமிழ் -ஆங்கிலம்: ஆங்கிலம் - தமிழ் மொழிபெயர்ப்பாளர் - இவருடைய மொழியாக்கச் சிறப்பைக் குறித்துத் திண்ணை.காம் இதழில் விரிவாக எழுதியுள்ளேன்) கிடைத்தது. சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே: சில குறிப்புகள்' புதினத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததும் சலபதியின் உழைப்புக்குத் தக்க பரிசே ஆகும். அப்படியிருக்க அரவிந்தனிடம் "சு.ரா.வின் 'ஒரு புளிய மரத்தின் கதை'யை மொழிபெயர்ப்பது மிகவும் கடினமென்று நேர்காணலில் மொழிந்திருப்பது ஏன் என்றுதான் புரியவில்லை. மொழிபெயர்ப்புப் பணிக்கு என்றே கங்கணம் கட்டிக் கொண்டு உழைக்கும் 'மொழிபெயர்ப்புக் காலாண்டிதழ்'கள் 'திசை எட்டும்' 'புதிய எழுத்து' ஆகியவை. 'திசை எட்டும்' இதழின் ஆசிரியர் குறிஞ்சிவேலன் மலையாளத்திலிருந்து படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவருவதில் திறன் மிக்கவர். 'முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்' என்ற அவருடைய புத்தகத்தை வாசித்த பின்பே மலையாள எழுத்தாளர்களின் தேடலைத் தெளிவாகப் புரிந்து கொண்டேன். தான் வெளியிடும் மொழிபெயர்ப்பிதழின் ஆக்கங்களைச் சரிபார்க்க மொழிவழி ஆசிரியர் குழு ஒன்றை அமர்த்தியுள்ளதும் பாராட்டுக்குரியதே. புதுச்சேரியிலிருந்து மாலதி மைத்ரியை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் 'அணங்கு' என்ற சாரம் மிக்க பெண்ணியத்தைப் புலப்படுத்தும் இதழில்(செப்டம்பர்-நவம்பர் 2006) 'பெனுவாத் க்ரூல்த்'(Benoite GROULTE)தையும் அவர்தம் 'அவளது விதிப்படி ஆகட்டும்'(Ainsi soit-elle) என்ற கட்டுரைத் தொகுப்பையும் நாகரத்தினம் கிருஷ்ணா அறிமுகப்படுத்தியுள்ளமை வாசகர் பலர் சிந்தையைக் கவர்ந்துள்ளது. பின்னதில் உள்ள சிமோ(ன்) தெ பொ(வ்)வார் குறித்த நோக்கும் கருத்தீடும் குறிப்பிடத் தக்கது. 'அணங்கு' தொடக்க இதழில்(ஜூன்-ஆகஸ்ட் 2006) மர்கெரித் த்யூரா'(Marguerite Duras)வின் குறுங்கதையான 'உயிர்க்கொல்லி'(La Maladie de la Mort)யும் நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிறப்பான மொழிபெயர்ப்பே. தலித்தியத் தமிழ்ப் படைப்பை அதில் வரும் கதைமாந்தர் அனுபவிக்கும் மனவியல் வலியை அப்படியே வெளிப்படுத்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது எவ்வளவு கடினமானது என்பதை டி. கிருஷ்ண ஐயர் மொழிபெயர்த்துள்ள இமையத்தின்(1999) 'ஆறுமுகம்'(ARUMUGAM) உணர்த்துகிறது. அதில் வரும் 'சாண்டு' (பெண்களின் சிறுநீர்) என்பதைத் தமிழ் லெக்சிகனில் கூறப்பட்டுள்ள பொருள்களைக் கூறி - மொழிபெயர்ப்பாளர் புதின ஆசிரியருடன் வாதிட்டு நடைமுறையில் உள்ளவாறு மொழியாக்கியதை இமையம் பதிவு செய்துள்ளார். (காலச்சுவடு 86: பிப்ரவரி 2007 ப.26) இந்திய மொழிகளுக்குள் உணர்வுபூர்வமான மொழிபெயர்ப்பு என்று ஒன்றைக் குறிப்பிட வேண்டுமென்றால் அது - தெலுங்கு தலித் மறுமலர்ச்சிப் புதினமான 'தொடரும் நினைவுகள்... தீண்டாத வசந்தம்' என்ற தமிழாக்கமே. தெலுங்கு மூலமான 'அன்ட்டரானி வசந்தம்' என்பதன் ஆசிரியர் ஜி.கல்யாண ராவ். தமிழில் ஏ.ஜி.எத்திராஜூலு மொழிபெயர்த்துக் கூற அ.செகநாதன் எழுதியுள்ளார். இதன் மக்கள் பதிப்பை (டெமி 1/8 பக்கம்: 301 விலை: ரூ.50) சென்னை சவுத் விஷன் வெளியிட்டது. வெளியிட்டவுடன் 4000 படிகள் விற்றுத் தீர்ந்தன. மொழியாக்கப் புதினம் ஒன்று விற்பனையிலும் சாதனை புரிந்தது என்பது 2004-இல் தமிழகத்தில் பதிவாகியது. 1955-இல் கன்னடத்தில் 'சிரஸ்மரணெ' என்ற புதினத்தை சீமந்தினி நிரஞ்சனா படைத்தார். பெங்களூரிலிருந்து மங்கலாபுரத்துக்கும் அங்கிருந்து செறுவத்தூருக்கும் பயணம் செய்தால் அடுத்து நடந்து சென்று அடையும் கிராமமாக கையூர் இருந்தது. ஆதிக்கத்தையும் அக்கிரமத்தையும் எதிர்த்துப் போராடிய கையூர் விவசாயிகளான தியாகிகளின் வீரக்காதையான 'சிரஸ்மரணெ,' 19 ஆண்டுகள் கழித்து மலையாளம், ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளில் வரிசையாக மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. மலையாளத்திலிருந்து தமிழில் பி.ஆர்.பரமேஸ்வரன் மொழிபெயர்த்தார். சரளமான நடை. மொழிபெயர்ப்பு நம்மிடம் பேசுவது போலவே இருக்கும். சென்னை சவுத் ஏசியன் புக்ஸ் நிறுவனம் 1977இல் முதற்பதிப்பை வெளியிட்ட பின் பல அச்சுக்களை(prints) வெளியிட்டு விட்டது. நான் வாங்கியது 1995இல் வெளியான ஐந்தாம் அச்சு. இதைப் படித்தவர்களுக்கு நன்றாகத் தெரியும் - 'சிறந்த படைப்பை மொழியாக்கம் செய்ய, இருமொழியறிவு மிகுந்த, சரளமாக மொழிபெயர்க்கத் தெரிந்த, படைப்பாளரின்-படைப்பின் அதே உணர்வு கொண்ட மொழிபெயர்ப்பாளர் தேவை' என்பது. 'தமிழில் எந்திர மொழிபெயர்ப்பு' (Machine Translation of Tamil) பற்றி அறிய பெர்க்கலேயிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் பிரடெரிக் சி.கெய்(FredricC.Gey) உருவாக்கியுள்ள(Prospects for Machine Translation of the Tamil Language) கட்டுரை மிகவும் உதவும். பொதுவான எந்திர மொழிபெயர்ப்பு முறைகளை அறிய அவர் 'மொழிபெயர்ப்பு எந்திரங்கள்' என்ற ஒரு மிகச் சிறந்த நூலைப் (Translation Engines, by Arthur Trujillo, published by Springer. 1999) பரிந்துரைத்துள்ளார். அதன் மூலம் ஒன்று நன்றாகத் தெரிய வருகிறது. தமிழ் மொழிக் கட்டுமானத்தினால், தமிழில் எந்திர மொழிபெயர்ப்பு மிகுந்த செலவு பிடிப்பதாக உள்ளது என்பதே அது. நிகழ்நிலையில் நாம் கடக்க வேண்டிய தடைச்சுவர்கள்: 1. பண்பாட்டு அடிப்படையிலான புரிந்துணர்வுத்தடைகள்(cultural barriers). நண்பர் முனைவர் சு.ஆ.வே. நாயகர், அண்மையில் மிசோரம் நாட்டுப்புறக் கதைகளைப் பேச்சுத் தமிழில் மொழிபெயர்த்தார். சுர்ரா என்று ஆங்கில மொழியில் வரும் பெயரை எப்படித் தமிழில் இடுவது? அசல் பெயர் சுர்ராவா, சுராவா? சுரா என்றே மொழிபெயர்த்தார். அடுத்து, அக்கதைகளில், இறந்தவர்களைக் குகையில்(cave)இல் இடுவதாக(புதைப்பது போன்றும் பொருள் வரும்) மிசோமொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர் எழுதியிருந்தார். இவர் கல்லறையில் புதைப்பதாக எழுதி அச்சிடக் கொடுத்து விட்டபின் சந்தேகம் எழுகிறது. "அடடா, கல்லறையில் என்றால் அந்தப் பண்பாடு கிறித்தவர்களது ஆகிவிடுமே - கதையில் வருபவன் மிக எளிய நாட்டுப்புறத்தான் மட்டுமல்ல, ஒன்றுமறியாத திருவாழத்தான் ஆயிற்றே!" என்று குழம்பினார். எனக்கு இப்பொழுது ஒன்று தோன்றுகிறது. பேசாமல் இரண்டுக்கும் நடுவுள்ளதாக 'கல்லடுக்கில்' என்று அவர் போட்டிருக்கலாம். மிசோ ஆதிவாசி மொழி அறிந்தவர்களொடு தொடர்பு கொண்டு இன்னும் அவற்றில் உள்ள சில பண்பாட்டு விளக்கங்களை அறிய நண்பர் விரும்பினார். ஆனால் அவருக்கு அவற்றை மொழிபெயர்த்துத் தர, மூன்று நாள்கள் மட்டுமே தரப்பட்டிருந்தன. என்ன செய்வது? மறுத்துவிட்டால் தமிழில் அவை வராமல் போய்விடவும் வாய்ப்புண்டு. 2. மொழிகளினிடையே உள்ள ஆள்-நாடு-ஊர்ப் பெயர் ஒலிமாற்றம்: புதுச்சேரியில் நிகழ்ந்த, இந்தியாவிலுள்ள பிரஞ்சு மொழியாசிரியர்கள் சங்கமும் கெபேக்('கியூபெக்' என்று எழுதுவது ஒலிப்படிப் பிழையாம்)பன்னாட்டு உறவுகள் அமைச்சகமும் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் வெளியிட்ட 'கெபேக் இலக்கியம் : ஓர் அறிமுகம்' ('La litterature quebecoise: une introduction en tamoul") என்ற தொகுப்பில்(பதிப்பாளர்: Samhita Publications,Chennai,2007) இலக்கிய மதிப்பீட்டுப் பகுதியில் முதலாவதாக இடம்பெற்ற 'Ringuet, Trente Arpents, 1938 (Thirty Acres) - "முப்பது ஏக்கர்கள் - ரேங்கே" என்ற கட்டுரையை உருவாக்கிக் கொண்டிருந்தேன். அதில் வரும் பெயர்களைப் பிரஞ்சுக் கனடிய ஒலிப்பின்படித்தான் எழுத வேண்டும் என்று பணித்திட்டக் குழுவின் தலைவர் முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி சொல்லி விட்டார். அதனால் 'கியூபெக்' 'ரிங்குவே' 'யுஷாரீஸ்த்' முதலாக நான் ஒலிபெயர்த்து வைத்திருந்த பல பெயர்களை, 'கெபேக்' 'ரேங்கே' 'யுகாரீஸ்த்'(இது இன்னும் சரியாக 'எகாரிஸ்') என்று மாற்ற வேண்டி வந்தது. இதில் இன்னொரு கூத்து. பேராசிரியர் ஒருவர் தன் நூலில் 'ஜீன் பால் சார்த்தர்' என்று எழுதியிருந்ததைப் புதுவையில் நிகழ்ந்த திறந்தவெளிப் பல்கலைக் கழக வகுப்பொன்றில் நான் பாடம் நடத்திய பொழுது இயல்பாக 'ழோ(ன்)போல் சா(ர்)த்ர்' என்று உச்சரித்துக் கொண்டிருந்தேன். யூனியன் பகுதியிலிருந்து வந்த மாணவர் ஒருவர் எழுந்து, "ஐயா! புத்தகத்தில் சரியாகப் போட்டிருப்பதை ஏன் மாற்றி மாற்றி உச்சரிக்கிறீர்கள்?" என்று கேட்டார். விளக்கினேன். ழான் ழாக் ரூசோ(Jean Jacques Rousseau) என்பதை 'ஜீன் ஜாக்குவிஸ் ரஸ்ஸோ' என்று செய்தியில் வாசித்ததையும் கேட்க முடிந்தது. தூயதமிழில் இதை ஒலிபெயர்த்தால் எழுதும்பொழுது ''இழான் இழாக் உருசோ' என்றுதான் எழுத வேண்டும். சேர்த்து ஒலிக்கும்பொழுது சரியான ஒலிப்பு வந்துவிடும். ஆனால் 'ஜீன் பால் சார்த்த'ரும் 'ஜீன் ஜாக்குவிஸ் ரஸ்ஸோ'வும் வழிக்கு வரமாட்டா. 3. அறிவு வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள பணிப்பெயர் மாற்றங்கள்: ஆங்கில நாவலொன்று. பெண்ணியம் என்ற கருத்து அரும்பிக் கொண்டிருந்தபொழுது எழுதப்பட்டது. அதில் இடம் பெறும் 'husband,' 'wife' என்பவற்றை 'spouse' என்று அவர்கள் இன்று பயன்படுத்துவதுபோல் 'துணைவர்,' 'துணைவியார்'('துணைவர்' என்று போட்டுவிட்டு 'துணைவி' என்றால் மரியாதை இல்லை) என்று மொழிபெயர்ப்பதுதானே சரி? 'house wife' என்பதை இன்று 'home engineer' என்கிறார்கள். 'இல்லத்தரசி' என்ற பழைய சொல் ஆதிக்கத்தைக் குறிக்கும். 'இல்லப் பொறியாளர்' என்று சொல்ல வேண்டுமாம். பிரஞ்சில் 'பலேயர்' என்ற பழைய சொல் 'பெருக்குபவ'ரைக் குறிக்கும். அச்சொல் இழிவென்பதால் இப்பொழுது ஆங்கிலத்தில் அதை 'surface technician' என்று மொழிபெயர்க்கிறார்கள்.('பாலியல் தொழிலாளர்' போன்றும் பணிப்பெயர் மாற்றங்கள் பல இருக்கின்றன) 4. வட்டார மொழிகளில் அமைந்துள்ள படைப்புகளை மொழிபெயர்ப்பவருக்கு ஆகக் கூடுதலான சுமை உண்டு. வட்டார வழக்கு அகராதிகளுக்கு எட்டாத சொற்களும் அத்தகைய படைப்புகளில் வருவன. நாட்டுப்புறப் பாடல் ஒன்று. 'ஒத்த ரூபா தாரேன்' - மொழிபெயர்த்து விடலாம். 'ஒனப்பத் தட்டெ தாரே'னை என்னவென்று மொழிபெயர்ப்பது? 5. கி.ரா., கழனியூரனின் மேற்படிப் படைப்புகள் அல்லாமல் பாலியல் கதைகளை மொழிபெயர்ப்பவர் மேலதிகமான விழிப்புணர்வைக் கைக்கொள்ள வேண்டும். இவற்றை மலையாளம், தெலுங்கு முதலான மொழிகளில் மொழிபெயர்ப்பவரை விடவும் ஆங்கிலத்திலும் குறிப்பாகப் பிரஞ்சிலும் மொழிபெயர்ப்பவர் படாத பாடுகள் பட வேண்டும். பொறுப்பில்லாமல் மொழிபெயர்த்தால் நம்மைக் குறித்து வாசிப்பு அடிப்படையில் மட்டுமே புரிந்து கொள்ள முயலும் அம்மொழியினர் ஆகவும் கொச்சையாகப் புரிந்து கொள்ள நேரும். இன்னும் சிந்திக்கச் சிந்திக்க புதிய புதிய பூதங்கள் மொழிபெயர்ப்பாளர் முன் எழும். ஒரு மொழிபெயர்ப்பாளருக்குமுன் எழும் தடைச்சுவர்போல் இன்னொருவர் முன் எழவேண்டும் என்பதில்லை. வெவ்வேறு வகையாக எழலாம். தூங்கும் பொழுது கூட இந்தச் சொல்லுக்கு இந்த மொழியில் என்ன சொல்லைப் போடுவது என்பது குறித்துத தாறுமாறான கனவுகள் வரலாம்.[சந்தை மொழிபெயர்ப்பாளர்களுக்கு இது விதிவிலக்கு.] சில நேரங்களில் சில கனவுகளில் சில சொற்கள் விசுவரூபமெடுத்து மொழிபெயர்ப்பாளரை விரட்டிக்கொண்டும் வரக் கூடும். விழித்தபிறகுதான் அவருக்கு நிம்மதி! **** Thanks to Thinnai.com

26.2.07

‘உள்ளம் ஓர் ஆழ்கடல்’: வேறுபாடான உளவியல் புத்தகம்!

‘உள்ளம் ஓர் ஆழ்கடல்’: டாக்டர் க.நாராயணனின் முத்துக்குளித்தல் - தேவமைந்தன் உலகச் சிந்தனையாளர்களின் அறிவுக் கோட்பாட்டை(epistemology)த் தமிழில் முதன் முதலாக அறிமுகப்படுத்தியதனால் தமிழக அரசின் முதற்பரிசை 1987ஆம் ஆண்டில் பெற்றவர் டாக்டர் க.நாராயணன். அதற்குப் பின் ஆய்வியல், சித்தர் மெய்ப்பொருள், மேலைநாட்டு மெய்ப்பொருள், அரசியல் சிற்பிகள், சிவவாக்கியர், பட்டினத்தார் ஆகியவற்றைக் குறித்து நூல்களைப் படைத்தபின் சிக்மண்ட் பிராய்டு குறித்த தன் பத்தாண்டுத் தேடலை முன்வைத்து, ஓராண்டு எடுத்துக்கொண்டு நாராயணன் எழுதி வெளியிட்டுள்ள புத்தகமே ‘உள்ளம் ஓர் ஆழ்கடல்.’ பதிப்புரிமைப் பக்கத்துக்கு அடுத்தே ‘தற்சோதனை’ என்றதோர் உரைவீச்சைத் தோரண வாயிலாக நாட்டியிருக்கிறார் நாராயணன். நாள்தோறும் ஒவ்வொருவரும் தங்கள் எண்ணங்கள் சரிவர அமைந்திருக்கின்றனவா, அவற்றால் சமூகம் பயன்பெறுமா என்று தன்மதிப்பீடு செய்துகொண்டு முன்னேற இவ்விதமான தற்சோதனை உதவும். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் சார்பில் ப. அருளி தொகுத்துள்ள அருங்கலைச்சொல் அகரமுதலியில்(பக்கம் 822) psychology என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழாகத் தரப்பெற்றுள்ள உளத்தியல் என்ற சொல்லையே சற்று அழுத்தமாக உள்ளத்தியல் என்றவாறு இப்புத்தகத்தின் 224 பக்கங்களிலும் பயன்படுத்தியுள்ளார் டாக்டர் நாராயணன். உளவியல் என்று இதுவரை புழங்கிவந்துள்ள கலைச்சொல் உளவு+இயல் (spying technology) என்ற முறையில் பொருட்குழப்பத்துக்கு இடம் தந்து வந்ததால் உளத்தியல் என்ற சொல்லைக் கலைச்சொல்லாக்கம் செய்திருந்தார் ப. அருளி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சிக்மண்ட் பிராய்ட்(6-5-1856) பெற்ற மருத்துவக் கல்வியும் ஆய்வுகளும் ஐரோப்பாவை அறிவியல் சிந்தனை ஆட்சி செய்த காலத்தில் அமைந்தன என்பதை நாராயணன் சுட்டத் தவறவில்லை. தவிரவும் ‘இறைவனின் படைப்பே மனிதன்’ என்று மதவாதிகள் உண்டாக்கியிருந்த ‘தெய்விகக் கொள்கை’யை டார்வின் வழங்கிய ‘பரிணாமக் கொள்கை’ தகர்த்திருந்த காலச் சூழல் பிராய்டின் புரட்சிச் சிந்தனைகளுக்கு இடம் தந்தது. பிராய்டின் பெற்றோர்கள் அருமையானவர்கள். குறிப்பாக அவர்தம் தாயார் அமலியாவிடமிருந்து அபரிமிதமான பாசத்தைப் பெற்றார். தந்தையாரிடமிருந்து நகைச்சுவை உணர்வு, பரந்த மனப்பான்மை, சுதந்திரமான சிந்தனை ஆகியவற்றைப் பிராய்ட் பெற்றார். ஒருவரின் வளர்ச்சியும் வெற்றியும் அவர் தம் தாயிடமிருந்து பெறும் அன்பின் அளவால் உறுதி செய்யப் பெறுகின்றன என்பதை அவர், “தாயால் விரும்பப்படும், நேசிக்கப்படும் குழந்தைகள் தம் வாழ்நாள் முழுக்க எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் வெற்றி காண்பார்கள்; எந்தச் சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள்”(ப.60) என்று மொழிந்தார். பிராய்டின் ஆய்வுகள் ஆழமான அடிப்படைச் சிக்கல்களை அடித்தளமாகக் கொண்டவை. மேலோட்டமான சிந்தனையோ ஆய்வோ அவருக்குப் பிடிக்காது. உயிரியல்(biology) தொடர்பான அடிப்படை வினாக்கள் பலவற்றிற்கு இயற்பியல் மற்றும் வேதியல் துறைகளில் விளக்கம் கிடைக்கிறதென எடுத்துக் காட்டியவர் அவர்.(ப.61) மருத்துவத் தொழிலில் பொருளீட்டுவதை விடவும் மன்பதைக்கு என்றும் பயன்படும் ஆய்வுகள் செய்யவே பிராய்ட் விரும்பியதால் 1881 ஆம் ஆண்டில் மனநோய் மருத்துவத் தொழிலை வியன்னா நகரில் தொடங்கினார். நரம்பியல் துறையில் உலகப்புகழ் பெற்று விளங்கிய ழோ(ன்) மர்த்தீன் ஷர்கோ அவர்களை 1885இல் பாரீசில் சந்தித்துப் பயிற்சி பெற்றார். இந்த இடத்தில் ஷர்கோ’வைப் பற்றி நாம் சிறிது அறிவது நலம். வலிப்பு நோய் அக்காலத்தில் பெரும் பிரச்சினையாக இருந்தது. அது சம்பந்தமான மூடநம்பிக்கைகளும் அப்பொழுது அதிகம். கருப்பை என்று பொருள்படும் ‘யுஸ்டீரான்’ என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து ‘ஹிஸ்டீரியா’ என்ற சொல் வந்ததை வைத்து, பெண்ணின் கருப்பை ஒரு படகைப் போல் உடலில் சுற்றி வருவதாகவும், அதன் விளைவாக ஒவ்வாத செயல்கள் நடப்பதாகவும், உறுப்புகள் செயலிழப்பதாகவும் அக்கால மக்கள் கருதினர். வலிப்பு நோய் பேய் பிசாசுகளின் தூண்டலால் விளைவது என்றும் பில்லி சூனியம் ஏவல் முதலான செயல்களின் விளைவு என்றும் நிலவி வந்த மூடநம்பிக்கையைக் களைந்து அது ஓர் உயிரியல் சார்ந்த நோய் என்றும், மூளை மண்டலத்தில் ஏற்படும் சிதைவின் வெளிப்பாடு என்றும் ஷர்கோ விளக்கினார். இக்கருத்து பிராய்டின் மனத்தில், “உயிரியல் சார்ந்த நோய் உள்ளத்தியல் கூறுகளின் ஆதிக்கத்தால் உருவாகின்றன” என்ற கருதுகோளை வகுத்தளித்தது. இதன் விளைவாக ஆழ்துயில் மருத்துவ முறையைப் பின்பற்றி வியன்னாவில் வெற்றியுடன் விளங்கிய வலிப்புநோய் மருத்துவர் ஜோசெஃப் புரூயெருடன் இணந்து பணிபுரிந்தார். நோயாளிகள் வெளிப்படுத்திய உணர்வுகளின் விளைவாக, பாலியல் சிக்கலும் வலிப்பு நோய்க்கு ஒரு காரணியாக இருக்கக் கூடும் என்று கண்டு கூறினார். பிரான்சில் நோயாளிகளை அறிதுயிலில் ஆழ்த்த வல்லவராக பெர்னே ஹெம்(Berne Heme) விளங்கினார். அவரிடம் பயிற்சி பெறச் சென்ற பிராய்ட் அவர் கடைப்பிடித்த முறைகளைக் கண்டு, “அறிதுயில் முறை நோயாளியின் ஆழ்மனத்தில் மறைந்துள்ள உணர்வுகளை எட்டுவதில்லை” என்று கண்டறிந்து முன்பு தான் ஏற்றிருந்த கருதுகோளை மாற்றிக் கொண்டார். அறிதுயில் முறையால், மருத்துவர் ஏற்றும் கருத்துக்களோடு தொடர்புடைய எண்ணங்கள் மட்டுமே நோயாளியின் நினைவுக்கு வருகின்றன. மருத்துவர் நோயாளியைத் தங்குதடையில்லாமல் பேச விடவேண்டும். கட்டுப்பாடு ஏதும் இன்றி எதை எதோடு வேண்டுமானாலும் இணைத்துப் பேசும் இப்பேச்சுமுறை நோய்க்கான காரணத்தைப் புலப்படுத்தும் என்று பிராய்ட் கருதினார். இப்பொழுது ‘TV5 MONDE ASIE’ தொலைக்காட்சியில் தொடராக வந்து கொண்டிருக்கும் ‘பிரின்சே மரி’யில் (Princess Marie) இப்பேச்சுமுறையை பிராய்ட், இளவரசி மரி’யிடம் பின்பற்றுதலை விரிவாகக் காணலாம். பெனுவா ஜாக்வீ’யின் அருமையான இயக்கத்தில் உருவானது அது. கடந்தகால நினைவுகளால் மனநோயாளிகள் எவ்வாறெல்லாம் அலைக்கழிக்கப்படுகின்றனர் என்பதைப் பிராய்ட் உணர்ந்து பார்ப்பதை இயக்குநர் அதில் சிறப்பாகச் சித்தரித்திருக்கிறார். 1895 முதல் நான்காண்டுகள் தன் ஆழ்மனத்தை அறிதலையே சோதனையாகப் பின்பற்றினார் பிராய்ட். ‘ஒருவரின் ஆழ்மனம் குப்பைத் தொட்டி அன்று; ஒருவரை உருவாக்குவதே அதுதான்” என்று கண்டு கூறி மனநோய் மருத்துவத்திலும் உளத்தியல் சிந்தனப் போக்கிலும் பெரும் புரட்சியை ஏற்படுத்தினார். பிராய்டுக்கும் பிராய்டியத்திற்கும் அப்பொழுதே எதிர்ப்பு வலுத்திருந்தது. அவரோடிருந்து ஆய்வுப்பணி ஆற்றிய கார்ல் யுங்கும் ஆல்பிரட் அட்லரும் ஒதுங்கிக் கொண்டார்கள். இன்னும் பலரும் ஒதுங்கவே, ஆண்டுக்கணக்கில் பிராய்ட் தனிமைப்பட்டு இருந்தார். குழந்தைப் பருவத்திற்குப் பிராய்ட் தந்த முதன்மையை ஏற்றுக் கொண்டவர்களும் அவர் வலியுறுத்திய எதிர்பால் ஈர்ப்பையும் பாலியல் விளக்கங்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பிராய்ட் எதிர்ப்புக்கெல்லாம் வருந்தாமல் தம் பணியைத் தொடர்ந்தார். நரம்புப் பிணி போன்ற கொடிய பிணிகள் ஒருவரை வருத்துவதற்கு முதன்மைக் காரணம், குழந்தைப் பருவத்தில் பாலியல் அறிவு கொடுக்கப் படாமையே என்று அவர் உறுதியாக நம்பினார். பிராய்டின் ஆய்வு முடிபுகள் பிற்காலத்தில் மாற்றங்களை ஏற்றாலும் அவர் உருவாக்கிய உளத்தியல் பகுப்பாய்வு முறையும் ஆழ்மனத் தாக்கம் என்ற கருத்தும் இன்றும் நிலைத்து, சிக்கல்கள் பலவற்றுக்குத் தீர்வு காண உதவுகின்றன. தன்னைத் தனிப்பட்ட முறையில் அல்லாமல் தன்னுடைய ஆய்வுகளின் மூலமே வருங்கால மக்கள் அறிய வேண்டும் என்ற அவருடைய எண்ணம் சிறப்பாக நிறைவேறியுள்ளது. உளத்தியல் சிந்தனை வரலாற்றில் புதிய விதைகளைத் தூவிப் புரட்சி செய்த பிராய்ட், தொடர்ந்த தாடை உறுப்புறுத்த(jaw prosthesis) அறுவைகளுக்குப் பின் 23-9-1939 அன்று மறைந்தார். இதுவரை நாம் பார்த்த நான்காம் இயலுக்குப் பின்னர் ஆக்கலும் அழித்தலும், மனவுருப்பதிவும் செயல்பாடுகளும், உள்ளம் ஓர் ஆழ்கடல், பருவங்களும் உணர்வுகளும், கனவும் உறக்கமும், நடத்தை : இயல்பும் பிறழ்வும், மனநலமும் மருத்துவமும், நூற்பயன் ஆகிய எட்டு இயல்களில் விரிவாக உளத்தியல் செய்திகள் அலசப்படுகின்றன. ஏழாவது இயலின் கடைசியிலும் பிராய்டின் கொடை, முத்திரை பதிக்கப் படுகிறது. காட்டு: “உள்ளம் என்பது உடலின் பிற உறுப்புக்களைப் போன்றதொன்று என எளிமையாக எண்ணிய காலத்தில், அது அளப்பரிய ஆழ்கடல் என்றும் அதன் அமைப்பும் அங்கு இருக்கும் எழும் போராடும் உணர்வுகளும் எண்ணற்றவை என்றும், உள்ளத்துள் ஆழ்ந்து கிடக்கும் அத்தனை உணர்வுகளையும் அறிந்திட இயலாது என்ற உண்மையையும், சமயவாணர்களின் சாடலுக்கும் மாற்றாரின் இழிவுரைகட்கும் அஞ்சாமல் எடுத்துரைத்து உள்ளத்தியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியவர் சிக்மண்ட் பிராய்டு.” (ப.120) பதினொன்றாம் இயலான ‘மனநலமும் மருத்துவமும்,’ இன்றைய நிலையில் பலருக்கும் பயன்படத்தக்க மனநலம் தொடர்பான அறிவுரைகளைக் கொண்டிருக்கின்றன. தவிர, தன் வாணாள் முழுவதும் கடைகளுக்குச் செல்வதையே தீவிரமாக அஞ்சி வெறுத்துத் தவிர்த்த எம்மா என்ற அம்மையார் பற்றிய நோயாளி வயணம்(case description) மிகவும் குறிப்பிடத் தகுந்தது.(பக்கம் 201-203) இதன் ஊடாக டாக்டர் நாராயணன் உணர்த்தும் ஒரு செய்தி, இன்றைய மனநல மருத்துவர்களின் வறட்டுத்தனமான ‘வேதியல் மருந்தே மனநோய் எதையும் தீர்க்கும்’ என்ற கடைப்பிடி’(practice) தவறானது என்பதை எண்பிக்கும். அது: “ஒரு செயலுக்குச் சமமாகவும் எதிராகவும் எதிர்ச்செயலொன்று ஏற்படும் என்ற நியூட்டனின் விதி பருப்பொருள் நிலையில் மட்டுமன்றி மன உணர்வு நிலையிலும் உண்மையென உணர வேண்டும்…இவ்விதியை அட்ப்படையாகக் கொண்டே இளங்குழந்தைப் பருவத்தை பிராய்டு விளக்குகிறார். மூளை அல்லது நரம்பு மண்டலத்தின் முதற்பணியே, அதற்கு ஏற்படும் சுமையைத் தவிர்ப்பதும் குறைப்பதும் ஆகும். மூளை உள்ளிட்ட நரம்பு மண்டலம் இயன்ற அளவு குறைந்த சுமையைக் கொண்டு அதன் குறிக்கோளை அடைய முற்படுகிறது. இது, மூளையின் பொருளாதாரத் தத்துவம். பல நரம்பிழைகளால் விரிவாகவும் நுட்பமாகவும் நரம்பு மண்டலம் பின்னப்பட்டுள்ளது. குறைந்த அளவு தூண்டல், இயன்ற அளவில் சீராகவும் குறைந்த அழுத்தமுடனும் பாய்வதற்கேற்ற வகையில்தான் நரம்பு மண்டலம் அமைந்துள்ளது. துன்பச் சூழலைத் தவிர்ப்பதும் குறைப்பதும் மனித மனத்தின் இயல்பு. மனத்தின் இவ்வடிப்படை விதியை ‘இன்ப நுகர்வு விதி’ என்கிறார் பிராய்டு. பசி உண்பதாலும், சோர்வு தூக்கத்தாலும், பாலியல் ஆசை இன்ப நுகர்வாலும் சமநிலை அடைகின்றன. எம்மா அந்தக் குறிப்பிட்ட கடையைத் தவிர்ப்பதும் வெறுப்பதும் இவ்விதியின்படி சரியான செயலேயாகும். ஆனால், அவள், கடைகள் அனைத்தையும் வாழ்நாள் முழுவதும் தவிர்க்கிறாள். இந்நிலையில்தான் அவள் வெறுப்பு மனநோய் என்றாகிறது. எட்டு வயதில் எம்மாவிற்கு ஏற்பட்ட அனுபவச் சுமையைக் குறைக்காமல் தற்போது அவளுக்கு மருத்துவம் செய்வதில் பயனில்லை.”(பக்கம் 202-203) இன்று மனநல மருத்துவர்கள் பிராய்டுக்கு மாறாக, வெறும் மருந்துகளாகத் தருபவை பலருக்குத் தீவிரமான ஒவ்வாமையைத் தருவதுடன் பலரை ‘மரப்பாவை இயக்க’மும் கொள்ளச் செய்திருக்கிறது. வேதியலின் ஆதிக்கம், இயல்பான மனநல மருத்துவத்தை முடக்கிப் போட்டிருக்கிறது. பிரெஞ்சுப் படமொன்றில் வயதான பெண் ஒருத்தி, காதலைப் போற்றித் தன் காமத்தை முற்றாகத் தவிர்க்கும் இளம் வழக்கறிஞர் ஒருவரிடம் எரிச்சலுடன் சொல்வாள்: “பார்க்கப் போனால் காதல் ஒரு வேதியல்தான்!” என்று. புகழ்பெற்ற ‘நேஷனல் ஜியாகிரஃபிக்’ இதழ், சில மாதங்களுக்கு முன் ‘காதலின் வேதியல்’(chemistry of love) என்ற சிறப்புக் கட்டுரையை வெளியிட்டது. உயர்ந்த பதவிகளில் இருக்கும் பலர் தங்கள் மனைவியருக்கு ‘செடேடிவ்ஸ்’ எனப்படும் தணிப்பிகளைத் தந்து தாங்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று மருத்துவ நண்பர் ஒருவர் சொன்னார். நல்ல வேளையாக மனநோய்களுக்கு இன்று தரப்படும் வேதியல் மருந்துகளை மருந்துக் கடைக்காரர்கள் மருத்துவர் குறிப்பு இல்லாமல் தருவதில்லை. வேதியல் மருந்துகளைப் புகழ்பவர்கள், இன்று கல்லூரி பள்ளி மாணவர்களுக்குத் தாராளமாகக் கிடைக்கும் போதைப் பொருள்களின் தோற்றுவாய் குறித்துச் சற்றே சிந்தித்துப் பார்க்கட்டும். சரி. இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் அனுபவ முதிர்ச்சி உள்ளவர். அவர் நமக்குக் கூறும் அறிவுரைகளில் சிலவற்றைப் பார்ப்போம்: “வாழ்க்கையில் முன்னேற்றம் காண போட்டி மனப்பான்மை நல்ல ஊக்கியாகச் செயல்படும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதே போட்டி மனப்பான்மை ஒருவரது திறமை மற்றும் வாய்ப்புகளுக்கு மீறியதாக அமைந்து விடாமல் இருந்திட வேண்டும் என்பதும் அவசியமாகிறது.” (ப.203) “ஒருவரின் தகுதிகட்கும் அவர் அடைய வேண்டிய குறிக்கோளுக்கும் உள்ள இடைவெளி முயன்றும் கடக்க முடியாத அளவிற்கு மிகப்பெரிதாக இருப்பின் அது மனமுறிவு என்னும் மனக்கோளாறு உருவாக வாய்ப்பளிக்கும். ஆசையோடு அறிவும் சேர்ந்து குறிக்கோளைத் தீர்மானித்தால் வாழ்க்கைப் பயணத்தில் சிக்கல் தோன்ற வாய்ப்பு குறைவு.” (ப.204) “சமுதாயக் கட்டமைப்புக்கு உட்பட்டு ஆசைப்படுகிறவன் அதனை நிறைவு செய்து அமைதி கொள்வான். மனமுறிவு என்னும் கோளாறு அவனுக்கு ஏற்பட வாய்ப்பு இல்லை.” (ப.204) “நாகரிகச் சமுதாயத்தின் நடுவே உள்ள மனிதன்... ஆத்திரப்படும்போதும் எரிச்சலடையும்போதும் தன் உணர்வுகளை உடனே வெளிப்படுத்தாமல் கட்டுப்படுத்திக் கொள்கிறான். அதன் விளைவாக அவனுடைய உடல்நலம் பாதிக்கப்படுகிறது. அது பெரும்பாலும் இரத்த அழுத்தத்தையும் செரிமானக் கோளாறுகளையும் உண்டாக்குகிறது. உணர்வொடுக்கமும் அதனால் ஏற்படும் உடல்கேடுகளும் அடிக்கடி நிகழுமானால் அவை நிரந்தர நோய்கட்கு வழிவகுப்பனவாகின்றன... சிறுசிறு நிகழ்வுகட்கெல்லாம் ஆத்திரப்படாமல் இருக்கப் பழக்கிக் கொள்ள வேண்டும். இது எதார்த்த விதியின் ஓர் அங்கமாகும்.”(ப.209) “உன்னையே நீ அறிவாய்’ என்பது கிரேக்க ஞானி சாக்ரடீசின் மந்திரத் தொடர். ... உன் பார்வையை உள்முகமாகத் திருப்பி உன் உள்ளத்தில் படிந்திருக்கும் எண்ணங்களின் இயல்பை அறிந்து கொள் என்பதே இதன் பொருளாகும்.” (ப.211) “உங்கள் உள்ளத்தை நீங்களே ஊடுருவிப் பாருங்கள்; வேண்டாத எண்ணங்களை வெளியேற்றுங்கள்; மனம் மென்மையாகிவிடும்; வாழ்க்கை அமைதிப் பூங்காவாக விளங்கும்.” (ப.212) *************** ஆசிரியர்: டாக்டர் க. நாராயணன், எம்.ஏ.,எம்.ஏ.,எம்.எட்.,பிஹெச்.டி. தலைப்பு: உள்ளம் ஓர் ஆழ்கடல் (Freudian Psychology - An Introduction) பதிப்பு: முதற் பதிப்பு, திசம்பர் 2006. பக்கம்: 224 புத்தக அளவு: தெம்மி 1/8 விலை: உரூ. 100-00 வெளியீடு: மாரி பதிப்பகம், ‘சிவகலை’ இல்லம், 29, நாகாத்தம்மன் கோயில் தெரு, கொட்டுப்பாளையம், புதுச்சேரி - 605 008. தொ.பே.: 0413 2251764 / 9442152764 ****** நன்றி: கீற்று.காம்

16.2.07

ஆசிரம வாழ்க்கை - -தேவமைந்தன்

ஆசிரம வாழ்க்கை -தேவமைந்தன் பல நாள்களாக எனக்குள் ஓர் ஆசை. ஆசிரம வாழ்க்கை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று. ஒரு நாளாவது சுதந்திரமாக அதை வாழ்ந்து பார்க்கவும் விருப்பம். நாங்கள் வாழும் ஊரில் உள்ள பெரிய ஆசிரமத்தில் மனிதர்கள் எந்திரங்கள் போலவும் திருவள்ளுவர் மொழிந்த ‘மரப்பாவை’கள் போலவும் வாழ்ந்து இயங்குவது பார்க்க, அன்றாடமும் பார்க்கப் பார்க்க வேறொரு கிளை ஆசையும் என்னுள் துளிர் விடலாயிற்று. அது என்ன என்றால், நான் வாழ்ந்து பார்க்கப்போகும் ஆசிரமம்:- 1. நகர்ப் பக்கமே இருக்கக் கூடாது. 2. தமிழ்நாட்டில் இருக்க வேண்டும். 3. அதிகம் பேர் வந்து போவதாக இருக்கக் கூடாது. 4. என்னை ஆசிரமத்தில் உள்ளவர்கள் தங்களைப் போல எண்ண வேண்டும். நான் வாழ்க்கையில் ஆற்றிய அரசுக் கல்வி நிறுவனப் பணி அவர்களுக்குத் தெரியக் கூடாது. வயதும் கூடத்தான். 5. முக்கியமாக மலைப்பக்கம்தான் அந்த ஆசிரமம் இருக்க வேண்டும். சொல்வார்கள்... ஆசைகளை[ambitions] விடவும் உயர்ந்த/உன்னத விருப்பங்களுக்கு [aspirations] நிறைவேறும் திறம் அதிகம் என்று.. நிறைவேற்றி வைத்தார்கள், குடும்பத்தார். விந்தையாக அந்த ஒரு நாள் வாழ்க்கை அரங்கேறியது. அதுவும் சிகுன்குனியா வந்து வாட்டி என்னை வளைவெடுத்துவிட்டதை உடனடுத்தே நிகழ்ந்தது. ‘வாய்ப்புத் தராத விழிப்பு நிலை’[choiceless awareness] என்று ஜே.கே. சொன்னாரே அப்படி. ** 23-12-2006: ‘ஹிந்து’வில் திசம்பர் 11, 2004 அன்று “ROAD LESS TRAVELLED: Hill of hills” பகுதியில் பிரின்ஸ் ஃப்ரெடெரிக் எழுதிய பருவதமலை அடிவாரத்தில் உள்ள மெளனயோகி விட்டோபானந்தாவின் ஆசிரமத்தில் இந்த நாள் மாலைமுதல் அடுத்த நாள் மாலை வரை தங்குகிறேன். பொய்யில்லாமல், சுருக்கமாக, நடந்தவைகளை இங்கே ‘திண்ணை’ குழாம் முன் வைக்கிறேன். ‘மயிலம் தாத்தா’ என்றழைக்கப்படும் தாத்தா, அங்கேயே நெடுங்காலமாக, ஆறாயிரம் அடி உயரமுள்ள பருவதமலையின் சிகரத்தில் மெளனயோகி விட்டோபானந்தா இரண்டடுக்கு ஆசிரமத்தைக் கட்டும்போதெல்லாம் உடனிருந்த காஞ்சி ஊரார்களிடையில் இருந்து உதவியவர். இன்று வளைந்து விட்டார். ‘கேம்ப்’ கட்டிலில் வளைந்து உட்கார்ந்தவாறே, விட்டோபானந்தா ஆசியுடன் வழங்கும் விபூதிப் பிரசாதத்தின் கொள்கலமான தாளுறையை மடித்தவாறே இருந்தார். பேசினால் 5 உறையை மடிக்கும் நேரத்தில் 2 தான் மடிக்க முடியுமாம். இருந்தாலும் பல செய்திகள். மெளனயோகியின் விளம்பரப் படுத்திக் கொள்ளாத 14 ஆண்டு கர்மயோக வாழ்க்கையைக் குறித்து. இரவு 12:30 மணிவரை தொடர்ந்து, வளைந்த முதுகுடன், பணியாற்றி, பிறகு படுத்து உறங்கத் தொடங்கினார். இரண்டரை மணி நேரம்கூடத் தாண்டியிருக்காது.. ‘சில்’லென்று குளிர்காற்று கூடத்துள்ளே புகுந்தது. கதவு திறந்து, புதுச்சேரியிலிருந்து பருவதமலையறிந்த குழுவொன்று ‘தடபுட’வென்று உள்ளே நுழைந்தது. மயிலம் தாத்தா சுருண்டு படுத்திருப்பதைப் பார்த்தது. கவலைப் படவில்லை. கதவைச் சாத்தவுமில்லை. பெண்கள் ‘சளசள’ என்று பேசத் தொடங்கி விட்டனர். வைகறையில் பருவத மலையேற வேண்டுமென்று ஒருவர் ஒருவராகப் போய் குளிக்க ஆரம்பித்து விட்டார்கள். குளித்து வந்தவர்கள் கூந்தலை ‘அட்டை’ தட்டுவது போலத் தட்ட ஆரம்பித்தார்கள். நெளிந்தார் அவர். அந்த ஓரத்தில் படுத்திருந்த காஞ்சிபுரத்து சாமியான சி.பி.ஆர். சத்தம் கேட்டு ஓடிவந்து, ‘என்னம்மா.. நீங்கள்’லாம்.. இந்த மலைப் பக்கம் உங்களுக்கெல்லாம் தங்க இடம் கொடுத்திருக்கிறாரே மெளனசாமி.. எவ்வளவு பாதுகாப்பு கொடுத்திருக்கார்.. நீங்க இப்படிப் பண்ணுறீங்களே.. இது புனிதமான இடம் மட்டுமல்ல..இங்கதான் நாள்தோறும் மலைப்பக்கத்து ஊராருக்கு அன்னதானம் பண்ண மாவரைக்கிற மிஷின்கள்’லாம் இருக்கு ..அதோ பாருங்க.. இப்படி நீங்க தாட்டுற முடியெல்லாம் போய் கிரைண்டர்’ல விழாது? அதெல்லாம் போகட்டும்.. இங்க படுத்திருக்கிறாரே இந்தப் பெரியவர்.. என்ன வயசு தெரியுமா? கொஞ்ச நேரத்துக்கு முந்திதான் படுத்தார். ஏன் நீங்கள்’லாம் இப்படி ‘இர்ரெஸ்பான்ஸிபிளா’ இருக்கீங்க!” என்று திட்டியதுடன், அங்கேயே தன் தூக்கத்தை தியாகம் செய்து அவர்கள் ‘எல்லாம்’ முடித்துக் கிளம்பும் வரை உட்கார்ந்தும் கொண்டார். அவ்வப்பொழுது அவர்கள் திறந்துபோடும் கதவையும் மூடி மூடி வருவார். சங்கடத்தோடு அவரைக் கேட்டேன்: “ஏங்க இப்படி..இவங்களையெல்லாம் அனுமதிக்கணுமா?” சொன்னார்: “இவங்களெ சாமியார் அநுமதிக்கிலே’ன்னா வெளில கிடந்தும் ‘வேன்’ல கிடந்தும் வெறைச்சுப் போய்டுவாங்க.. மலைப்பக்கம் போய்க் குளிக்கவும் மறைப்புறம் போய் வரவும் இவங்களுக்கெல்லாம் முடியவும் முடியாது. ஏன், நமக்கே இந்த ஜாமத்துல அது முடியுமா? அதுக்குத்தான் சாமியார் இரண்டு வசதியான ‘டாய்லெட்’கள் கட்டி வச்சிருக்கிறார். கூடவே ‘பாத் ரூம்களையும்தான். எல்லாம் இலவசம். சுத்தமாவும் இருக்குதல்ல. இதோ மயிலம் தாத்தா தூங்குறாரே.. விடியக் காத்தால எழுந்து வளஞ்சுட்டே இவங்க போட்டதெல்லாம் பெருக்குவார். ‘உலகம் பாட்டி’ யும் சில சமயம் பெருக்கும்..” என்றார். நாங்கள் தங்கியிருந்த இடம் முன்பு மாட்டுக் கொட்டகையாக இருந்ததாம். ஒரச் சுவர் பக்கம் தண்ணீர்த் தொட்டி, பரவலாகக் கசிந்தது. கூடத்துக்குள்ளாகவே தவளைகள் சுதந்திரமாகச் சஞ்சரித்தன. குறும்புக்காரப் பூனைக் குட்டிகள் இரண்டு. அவை வெளியே போனால் அங்கிருந்த வாட்டசாட்டமான கறுப்புநாயிடம் மாட்டிக் கொண்டுவிடுமே என்று கவலைப்பட்டு அவ்வப்பொழுது அக்கறையுடன் ‘மியாவ்’ இட்டு எச்சரிக்கும் அவற்றின் தாய். இவற்றுக்கு ‘டாவு’காட்டும் சுறுசுறுப்பான எலிகள்.[என் பையில் தமக்கு வேண்டுமளவு மட்டும் துளையிட்டு தின்பண்டங்கள் களவாடியிருந்ததைப் புறப்படும்பொழுதுதான் கவனித்தேன்.] “ஜெகதோ தாரண..” கீதம் மென்மையாக ஆசிரமத் தியானக்கூடத்திலிருந்து இசைக்கத் தொடங்கியபொழுது மணி 3:15[24-12-2006]. காஞ்சிபுர சாமி என்னும் சி.பி.ஆர்.தான் அந்தத் தியானக் கூடத்துக்கான சிமெண்டை வழங்கியவர். இப்பொழுதும் அன்னதானமாகிற அரிசியை காஞ்சியிலுள்ள தன் மகனிடமிருந்து பெற்றுவந்து தருகிறார். நேற்று மாலை வேலூர் யுனைடட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேலாளர் தன் நண்பரான விரிவுரையாளரோடும் இன்னொருவருடனும் வந்து கணபதியை வழிபட்டுவிட்டு பின்மாலைப்பொழுதில் ‘டார்ச்’ விளக்குகளின் உதவியுடன் மலையேறிப் போனார். இன்று காலை திரும்பியவுடன் என்னிடம் சொன்னார்; “ உங்கள் குடும்பத்தார், என்னுடன் மலையேறியவர்கள், நள்ளிரவு பன்னிரண்டே முக்காலுக்குத்தான் மேல் ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தார்கள். என்ன இருந்தாலும்.. 6000 அடியல்லவா?” மயிலம் தாத்தா சொன்னார். “வழியெல்லாம் பாறைகள்தாம். மண்படிவங்கள் வேறு சறுக்கும். கடப்பாறை மலை, இடையில். தாண்டி மறுபடியும் பாறைகள்தாம்..” எந்த வேளையும் சாப்பாடு இல்லையென்று எவருக்கும் சொல்வதில்லை. நேற்றிரவு காய்ச்சல் ஓய்ந்த உடம்புடன், ஒரு பெரிய கையளவு இட்டலிகள், சூடாக, சாம்பாருடன் எல்லோருடனும் அமர்ந்து சாப்பிடக் கட்டாயப்படுத்தினார் காஞ்சிபுரம் சாமி.. மூர்த்தி என்ற இளைஞர், முற்றிலும் துறவுக்கோலத்துடன் அரைத் துண்டுடன் கடினமான சமையல் வேலைகளை அங்கே செய்வார்; அடுத்த பொழுது பார்த்தால் இங்கே தியானக் கூடத்துக்கு முன்னே இருக்கும் மூர்த்தங்களுக்கு வழிபாடு நிகழ்த்துவதில் உதவிக் கொண்டிருப்பார். ஊர் மக்கள் எந்தவித வித்தியாசமுமில்லாமல் வந்து உதவிக் கொண்டே இருப்பார்கள். துறவிகள் பலர் ஒவ்வொரு நடையிலும் நிறுத்தாத பந்திகளில் வந்து கவுரவமாய் ஊராருடனும் எங்களைப்போன்ற புதியவர்களுடனும் அமர்ந்து தங்கள் திருவோடுகளில் உணவுண்டு, நாங்கள் எவர்சில்வர் தட்டுகளைக் கழுவிக் குவிக்கும் இடத்தில் அவற்றைக் கழுவி வைத்துச் செல்வார்கள். அவர்களுள் ‘இரண்யன்’ என்றொருவர். பூர்வாசிரமப் பெயர் வேறாம். அவர் ‘விடுவிடு’வென்று வருவார். திருவோடு எடுத்துக் கழுவுவார். ஒருவரிடமும் பேசமாட்டார். தேவையான அளவு சாப்பிடுவார். பார்ப்பார். எந்திரம் போல எழுவார். யார்மேலும் பட மாட்டார். வாழைத் தோட்டம் போவார். திருவோடு கழுவி வந்து வைத்துவிட்டு வெளியேறுவார். வெளியே மலையேறும் பாதையில் உள்ள கல்லறையொன்றின் மேல் அமர்ந்து தியானம் செய்வார்; அங்கேயே ஓய்வெடுப்பார். ஆசிரமத்துள் தங்க மாட்டார். இப்படிப் பலர். சித்தார்த் என்ற சாமியார் இளைஞர். மெளனசாமிக்கு அவ்வப்பொழுது வந்து உதவுகிறார். மலையாளம் கலந்த தூயதமிழ் பேசுகிறார். பல செய்திகள். “மெகஸ்தனிஸ் வந்து பயணக் குறிப்பு எழுதினார் என்றல் ஏற்றுக் கொள்கிறார்கள். அகஸ்தியர் வந்து ஆசிரமம் நிறுவினார் என்றால் சிரிக்கிறார்களே!” என்று வருந்தினார். மிகவும் பரந்த மனப்பான்மை உள்ளவர். அரவிந்தாசிரமம் முதலான பலவேறு ஆசிரமங்களைப் பார்த்துச் சலித்துப்போய், கடைசியாக எங்கோ மூலையில் ‘வனாந்திரமாய்’ உள்ள மெளனயோகி விட்டோபானந்தா ஆசிரமத்தில் நிலைத்துவிட்டதாக ‘நிம்மதி’ப்பட்டார். திடமான சிவப்பான உடலை நன்றாக வைத்துக் கொண்டு எப்பொழுது பார்த்தாலும் ஆசிரமத்தில் எந்தப் பகுதிக்கும் போய் எல்லோருடனும் அன்பாகப் பேசி உதவுகிறார். மையிலம் தாத்தாவின் கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்து கண்களில் அன்பொழுக அவர் பேசியதைப் பார்த்தபொழுது நினைத்தேன்: “இதோ இந்த வயசாளி..கர்மயோகி..இப்பொழுது தன் வீட்டில் இருந்தால் இவருக்கு இந்த மரியாதை, விசாரிப்புகள், கூடத்துக்கு ஒவ்வொரு வேளையும் சென்று திருவோட்டில் காஞ்சித் தாத்தா உணவு வாங்கி வந்து தரும் அக்கறை, ஒவ்வொரும் கையில் ஏந்தித் தாங்கும் அன்பு, சமையல் பணி செய்யும் அம்மாவின் கவனிப்பு, வெளியே ஊருக்குள் இருந்து நாள்தோறும் வந்து பணிசெய்யும் அந்தம்மாவின் மகள்[திருமணமானவர்] காட்டும் கரிசனம் எல்லாம் கிடைக்குமா?..இல்லை, இவர் ஒரு நகரத்தில் முதியோர் இல்லத்தில் இருந்திருந்தால் இந்த நிம்மதி இவருக்கு வந்திருக்குமா?..” ஆம். நினைத்தபடி எல்லோருக்கும் வாழ்க்கை அமைவதில்லை. அமைவதைப் போற்றிக் கொள்ளவும் பலருக்கு ஆவதில்லை. ஒருநாள் ஆசிரம வாழ்க்கையை நிறைவேற்றிக் கொண்டு கிளம்பினேன். அனைவரிடமும் விடைபெற்றேன். கேட்டார்கள். சொன்னேன், எங்கு, என்ன பணி புரிந்தேன் என்று.. முன்போலவே இருந்தார்கள்.. காஞ்சிபுரம் சாமி சொன்னார்: “உங்கள் மாநில முதல்வர் இங்கு வரும் மூன்றாம் தேதி வருவதாக உள்ளார்.” ஆம். எங்கள் முதல்வர் ரங்கசாமியும் எளிமையானவர்; எளிமை விரும்புபவர்தாம். தெரிந்ததுதானே! ****** நன்றி: திண்ணை.காம்

15.2.07

புலம்பெயர்ந்தோர் இலக்கியம் உருவாக்கும் இலக்கியக் கொள்கை-தேவமைந்தன்

இன்றைய இலக்கியம் என்ற தொடரில் ‘இன்றைய’ என்ற பகுதியின் கால வரையறைப் பொருள் பலராலும் தவறாகக் கணிக்கப்படுகிறது. உள்ளபடியே இன்றைய தமிழ் இலக்கியம் என்பது ஆற்றலுடன் வெளிப்பட்டு வரும் தலித் இலக்கியத்தையும் பெண்ணிய இலக்கியத்தையும் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தையுமே குறிக்கும். ‘தமிழ்கூறு நல்லுலகம்’ என்று உள்ளபடியே ஆகிவிட்ட உலகத் தமிழ் இலக்கியப் பரப்பில் ‘இன்றைய தமிழ் இலக்கியம்’ என்ற புலத்தை அதற்குரிய எல்லா வாழ்க்கைத் தகுதிகளுடன் நியாயப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் புலம்பெயர்ந்தோரே. ‘புலம் பெயர்ந்தோர்’ என்போரும் இரண்டு வகைமாதிரிகளாகப் பகுக்கப்பெறுகிறார்கள். முதல் வகையினர், ஈழதேசியப் போர்களில் பல்வேறு இழப்புகளுக்கு உள்ளாகி உலகத்தின் வேறு புலங்களில், அதிலும் குறிப்பாக அதிகமாக ஐரோப்பாவில் இப்பொழுது உழைத்து வாழ்ந்து கொண்டே தமிழிலக்கியம் படைப்பவர்கள். இரண்டாம் வகையினர், இந்தியத் தமிழ்நாட்டிலிருந்து வேறு புலங்களில் போய் உழைத்து வாழ்க்கை நடத்திக் கொண்டே தமிழிலக்கியம் படைப்பவர்கள். இந்த இரண்டுவகைமாதிரிகளில் முதல் வகையினருக்குச் சான்றுகளாக ‘எஸ்.பொ.’ என்றழைக்கப்பெறும் எஸ். பொன்னுத்துரை, சி. புஸ்பராஜா, ‘சோலைக்கிளி’ என்ற புனைபெயருடைய யு.எல்.எம். அத்தீக் முதலானவர்களையும்; இரண்டாம் வகையினருக்குச் சான்றுகளாக நாகரத்தினம் கிருஷ்ணா[கடல்கடந்து வாழும் தமிழர்களின் ஆகச் சிறந்த படைப்பாகத் தன் ‘நீலக் கடல்’ புதினத்துக்குத் தற்பொழுது விருது பெற்றுள்ளவர்] அபுல் கலாம் ஆசாத்[தமிழில் கானாப் பாடல்கள் பதிவு; கஜல் பாடல்கள் மொழியாக்கம் செய்துள்ளவர்] முதலானவர்களையும் குறிப்பிடலாம். இவர்களுள் பிரான்சில் பல ஆண்டுகள் வாழ்ந்து அண்மையில் சென்னைக்கு மருத்துவ உதவி பெற வந்து பிரான்சுக்கு மீண்டபின் மறைந்த சி. புஸ்பராஜாவின் ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’[வெளியீடு:அடையாளம், 1204-05[இரண்டாம் தளம்], கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621310] என்பது உன்னதமானதொரு தன்வரலாற்று இலக்கியம் என்பதை விடவும் மிகவும் சிறப்பான ஆவணம் என்பதே பொருந்தும். இருப்பினும் அதன் 632 பக்கங்களையும் வாசிக்கும் பொழுது புலனாகும் - எதார்த்தமானதும், ஒருவரைத் தமது சொந்த வாழ்க்கைக்கே அன்னியப்பட்டுப் போகவைக்கின்றதும் ஆன பெருந்தேசியவாதிகளின் பேரினவாத ஒடுக்குமுறை குறித்த நுணுக்கமான சித்திரிப்பு அப்படைப்பை இலக்கியமாக்கி விடுகிறது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வசதியான பதவியையும் வாகான சமூக உறவுகளையும் வைத்திருப்பவர் இத்தகையதொரு படைப்பை உலகுக்கு வழங்க முடியாது. இத்தகைய படைப்பிலக்கியம் பெருந்தேசியவாதம் என்பது பேரினவாத ஒடுக்குமுறைக்குத்தான் வழிவகுக்கும் என்ற நுண்ணரசியல்(micro politics) உண்மையை முன்வைக்கிறது. எஸ்.பொ.’வின் விரிவானதும் நுட்பம் மிக்கதுமான தன்வரலாறான ‘வரலாற்றில் வாழ்தல்’ என்பது படைப்பாளியை உள்ளடக்கிக் கொண்டுவிடுகிறது. அகன்றதொரு புலமாகவும் ‘அகண்ட பிரபஞ்சம்’ போலவும் சமூக மனிதனாக வாழும் ஒருவனுக்கு நேரக்கூடிய எல்லா வகைமாதிரியான பிரச்சினைகளையும் அது முன் வைக்கிறது. வெளியே சொல்லக் கூசுகின்ற வயணங்களைக்கூட அது விட்டு வைக்கவில்லை. தன் தேசமே பேரினவாதத்தால் செயற்கையாக எல்லைகள் அழித்து மறைக்கப்படும் பொழுது எப்படிப்பட்ட இழப்புகளை, பிரிவுகளை, சொந்த அடையாளமிழத்தல்களை, புலப்பெயர்வுகளை ஒரு சமூக மனிதன் எதிர்கொள்கிறான் என்ற மனித அனுபவத்தை வாசிப்பில் உருவாக்குகிறது. ‘காகம் கலைத்த கனவு’ எனும் கவிதைத் தொகுப்பில் இடம்பெறும் கவிதையான ‘காகம் கலைத்த கனவு’ என்பது புலம்பெயர்ந்தோர் இலக்கியமே இன்றைய இலக்கியமாகும் தன்மைக்கு ஒரு சான்று. காகம் கலைத்த கனவு கைவேறுகால்வேறாய்அங்கங்கள் பொருத்திப் பொருத்திமனிதர்கள் தயாரிக்கப்படுவதைநேற்று என் கனவில் கண்டேன். கண்கள் இருந்தன ஒரு பைக்குள்மூக்கும் இருந்தது இன்னொன்றில்முழங்கால் பின் மூட்டுவிலா குதி எல்லாமேஏற்கனவே செய்து கடைகளிலே தொங்க-தம்பதியார் வந்தார்கள்புரட்டிப் புரட்டிச் சிலதைப்பார்த்தார்கள் பின்னர்விரும்பியதை எடுத்தார்கள்கொண்டுபோய் கோர்வைசெய்யக் கொடுத்தார்கள். வானம் புடவையாய் வெட்டுண்டுகிடந்தது வீதியாய்நான் நின்ற பாதை. ஒருவன் வந்தான்துவக்கோடு பூனை எலிதேடி அலைவதனைப்பார்த்துப் புன்னகைத்தான்அப்புறமாய் வீட்டுக்குள் நுழைந்துகாலில் இருந்த இருதயத்தைக் கழற்றிமனைவியிடம் கொடுத்துவிட்டுப் படுத்தான். வெயிலோ கொடுமைஎரிச்சல் தாங்கவில்லைஅவன் பெண்டாட்டி எழுந்தாள் போனாள் அங்கிருந்தபொத்தானை அழுத்திவிட்டு நிமிர்ந்தாள்.இரவு!உடனே சூரியன் மறைந்ததுநிலவு!நான் இன்னும் கொஞ்சம் கண்ணயர்ந்து போயிருந்தால் ஆண்டவனைக் குடும்பியிலே இழுத்துதன்னுடைய புறங்காலை வணங்கச் செய்திருப்பாள்மனிசி!காலம் எனக்கு அவ்வளவு மோசமில்லைஎங்கிருந்தோ இந்த நூற்றாண்டுக் காகம்கத்தியதுஇடையில் நின்று முக்கியதுகா.....கா.... இதைவிடவும் கூடுதலாகவும் ஆகக் கூர்மையாகவும் போரின் உக்கிரத்தை, இனப் படுகொலைகளைத் தொலைநோக்குடன் கண்டிக்கும் மனச்சாட்சியுள்ள கவிதை இன்னொன்றும் இத்தொகுதியில் உள்ளது. அது - தொப்பி சப்பாத்துச் சிசு தொப்பிகாற்சட்டை சப்பாத்துஇடுப்பில் ஒரு கத்தி மீசைஅனைத்தோடும் பிள்ளைகள் கருப்பைக்குள் இருந்து குதிக்கின்ற ஒருகாலம் வரும்.அந்ததொப்பி சப்பாத்துச் சிசுக்களின் காலத்தில்பயிர்பச்சை கூட இப்படியாய் இருக்காது.எல்லாம் தருணத்தில் ஒத்தோடும்.சோளம் மீசையுடன் நிற்காது.மனிதனைச் சுட்டுப் புழுப்போல குவிக்கின்றதுவக்கை ஓலைக்குள் மறைத்துவைத்து ஈனும்.வெள்ளை சிவப்புஇளநீலம் மஞ்சள்என்று கண்ணுக்குக் குளிர்த்தியினைத் தருகின்றபூமரங்கள் கூடசமயத்திற்கொத்தாற்போலத் துப்பாக்கிச் சன்னத்தைஅரும்பி அரும்பிவாசலெல்லாம் சும்மா தேவையின்றிச் சொரியும். குண்டு குலைகுலையாய் தென்னைகளில் தொங்கும்இளநீர் எதற்கு?மனிதக் குருதியிலே தாகத்தைத் தணிக்கின்றதலைமுறைக்குள் சீவிக்கும்,கொய்யா முள்ளாத்தைஎலுமிச்சை அத்தனையும்நீருறுஞ்சி இப்போது காய்க்கின்ற பச்சைக்காய்இரத்தம் உறுஞ்சும் அந்நேரம் காய்க்காது. வற்றாளைக் கொடி நட்டால்அதில் விளையும் நிலக்கண்ணிவெண்டி வரைப்பீக்கைநிலக்கடலை தக்காளிஎல்லா உருப்படியும் சதை கொட்டை இல்லாமல்,முகர்ந்தால் இறக்கும்நச்சுப் பொருளாகஎடுத்தால் அதிரும்தெருக்குண்டு வடிவாகஉண்டாகிப் பிணமுண்ணும் பேய்யுகத்தை வழி நடத்த...உள்ளியும் உலுவாவும் சமைத்துண்டு ருசிபார்க்கும்மனிதர் எவரிருப்பார்?கடுகு பொரித்த வாசம்தான் கிளம்புதற்கும்ஆட்கள் அன்றிருக்கார்!இவர்கள்பொக்கணிக் கொடியோடு பிறந்த ஒருவகைப்புராதன மனிதர்களாய்ப் போவர். இவ்வாறாக புலம்பெயர்ந்தோர் படைப்பிலக்கியம், பேரினவாத எதிர்ப்புக் கொள்கையையும் பெருந்தேசியவாதம் என்பது பின்னொருநாள் பேரினவாதத்தின் ஒடுக்குமுறைக்குத்தான் வழிவகுக்கும் என்ற நுண்ணரசியல் உண்மையையும் இவற்றை ஆதரிக்கும் இலக்கியவாதிகள் உட்பட எவரும் போரழிவாம் பேரழிவிலிருந்து தப்பிக்க முடியாமல் “பொக்கணிக் கொடியோடு பிறந்த ஒருவகைப்புராதன மனிதர்களாய்ப் போவர்” என்ற எச்சரிக்கையையும் தெள்ளத் தெளிவாகப் புலப்படுத்துகிறது. நன்றி: cOlaikkiLi (U. L. M. Atheek), kAkam kalaitta kanavu (in Tamil Script, Unicode format). E-text Preparation: Dr. N. Kannan, Boeblingen, Germany & R. Padmanabha Iyer, London, UK. PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, SwitzerlandSource acknowledgement: Suvadugal Pathippagam, Herslebs GT-43, 0578 Oslo 5, Norway) **** (புதுவைப் பல்கலைக் கழகம், சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலத்தின் பயிலரங்கத்தில் 29.01.2007 அன்று வாசித்தது)

உயர்வான நோக்கம் எது? - பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கோட்பாட்டுப் பாடல்

உயர்வான நோக்கம் எது? - பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கோட்பாட்டுப் பாடல் - தேவமைந்தன் “பணத்தால் ஒரு மனிதனை மதிப்பது என்றால் ‘ரிசர்வ் பேங்’கைத்தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் - பெரிய ‘லைப்ரெரி’யைத்தான் மதிக்க வேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டுமானால் ‘என்சைக்ளொபீடியா’..வை மதிக்க வேண்டும். இப்படியாக அனேகமானவற்றை ஜீவனில்லாதவைகளிலும் காணலாம். ஆதலால், நாம் மனிதனை மதிப்பது, பேசுவது, நினைவுறுவது என்பவையெல்லாம் இவைகளை உத்தேசித்தல்ல..தன்னைப் பற்றிய கவலையும், தனது மேல்வாழ்வின் தன்மை என்பதையும் அடியோடு மறந்து, மனித சமுதாய வாழ்வின் மேன்மைக்காகப் பணியாற்றவே மற்ற மனித சீவன்களுக்கு இருக்க முடியாத வசதி என்னும் தன்மை, தொண்டாற்றும் சக்தி ஆகியவை இருக்கின்றன என்று கருதி - தன்னலத்தையும் தன் மானாபிமானத்தையும் விட்டு எவன் ஒருவன் தொண்டாற்றும் பணியை வாழ்வாகக் கொண்டிருக்கிறானோ, அவன்தான் மற்ற சீவப் பிராணிகளிடமிருந்து வேறுபட்ட மனிதத் தன்மை கொண்ட மனிதனாவான்” என்று பெரியார் 1945ஆம் ஆண்டு ஆற்றிய சொற்பொழிவைக் ‘குடி அரசு’ 14/4/1945 இதழ் வெளியிட்டது. முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பின் பெருஞ்சித்திரனார் பாடினார்: “தனிமானம் கருதாமல் தனிநலத்தை விரும்பாமல் தமிழ்மானம் தமிழர்நலம் கருதுவோர்கள் இனியேனும் தமிழ்நிலத்தில் எழுந்திடுக! பொதுத்தொண்டில் இறங்கிடுக! எந்தமிழர்க் கேற்றம் காண்க!” (கனிச்சாறு 1:50 ‘தவிராமல் தமிழ்நலம் காக்க!’) சமூகத் தொண்டுக்குப் பெரியார் அறிவுறுத்திய கோட்பாடு, தலைமுறை ஒன்றின்பின் தமிழ்த் தொண்டுக்குப் பெருஞ்சித்திரனாரால் அறிவுறுத்தப்படுகிறது என்றால் அதன் பொருள் என்ன? சமூகம் திருந்திப் பகுத்தறிவு பெற்ற பின்னரே, மொழியினமும் மொழிநலமும் - பழைய தொண்டுக் கோட்பாட்டைப் பின்பற்றியே வென்றெடுக்கப்பெறக் கூடியவை என்பதுதான். பொதுநல உணர்வு ஒருவர்க்கு இல்லாது போனால் தொண்டு புரியும் எண்ணமே உள்ளத்தெழாது. ‘வாழ்வுக்கு நோக்கம் தேவை!’ என்ற தலைப்பில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ‘தென்மொழி’ இதழில் எழுதிய பாடல், வாழ்வின் அடிப்படையைக் கல்லி எடுத்து ஆகவும் எளிமையாய் எடுத்துக் கூறி வலியுறுத்துகிறது. நோக்கம் என்ற ஒன்றே இல்லாதவர்கள் இருக்கின்றார்கள். “கற்கின்ற காளையர்க்கும் கன்னியர்க்கும் இக்கால் கல்வியிலே பிடிப்பில்லை; அறிவிலில்லை ஆர்வம்! சொற்குன்றும் மொழிகளிலே சோர்வுபடப் பேசிச் சோற்றுக்கு வாழ்வமைப்பார்; உள்ளநலங் காணார்!” (கனிச்சாறு 1:29 ‘தமிழ் நெஞ்சம்!’) நோக்கம் இல்லாமல் போனால் என்ன ஆகும்? வாழ்க்கைக்கு என்று நோக்கம் ஒன்று வேண்டும். இல்லாவிட்டால் நொந்துபோய்ச் சாகவே நேரும். ‘நொந்தது சாகும்’ என்ற பாரதியின் புதிய ஆத்திசூடியின் கூற்று(புதிய ஆத்திசூடி:63) செயல்புரியத் தொடங்கும். நொந்துபோய் வாழ்பவருக்கு ஊக்கமும் இருக்காது. அதைப் பிறப்பிக்கும் உள்ளமும் நொடிந்து மடியும். எதிலும் சலிப்பு வருவதால் உழைப்பிலும் போதுமான பயன் விளையாது. உலகியலில் ஆர்வம் வராது. இனிப்பு கார்ப்பு கைப்பு உவர்ப்பு துவர்ப்பு புளிப்பு என்ற அறுசுவை வாழ்வில் புளிப்பு ஒன்றே ஓங்கி மேலும் சலிப்பை ஊட்டி வருத்தும். செல்வம் உற்ற பொழுது ஓடிவந்து சுற்றமாய்ச் சுற்றும் உறவுகள் எல்லாமும் அலுத்துச் சலித்து ஓய்ந்து போனவரைப் பொருட்படுத்தாது போனாலும் தாழ்வில்லை; கெக்கலி கொட்டிச் சிரிக்கும். “நோக்கம்’ எனஒன்(று) இல்லாது போனால், வாழ்க்கை நொய்ந்தே போகும்! - நம் உள்ளம் நொடிந்தே சாகும்! ஊக்கம் குறையும்: உழைப்பும் சலிக்கும்; உலகில் எதுவும் புளிக்கும்! - நம் உறவுகள் பார்த்தே இளிக்கும்! உருப்படியாய் எதுவும் செய்யத் தோன்றாது. ஏற்கனவே உள்ள அறிவும் குறைந்து போகும். அல்லல் படையெடுத்து வந்து தண்டு ஊன்றும். தம் மேல் பெற்றோரும் உற்றோரும் தோழரும் இயல்பாகக் காட்டுகின்ற அன்பு கூட மிகவும் கசப்பாகத் தோன்றும். மன அழுத்தம் ஏற்பட்டு உடலும் நலியும். நெஞ்சத்தில் வீண் அச்சங்கள் தோன்றுவதால் பொல்லாத் தவிப்பும் ஏற்படும். விளைவாகத் தற்கொலைக்கும் உள்ளம் திட்டமிடும். “ஆக்கம் குறையும்; அறிவும் மயங்கும்! அல்லல் படையொடு ஊன்றும்! - பிறர் அன்பும் கசப்பாய்த் தோன்றும்! தாக்கம் வந்தே உடலை வருத்தும்! தவிப்பும் நெஞ்சினை இறுக்கும் - நமைத் தற்கொலை செய்திடச் சறுக்கும்! “என் நோக்கம் பணத்தை ஈட்டுவதே!” என்பவர்களும் நோக்கம் அற்றவர்கள்தாம். ஏனென்றால் பணத்தை ஈட்டத் தொடங்குவார்கள். நாளடைவில் அதைப் பெருக்குவதிலேயே நாட்டம் கொள்வார்கள். ‘மக்கள் பணம்’ ஆகிய அரசு வரியைக் கட்ட வேண்டுமே என்று புழுங்கி, பதுக்குவார்கள். பல பயன்களை விளைவிக்காத பணம், தன்னை வைத்திருப்பவனைக் கொன்றே விடும். “சரி, என் நோக்கம் குணத்தால் சிறப்பது!” என்பவர்கள் மொழிவதைப் பார்த்தால் அது ஏற்புடையது போலவே தோன்றும். ஆனால் அதுவும் உண்மையில் நோக்கம் ஆகாது. ஏனெனில் குணக்குன்றுகளால் அவர்களுக்குத்தான் ஆக்கமே தவிர, ஏனைய குடிபடை(citizens)களுக்கு இல்லை. மேலும் அவர்களுக்கே கொள்ளை கொலை வழிப்பறி முதலான கொடுமைகள் பல எதிர்வருவதும் இயல்பு. “பணத்தை ஈட்டுதல் நோக்கம் ஆகாது; பதுக்கவும் பெருக்கவும் தூண்டும்! - பல பயன்களுக் கதில்வழி வேண்டும்! குணத்தால் சிறப்பதும் வாழ்வில் போதாது; குடிநலம் பெறல்அதில் இல்லை; - பல கொடுமைகள் எதிர்வரின் தொல்லை!” ஆகவே உயர்வான நோக்கம் என்பது, சலித்துச் சலித்துப் பார்த்த பின்பு சல்லடையில் கிடைக்கும் பொன்போல, பொதுநல உணர்வுதான். அதுவே புதுப்புது விளைவுகளுக்கு ஊக்கமும் நினைக்கவே கொடுமையான போர்கள் இல்லாத புதிய உலகுக்கு ஆக்கமும் ஆகும். எது உயர்வு எது இழிவு என்று எண்ணித் திட்டமிட்டுச் செய்தால் வருங்காலத் தலைமுறைகள் புதுமை என்று ஏற்று அதைச் செயல்படுத்துவர். மெய்யாகவே புதுமை என்று ஒன்றிருக்குமானால் இன்றைய நிலையில் “மக்கள் எல்லார்க்கும் எல்லாமும் பொதுவானவை” என்ற அடிப்படையில் அமையும் பொதுமை அரசமைப்புச் சட்டமே! “பொதுநல உணர்வே உயர்வான நோக்கம்; புதுப்புது விளைவுக்கும் ஊக்கம்! - கொடும் போரிலா உலகுக்கும் ஆக்கம்! எதுஉயர்(வு) எதுஇழி(வு) என்றெண்ணிச் செய்க! இனிவரும் மக்கட்குப் புதுமை! மக்கள் எல்லார்க்கும் எல்லாமே பொதுமை!” உயர்வான நோக்கம் பற்றிய கோட்பாட்டுப் பாடலை, பாவலரேறு பெருஞ்சித்திரனார் அளவுக்கு அவரது சமகாலப் பாவலர்கள் இயற்றியிருப்பார்களா? இயற்றியிருந்தாலும் இந்த அளவுக்கு நறுக்குத் தெறித்தாற்போல் அது குறித்துப் பாடலிலேயே கோட்பாட்டை உருவாக்கியிருப்பார்களா? நன்றி: கீற்று.காம்

27.10.06

நட்புக்குரிய மலர்களுக்கு ஒரு மடல் - தேவமைந்தன்

நட்புக்குரியீர்! நீங்கள் - எதன் வெளிப்பாடுகள்? எதன் நோக்கங்கள்? ஏதோ தோன்றி ஏனோ மறையும் இருத்தல்களும் போதல்களுமா உங்கள் வாழ்க்கை? பொருளற்றது என்று புடவியிலெதுவும் எங்கும் இல்லவே இல்லை. பொருளற்றது! அது அப்படித்தான்!! என்று சொல்லி விடுதல் மிகவும் எளிது. ஆனால் உங்களின் இருத்தல் எவரையும் உறுத்தாதது. எங்களின் இருத்தலில் நீங்கள் உடன் உறைபவர்கள். ஆகவே நீங்கள் வாழ்க, ஒருபகல், ஓரிரவுப் பொழுதேனும்…… (1993.போன்சாய் மனிதர்கள். தேவமைந்தன்)

புன்னகை பூக்கும் புல்வெளி மலர்கள் - தேவமைந்தன்

தரையினில் பரந்த பசுமை வானம். பசுமை வானில் புதியவிண் மீன்கள், பலநிறம் பூக்கும் புல்வெளி மலர்கள். நீங்கள் நடக்கும் பொழுது மிதிக்கும் பூக்கள். நடக்கும் பொழுது மிதிக்காமல், சற்று ஒதுங்கி நின்றே உற்றுப் பாருங்கள். புன்னகை பூக்கும் புல்வெளி மலர்கள்…… (1980.புல்வெளி.தேவமைந்தன்)

காணவில்லை, "வள்ளல்கள்..." - தேவமைந்தன்

அன்றெல்லாம் வழங்கினராம் அளவில்லாத கொடைகள்பல. எதைக்கேட்ட போதினிலும் அதைஅதை அந்தஅந்த முறைப்படி வாரிவாரி வழங்கிடவே வள்ளல்கள் வாழ்ந்தனராம். வாய்திறந்து கேட்காத தேருக்கும் மயிலுக்கும் நுண்ணுணர்வால் ஆராய்ந்து கொடைகள்தாம் அளித்தனராம். இன்றைக்கு- நாணக்கொடை இறக்குமதி நடிகையர்க்கும் நேர்மைக்கொடை கட்சிகளின் தலைவர்கட்கும் அறிவுக்கொடை ‘டவுன்லோடு’ எழுத்தாளர்க்கும் நினைவுக்கொடை வாக்காளும் மக்களுக்கும் உண்மைக்கொடை தொலைக்காட்சி நடத்துநர்க்கும் ‘லாஜிக்-கொடை,’ தொடர்களை இயக்குநர்க்கும் - தன் மானக்கொடை மனிதர்கள் அனைவருக்கும் கைசிவக்க வழங்குதற்கு வள்ளல் இல்லையே. ஈகைகளைச் செய்வதற்கு மனமும் தொல்லையே…

அழைக்காவிட்டால்தான் என்ன? -தேவமைந்தன்

ஒரு பெரிய மனிதரிடமிருந்து அழைப்பு வந்தது; இருந்தேன். ** அவர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வரவில்லை; நினைவினில் என்னைக் கொண்டவர்கள். அழைப்பனுப்பத்தான் மறந்தார்கள்... அதனால் என்ன?.. போனேன். தமிழ்வினைக்கு அழைப்பு என்பது முக்கியம் அல்ல என்பதால்......

மறதிப் பெருவெளி - தேவமைந்தன்

நினைந்து நடந்து முடிந்த நினைவுகள் வனைந்து மிடைந்து விளைந்த முடிவுகள் முகவரி இல்லா மொட்டை மடல்கள் மயங்கிப் பிறரை மிதிக்கும் செயல்கள் அகந்தை மிகுந்தே பிடிக்கும் அடவுகள் பிறரைப் பொறாமல் கிளப்பும் பொய்கள் வஞ்சக வாழ்த்தொடு போலிமைப் புனைவுகள் அனைத்தும் சிதைந்தே அடையாளம் இன்றி மறைந்துட் கலந்தே காணாது போகும் காலம் கடந்த பெருவெளி ஞாலம் மறந்த மறதி வெளியே…

கண்ணே!... இதன் உள்ளுறை என்ன?

கண்ணே! என்னூர் மலையின் பக்கம் ஒருநாள் நான் கண்ட காட்சி இது. ஒதுக்குப் புறமானதோர் ஒற்றைப்பெரும் பாறை. போயும் போயும் அதன்மேல் சின்னஞ் சிறிய சிட்டுக் குருவியொன்று மோதி மோதிப் பார்த்துச் சலித்தது. எப்படிச் சொல்வது? எவ்வாறு தெரிவிப்பது? கற்பாறைமேல் மோதாதே என்று.. சலித்துப் போனேன்.. புரிந்துகொண்டு பறந்துபோய் விடுமென நம்பி இறங்கி வீடு திரும்பினேன். நெஞ்சுக்குள், மூளைக்குள் குடைச்சல். அறியும் ஆர்வம். ஓரிரு நாட்கள் கடந்தன வறிதே. மீண்டும் மலையேறினேன். ஒற்றைப்பெரும் பாறை ஓரம் திரும்பினேன். திடுக்கிட்டேன். நைந்துபோய் சின்னஞ்சிறிய அதனுடல் ஈரமூறிய இறகுப் பந்தாய் வன்பாறைதன் காலடியில்.

எலிப்பொறி - தேவமைந்தன்

வடைக்காசைப் பட்டு மாட்டிக் கொண்டாயிற்று. உள்ளே ஓடிஓடி கதவொடு மோதி கம்பியை ஆட்டி ஓய்ந்துபோய்ச் சுருண்டு போனதும் தப்பில்லை. எப்படியும் கோணி சுருக்கித்தான் கதவைத் திறக்கப் போகிறார்கள். அதில்தான் இன்னும் ஆபத்துள்ளது. அனுபவசாலிகள், ஓட்டைக் கோணியைத் தவிர்த்து விடுவார்கள். கட்டையோடு சுற்றிலும் நெஞ்சக் குறுகுறுப்போடு முரட்டுப் பயல்களும் நிற்கக்கூடும். ஆகவே, மிச்சமிருக்கும் சுவையுள்ள வடையையும் தின்று முடி. ஒருகை பார்ப்போம். அடுத்தவர் எல்லைக்குள் எதை நாடியும் மறந்தும் புகாதிருக்கத் திட்டமிடு மனமே, ஒருவேளை நாம் வெற்றிபெற்று விட்டால்.

16.10.06

முப்பட்டைச் சுரண்டலும் ஆணியமும்

முப்பட்டைச் சுரண்டலும் ஆணியமும் - தேவமைந்தன் வீட்டிலும் வைகறைக்கு முன்பே வேலை தொடக்கி, கணவனெனும் மேலதிகாரிக்கு வேண்டிய தட்டை வாகாக வைத்து, அதன்மேல் தேவையறிந்த சிற்றுண்டியை முகம்பார்த்து வைத்து, சூடாய்க் குடிநீரும் சுக்குநீரும் காபியும் கொண்டுவந்து வைத்து, ‘மூடு’அறிந்து “ஏங்க போய் வரவா?” - விலுக்விலுக்கென்று தோளில் புடைத்திருக்கும் பைதொங்க, அதிலொரு அழுக்கான ‘வாட்டர் பாட்டில்’ மூடி தலைநீட்ட, அவசரப் பவுடர் பூச்சு மயில் கழுத்து வரிகள்போட, தாறுமாறாய் ‘டூவீலர்’ கிளப்பி, ‘அவனை விடவும் அதிக சம்பளம்’ போவது, அலுவலக மேலதிகாரியிடமும் திட்டுவாங்கவா.. இரட்டைச் சுரண்டலும் போய், முப்பட்டைச் சுரண்டல் - இப்பொழுது எண்ணற்ற பெண்களுக்கு. காரணம், அவர்கள் வாங்கத் தயாராகவுள்ள போலிச் சம்பளத்தை ஆண்களுக்குத் தரமுடியுமா? சொல்லிவைத்தாற்போல் எப்படி சகோதரிகள் பலரும் ஆகவும் குறைந்த சம்பளத்துக்கு அதிகஅதிகமாய் வேலைவாங்கும் விளக்குகளுக்கு விட்டில்கள் ஆகிறார்கள்? இதில்வேறு “போன் எதுவும் பேசாதே! லஞ்ச் டயமானாலும்..” ‘வெரி ஸ்ட்ரிக்ட் இன்ஸ்டிடூஷன் சார்!” - இளித்துக் கொண்டு சொல்கிறார்கள், அதிக சம்பளம் குறைந்த வேலைக்கு வாங்கும் ‘புண்ணியங்’கள். பெண்ணியம், அரசாங்கம் போல். சாதனைப் பெண்கள் கலர்கலராய் வார இதழ்களில். ஆமாம்..திருவள்ளுவரே! “இருவேறு உலகத்து இயற்கை”.. மெத்தவும் சரிதான். கோலெடுக்காமல் மிரட்டினார் என் பெண்ணியத் தோழி... “பெண்களைச் சுரண்டுபவர்கள் ஆண்கள்தாம்; பெண்களைப் பெண்களே சுரண்டுவது போலத் தான்றவும் தோன்றும்தான்; அதற்குப் பின்னாலும் இருப்பது ஆணாதிக்கமே... “அம்மா சொன்னால் இவன் ஏன் வாங்குகிறான்? அம்மா ஊற்றினால் இவன் ஏன் கொளுத்துகிறான்?” -ஆமாம் என்று சொன்னால், அதுவும் ஆணாதிக்கத்தின் பாசாங்கேதான். -இல்லை என்று மறுத்தாலோ அது ஆணாதிக்க மூர்க்கம்.... “அது சரி கம்ராது!* இந்தக் குறைஞ்ச சம்பளத்துக்கு இத்தனைபேர் போறாங்களே!..” “ஏம் போறாளுவ.. ஆம்பள வெரட்டாம வெரட்டறான்..” *** கம்ராது = ‘தோழா’ என்பதற்கான பிரஞ்சுத் தமிழ்ச்சொல். தோழமை மிக்க ஆண்களும் பெண்களும் பிரான்சிலும் புதுச்சேரியிலும் இவ்வாறு பேசிக்கொள்வதுண்டு.

இணைய இதழா, அச்சிதழா? எது நீடிக்கும்?

இணைய இதழா, அச்சிதழா? எது நீடிக்கும்? - பேராசிரியர் அ.பசுபதி(தேவமைந்தன்) ஓர் இதழ் மிகுந்த விற்பனையுள்ளதா, குறைந்த விற்பனை உள்ளதா, அப்படியாயின் அது பேரிதழா சிற்றிதழா என்ற வினா மறைந்துபோய், இணைய இதழா அச்சிதழா இன்றைய வளர்ச்சியில் எது நீடிக்கும் என்ற வினா உலகம் முழுதும் எழுந்துள்ளது. இணைய இதழ், அச்சிதழ் - இவற்றுள் எது சிறந்தது? என்ற வினாவைத் திண்ணை இணைய இதழில் (ஆகஸ்ட் 10, 2006;வியாழன்) எழுப்பியுள்ளார் ஜெர்மனியில் வாழும் சந்திரவதனா செல்வகுமாரன். இணைய இதழ்களின் வரவால் இன்றைய ஜெர்மனிய இதழ்கள் ஆட்டம் கண்டுள்ளன என்கிறார் அவர். இந்த நிலையில் நமது இதழ்கள் நாளேடுகளின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என்று ஆர்வமுறுகிறார். ஈழத் தமிழர்கள், பன்னாட்டுத் தொடர்பும் இடையூடாட்டங்களும்[interactions] கொண்டவர்கள் என்பதால் அவர் எழுப்பியுள்ள வினா, அவர்களைப் பொறுத்தவரை பொருள் மிகுந்ததுதான். கரணியம், அவர் விதந்தோதியுள்ள 'பூவரசு' என்ற இதழ், தன் பதினேழாவது ஆண்டில் தொடர்ந்து அச்சுப் பதிப்பாக வருவதா அல்லது இணைய இதழாகி விடுவதா என்ற இக்கட்டுக்கு உள்ளாகி இருக்கிறது. புலத்தில் படைப்பாளரும் இதழ் வெளியீட்டாளரும் மிகுந்த பணநெருக்கடிக்கு ஆளாகிறார்கள். உள்ளூரில் வெளியாகும் பேரிதழ்கள்தாம் படைப்புகளுக்குப் பணம் தர முடியும். வேறுவகையில் சொன்னால் புலத்தில் வெளியாகும் பரவலான வாசிப்புடைய இதழின் வெளியீட்டாளருக்கு உள்ள பொருளியல் நிலையும் உள்ளூரில் நடத்தப்பெறும் சிற்றிதழ் வெளியீட்டாளருக்குள்ள பொருளியல் நிலையும் ஒன்றேதான். இணைய இதழ் நடத்துவோர் ஆண்டுக்குச் செலவிடும் தொகை, பரவலான சிற்றிதழொன்றுக்கு மாதமொன்றுக்குத்தான் சரிவரும். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இப்பொழுது ஒரு காசும் செலவு செய்யாமல் இணைய இதழை நடத்தும் வாய்ப்பை இணைய நிறுவனங்கள் தர முன்வந்திருப்பதுதான். பணத் தட்டுப்பாட்டுடன் இணைய இதழை நடத்தி மாய்வதைவிட, வருமானத்துக்குரிய பணியொன்றைச் செய்துகொண்டே மனநிறைவுடன் தொடர்ந்து தன்னிதழை, மேலதிகமான வாசகர்ப் பரப்புடன் நடத்தக்கூடிய வாய்ப்பு வருகிறதெனில் விடுவாரா, அவ்வாறு இக்கட்டில் உள்ள ஓர் இதழாசிரியர்? 'பூவரசு' இதழாசிரியரைக் குறித்து நான் இவ்வாறு சொல்லவில்லை. ஏனெனில், அவர் அதை வாசகரிடம் விட்டிருக்கிறார். அவர்கள் எவ்வாறேனும் அவ்விதழைத் தொடர்ந்து நடத்தவே வேண்டும் என்று கருத்துரைத்திருக்கின்றனர். பழகிவிட்ட கண்களுக்கு, அச்சுப்பதிப்பாக வரும் இதழ் தரும் மனநிறைவு இணைய இதழால் வராது. இது உண்மையே என்றாலும், தொடர்புடையதே. பொதுவாக இன்றைய தலைமுறையில் உள்ள வளரிளம் பருவத்தினர் இணைய இதழை வாசிக்கவே விரும்புகின்றனர். நான் வழக்கமாக இணையமுலவும் நடுவத்தில், அதை நடத்துபவர் ஒழுங்குக்கு முதன்மை கொடுப்பவரென்பதால், ஆக்கவழியில் இணையமுலவும் வளரிளம்பருவத்தினர் பலர் வந்து செல்கின்றனர். அவர்களுள் பல்கலை மாணவர் ஒருவரிடம் இது குறித்துக் கேட்டபொழுது, தமிழ்நாட்டில் விற்பனையில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் வார இதழ் ஒன்றை, நாள்தோறும் பகுதி பகுதியாக அவர் படிக்கிறார் என்றும் ஏணைய இணையம் உலவும் பொழுதைத் தன் ஆய்வுப் பணித்திட்டம் உருவாக்கச் செலவிடுகிறார் என்றும் அறிந்து கொண்டேன். அந்த வார இதழ் விலை பத்துரூபாவுக்கும் குறைவுதானே, ஒரு முறை வாங்கிக் கொண்டால் போதுமே, கையிலோ பையிலோ வைத்துக் கொண்டு இதேபோல் வாரம் முழுதும் வாசிக்கலாமே என்று கேட்டேன். அவர் சொன்ன மறுமொழி என்னைப் பெரிதும் ஆச்சரியப்பட வைத்தது. "ஒரு மணிநேரத்துக்கு இங்கு இணையம் உலவப் பதினைந்து ரூபா. இதே சாலையில் மேல்நிலைப் பள்ளியருகில் பன்னிரண்டு ரூபாதான். சூழ்நிலை, அப்பா வழங்கும் கைப்பணம் ஆகியவற்றைப் பொறுத்து அங்கும் இங்கும் இணையமுலவுவேன். பணித்திட்டத்தைத் தரவுகளிலிருந்து தட்டெழுதும்பொழுது சலிப்பு வரும். அப்பொழுது, வந்தவுடன் முகவரியிட்டு வரவழைத்து சுருக்கி(minimise)வைக்கும் அவ்விதழை விரிவாக்கி வாசித்துவிட்டு மீண்டும் பணித்திட்டத்தில் இறங்குவேன். இதனால் எனக்கு வேலையும் நடக்கிறது. நான் விரும்பும் இதழை இலவசமாகவே வாசிக்கவும் முடிகிறது. அதை வாங்கி, அடுத்தவர் கேட்டு, அவருக்குக் கொடுத்து, திரும்பப் பெற துன்பப்படவும் வேண்டியதில்லை. தூசியுமில்லை. பழையதாள் கடைக்குச் சுமந்து சென்று தொல்லைப்பட வேண்டியதுமில்லை" என்றார் அவர். என் அடுத்த வினாவையும் கேட்டேன். "நீங்கள் வாசிக்கும் இதழ் முழுவதையும் இலவசமாகத் தருவதில்லையே! கதை, கட்டுரைகளின் முதற்பகுதியைத்தானே தருகிறார்கள்..'மேலும் வாசிக்க' என்று கேட்டால், நம் மின்னஞ்சல் முகவரி கேட்கிறார்கள். தொகை அனுப்பச் சொல்கிறார்களே..." என்றேன். அவர் மர்மமான புன்னகையொன்றை உதிர்த்தார். "குறிப்பிட்ட சாவி மட்டும்தான் பூட்டைத் திறக்குமா?" - என்று விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளத்தின் பாணியில் வினாவொன்றை உதிர்த்துவிட்டு, தன் ‘டூவீல’ரைக் கிளப்பிக்கொண்டு போய்விட்டார். "இணையங்களின் வரவுக்குப் பின், குறிப்பாக வலைப்பதிவுகளின் வரவுக்குப்பின் [அச்சுப்] பதிப்புகளோடான ஊடாடல் வாசகர்களிடையே குறைந்துவிட்டதுதான் அப்பட்டமான உண்மை" என்று சொல்லும் சந்திரவதனா, "எப்போதுமே [அச்சுப்] பதிப்பாக வரும் ஒன்றுக்கு இருக்கும் தனித்தன்மை இணைய இதழ்களுக்கு இல்லை.." என்ற தெளிவான கருத்துடையவர் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அதனால்தான், நானும், எனக்கென்று மூன்று இணைய வலைப்பதிவுகள் உள்ளபொழுதும் அவற்றை விடாது இடுகைகளிட்டு நிகழ்த்துவதுடன், தொடர்ந்து அச்சிதழ்களுடன் ஊடாடியும் படைப்புகள் தந்தும் வருகிறேன். இளந்தலைமுறையினரில் விதிவிலக்கானவர்களைத் தவிர எல்லோரும் வகைவகையான ‘மொபைல்’களுக்குச் செலவிடுகிறார்கள்; ‘ஸ்ப்ரே’க்களுக்குச் செலவிடுகிறார்கள்; திரைப்படங்களுக்குச் செலவிடுகிறார்கள்.[திரைப்படம் ஒன்றுக்குச் சீட்டு, நொறுக்குத் தீனி, ‘சாஃப்ட் டிரிங்ஸ்’ ஆகியவற்றுக்கு ஆகக்குறைவாக ஐம்பது ரூபாவாவது தனக்குச் செலவாவதாக தொ.கா.'வில் ஓரிளைஞர் குறிப்பிட்டார். தான் நண்பர்களுக்குச் செலவிடுவதோ, கெட்ட பழக்கங்களுக்குச் செலவிடுவதோ இல்லை என்றார். தனக்குப் பிடித்த படத்தை இவ்வாறு குறைந்தது ஏழு,எட்டு முறையாவது பார்த்துவிடுவாராம். "ஒரு வாரத்துக்கு எத்தனைப் படம் பார்ப்பீர்கள்?" என்ற கேள்விக்கு, "எப்படியும் ஏழுக்குக் குறையாது!" என்றார். வாரத்துக்கு ஏழு நாட்கள்தாமே!...] ஆனால் புத்தகத்தையோ, இதழையோ காசு கொடுத்து வாங்க விரும்புவதில்லை. தரமான இதழ் என்றால் சொல்ல வேண்டுவதே இல்லை. பணிக்குச் செல்லும் பெண்டிரும், இல்லத்தரசியருள் பலரும் வாடகை நூலகங்களையே பெரிதும் பயன்படுத்துகின்றனர். எட்டு ரூபா இதழை இரண்டு ரூபா வாடகைக்குத் தரும் அத்தகைய நூலகங்களுக்குப் போட்டியாக, ஒரு ரூபாவுக்கே தரும் ‘மொபைல்’ வாடகை நூலகங்களும் உள்ளன. ‘டி.வி.எஸ். டூவீலர்’ அதற்கு வசதியாக உள்ளதாம். இணையம் உலவுவோரில் தொண்ணூறு சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள், இதழ்களை விலைகொடுத்து வாங்கி வாசிக்கும் மனம் இல்லாதவர்கள் என்பதே உண்மை. எதிர்வரும் 2010ஆம் ஆண்டளவில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள - ஐம்பது அகவைக்கு மேற்பட்டவர்களே இதழ்களை வாசிப்பார்கள் என்கிறது ஆராய்ச்சி. இதழ்கள் சிலவற்றுக்குப் படைப்புகளை அனுப்புவோர், தம் படைப்பு அதில் வெளிவந்துள்ளதா என்பதை அறிய, அவற்றை விலை கொடுத்து வாங்கிப் பார்த்தே அறிந்தாக வேண்டும் என்று கேள்விப்படுகிறேன். அதே பொழுது, மூன்று உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டால், சேர்த்து விடுபவருக்கு இலவசமாக இதழைத் தொடர்ந்து அனுப்பும் இதழ்களும் உள்ளன. படைப்பாளருக்கும் புரவலருக்கும் தனித்தனியே இதழ்களைப் பொறுப்பாக அனுப்பித் தரும் இதழ்கள் உள்ளன. இணைய இதழ் எனில் இந்தச் சிக்கல் எதுவுமில்லை. காலாண்டிதழ் ஒன்று. அதன் ஐந்தாவது இதழை வாசித்து முடித்துவிட்ட பின்பு, அதன் முன்னிதழ்கள் பாதுகாப்பாக வைக்கப்பெற்றுள்ள[ஓதமில்லாமல் வறண்ட]இடத்துக்குச் சென்று பார்த்தேன். முதலாம் இதழும் இரண்டாம் இதழும் பழுப்பாகி அச்செழுத்துகள் மங்கித் தெரிந்தன. இணைய இதழ் அவ்வாறில்லை. மின்னூலும் அப்படியே. இப்பொழுது கூகிள் தேடுதளத்தில் 'மரபுத் தொடர்கள்' என்று தட்டெழுதித் தேடினால் இலவசமாகக் கிடைக்கும் சோலைக்கிளி அவர்களின் 'காகம் கலைத்த கனவு' என்ற முழு மின்னூல், மதுரை மின் நகலகத் திட்டத்தாரால் உருவாக்கப் பெற்றுள்ளது. அதன் தலைவர், சுவிட்சர்லாந்தில் வாழும் டாக்டர் கல்யாணசுந்தரம் அவர்கள். ஜெர்மனியில் வாழும் திரு கண்ணன் அவர்கள், அத்திட்டத்தின் செயலாக்க ஆசிரியர். வடிவான நூல். என் மேசையின் சிறிய இழுவியுள் அது போன்ற இருநூறு நூல்களை வைத்துக் கொள்ள முடியும். இணைய இதழ்கள் பலவற்றை, "எதைக் கொண்டு போனோம்! அதைக் கொண்டு வருவதற்கு!" என்ற எதிர்மறை முறையில், உலவுபுலங்களில் வாசித்துவிட்டு வந்து விடுகிறேன். 'புதுச்சேரி' மின்னிதழை வாசிக்கும்பொழுதே கூடல், வார்ப்பு, திசைகள், தமிழோவியம், மரத்தடி, முத்தமிழ் மன்றம், திருக்குறள், எழில்நிலா, தமிழம், அன்புடன் புகாரி, அம்பலம், ஆறாம் திணை, கதம்பம், தமிழமுதம், தமிழ்மண், பதிவுகள், நிலாச்சாரல், நம் நாடி, சிஃபி, இ-சங்கமம், தமிழன் எக்ஸ்பிரஸ், கல்கி, மங்கையர் மலர், விகடன், குமுதம், திண்ணை, கீற்று ஆகிய இணைய இதழ்களையும் சுட்டிசொடுக்கி வாசித்துவிட முடிகிறது. இவற்றுள் கூடல், முத்தமிழ் மன்றம், திருக்குறள், தமிழம், தமிழமுதம், நிலாச்சாரல், சிஃபி தமிழ் ஆகியவை இணைய தளங்களும் கூட. குமுதம்(=குமுதம் குழும இதழ்களான தீராநதி முதலியவை), விகடன்(+ விகடன் குழும இதழ்களாகிய சுட்டி விகடன் முதலியவை), தமிழன் எக்ஸ்பிரஸ், மங்கையர் மலர், கல்கி ஆகியவை அச்சிதழ்களாகவும் இணைய இதழ்களாகவும் ஒரே நேரம் வெளிவருபவை. ஏன் இவை அச்சிதழ்களாக மட்டும் வெளிவரவில்லை? இவ்வாறு இணைய இதழ்களாகவும் வந்தால்தான் மேலும் பரவலான பன்னாட்டு வாசகர் வட்டத்தைப் பெறமுடியும் என்பதே விடை. இன்னும் மின்னிதழ்களாக வரும் நாளேடுகளும் உள்ளன அல்லவா? தினகரன், தினத்தந்தி, தினமலர் முதலானவையும் அவ்வகையில் குறிப்பிடத் தகுந்தவை. ஆகவே, மேற்குறிப்பிட்ட செய்திகளை வைத்துப் பார்க்கும்பொழுது, இன்றைய நிலையில் தரமானதோர் அச்சிதழாக வரும் ஒன்று, நீடித்து எதிர்காலத்திலும் தொடர்வதோடு நிலையாகவும் இருக்க வேண்டும் என்றால், மின்வெளியில்(Cyber Space)நுழைந்து இணைய இதழாகவும் திகழ வேண்டும் என்பது தெளிவாகிறது. **************************************

முதுமை வயது எல்லோருக்கும் வருமே!

முதுமை வயது எல்லோருக்கும் வருமே! - தேவமைந்தன் மனிதர்களின் இயற்கைக் குணங்களில் வேடிக்கையானது ஒன்று இருக்கிறது. அது என்ன என்றால், தனக்கு ஆகாதது - பிடிக்காதது - சரிவராதது போன்ற எதிர்மறைகள் எல்லாம் பிறர்க்கு மட்டுமே வரும் என்ற நம்பிக்கை. இதைப் போன்ற நம்பிக்கைகளைத்தான் மூடநம்பிக்கை என்று சொல்ல வேண்டும். ஏதோ தான் மட்டுமே இந்த உலகில் கோலோச்சிக்கொண்டிருப்பது போன்ற பிரமையில், அடுத்தவர்களைப் பற்றிய தீயசெய்திகளை நாள்தோறும் ஒலிபரப்பிக் கொண்டிருத்தல் என்பது இதைவிடவும் தேவையில்லாத நடவடிக்கை. இதைத்தான் அருணகிரிநாதர் தம் கந்தரநுபூதியில் 'ஜெகமாயை' என்ற சொல்லால் குறிப்பிட்டார். பொதுவாக நாள்தோறும் பேருந்துகளில் செல்லும்பொழுது, "என்ன, பெரிசு! அக்கடா'ன்னு வீட்டில இருக்கலாம்'ல? எதுக்கு இப்படி வெளிய'ல்லாம் போயி 'லோல்பட்டு லொங்கழியிறே!" என்ற இரக்கத் தொனியில் அமைந்த, ஆனால் இரக்கமே இல்லாத, ஏதோ தான்மட்டும் நிரந்தரமாக இளமை - இனிமை- வலிமை - புதுமைகளுடன் முரட்டுத்தனமான மாநகரப் பேருந்துகளை ஜல்லிக்கட்டில் அடக்கி ஓடவிட்டிருக்கிற 'வஸ்தாதுகள்' மாதிரிப் பேசுகிற இளசுகளின் குரலைக் கேட்டிருக்கலாம். அதைவிடவும் பரிதாபம், அப்படியொரு இளசின் பேச்சுகளைக் கேட்டுவிட்டுத் தன் தோழியிடம் பரிகாசம் பண்ணும் 'காலேஜ் கொண்டாட்ட'த்தின் 'காமெண்ட்' - " ஆமா! இவரே ஒரு 'குவெஸ்ச்சன் மார்க்' மாதிரி இருந்திட்டு, அந்தப் பெரியவரை 'ஒடுக்கு எடுக்கிறத'ப் பாத்தியாடா?[ 'டீ' என்று பேசியது, அந்தக் காலம்] - எதிர்வினை - வினை விதைத்த இளசின் காதுகளில் விழாமல் போவதுதான். முதுமை வயது என்று பத்திரிக்கைகள் சில நிர்ணயித்துள்ள வயது ஐம்பது. முதியோர் பென்ஷன் பெறும் வயது மாநில அரசுகளால் அறுபத்து ஐந்திலிருந்து ஐம்பத்து ஐந்து வரையிலும் குறைக்கப்பட்டு விட்டது. புதுவை மாநிலத்தில் ஏற்கெனவே முதியோர் பென்ஷன் பெறும் வயது அறுபதாகத்தான் இருந்தது. இப்பொழுது புதுவை மாநில முதல்வர் மாண்புமிகு அரங்கசாமி அதை மீண்டும் ஐந்து குறைத்து, ஐம்பத்து ஐந்து வயது ஆக்கியுள்ளார். புதுவை அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் ஓய்வு பெறும் வயது அறுபத்து இரண்டு என்பது தெரிந்ததுதானே.. ஆக. முதுமை முதிர்ந்தபின்னும் ஏழாண்டுகள் பணியில் இருக்கிறார்கள் அவர்கள். திரு.வி.க. அவர்கள் 'முதுமை உளறல்' என்ற நெடுங்கவிதை படைத்திருக்கிறார். அதில் அவர் தன் முதுமை குறித்தும் அந்த நூல் அந்த வயதில் வருவது குறித்தும் சொல்வது, கண்களைக் குளமாக்குகிறது. அறுபத் தாறினில் சிறுபரல் ஆணிப் படலம் கண்ணைப் படர்ந்து மறைத்தது; பழைய வண்ணம் விழிகள் நோக்க எழுதும் பேற்றை இழந்தனன் பாவி! உளத்தெழும் கருத்தை உளறு கின்றனன் உளறலும் நூலாய் வெளிவரு கின்றது; ஒற்றைக் கண்ணிடர் உற்ற வேளையில் 'பரம்பொருள்' நூலைப் பகர்ந்தனன் உரையால்; இரண்டு கண்ணொளி வறண்டஇந் நாளினில் 'இருளில் ஒளி'யைக் குறள்வெண்பாவால் 'இருமையும் ஒருமையும்', 'அருகன் அருகே' 'பொருளும் அருளும் - மார்க்கிஸ் காந்தி'' 'சித்தந் திருந்தல் - செத்துப் பிறத்தல்' என்னும் நூல்கலைப் பன்னினன் அகவலால்; ............. .................. ................. ................. பகலில் பல்பணி மிகமிகச் செய்து நிசியில் எழுத்துப் பசியைத் தீர்ப்பன்; தூக்கத் தேவி தாக்கினள் என்னைக் கடந்தன ஆண்டுகள்; படர்ந்தது படலம்; எனதே குற்றம் எனதே குறையும் இயற்கை ஒறுத்தலைச் செயற்கை என்செயும்? படுக்கையில் கிடந்து விடுக்கும் சொல்லால் ஆகும் நூலில் ஏகும் பிழைகள்; பொறுக்க புலவர் பொறுத்தே அருள்க." [தடிமனான எழுத்துகள், 'முதுமை உளறல்' முதற்பதிப்பில் உள்ளவாறே இங்கும் இடப்பெற்றுள்ளன.] நூல் வெளியான 1951ஆம் ஆண்டில் 'காடரேக்ட்' என்னும் கண்விழிப் புரைநோய், பிரம்மாண்டமானதாக பலரை அச்சுறுத்திக் கொண்டிருந்தது; தவிர, நெடுநேரம் கண்விழிப்பதால்தான் படலம் தோன்றி வளர்கிறது என்ற நம்பிக்கையும் இருந்து வந்திருக்கிறது. இன்றோ நீரிழிவுதான் அதற்கு முக்கிய காரணம் என்று அறிவுறுத்துவதுடன், மிகச் சிறந்த அறுவை மருத்துவமும் தரப்படுகிறது. அதிக நேரம் கண்விழிப்பது அல்லது போதுமான தூக்கம் தூங்காமல், தொடர்ந்து கெடுத்துக் கொள்வதால் மனத்தின் சமநிலை தாக்கப் படுகிறது என்று கண்டறிந்துள்ளார்கள். இன்னொரு வேடிக்கை தெரியுமா? இதை நானும் என் நண்பரும் கண்டறிந்தோம். முறையாக பிஹெச்.டி செய்து முடிப்பவர்களுக்கும் இந்த முதுமைநிலை[senility]யின் தாக்குதல்கள், அவர்கள் சிறிய வயதினராயிருந்தாலும், ஏற்படுகின்றனவாம். அவை: 1. மறதி அதிகமாதல். குறிப்பாக, எதையாவது எங்காவது எப்பொழுதும் தொலைத்துவிட்டு அது பற்றியே சிந்தித்தவாறு இருத்தல். அப்படிச் சிந்தித்துக் கொண்டே இருக்கும்பொழுது மேலும் புதிய பலவற்றை ஒவ்வொன்றாகத் தொலைத்தல். பிறகு, எங்கே எதைத் தொலைத்திருக்க வாய்ப்பில்லையோ அங்கே சென்று அதைத் தேடுவதோடு அங்குள்ளவர்களை விசாரித்து அவர்களையும் ஒருவழி பண்ணுதல். 2. அஞ்சல் பெட்டிக்குள் அஞ்சலைப் போட்டுவிட்டு, வெளியே தப்பி விழுந்திருக்கிறதா என்று, பிறருக்குத் தெரியாமல் நோட்டம் விடுதல். உண்மையிலேயே வயது அதிகமானவர்கள் இதற்கெல்லாம் கவலையே பட மாட்டார்கள். 3. தன்னிடம் பேசுபவர்கள் பேச்சைக் காதிலேயே போட்டுக்கொள்ளாமல், நிறைய அடிக்குறிப்புகள்(footnotes) மற்றும் அதிகமான - அல்லது, ஒவ்வொன்றுக்கும் "இதைப்போலத்தான்.." என்று தொடங்கி அதிகமான ஒப்புநோக்குதல்கள்(references) தருதல். மேலும் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருத்தல். "பெரிசா சொல்லவந்துடாருடா மாமே!..." என்று எவர் என்னை 'நொட்டை எடுத்தாலும்' பரவாயில்லை.. அவர்களுக்குப் பணிவன்புடன் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விழைகிறேன். எனக்கே மேற்படி வயணங்கள் பொருந்தும் என்பதால்தானே, இப்படி ஆகப் பட்டவற்றை செவ்வனே மொழியவும் வரிசைப்படுத்தவும் ஆச்சுது? **** நன்றி: திண்ணை.காம்

தமிழரின் விடுகதைகள் - நாநவில் இலக்கியம்

தமிழரின் விடுகதைகள் - நாநவில் இலக்கியம் -பேராசிரியர் அ.பசுபதி(தேவமைந்தன்) தமிழ் நாட்டுப்புற மக்களின் நாநவில் இலக்கியமான விடுகதை என்னும் காலங்காலமாய் ஒருவர் மொழிதலிலிருந்து மற்றவர் கேள்விக்கு இடைவிடாது பயணம் செய்து மேலும் மேலும் வளர்ந்து வருகிறது. தேய்வு மறைவு அறியா இந்த நாநவில் மொழிகளைப் பண்ணத்தி என்று அழைத்து மகிழ்ந்தனர் பழந்தமிழ் இலக்கணிகள். விடுகதைகளைப் ‘பிசி’ என்றும் பழமொழிகளை முதுமொழி என்றும் பகுத்து அழைத்தனர். ‘கேள்வியினால் வளரும் அறிவு’ என்பதுபோல், சொல்லியும் கேட்டும் வளரும் விடுகதை எனும் செவிச்செல்வத்தை முழுமையாகத் திரட்ட ஆசைப்பட்டனர் அறிஞர் பலர். அவர்களுள் பூர்ணிமா சகோதரிகள்[1963], ரோஜா முத்தையா[காரைக்குடி 1963,1965], பண்டிதர் ஜே.கே.வேதமுத்து[1971,1975], பி.ஜி.எஸ்.மணியன்[நான்காம் பதிப்பு 1974] ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்கின்ற பலர் தேடித்திரட்டி அனுப்பிய விடுகதைகளை முனைவர் க. காந்தி துணையுடன் சென்னை தரமணியிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநரும் முதன்மைப் பேராசிரியருமான முனைவர் ச.வே. சுப்பிரமணியன் பதிப்பாசிரியராக விளங்கி 1975ஆம் ஆண்டில் வெளியிட்டார். திரட்டிய 3500 விடுகதைகளை அலசி ஆய்ந்து பொருத்தப்பாடுடைய 2504 விடுகதைகளை மட்டும் தெரிவு செய்து பதிப்பித்தார். புதுச்சேரி நாட்டுப்புற விடுகதைகளை முனைவர் அ. கனகராசு ஆராய்ந்து நூலாக 1998ஆம் ஆண்டு வெளியிட்டார். முனைவர் தி. பெரியசாமி கொங்கு நாட்டுப்புற விடுகதைகளை, பாலியல் தன்மை வாய்ந்தவற்றையும் விட்டுவிடாமல், பல தலைப்புகளின்கீழ் பகுத்து நூலாக்கினார். சென்னை ‘தன்னனானே’ பதிப்பகம், 1006 விடுகதைகள் கொண்ட தொகுப்பாக அண்மையில் அதை வெளியிட்டுள்ளது. பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம் 1964 ஆம் ஆண்டில் ‘வாய்மொழி இலக்கியம்’ என்ற தலைப்பில் விடுகதைகளைக் குறித்த ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பை வெளியிட்டார். முனைவர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் தம் ‘சங்க காலத் தமிழும் பிற்காலத் தமிழும்’ என்ற நூலிலும், கி.வா.ஜகந்நாதன் ‘கஞ்சியிலும் இன்பம்’ போன்ற நூல்களிலும், முனைவர்கள் வி.மி. ஞானப்பிரகாசம், க.ப.அறவாணன் ஆகியோர் தாம் பதிப்பித்த ‘நாட்டுப்புற இலக்கியப் பார்வைகள்’(சென்னை,1974) நூலிலும், முனைவர் ஆறு. அழகப்பன் தம் ‘நாட்டுப்புறப் பாடல்கள்-திறனாய்வு’(சென்னை,1974) நூலிலும் இவற்றைக் குறித்து ஆராய்ந்தனர். மேலே குறிப்பிட்டாற்போல் புதுச்சேரி விடுகதைகளை முனைவர் அ. கனகராசு அவர்களும், கொங்கு விடுகதைகளை முனைவர் தி. பெரியசாமி அவர்களும் மிகவும் சிறப்பாக ஆராய்ந்துள்ளனர். “விடுகதை என்பது விடுவிக்கவேண்டிய புதிர்” என்று அறிஞர் மு.சண்முகம் பிள்ளை அவர்கள் கூறிவிடுகிறார். எல்லோருக்கும் தெரிந்த ஓர் உண்மையைத் தளர்த்தி வெளிப்படுத்துவது 'நொடிவிடுத்தல்' என்று தென்னார்க்காட்டுச் சிற்றூர்களில் சொல்லப்படுகிறது. "எங்கே நொடி விடு பார்க்கலாம், விடுவித்துக் காட்டுகிறேன்!" என்பார்கள். ஏற்புடைய விடை கூறுவதற்கு 'நொடி விடுவித்தல்' என்று பெயர். குறிப்புகள் காட்டி விடை கேட்பதுவே புதிர் ஆகும். "கலை அழகோடும், மறைப்பு வித்தையோடும் தேடச் சொல்வது விடுகதை; யோசிக்க வைப்பது இதன் நோக்கம். நேசிக்க வைப்பது இதன் நேர்த்தி" என்று முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம் இதற்கு விளக்கம் தருகிறார்.(கொங்கு விடுகதைகள், ப.iii) மிகச் சிறந்த விடுகதைகள் சில 1. குழந்தைச் சுமை: தமிழ் வழங்கும் எவ்விடமும் சென்று "வருத்தம் இலாத சுமை - அது என்ன?" என்று கேட்டோமானால் உடனே 'குழந்தைச்சுமை' என்ற விடை வரும்.[த.வி.,2327] கொங்கு நாட்டுப் பக்கம் சென்று, "காத வழி போனாலும், கைகடுக்காச் சுமை என்ன சுமை?" என்று கேட்டால் அந்த விடை கிடைக்கும்.[கொ.வி., 604] புதுச்சேரிச் சிற்றூர்களில் "சும்மா இருக்காது, சொல்லவும் தெரியாது - அது என்ன?" என்று கேட்டால் 'குழந்தை' என்ற விடை வரும்.[பு.மா.நா.வி.கா.ம.வா., 93] இதேபோல் எல்லா விடுகதைகளும் பொதுவான விடை பெறுவதில்லை. கொங்குப் புறத்துக்கே உரிய பேச்சுவழக்கில் அமைந்த நெருஞ்சி முள்ளைச் சுட்டும் ''சின்ன மச்சான் குமிய வச்சான்'' என்பது பிற பகுதிகளில் வழக்கில் இல்லை. 2. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு: புதுச்சேரிச் சிற்றூர்களில் வழங்கப்படும், "பச்சைப் பச்சை டாக்டர் எங்க டாக்டர் குண்டு குண்டு டாக்டர் எங்க டாக்டர் வெள்ள வெள்ள டாக்டர் எங்க டாக்டர் - அது என்ன?"[பு.மா.நா.வி.கா.ம.வா., 287] என்பது வெற்றிலை பாக்கு சுண்ணாம்பைக் குறிப்பதாகும். கொங்கு நாட்டுச் சிற்றூர்களில், "ஆசைக்கு அவளெக் கட்டி அழகுக்கு இவளெக் கட்டி கொஞ்சி விளையாடக் கொழுந்தியாளக் கட்டி"[கொ.வி., ப.96] என்று இது குறிப்பிடப் பெற்றாலும், புகையிலையோடு இம்மூன்றும் போடப்பட்டால் என்ன ஆகும் என்பதற்கு, "ஆசைக்கு அவளெக் கட்டி அழகுக்கு மகளெக் கட்டி கூடிவாழக் கொழுந்தியாளக் கட்டி சேர்ந்து வாழ நங்கையா*ளக் கட்டி நாலு பேருஞ் சேர்ந்து நாசமாப் போயிட்டாங்க - அது என்ன?"[கொ.வி., ப.96] [*நங்கையாள் = அண்ணனுக்கு மனைவி; கணவனின் அக்காள்; மனைவியின் அக்காள்] வேறு ஓர் இணைப்பு விடுகதை உள்ளது. புதுச்சேரிச் சிற்றூர்களுக்கே சொந்தமான விடுகதைகள் சிலவற்றைப் பார்ப்போம். "ஓகோ லேலோ உயர்ந்த லேலோ கண்டந் துண்ட சப்லட் லேலோ - அது என்ன?" என்று கடற்புரச் சிற்றூர்களில் முருங்கைக்காய் சுட்டப்பெறுவதுபோல நல்ல தமிழில் வயற்புறச் சிற்றூர்களில், "உச்சாணிக் கிளையிலே ஊசிகட்டித் தொங்குது - அது என்ன?" என்ற விடைக்குரியதாகிறது. தூக்கணங்குருவிக்கூடு குறித்த விடுகதையான, "சின்ன சிறுக்கியும் சின்ன பையனும் சிரித்துக் கட்டின தாலி சிக்கில்லாமல் அவிழ்த்தவர்க்குச் சென்னப் பட்டினம் பாதி - அது என்ன?" என்பதில் தாலிக்குக் கொடுக்கப்படும் முதன்மை தெரிகிறது. குருவிக்கூட்டைத் தாலியாகக் கருதுமளவு புதுவைச் சிற்றூர்களில் தாலிக்கு முகாமை இருந்திருக்கிறது.[பு.மா.நா.வி.கா.ம.வா., ப.94] புதுச்சேரி சார்ந்த சாதி-தொழில் அமைப்புகள், கல்வி, எண்ணும் எழுத்தும், புழங்கும் ஆங்கிலச் சொற்கள், வண்ணங்கள், வழிபாடுகள், மகளிர் பற்றிய வசைமொழிகள், மனைப்பொருட்கள்-பயன்பொருட்கள், ஆண்-பெண் ஆடை அணிகலன்கள், இசைக்கருவிகள், ஊர்திகள், திருமணம்- மகப்பேறு, முறையற்ற பாலியல் உறவுகள் குறித்த விடுகதைகள் மேலும் எத்தனையோ உள்ளன.

15.10.06

முப்பட்டைச் சுரண்டலும் ஆணியமும்

முப்பட்டைச் சுரண்டலும் ஆணியமும் - தேவமைந்தன் வீட்டிலும் வைகறைக்கு முன்பே வேலை தொடக்கி, கணவனெனும் மேலதிகாரிக்கு வேண்டிய தட்டை வாகாக வைத்து, அதன்மேல் தேவையறிந்த சிற்றுண்டியை முகம்பார்த்து வைத்து, சூடாய்க் குடிநீரும் சுக்குநீரும் காபியும் கொண்டுவந்து வைத்து, ‘மூடு’அறிந்து “ஏங்க போய் வரவா?” - விலுக்விலுக்கென்று தோளில் புடைத்திருக்கும் பைதொங்க, அதிலொரு அழுக்கான ‘வாட்டர் பாட்டில்’ மூடி தலைநீட்ட, அவசரப் பவுடர் பூச்சு மயில் கழுத்து வரிகள்போட, தாறுமாறாய் ‘டூவீலர்’ கிளப்பி, ‘அவனை விடவும் அதிக சம்பளம்’ போவது, அலுவலக மேலதிகாரியிடமும் திட்டுவாங்கவா.. இரட்டைச் சுரண்டலும் போய், முப்பட்டைச் சுரண்டல் - இப்பொழுது எண்ணற்ற பெண்களுக்கு. காரணம், அவர்கள் வாங்கத் தயாராகவுள்ள போலிச் சம்பளத்தை ஆண்களுக்குத் தரமுடியுமா? சொல்லிவைத்தாற்போல் எப்படி சகோதரிகள் பலரும் ஆகவும் குறைந்த சம்பளத்துக்கு அதிகஅதிகமாய் வேலைவாங்கும் விளக்குகளுக்கு விட்டில்கள் ஆகிறார்கள்? இதில்வேறு “போன் எதுவும் பேசாதே! லஞ்ச் டயமானாலும்..” ‘வெரி ஸ்ட்ரிக்ட் இன்ஸ்டிடூஷன் சார்!” - இளித்துக் கொண்டு சொல்கிறார்கள், அதிக சம்பளம் குறைந்த வேலைக்கு வாங்கும் ‘புண்ணியங்’கள். பெண்ணியம், அரசாங்கம் போல். சாதனைப் பெண்கள் கலர்கலராய் வார இதழ்களில். ஆமாம்..திருவள்ளுவரே! “இருவேறு உலகத்து இயற்கை”.. மெத்தவும் சரிதான். கோலெடுக்காமல் மிரட்டினார் என் பெண்ணியத் தோழி... “பெண்களைச் சுரண்டுபவர்கள் ஆண்கள்தாம்; பெண்களைப் பெண்களே சுரண்டுவது போலத் தான்றவும் தோன்றும்தான்; அதற்குப் பின்னாலும் இருப்பது ஆணாதிக்கமே... “அம்மா சொன்னால் இவன் ஏன் வாங்குகிறான்? அம்மா ஊற்றினால் இவன் ஏன் கொளுத்துகிறான்?” -ஆமாம் என்று சொன்னால், அதுவும் ஆணாதிக்கத்தின் பாசாங்கேதான். -இல்லை என்று மறுத்தாலோ அது ஆணாதிக்க மூர்க்கம்.... “அது சரி கம்ராது!* இந்தக் குறைஞ்ச சம்பளத்துக்கு இத்தனைபேர் போறாங்களே!..” “ஏம் போறாளுவ.. ஆம்பள வெரட்டாம வெரட்டறான்..” *** கம்ராது = ‘தோழா’ என்பதற்கான பிரஞ்சுத் தமிழ்ச்சொல். தோழமை மிக்க ஆண்களும் பெண்களும் பிரான்சிலும் புதுச்சேரியிலும் இவ்வாறு பேசிக்கொள்வதுண்டு.