27.10.06
நட்புக்குரிய மலர்களுக்கு ஒரு மடல் - தேவமைந்தன்
நட்புக்குரியீர்!
நீங்கள் -
எதன் வெளிப்பாடுகள்?
எதன் நோக்கங்கள்?
ஏதோ தோன்றி
ஏனோ மறையும்
இருத்தல்களும் போதல்களுமா
உங்கள் வாழ்க்கை?
பொருளற்றது என்று
புடவியிலெதுவும் எங்கும்
இல்லவே இல்லை.
பொருளற்றது! அது அப்படித்தான்!!
என்று சொல்லி விடுதல்
மிகவும் எளிது. ஆனால்
உங்களின் இருத்தல் எவரையும்
உறுத்தாதது.
எங்களின் இருத்தலில் நீங்கள்
உடன் உறைபவர்கள்.
ஆகவே நீங்கள் வாழ்க,
ஒருபகல், ஓரிரவுப்
பொழுதேனும்……
(1993.போன்சாய் மனிதர்கள். தேவமைந்தன்)
புன்னகை பூக்கும் புல்வெளி மலர்கள் - தேவமைந்தன்
தரையினில் பரந்த
பசுமை வானம்.
பசுமை வானில்
புதியவிண் மீன்கள்,
பலநிறம் பூக்கும்
புல்வெளி மலர்கள்.
நீங்கள்
நடக்கும் பொழுது
மிதிக்கும் பூக்கள்.
நடக்கும் பொழுது
மிதிக்காமல், சற்று
ஒதுங்கி நின்றே
உற்றுப் பாருங்கள்.
புன்னகை பூக்கும்
புல்வெளி மலர்கள்……
(1980.புல்வெளி.தேவமைந்தன்)
காணவில்லை, "வள்ளல்கள்..." - தேவமைந்தன்
அன்றெல்லாம் வழங்கினராம்
அளவில்லாத கொடைகள்பல.
எதைக்கேட்ட போதினிலும்
அதைஅதை அந்தஅந்த முறைப்படி
வாரிவாரி வழங்கிடவே
வள்ளல்கள் வாழ்ந்தனராம்.
வாய்திறந்து கேட்காத
தேருக்கும் மயிலுக்கும்
நுண்ணுணர்வால் ஆராய்ந்து
கொடைகள்தாம் அளித்தனராம்.
இன்றைக்கு-
நாணக்கொடை இறக்குமதி நடிகையர்க்கும்
நேர்மைக்கொடை கட்சிகளின் தலைவர்கட்கும்
அறிவுக்கொடை ‘டவுன்லோடு’ எழுத்தாளர்க்கும்
நினைவுக்கொடை வாக்காளும் மக்களுக்கும்
உண்மைக்கொடை தொலைக்காட்சி நடத்துநர்க்கும்
‘லாஜிக்-கொடை,’ தொடர்களை இயக்குநர்க்கும் - தன்
மானக்கொடை மனிதர்கள் அனைவருக்கும்
கைசிவக்க வழங்குதற்கு
வள்ளல் இல்லையே.
ஈகைகளைச் செய்வதற்கு
மனமும் தொல்லையே…
அழைக்காவிட்டால்தான் என்ன? -தேவமைந்தன்
ஒரு பெரிய மனிதரிடமிருந்து
அழைப்பு வந்தது;
இருந்தேன்.
**
அவர்களிடமிருந்து எனக்கு
அழைப்பு வரவில்லை;
நினைவினில் என்னைக் கொண்டவர்கள்.
அழைப்பனுப்பத்தான் மறந்தார்கள்...
அதனால் என்ன?.. போனேன்.
தமிழ்வினைக்கு
அழைப்பு என்பது
முக்கியம் அல்ல என்பதால்......
மறதிப் பெருவெளி - தேவமைந்தன்
நினைந்து நடந்து முடிந்த நினைவுகள்
வனைந்து மிடைந்து விளைந்த முடிவுகள்
முகவரி இல்லா மொட்டை மடல்கள்
மயங்கிப் பிறரை மிதிக்கும் செயல்கள்
அகந்தை மிகுந்தே பிடிக்கும் அடவுகள்
பிறரைப் பொறாமல் கிளப்பும் பொய்கள்
வஞ்சக வாழ்த்தொடு
போலிமைப் புனைவுகள்
அனைத்தும் சிதைந்தே அடையாளம் இன்றி
மறைந்துட் கலந்தே காணாது போகும்
காலம் கடந்த பெருவெளி
ஞாலம் மறந்த மறதி வெளியே…
கண்ணே!... இதன் உள்ளுறை என்ன?
கண்ணே!
என்னூர் மலையின் பக்கம்
ஒருநாள் நான் கண்ட காட்சி இது.
ஒதுக்குப் புறமானதோர்
ஒற்றைப்பெரும் பாறை.
போயும் போயும் அதன்மேல்
சின்னஞ் சிறிய சிட்டுக் குருவியொன்று
மோதி மோதிப் பார்த்துச் சலித்தது.
எப்படிச் சொல்வது? எவ்வாறு தெரிவிப்பது?
கற்பாறைமேல் மோதாதே என்று..
சலித்துப் போனேன்..
புரிந்துகொண்டு பறந்துபோய் விடுமென
நம்பி இறங்கி வீடு திரும்பினேன்.
நெஞ்சுக்குள், மூளைக்குள் குடைச்சல்.
அறியும் ஆர்வம்.
ஓரிரு நாட்கள் கடந்தன வறிதே.
மீண்டும் மலையேறினேன்.
ஒற்றைப்பெரும் பாறை
ஓரம் திரும்பினேன்.
திடுக்கிட்டேன்.
நைந்துபோய் சின்னஞ்சிறிய அதனுடல்
ஈரமூறிய இறகுப் பந்தாய்
வன்பாறைதன் காலடியில்.
எலிப்பொறி - தேவமைந்தன்
வடைக்காசைப் பட்டு
மாட்டிக் கொண்டாயிற்று.
உள்ளே ஓடிஓடி
கதவொடு மோதி
கம்பியை ஆட்டி
ஓய்ந்துபோய்ச் சுருண்டு
போனதும் தப்பில்லை. எப்படியும்
கோணி சுருக்கித்தான் கதவைத்
திறக்கப் போகிறார்கள்.
அதில்தான்
இன்னும்
ஆபத்துள்ளது.
அனுபவசாலிகள்,
ஓட்டைக் கோணியைத்
தவிர்த்து விடுவார்கள்.
கட்டையோடு சுற்றிலும்
நெஞ்சக் குறுகுறுப்போடு
முரட்டுப் பயல்களும் நிற்கக்கூடும்.
ஆகவே,
மிச்சமிருக்கும் சுவையுள்ள
வடையையும் தின்று முடி.
ஒருகை பார்ப்போம்.
அடுத்தவர் எல்லைக்குள்
எதை நாடியும்
மறந்தும் புகாதிருக்கத்
திட்டமிடு மனமே,
ஒருவேளை நாம்
வெற்றிபெற்று விட்டால்.
16.10.06
முப்பட்டைச் சுரண்டலும் ஆணியமும்
முப்பட்டைச் சுரண்டலும் ஆணியமும்
- தேவமைந்தன்
வீட்டிலும் வைகறைக்கு முன்பே
வேலை தொடக்கி,
கணவனெனும் மேலதிகாரிக்கு
வேண்டிய தட்டை வாகாக வைத்து,
அதன்மேல் தேவையறிந்த
சிற்றுண்டியை முகம்பார்த்து வைத்து,
சூடாய்க் குடிநீரும் சுக்குநீரும் காபியும்
கொண்டுவந்து வைத்து,
‘மூடு’அறிந்து
“ஏங்க போய் வரவா?” -
விலுக்விலுக்கென்று தோளில்
புடைத்திருக்கும் பைதொங்க,
அதிலொரு அழுக்கான
‘வாட்டர் பாட்டில்’ மூடி
தலைநீட்ட,
அவசரப் பவுடர் பூச்சு
மயில் கழுத்து வரிகள்போட,
தாறுமாறாய் ‘டூவீலர்’ கிளப்பி,
‘அவனை விடவும் அதிக சம்பளம்’
போவது, அலுவலக
மேலதிகாரியிடமும் திட்டுவாங்கவா..
இரட்டைச் சுரண்டலும் போய்,
முப்பட்டைச் சுரண்டல் - இப்பொழுது
எண்ணற்ற பெண்களுக்கு.
காரணம், அவர்கள் வாங்கத்
தயாராகவுள்ள போலிச் சம்பளத்தை
ஆண்களுக்குத் தரமுடியுமா?
சொல்லிவைத்தாற்போல் எப்படி
சகோதரிகள் பலரும்
ஆகவும் குறைந்த சம்பளத்துக்கு
அதிகஅதிகமாய் வேலைவாங்கும்
விளக்குகளுக்கு விட்டில்கள் ஆகிறார்கள்?
இதில்வேறு “போன் எதுவும் பேசாதே!
லஞ்ச் டயமானாலும்..”
‘வெரி ஸ்ட்ரிக்ட் இன்ஸ்டிடூஷன் சார்!” -
இளித்துக் கொண்டு சொல்கிறார்கள்,
அதிக சம்பளம் குறைந்த வேலைக்கு
வாங்கும் ‘புண்ணியங்’கள்.
பெண்ணியம், அரசாங்கம் போல்.
சாதனைப் பெண்கள் கலர்கலராய்
வார இதழ்களில்.
ஆமாம்..திருவள்ளுவரே!
“இருவேறு உலகத்து இயற்கை”..
மெத்தவும் சரிதான்.
கோலெடுக்காமல் மிரட்டினார் என்
பெண்ணியத் தோழி...
“பெண்களைச் சுரண்டுபவர்கள் ஆண்கள்தாம்;
பெண்களைப் பெண்களே சுரண்டுவது
போலத் தான்றவும் தோன்றும்தான்;
அதற்குப் பின்னாலும்
இருப்பது ஆணாதிக்கமே...
“அம்மா சொன்னால் இவன் ஏன் வாங்குகிறான்?
அம்மா ஊற்றினால் இவன் ஏன் கொளுத்துகிறான்?”
-ஆமாம் என்று சொன்னால், அதுவும்
ஆணாதிக்கத்தின் பாசாங்கேதான்.
-இல்லை என்று மறுத்தாலோ
அது ஆணாதிக்க மூர்க்கம்....
“அது சரி கம்ராது!*
இந்தக் குறைஞ்ச சம்பளத்துக்கு
இத்தனைபேர் போறாங்களே!..”
“ஏம் போறாளுவ..
ஆம்பள வெரட்டாம வெரட்டறான்..”
***
கம்ராது = ‘தோழா’ என்பதற்கான பிரஞ்சுத் தமிழ்ச்சொல். தோழமை மிக்க ஆண்களும் பெண்களும் பிரான்சிலும் புதுச்சேரியிலும் இவ்வாறு பேசிக்கொள்வதுண்டு.
இணைய இதழா, அச்சிதழா? எது நீடிக்கும்?
இணைய இதழா, அச்சிதழா? எது நீடிக்கும்?
- பேராசிரியர் அ.பசுபதி(தேவமைந்தன்)
ஓர் இதழ் மிகுந்த விற்பனையுள்ளதா, குறைந்த விற்பனை உள்ளதா, அப்படியாயின் அது பேரிதழா சிற்றிதழா என்ற வினா மறைந்துபோய், இணைய இதழா அச்சிதழா இன்றைய வளர்ச்சியில் எது நீடிக்கும் என்ற வினா உலகம் முழுதும் எழுந்துள்ளது.
இணைய இதழ், அச்சிதழ் - இவற்றுள் எது சிறந்தது? என்ற வினாவைத் திண்ணை இணைய இதழில் (ஆகஸ்ட் 10, 2006;வியாழன்) எழுப்பியுள்ளார் ஜெர்மனியில் வாழும் சந்திரவதனா செல்வகுமாரன்.
இணைய இதழ்களின் வரவால் இன்றைய ஜெர்மனிய இதழ்கள் ஆட்டம் கண்டுள்ளன என்கிறார் அவர். இந்த நிலையில் நமது இதழ்கள் நாளேடுகளின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என்று ஆர்வமுறுகிறார். ஈழத் தமிழர்கள், பன்னாட்டுத் தொடர்பும் இடையூடாட்டங்களும்[interactions] கொண்டவர்கள் என்பதால் அவர் எழுப்பியுள்ள வினா, அவர்களைப் பொறுத்தவரை பொருள் மிகுந்ததுதான். கரணியம், அவர் விதந்தோதியுள்ள 'பூவரசு' என்ற இதழ், தன் பதினேழாவது ஆண்டில் தொடர்ந்து அச்சுப் பதிப்பாக வருவதா அல்லது இணைய இதழாகி விடுவதா என்ற இக்கட்டுக்கு உள்ளாகி இருக்கிறது.
புலத்தில் படைப்பாளரும் இதழ் வெளியீட்டாளரும் மிகுந்த பணநெருக்கடிக்கு ஆளாகிறார்கள். உள்ளூரில் வெளியாகும் பேரிதழ்கள்தாம் படைப்புகளுக்குப் பணம் தர முடியும். வேறுவகையில் சொன்னால் புலத்தில் வெளியாகும் பரவலான வாசிப்புடைய இதழின் வெளியீட்டாளருக்கு உள்ள பொருளியல் நிலையும் உள்ளூரில் நடத்தப்பெறும் சிற்றிதழ் வெளியீட்டாளருக்குள்ள பொருளியல் நிலையும் ஒன்றேதான். இணைய இதழ் நடத்துவோர் ஆண்டுக்குச் செலவிடும் தொகை, பரவலான சிற்றிதழொன்றுக்கு மாதமொன்றுக்குத்தான் சரிவரும். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இப்பொழுது ஒரு காசும் செலவு செய்யாமல் இணைய இதழை நடத்தும் வாய்ப்பை இணைய நிறுவனங்கள் தர முன்வந்திருப்பதுதான். பணத் தட்டுப்பாட்டுடன் இணைய இதழை நடத்தி மாய்வதைவிட, வருமானத்துக்குரிய பணியொன்றைச் செய்துகொண்டே மனநிறைவுடன் தொடர்ந்து தன்னிதழை, மேலதிகமான வாசகர்ப் பரப்புடன் நடத்தக்கூடிய வாய்ப்பு வருகிறதெனில் விடுவாரா, அவ்வாறு இக்கட்டில் உள்ள ஓர் இதழாசிரியர்? 'பூவரசு' இதழாசிரியரைக் குறித்து நான் இவ்வாறு சொல்லவில்லை. ஏனெனில், அவர் அதை வாசகரிடம் விட்டிருக்கிறார். அவர்கள் எவ்வாறேனும் அவ்விதழைத் தொடர்ந்து நடத்தவே வேண்டும் என்று கருத்துரைத்திருக்கின்றனர்.
பழகிவிட்ட கண்களுக்கு, அச்சுப்பதிப்பாக வரும் இதழ் தரும் மனநிறைவு இணைய இதழால் வராது. இது உண்மையே என்றாலும், தொடர்புடையதே. பொதுவாக இன்றைய தலைமுறையில் உள்ள வளரிளம் பருவத்தினர் இணைய இதழை வாசிக்கவே விரும்புகின்றனர். நான் வழக்கமாக இணையமுலவும் நடுவத்தில், அதை நடத்துபவர் ஒழுங்குக்கு முதன்மை கொடுப்பவரென்பதால், ஆக்கவழியில் இணையமுலவும் வளரிளம்பருவத்தினர் பலர் வந்து செல்கின்றனர். அவர்களுள் பல்கலை மாணவர் ஒருவரிடம் இது குறித்துக் கேட்டபொழுது, தமிழ்நாட்டில் விற்பனையில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் வார இதழ் ஒன்றை, நாள்தோறும் பகுதி பகுதியாக அவர் படிக்கிறார் என்றும் ஏணைய இணையம் உலவும் பொழுதைத் தன் ஆய்வுப் பணித்திட்டம் உருவாக்கச் செலவிடுகிறார் என்றும் அறிந்து கொண்டேன்.
அந்த வார இதழ் விலை பத்துரூபாவுக்கும் குறைவுதானே, ஒரு முறை வாங்கிக் கொண்டால் போதுமே, கையிலோ பையிலோ வைத்துக் கொண்டு இதேபோல் வாரம் முழுதும் வாசிக்கலாமே என்று கேட்டேன். அவர் சொன்ன மறுமொழி என்னைப் பெரிதும் ஆச்சரியப்பட வைத்தது. "ஒரு மணிநேரத்துக்கு இங்கு இணையம் உலவப் பதினைந்து ரூபா. இதே சாலையில் மேல்நிலைப் பள்ளியருகில் பன்னிரண்டு ரூபாதான். சூழ்நிலை, அப்பா வழங்கும் கைப்பணம் ஆகியவற்றைப் பொறுத்து அங்கும் இங்கும் இணையமுலவுவேன். பணித்திட்டத்தைத் தரவுகளிலிருந்து தட்டெழுதும்பொழுது சலிப்பு வரும். அப்பொழுது, வந்தவுடன் முகவரியிட்டு வரவழைத்து சுருக்கி(minimise)வைக்கும் அவ்விதழை விரிவாக்கி வாசித்துவிட்டு மீண்டும் பணித்திட்டத்தில் இறங்குவேன். இதனால் எனக்கு வேலையும் நடக்கிறது. நான் விரும்பும் இதழை இலவசமாகவே வாசிக்கவும் முடிகிறது. அதை வாங்கி, அடுத்தவர் கேட்டு, அவருக்குக் கொடுத்து, திரும்பப் பெற துன்பப்படவும் வேண்டியதில்லை. தூசியுமில்லை. பழையதாள் கடைக்குச் சுமந்து சென்று தொல்லைப்பட வேண்டியதுமில்லை" என்றார் அவர். என் அடுத்த வினாவையும் கேட்டேன். "நீங்கள் வாசிக்கும் இதழ் முழுவதையும் இலவசமாகத் தருவதில்லையே! கதை, கட்டுரைகளின் முதற்பகுதியைத்தானே தருகிறார்கள்..'மேலும் வாசிக்க' என்று கேட்டால், நம் மின்னஞ்சல் முகவரி கேட்கிறார்கள். தொகை அனுப்பச் சொல்கிறார்களே..." என்றேன். அவர் மர்மமான புன்னகையொன்றை உதிர்த்தார். "குறிப்பிட்ட சாவி மட்டும்தான் பூட்டைத் திறக்குமா?" - என்று விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளத்தின் பாணியில் வினாவொன்றை உதிர்த்துவிட்டு, தன் ‘டூவீல’ரைக் கிளப்பிக்கொண்டு போய்விட்டார்.
"இணையங்களின் வரவுக்குப் பின், குறிப்பாக வலைப்பதிவுகளின் வரவுக்குப்பின் [அச்சுப்] பதிப்புகளோடான ஊடாடல் வாசகர்களிடையே குறைந்துவிட்டதுதான் அப்பட்டமான உண்மை" என்று சொல்லும் சந்திரவதனா, "எப்போதுமே [அச்சுப்] பதிப்பாக வரும் ஒன்றுக்கு இருக்கும் தனித்தன்மை இணைய இதழ்களுக்கு இல்லை.." என்ற தெளிவான கருத்துடையவர் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
அதனால்தான், நானும், எனக்கென்று மூன்று இணைய வலைப்பதிவுகள் உள்ளபொழுதும் அவற்றை விடாது இடுகைகளிட்டு நிகழ்த்துவதுடன், தொடர்ந்து அச்சிதழ்களுடன் ஊடாடியும் படைப்புகள் தந்தும் வருகிறேன்.
இளந்தலைமுறையினரில் விதிவிலக்கானவர்களைத் தவிர எல்லோரும் வகைவகையான ‘மொபைல்’களுக்குச் செலவிடுகிறார்கள்; ‘ஸ்ப்ரே’க்களுக்குச் செலவிடுகிறார்கள்; திரைப்படங்களுக்குச் செலவிடுகிறார்கள்.[திரைப்படம் ஒன்றுக்குச் சீட்டு, நொறுக்குத் தீனி, ‘சாஃப்ட் டிரிங்ஸ்’ ஆகியவற்றுக்கு ஆகக்குறைவாக ஐம்பது ரூபாவாவது தனக்குச் செலவாவதாக தொ.கா.'வில் ஓரிளைஞர் குறிப்பிட்டார். தான் நண்பர்களுக்குச் செலவிடுவதோ, கெட்ட பழக்கங்களுக்குச் செலவிடுவதோ இல்லை என்றார். தனக்குப் பிடித்த படத்தை இவ்வாறு குறைந்தது ஏழு,எட்டு முறையாவது பார்த்துவிடுவாராம். "ஒரு வாரத்துக்கு எத்தனைப் படம் பார்ப்பீர்கள்?" என்ற கேள்விக்கு, "எப்படியும் ஏழுக்குக் குறையாது!" என்றார். வாரத்துக்கு ஏழு நாட்கள்தாமே!...] ஆனால் புத்தகத்தையோ, இதழையோ காசு கொடுத்து வாங்க விரும்புவதில்லை. தரமான இதழ் என்றால் சொல்ல வேண்டுவதே இல்லை. பணிக்குச் செல்லும் பெண்டிரும், இல்லத்தரசியருள் பலரும் வாடகை நூலகங்களையே பெரிதும் பயன்படுத்துகின்றனர். எட்டு ரூபா இதழை இரண்டு ரூபா வாடகைக்குத் தரும் அத்தகைய நூலகங்களுக்குப் போட்டியாக, ஒரு ரூபாவுக்கே தரும் ‘மொபைல்’ வாடகை நூலகங்களும் உள்ளன. ‘டி.வி.எஸ். டூவீலர்’ அதற்கு வசதியாக உள்ளதாம். இணையம் உலவுவோரில் தொண்ணூறு சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள், இதழ்களை விலைகொடுத்து வாங்கி வாசிக்கும் மனம் இல்லாதவர்கள் என்பதே உண்மை. எதிர்வரும் 2010ஆம் ஆண்டளவில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள - ஐம்பது அகவைக்கு மேற்பட்டவர்களே இதழ்களை வாசிப்பார்கள் என்கிறது ஆராய்ச்சி.
இதழ்கள் சிலவற்றுக்குப் படைப்புகளை அனுப்புவோர், தம் படைப்பு அதில் வெளிவந்துள்ளதா என்பதை அறிய, அவற்றை விலை கொடுத்து வாங்கிப் பார்த்தே அறிந்தாக வேண்டும் என்று கேள்விப்படுகிறேன். அதே பொழுது, மூன்று உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டால், சேர்த்து விடுபவருக்கு இலவசமாக இதழைத் தொடர்ந்து அனுப்பும் இதழ்களும் உள்ளன. படைப்பாளருக்கும் புரவலருக்கும் தனித்தனியே இதழ்களைப் பொறுப்பாக அனுப்பித் தரும் இதழ்கள் உள்ளன. இணைய இதழ் எனில் இந்தச் சிக்கல் எதுவுமில்லை.
காலாண்டிதழ் ஒன்று. அதன் ஐந்தாவது இதழை வாசித்து முடித்துவிட்ட பின்பு, அதன் முன்னிதழ்கள் பாதுகாப்பாக வைக்கப்பெற்றுள்ள[ஓதமில்லாமல் வறண்ட]இடத்துக்குச் சென்று பார்த்தேன். முதலாம் இதழும் இரண்டாம் இதழும் பழுப்பாகி அச்செழுத்துகள் மங்கித் தெரிந்தன. இணைய இதழ் அவ்வாறில்லை. மின்னூலும் அப்படியே. இப்பொழுது கூகிள் தேடுதளத்தில் 'மரபுத் தொடர்கள்' என்று தட்டெழுதித் தேடினால் இலவசமாகக் கிடைக்கும் சோலைக்கிளி அவர்களின் 'காகம் கலைத்த கனவு' என்ற முழு மின்னூல், மதுரை மின் நகலகத் திட்டத்தாரால் உருவாக்கப் பெற்றுள்ளது. அதன் தலைவர், சுவிட்சர்லாந்தில் வாழும் டாக்டர் கல்யாணசுந்தரம் அவர்கள். ஜெர்மனியில் வாழும் திரு கண்ணன் அவர்கள், அத்திட்டத்தின் செயலாக்க ஆசிரியர். வடிவான நூல். என் மேசையின் சிறிய இழுவியுள் அது போன்ற இருநூறு நூல்களை வைத்துக் கொள்ள முடியும். இணைய இதழ்கள் பலவற்றை, "எதைக் கொண்டு போனோம்! அதைக் கொண்டு வருவதற்கு!" என்ற எதிர்மறை முறையில், உலவுபுலங்களில் வாசித்துவிட்டு வந்து விடுகிறேன்.
'புதுச்சேரி' மின்னிதழை வாசிக்கும்பொழுதே கூடல், வார்ப்பு, திசைகள், தமிழோவியம், மரத்தடி, முத்தமிழ் மன்றம், திருக்குறள், எழில்நிலா, தமிழம், அன்புடன் புகாரி, அம்பலம், ஆறாம் திணை, கதம்பம், தமிழமுதம், தமிழ்மண், பதிவுகள், நிலாச்சாரல், நம் நாடி, சிஃபி, இ-சங்கமம், தமிழன் எக்ஸ்பிரஸ், கல்கி, மங்கையர் மலர், விகடன், குமுதம், திண்ணை, கீற்று ஆகிய இணைய இதழ்களையும் சுட்டிசொடுக்கி வாசித்துவிட முடிகிறது. இவற்றுள் கூடல், முத்தமிழ் மன்றம், திருக்குறள், தமிழம், தமிழமுதம், நிலாச்சாரல், சிஃபி தமிழ் ஆகியவை இணைய தளங்களும் கூட. குமுதம்(=குமுதம் குழும இதழ்களான தீராநதி முதலியவை), விகடன்(+ விகடன் குழும இதழ்களாகிய சுட்டி விகடன் முதலியவை), தமிழன் எக்ஸ்பிரஸ், மங்கையர் மலர், கல்கி ஆகியவை அச்சிதழ்களாகவும் இணைய இதழ்களாகவும் ஒரே நேரம் வெளிவருபவை. ஏன் இவை அச்சிதழ்களாக மட்டும் வெளிவரவில்லை? இவ்வாறு இணைய இதழ்களாகவும் வந்தால்தான் மேலும் பரவலான பன்னாட்டு வாசகர் வட்டத்தைப் பெறமுடியும் என்பதே விடை. இன்னும் மின்னிதழ்களாக வரும் நாளேடுகளும் உள்ளன அல்லவா? தினகரன், தினத்தந்தி, தினமலர் முதலானவையும் அவ்வகையில் குறிப்பிடத் தகுந்தவை.
ஆகவே, மேற்குறிப்பிட்ட செய்திகளை வைத்துப் பார்க்கும்பொழுது, இன்றைய நிலையில் தரமானதோர் அச்சிதழாக வரும் ஒன்று, நீடித்து எதிர்காலத்திலும் தொடர்வதோடு நிலையாகவும் இருக்க வேண்டும் என்றால், மின்வெளியில்(Cyber Space)நுழைந்து இணைய இதழாகவும் திகழ வேண்டும் என்பது தெளிவாகிறது.
**************************************
முதுமை வயது எல்லோருக்கும் வருமே!
முதுமை வயது எல்லோருக்கும் வருமே!
- தேவமைந்தன்
மனிதர்களின் இயற்கைக் குணங்களில் வேடிக்கையானது ஒன்று இருக்கிறது. அது என்ன என்றால், தனக்கு ஆகாதது - பிடிக்காதது - சரிவராதது போன்ற எதிர்மறைகள் எல்லாம் பிறர்க்கு மட்டுமே வரும் என்ற நம்பிக்கை. இதைப் போன்ற நம்பிக்கைகளைத்தான் மூடநம்பிக்கை என்று சொல்ல வேண்டும். ஏதோ தான் மட்டுமே இந்த உலகில் கோலோச்சிக்கொண்டிருப்பது போன்ற பிரமையில், அடுத்தவர்களைப் பற்றிய தீயசெய்திகளை நாள்தோறும் ஒலிபரப்பிக் கொண்டிருத்தல் என்பது இதைவிடவும் தேவையில்லாத நடவடிக்கை. இதைத்தான் அருணகிரிநாதர் தம் கந்தரநுபூதியில் 'ஜெகமாயை' என்ற சொல்லால் குறிப்பிட்டார்.
பொதுவாக நாள்தோறும் பேருந்துகளில் செல்லும்பொழுது, "என்ன, பெரிசு! அக்கடா'ன்னு வீட்டில இருக்கலாம்'ல? எதுக்கு இப்படி வெளிய'ல்லாம் போயி 'லோல்பட்டு லொங்கழியிறே!" என்ற இரக்கத் தொனியில் அமைந்த, ஆனால் இரக்கமே இல்லாத, ஏதோ தான்மட்டும் நிரந்தரமாக இளமை - இனிமை- வலிமை - புதுமைகளுடன் முரட்டுத்தனமான மாநகரப் பேருந்துகளை ஜல்லிக்கட்டில் அடக்கி ஓடவிட்டிருக்கிற 'வஸ்தாதுகள்' மாதிரிப் பேசுகிற இளசுகளின் குரலைக் கேட்டிருக்கலாம். அதைவிடவும் பரிதாபம், அப்படியொரு இளசின் பேச்சுகளைக் கேட்டுவிட்டுத் தன் தோழியிடம் பரிகாசம் பண்ணும் 'காலேஜ் கொண்டாட்ட'த்தின் 'காமெண்ட்' - " ஆமா! இவரே ஒரு 'குவெஸ்ச்சன் மார்க்' மாதிரி இருந்திட்டு, அந்தப் பெரியவரை 'ஒடுக்கு எடுக்கிறத'ப் பாத்தியாடா?[ 'டீ' என்று பேசியது, அந்தக் காலம்] - எதிர்வினை - வினை விதைத்த இளசின் காதுகளில் விழாமல் போவதுதான்.
முதுமை வயது என்று பத்திரிக்கைகள் சில நிர்ணயித்துள்ள வயது ஐம்பது. முதியோர் பென்ஷன் பெறும் வயது மாநில அரசுகளால் அறுபத்து ஐந்திலிருந்து ஐம்பத்து ஐந்து வரையிலும் குறைக்கப்பட்டு விட்டது. புதுவை மாநிலத்தில் ஏற்கெனவே முதியோர் பென்ஷன் பெறும் வயது அறுபதாகத்தான் இருந்தது. இப்பொழுது புதுவை மாநில முதல்வர் மாண்புமிகு அரங்கசாமி அதை மீண்டும் ஐந்து குறைத்து, ஐம்பத்து ஐந்து வயது ஆக்கியுள்ளார். புதுவை அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் ஓய்வு பெறும் வயது அறுபத்து இரண்டு என்பது தெரிந்ததுதானே.. ஆக. முதுமை முதிர்ந்தபின்னும் ஏழாண்டுகள் பணியில் இருக்கிறார்கள் அவர்கள்.
திரு.வி.க. அவர்கள் 'முதுமை உளறல்' என்ற நெடுங்கவிதை படைத்திருக்கிறார். அதில் அவர் தன் முதுமை குறித்தும் அந்த நூல் அந்த வயதில் வருவது குறித்தும் சொல்வது, கண்களைக் குளமாக்குகிறது.
அறுபத் தாறினில் சிறுபரல் ஆணிப்
படலம் கண்ணைப் படர்ந்து மறைத்தது;
பழைய வண்ணம் விழிகள் நோக்க
எழுதும் பேற்றை இழந்தனன் பாவி!
உளத்தெழும் கருத்தை உளறு கின்றனன்
உளறலும் நூலாய் வெளிவரு கின்றது;
ஒற்றைக் கண்ணிடர் உற்ற வேளையில்
'பரம்பொருள்' நூலைப் பகர்ந்தனன் உரையால்;
இரண்டு கண்ணொளி வறண்டஇந் நாளினில்
'இருளில் ஒளி'யைக் குறள்வெண்பாவால்
'இருமையும் ஒருமையும்', 'அருகன் அருகே'
'பொருளும் அருளும் - மார்க்கிஸ் காந்தி''
'சித்தந் திருந்தல் - செத்துப் பிறத்தல்'
என்னும் நூல்கலைப் பன்னினன் அகவலால்;
............. .................. ................. .................
பகலில் பல்பணி மிகமிகச் செய்து
நிசியில் எழுத்துப் பசியைத் தீர்ப்பன்;
தூக்கத் தேவி தாக்கினள் என்னைக்
கடந்தன ஆண்டுகள்; படர்ந்தது படலம்;
எனதே குற்றம் எனதே குறையும்
இயற்கை ஒறுத்தலைச் செயற்கை என்செயும்?
படுக்கையில் கிடந்து விடுக்கும் சொல்லால்
ஆகும் நூலில் ஏகும் பிழைகள்;
பொறுக்க புலவர் பொறுத்தே அருள்க."
[தடிமனான எழுத்துகள், 'முதுமை உளறல்' முதற்பதிப்பில் உள்ளவாறே இங்கும் இடப்பெற்றுள்ளன.]
நூல் வெளியான 1951ஆம் ஆண்டில் 'காடரேக்ட்' என்னும் கண்விழிப் புரைநோய், பிரம்மாண்டமானதாக பலரை அச்சுறுத்திக் கொண்டிருந்தது; தவிர, நெடுநேரம் கண்விழிப்பதால்தான் படலம் தோன்றி வளர்கிறது என்ற நம்பிக்கையும் இருந்து வந்திருக்கிறது. இன்றோ நீரிழிவுதான் அதற்கு முக்கிய காரணம் என்று அறிவுறுத்துவதுடன், மிகச் சிறந்த அறுவை மருத்துவமும் தரப்படுகிறது. அதிக நேரம் கண்விழிப்பது அல்லது போதுமான தூக்கம் தூங்காமல், தொடர்ந்து கெடுத்துக் கொள்வதால் மனத்தின் சமநிலை தாக்கப் படுகிறது என்று கண்டறிந்துள்ளார்கள்.
இன்னொரு வேடிக்கை தெரியுமா? இதை நானும் என் நண்பரும் கண்டறிந்தோம். முறையாக பிஹெச்.டி செய்து முடிப்பவர்களுக்கும் இந்த முதுமைநிலை[senility]யின் தாக்குதல்கள், அவர்கள் சிறிய வயதினராயிருந்தாலும், ஏற்படுகின்றனவாம். அவை:
1. மறதி அதிகமாதல். குறிப்பாக, எதையாவது எங்காவது எப்பொழுதும் தொலைத்துவிட்டு அது பற்றியே சிந்தித்தவாறு இருத்தல். அப்படிச் சிந்தித்துக் கொண்டே இருக்கும்பொழுது மேலும் புதிய பலவற்றை ஒவ்வொன்றாகத் தொலைத்தல். பிறகு, எங்கே எதைத் தொலைத்திருக்க வாய்ப்பில்லையோ அங்கே சென்று அதைத் தேடுவதோடு அங்குள்ளவர்களை விசாரித்து அவர்களையும் ஒருவழி பண்ணுதல்.
2. அஞ்சல் பெட்டிக்குள் அஞ்சலைப் போட்டுவிட்டு, வெளியே தப்பி விழுந்திருக்கிறதா என்று, பிறருக்குத் தெரியாமல் நோட்டம் விடுதல். உண்மையிலேயே வயது அதிகமானவர்கள் இதற்கெல்லாம் கவலையே பட மாட்டார்கள்.
3. தன்னிடம் பேசுபவர்கள் பேச்சைக் காதிலேயே போட்டுக்கொள்ளாமல், நிறைய அடிக்குறிப்புகள்(footnotes) மற்றும் அதிகமான - அல்லது, ஒவ்வொன்றுக்கும் "இதைப்போலத்தான்.." என்று தொடங்கி அதிகமான ஒப்புநோக்குதல்கள்(references) தருதல். மேலும் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருத்தல்.
"பெரிசா சொல்லவந்துடாருடா மாமே!..." என்று எவர் என்னை 'நொட்டை எடுத்தாலும்' பரவாயில்லை.. அவர்களுக்குப் பணிவன்புடன் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விழைகிறேன்.
எனக்கே மேற்படி வயணங்கள் பொருந்தும் என்பதால்தானே, இப்படி ஆகப் பட்டவற்றை செவ்வனே மொழியவும் வரிசைப்படுத்தவும் ஆச்சுது?
****
நன்றி: திண்ணை.காம்
தமிழரின் விடுகதைகள் - நாநவில் இலக்கியம்
தமிழரின் விடுகதைகள் - நாநவில் இலக்கியம்
-பேராசிரியர் அ.பசுபதி(தேவமைந்தன்)
தமிழ் நாட்டுப்புற மக்களின் நாநவில் இலக்கியமான விடுகதை என்னும் காலங்காலமாய் ஒருவர் மொழிதலிலிருந்து மற்றவர் கேள்விக்கு இடைவிடாது பயணம் செய்து மேலும் மேலும் வளர்ந்து வருகிறது.
தேய்வு மறைவு அறியா இந்த நாநவில் மொழிகளைப் பண்ணத்தி என்று அழைத்து மகிழ்ந்தனர் பழந்தமிழ் இலக்கணிகள். விடுகதைகளைப் ‘பிசி’ என்றும் பழமொழிகளை முதுமொழி என்றும் பகுத்து அழைத்தனர்.
‘கேள்வியினால் வளரும் அறிவு’ என்பதுபோல், சொல்லியும் கேட்டும் வளரும் விடுகதை எனும் செவிச்செல்வத்தை முழுமையாகத் திரட்ட ஆசைப்பட்டனர் அறிஞர் பலர். அவர்களுள் பூர்ணிமா சகோதரிகள்[1963], ரோஜா முத்தையா[காரைக்குடி 1963,1965], பண்டிதர் ஜே.கே.வேதமுத்து[1971,1975], பி.ஜி.எஸ்.மணியன்[நான்காம் பதிப்பு 1974] ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்கின்ற பலர் தேடித்திரட்டி அனுப்பிய விடுகதைகளை முனைவர் க. காந்தி துணையுடன் சென்னை தரமணியிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநரும் முதன்மைப் பேராசிரியருமான முனைவர் ச.வே. சுப்பிரமணியன் பதிப்பாசிரியராக விளங்கி 1975ஆம் ஆண்டில் வெளியிட்டார். திரட்டிய 3500 விடுகதைகளை அலசி ஆய்ந்து பொருத்தப்பாடுடைய 2504 விடுகதைகளை மட்டும் தெரிவு செய்து பதிப்பித்தார்.
புதுச்சேரி நாட்டுப்புற விடுகதைகளை முனைவர் அ. கனகராசு ஆராய்ந்து நூலாக 1998ஆம் ஆண்டு வெளியிட்டார்.
முனைவர் தி. பெரியசாமி கொங்கு நாட்டுப்புற விடுகதைகளை, பாலியல் தன்மை வாய்ந்தவற்றையும் விட்டுவிடாமல், பல தலைப்புகளின்கீழ் பகுத்து நூலாக்கினார். சென்னை ‘தன்னனானே’ பதிப்பகம், 1006 விடுகதைகள் கொண்ட தொகுப்பாக அண்மையில் அதை வெளியிட்டுள்ளது.
பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம் 1964 ஆம் ஆண்டில் ‘வாய்மொழி இலக்கியம்’ என்ற தலைப்பில் விடுகதைகளைக் குறித்த ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பை வெளியிட்டார். முனைவர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் தம் ‘சங்க காலத் தமிழும் பிற்காலத் தமிழும்’ என்ற நூலிலும், கி.வா.ஜகந்நாதன் ‘கஞ்சியிலும் இன்பம்’ போன்ற நூல்களிலும், முனைவர்கள் வி.மி. ஞானப்பிரகாசம், க.ப.அறவாணன் ஆகியோர் தாம் பதிப்பித்த ‘நாட்டுப்புற இலக்கியப் பார்வைகள்’(சென்னை,1974) நூலிலும், முனைவர் ஆறு. அழகப்பன் தம் ‘நாட்டுப்புறப் பாடல்கள்-திறனாய்வு’(சென்னை,1974) நூலிலும் இவற்றைக் குறித்து ஆராய்ந்தனர். மேலே குறிப்பிட்டாற்போல் புதுச்சேரி விடுகதைகளை முனைவர் அ. கனகராசு அவர்களும், கொங்கு விடுகதைகளை முனைவர் தி. பெரியசாமி அவர்களும் மிகவும் சிறப்பாக ஆராய்ந்துள்ளனர்.
“விடுகதை என்பது விடுவிக்கவேண்டிய புதிர்” என்று அறிஞர் மு.சண்முகம் பிள்ளை அவர்கள் கூறிவிடுகிறார். எல்லோருக்கும் தெரிந்த ஓர் உண்மையைத் தளர்த்தி வெளிப்படுத்துவது 'நொடிவிடுத்தல்' என்று தென்னார்க்காட்டுச் சிற்றூர்களில் சொல்லப்படுகிறது. "எங்கே நொடி விடு பார்க்கலாம், விடுவித்துக் காட்டுகிறேன்!" என்பார்கள். ஏற்புடைய விடை கூறுவதற்கு 'நொடி விடுவித்தல்' என்று பெயர். குறிப்புகள் காட்டி விடை கேட்பதுவே புதிர் ஆகும். "கலை அழகோடும், மறைப்பு வித்தையோடும் தேடச் சொல்வது விடுகதை; யோசிக்க வைப்பது இதன் நோக்கம். நேசிக்க வைப்பது இதன் நேர்த்தி" என்று முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம் இதற்கு விளக்கம் தருகிறார்.(கொங்கு விடுகதைகள், ப.iii)
மிகச் சிறந்த விடுகதைகள் சில
1. குழந்தைச் சுமை:
தமிழ் வழங்கும் எவ்விடமும் சென்று "வருத்தம் இலாத சுமை - அது என்ன?" என்று கேட்டோமானால் உடனே 'குழந்தைச்சுமை' என்ற விடை வரும்.[த.வி.,2327]
கொங்கு நாட்டுப் பக்கம் சென்று, "காத வழி போனாலும், கைகடுக்காச் சுமை என்ன சுமை?" என்று கேட்டால் அந்த விடை கிடைக்கும்.[கொ.வி., 604]
புதுச்சேரிச் சிற்றூர்களில் "சும்மா இருக்காது, சொல்லவும் தெரியாது - அது என்ன?" என்று கேட்டால் 'குழந்தை' என்ற விடை வரும்.[பு.மா.நா.வி.கா.ம.வா., 93]
இதேபோல் எல்லா விடுகதைகளும் பொதுவான விடை பெறுவதில்லை. கொங்குப் புறத்துக்கே உரிய பேச்சுவழக்கில் அமைந்த நெருஞ்சி முள்ளைச் சுட்டும் ''சின்ன மச்சான் குமிய வச்சான்'' என்பது பிற பகுதிகளில் வழக்கில் இல்லை.
2. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு:
புதுச்சேரிச் சிற்றூர்களில் வழங்கப்படும்,
"பச்சைப் பச்சை டாக்டர்
எங்க டாக்டர்
குண்டு குண்டு டாக்டர் எங்க டாக்டர்
வெள்ள வெள்ள டாக்டர்
எங்க டாக்டர் - அது என்ன?"[பு.மா.நா.வி.கா.ம.வா., 287]
என்பது வெற்றிலை பாக்கு சுண்ணாம்பைக் குறிப்பதாகும்.
கொங்கு நாட்டுச் சிற்றூர்களில்,
"ஆசைக்கு அவளெக் கட்டி
அழகுக்கு இவளெக் கட்டி
கொஞ்சி விளையாடக்
கொழுந்தியாளக் கட்டி"[கொ.வி., ப.96]
என்று இது குறிப்பிடப் பெற்றாலும், புகையிலையோடு இம்மூன்றும் போடப்பட்டால் என்ன ஆகும் என்பதற்கு,
"ஆசைக்கு அவளெக் கட்டி
அழகுக்கு மகளெக் கட்டி
கூடிவாழக் கொழுந்தியாளக் கட்டி
சேர்ந்து வாழ நங்கையா*ளக் கட்டி
நாலு பேருஞ் சேர்ந்து
நாசமாப் போயிட்டாங்க - அது என்ன?"[கொ.வி., ப.96]
[*நங்கையாள் = அண்ணனுக்கு மனைவி; கணவனின் அக்காள்; மனைவியின் அக்காள்]
வேறு ஓர் இணைப்பு விடுகதை உள்ளது.
புதுச்சேரிச் சிற்றூர்களுக்கே சொந்தமான விடுகதைகள் சிலவற்றைப் பார்ப்போம்.
"ஓகோ லேலோ
உயர்ந்த லேலோ
கண்டந் துண்ட
சப்லட் லேலோ - அது என்ன?"
என்று கடற்புரச் சிற்றூர்களில் முருங்கைக்காய் சுட்டப்பெறுவதுபோல நல்ல தமிழில் வயற்புறச் சிற்றூர்களில்,
"உச்சாணிக் கிளையிலே
ஊசிகட்டித் தொங்குது - அது என்ன?"
என்ற விடைக்குரியதாகிறது.
தூக்கணங்குருவிக்கூடு குறித்த விடுகதையான,
"சின்ன சிறுக்கியும்
சின்ன பையனும்
சிரித்துக் கட்டின தாலி
சிக்கில்லாமல் அவிழ்த்தவர்க்குச்
சென்னப் பட்டினம் பாதி - அது என்ன?"
என்பதில் தாலிக்குக் கொடுக்கப்படும் முதன்மை தெரிகிறது. குருவிக்கூட்டைத் தாலியாகக் கருதுமளவு புதுவைச் சிற்றூர்களில் தாலிக்கு முகாமை இருந்திருக்கிறது.[பு.மா.நா.வி.கா.ம.வா., ப.94]
புதுச்சேரி சார்ந்த சாதி-தொழில் அமைப்புகள், கல்வி, எண்ணும் எழுத்தும், புழங்கும் ஆங்கிலச் சொற்கள், வண்ணங்கள், வழிபாடுகள், மகளிர் பற்றிய வசைமொழிகள், மனைப்பொருட்கள்-பயன்பொருட்கள், ஆண்-பெண் ஆடை அணிகலன்கள், இசைக்கருவிகள், ஊர்திகள், திருமணம்- மகப்பேறு, முறையற்ற பாலியல் உறவுகள் குறித்த விடுகதைகள் மேலும் எத்தனையோ உள்ளன.
15.10.06
முப்பட்டைச் சுரண்டலும் ஆணியமும்
முப்பட்டைச் சுரண்டலும் ஆணியமும்
- தேவமைந்தன்
வீட்டிலும் வைகறைக்கு முன்பே
வேலை தொடக்கி,
கணவனெனும் மேலதிகாரிக்கு
வேண்டிய தட்டை வாகாக வைத்து,
அதன்மேல் தேவையறிந்த
சிற்றுண்டியை முகம்பார்த்து வைத்து,
சூடாய்க் குடிநீரும் சுக்குநீரும் காபியும்
கொண்டுவந்து வைத்து,
‘மூடு’அறிந்து
“ஏங்க போய் வரவா?” -
விலுக்விலுக்கென்று தோளில்
புடைத்திருக்கும் பைதொங்க,
அதிலொரு அழுக்கான
‘வாட்டர் பாட்டில்’ மூடி
தலைநீட்ட,
அவசரப் பவுடர் பூச்சு
மயில் கழுத்து வரிகள்போட,
தாறுமாறாய் ‘டூவீலர்’ கிளப்பி,
‘அவனை விடவும் அதிக சம்பளம்’
போவது, அலுவலக
மேலதிகாரியிடமும் திட்டுவாங்கவா..
இரட்டைச் சுரண்டலும் போய்,
முப்பட்டைச் சுரண்டல் - இப்பொழுது
எண்ணற்ற பெண்களுக்கு.
காரணம், அவர்கள் வாங்கத்
தயாராகவுள்ள போலிச் சம்பளத்தை
ஆண்களுக்குத் தரமுடியுமா?
சொல்லிவைத்தாற்போல் எப்படி
சகோதரிகள் பலரும்
ஆகவும் குறைந்த சம்பளத்துக்கு
அதிகஅதிகமாய் வேலைவாங்கும்
விளக்குகளுக்கு விட்டில்கள் ஆகிறார்கள்?
இதில்வேறு “போன் எதுவும் பேசாதே!
லஞ்ச் டயமானாலும்..”
‘வெரி ஸ்ட்ரிக்ட் இன்ஸ்டிடூஷன் சார்!” -
இளித்துக் கொண்டு சொல்கிறார்கள்,
அதிக சம்பளம் குறைந்த வேலைக்கு
வாங்கும் ‘புண்ணியங்’கள்.
பெண்ணியம், அரசாங்கம் போல்.
சாதனைப் பெண்கள் கலர்கலராய்
வார இதழ்களில்.
ஆமாம்..திருவள்ளுவரே!
“இருவேறு உலகத்து இயற்கை”..
மெத்தவும் சரிதான்.
கோலெடுக்காமல் மிரட்டினார் என்
பெண்ணியத் தோழி...
“பெண்களைச் சுரண்டுபவர்கள் ஆண்கள்தாம்;
பெண்களைப் பெண்களே சுரண்டுவது
போலத் தான்றவும் தோன்றும்தான்;
அதற்குப் பின்னாலும்
இருப்பது ஆணாதிக்கமே...
“அம்மா சொன்னால் இவன் ஏன் வாங்குகிறான்?
அம்மா ஊற்றினால் இவன் ஏன் கொளுத்துகிறான்?”
-ஆமாம் என்று சொன்னால், அதுவும்
ஆணாதிக்கத்தின் பாசாங்கேதான்.
-இல்லை என்று மறுத்தாலோ
அது ஆணாதிக்க மூர்க்கம்....
“அது சரி கம்ராது!*
இந்தக் குறைஞ்ச சம்பளத்துக்கு
இத்தனைபேர் போறாங்களே!..”
“ஏம் போறாளுவ..
ஆம்பள வெரட்டாம வெரட்டறான்..”
***
கம்ராது = ‘தோழா’ என்பதற்கான பிரஞ்சுத் தமிழ்ச்சொல். தோழமை மிக்க ஆண்களும் பெண்களும் பிரான்சிலும் புதுச்சேரியிலும் இவ்வாறு பேசிக்கொள்வதுண்டு.
Subscribe to:
Posts (Atom)