20.11.13

"வேரற விடோம்!" - அல்விற் வி.

வேரற விடோம்!

ஒரு குழந்தையை எல்லோரும் விரும்பும் நற்பிரஜையாக உருவாக்கும் பொறுப்பு யாரிடம் உள்ளது? குழந்தை தாயின் வயிற்றிலிருந்தே கற்கத் தொடக்கி பின் குடும்ப உறுப்பினரிடமிருந்து கற்றுப் பின் சமூகத்துள் நுழைகின்றது. ஆக தனது ஆரம்பக் கல்வியை அது வீட்டிலேயே தொடங்கி விடுகின்றது. பெற்றோரிடமிருந்து முதற் சொற்களைப் பெற்றுக் கொள்ளுகின்றது.ஆக பெற்றோரின் பங்கு இங்கே மிக முக்கியமாகின்றது. பின் முறைசார் கல்வியை பாடசாலையில் தொடங்கும்போது ஆசிரியர், பெற்றோர், மாணவன் (மாணவி) என்ற மூன்று பகுதியினரும் சேர்ந்து செயல்பட வேண்டிய பகுதி தொடங்குகின்றது.
தமிழ் கற்பித்தல் என்னும் பகுதியை நாங்கள் எடுத்துக் கொண்டால், இங்கே "தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை" குழந்தைகளின் வயது, தேவை, கவரும் தன்மை, மொழியினூடாக எம் பண்பாட்டு விழுமியங்களை சேர்த்தளித்தல் போன்ற சிறந்த நோக்கங்களை முன்வைத்து, சிறப்பான முறையில் பாடத்திட்டங்களை அமைத்து சிறப்பாக நடைபெற்று வருகின்றது உலகம் முழுவதிலுமே. தனியே கேள்விக்கு விடை எழுதி அடுத்த வகுப்புக்கு ஏறுவது என்கின்ற நிலையை விடுத்து, ஒரு குழந்தை ஒரு கருத்தைக் காதால் கேட்டு விளங்கி, அதுபற்றிய தனது கருத்தை கலந்து உரையாடி, பின் அது பற்றிய விபரத்தை தானாகவே வாசித்துப் விளங்கிக் கொண்டு பதில் எழுதுதலும் அதன் பின் பகுதியாக தன் கருத்தை தானே எழுத்தின் மூலமாக வெளிக் கொணர்தலையுமே நோக்காகக் கொண்டு கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் என்று நான்கு பகுதியாகப் பிரித்து கற்பிக்கப் படுகின்றது. பரீட்சை என்று வருட இறுதியில் வரும்போது எழுத்துமுறைத் தேர்வு,வாய்மொழித் தேர்வு என்று இரண்டு பகுதியாக குழந்தை வருடம் முழுவதும் செய்த வேலையை மதிப்பிடுகின்றார்கள்.இதிலே யாருடைய மேதாவித்தனமும் கிடையாது. அத்துடன் ஆசிரியர்களும் அடிக்கடி பயிற்சிப் பட்டறைகள் மூலம் புடம் போடப்பட்டு கற்பித்தலுக்கு அனுப்பப் படுகின்றார்கள் என்பது மிக முக்கியமான விடையம்.
இது தவிர மொழி என்பது மாற்றத்துக்குள்ளாகி வரும் ஒன்று. ஐரோப்பிய மொழிகளிலே அகராதிகள் புதிய சொற்களுடன் பதிப்பித்து வருதல் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அதே போல தமிழிலே கலந்துள்ள வேற்று மொழிச் சொற்களைக் களைந்து தனித் தமிழ் சொற்களை நடைமுறைக்குக் கொண்டு வந்து பாட நூல்கள்இங்கே புதுப்பிக்கப் படவும் செய்கின்றன.
ஒரு இனத்தின் வெளிப்பாடே அதன் மொழியில் தான் தங்கியுள்ளது. இன்றைய நிலையில் நாங்கள் எமது வாழ்வையும், வரலாற்றையும் எமது குழந்தைகளுக்குக் கடத்துவது அவசியமான ஒன்று. அதுவும் நாங்கள் வீட்டிலே பேசுவது தமிழாயிருந்தால், குழந்தைக்குக் கடினம் என்றோ அல்லது முடியாது என்றோ சொல்ல முடியாது. பெரியவர்கள் நாங்கள் தான் கடினம் என்று ஒரு சாட்டை எமது சார்பிலிருந்து வைக்கப் பார்ப்போம். "ரதி" என்பவர் கூறிய கருத்துப் போல, உலக மொழிகள் அனைத்திலேயும் திருக்குறளை மொழி பெயர்த்துப் பயன் படுகின்றார்கள். நாங்கள் இரண்டு திருக்குறள் மனனம் செய்யச் சொன்னால் "உந்தத் திருக்குறள் இப்ப என்னத்துக்கு" என்று பெரியவர்கள் தான் கேட்பார்கள். மனனம் செய்யிறதே பிழை என்று சொல்ல வருபவர்களுக்கு ஒரு செய்தி; மனனம் என்பது ஞாபக சக்தியைத் தூண்டும் ஒரு செயல்பாடு. அந்த முறை எல்லா மொழிகளிலும் கடைப்பிடிக்கப் படுகின்றது. அண்மையில் இங்கு நடந்த ஒரு திருக்குறள் போட்டிக்கு நடுவராக சென்றிருந்தேன். பிள்ளைகள் திருக்குறள்களை மனனம் செய்திருந்தார்கள்; ஆனால் அதன் பொருளை தங்களது வார்த்தைகளில் விளக்கியதைக் கேட்டபோது எம்மினம் வீழாது என்ற ஒரு பெருமிதம் எனக்குள் தோன்றியது.
இதை விட பிரான்சில் தமிழ் மொழியை ஒரு மேலதிக பாடமாக உயர்தரப் பரீட்சைக்கு எடுக்கலாம் அதில் வரும் பத்திற்கு மேற்பட்ட புள்ளிகள் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுடன் சேர்க்கப்படும்.எனவே இது ஒரு மேலதிக நன்மை.
உண்மையிலேயே எத்தனையோ ஆசிரிய ஆசிரியைகள் சனி, ஞாயிறு என்பதை விடுமுறையற்ற தொடர் நாட்களாகவே அர்ப்பணிப்புடன் பிள்ளைகளுடன் கழிக்கின்றார்கள். இப்படி அவர்கள் அலைவதன் நோக்கம் என்ன? வீட்டிலே படுத்து ஓய்வெடுக்க முடியாதா?
இதுவும் ஒரு எதிர்கால எதிர்பார்ப்பில் உள்ள நம்பிக்கைதான்.
குழந்தைகள் தெளிவாக உள்ளார்கள்.
நாங்கள் தெளிவாவோம்.

குற்றம் களைவோம்.

நல்லன நோக்குவோம்.

அல்விற், வி. நன்றி: http://alvitv.blogspot.com


2 comments:

Michaelpillai said...

எனது கருத்தை பகிர்ந்து கொண்ட பெருந்தன்மைக்கு மிக்க நன்றி பேராசிரியரே!

Michaelpillai said...

எனது கருத்தைப் பெருந்தன்மையுடன் பகிர்ந்த தங்களது பெருந்தன்மைக்கு மிக்க நன்றி பேராசிரியரே!