22.8.12

பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனம்,புதுச்சேரி(Institut Francais de Pondichery)

என் முதல் கோயில் தாகூர் கலைக் கல்லூரி என்றால், இரண்டாம் கோயில் புதுச்சேரியிலுள்ள பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனமும் அதில் உள்ள நூலகமும்தான். இங்குதான் அரிய தமிழ் நூல்களை வாசித்திருக்கிறேன். அக்காலத்தில் நூற்கடல் தி.வே.கோபாலய்யர் முதல் இக்காலத்தில் வில்லியனூர் வரலாற்று ஆய்வாளர் வேங்கடேசனார் வரை சந்தித்து உடன் அமர்ந்து வாசிப்பதும் குறிப்பெடுப்பதுமாக உள்ளேன். பழைய திண்ணை.காம் வலையேட்டில், 'தேவமைந்தன்' என்ற என் புனைபெயரில் எழுதிய, பாராட்டுப்பெற்ற அத்தனைக் கட்டுரைகளுக்கும் இப்பொழுது முகநூலில் 'அண்ணன் பசுபதி' பக்கத்தில் இடம்பெற்ற 'பண்டிதை கண்ணம்மாள்' வரையுள்ள குறிப்புகளுக்கும் தரவு கொடுத்துதவியது இந்த நிறுவனத்தின் நூலகமேஇங்கு இணையம் கூடிய கணினி ஏந்து உள்ளமை என்னைப்போன்ற இணைய வலையேட்டெழுத்தாளர்களுக்கு அரிய பேறேயாகும். முகஞ் சுளிக்காமல் எப்பொழுதும் அன்புடன் உதவுகிற நூலக நண்பர்கள் - சூழலியல் நூலகர் திரு ஜி. சரவணனும்(Facebook Public ID: Saravanan Govindaraj) சமூக அறிவியல்கள் நூலகர் திரு கே. இராமானுஜமும் ஆவர். இந்தியவியல் நூலகர் திரு ஆர். நரேந்திரனும் முதன்மை நூலகர் செல்வி அனுரூபா நாயக் அவர்களும் இங்கே குறிப்பிடத் தக்கவர்கள். பிரெஞ்சு இந்தியவியல் ஆய்வாளரும் நூலறிஞருமான திரு கண்ணன், தோற்றத்தில் மிகுந்த இயல்பானவர்; அறிவில் ஆழம் மிகுந்தவர். தன்னை எனக்கு அறிமுகம் செய்து வைத்த, காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு நடுவத்தின் பிரெஞ்சுப் பேராசிரியரும் நண்பருமான முனைவர் சு.ஆ.வெங்கடேச சுப்புராய நாயகருடன் பன்னாட்டுக் கருத்தரங்கில் பங்கேற்று புதுச்சேரிப் பழமொழிகள் குறித்த ஆய்வுரையை ஆங்கிலத்தில் வாசிக்க வைத்து, அதற்கான பெருந்தொகுப்பில் அதை வெளியிடவும் செய்தவர். சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு பெருமைக்குரியது இந்தப் பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனமும் இதன் நூலகமும்.

No comments: