9.6.15

தமிழ்மணி வி.ஆர்.எம். செட்டியார் அவர்களின் - கீதாஞ்சலி தமிழாக்கம்

1962 ஆம் ஆண்டில் ஏழாம் பதிப்பைக் கண்டது, தமிழ்மணி வி.ஆர்.எம். செட்டியார் அவர்களின் - கீதாஞ்சலி தமிழாக்கம். காரைக்குடி, செல்வி பதிப்பகம் இதைப் பதிப்பித்தது. அந்தக் காலத்தில், 'பி.ஏ.' என்பதே பெரிய படிப்பு. அதனால்தான் தமிழ்மணி வி.ஆர்.எம். செட்டியார் அவர்களின் பெயருக்குப் பின் 'பி.ஏ.' என்ற பட்டத்தை 1950களிலேயே பதிப்பகங்கள் அச்சிடலாயின. தாகூரின் உணர்வு குன்றாமல், அவருடைய கீதாஞ்சலியின் நூற்று மூன்று கவிதைகளை எளிய தமிழில் செட்டியார் அவர்கள் தமிழாக்கினார். பானைச்சோற்றுக்குப் பதமொன்று இதோ: "எங்கு மனம் பயமற்று விளங்குகிறதோ, எங்கே தலை கம்பீரமாய் நிமிர்கிறதோ, எங்கு அறிவு சுதந்திரத்துடன் பொலிகிறதோ, எங்கு குறுகிய சாதிமதப் பிளவுகளால் உலகம் உடையாமல் உருப்பெற்றிருக்கிறதோ, எங்கு உண்மையின் ஆழத்தினின்று சொற்கள் உதயமாகின்றனவோ, எங்கே தளரா முயற்சி பரிபூரணத்தை நோக்கி கைகளைப் பரப்புகிறதோ, எங்கு பகுத்தறிவெனும் தெளிந்த ஆறு மாண்டொழிந்த பழக்கங்களான பயங்கரப் பாலைமணலில் பாயாது மீள்கிறதோ, எங்கே விரிந்தசிந்தனையிலும் செயலிலும் எனது உள்ளத்தை நினது அருள் இழுத்துச் செல்லுகின்றதோ, அந்தச் சுதந்திர சுவர்க்கத்தில், என் அப்பனே, எனது நாடு விழித்தெழுவதாக!" - கீதாஞ்சலி 35.

31.5.15

நாகரத்தினம் கிருஷ்ணா, ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ மழையும் கடற்கரை மனிதர்களும் - தேவமைந்தன் முகநூல் குறிப்பு

“கோடையில் கடைசிவரை ஏமாற்றப் பழகி, விரக்தி எச்சிலாய் நாக்கில் துளிர்க்கும் மழை. ஆடிமாதத்தில் வீட்டிற்குள் நுழைவதற்குள் இடியும் மின்னலுமாய்ச் சடசடவென்று பெய்து நம்மைத் தொப்பலாக நனைத்துத் தெருவில் புழுதியாய் மணக்கும் மழை. போதும் போதும் என்று புலம்பினாலும் இரவு பகலாக இடைவிடாமல் ஹோவென்று மண்ணில் இறங்கி, ஐப்பசி கர்த்திகை மாதங்களில் பூமியை வெள்ளக்காடாக மாற்றி நொப்பும் நுரையுமாகப் பாய்ந்து கடலை ஆர்ப்பரிக்க வைக்கிற மழையென அப்பாவாலறிமுகப்படுத்தப்பட்ட மழைதான் எத்தனைவிதம். தனது இறப்புக்கூட ஒரு மழைநாளில் நடைபெற வேண்டுமெனத் தீர்மானித்தவர்போல, இவள் பார்த்துக்கொண்டிருக்க அவர் கடலில் இறங்கியதும், கரையில் நின்று கதறியதும், உப்பிய வயிறும் சிவந்த கண்களும் ஈக்கள் மொய்க்கும் மூக்குமாக வாசலில் கிடத்தியிருந்த அப்பாவை எரிக்க ஈரவிறகிற்கு டின் டின்னாக மண்ணெண்ணெய் தேவைப்பட்டதை அரிச்சந்திரன் கோவிலில் நின்றபடி பார்த்துக்கொண்டிருந்ததும் நேற்று நடந்ததுபோல இருக்கிறது. மழைகாரணமாக இரண்டு நாட்கள் தொடர்ந்து அவர் உடலை எரிக்க வேண்டியிருந்ததென்று வெட்டியான் சொன்னான். அப்பாவைத் தீயில் எரித்ததைவிட...”
“ஹரிணி!”
“மழையிற் கரைத்திருக்கலாம்” -- கையிலிருந்த நாவலை மூடி விட்டு, தன் பெயரைச் சொல்லி அழைத்த மனிதரை நிமிர்ந்து பார்த்தாள்.”
- நாகரத்தினம் கிருஷ்ணா, ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ பக்.70-71

26.5.15

"என்ன பண்ணிக் கிழிச்சீங்க?" - பட்டுக்கோட்டை பாணியில் கேட்கும் 'அதிகம் படிக்காதவர்''...

நடைப்பயிற்சிப்பூங்காவிலோ கடற்கரையிலோ அல்லாமல், காலையிலேயே தனியார் பேருந்துகள் தங்கள் ஆற்றலையெல்லாம் காட்டி விரையும் விமானதளச் சாலையிலும் தொல்காப்பியர் சாலையிலும் [புதுச்சேரி நண்பர்களே! எனக்கு ஒரு சந்தேகம்: நாவலர் நெடுஞ்செழியன் மேனிலைப் பள்ளியும்; புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனமும் உள்ள சாலை, தொல்காப்பியர் சாலைதானே?] காலை நடைப்பயிற்சிக்குப் போய் வந்து, ஏறுவெயில் வந்துவிடுமுன் 'பண்ணுருட்டிக்காரர் கடை'யில் காய்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் பொழுது, நெடுநாள் பழக்கமான நண்பர் என்னை நிறுத்தி - "ஒங்க தினத்தந்தியிலேயே ஒவ்வொரு செவ்வாக்கிழமையும் 'கல்வி செய்திகள்' என்று தலைப்பு போட்டு "ஆங்கிலம் மிகவும் அவசியம்"ன்னு பக்கத்தையே அடைச்சுட்டு ஒரு தொடரை, 37 வாரமா போட்டுட்டுருக்காங்க. பள்ளி விளம்பரங்கள்'லயோ - " அனைத்துப் பாடங்களும் மிகச்சிறப்பாக ஆங்கிலவழிக் கல்வியில் போதிக்கப்படுகின்றன / A Futuristic English Medium School" - அப்படி'ன்னு பெற்றோரையெல்லாம் இழுத்துட்'ட்ருக்காங்க! இதையெல்லாம் எதிர்த்து ஆக்கபூர்வமா எதையும் சாதிக்காம, ஒண்ணு, நம்ம தமிழரையெல்லாம் பேடி கீடி'ன்னு திட்றாங்க.. இல்லேன்னா, அரசு அங்கீகாரமில்லாத பள்ளிகள தாங்களே திறந்து காசுபாக்க முயற்சிக்கிறாங்க! பாருங்க.. இப்'டியே போனா, "அனைத்துப் பாடங்களும் மிகச்சிறப்பாக ஹிந்திவழிக் கல்வியில் போதிக்கப்படுகின்றன / A Futuristic Hindi Medium School" அப்படீன்னு விளம்பரங்க வரப்போவுது! நம்ம ஜனங்க அந்த பள்ளிகள்'ல பிள்ளங்'கல சேத்த 'லோலோ'ன்னு அலையப் போவுதுங்க!" என்றார். அவர் அதிகம் படிக்காதவர். ஆனால், சொல்லொன்று செயலொன்று என்றில்லாதவர். தன் பிள்ளைகளை அரசுப்பள்ளிக்கு அனுப்புகிறவர். ஒரு கட்சியைச் சார்ந்தவர். எதையும் நேரடியாகப் பேசுபவர். அவருக்கு என்னால் உரிய மறுமொழி சொல்ல ஏலவில்லை. என் பிள்ளைகளை, அரசுப் பள்ளிகளிலேயே படிக்க வைத்தவன் நான். ஆனால், என் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளிலும் நடுவண் அரசுப் பள்ளிகளிலும் சேர்த்துப் படிக்க வைப்பதைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாதவன். பேரப்பிள்ளைகளை, என் நண்பர்கள்முன், அவர்களின் பெற்றோர் வைத்த பெயர்களை வைத்தே அழைக்கிறேன். நண்பர் சொன்னதை 'உள்ளதை உள்ளவாறு' உங்கள்முன் வைக்கிறேன். அதற்குத்தானே முகநூல்!

22.5.15

அற்புதங்கள் கற்பிதங்கள் அல்ல! - தேவமைந்தனின் முகநூல் குறிப்பு

அன்றாட வாழ்வில் நமக்குள் - நம்முடன் - நம்தொடர்பாக நடக்கும் சிறுசிறு அற்புதங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, பெரிய பெரிய பெரிய அற்புதங்களை ஏற்படுத்துவார்கள் என்று நம்பி, அற்பச் சிறுமதி கொண்டவர்களை நாடி நாம் ஓடுகிறோம் - என்று எமர்சன் சொன்னார். சற்றுமுன் என்னைத் தொடர்புகொண்டு அலைபேசிவழி பேசியவரின் பேச்சு யாதுகாரணத்தாலோ தடைபெற்று "அப்புறம் தொடர்பு கொள்கிறேன் ஐயா!" என்று நின்றதும் அற்புதம்தான். இல்லாவிட்டால், இந்தக் குறிப்பெழுத எனக்கு வேறு செவ்வி கிடைக்காது. தமக்குள் முரண்பட்ட நண்பர்களின் பொதுவான ந(ண்)பராக விளங்குவதில் சுகத்தைவிட சோகம் பெரிது. இந்த நண்பர் சொல்வதை அவருக்காகாத அந்த நண்பரிடமும் அவர் சொல்லும் கமுக்கங்களை இவரிடமும் சொல்லி எனக்குப் பழக்கமில்லை. அப்படி, வளரவுமில்லை. முகநூல், இதை உடைக்கிறது. அனாயாசமாகப் பிய்த்துப் போடுகிறது. அதிமுகவைச் சார்ந்த நண்பர் கருத்துக்கு லைக் போட்டதைத் திமுக நண்பருக்கு மட்டுமல்லாமல் பொதுவிலும் பறைசாற்றுகிறது. திமுக நண்பர், "என்ன சார், எவ்வளவு நடுநிலையானவரென்று உங்களை நினைத்தேன்.. தலைவரை அடுத்தடுத்துக் கேலி பண்ணுகிறார் அந்த ஆள்.. அவருக்கு நீங்கள் லைக் போடுகிறீர்களே???" - நியாயந்தான். தன் மேனிலைப் பள்ளியிறுதிக்காலத்தில் நிகழ்ந்த என் தொடர்பான நிகழ்ச்சி முதலாக என்னுடன் நாற்பதாண்டுகளாகப் பழகுவதுடன் வழியில் போக்குவரத்தில் பார்த்தால்கூட வண்டியை ஓரங்கட்டிவிட்டு ஓடிவந்தணைத்துக் கொள்ளும் தோழரின் முகநூல் பதிவைப் பகிர்ந்ததற்காக, எல்லா விடயங்களிலும் என்னைவிடப் பெரியவர், "தேவமைந்தன்! இது உங்கள் முகநூல் கணக்குத்தானே?" என்று ஐயப்படுகிறார். ஒன்றைத் தெளிவாகச் சொல்லி விடுகிறேன். 'கண்மறைப்பு'க் கட்டி வைக்கப்பட்ட குதிரை அல்லன் நான். என்னுடன் எனக்குத் தெரிந்து அறுபதாண்டுகளாக நட்புடனிருக்கும் அத்தனை நண்பர்களும் எனக்கு அகத்தியர்கள்தாம். "அரசியல்ல இதுவெல்லாம் சகஜமப்பா!" என 'சூரியன்' படத்தில் கவுண்டமணியின் 'பஞ்ச் டயலாக்' வருமே, அதுபோலத்தான் அரசியல் குறித்த நண்பர்தம் இடுகைகள். இதையெல்லாம் வைத்துக்கொண்டு, என்னை முட்டுச் சந்தில் மாட்டவைத்தடித்தால் நான் எங்கே போவது? நான் Political Science என்ற அரசியலை கோவை அரசினர் கலைக் கல்லூரியில் முதன்மைப் பாடமாகப் படித்தபோதே புனிதமான அரசியல் கோட்பாடுகள் வேறு -நாட்டில் நடக்கும் அரசியல் வேறு என்பதைப் புரிந்து கொண்டவன். என் சீனியரான திரு ஆ. துரைக்கண்ணு, கல்லூரி ஹாஸ்டலில் ஆங்கில 'ஸ்வராஜ்யா' ஏட்டைக் கொடுத்து, " ஆச்சாரியார் ஆங்கிலத்தில் நடத்துகிறார் இதை.. இதையெல்லாம் வாசிக்க வேண்டும் பசுபதி! அப்போதுதான் அரசியல் விளங்கும்!" என்று அறிவுறுத்தியிருக்கிறார். 1965இல் கலைக்கல்லூரி மாணவர்களாக இருந்த எங்களை இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபடவைத்தவர் ஆ. துரைக்கண்ணுதான். அறிஞர் அண்ணாவால்தான் அரசியல் வகுப்பில் சேர்ந்தேன். சென்ற அறுபதுகளில்(1960s) பெரும் அரசியர் தலைவர்களாக விளங்கிய காமராசர், ராஜாஜி, ஜீவா முதலானவர்கள், எங்களைப்போன்ற மாணவர்களிடம் வெகு உற்சாகமாகப் பேசுவார்கள். அறிவுரைப்பார்கள். இந்தக் குறிப்பை நானெழுதக் காரணம், நமக்கு கவிஞர் இன்குலாப் அவர்களின் 'வரமா சாபமா" கவிதைபோல் கிடைத்த முகநூலின் விளைவுகள். நாம் யாருக்கெல்லாம் எதற்கெல்லாம் லைக் போடுகிறோம் என்பதை விலாவாரியாக வெளிப்படுத்துவது - முகநூலுக்கு நாரதம். நமக்கு? பாவேந்தர் பாரதிதாசன் சொல்வதுபோல், " சிரமறுத்தல் வேந்தனுக்குச் சிறியகதை.. நமக்கெல்லாம் உயிரின் வாதை!"

5.3.15

என் முகநூல் பக்கத்திலிருந்து மூன்றே துளிகள்

"ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்." - உலகநாதனார். இதற்கு, புலவர் குழந்தை அவர்கள் உரை:- "ஒருவர் மேலும் குற்றம் சொல்ல வேண்டாம்... யார் மீதும் குற்றங் கூறக் கூடாது."
# Never blame anybody. - Ulaga Needhi (a didactic literature in Tamil)

எந்தப் பிரச்சினை ஆனாலும் ஒத்திப்போடாதே. சாட்சிக்காரனை நயந்து கொள்ளாமல், சண்டைக்காரனைச் சந்தி. வாய்விட்டுப் பேசு. அவன் பிரச்சினை என்ன என்று கேள். முடிந்தால் தீர்த்து வை. இல்லாவிட்டால் 'bye' சொல்லிவிட்டு வந்துவிடு. - என்று அறிவுறுத்திய தந்தை சொல்லைக் கடைப்பிடித்தே சோதனை பல வென்றேன்..
'Go to the centre. Never compromise. Talk. Win. If you couldn't have chance to talk, BID GOOD BYE to the gentleman. Never turn back. Go on.' - Dad Mr. P.K. Annan

"தெரியாததைத் தெரிந்தது போலப் பேசுவது உமாருக்கு வெறுப்பையே விளைத்தது. அறியாமையினூடே படாடோபமான வார்த்தைகளைப் பேசி நாம் நடிக்கிறோம்." எஸ். வையாபுரிப் பிள்ளை(1951) பாரசிகப் பாவலன் உமர்கயாம் குறித்து.

" எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே!" - ஔவையார்

மற்றவர்கள் நம் மேல் விடும் சாபம் பலிக்கிறது என்றால், நமது மனம் நம்மைவிட அவர்களைத்தான் மதித்து ஏற்றுக் கொள்கிறது என்று அர்த்தம். திடமான மனம் உள்ளவர்கள், மற்றவர்கள் தரும் டென்ஷனை மதிக்க மாட்டார்கள்; டார்ச்சர் கொடுப்பவர்களுக்கு -'சட்டபூர்வமாக' கவுன்ட்டர்-டார்ச்சர் கொடுப்பார்கள். சம்பளம், நம் உழைப்புக்குக் கிடைப்பது. மனநோய் பிடித்தவர்களை நாமே நம் தலைமேல் உட்கார விடுவதற்குப் பிரதியாகப் பெறுவது அல்ல. பொதுத்துறை, தனியார் நிறுவனங்களின் மேலாண் இயக்குநர், தன்னிடம் -'குரூப்' சேர்க்காமல் பணிபுரியும் 'விசுவாசிகளை' 'unskilled'கள் டாரச்சர் பண்ணுவதற்கு மறைமுகமாக உதவினார் என்றால்,தகுதி மேம்பட்ட இன்னொரு நிறுவனம், அந்தப் பணியாளரை 'நேரம் பார்த்து' ஏற்றுக் கொள்ளும். " எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே!" - ஔவையார்.

அப்பா, அன்புள்ள அப்பா! (Thanks for the title: Sujatha) முகநூல் பதிவிலும் திண்ணை வலையேட்டில் தேவமைந்தன் வாழ்வியலுரை

அப்பா, அன்புள்ள அப்பா! (Thanks for the title: Sujatha)
11 February 2015 at 12:25

Thinnai
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60609223&format=html&edition_id=20060922
ஒரு மனிதரின் வாழ்க்கை - பி.கே.அண்ணார்
தேவமைந்தன்

குன்றின்மேல் இட்ட விளக்காக,பரவலாக, ஊடகங்களாலும் விளம்பரங்களாலும் புகழ்பெற்றவர்களின் வாழ்க்கையை அறிவதோடு மட்டும் திருப்தி அடைவதைவிடவும் மேலானது, ஆடம்பரம் இல்லாமல் அகல் விளக்காக வாழ்ந்து, சாதித்து மறைந்த சான்றோர்களின் வாழ்க்கை வரலாறுகளை அறிதல்.
- டேவிட் லிண்ட்சே(David Lindsey)

இலண்டன் மிஷன் ஸ்கூலின் மெட்ரிகுலேஷன் தேர்வில், ஆங்கிலப் பாடத்தில் ஒரே ஒரு மதிப்பெண் குறைந்ததால் தோல்வியுற்ற ஆத்திரம், கள்ளக்குறிச்சி அருகே உள்ள சங்கராபுரத்தில் பிறந்து வளர்ந்து கோவையில் படித்த கறுப்பண்ணனை, யாரிடமும் சொல்லாமல் சென்னைக்கு இரயிலேறி ஓடி, அங்கே ஹார்பரில் நங்கூரம் விலக்கிக் கொண்டிருந்த கப்பலொன்றில், அது எங்கு சற்று நேரத்தில் பயணம் ஆகப்போகிறது என்றே தெரியாமல், ஒளிந்துகொள்ளச் செய்தது.

இன்று அந்நிகழ்ச்சி நடந்திருந்தால் அது வேறு கதை. ஆனால் அது நடந்தது, சற்றேறக் குறைய, சென்ற நூற்றாண்டின் தொடக்கத்துப் பத்துகளில் என்பதால், மனிதாபிமானத்தோடு வாழ்ந்த ஆங்கிலேயக் கேப்டன் ஒருவரால் கறுப்பண்ணனின் வாழ்க்கை ஆரோக்கியமாகத் திசை திரும்பியது. அவன் ஒளிந்திருந்த இடம் அந்தக் கேப்டனின் அறைக்குப் பக்கத்தில்தான் இருந்தது. வளர்த்துவானேன்?

'அந்தக் காலத்து மெட்ரிக் ஆங்கிலத்தில்' கறுப்பண்ணன் சொன்ன விவரமெல்லாம் கேட்டறிந்த கேப்டன், கறுப்பண்ணனைத் தன்னுடன் இருக்கச் செய்து ஆங்கிலத்திலும் அந்தக் கப்பல் ஏற்றிருந்த "மெர்குயி டின் ட்ரேடிங் கம்பெனி' வியாபாரத்திலும் பயிற்சி கொடுக்கத் தீர்மானித்த சில மணி நேரங்களில் 'பம்பஃஹ்' என்று சிலமுறை ஆரவாரித்தவாறு அந்தக் கப்பல் புறப்பட்டுவிட்டது.

சில காலம் அந்தக் கேப்டனின் அன்பிலும் கண்டிப்பான பயிற்சியிலும் நனைந்து காய்ந்த கறுப்பண்ணனுக்கு, அந்த ஆங்கிலேயன் தொடர்பால் மூன்று கருத்துகள் உள்ளத்தின் ஆழத்தில் சென்று தைத்துக் கொண்டு விட்டன; கடைசிவரை அங்கேயே தங்கவும் தங்கி விட்டன.

முதலாவது, சாதிப்பெயரைத் தன் பெயருடனோ அல்லது தன் பெயராகவோ வைத்துக்கொள்ளக் கூடாது. இரண்டாவது, குருதியைத் தெளிப்பதுபோல் எக்காலத்திலும் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டு எச்சிலைத் தரையில் உமிழக் கூடாது. மூன்றாவது, தன்பெயரில் அறிந்தோ அறியாமலோ நிறவெறி சார்ந்த அம்சம் நிலைபெறக் கூடாது.

'கறுப்பு' என்பது தமிழ்நாட்டில் உள்ள கிராம தேவதை என்று அறிந்து கொள்ளாததாலோ, நிறவெறி நிரம்பித் ததும்பிக் கொண்டிருந்த அந்தக் காலத்திலும், தான் ஓர் ஆங்கிலேயன் - வெள்ளையன் என்ற வெறியில்லாமல் 'கறுப்பு' என்றால் கறுப்பினத்தவரையோ ஒடுக்கப்பட்டவர்களையோ குறிக்கும் என்று நினைத்துக் கொண்டதாலோ, அல்லது அதற்கு எதிர்மாறாகக் கறுப்பு நிறத்தைக் கறுப்பர்களின் அடையாளமாகக் கருதி உள்ளுக்குள் வெறுத்திருந்ததாலோ - அந்த ஆங்கிலேயர் மேற்படி மூன்றாவது உணர்வை உள்ளத்துள் விதைத்த விளைவாக, கறுப்பண்ணன் என்ற தன் பெயரை K.அண்ணன் என்று சுருக்கிக் கொண்டும் பெரியதம்பி என்ற தன் தந்தையின் பெயரைப் P என்ற தலைப்பெழுத்தாக முன்னிட்டுக் கொண்டும் P.K.அண்ணன் என்று மட்டும் தன் பெயரைப் பதிவு செய்து கொண்டார். [வளர்ந்துவிட்டார் அல்லவா? அதனால்..'ஆர்' விகுதி.] கப்பல் இங்கிலாந்தில் நங்கூரமிட்டபொழுது கேப்டன் உதவியுடன் பெயர்ப் பதிவு நிகழ்ந்தது.

முதல் உலகப் போரின் பாதிப்புகள் ஐரோப்பாவை விட்டு நீங்காத காலம்...

ஆண்டுகள் சில உருண்டோடின. பர்மாவில் கப்பல் நங்கூரமிட்டபின் பி.கே.அண்ணன் வாழ்வு மீண்டும் திசை மாறியது. முன்பு, சென்னையிலிருந்து வங்கக் கடலில் செல்லும் பொழுது. இப்பொழுது, வங்கக் கடல் வழியே பர்மாவுக்குச் சென்ற பொழுது. கேப்டன் விடை பெற்றுக் கொண்டு கடல்மேல் செல்ல, பர்மாவில் தங்கி, அங்கிருந்த 'மெர்குயி டின் ட்ரேடிங் கம்பெனி'யைக் கவனித்துக் கொண்டார். சில ஆண்டுகளில், தான் நண்பர்கள் சிலர் மூலம் கற்ற பின்னலாடை எந்திரங்களைப் பற்றிய அறிவைக் கொண்டு பர்மாவின் தலைநகரான ரங்கூனில் ஸ்பார்க்ஸ் சாலை 51ஆம் இலக்கமிட்ட - மரக்கட்டுமானமே பெரும்பாலுமான கட்டடத்தில் 'ஓரியண்டல் நிட்டிங் ஃபாக்டரி'’ என்ற பின்னலாடைத் தொழிலகத்தைத் தொடங்கினார். கோவையிலிருந்த தன் பெற்றோரையும் சகோதரர்களையும் ரங்கூனுக்கே அழைத்துக் கொண்டார். சகோதரர்களுக்குத் தன் ஃபாக்டரியில் பயிற்சி தந்து பின்னர் உரிய பொறுப்புக்களையும் தந்தார். அப்பொழுது, பிரிட்டன் பர்மாவை இந்தியாவின் ஒரு பகுதியாகக் கொண்டு ஆண்டுவந்தது. இவ்வாறு நிகழ்ந்த 1937ஆம் ஆண்டுவரை [அதே 1937இல் சுயாட்சியும், 1948இல் முழுச் சுதந்திரமும் பர்மா பெற்றது], கோவையிலிருந்து என்பதைவிடப் பெரும்பான்மையாகச் செட்டிநாட்டுப் பகுதிகளிலிருந்தும் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலிருந்தும் பர்மாவுக்குத் தமிழர்கள் பலர் சென்று அங்கேயே தொழில்கள், வணிகமுறைகள் பலவற்றைச் செய்து வளமாக வாழ்ந்தனர்.

தான் நிறுவிய பின்னலாடைத் தொழிலகத்தில், தன் உடன் பிறந்தாருக்கு மட்டுமல்ல உள்ளூர்க்காரர்களான பர்மாக்காரர்களுக்கு முதன்மையான வேலைகள் தந்ததாலும், பர்மியர்களுடனும் அங்கு வாழ்ந்த சீனர்களுடனும் ஒன்றுபட்டுக் கலந்து வாழ்ந்ததாலும் பி.கே. அண்ணன் அவர்களை அவர்கள் மிகவும் நேசித்தார்கள். அதற்கு ஓர் அடையாளம், இத்தனை ஆண்டுகள் கழித்த பின்பும், உள்ளது. புதுச்சேரியில்... பி.கே.அண்ணன் அவர்களின் கடைசி மகனின் வழிப் பேரனார் இல்லத்தில். தேக்கில் செய்யப்பெற்ற திருக்கோயில். மேலே உள்ள மூன்று கும்பங்களையும், நடுவில் உள்ள நான்கு தூண்களையும், தளத்தையும், அடித்தளத்தையும் எளிதாகக் கழற்றி விடலாம்; மீண்டும் பூட்டிக் கொள்ளலாம். நல்ல கனம். ஐராவதி என்ற கப்பலில், இரண்டாம் உலகப் போரின் இறுதியில், ரங்கூன் பி.கே.அண்ணார் [அச்சமயத்தில் அப்படி அழைக்கப்பெற்றார்] அவர்களுடைய குடும்பத்தாருக்குத் துணையாக அந்தக் கோயிலும் சென்னைக்கும், பின் கோவைக்கும் வந்தது. பின்னர், இருபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் புதுவைக்கும், அடுத்து ஐந்தாண்டுகளுக்குப் பின் காரைக்காலுக்கும், அடுத்தடுத்து ராஜயோகி ரங்கூன் பி.கே. அண்ணாரும் அவர் துணைவியார் தெய்வானை அம்மாள் அவர்களும் 1988ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் சமாதி எய்திய பின்னர் புதுச்சேரிக்கும் துணையாகச் சென்றது. அது தேக்கினால் ஆனது மட்டுமன்று. நல்லதொரு சீன மனிதரின் கலைத் திறனால் ஆனது. புதுச்சேரியில் ஆனந்தாசிரமத்தின் நிறுவனரும் தலைமை யோகியுமான கீதானந்தா அவர்களால் 1970ஆம் ஆண்டில் ‘ராஜயோகி’ என்ற சிறப்புத் தலைப்பு வழங்கிக் கெளரவிக்கப் பெற்றார். இதற்கும் இவர் துணைவியார் சிவதீட்சை பெற்று நாற்பத்தாறு ஆண்டுகள் நியமமான வாழ்க்கை வாழ்ந்தமைக்கும் அருணாசல சுவாமிகள் என்ற துறவியாரே காரணம். வேடிக்கை என்னவென்றால், இவர் வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்புமுனையிலும் உன்னதமும் சத்தியமும் வாய்ந்த துறவியர் சிலர், இவரைத் தளராமல் பார்த்துக் கொண்டு வழிநடத்தியதும்தான். இதற்குச் சரியானதொரு சான்று:

இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்டத்தில், ஜப்பான் நாடு தன் இராணுவ பலத்தால் அமெரிக்காவையும் அஞ்ச வைத்துக் கொண்டிருந்த காலகட்டம். பர்மாவில் நுழைந்து அட்டகாசம் செய்த ஜப்பான் படைகள், ரங்கூனுக்குள்ளும் புகுந்து சூறையாடின. அங்கே வளமாக வாழ்ந்த தமிழர்களும் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆட்பட்டனர். பானைச்சோற்றுக்கொரு பதமாக, ரங்கூன் பி.கே.அண்ணார் தொடர்பாக நிகழ்ந்த சூறையாடலைப் பார்ப்போம்.

மற்ற தமிழர்களைப் போல, தன் குடும்பத்தார் அனைவரையும் சீனக் கலைஞர் செய்து தந்த தேக்குக் கோயிலையும் கப்பலேற்றித் தாயகத்துக்கு அனுப்பியபின் ஒருநாள் காலை... ஜப்பான் இராணுவம், ரங்கூனுக்குள் புகுந்து சூறையாடத் தொடங்கிய நேரம். ஜப்பான் இராணுவத்தினர் சிலர், இவர் வீட்டுக் காம்பவுண்டுக் கதவுகளை அதிரடியாகப் பெயர்த்துக் கொண்டு வந்தனர். இவரை அழைத்து, இவர் பார்க்கப் பார்க்க, ஷெட்டில் நின்று கொண்டிருந்த - இவருடைய - தட்டெழுதும் வசதி சேர்ந்த [இன்று கார் ஸ்டீரியோ வசதி போல] ஆர்ம்ஸ்ட்ராங் சிட்னி என்ற அந்தக் காலச் சொகுசுக்காரையும் போர்ட் காரையும் வெடிகுண்டு வீசித் தகர்த்து விட்டு - "இனியும் நீங்கள் தாமதித்து இங்கிருந்தால், உங்களுக்கும் இதே கதி நிச்சயம். நாளைக்கு வருவோம்!" என்று எச்சரித்துப் போய்விட்டார்கள்.

நல்ல வேளை. குடும்பத்தார் நிம்மதியாகக் கப்பலில் போய்க் கொண்டிருக்கிறார்கள்... இவருக்கு அந்த வாய்ப்பும் இல்லை. ஆனால் சிறந்த நண்பர்கள் இருந்தனர். அவர்களைத் தொடர்பு கொள்ள இவர் போன வழியில் அவர்களே நடைப் பயணமாக, எதுவும் கைகளில் எடுத்துக் கொள்ளாமல், சிரபுஞ்சி வழியாகவும் இந்தியாவின் வடகிழக்கு வாயில் வழியாகவும் தாயகத்துக்கே திரும்பும் நோக்கத்துடன் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுடன் ரங்கூன் பி.கே.அண்ணாரும் நடைப்பயணம் தொடங்கினார். வழியில் 'ஸ்டேட் எக்ஸ்பிரஸ்' சிகரெட் டின்கள் இரண்டில் ஒன்றில் அரிசியும் இன்னொன்றில் உப்பும் தாங்கி நடந்து தின்று உயிர்சுமந்து வந்த போராட்டத்தில், பிழைத்தவர்கள் சிலரே.

இந்தியாவுக்குள் நுழைந்து விட்டபின், மற்றவர்களைப் போல உடனே தென்னகம் திரும்பாமல் ரிஷிகேசத்தில் உள்ள சுவாமி சிவானந்தர் குடீரம் என்னும் குடிலில் ஒரு மாதத்துக்குமேல் தங்கி உள்ளத்தைத் தெளிவாக்கிக் கொண்டார். மாலையிட்டு வழிபடப்பெற்றுக் கொண்டிருந்த தன் படம் இருந்ததும்; கோவை செல்வபுரத்தில் தன் குடும்பத்தார் வாழ்ந்திருந்ததும் ஆன வீட்டுக்கு அவர் போய்ச் சேர்ந்தபொழுது, அக்குடும்பத்தார் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை ஊகிக்கக் கூட முடியாது.

அப்புறமும் தன் குடும்பத்தார் நலத்துக்காக, எழுபத்திரண்டு வயது வரை உழைத்தார். பழைய செல்வ வாழ்க்கை தன்னை விட்டுப் போனபின்பும் மனம் தளராமல் 27 இஞ்ச் பிலிப்ஸ் சைக்கிளில் வேலைக்குச் சென்றதோடு, தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகளுக்கும் தொடர்ந்து சென்றுவந்தவரை மதித்துப் பாராட்டியவர்கள் - தமிழ்வாணன் முதல் ஆன்மீகப் பேச்சாளர் நா.கிரிதாரி பிரசாத் வரை பலர். இதைவிடவும் வியப்பானது, எந்த பர்மாவிலிருந்து தன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடந்து வந்தாரோ, அதே நாட்டுக்குத் தன் இரண்டாம் மகனார் திரு ஏ.கே. மூர்த்தியும் அடுத்தவர் திரு சிவப்பிரகாசமும் (மீண்டும்) பர்மாவுக்குச் சென்றபொழுது ஊக்குவித்தார். அவர் எண்ணம் போலவே, அவ்விருவரும் மிகவும் சிறப்பாக பர்மாவில் வாழ்ந்தனர். தமிழ்வாணன் தன் 'கல்கண்டு' இதழில் பர்மா ஏ.கே. மூர்த்தி அவர்களின் முயற்சிமிக்க அரிய வாழ்வைப் பற்றி விரிவாக (Profile) எழுதிப் பாராட்டினார்.

இன்னும் சொல்ல எத்தனையோ உண்டு, இராஜயோகியாகத் தன் தொண்ணூற்றாறு வயதில் காரைக்காலில் பச்சூரில் ஒடுக்கமான பி.கே.அண்ணார் வாழ்க்கையில்.

குன்றின்மேல் இட்ட விளக்காக,பரவலாக, ஊடகங்களாலும் விளம்பரங்களாலும் புகழ்பெற்றவர்களின் வாழ்க்கையை அறிவதோடு மட்டும் திருப்தி அடைவதைவிடவும் மேலானது, ஆடம்பரம் இல்லாமல் அகல் விளக்காக வாழ்ந்து, சாதித்து மறைந்த சான்றோர்களின் வாழ்க்கை வரலாறுகளை அறிதல்.

அறிவோம். வாழ்வோம்.

****
karuppannan.pasupathy@gmail.com

Copyright: thinnai.com

10.7.14

உறுதுணை !?


அன்பு நண்பர்களே! வணக்கம். புதுச்சேரியிலிருந்து வெளிவரும் 'நேர்மையான' திங்களிதழ் ஒன்றில் என் பெயர் "வலைப்பதிவில் உறுதுணை:" என்பதற்கு நேராகப் பதியப்படுவதாக அறிகிறேன். முதலில் நான் அவ்விதழுக்கு வலைப்பதிவு தொடர்பாக உதவி செய்தேன். உண்மைதான். "சால,உறு,தவ,நனி,கழி,கூர் - மிகல்" என்ற தொல். நூற்பாவில் வரும் 'உறு' என்ற அடிப்படையில் ஒருக்காலும் துணைநின்றேனில்லை. அவ்விதழ் வெளியிடும் அச்சகமும் தவறாக அவ்விணைய முகவரியை வெளியிட்டு வருவதை முன்பு அப்பதிவில் நான் சுட்டியுமிருக்கிறேன். இவ்வாறு என் பெயரைத் தொடர்ந்து இழுத்துவருவது நேர்மையா? என்று சிந்திக்குமாறு அவ்விதழின் நிறுவனர் + சிறப்பாசிரியரை மெத்தப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அவர் நான் குறிப்பிட்ட "வலைப்பதிவில் உறுதுணை: பேராசிரியர் அ. பசுபதி" என்ற பகுதியை வருமிதழிலிருந்தாவது நீக்கி விடுமாறு பணிவுடன் வேண்டுகிறேன். விரகறியா எம்மைப் பொறுத்தருள, ஏனைய மெய்ந்நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஒருவர் பெயரை, அவருக்கு இசைவில்லா நிலையில், அச்சில் வெளியிடுவது, ஞாயமாகுமா? அன்புடன், பேராசிரியர் அ. பசுபதி (எ)தேவமைந்தன், புதுச்சேரி.

என் தந்தையார் பி.கே. அண்ணார் விரும்பிய ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சொல்வது!


7.1.14


புலவர் மேல் காதல் புலவர்க்கு - 2


பஞ்சு விடு தூது


பஞ்சு விடு தூது


14.12.13

பெயரன் பிறந்த நாள்

புதுவைச் சித்தர்தம் ஆதன் ஒடுக்கங்கள் நாற்பத்தொன்றனுள் அகத்தியமான இரும்பை மாகாளத்தில் - மகள் மங்கையர்க்கரசி மருமகன் சிவகுரு ஆகியோர்தம் மகள் மஞ்சுவின் தம்பி இறையன் (எ) ஈசுவர் பிறந்தநாள், திசம்பர் 14 ஆம் நாள் மாலைப்பொழுதில், புதுவைச் சிவனடியார்/ சிவத்தொண்டர் தலைமைப் பெருமானார் வழிகாட்டுதற்படி சிறப்பாகக் கொண்டாடப்பெற்றது. படம்: அண்ணன் பசுபதி.(Facebook: Annan Pasupathy Twitter: @PasupathyAnnan)

பள்ளிக் கல்வி கற்பித்தல் குறித்த நூல் - அருமையான இனிய பழகுதமிழில்


முனைவர் தி. அன்புச் செல்வன் தந்த நூல். Deschooling (எ) வகுப்பறை விலகிய கல்வி, மாணாக்கரிடம் கற்றல், வகுப்பறைக்குள் மாணாக்கரை வைத்தே நூலகம் உருவாக்கும்(கிஜூபாய்) முறை, பிரேஃசிலார் பாலோ பிரேயர் தருக்கங்கள், 'Who moved my cheese' Spencer Johnsonஇன் கற்பித்தல்முறைக் கருத்தாக்கம்.,முதலிய கூடிய கல்வி கற்பித்தலில் புதிய கோணங்கள் காட்டும் கல்வியியல் நூல், பழகுதமிழில்.

5.12.13

நண்பர் பாவலர் சாஜகான் கேள்விக்கு விடையாக!


என் கையொப்பம் 1969 முதலே, கடவுச்சீட்டு+நுழைவிசைவு+அலுவலகப் பதிவேடு+வைப்பகம்+காசோலை, இன்ன பிற எல்லாம், முழுத்தமிழ்க் கையொப்பம். வடவெழுத்து ஒன்று கூட இல்லை. சிந்துசமவெளி மொழிப்பெயர் பசுபதி . சான்று: 'தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும்" - டாக்டர் கே.கே.பிள்ளை (த.பா.நி.) புனைபெயரிலும் வடவெழுத்தில்லை. அது 'புதுச்சேரி அ.தேவமைந்தன்." அந்தப் பெயரை ஏற்கெனவே நானே வலைப்பதிவிலும் குமுக வலைதளத்திலும் வலையேடுகளிலும் பயன்படுத்தியுள்ளமையால் இதை மாற்ற இயலுமா? என் நண்பர் யாவரும் இதை நன்கறிவர். ஆய்வுக்கு நன்றி!

3.12.13

நாம் உண்டு நம் நண்பர்கள் உண்டு - முகநூலில் அண்ணன் பசுபதி


12/4/2013 11:15:19 AM
5 hours ago via mobile
"நாம் உண்டு நம் நண்பர்கள் உண்டு" என்றிருப்பவர்கள்தாம் நிம்மதியாக facebookஇல் நீடிக்க முடியும். உலகத்தில் நிகழ்வாழ்விலும் இப்படித்தான். "நாமுண்டு நம் வேலையுண்டு" - தாரக மந்திரம். இதை 1.12.2013 மாலை இன்னும் தெளிவாக உணர்ந்து கொண்டேன். facebook இலவயம். Event Invite-இலும் பேதமா? அதில் 3 மறுமொழிகள் இருப்பது தெரியாதா? இதுவரை முகநூலில் முறைப்படி Event வைத்தவர்கள் Murugan Govindaswamy அவர்களும் புதுவை அறிவியல் இயக்கமும் Seetha Lakshmiயும்தாம். கோவை சிறுதுளி இயக்கம் போன்ற அமைப்புகள், திருப்பூர்த் தாய்த்தமிழ்ப்பள்ளி முதலானவையும் முகநூல் அழைப்பில் பேதம் காட்டுவதில்லை.

குறிப்பு: உரையில் இடம்பெறும் ஆங்கிலச் சொற்கள் முகநூற் சொற்கள்.

Facebook / முகநூலில் தேவமைந்தன் கவிதை 12/02/2013

முன்பனி, பின்பனியைத் தொட்டுஅணைக்கத் தாவும் பருவம்.
விரல்கள், வைகறைப் பனியில்
விறைத்துக் கொள்ளும் போதெல்லாம் உன் தீண்டுகை தொடங்கும் தொடரும்...
உடம்பை மீண்டும் உருவாக்கி உள்ளே
மூச்சை வெப்பாக்கி அள்ளைகள் விரிவாக்கி
குருதி வெதுவெதுப்பாக உன் நெஞ்சம்பற்றி, சாருமுன்நான்
தலைகீழ்த் திரும்ப.
ஐயோ! மீளவுமா பூமி?

- தேவமைந்தன்