7.10.16
பயன் உள்ளதுதான் எதுவும்.
முகநூல்/முகப்புத்தகம்/Facebook -இல் நீடிப்பதோ, உட்புகுவதோ வீண் என்னும் நண்பர் கவனத்துக்கு இச்சேதியைக் கொண்டு வந்துள்ளேன். இரா. நாறும்பூநாதன் என்னும் முகநூல் நண்பர், (முகப்புத்தகம் என்று முகநூலை முதலிலிருந்தே சொல்லிவருபவர்) - தான் முகநூலில் பதிவனவற்றைப் புத்தகங்களாக்கி வருபவர். விற்பனையும் குறைவில்லாமல் புத்தகங்களை வெளியிட்டுள்ளார். சான்றாக, இந்த நூல். இதன் அட்டைப்படமும் ஓர் அழிவிலாக் கோயிற்படம்தான். கழுகுமலைக் கோயில். ஓவியர் ஈசுவரமூர்த்தியால் வரையப்பெற்றது. டெம்மி அரைக்கால் அளவுள்ள பக்கங்கள் 286 கொண்டது. இந்தப் புத்தகத்தை அவர் கி.ரா. ஐயாவுக்கு அனுப்ப, அவர் தம் வழமைப்படி,குங்குமச் சிவப்பு நிறமெழுதும் தூவலால் குறித்து வாசித்தபின், முனைவர் சு. ஆ. வெங்கட சுப்புராய நாயகருக்குக் கொடுக்க, அவர் தன் வழமைப்படி(நாயகர், எந்தப் புத்தகமானாலும் எங்களைப் போல் அடிக்கோடுகளோ குறியீடுகளோ பதிக்காமல், தூய்மையாகப் படித்துத் தருவார்)வாசித்துமுடித்து எனக்குத் தந்தார். தான் வாங்கும் எண்ணற்ற நூல்களில், தன் பெயரையும் எழுதி உடைமையாக்கிக்கொள்ள மாட்டார் அருள் (எ) நாயகர். மாறுபட்ட மனமுடையவர்களின் உலகத்தில் வேறுபட்டுத் தன்னியல்பாக வாழ்பவர்களோடு பழகுமாறு விதிக்கப்பெற்றுள்ளவன் அடியேன்.இவ்வாறு, மூன்றாவது கையாக, இந்த நூல் என்னை வந்தடைந்தது. எனக்குக் கிடைக்கும் நூல்கள் பல, இத்திறத்தனதாம். இது எனக்கும் ஆகவும் உடன்பாடே. நண்பர்களுடன் பகிர்ந்து வாசிப்பதே மனநிறைவுதான். தன்னந்தனியாக, ஒருமுறையும் புரட்டிவாசிக்கப்பெறாத புத்தம் புதிய புத்தகங்கள், அடங்காக்குமைச்சலுடன் நிலைப்பேழைக்குள் ஒடுங்கிக் கிடக்கும் நூலகமெல்லாம் நூலகமா? - தேவமைந்தன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment