12.7.15

புதுச்சேரியில் வாழ்வதால் படிக்கத்தான் முடிகிறது குடிக்க முடியவில்லை ;)

புதுச்சேரி, ஒரு புத்தக நகரம். குறுகிய பரப்பளவில், ‘நிறைய்ய’ புத்தக விற்பனை நிலையங்கள். ஒரு ‘டூவீலரை’க் கிளப்பிக்கொண்டு, மேற்கே வழுதாவூர் சாலை வழி உள்ளே நுழைந்தீர்களென்றால், சாரம் பாலம் வலது பக்கம் திரும்பினால் கொஞ்ச தொலைவில் இடது பக்கம் மாடியொன்றில் நண்பர் சீனு. தமிழ்மணியின் ‘இலக்கியம்.’ நாகரத்தினம் கிருஷ்ணாவின் புதிய புத்தகங்கள் முதல் எல்லாம் கிடைக்கும். புதுச்சேரியின் வடக்குப் பகுதியிலிருந்து அஜந்தா சிக்னல் வழி நேரே மகாத்மாகாந்தி வீதிக்கு வந்தால், முதல் வலது ஒடிப்பில் சங்கரதாஸ் சுவாமிகள் தெருவில் நண்பர் பாஸ்கரின் ‘பாரதி புக்ஸ்.’ காலச்சுவடு புத்தகங்கள் முதல் சாரு நிவேதிதா’வின் தடிமனான புத்தகங்கள் வரை எல்லாம் கிட்டும். அடுத்த இரண்டாம் தெரு மேற்கு முடுக்கில் ‘கண்ணதாசன் புத்தக நிலையம்.’ இரண்டு தெரு தாண்டினால் அரவிந்து வீதி - ம.கா. வீதி சந்திப்பில் மாடியில் ‘புஸ்தக் மந்திர்.’ பிரபஞ்சன், பாலகுமாரன்... எல்லா நூல்களும். உள்ளே இடது புறம் திரும்பினால் வடக்குப் பார்த்தவாறு ‘அமுதம் புத்தகக் கடல்.’ தொல்காப்பியம்,சங்க இலக்கியம் முதல் உரைகளோடு; சித்தர் இலக்கியம், ஜோதிடத் திண்டுகள் இன்னும் பற்பல. சற்று முன்னாலேயே, ‘வினாயக் புக் பேலஸ்.’ ஒருவழிச் சாலைகள் வழி ‘டைவர்ட்’ ஆகி ஆகி, ரங்கப்பிள்ளை தெருவுக்கு வந்தால் ‘சிறுவர் பூங்கா’ புத்தக நிலையம். கிழக்கே சற்றுத் தொலைவுக்குள் ஆம்பூர் சாலையில், இடது பக்கம் ஒடித்தவுடன், ‘ஹாட்பிரெட்ஸ்’ தாண்டி, மேனாள் முதல்வர் ஜானகிராமன் வீட்டை ஒட்டி ஹிக்கின்பாதம்ஸ். ஆனந்த விகடன் வெளியீடுகளிலிருந்து அனைத்து வகை ஆன்மீக, இலக்கிய, இன்னும் பல. அகராதிகள் பலவகை கிட்டும். வெளியே வந்து பக்கிங்ஹாம் கனால் வலது புறம் திரும்பினால் ‘வாக்.’ ஆசிரமத் தொடர்பானபுத்தகங்கள். கொஞ்சம் வடக்கே, மரீன் வீதியில் ‘சப்தா.’ அரவிந்தாசிரம சம்மந்தமான புத்தகங்கள். கிழக்கே ஆசிரமத்தை ஒட்டி தெற்கே வளைவெடுத்து வந்தால் ம.கா. வீதி பெத்திசெமினேர் பள்ளி எதிர்ப்புறம் ‘ஜம்பு.’ ஜிப்மர் மருத்துவ திண்டுகள் முதல் பழைய தமிழ் ஆங்கிலப் புத்தகங்கள். என்னுடைய 1980 ஆண்டு வெளியீடான ’புல்வெளி’ புத்தகத்தை, கையில் படி(பிரதி) இல்லாததால் இங்கேதான் விலைகொடுத்து வாங்கினேன். பக்கத்திலேயே, ‘பெரிய பார்ப்பாரத் தெரு’ என்றழைக்கப்படும் நீடாராஜப்பயர் தெருவைப் பிடித்து, மாதாகோயில் தெருவில் வலது பக்கம் திரும்பினால், கிழக்குப் பார்த்தவாறு ‘ஃபோகஸ்.’ இங்கே கிடைக்காத ஆங்கில பிரெஞ்சு நூல்களில்லை. மாதா கோயில் எதிரிலேயே கொலாஸ் மன்றத்தில் நெடுங்காலமாய்ப் புத்தகக் கண்காட்சி நடக்கிறது. 10% முதல் 55% வரை கழிவுள்ள புத்தக மலைச் சரிவுகள். எப்படித்தான் நடத்துகிறார்களோ. இன்னொரு நிரந்தரப் புத்தக் காட்சிக்கு, மாதாகோயிலுக்கு எதிர்ச் சாலையிலேயே போனால் ‘ஒப்பித்தா’லையும் தாண்டி, அந்தண்டை பழைய ஆர்.டி.ஓ./ வணிக அவைக் கட்டடத்தில் ‘இந்தியன் புக்ஸ்.’ ஒவ்வொரு நாளும் எப்பொழுது மூடுகிறார்கள் என்றே தெரியாது. புலவர் இராசியண்ணன் நூல்களை வாங்கிய வாய்ப்பு அங்கேதான் கிடைத்தது. ஞாயிறு வந்து விட்டால் போதும். புதுச்சேரி நகரின் முதுகெலும்பு போன்ற காந்தி வீதி நெடுக, நாள்முச்சூடும் கூடும் தெருப்புத்தகக் கடைகளில் தமிழ்நாட்டுக் கிளை நூலகப் புத்தகங்கள் முதல் எல்லா மொழிப் புத்தகங்களும் கிடைக்கும். நண்பருக்கோ ஆசிரியருக்கோ அன்பளிப்பாகத் தருகிறோம் என்றிருந்தாலும் முன்னெச்சரிக்கையுடன் பெயர் போடாமல் ‘அன்புடன்,’ என்று கையெழுத்துப் போட்டு அந்தந்த நூலாசிரியர்கள் தரும் புத்தகங்கள் பலவற்றை இங்கே அழகாகப் பார்க்கலாம். நுனி மடியாத புத்தகங்களாய் அவை காட்சி தருவது கொள்ளை அழகு. நம்மேல் ‘அசூயை’ கொண்டு நண்பர்கள் தர தவிர்த்த அழகான வண்ண அட்டைகளுடன் கூடிய புத்தகங்களை அவற்றின் 10% விலைக்கே (கழிவு /discount அல்ல; விலை!) தள்ளும் கடைகள் பல. நான் மட்டும் புதுச்சேரியில் இல்லாமலிருந்தால் கொடுங் குடிகாரனாயிருந்திருப்பேன். இங்கே புத்தகங்கள் என்னைப் படிக்கமட்டுமே விடுகின்றன. செலவும் மட்டு. இதில் முகநூலிலும் நேராகவும் நண்பர்களாயுள்ள நாங்கள் சிலர், புத்தகங்களைப் பரிமாறிக்கொள்கிறது வேறு.
கொஞ்சம் தள்ளி வங்கக் கடல். பழைய மேரி - நகராட்சிக் கட்டடமிருந்த இடம். அருங்காட்சியகம். புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டு இயக்க அலுவலகம். புதுச்சேரி அரசின் நூலகப் புத்தகத் தெரிவுக் குழுவிலும் விருது மதிப்பீட்டுக் குறுங்குழுவிலும், பல ஆண்டுகள், தங்கப்பா போன்ற ஐயாமார்களோடு பணியாற்றினேன். விருது மதிப்பீட்டுக் குழுவில் என்னையும் என் நெடுங்கால நண்பரையும் என்னையும் மோத விட்டுப்பார்த்தார்கள். நடக்கவில்லை. அதனால், கசப்புடன் விலக நேர்ந்தது. அது, ஒரு தனிக்கதை. இப்படி, “சட்டி சுட்டதும் கைவிட்டு விடும்’ பழக்கத்தால், நண்பர்கள் நண்பர்களாகவே தொடர்கிறார்கள்.
என் முதல் புத்தகம் 1976இல் - 100 படிகள் மட்டும் .. இரண்டாவது புத்தகம் 1980இல் 100 படிகள் மட்டும்.. மூன்றாவது புத்தகம் 1993இல் 72 படிகள் மட்டும் இயக்ககம் வாங்கியதாக ஞாபகம். புதுச்சேரி நூலகங்களுக்காக ‘புத்தககங்கள் வாங்குகிற சமாச்சாரத்’தில் “பழம் தின்று கொட்டை” போட முடியாமல் தவிக்கும் நண்பர்கள் சிலர், முகநூலில் மெளனம் காக்கிறார்கள். அவர்களைப் பின்பற்றுவதே என் நட்பின் பொறுப்பும் கூட. இந்த ‘லச்சண’த்தில், எனக்கு மிகவும் பழக்கமான பழம்பெரும் கோவை எழுத்தாளர் ஐயாவுக்கு மறுமொழி விடுக்க முடியாமல் ‘இக்கட்டு’ வேறு. இன்னோர் இக்கட்டு, ஆங்கில மொழிபெயர்ப்பு தொடர்பானது. மறைந்த பெரும்பாவலர் செவ்வேள் ஐயா அவர்களின் நூலை ஆங்கிலத்தில் ‘பெயர்க்க’ முன்வந்தவர் “செய்தவற்றை” வெய்துயருடன் செவ்வேள் என்னிடம் சொல்லியிருக்கிறார். எப்படி இதை கோவைப் பெரியவருக்கு மொழிவேன்?
பின்குறிப்பு: இதில், இன்னும் பல புத்தக விற்பனையகங்கள் விடுபட்டிருக்கும். நண்பர்கள் அறிவித்தால் அறிந்து கொள்வேன். நன்றி :)


No comments: