Showing posts with label Puducherry Devamaindhan. Show all posts
Showing posts with label Puducherry Devamaindhan. Show all posts

17.11.15

அண்மைய முகநூல் பதிவுகள் சில - தேவமைந்தன்

Facebook Puducherry Devamaindhan Wednesday, November 18, 2015

வாழ்வாயினும் சரி, முகநூலாயினும் சரி, நாம்போடும் கணக்குகள் முற்றிலும் தோற்றுப்போகின்றன. கடனே என்று விருப்பம் பதிகிறவர்கள், முகத்துதியாகத் தொடர்ந்து கருத்தூட்டம் போட்டு ஏமாற்றுபவர்களை இனங்கண்டு கொள்ளவே முடியாது. நம்மை எரிச்சலூட்டுபவர்கள், நம்மேல் அக்கறைகொண்டவர்களாக இருக்கலாம். நமக்கு வழலை போடுகிறவர்கள், அடுத்துக் கெடுப்பவர்களாக இருக்கலாம். சான்றாக என் முகநூல் நண்பர் ஒருவர், புதுச்சேரியில் வாழ்பவர், எனக்கு விருப்பம் பதிந்ததே இல்லை.. ஆனால், சந்திக்கும்பொழுதும் அலைபேசியில் பேசும்பொழுதும் பாராட்டவேண்டும் என்று தனக்குத் தோன்றியவற்றைப் பாராட்டுவார். கடவுளைப் புரிந்துகொள்ள முடியும். சகமனிதர்களைப் புரிந்து கொள்ளவே முடியாது.

நேற்று:
ஆர்வக்கோளாறுகளையும் மனவழுத்தத்தையும் எதிர்த்துப் போராடாமல் நட்புகளாக்கிக் கொண்டு வாழ்வது குறித்த சித்திரக்கதை!
http://idealist4ever.com/comic-explains-why-anxiety-depression-are/

நேற்று விடிவதற்கு முன் 03:32 am:

எம் மகளார் ஒரு கேள்வி கேட்டார்: " மலரும் நினைவுகளோ அப்பா?" என்று. என் மூளை, எனக்கு நெருங்கிய ஆதரவு தருவது. கசப்பான எதையும் மறந்து விடுவேன். பழக்கமானவர்கள், சிறு பிள்ளையானாலும், ஞாயமாகச் சுட்டிக்காட்டினார்கள் என்றால் என் தவறுகளைத் திருத்திக் கொள்வேன். எவ்வளவு நலமில்லாவிட்டாலும், வாசிப்புப் பழக்கத்தை விடமாட்டேன். முடியாவிட்டாலும், விடியலுக்கடுத்து ஒரு சிறு நடை போய்வந்துவிடுவேன். நினைவு தெரிந்தது முதல், என்னுடன் பழகிய எவரையும் மறந்ததில்லை. ஆனாலும் பெயர்களை மாற்றிச்சொல்லும் ('தெனாலி'படம்) சிக்கல் எப்படியோ வந்துவிட்டது. நண்பர்கள் நாயகரும் அருணனும் தாம் அதைச் சுட்டினார்கள். எத்தனையோ பின்னடைவுகள், சாண் ஏற முழம் சறுக்கல்கள், பழிபாவங்களுக்குமிடையில் ஜீவனுடன் ஒவ்வொரு நொடிப்பொழுதும் வாழ்கிறேன் என்றால் அதற்கு ஒரே காரணம் திருவருளாலும் குருவருளாலும் மகளார் சுட்டிய 'மலரும் உடன்பாட்டு எண்ண நினைவுகள்தாம்.'


6.9.15

எம் கெழுதகை நண்பர் பேராசிரியர் பொன். பத்மநாபன், காரைக்காலிலும் புதுச்சேரியிலும் என்னுடன் நெடுங்காலம் பணியாற்றியவர். கேடு வருங்கால் கைகழுவி உடல்நழுவும் நட்புகள் நிலவும் இந்த உலகத்தில், 1.பல்கலைக் கழகம், 2.துறை, 3.பணிவாழ்க்கை என்ற மூன்று நிலைகளிலும் ஆபத்து வந்தபோது கைகோத்து உடன்நின்று உதவிய செம்மல் இவர். பணிநிறைவுக்குப் பின் ‘அகத்தியமான தனிமை’ எனக்கு வேண்டும் என்று கருதி, ஒதுங்கி வாழ்ந்தவர். எங்கள் நண்பர் முனைவர் & முதல்வர் திரு ப. சுதந்திரம் Sudhanthiram Pachiappan அவர்கள், பொன். பத்மநாபனின் கைப்பேசி எண்ணைக் கேட்டபோது என்னிடம் அவர் எண் இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நான், காரைக்காலில் ஓரிரு பேராசிரியர்களை இது தொடர்பாகக் கேட்கிறேன் என்று தெரிய வந்தபோது, நண்பர் பிரெஞ்சுப் பேராசிரியர் முனைவர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகரிடம் வயணம் சொல்லி விடுத்தார். இப்பொழுது எங்கள் பேரன்பர் முனைவர் செல்வப்பெருமாள் கையில், இதனுடனுள்ள படங்கள் சுட்டும் ஐந்து நூல்களையும் தந்தனுப்பினார். நேற்றிரவு நூல்கள் என் கைக்குக் கிடைத்தன. இனிமேல்தான் வாசிக்கத் தொடங்கவே வேண்டும்.

12.7.15

புதுச்சேரியில் வாழ்வதால் படிக்கத்தான் முடிகிறது குடிக்க முடியவில்லை ;)

புதுச்சேரி, ஒரு புத்தக நகரம். குறுகிய பரப்பளவில், ‘நிறைய்ய’ புத்தக விற்பனை நிலையங்கள். ஒரு ‘டூவீலரை’க் கிளப்பிக்கொண்டு, மேற்கே வழுதாவூர் சாலை வழி உள்ளே நுழைந்தீர்களென்றால், சாரம் பாலம் வலது பக்கம் திரும்பினால் கொஞ்ச தொலைவில் இடது பக்கம் மாடியொன்றில் நண்பர் சீனு. தமிழ்மணியின் ‘இலக்கியம்.’ நாகரத்தினம் கிருஷ்ணாவின் புதிய புத்தகங்கள் முதல் எல்லாம் கிடைக்கும். புதுச்சேரியின் வடக்குப் பகுதியிலிருந்து அஜந்தா சிக்னல் வழி நேரே மகாத்மாகாந்தி வீதிக்கு வந்தால், முதல் வலது ஒடிப்பில் சங்கரதாஸ் சுவாமிகள் தெருவில் நண்பர் பாஸ்கரின் ‘பாரதி புக்ஸ்.’ காலச்சுவடு புத்தகங்கள் முதல் சாரு நிவேதிதா’வின் தடிமனான புத்தகங்கள் வரை எல்லாம் கிட்டும். அடுத்த இரண்டாம் தெரு மேற்கு முடுக்கில் ‘கண்ணதாசன் புத்தக நிலையம்.’ இரண்டு தெரு தாண்டினால் அரவிந்து வீதி - ம.கா. வீதி சந்திப்பில் மாடியில் ‘புஸ்தக் மந்திர்.’ பிரபஞ்சன், பாலகுமாரன்... எல்லா நூல்களும். உள்ளே இடது புறம் திரும்பினால் வடக்குப் பார்த்தவாறு ‘அமுதம் புத்தகக் கடல்.’ தொல்காப்பியம்,சங்க இலக்கியம் முதல் உரைகளோடு; சித்தர் இலக்கியம், ஜோதிடத் திண்டுகள் இன்னும் பற்பல. சற்று முன்னாலேயே, ‘வினாயக் புக் பேலஸ்.’ ஒருவழிச் சாலைகள் வழி ‘டைவர்ட்’ ஆகி ஆகி, ரங்கப்பிள்ளை தெருவுக்கு வந்தால் ‘சிறுவர் பூங்கா’ புத்தக நிலையம். கிழக்கே சற்றுத் தொலைவுக்குள் ஆம்பூர் சாலையில், இடது பக்கம் ஒடித்தவுடன், ‘ஹாட்பிரெட்ஸ்’ தாண்டி, மேனாள் முதல்வர் ஜானகிராமன் வீட்டை ஒட்டி ஹிக்கின்பாதம்ஸ். ஆனந்த விகடன் வெளியீடுகளிலிருந்து அனைத்து வகை ஆன்மீக, இலக்கிய, இன்னும் பல. அகராதிகள் பலவகை கிட்டும். வெளியே வந்து பக்கிங்ஹாம் கனால் வலது புறம் திரும்பினால் ‘வாக்.’ ஆசிரமத் தொடர்பானபுத்தகங்கள். கொஞ்சம் வடக்கே, மரீன் வீதியில் ‘சப்தா.’ அரவிந்தாசிரம சம்மந்தமான புத்தகங்கள். கிழக்கே ஆசிரமத்தை ஒட்டி தெற்கே வளைவெடுத்து வந்தால் ம.கா. வீதி பெத்திசெமினேர் பள்ளி எதிர்ப்புறம் ‘ஜம்பு.’ ஜிப்மர் மருத்துவ திண்டுகள் முதல் பழைய தமிழ் ஆங்கிலப் புத்தகங்கள். என்னுடைய 1980 ஆண்டு வெளியீடான ’புல்வெளி’ புத்தகத்தை, கையில் படி(பிரதி) இல்லாததால் இங்கேதான் விலைகொடுத்து வாங்கினேன். பக்கத்திலேயே, ‘பெரிய பார்ப்பாரத் தெரு’ என்றழைக்கப்படும் நீடாராஜப்பயர் தெருவைப் பிடித்து, மாதாகோயில் தெருவில் வலது பக்கம் திரும்பினால், கிழக்குப் பார்த்தவாறு ‘ஃபோகஸ்.’ இங்கே கிடைக்காத ஆங்கில பிரெஞ்சு நூல்களில்லை. மாதா கோயில் எதிரிலேயே கொலாஸ் மன்றத்தில் நெடுங்காலமாய்ப் புத்தகக் கண்காட்சி நடக்கிறது. 10% முதல் 55% வரை கழிவுள்ள புத்தக மலைச் சரிவுகள். எப்படித்தான் நடத்துகிறார்களோ. இன்னொரு நிரந்தரப் புத்தக் காட்சிக்கு, மாதாகோயிலுக்கு எதிர்ச் சாலையிலேயே போனால் ‘ஒப்பித்தா’லையும் தாண்டி, அந்தண்டை பழைய ஆர்.டி.ஓ./ வணிக அவைக் கட்டடத்தில் ‘இந்தியன் புக்ஸ்.’ ஒவ்வொரு நாளும் எப்பொழுது மூடுகிறார்கள் என்றே தெரியாது. புலவர் இராசியண்ணன் நூல்களை வாங்கிய வாய்ப்பு அங்கேதான் கிடைத்தது. ஞாயிறு வந்து விட்டால் போதும். புதுச்சேரி நகரின் முதுகெலும்பு போன்ற காந்தி வீதி நெடுக, நாள்முச்சூடும் கூடும் தெருப்புத்தகக் கடைகளில் தமிழ்நாட்டுக் கிளை நூலகப் புத்தகங்கள் முதல் எல்லா மொழிப் புத்தகங்களும் கிடைக்கும். நண்பருக்கோ ஆசிரியருக்கோ அன்பளிப்பாகத் தருகிறோம் என்றிருந்தாலும் முன்னெச்சரிக்கையுடன் பெயர் போடாமல் ‘அன்புடன்,’ என்று கையெழுத்துப் போட்டு அந்தந்த நூலாசிரியர்கள் தரும் புத்தகங்கள் பலவற்றை இங்கே அழகாகப் பார்க்கலாம். நுனி மடியாத புத்தகங்களாய் அவை காட்சி தருவது கொள்ளை அழகு. நம்மேல் ‘அசூயை’ கொண்டு நண்பர்கள் தர தவிர்த்த அழகான வண்ண அட்டைகளுடன் கூடிய புத்தகங்களை அவற்றின் 10% விலைக்கே (கழிவு /discount அல்ல; விலை!) தள்ளும் கடைகள் பல. நான் மட்டும் புதுச்சேரியில் இல்லாமலிருந்தால் கொடுங் குடிகாரனாயிருந்திருப்பேன். இங்கே புத்தகங்கள் என்னைப் படிக்கமட்டுமே விடுகின்றன. செலவும் மட்டு. இதில் முகநூலிலும் நேராகவும் நண்பர்களாயுள்ள நாங்கள் சிலர், புத்தகங்களைப் பரிமாறிக்கொள்கிறது வேறு.
கொஞ்சம் தள்ளி வங்கக் கடல். பழைய மேரி - நகராட்சிக் கட்டடமிருந்த இடம். அருங்காட்சியகம். புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டு இயக்க அலுவலகம். புதுச்சேரி அரசின் நூலகப் புத்தகத் தெரிவுக் குழுவிலும் விருது மதிப்பீட்டுக் குறுங்குழுவிலும், பல ஆண்டுகள், தங்கப்பா போன்ற ஐயாமார்களோடு பணியாற்றினேன். விருது மதிப்பீட்டுக் குழுவில் என்னையும் என் நெடுங்கால நண்பரையும் என்னையும் மோத விட்டுப்பார்த்தார்கள். நடக்கவில்லை. அதனால், கசப்புடன் விலக நேர்ந்தது. அது, ஒரு தனிக்கதை. இப்படி, “சட்டி சுட்டதும் கைவிட்டு விடும்’ பழக்கத்தால், நண்பர்கள் நண்பர்களாகவே தொடர்கிறார்கள்.
என் முதல் புத்தகம் 1976இல் - 100 படிகள் மட்டும் .. இரண்டாவது புத்தகம் 1980இல் 100 படிகள் மட்டும்.. மூன்றாவது புத்தகம் 1993இல் 72 படிகள் மட்டும் இயக்ககம் வாங்கியதாக ஞாபகம். புதுச்சேரி நூலகங்களுக்காக ‘புத்தககங்கள் வாங்குகிற சமாச்சாரத்’தில் “பழம் தின்று கொட்டை” போட முடியாமல் தவிக்கும் நண்பர்கள் சிலர், முகநூலில் மெளனம் காக்கிறார்கள். அவர்களைப் பின்பற்றுவதே என் நட்பின் பொறுப்பும் கூட. இந்த ‘லச்சண’த்தில், எனக்கு மிகவும் பழக்கமான பழம்பெரும் கோவை எழுத்தாளர் ஐயாவுக்கு மறுமொழி விடுக்க முடியாமல் ‘இக்கட்டு’ வேறு. இன்னோர் இக்கட்டு, ஆங்கில மொழிபெயர்ப்பு தொடர்பானது. மறைந்த பெரும்பாவலர் செவ்வேள் ஐயா அவர்களின் நூலை ஆங்கிலத்தில் ‘பெயர்க்க’ முன்வந்தவர் “செய்தவற்றை” வெய்துயருடன் செவ்வேள் என்னிடம் சொல்லியிருக்கிறார். எப்படி இதை கோவைப் பெரியவருக்கு மொழிவேன்?
பின்குறிப்பு: இதில், இன்னும் பல புத்தக விற்பனையகங்கள் விடுபட்டிருக்கும். நண்பர்கள் அறிவித்தால் அறிந்து கொள்வேன். நன்றி :)


6.7.15

நாகரத்தினம் கிருஷ்ணா - காஃப்காவின் நாய்க்குட்டி; குறித்து தேவமைந்தன் எழுதிய முகநூல் குறிப்பு #3

மிகவும் படித்த பெண்கள் சிலர் - அரசியலை வெறுப்பதும், ஃபாஷன் பற்றியும் நகை துணிமணி பற்றி விவாதிக்க விரும்புவதும் ஆனதுதான் தாம் வாழும் வாழ்வின் நோக்கம் என்று நம்பிக்கொண்டிருக்கையில், இந்த நாவலில் வரும் ஹரிணியையும் பாரதியையும் நித்திலாவையும் கமிலையும் போற்றாமலிருக்க முடியவில்லை. இவர்களில் பாரதியும் நித்திலாவும் - வாழும் கதைமாந்தர் என்பதை ஆசிரியர் உரையின் கடைசியில் அறிகிறோம். ஹரிணியின் சிந்தனையெல்லாம், நானறிந்தவரை, நாவலாசிரியர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் சொல்லாடல்களுடன் ஒத்துப்போகக் காண்கிறேன். என் கருத்து தவறாகவுமிருக்கலாம். ஜெயகாந்தன் சொல்கிறாற்போல் வாழ்விலுங்கூட 'தவறுகள், குற்றங்கள் அல்ல' தானே? சரி. ஹரிணி பார்வையில் பிரெஞ்சு வங்கியொன்று அவதானிக்கப்பெறும் விதத்தில், சென்ற கிழமை, புதுவையில் நானே ஒரு வங்கியின் நிகழ்தருணத்தை உணர்ந்து, எதிர்காலத்தில் எப்படியெல்லாம் 'இது' ஆகுமோ என்று அஞ்சியிருந்தேன். அவர்கள் உண்டாக்கிய 'கணினிப் பெருந்திரை விம்பம்' (டோக்கன் தொடர்பானது) என் நெஞ்சின் துடிப்பை என்னையே கேட்க வைத்தது. அநேகமாக அதே வங்கியில், கணக்கு வைத்தோர் இருக்கை ஒன்றில், இந்த செயற்கை 'டென்ஷனேற்றம்' ஒன்றின் நிமித்த காரணமாக, சாய்ந்து நான் இறந்து விடுவேன் என்று நம்புகிறேன். 'லெட்ஜர்'களுடன் புன்னகை செய்த மனிதர்கள் வேலைசெய்த வங்கிகளின் காலத்தில், அப்பாவின் காசோலையைக் கொடுத்துப் பணம் பெறுகையில், உரிய 'கவுன்ட்டர்' மனிதர் என்னைப் பார்த்து, என் படிப்பு விடயமெல்லாம் விசாரித்தறிந்த காலத்திலேயே 'banking' செய்ய வாய்த்திருந்தேன். இந்த விறைப்பெல்லாம் 'செக்யூரிட்டி'களிடம்தான் அப்பொழுது இருந்தன. இப்பொழுது உள்ள மாதிரி இல்லாமல் 'ஜீவன்'கொண்டு அப்பொழுதைய வங்கிகள் இயங்கின. இருக்கட்டும். நம் "ஹரிணி வங்கிக்குள் நுழைந்து ஆறு மாதத்துக்கு மேல் ஆகப்போகிறது. எல்லாமே கணினி மயமாக்கப்பட்டிருப்பது காரணம். இணைய இணைப்பு மூலமே காரியத்தை முடித்துக்கொள்ளும்படி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துகிறார்கள். இன்றைய மனிதனுக்கு இரத்தமும் சதையுமான மனித உறவுகள் தேவை குறைவு. உணர்வுகளின் எச்சிலோடு உரையாடல், மின் அஞ்சல்கள், சமூக வலைத்தளங்கள், ஸ்கைப்புகள் என்கிற அரூபங்களுடன் உறவாடல். நதி கடலினைத் தேடவேண்டியதில்லை. கடல் நதியினைத் தேடிவரும் காலம். உயிர் வாழ்க்கை அல்ல. பிண வாழ்க்கை. அலுவலகம் போக வேண்டியதில்லை; கடைகளில் தொட்டுப் பார்த்து, நுகர்ந்து சுவைத்து பொருளை உடைமை கொள்ளத் தேவையில்லை. பிறந்த மேனிக்கு கதவை அடைத்துக்கொண்டு கேட்டதைப் பெற்று காலத்தைத் தேய்க்கலாம். ஒற்றை மனிதன், ஓர் இனம், குலக்குறி என்பதான அடையாள முத்திரைகளை அழித்து நிறுவிய ஊரும் சமூகமும் மீண்டும் பூர்வீகத்தைத் தேடிக்கொண்டிருக்கின்றன." இப்பொழுதைக்கு இதுபோதும். வயதான கைவிரல்களும் வயதாகாத மனமும் சண்டைபிடிக்கத் தொடங்கிவிட்டன. 'ஏசர்' - தனது வெப்பப் பெருமூச்சினை, என் இடது உள்ளங்கை மேல் ஊதுகிறது. பிறகு, தொடர்வேன்.