1.5.08

வண்ணநிலவன்: ஜே.கே மொழிந்ததுபோல் கணங்களை எழுத்தால் வளைத்துப் பிடித்தவர் · தேவமைந்தன் கணங்கள், காலவெள்ளத்தில் நீர்க்குமிழிகள் போல் உடனே தோன்றி உடனே மறைய வல்லவை. அவற்றை எழுத்தால் பிடிப்பது என்பது எல்லோருக்கும் எளியதன்று. எளிமையாக வாழ்ந்து எளிமையாகப் பழகி அன்புடன் வாழக்கூடிய எழுத்தாளர்களுக்கே அது கைவரக் கூடும். அவ்வாறு வாழ்ந்த வல்லிக்கண்ணன் அவர்களால் வண்ணநிலவன் என்று புனைபெயர் சூட்டப்பெற்றவரான இராமச்சந்திரன், அவற்றைத் தன் எழுத்தால் வளைத்துப் பிடிக்கவும் செறித்து வைக்கவும் சேமிக்கவும் முயல்கிறார். ‘நாலாறு மாதமாய்க் குயவனை(படைத்தோன்) வேண்டி’ உலகுக்குக் கொண்டுவந்த ‘தோண்டி’யை(உடம்பை) ‘நந்தவன’த்தில்(உலகத்தில்) ஓர் ஆண்டி(“கொ[ண்]டுவந்த தொன்றுமி[ல்]லை / இனிக் கொ[ண்]டுபோவது மொன்றுமில்லை” என்று வாழ்வதால் மனிதனை ஆண்டி என்றார் சித்தர்) கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்த கதையாய் விபத்தேபோல் பிறந்து, வேறு வழியே இல்லாமல் வளர்ந்து, வாழ்ந்த கணங்கள் வசப்படாததால் பிறந்தது முதலே செத்து, ஒருநாள் தாங்களே முற்றிலுமாகத் தொலைந்தே போய்விடும் மனிதர்களிடையே கணங்களைச் செறித்து வைக்கவும் சேமிக்கவும் இயன்றால் தங்கள் படைப்பில் உறைந்துபோக வைக்கவும் முயற்சி செய்பவர்கள் இல்லாமலா போவார்கள்? இவ்வாறு, கணங்களை எழுத்தால் வளைத்துப் பிடிக்கும் ‘விக்கிரமாதித்திய’ முயற்சியினூடே விளையும் தவிப்பை, ‘மனச் சிற்பங்கள்’ என்ற கதையில் படர்க்கைக் கூற்றாக வண்ணநிலவன் பதிவு செய்திருக்கிறார். “பொதுவாகவே வாழ்வு கடந்த கால நினைவுகளிலும், நிகழ்காலச் சம்பவங்களிலுமாக அல்லாடிக் கொண்டிருக்கிறது. நினைவிலும் நிஜத்திலுமாக நாட்கள் கழிகின்றன. நிஜம் நினைவுச் சருகாகி மனதை நிறைக்கிறது. இது மனதின் அவஸ்தையா, வாழ்வின் அவஸ்தையா என்பதே புரிவதில்லை. சம்பவங்களின் தொகுப்பு நாளாவட்டத்தில் நினைவுகளாய் செமித்து, நிகழ்காலத்தில் மனமொன்றவிடாமல் சஞ்சலப்படுத்துகின்றன. இச்சலனமே இல்லாமல் காலமும் சம்பவங்களும் உறைந்துபோகக்கூடாதா என்று மனம் ஏங்கிற்று. நிகழ்காலமும் நடப்புலகும் உறைந்து, உலகு பனிச்சிற்பம் போலாகி விடக்கூடாதா?.......எல்லோருமே இப்படி நினைவிலும் நடப்புலகிலுமாக உழன்று உழன்று சஞ்சலப்படுகிறார்களா? ஆனால் அது தன்னை மட்டுமே சுற்றிச் சுற்றி வரும் துக்கமென்று நினைத்துக்கொள்வது அவனுக்கு இதமாக இருந்தது. மற்றவர்கள் ஏதோ முடிவுக்கு வந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த முடிவில் நின்று கொண்டுதான் காரியமாற்றுகிறார்களென்பது துல்லியமாகத் தெரிகிறது. அந்தத் தர்க்கநிலை தன் மனதுக்கு மட்டுமேன் கூடிவரவில்லை என்பது அவனுக்கு வெகு விசித்திரமாக இருந்தது. கடந்த காலத்திய நினைவுகள் தரும் அவஸ்தையை அந்த முடிவு நிர்த்தாட்சண்யமாகச் சுருக்கிவிடும் என்ற யுக்தி தோன்றியது. எல்லோருமே கடந்த காலத்தின் துயர நினைவுகளோடுதான் வாழ்கிறார்கள். ஆனால் நிகழ்காலத்தோடு ஒன்றியைந்திருப்பதுபோல் பாசாங்கு செய்கிறார்கள்.” ‘மனச்சிற்பங்கள்’ கதை வெளியான இதழ் - ஆகவும் பொருத்தமாக, கணங்களின் முழுமையான ‘காலம்’ என்ற பெயரையே தாங்கியதும் இன்னொரு வியப்பு. ஒவ்வொரு உவர்நீர்த்துளியும் கூட்டிணைந்திருப்பதுதானே கடல்? கடல் என்பது அந்த ஒவ்வொரு உவர்நீர்த் துளியும்தானே? கடலிலுள்ள அந்த ஒவ்வொரு உவர்நீர்த்துளியும் தான் கடலல்ல; கடல் முற்றிலும் வேறானது என்று நினைப்பது போன்ற சஞ்சல உணர்வுடன்தானே ஒவ்வொரு மனிதரும் வாழ்ந்து சலிக்கிறோம்! கடலை எண்ணி உவர்நீர்த்துளி தன்னை வேறுபடுத்திக்கொண்டு ஏங்குவதேபோல் நாம் அதைக் கடவுள் என்றாலென்ன! ‘Collective Unconsciusness’ என்றாலென்ன? ஏனோ, மெய்யுணர்வாளர் ஜே.கே. நினைவுக்குள் வருகிறார். ஜே.கே. என்று உலகத்தாரால் அன்புடன் அழைக்கப்பெறும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, இந்த - கணங்களை வளைத்துக் கையகப்படுத்தும் முயற்சியை உறுதிப்படுத்தி வைத்தார். ஒவ்வொரு சொற்பொழிவின் தொடக்கத்திலும் இந்த முயற்சியில் விடாது இறங்கியவர் அவர். அவ்வாறே நம்மைச் செய்து பார்க்கவும் தூண்டியவர். ‘Living in the Present’ என்ற தன் வாழ்வியல் கோட்பாட்டை வெறும் கருதுகோளாகக் கொள்ளாமல், ஒவ்வொருவரும் செயல் வடிவமாக்கிக் கொள்ள, அவர் அவ்வாறு பரிந்துரைத்தார். அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு நம்மைச் சூழ்ந்து நிகழும் ஒவ்வொன்றையும் எழுத்தில் பதிவு செய்து பார்க்க அறிவுறுத்தினார். ‘Conditioning And The Urge To Be Free’ என்ற பொழிவில் முதல் மூன்று பத்திகள் அதாவது ஐம்பத்தாறு வரிகளில் அவர் அந்த வித்தையைச் செய்து காட்டியிருக்கிறார். அதைப் புரிந்து கொண்டால், வண்ணநிலவன் ஆங்காங்கே குறிப்பிடுவதுபோல், விண்மீன்கள் செய்யும் ஒலியையும் நாம் கேட்க முடியும். மரஞ்செடிகளின் மணத்தையும் - ஊரைத் தாண்டிய, பனைவடலிகளின் சொந்தமான தேரிக்காட்டு மணலானது - நிலவொளியில் குளிர்ந்துபோயிருக்கும் பொழுது வெளிவிடும் விவரிக்க முடியாத மணத்தையும்; விடிவதற்குச் சற்று முன்னால் வெளிவிடும் பச்சைப் பனை ஓலைகளின் வாடையையும்; நல்ல மத்தியான வேளையில் வெளிவிடும் - எண்ணெயில் வறுத்த முறுக்கு வற்றலின் மணத்தையொத்த ஒருவிதமான காரநெடியையும் [அதே மணம் தன் தாயின் உடல்மணமாக விளங்கிய ஞாபகத்தையும் - ‘மெஹ்ருன்னிஸா’ கதை); ஆடுவளர்க்கும் கீழ்நடுத்தரக் குடும்பத்து வீட்டு வாசல் பக்கமிருந்து திடீரென்று வீசும் ஆட்டுப்புழுக்கை மணத்தையும் உணர - முகர முடியும். ‘எங்காவது குரைக்கும் நாய்கள், எப்போதாவது கேட்கும் சைக்கிள் மணிச் சத்தம்,’ ‘தோட்டத்தில் பனை ஓலைகள் காற்றில் உராயும் சத்தம்.’ ‘ஆடு, தூணில் கட்டியிருந்த அகத்திக் கீரையை மொறுக் மொறுக்கென்று அவசரத்தோடு கடித்துத் தின்கிற சத்தம்’ முதலான பற்பல ஓசைகளைச் செவிமடுக்கவும் முடியும். அடிவானத்தின் மேலே நிலவு வரும் வேளையில் பூவரச மரங்கள் காற்றில் லேசாக அசைந்து கொண்டிருக்கும் கோலம்; அரசியல் தொண்டன் வீட்டு வாதமடக்கி மரத்தடியில் தொய்ந்துபோன ஒரு நார்க்கட்டிலும், முதுகுப்பட்டை இல்லாத இரண்டு ஸ்டீல் சேர்களும் கிடப்பதும், அந்த வீட்டுக்கு உடையவன், தன்னைப் பார்க்க வருபவர்களை அந்த நாற்காலிகளில் அமர்த்திவிட்டு, தான் அந்த நார்க்கட்டிலின் மிகவும் தொய்ந்துபோயிருக்கும் மத்திய பகுதியில் உட்கார்ந்து சமாளிப்பதும் பிறவும் கண்டுணர முடியும். இந்தக் கண்டுணர்தல்(observation) வண்ணநிலவன் கதைகளில் சற்றுத் தூக்கலாகவே உள்ளமைக்குத் ‘தாய்’ இதழில் வெளிவந்த ‘வலி’ கதை, பானைச் சோற்றுக்கு ஒரு பதம் மட்டுமே. இந்தக் கட்டுரை வெளிவரும்பொழுது முதிய(அறுபது வயதும் அதற்கு மேலும்) வயதில் இருப்போர்க்குத் தெரிந்த ஒன்றை வண்ணநிலவன் மறவாமல் பதிவு செய்திருப்பதையும் இங்கே குறிக்க வேண்டும். இவர்களின் இளம் வயதில் இவர்கள் பார்த்துப் பழகிய இரயில்வே ஸ்டேஷன்களின் ‘ஜீவன்,’ இன்றைக்குள்ள தொடர்வண்டி நிலையங்களில் உயிர்த்துக்கொண்டிருக்கிறதா என்ன? நான் கோவை அரசினர் கலைக் கல்லூரியில் இளங்கலை அரசியல் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் கல்லூரிக்கு மேற்கே இருந்த கோவை இரயில்வே நிலைய ‘ஹிக்கின்பாதம்ஸ் ஸ்டா’லில் ஆக்கபூர்வமாகக் கழித்த கணங்களும்; அங்கே ‘மாணவர் சலுகை’யில் ஆறே ஆறு ரூபாய்க்கு வாங்கிய ‘Complete Shakespeare’(E.L.B.S. வெளியீடு) புத்தகமும் மறக்கக் கூடியவையா? இது “பழசைப் பேசும்” பழக்கமல்ல. ‘டென்ஷனும் அவசரமும்,’ உண்ணும் உணவில்கூடக் கைவைத்துவிட்ட - கைவைக்க விட்டுவிட்ட இன்றைய இளந்தலைமுறைக்கு, இப்படி நீங்களும் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் வாழ்ந்து பார்க்கவும் பதிவு செய்யவும் முடியும் என்று அக்கறையோடு பரிந்துரைக்கிற முயற்சி... அவ்வளவே. வண்ணநிலவன் பதிவிலுள்ள - இரண்டு தலைமுறைக்கு முந்திய(30 ஆண்டுகள் கொண்டது ஒரு தலைமுறை ) இரயில்வே ஸ்டேஷனைப் பார்த்துவிட்டு இக்கட்டுரையை நிறைவு செய்வோம்... “அந்த ஊரைப் போலவே அந்த ஸ்டேஷன் கூட மாறித்தான் போய்விட்டது. ஹிக்கின்பாதம்ஸ் ஸ்டாலில் இப்போது யாரோ இருந்தார்கள். ஸ்டாலுக்கு எதிரே பிளாட்பாரத்தின் கூரையில் தொக்கிக் கொண்டிருந்த ‘இந்த வாரம் ஆனந்த விகடன் வாசித்தீர்களா?’ போர்டைக் காணவில்லை. உடனே மனம் நழுவிக் கீழே விழுந்து விட்டது. அந்த போர்டு இலாமல் அந்த ஸ்டேஷனை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அது இல்லாமல் ஸ்டேஷன் மூளியாகிவிட்டிருந்தது........ கூட்ஸ் வேகன்கள் பின்னோக்கி மெதுவாக நகர்ந்து சென்று கொண்டிருந்தன. பின்புறமிருந்த வேகன்களில் ஒன்றில் ஒரு ரயில்வே தொழிலாளி தொற்றிக்கொண்டு பச்சைக் கொடியை வேகமாக ஆட்டிக் கொண்டிருந்தான். அவன் கொடியை ஆட்டிய வேகத்துக்கும் அந்த வேகன்கள் நகர்ந்து சென்ற வேகத்துக்கும் சிறிதும் இசைவே இல்லாமல் இருந்தது...... அரசமரத்தைச் சுற்றி வட்டமான சிமெண்ட் மேடை இருந்தது. அவ்விடம் பிளாட்பாரத்தின் ஒருகோடிதான் என்றாலும் ஸ்டேஷனுக்குள் இன்னும் அரச மரத்தைப் பேணி வந்தது அவனுக்கு ஏதோவொரு இதத்தைத் தந்தது. எல்லாமே இப்படிப் பழமையும் புதுமையுமாகக் கலந்துதானிருக்கின்றன போலும்... காற்றில் நிலக்கரி மணம் மிதந்து வந்தது. எங்கோ பக்கத்தில் நீராவி இஞ்சின் நின்று கொண்டிருக்க வேண்டும்...... ஹிக்கின்பாதம்ஸ் ஸ்டால்களுக்கும் ரயில்வே ஸ்டேஷன்களுக்கும் விவரிக்கவொண்ணாத மதுரமான தொடர்பு இருப்பதுபோல், ரயில்வே பிளாட்பார வெண்டர்களுக்கும், ஸ்டேஷன்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதுபோல் தோன்றியது.” பார்வை நூல்: வண்ணநிலவன் கதைகள். சந்தியா பதிப்பகம், 52, முதல் தளம், நான்காவது தெரு, அஞ்சுகம் நகர், அசோக் நகர், சென்னை - 600 083, தமிழ்நாடு. E-Mail: piththan@yahoo.com நன்றி: திண்ணை.காம்
'தன்னுணர்வு': பெருஞ்சித்திரனாரின் தமிழாக்கம் - தேவமைந்தன் மிகவும் அண்மையில், புதுச்சேரி - பிரெஞ்சு நிறுவனத்தில் நிகழ்ந்து நிறைந்த மொழியாக்கக் கருத்தரங்கு வரை, மொழியாக்கம் பற்றிய கவலைகள் - பரிந்துரைகள் பற்பல வெளிவந்துள்ளன. சென்னையில் லதா ராமகிருஷ்ணன் முயற்சியில் உருவான மொழிபெயர்ப்பாளர் சங்கக் கலந்துரையாடல்களையும் அவற்றில் பகிர்ந்துகொள்ளப்பெற்ற கருத்தாடல்களையும் நண்பர்கள் வழி அறிந்திருக்கிறேன். மொழியாக்கங்களில் இதுவரையிலும் நாம் அறிந்த வகைகளுக்கப்பால் மொழியாக்கவகை ஒன்றுண்டு. தன் உள்ளத்தில் ஊறிய கருத்துகளின் ஒத்தவகைக் கருத்தாடல் பிறமொழி சார்ந்த அறிஞரொருவரின் நூலிலும் வெளிப்படக் கண்டு கிளர்ந்து, அதைத் தழுவித் தனக்கே உரிய மொழிநடையுடனும் தற்காலத்திற்கேற்ற எடுத்துக்காட்டுகளுடனும் தன்மொழியில் புதிய நூல் எழுதுவதுவே அது. அவ்வகைப்படிப் பெருஞ்சித்திரனார் படைத்த நூல் 'தன்னுணர்வு.' ஆங்கிலத்தில் எமர்சன் உருவாக்கிய 'Self Reliance' என்பதன் தமிழாக்கம். 17-01-1977 அன்று சென்னையில் 'தென்மொழி'யால் வெளியிடப்பெற்றது. வழக்கமான மொழியாக்கத்துக்குத் 'தன்னுணர்வு' வேறுபடுதலை நூலின் தொடக்கத்தில் உள்ள பாடலே காட்டி விடுகிறது. "இடுக நும் பிள்ளையை மாமலை மேல்;விளை யாடுதற்கே விடுக செந் நாய்களின் பாலினை மாந்தி வளர்க அவன்! கெடுக வன் அச்சம்! நரியொடும் நாயொடும் கேண்மையுற நடுக நீ நன் மறம் நெஞ்சில், வினையில், நரம்பிலுமே!" என்பதுவே அப்பாடல். மொழிதல் எவ்வாறு இருந்தால் அது மனிதத்திலிருந்து அறிஞத்துக்கு உயர்வதாய் விளங்கும் என்பதற்கு இப்பகுதி: "நமக்குள் தோன்றும் பொருளை நாம் உள்ளது உள்ளபடியே கூறுவோமாகில், நம் சொல்லிலும், கருத்திலும் மிகுந்த உண்மையும், ஆழமும் மட்டுமன்றித் தகுதியும் செழுமையும் உறுதியாக இருக்கும்......உன் காலத்தில், உன்னைச் சுற்றியுள்ள மக்களுக்கென்று, உன்னுள்ளே பொதிந்து வைத்துள்ள ஆற்றலையும் அதன் நிலையையும் மலர்ந்து பரவச்செய்." வாழ்க்கையின் நோக்கம் எது? ஈகையா.. இலவசத் திட்டங்களா? "ஏழைகளுக்கு உழைப்பதே உன் வேலை என்று சொல்லாதே! அதுவே அறம் என்றும் நினையாதே! அவர் தமக்கிருக்கும் உண்மையான ஆற்றலை மறக்கச் செய்து, உன் ஈகையால் மாய்ந்து போகச் செய்வது, உன் வாழ்வையும் வீணடித்து, அவர் வாழ்வையும் வீணடிப்பது ஆகும். நோயாளிகளும் பித்தர்களும் சோற்றுக்கடைக்காரனுக்கு இரண்டு மடங்கு விலை கொடுப்பதுபோல் அறங்கள், மக்கள்தம் குற்றங்களை மாற்றும் வழியென்று விலை தந்து அவற்றைப் போக்க முயல்கின்றனர். நம் வாழ்க்கையின் நோக்கம் வாழ்க்கையே! ஊரார் மெச்சுதல் வேண்டுமென்பதன்று." மெய்யான துறவியைப் பற்றியோ, அறிஞனைக் குறித்தோ அவர் வாழும் வட்டத்துக்கு முப்பது கல்(மைல்) தொலைவுக்கு அப்பாற்பட்டவர்களே அறிவார்கள் என்று இராமகிருஷ்ணர் கூறினாராம். ஏனென்றால் உருப்படியாக வேலைபார்க்கும் எவரையும் அவரைச் சுற்றியுள்ள சமுதாயம் அவ்வாறு செய்ய எளிதில் விட்டுவிடாது. இலவச மேற்பார்வை பார்த்து, வேண்டாமலேயே திறனாயும். அதைப் பெருஞ்சித்திரனாரின் 'தன்னுணர்வு' இவ்வாறு கூறுகிறது: "உன் கடன் என்ன என்பதை உன்னைக் காட்டிலும் உன்னைச் சுற்றியுள்ள மாந்தர் அறியார்...உலகத்தாரின் விருப்பப்படி நடப்பது மிகவும் எளியதே. அதேபோல் உலகத்தாரை விட்டொதுங்கி, நாம் நினைப்பதுபோல் நடப்பதும் எளிதே! ஆனால் உலகத்தார் நடுவில் இருந்துகொண்டே நம் உள் எண்ணப்படி நடப்பதுதான் கடினம். ஆனால் அதை நிறைவேற்றுபவன் மாந்தரில் மேலானவன். உனக்கு உடன்பாடற்ற செயல்களில் உன்னை ஈடுபடுத்திக் கொள்வது உன் உள்ளத்தின் ஆற்றலைச் சிதற அடிப்பதாகும்." சில ஆண்டுகளுக்கு முன்னால் 'political complex' என்ற கலைச்சொல் சமூக உளவியலாரால் அடிக்கடி சொல்லப்பட்டது. தனக்கெனப் பாதை வகுக்காமல், தன் அரசியல் கட்சித் தலைவன் வகுத்த பாதையை மட்டுமே பின்பற்றுவதும், அவன் வகுத்த கொள்கையையே தன் கொள்கையாகப் பின்பற்றுவதும் சொல்லுவதும், எந்தக் கேள்விக்கும் தன் கட்சித் தலைவன் சொல்லும் பதிலையே சொல்லுவதும் அந்த மனச்சிக்கல் ஆகும். பெருஞ்சித்திரனார் எழுதினார்: "உன் வினைத் திறத்தைக் காட்டி உன்னை அறிமுகம் செய். ஒரு கூட்டத்தைக் காட்டி உன்னைக் காட்டாதே. ஒரு தனிப்பட்ட கூட்டத்துக்கு இணங்கியிருப்பது வெறும் குருட்டுச் செயலே. நீ எந்தக் கூட்டத்தைச் சார்ந்தவன் என்பது எனக்குத் தெரிந்தால் நீ செய்யவிருக்கும் சொற்பொழிவும் எனக்கு முன்பே தெரிந்ததாகவே இருக்கும். நீ பேசத் தொடங்கினால், உன் கூட்டத்தாரின் வழக்கமான எண்ணங்களைத் தவிர, உன் உள்ளத்திலிருந்து வந்ததாக ஒரு சொல்லும் இராதே! நீ ஒரு கட்சிக்கென்று வைக்கப்பெற்ற வழக்குரைஞன் ஆகிவிடக் கூடாது." 'வாக்குத் தவறுதல்' என்று ஒன்றைச் சொல்வார்கள். 'சொன்ன வாக்கைக் காப்பாற்றாதவர்' என்று ஒருவரை, "சொன்ன வாக்கைக் காப்பாற்றாத பேர்வழிகள்" பழிப்பதை உலகியல்பாக நாம் பார்க்கிறோம். சென்னைத் தமிழிலும் சொல்மாறி என்பது 'சோமாரி' என்று வழங்கியது. ஆனால் அதன் உண்மை என்ன? "பிறரிடம் முன்னே ஒன்று சொல்லிவிட்டாய் என்பதற்காக, நீ இப்போது வேறொன்றைச் சொல்ல அஞ்சாதே. உண்மையை எப்பொழுதும் போலியின்மேல் வீசியெறியலாம். முன்பின் முரணாகி விடுமோ என்ற நினைவுப் பிணத்தை உன் உள்ளத்தால் கட்டி இழுத்துத் திரியாதே. முன்பு தவறென்று நீ சொன்னவை இப்பொழுது சரியென்று பட்டால் உடனே ஒப்புக்கொள்." ஒருவகையான ஆதிக்க மனப்பான்மையைச் சிலர் தம்மைச் சூழ்ந்தாரிடையிலும் தமக்குச் சமமானவர் இடையிலும் மிக நுணுக்கமாகக் கடைப் பிடிப்பார்கள். பாதிப்புக்கு உள்ளாகுபவருக்கே அது தெரியாது. பல காலங் கழித்து அது தெரிய வரும்பொழுது உறைக்குமே.. அதற்குக் கொளுத்தும் கோடைவெயிலும் ஈடாகாது. இன்றுள்ள 'மொபைல்' எனப்படும் செல்பேசி நாகரிகத்திலும் அது உள் நுழைந்துள்ளது. அவர்கள், தங்கள் செல்பேசிக் காசைச் செலவழித்து, உங்களிடம் பேசமாட்டார்கள். நீங்கள்தான் அவர்களிடம் பேசவேண்டும். அதற்குமேல் ஒருபடி செல்பவர்களும் உள்ளார்கள். அவர்கள் உங்களுக்குத் 'துண்டிக்கப்பட்ட அழைப்பு'(missed call) அனுப்புவார்கள். நீங்கள் உங்கள் காசைச் செலவுசெய்து அவர்களுடன் பேசவேண்டும். கொஞ்சமாகப் பேசுவார்களா? அவர்கள் காசுக்குச் செலவில்லையே! தாராளமாகப் பேசுவார்கள். உங்கள் பொன்னான பொழுதும், உங்கள் குடும்பத்துக்குப் போய்ச் சேரவேண்டிய காசும், 'மொபைல்' நிறுவனங்களுக்குத்தான் போகும். இதே ஆதிக்க மனப்பான்மையைக் கருத்தாளுமையிலும் பார்க்கலாம்; பணியாளுமையிலும் பார்க்கலாம். உண்மையான ஆற்றலும் மெய்ம்மையும் உள்ளவர்கள் இந்த முறையில் நடந்து கொள்ளக் கூசுவார்கள். தாங்கள் மிகவும் வளர்ந்துவிட்டவர்களாகவும் பெயர் புகழ் பெற்றுவிட்டவர்களாகவும் நினைத்துக்கொண்டு, தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்பவர்கள், மெய்யாகத் தாழ்வு மனப்பான்மையின் சின்னங்கள்...... பெருஞ்சித்திரனாரின் தன்னுணர்வு இவ்வாறு சொல்லுகிறது: "போலி நட்பையும், பொய் வணக்கங்களையும் இரக்கமின்றி வெட்டியெறி. தாங்களும் ஏமாந்துகொண்டு, பிறரையும் ஏமாற்றிக்கொண்டு, உன்னையும் ஏமாற்ற வரும் உன் உறவினர்கள், நண்பர்கள்தம் விருப்பப்படி நடவாதே......" "மாந்தர் ஒருவர்க்கொருவர் ஒருவரைச் சார்ந்துகொண்டும் ஒருவர்பால் ஒருவர் கையேந்திக் கொண்டுமே உள்ளனர். நமது குடும்ப அமைப்பில் பெருமையில்லை? நம் கல்வி, தொழில், திருமணம், கொள்கை முதலிய எதையும் நாம் வரையறுத்துக் கொள்வதில்லை. வலிந்த ஒரு சிலரே அவற்றை வரையறுக்கின்றனர். நாமெல்லாம் சமையலறைக் காவலர்கள் ஆகிவிட்டோம். சூழ்நிலையை எதிர்த்துப் போகும் ஆற்றல் நமக்கில்லை." கடவுள் வழிபாடு குறித்துத் திட்டவட்டமான கருத்துகளைத் 'தன்னுணர்வு' முன்வைக்கிறது: "இப்புடவியெங்கும் நீக்கமற விரிந்து சிறகார்த்து சுடர்வீசிக் கொண்டிருக்கும் ஒரு பேராற்றல் எதுவோ, அதுவேதான் நம்முடைய உள்ளத்திலும், உடலிலும் ஊடுருவிப் பாய்ந்துகொண்டிருக்கிறது.......நமக்குள்ள அறிவு நம்மை நாம் கண்டு கொள்ளவே அன்றி, நம்மை உண்டாக்கிய பேராற்றலை ஆராய்ந்து கண்டு கொள்வதற்காகத் தரப்படவில்லை. அதை ஆராயும்போது அது நிலைத்து விடுகின்றது. அந்தப் பேராற்றலைப்பற்றி நாம் அதிகமாகச் சொல்ல இயல்வது இவ்வளவே." [புடவி=பிரபஞ்சம்] "தனக்கென நன்மை வேண்டுமென்று இறைவனை வேண்டுவது இழிவும், திருட்டுத்தனமும் ஆகும். தனக்குண்டான வினைப்பாடுகளை உண்மையாகச் செய்வதுதான் இறைவனை வழுத்தும் மெய்யான முறை......நாம் இறைவனை நோக்கி வருந்தி வேண்டுவதும் அவனை நொந்து கொள்வதும் நம் நம்பிக்கைக் குறைவையும், உள்ளத்தின் உறுதியின்மையுமே காட்டுகின்றன." "உள்ளம் பேராற்றலின் இருக்கை; அது இறைவனின் படுக்கை. அதை விட்டு விட்டுப் பிறிதோரிடத்தில் இன்பத்தையும் நலத்தையும் வறிதே தேடித் திரிவதால், தன்னுள்ளத்து வீற்றிருக்கும் அரிய ஆற்றல் குன்றி விடுகிறது என்று ஒருவன் அறிந்துகொண்டு அவன் தன் அறிவையும் உள்ளத்தையுமே நம்பி நடப்பானாகில், அவன் வாழ்க்கை வளைவுகளெல்லாம் நேராக்கப் பெறுகின்றன. தன்னையறிந்தவுடன் அவன் நிற்கத் தொடங்குகின்றான்." இறுதியாக, உண்மையான செல்வம் எது என்பதற்குப் பெருஞ்சித்திரனார், எமர்சன் எழுதிய 'Self Reliance' நூலைத் தழுவிக் கருத்துரைத்திருப்பதை அறிவோம்: "செல்வம் என்று பொதுமக்களால் கூறப்படும் ஆரவாரப் பருப்பொருள்கள், சூதாடுபவர்களின் கைகளில் விழுவதுபோல ஒருகால் ஒருசேர வந்து விழும். மறுகால், அவரை விட்டு ஒருசேரப் போகும்.("கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம், போக்கும் அதுவிளிந் தற்று" என்ற திருக்குறளை ஓர்க.) இவற்றைத் துகள்களாக எண்ணு. உன் உள்ளத்தின் வளர்ச்சியும் தூய்மையுமே, உன் உண்மையான செல்வம். அவைதாம் உனக்கு அமைதியைத் தரும்; உன்னை வெற்றி அன்னையின் மடியில் கொண்டுபோய்க் கிடத்தும். உன்னை நீயே அறி; உன்னை நீயாகவே ஆக்கிக் கொள்." **** நன்றி: திண்ணை.காம்
கொழுக்கட்டைச் சாமியார் கதை -தேவமைந்தன் கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டி இன்று சிற்றூர்கள் பல இருக்கின்றன. அவற்றுள் ஒன்றில்தான் கொழுக்கட்டைச் சாமியார் மடம் இருக்கிறது. அவருக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? பொதுவாக, மக்கள் ஒரு பழமொழி சொல்லுவார்கள். நதியின் வரலாற்றையும் சாமியாரின் வரலாற்றையும் விசாரிக்கக் கூடாது என்று. அப்படியே விசாரித்தாலும் கிடைப்பது உண்மையா என்று யாருக்குத் தெரியும்! ஆனால் கொழுக்கட்டைச் சாமியாருக்கு ஏன் அப்படியொரு பெயர் வந்தது என்று ஓர் உள்ளூர் அம்மாள் மூலம் எனக்குத் தெரிய வந்தது. ஆஜானுபாகுவான அவர் வடநாட்டிலிருந்து வந்தவராம். வந்தபொழுது, அவருக்குத் தமிழ் தெரிந்திருக்கவில்லை. வந்தபிறகும் தமிழை முழுமையாகத் தெரிந்துகொள்ளும் விருப்பமும் இல்லை. இந்தச் சனங்களுக்கு 'கொஞ்சம் கொஞ்சம்' தமிழ் தெரிந்தால் போதும் என்று கொழுக்கட்டைச் சாமியார் கணக்குப் போட்டார். நம்ம சனங்களைப் பற்றி அவர் கணக்கு இதில் மட்டுமல்ல, பலவற்றிலும் தவறானது பற்றி இந்தக் கதை, தான் முடிவதற்கு முன் வாக்குமூலம்போல் சொல்லிவிடப் போகிறது... அப்பொழுதுதான் தெரியும், நம்ம தமிழ்ச் சனத்தை ஏமாத்த நினைக்கிறவங்க கதி என்ன ஆகும் என்பது. சும்மாவா பாடினாரு நம்ம எம்ஜியாரு? "தவறு என்பது தவறிச் செய்வது / தப்பு என்பது தெரிந்து செய்வது / தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும் / தப்பு செய்தவன் வருந்தி யாகணும்"ன்னு.. கொ.சா. திருந்தலை..வருந்தவுமில்லை.. கடைசி'ல என்ன ஆச்சு? *** அந்த ஊருக்குக் கையில் காலணாகூட இல்லாமல் அவர் வந்தார். அந்தக் காலத்திய மரக்காணம் சாலையான இந்தக் காலத்திய கிழக்குக் கடற்கரைச் சாலையில், இப்பொழுது புகழ்பெற்றிருக்கும் 'புரோட்டா'க் கடைபற்றி ஒருவரும் கனவுகூடக் கண்டிருக்க மாட்டார்கள். தற்காலம் பிரான்சிலிருந்து வருபவர்கள் ''மெனக்கெட்டுக் கார் போட்டுக் கொண்டு போய்," குறைந்த அளவு பத்துப் புரோட்டாவாவது குருமா மற்றும் பட்டாணிக் கலவையோடு காலிபண்ணி வருகிறார்கள். அதே இடத்தில் - அன்று, கொழுக்கட்டைகளைக் கூடையிலேந்திக்கொண்டுபோய் மரத்தடியில் வைத்து விற்றுப் பிழைத்திருந்தாள் ஒரு பாட்டி. வியாபாரத்துக்குப் போவதற்காக கொழுக்கட்டை சுட்டுவிட்டு குடிசைக்கு வெளியில் வந்தாள் அவள். அங்கே பசியோடு நின்றிருந்தவர், மொழி தெரியாததால், அவர் அந்தப் பாட்டிமுன் கையை ஏந்தினார். பாட்டி உடனே வீட்டினுள் ஓடி("ஓடி" என்பது, எம்.கே.டி. பாகவதர் காலப் படங்களை நினைவூட்டவேண்டும்; இல்லையென்றால், அவ்வாறு நினைவூட்டப் பெறாதவர்கள், சென்ற நூற்றாண்டின் இறுதியில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்!) சூடான கொழுக்கட்டைகளை ஒரு வாழைநறுக்கில் இட்டுக் கொண்டுவந்து அந்த வடநாட்டுக்காரரின் சிவப்புக் கைகளில் தர, அவர் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.(ரொம்பவும் சூடோ?) நன்றியுணர்வு என்று அந்தப் பாட்டி எடுத்துக் கொண்டாள். சாப்பிட்டதும், அவருக்குக் கொழுக்கட்டை மிகவும் பிடித்துப்போனது. பாட்டியிடம் அந்தப் பலகாரம் என்ன என்று இந்தியில் கேட்டார். கொடுத்த பலகாரம் பற்றிக் கேட்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள மொழி தேவையா என்ன?(பிரகாஷ்ராஜ் கவனிக்க) 'கொழுக்கட்டை' என்று அழுத்தந் திருத்தமாகச் சொன்னாள் பாட்டி. அவரே அப்படித்தான் இருந்தார் என்பது, வேறு செய்தி. 'கொல்லுக்கட்டாய்' என்று உரக்கச் சொல்லிப் பார்த்தவர், பாட்டியால் திருத்தப்பட்டு 'கொல்லுக்கட்டை' 'கொள்ளுக்கட்டை' என்றெல்லாம் சொல்லி, மீண்டும் மீண்டும் திருத்தப்பட்டு கொழுக்கட்டை என்று சரியாகச் சொல்ல அரைமணி நேரமாவது ஆகியிருக்கும். இதன் விளைவாக, அந்த ஊரிலேயே தங்கிக் கொண்டு, அவர் திறமையாக 'மேஜிக்' செய்ய ஆரம்பித்து, சனங்களை அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்து மட்டுமல்லாமல் அருகிலுள்ள பட்டணத்திலிருந்தும் ஈர்க்கத் தொடங்கிய காலகட்டத்தில், முதல் 'சிஷ்யை'(தலைமைச் சிஷ்யை)யாக அந்தப் பாட்டிதான் ஆனார்.('ஆனாள்' என்பது, 'ஆனார்' ஆவது.. இப்படித்தான்) தலைமைச் சிஷ்யையே அனுபவசாலி ஆனதால், ஒரு கொழுக்கட்டை விற்று வந்த காசுபோல் பலமடங்கு ஒரு சீடரைச் சேர்த்துக் கொள்வதில் தேறியது. அப்புறமென்ன? மடம் வந்தது. மண்டபம் வந்தது. சீடகோடிகள் தங்குவதற்குப் பெரிய தங்குமிடம் வந்தது. யாருக்கும் தெரியாமல் இன்னும் என்னென்னவோ வந்தன. முன்பே சொன்னதுபோல், 'மொழி'யைச் சிக்கனமாகப் பயன்படுத்தி அருள்வாக்கும் சொல்லத் தொடங்கினார் அவர். அவர் சொல்லும் அருள்வாக்குகளில் கட்டாயம் கொழுக்கட்டை இடம்பெறும். அதை வைத்தே மக்களை - அவரவர்கள் மனதில் இருக்கும் சேதிகளைத் தான் சொன்னதாக அர்த்தப் படுத்திக் கொள்ளச் செய்வார் சாமியார். அப்படியே அவர்கள் குழம்பினாலும், பக்கத்தில் இருக்கும் 'சிஷ்ய'கோடிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு 'வியாக்கியானம்' எடுத்துவிட்டு அசத்துவார்கள். வந்த ஒருவர்கூட அதிருப்தியாகத் திரும்பிச் சென்றதில்லை என்றால் பாருங்களேன்! கொழுக்கட்டைச் சாமியார் என்று அவர் அன்புடன் அழைக்கப்படுவதற்குக் காரணங்களான 'அருள் வாக்கு'கள் சில......... "சாமீய்......எம் புள்ளை கெட்ட சகவாசத்தால சீர்கெட்டு திரியிறான் சாமீய்.. எப்பத்தான் அவன் திருந்துவான்?........" "திருந்துவாம்'மா.. திருந்துவான்..கொழுக்கட்டை நல்லா வேந்ததும் திருந்திடுவான்...போ..போ.. காசுபோட்டுடு.." "சாமி என்ன சொல்றாருங்க?......என்னமோ கொழுக்கட்ட... அத்த இத்த'ன்னுட்டு.." "அதுவா..ஒனக்குப் பக்குவம் இல்ல.. அதான் சாமி வெளக்கமாச் சொல்றது புரியல்ல..கொழுக்கட்டை நல்லா வேந்தாக்காத்தான் நீ அத்தத் தின்னுவே! அத்தப்போலவே ஒம் பையனுக்கு கிரகங்கள்'ல்லாம் கூடி நன்மை செய்யற காலம் வரப்போகுது.. அப்ப அவன் திருந்தீடுவான்'கிறாரு சாமி.. சரி..சரி அந்த உண்டி'ல தாரளமாப் போட்டுட்டுப் போ.. எல்லாம் நல்லா நடக்கும் போ.." (இது பக்கத்தில் உள்ள சீடர் கூற்று) விளக்கவே முடியாத மாதிரி 'சாமி' சொல்லிடுச்சுனா?... கொழுக்கட்டைப் பாட்டிக்கு ஆள் போகும். கொழுக்கட்டை சம்பந்தமான அத்தனை தொழில் நுணுக்கங்களையும் அறிந்தவரல்லவா தலைமைச் சிஷ்யையான அவர்? அப்படித்தான் ஒருநாள் ஆனது... தனக்குப் பிள்ளையே பிறக்கவில்லை என்று முறையிட்ட, பட்டணத்திலிருந்து வந்த பணக்காரப்பெண் ஒருவரிடம் - ''ஒழுங்கா மொறையா கொழுக்கட்டை தின்னா இப்'டியா இருப்ப....?" என்று கொழுக்கட்டை சாமியார் சொல்ல, பட்டணத்துப் பணக்காரப்பெண் அவர் 'வாக்கை' 'அசிங்கமாக'ப் புரிந்துகொண்டு அழ ஆரம்பிக்க, ஆள் போனது. ஓடி வந்தார் மேனாள் கொ. பாட்டி மற்றும் த.சிஷ்யை. ''அட, என்னாத்துக்கும்மா அழற..சாமியார் அப்படியென்ன வாக்குச் சொல்லிப் போட்டாரு?" என்று கேட்க, ப.ப.பெண் அந்த வாக்கைத் தயங்கித் தயங்கிச் சொல்ல, விபரீதம் புரிந்துகொண்டு, சூழ்நிலையை உடனடியாக மாற்றும் விதத்தில் "ஓ!'வென்று உரக்கச் சிரித்து, அதே சமயம், சாமியாருக்குப் பக்கத்திலிருந்த சிஷ்யர்களை "சமாளிக்கத் தெரியாத மடையன்'களா" என்று லேசர் பார்வையில் முறைத்துப் பாட்டி சொன்னதாவது: "அட என்னம்மா..சாதாரணமான விசயம் புரிஞ்சிக்காம..பட்டணத்துல பெறந்து நாலு எழுத்துப் படிச்சுட்டா சாமி வாக்கு விளங்கிடுமா...(ப.ப.பெண் முகத்தில் நம்பிக்கை - இலேசான புன்முறுவல்...இந்த 'சிக்னல்' போதாதா பாட்டிக்கு?).. நம்பணும்'மா, நம்பணும்..நம்பனவங்களுக்குத்தான்நடராசன்...நம்பாதவங்களுக்கு?..(மறந்தே போனது!) சரி..சரி அத்த விடு.. சாமி சொல்லுது.. "ஒழுங்கா மொறையா கொழுக்கட்டை தின்னா" - அப்படின்னா இன்னா தெரியுமா..(பாட்டி மூளையில் பளீர் வெளிச்சம், டிடர்ஜெண்ட் விளம்பரத்தில் வரும் அடுத்த வீட்டு ஆண் சட்டையைப் போல)ஆங்.. ஒவ்வொரு செவ்வா வெள்ளியும் எண்ணத் தேச்சு முழுவோணும்.. கோயிலுக்குப்போய் அரச மரத்த அம்பத்தியோரு தடவை 'கொழந்த பொறக்கணும்'னு தெடமா வேண்டிக்கிட்டு சுத்திச்சுத்தி வரணும்.. குலதெய்வத்துக்கு நேந்துக்கோணும்.. ஏழ'பாழகளுக்கு அன்னதானம் பண்ணோணும்.. இத்தத்தான் சாமியார் 'சூசகமா'ச் சொன்னா புரிஞ்சுக்காம..அவர் பேரே கொழுக்கட்டைச் சாமி..பின்ன எப்படிச் சொல்வாருனு நெனைக்கிறே, நீ போயி........" நன்றியுடன் சிரித்த அந்தப் பட்டணத்துப் பணக்காரப் பெண், ஒரு நோட்டுக்கற்றையை உண்டியில் திணித்துப்போட்டுவிட்டு, கொ.சாமியார் முன் விழுந்து வணங்கி, தன்மேல் அன்புபூண்டு "உரிய" விளக்கம் தந்த தலமைச் சிஷ்யையின் கைகளைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக்கொண்டு காருக்குச் செல்ல, அங்குள்ளோர் அனைவரும் ஆசுவாசப் பெருமூச்சு விட்டார்கள். அப்புறம் கொழுக்கட்டைப் பாட்டி கைகளால் அவர்கள் மொத்துப் பட்டது கிளைக்கதை. இப்படியாக நாள்கள் இனிதே போக, சாமியாருக்கு திடீரென்று கிறுக்குப் பிடித்தது. மண்டபத்தின் சுவர்மேல் ஒருவர் கைவைத்தால் போதும். ஓடிவந்து, 'என்னோட கொழுக்கட்டை!" என்று கூவி அந்த ஆள் சுவர்மேலிருக்கும் தன் கையை எடுக்கும் வரை கலாட்டா பண்ணிவிடுவார். இன்னும் இதுபோல எத்தனையோ தலைவலிகளைக் கொடுக்கத் தொடங்கிய அவர், படிப்படியாக வளர்ந்து மண்டையிடி கொடுக்கவும் தொடங்கினார். தன் சிஷ்யகோடிகளையும் ஏன் தலைமைச் சிஷ்யையும்கூட, "இதெலாம் என் கொழுக்கட்டை.. எல்லாம் வெளிய போங்க!" என்று மூர்க்கமாகத் தாக்கத் தொடங்கவே, அவர்களெல்லாம் கூடி ஒரு தீர்மானத்துக்கு வந்தார்கள். அடுத்த நாள் விடியலுக்கு முன்னால்.. மத்திய அரசுப் பணியிலுள்ள கொ.சா. சீடர் ஒருவர் வந்து என்னை அவசர அவசரமாக அழைத்துச் சென்றார். விவரம் கேட்ட என்னிடம் மூச்சிறைக்க "கொழுக்கட்டை சாமி வேந்துடுச்சு!"(அதாவது முக்தி...கட்டாய ஓய்வோ?!) என்றார். போனேன். மடத்துக்குள்ளோ, மண்டபத்திலோ வைக்காமல். வெளியில் இருந்த வயலருகே அவரைக் கட்டிலின் மேல் வெள்ளைத் துணியொன்றில் போர்த்து(கட்டி!) வைத்திருந்தார்கள். 'அதன்' முன் நின்று கைக்குப்பி வணங்கினேன். கூப்பிடுவதுபோல் இருந்தது. பக்கத்தில் சென்றேன். அந்த மூட்டைக்குள்ளிருந்து "நா'ந்தான்..கொழுக்கட்டை......" என்று ஒரு தீனக்குரல். "பாவிகளா! என்ன செய்தீர்கள்?" என்பதற்குள் அங்கு திரண்டிருந்த சிஷ்யகோ(கே)டிகள் என்னை முரட்டுத் தனமாகத் தள்ளிவிட்டு, கொழுக்கட்டைப் பாட்டி/தலைமை சிஷ்யையின் ஆணையேற்று, அந்தக் கட்டிலோடு அவரைக் கட்டாய சமாதியாக்க(உயிரோடு புதைக்க) எடுத்துச் சென்றார்கள். நொந்துபோய் அங்கிருந்து நான் அகல, அம்மாள் ஒருவர் ஓடிவந்து தடுத்து, சாமியார் சமாதியானதை முன்னிட்டு, கொழுக்கட்டை வினியோகம் நடக்கிறது என்று சொல்லி வாங்கிச் சொல்லுமாறு பணித்தார். போய் வரிசையில் நின்று வாங்கினேன், வாழைநறுக்கில் ஒரு பெரிய கொழுக்கட்டையை வைத்துக் கொடுத்தார்கள். வரிசையை விட்டு வெளியே வந்தேன். அங்கு ஓர் உருவம் விரைவாக என்னை நோக்கி வரவே அருகில் பார்க்க, அதிர்ந்தேன். தலைமைச் சிஷ்யை, தன் 'கோலத்தை' மாற்றிக் கொண்டு, பழைய கொழுக்கட்டைப் பாட்டி ஆகியிருந்தார்கள். என்னருகில் வந்து, காதோடு சொன்னார்கள். "அப்பேன்! ('அப்பன்' என்னும் சொல்லின் திரிபு).. அத்தத் துன்னுடாதே..அது வேகாத கொழுக்கட்டையாக்கும்.." என்று சொல்லிச் சிரித்தார்கள்..சிரித்துக் கொண்டே இருந்தார்கள்.. ** காலை வெயில் உக்கிரமாக முகத்தில் அடிக்க, திடுக்கிட்டு எழுந்தேன். சந்தேகம். "நேற்று ராத்திரி ரொம்ப 'லேட்'டா பொங்கல்தானே சாப்பிட்டேன்.. ஏன் இந்தக் கனவு வந்தது?" "கனவுகள், இரவு உண்ணும் உணவுகளைப் பொருத்துத்தான்('ரு' சரிதானா, சர்சேலில் வாழும் 'புதுவை எழில்'?..) வேறுபடுகின்றன" என்று தீர்க்கமாகத் தீர்மானித்திருக்கும் துணைவியாரிடம் இனிமேல்தான் இந்தக் கனவு பற்றிச் சொல்ல வேண்டும்............... * பின்குறிப்பு: இந்தக் கதையில் அடைப்புக் குறிகளுக்குள் பல சேதிகளைப் போட முதலில் நான் விரும்பவில்லை. நீரோட்டமான வாசிப்புக்கு அது தடை ஆகும் என்றுதான் நம்பினேன். ஆனால், "இவன் வழக்கமாக நிறைய அடிக்குறிப்புகள் போட்டு இலக்கிய, சமூகக் கட்டுரைகள் எழுதுகிறவன்..அந்தப் புத்தியை இதிலும் காட்டிவிட்டான் பார்!" என்று எரிச்சல் அடையக் கூடாது என்றே இந்தக் 'குறைந்தபட்ச இம்சை'யைக் கொடுத்துள்ளேன். வாசித்தவர்கள் பொறுத்தருள்க. **** நன்றி: திண்ணை.காம்

16.3.08

மாயா ஏஞ்சலு: நிறவெறியை வென்ற சாதனையாளர்

மாயா ஏஞ்சலு: நிறவெறியை வென்ற சாதனையாளர் - தேவமைந்தன் இரண்டாம் உலகப் போருக்கு மிக முன்பே, பால் லாரென்ஸ் தன்பார் என்ற கவிஞர் படைத்த 'கருணை' என்று பொருள்படும் 'சிம்பதி'' என்ற பாடல் புகழ் பெற்றிருந்தது. ஜே. ரோசமான்ந் ஜான்சன் என்ற இசையமைப்பாளர் அந்தப் பாடலுக்குச் சிறப்பாக இசையமைத்தார். பாடகர் ஜேம்ஸ் வெல்டன் ஜான்சன், "லிஃப்ட் எவ்'ரி வாய்ஸ் அண்ட் சிங்!' என்று கம்பீரமாகத் தொடங்கி அதைப் பாடினார் என்றால் கேட்டு உருகாதவரே இருக்க முடியாது. அந்தப் பாட்டில் இடம்பெற்ற ஒரு வரி, "கூண்டில் அடைக்கப்பட்ட பறவை ஏன் பாடுகிறது என்று எனக்குத் தெரியும்!" என்பது. தன் நண்பர் அப்பே லிங்கன் ரீச் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, "மாயா! ஏன் அந்தப் பாடல் வரியையே உங்களின் தன் வரலாற்றுக்குத் தலைப்பாக வைத்துவிடக் கூடாது? என்று அவர் கேட்க, அதுவே தலைப்பானது. இதெல்லாம் ஒரு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால்...... அதற்கும் பற்பல ஆண்டுகளுக்கு முன்பே, தனக்கு மூன்று வயதாகவும் தன் சகோதரன் பெய்லி ஜான்சனுக்கு நான்கு வயதாகவும் இருக்கும்பொழுதே, பாட்டியாரிடம் வளர அனுப்பப்பட்டவர் மார்க்கெரித்... ஆம், அதுதான் மாயா ஏஞ்சலுவின் சொந்தப் பெயர். கலிஃபோர்னியாவின் 'நீண்ட கடற்கரை' என்ற பெயருடைய 'லாங் பீச்'தான் மார்க்கெரித்தின் தாயார் விவியன் பாக்ஸ்டர் வாழ்ந்த நகரம். 'மதர் டியர்' என்று மாயாவும் பெய்லியும் தாயாருக்குப் பெயர் சூட்டியிருந்தார்கள். தன்னைப்போன்ற அழகு பெற்றவளாகத் தன் மகள் இல்லாததால்தான் அம்மா தன்னைச் சகோதரனுடன் பாட்டி வீட்டுக்கு அனுப்பி விட்டதாக வேடிக்கையாக மாயா இந்தப்புத்தகத்தில் சொல்லுவார்கள். மாயா ஏஞ்சலு'வின் சிறப்பே, சொல்லுவதற்கு மிகவும் உறுத்தலான சேதிகளையும் ஒருவகையான நக்கலடிப்புடன் சொல்லிச் செல்வதுதான். நிறவெறி பற்றி வரும்பொழுதுங் கூட உணர்ச்சி மிகுந்த சொல்லாடலுடன் இதே நக்கலடிப்புத்தான் கைகோத்துச் செல்லும். தன் பாட்டியின் நகரத்துக்குப் பயணம் செய்த பொழுது, நீகிரோவர்களான சக பயணிகளிடமிருந்து மாயா முதன்முதலாக ஒன்றைத் தெரிந்து கொண்டார். அவர்கள் கனத்த உணவுப் பாத்திரங்களோடு வந்திருந்தனர். தங்களுடன் பயணம் செய்யும் ஆதரவற்ற நீகிரோக் குழந்தைகளுக்குக் குளிர்ந்துபோன - வறுத்த சிக்கனும் உருளைக்கிழங்கு சாலட்டும் அன்புடன் தருவதில் முனைப்பாக இருந்தனர். மாயாவும் பெய்லியும் அந்தச் சமயத்தில் தம் தாயுடன் பயணம் செய்யாததால் அவர்களுக்கும் அதே அன்பு கிடைத்தது. பிற்காலத்தில்தான் அது ஏன் என்பது மாயா ஏஞ்சலுவுக்குத் தெரிந்தது. அச்சமுற்ற ஆயிரமாயிரம் நீகிரோ சிறுவர்கள், அமெரிக்க நாட்டின் வடக்கு-தெற்குக் குறுக்காக, நாள்தோறும், தங்களைப் புதிதாகத் தத்து எடுத்துக் கொண்ட பெற்றோர்களைத் தேடி வடக்கு நகரங்களுக்கோ அல்லது தத்து நீங்கி மீண்டும் தங்கள் பாட்டிமார்களை நாடித் தெற்கு நகரங்களுக்கோ பயணம் செய்து கொண்டே இருந்தனர். பொதுவாக, 'வடமாநிலங்களின் நகரத்துவம், தனது பொருளாதார வாக்குறுதிகளைக் காப்பாற்றாத பொழுது ' இவ்வாறான பயணங்கள் நிகழ்ந்தன. மாயாவின் பாட்டியாரின் பெயர் திருமதி ஆன்னி ஹாண்டர்சன். அர்கன்சாஸிலுள்ள ஸ்டாம்ப்ஸ் என்ற நகரில் பண்டசாலை நடத்தி வாழ்ந்தவர். 'மிகுந்த மதப்பற்றும் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையும் கொண்ட தென்னமெரிக்க நீகிரோ அம்மையார் ' என்று தன் பாட்டியைக் குறித்து மாயா ஏஞ்சலு குறிப்பிடுவார். பாட்டியின் ஒரே மகன் வில்லீ, ஊனமுற்றவர். இந்தத் தன்வரலாற்றில் கடைசியாக அவர் குறிப்பிடப்பெறும் பொழுது அவருக்கு வயது நாற்பத்திரண்டு ஆகியிருக்கும். அவர்தான் பாட்டியாரின் பண்டசாலையைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்பவர். அதன் பின்கட்டில் தங்கிக் கொள்வார். அதுவே அவர் வாழ்க்கை. 'வில்லியம் ஜான்சன் பொது வணிகப் பண்டசாலை' என்பது அதற்கு வைத்த பெயர். பலகையில் 'விம்.ஜான்சன் பொது வணிகப் பண்டசாலை' என்று இருக்கும். மாயாவும் பெய்லியும் ஸ்டாம்ப்ஸ் நகருக்கு வருவதற்கு இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பே[இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம்], அந்தப் பண்டசாலையைப் பாட்டியார் தொடங்கியிருந்தார். கிழக்கு ஸ்டாம்ப்ஸைச் சார்ந்த மரமறுக்கும்தொழிலாளிகளுக்கும் மேற்கு ஸ்டாம்ப்ஸைச் சார்ந்த பருத்தித் தொழிலாளிகளுக்கும் உணவுப் பண்டங்கள் விற்பதிலிருந்து தன் வியாபாரத்தைத் தொடங்கினார். தொழிலில் விசுவாசமுள்ளவர் ஆதலால் அவர் சுவையாகச் செய்து அவர்களுக்கு விற்ற மொறுமொறுப்பான புலால் பணியாரங்களும் குளிர்ந்த எலுமிச்சைச் சாறும், ஒரே சமயத்தில் அந்த இரண்டு வெவ்வேறு இடங்களிலும் நேரம் தவறாமல் ஏற்பாடு செய்து கொடுத்த விதமும் அவருக்கு வெற்றி தேடித் தந்தன. சில ஆண்டுகள் தொடர்ந்து மேலும் அந்தத் தொழிலாளர்களுக்குத் தேவைப்பட்ட பண்டங்களை, அவர்கள் எளிதாக வந்து போகக் கூடிய இடத்தில், மரப்பலகைகள் வைத்துக் கடைபோன்ற அமைப்பில் கட்டி விற்றார். மேலும் வளர்ந்தபின், நீகிரோவர் வசிப்பிடங்களுக்கு நடுவாக பண்டசாலையை நிறுவினார். காலஞ் செல்லச் செல்ல, நீகிரோவர் வந்து கூடுமிடமாகவும் செயல்பாடுகள் பலவற்றை அவர்கள் திட்டமிடும் மையமாகவும் அது முக்கியத்துவம் பெற்றது. சனிக்கிழமைகளில் மட்டும் காட்சி வேறுபடும். அந்தப் பண்டசாலையின் விறாந்தையருகே உள்ள மரநிழலில் முடிதிருத்துபவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை அமரச் செய்வார்கள். நெடுந்தொலைவு பயணம் செய்து வந்த 'ட்ர்யூபதூர்'கள் எனப்பட்ட நாடோடிக் கலைஞர்கள் தங்களின் 'தெ பிரெஃஸோஸ்' சோக கீதங்களைக் கொட்டாங்கச்சி யாழ்களிலும் சிகரெட்-பெட்டி-யாழ்களிலும் வாசிப்பார்கள். பண்டசாலையில் விற்கப்படும் உணவுப் பண்டங்கள், பலவகை வண்ண நூல்கண்டுகள், பன்றிகளுக்கான தீவனம், கோழித் தீவனமான சோளம், விளக்குகளுக்கான கரி எண்ணெய், வசதி படைத்தவர்களுக்கான மின்விளக்கு பல்புகள், ஷூக்கயறுகள், முடியலங்காரப் பொருள்கள், பலூன்கள், பலவிதமான பூச்செடிகளை வளர்ப்பதற்கான விதைவகைகள் முதலியவை அங்கே வாடிக்கையாளர் பலரை ஈர்த்தன. யாராவது அங்கே ஏதாவது இல்லை என்று சொன்னால், உடனே வாங்கி வைக்கப்பட்டுவிடும். அப்புறமென்ன? அந்தப் பண்டசாலை வெற்றிகரமாக நடந்தது என்று சொல்லவும் வேண்டுமா! வெள்ளை இனத்தவர்கூட மாயா ஏஞ்சலுவின் பாட்டியார் திருமதி ஆனி ஹாண்டர்சனிடம் அவ்வப்பொழுது கைமாற்றாகப் பணம் பெற்றுக் கொள்ளும் அளவு வியாபாரத்தில் வெற்றி பெற்றார். பணத்துக்கு நிறமாவது வெறியாவது! ஆனாலும், நிறவெறி தன் வெவ்வேறு முகங்களை அங்கங்கே காட்டிக் கொண்டுதான் இருந்தது. மாயா சொல்வதிலிருந்து மிகச் சில காட்சிகள்: "அழுக்காக இருக்கக் கூடாது!" "கீழ்ப்படியாதவர்களாக நடந்து கொள்ளக் கூடாது!" என்ற இரண்டு கட்டளைகளைப் பாட்டியார் எங்களுக்கு இட்டிருந்தார்கள். அவற்றை நாங்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்பதில் மிகவும் கண்டிப்பாக நடந்துகொண்டார்கள். ஏதோ எங்கள்[மாயா, பெய்லி] ஒட்டுமொத்த வாழ்வின் ஈடேற்றமே அந்தக் கட்டளைகளில்தான் தொங்கிக் கொண்டிருப்பதுபோல இருந்தது. என்ன பனியானாலும் குளிரானாலும் கேணிக்குப் போய் அதன் தூய, சில்லிட்ட நீரால் கைகால்களைக் கழுவிக் கொண்டு, வறண்ட துவாலையால் ஈரம் போகத் துடைத்து, தண்ணீரேபோல் சில்லிட்ட வாசலைனைத் தடவிக் கொண்டுதான் வீட்டுக்குள்ளேயே நுழைவோம். பிறகு வீட்டுப்பாடங்கள்; சோளரொட்டி; சுண்டக் காய்ச்சிய பால்; பிரார்த்தனைகள்; படுக்கை. இந்த வரிசை கொஞ்சமும் மாறலாகாது. நாங்கள் உறங்கியபின் போர்வையை இழுத்து எங்கள் பாதங்கள் தூய்மையாக இருக்கின்றனவா என்று சோதிக்கப் பாட்டியார் ஒருநாளும் தவறியதே இல்லை. அழுக்காக இருந்துவிட்டால், நேரம் காலம் பார்க்க மாட்டார்; படுக்கையறைக் கதவருகே எப்பொழுதும் மூலையில் சாய்ந்து காத்திருக்கும் ஒரு சுள்ளிக் குச்சி .. அழுக்காகப் பாதத்தை வைத்த 'குற்றவாளி 'யின்மேல் சுழன்றாடும். நள்ளிரவு நேரத்தில் ஒரு கேணியின் அருகே என்னவெல்லாம் சஞ்சரிக்கும் என்று பரப்பப்பட்ட கதைகளின் பாதிப்போடும் - எதார்த்தமாக அந்த நேரத்தில், அங்கே திரியக்கூடிய ஊர்வனவற்றிலிருந்தும், மெய்யாகவே ஆபத்து விளைவிக்கக் கூடிய சமூக விரோதிகளிடமிருந்தும் அந்தக் 'குற்றவாளி '[அழுக்கான பாதங்களை உடையவர்] தன்னைக் காத்துக் கொண்டு, கைகால்களை அழுக்குப் போகத் தேய்த்து வந்து ஈரம் போக்கி..வாசலைன் தடவி......மீண்டும் படுத்துத் தூங்கலாம். இத்தனைக்கும் பின்னே பாட்டியார், "கடவுள்தன்மைக்கு அடுத்து தூய்மை என்பது மட்டுமே உண்மை அல்ல; 'அழுக்கு' என்பதுதான் வறுமையையே கண்டுபிடித்த விஞ்ஞானி என்பதும் அதைவிட உண்மையானது" என்று எங்களிடம் வலியுறுத்தத் தவறியதில்லை. மேலும், "கீழ்ப்படியாத பிள்ளையை ஆண்டவர் வெறுப்பார்; அந்தப் பிள்ளையின் பெற்றோர்மேல் அவமானம் கவியும்; அந்தப் பிள்ளையின் குடும்பத்தார் சுற்றத்தார் எல்லோரும் அழிந்தே போவார்கள்!" என்றும் எச்சரிப்பார். பெரியவர்களை - 'மிஸ்டர்,' 'மிஸ்ஸஸ்,' 'மிஸ்,' 'ஆண்ட்டி,' 'கசின்,' 'அன்க்,' 'அங்கிள்,' 'புஹ்பாஹ்,' 'சிஸ்டர்,' 'பிரதர்' .. இன்னும் ஆயிரம் மரியாதைப் பெயர்களால் அவரவர் தகுதிக்கேற்பத் தெரிந்தெடுத்து அழைக்க வேண்டும் என்று இன்னும் இன்னும் எத்தனையோ அறிவுறுத்துவார். இப்படிப்பட்ட பாட்டிக்கு எவர்களால் எப்பொழுது எப்படியெல்லாம் சோதனை வந்தது தெரியுமா? பாட்டி இத்தனை சொன்னார்களே! அவையெல்லாம் எங்களுக்கு... நீகிரோச் சிறுவர்களுக்குத்தான் பொருந்தும். 'பொவைட்ரேஷ்' என்றழைக்கப்படும் வெள்ளைச் சிறுவர்களுக்கல்ல... அவர்கள் பாட்டியாரின் பண்ணைநிலத்தில் வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களின் குடும்பங்களோ, பொருளாதார அடிப்படையில் திருமதி ஹாண்டர்சனுக்குக் கட்டுப்பட்டவை. ஆனால் நிறம் வேறாயிற்றே! சில சமயங்களில் அவர்கள் கூட்டங் கூட்டமாகப் பண்டசாலைக்குள் நுழைவார்கள், மிகுந்த உரிமை எடுத்துக் கொள்வார்கள். எங்களால் தாங்க முடியாத அளவு அழிச்சாட்டியம் பண்ணுவார்கள். "வெள்ளை ஆசாமிகளிடம் எவ்வளவு குறைவாகப் பேசுகிறீர்களோ, அவ்வளவுக்கும் நல்லது!" என்று எங்கள் வாய்களைப் பாட்டியார் அடைத்து விடுவதால் எங்களால் ஒன்றுமே செய்ய இயலாது. வில்லீ மாமாவை மரியாதைக் குறைவாகப் பேசி, அதை இதை எடுக்கச்சொல்லி ஆணை இடுவார்கள். 'ஆன்னி...!' என்று அந்தச் சிறுவர் சிறுமியர் பாட்டியைப் பெயர்சொல்லி அழைத்து வேலையிட, பாட்டியாரும் அவர்கள் குறிப்பறிந்து நடந்து கொள்வதைப் பார்த்து அந்த என் பத்து வயதிலேயே எனக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வரும். இன்னும் பல விதங்களில் ஆத்திரப்படுத்தும் அவர்கள், ஒரு சமயம், அநாகரிகத்தின் உச்சத்துக்கே சென்றார்கள். அவர்களுள் ஒருத்தி, "இங்கே பார் ஆன்னீ!" என்றழைத்து, என் பாட்டியாருக்கு அருவருப்பான முறையில் ஒழுங்கு காட்டினாள். பாட்டியாரோ உணர்ச்சி வசப் படாமல், தோத்திரப் பாடல்களை முணுமுணுக்கத் தொடங்கினார்கள். இன்னொரு சிறிய பெண் பொம்மலாட்டம் போன்ற ஒரு நடனம் ஆடினாள். மற்ற பிள்ளைகள் அதைப்பார்த்து ஊளையிட்டுச் சிரிக்கலானார்கள். அந்தச் சமயத்தில் அவர்களுள் பருவமடைந்து பெரியவளாக இருந்த ஒருத்தி முன்னே வந்தாள். ஒரு மாதிரி பாட்டியாரைப் பார்த்தாள். அடுத்த கணம் வெகுவேகமாகக் குனிந்தாள். தரைமேல் தன் கைகளைத் தட்டையாக அழுத்தினாள். அப்படியே தன் பாரிய உடலை அந்தரத்தில் உயர்த்தினாள். அவளுடைய அழுக்கான பாதங்களும் நீண்ட கால்களும் வானத்தை நோக்கின. அவளுடைய உடையோ சரிந்து கொண்டே வந்து அவள் தோள்களைச் சுற்றிக் கொண்டது. உள்ளாடை எதையும் அவள் அணிந்திருக்கவில்லை..உயர்த்திய தன் நீண்ட கால்களை ஒன்று சேர்த்து, தன் குறியைப் பாட்டியாருக்குச் சிறிதுநேரம் காட்டினாள். பிறகு கீழே தடுமாறிக்கொண்டு விழுந்து எழுந்து கொண்டாள். மற்ற பெண்பிள்ளைகள் எல்லோரும் அவளைச் சூழ்ந்துகொண்டு முதுகில் தட்டிக் கொடுத்தனர். 'படபட'வென்று கைகளைத் தட்டிப் பாராட்டைத் தெரிவித்தனர். பிறகு கொஞ்சநேரத்தில் போய்த் தொலைந்தனர். பாட்டியார் அத்தனை அழிம்புகளுக்கிடையிலும் தோத்திரப்பாடல்களை முணுமுணுத்துக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் "ஆன்னி! போறோம்!" என்று கத்திக் கொண்டு போனபொழுதுகூட, "போய் வாருங்கள் மிஸ் ரூத்!" "போய் வாருங்கள் மிஸ் எலோய்ஸ்!" என்று பாட்டியார் மரியாதையாக விடை தந்தபொழுது, நான் ஆடிப்போய்விட்டேன். போயும் போயும் நிறத் திமிருக்கு இவ்வளவு மரியாதை தருவதா? போதாததற்கு வெள்ளை இளைஞர்களில் போக்கிரிக் கும்பல்களும் இருந்தன. நீகிரோவர் வெள்ளை இனத்தவருக்குச் சிறிது தவறிழைத்தாலும் கும்பலாக வந்து நீகிரோவர் இடங்களைச் சூறையாடிவிட்டுச் செல்வார்கள்; ஆள்களையும்தான். அப்படிப்பட்ட கும்பலிடமிருந்து நீகிரோவர் ஒருவரைப் பண்டசாலையில் மறைத்துப் பாட்டியாரும் மாமாவும் காப்பாற்றினார்கள். நீதிமன்றத்தில் வழக்கு வந்தபொழுது, பாட்டியார் சாட்சி சொல்லப் போயிருந்தார். கூண்டிலேறி, "திருமதி ஆண்டர்சன்" என்று தன் பெயரை அவர் சொன்னபொழுது, ஏதோ நடக்கக் கூடாதது நடந்தது போலவும் சொல்லக் கூடாததை ஒருவர் சொல்லி விட்டது போலவும் அலை அலையாய் நீதிமன்றக் கூடத்தில் சிரிப்பு எழுந்தது. நீதிபதி, குற்றஞ் சாட்டியவர் உட்பட அவையில் இருந்த அத்தனை வெள்ளையரும் உரக்கச் சிரித்தனர். அது மட்டுமா? ஓர் ஊரில், இல்லை இல்லை தன் ஊரான பைன் ப்ளஃப்'பில், பண்டசாலை ஒன்றினுக்கு 'நிறம்'உடைய ஒருவர் உரிமையாளராக இருக்க முடியுமா என்பதை நினைத்துப் பார்க்கக்கூட முடியாமல் சிரித்ததில், நீதிபதிக்குப் புரையேறியே விட்டதாம். நெடுங்காலம் இதையே சொல்லிச் சொல்லி வெள்ளையர்கள் சிரித்ததில் நீகிரோவருக்குப் பெருமைதானாம். என் பாட்டியாரின் தகுதியும் கம்பீரமும் அதன்மூலம் வெளிப்பட்டுவிட்டதாக அவர்கள் கருதிக் கொண்டார்களாம்." ஒருமுறை, மாயா ஏஞ்சலுவுக்குப் பொறுக்க முடியாத பல்வலி வந்தது. ஆஸ்பிரின் மாத்திரைகளைப் பொடித்து வைத்து அடைத்தும் கிராம்புத் தைலம் இட்டும் அடங்கவில்லை. பாட்டியார் வழியை - பிரார்த்தனை முறையைப் பின்பற்றலாமே என்று நினைத்தாராம். வீட்டின் கீழ் தான் உட்கார்ந்திருக்கையில், கட்டடம் இடிந்து, கொடுமையாக வலிக்கும் பற்குழிகளையுடைய தன் இடது தாடைமேல் விழவேண்டும் என்று உண்மையாக வேண்டிக் கொண்டாராம். ஸ்டாம்ப்ஸ் நகரில் நீகிரோவரான பல் மருத்துவர் இல்லை; ஏன், அத்தகைய பொதுமருத்துவரும் இல்லை. முன்பெல்லாம் தனக்குப் பல்வலி வந்தபொழுது பாட்டியார் திடமானதொரு நூலைத் தன் சொத்தைப் பல்லைச் சுற்றிலும் கட்டுவாராம்; அதன் இன்னொரு நுனியைத் தன் வலது கை மணிக்கட்டைச் சுற்றிக் கொண்டு பலமாக இழுத்துப் பிடுங்கி விடுவாராம். இல்லையெனில் வலிநீக்கிகளைத் தருவாராம். அல்லது இருக்கவே இருக்கிறது பிரார்த்தனை, அவருக்கு. இந்த முறை அந்த மூன்றும் பலனளிக்கவில்லை. கெட்டி நூலைக் கட்டத் தேவையான குறைந்த அளவு எனாமல்கூட மீந்திருக்கவில்லை; 'சமநிலைப்படுத்தும் தேவதை,' பாட்டியாரின் பிரார்த்தனை வழிகளை அடைத்து விட்டதால் பிரார்த்தனைகளும் பலிக்கவில்லை. "சரி! வேறுவழியில்லை. நீகிரோவரான பல் மருத்துவர், இருபத்தந்து மைல்கள் தாண்டியுள்ள டெக்ஸர்கானா என்ற நகரில் இருக்கிறார். அவர்தான் நமக்கு மிக அருகில்(!) உள்ள பல் மருத்துவர். அவ்வளவு தொலைவு சென்று உன் பல்வலியை நீக்கித் திரும்புவதற்குள், நான் செத்தே போனாலும் போய்விடுவேன். இங்கே, ஸ்டாம்ப்ஸ் நகரிலேயே டாக்டர் லிங்கன் என்ற வெள்ளையரான பல்மருத்துவர் இருக்கிறார். அவர் என்னிடம் கடன்வேறு வாங்கியிருக்கிறார். அதனால் நமக்கு நல்லது செய்வார்!" என்று அழைத்துப் போன இடத்தில் நிறவெறியின் இன்னொரு குரூரமுகம் மாயாவுக்கு வெளிப்பட்டது. பல் மருத்துவர் லிங்கனின் மருத்துவ மனைக்குச் செல்லுமுன், வெந்நீரில் மாயாவைக் குளிக்குமாறு செய்த பாட்டியார், தானும் தூய்மையாக நீராடிவிட்டுப் புறப்பட்டார். மாயாவை, உள்ளும் புறமும் துவைத்துக் கஞ்சியிட்டுத் தேய்த்த புதிய ஆடைகளை அணியவைத்தார். 'லிஸ்டரின்' கொண்டு வாயைக் கொப்பளிக்க வைத்தார். வலியும் வீக்கமுமுள்ள இடது தாடையை, வேலைப்பாடுள்ள புதிய துண்டைக் கொண்டு மறைத்துக் கொள்ளுமாறு செய்தார். தூய்மையில் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை! டாக்டர் லிங்கனின் மருத்துவ மனையில் நடந்தவை அந்தத் தூய்மைக்கு முற்றிலும் எதிரானவை. ஒரு மணி நேரம் வெட்டியாகக் காத்திருந்தபின், வெள்ளை நர்ஸ் வேண்டா வெறுப்பாகக் கதவைத் திறந்து விட்டாள்; அலட்சியமாக, "உங்களுக்கு இங்கே என்ன வேலை?" என்பதுபோல் புருவம் நெறித்தாள். அப்பொழுது அங்கே வந்த பல் மருத்துவர் என்னைப் பார்க்கவில்லை; என் இடது தாடையைச் சுற்றிய துண்டையும் பார்க்கவில்லை; வீங்கிப்போன என் முகத்தையும் பார்க்கவில்லை. பாட்டியாரைப் பார்த்து, "நல்லது .. ஆன்னி! உங்களுக்கு என் உதவி என்ன தேவைப்படுகிறது?" என்று கேட்டார். "இதோ பாருங்கள்...இவள் என் பேத்தி! நான்கு நாள்களாக இரண்டு சொத்தைப் பற்கள் இவளைப் பாடாய்ப் படுத்துகின்றன!" என்று அவர் சொன்னதற்கு, அந்த டாக்டர் முகத்தில் எந்த எதிர்வினையையும் காணோம். கரகரத்த குரலில் அவர் பேச்சு மட்டும் வெளிப்பட்டது. "ஆன்னி...?" "எஸ், சார்.. டெண்டிஸ்ட் லிங்கன்." சிப்பிகளைக் கரைமணலில் தேடுவது போன்ற கவனத்துடன், அவர் சொற்களைத் தேடினார். "ஆன்னி..உங்களுக்குத் தெரியும்..'நிக்ரா'க்களுக்கு.. நிறமானவர்களுக்கு நான் வைத்தியம் பார்ப்பதில்லை.. " "டெண்டிஸ்ட் லிங்கன், அது எனக்கும் தெரியும்.. ஆனால் இவள் என்னுடைய பேத்தி.. சின்னப் பெண்..செல்லப் பெண்..இவளால் உங்களுக்கு எந்தத் தொல்லையும் வரப்போவதில்லை!" "ஆன்னி..ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கை உண்டு..இந்த உலகத்தில் உங்களுக்கென்று ஒரு கொள்கை இருந்தே ஆக வேண்டும்!..இப்பொழுது, என் கொள்கை என்னவென்றால், நிறமானவர்களுக்கு நான் வைத்தியம் பார்ப்பதில்லை..." பாட்டியாரின் தோலிலிருந்த எண்ணெய்ப் பசையே காய்ந்து விட்டது போலவும் அவர்களின் தலைமுடியில் தோய்ந்திருந்த வாசலைன் உருகி ஓடுவது போலவும் எனக்குப் பட்டது... "என்னை நன்றாகப் பார்த்துச் சொல்லுங்கள்..பாவம்.. சிறு பிள்ளை..நீங்கள் அவள் பல்வலியைப் போக்கலாம்... தவிர, நீங்கள் ஓரிரு முறை என்னுடைய உதவிகளையும் பெற்றிருக்கிறீர்கள்......" பல் மருத்துவர் முகம் லேசாகச் சிவந்தது. "உதவி.. உதவி செய்தீர்கள். எல்லாப் பணத்தையும் திருப்பித் தந்துவிட்டேன்..முடிந்து விட்டது..சாரி, ஆன்னி..." கதவுக் குமிழைச் சுழன்று திறக்க அவர் கை நீண்டது.... பாட்டியார் சொன்னார்: "இதற்குமேல் உங்களை எனக்காக வற்புறுத்த நான் விரும்பவில்லை. ஆனால் என் பேத்திக்கு வைத்தியம் செய்ய மாட்டீர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள மட்டும் என்னால் இயலவில்லை. நீங்கள் உதவி கேட்டு என்னிடம் வந்தபொழுது நீங்கள் பிச்சையெடுப்பதுபோல் வேண்டிக் கேட்க நான் விடவில்லை...நீங்கள் பணம் கேட்டீர்கள். உடனே கொடுத்தேன். அது, என் கொள்கையாக இல்லை. நான் வட்டிக்குக் கடன்கொடுக்கும் 'மணிலெண்டர்' தொழில் செய்யவில்லை. இதோ நீங்கள் நின்று பேசுகிறீர்களே... இந்தக் கட்டடமே உங்கள் கைகளை விட்டுப் போக இருந்தபொழுது, இதை நீங்கள் மீட்டுக்கொள்ளும்படி உடனே நான் உங்களுக்கு உதவவில்லையா?" "நான் அதையெல்லாம் திருப்பிக்கொடுத்துவிட்டேன்!.. சும்மா, உரத்துப் பேசாதீர்கள் ஆன்னி! என் கொள்கை...என் கொள்கை என்னவென்றால்..சொல்லுகிறேன்..கேட்டுக் கொள்ளுங்கள்...ஒரு நாயின் வாய்க்குள் கையை விட்டுப் பல் மருத்துவம் செய்தாலும் செய்வேனே தவிர, ஒரு நீகிரோ வாய்க்குள் அல்ல.." என்மேல் இதுவரை ஒரு பார்வையைக் கூட அவர் வீசவில்லை. பாட்டி என்னைப் பார்த்துச் சொன்னார்கள். "சிஸ்டர்![எப்பொழுதும் அப்படித்தான் என்னை அழைப்பார்கள்; நான் அவர்களை 'அம்மா!' என்றே அழைப்பேன்].... படிக்கட்டின் கீழே கொஞ்சம் போய் நில்லுங்கள்.. எனக்காகக் காத்திருங்கள்.. விரைவில் வந்து விடுவேன்!" என்று சொல்லிவிட்டு, அந்தப் பல் மருத்துவர் அறைக்குள் தடாலடியாகப் புகுந்து கதவைத் தாழிட்டுக் கொண்டார்கள். சிறிது நேரத்தில், அந்த அறையை விட்டு வெளிவந்து, படிக்கட்டில் இறங்கி அவர்கள் வந்தபொழுது, அலுப்பும் ஆயாசமுமாகத் தோன்றினார்கள். பிறகு, டெக்ஸர்கானாவுக்குப் பயணம் செய்து நீகிரோ பல்மருத்துவரிடம் எனக்கு முறையாக மருத்துவம் பார்த்தார்கள். பல்வலி போயே போனது. பாட்டியார்மேல் பெருமை பெருமையாக வந்தது. டெக்ஸர்கானாவுக்குப் பயணம் போய்வந்தபொழுது அந்த கம்பீரமான பாட்டியாரின் கைகள் என்னைச் சுற்றி இருந்ததும் நான் அவர்களின் குளிர்ந்த 'பிரவுன்' நிறத் தோள்மீது சாய்ந்து வந்ததுமே என் நினைவைச் சுற்றிச் சுற்றி வந்தது. பாட்டியார் அவ்வாறு யாரிடமும் தன் அன்பைக் காட்டியதே இல்லை அல்லவா? அது சரி!... 'டெண்டிஸ்ட் டாக்டர் லிங்கன்' அறைக்கு உள்ளே என்ன நடந்தது? மாயாவின் பாட்டியாரும் தெய்வபக்தி - பொருளாதார வெற்றி - வாழும் நகரில் புகழ் ஆகியவை மிக்க திருமதி ஆண்டர்சன், அந்த அறைக்குள்ளே, இனக்காழ்ப்பு மிக்க நர்ஸும் நிறவெறியைத் தொழில் கொள்கையாக ஏற்றுக்கொண்ட மருத்துவரும் ஒருசேர நடுநடுங்கும்படி சூறாவளிபோல் சுழன்றடித்து, கோடையிடி முழக்கமாய்ச் சொற்களை வீசி, தன் பேத்தி முன்னால் அவர்கள் நடந்துகொண்ட விதத்துக்கு மன்னிப்புக் கேட்க வைத்து, "ஒழுங்கோடும் மரியாதையோடும் இரு! நிறவெறி துறந்து மக்களுக்குச் சேவை செய்! இல்லை என்றால் இன்று மாலையிலேயே இந்த ஸ்டாம்ப்ஸ் நகரைக் காலிசெய்துவிட்டு ஓடிப்போ!" என்று மருத்துவரை எச்சரித்துவிட்டு வந்தார் என்றுதானே மாயா ஏஞ்சலு நினைத்துக் கொண்டிருப்பார்? மெய்யாக அந்த அறைக்குள் நடந்தது என்ன என்பது, சில நாள்கள் கழித்து, பாட்டியார் தங்கள் உணவைத் தயாரித்துக்கொண்டிருந்த ஒரு மாலைப்பொழுதில், அவர் மகனும் தன் மாமனுமான வில்லீயிடம் கமுக்கமாகப் பேசிக் கொண்டிருந்ததைத் தற்செயலாக மாயா கேட்க நேர்ந்தபொழுது தெரியவந்தது. பாட்டியார், மாமாவிடம் சொல்லிக் கொண்டிருந்ததாவது: " அன்று என்ன நடந்தது தெரியுமா!... டெண்டிஸ்ட் லிங்கன் என்னிடம் ஏக்கழுத்தமாகப் பேசினார். நீகிரோவின் வாயில் கையை விடுவதை விட, தன் கையை ஒரு நாயின் வாய்க்குள் விடுவதே மேல் என்று சொன்னார். அவருக்கு நான் செய்திருந்த உதவிகளை நினைவுபடுத்திய பொழுது, காயத்துக்குக் கட்டுப்போட்ட துணிகளைக் குப்பையில் கிடாசுவதுபோல் அவற்றை அலட்சியப் படுத்தினார். சரி. இருக்கட்டும்...... சிஸ்டரை[மாயாவை] படிக்கட்டுகளின் கீழ்த் தளத்தில் இருக்கச் சொல்லி அனுப்பினேன். டெண்டிஸ்ட் அறைக்குள் நுழைந்தேன். அவரும் நர்ஸும் திருடர்களைப்போல் முழித்தனர். நிமிர்ந்த ஊசியின்மேல் உட்கார நேர்ந்தவர்போல என்னை அங்கு பார்த்துக் குதித்த டாக்டர் லிங்கன் ஆவேசத்துடன் சொன்னார்: "ஆன்னி! நான் சொல்லவில்லையா?.. எந்த நீகிரோவின் வாய்க்குள்ளும் நான் கைவிடப்போவதில்லை என்று..." நான் கேட்டேன்: "யாராவது அதைச் செய்தாக வேண்டும் அல்லவா?" அவர் சொன்னார்: "அவளை டெக்ஸர்கானாவுக்கு அழைத்துக்கொண்டுபோய் நிறமுள்ள பல்மருத்துவரிடம் காட்டுங்கள்!......" உடனே நான் சொன்னேன்: "என் பணத்தை நீங்கள் தந்துவிட்டால், அவளை டெக்ஸர்கானாவுக்கு நான் அழைத்துப் போக இயலும்!" அவர் சொன்னார்: "ம்..ம்..எல்லாம் திருப்பித் தந்தாயிற்று!" நான் மறுத்தேன்: "வட்டி இன்னும் வரவில்லையே!..." அவர் சொன்னார்: "அப்பொழுது வட்டி பற்றி நீங்கள் பேசவில்லையே1" நான் சொன்னேன்: "அப்பொழுது வட்டிக்கான தேவை உண்டாகவில்லை..ம்..பத்து டாலர் கொடுங்கள்..நீங்கள் முழுவதுமாய்க் கடனைத் திருப்பித் தந்துவிட்டீர்கள் என்று எழுதிக் கொடுத்து விடுகிறேன்!" மாமாவைப் பார்த்து மேலும் பாட்டியார் சொன்னார்: "என்ன இருந்தாலும் அது சரியில்லைதான்..வில்லீ! ஏனென்றால், கடன் தந்தபொழுது நான் வட்டி பற்றிப் பேசவே இல்லை!.." "அப்புறம், குச்சித் துண்டு போன்றிருந்த குட்டி நர்ஸிடம் லிங்கன் சொன்னார் - "ஒரு பத்து டாலரை அந்த அம்மாவிடம் தந்துவிடு.... முழுவதுமாய் நான் கடனைத் திருப்பிச் செலுத்தி விட்டதற்குத் தாளில் இரசீது எழுதி அவர்களின் கையொப்பத்தை அதில் வாங்கிக் கொள்!"...அந்த நர்ஸும் அவ்வாறே செய்தாள்..இரசீதுத்தாளில் கையொப்பமிட்டேன்...அவருக்குள்ள உரிமைப்படி, அந்த டாக்டர் முதலிலேயே கடன்தொகையைத் திருப்பிக் கொடுத்துவிட்டார் என்பதுதான் சரி...இருந்தாலும் அவர் நடந்துகொண்ட அசிங்கமான விதமிருக்கிறதே.. அதற்காகவே அவர் அதிகப் பணம் செலுத்த வேண்டி வந்தது!" சொல்லிவிட்டுப் பாட்டியாரும்; கேட்டுவிட்டு அவர் மகனும் - அந்த வெள்ளை மனிதனின் ஈவிரக்கமற்ற தன்மையையும் அதற்குப் பழிவாங்குதலாகப் பாட்டியார் நிகழ்த்திய பாவச் செயலையும் நினைத்து நினைத்துச் சிரித்தார்கள். அவற்றைக் கேட்க நேர்ந்த மாயா ஏஞ்சலு, தன் கற்பனையில் பாட்டியார் அந்த வெள்ளை மருத்துவர் அறைக்குள் சூறாவளியாகச் சுழன்று கோடையிடி போல முழங்கினாரல்லவா.. அதுவே மெய்யாக நிகழ்ந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்... ****** தன் வாழ்வில் நான்கு வயது முதல் பதினைந்து வயது முடிய நிகழ்ந்தவற்றையே, "கூண்டில் அடைக்கப்பட்ட பறவை ஏன் பாடுகிறது என்று எனக்குத் தெரியும்!" என்ற இந்தத் தன்வரலாற்றில் மாயா ஏஞ்சலு எழுதினார். அந்தப் பள்ளிப் பருவத்துக்குப் பின்னர் தன் வாழ்வில் நிகழ்ந்தவற்றை, 'என் பயணத்துக்கு எதையும் நான் எடுத்துச் செல்லப் போவதில்லை,' 'என் பெயரில் ஒன்று கூடுங்கள்,' 'ஒரு பெண்ணின் இதயம்' போன்றவற்றில் குறிப்பிட்டார். 'குடிக்கக் கொஞ்சம் குளிர்ந்த நீர் தாருங்கள்!" முதலாக ஐந்து கவிதைத் தொகுதிகள் படைத்தார். நாடக அரங்கில் 'சுதந்திரத்துக்காக காபரே' என்பதைத் தயாரித்து, இயக்கி, அதில் நடிக்கவும் செய்தார். திரை உலகிலும் தொலைக்காட்சியிலும் 'ஜார்ஜியா, ஜார்ஜியா!' என்ற புகழ் மிக்க படத்துக்கான மூலத்திரைக்கதை வடிவத்தை எழுதியதுடன் இசையமைப்பையும் கவனித்துக் கொண்டார். அமெரிக்க வாழ்க்கையில் இடம்பெற்ற ஆப்பிரிக்கர் மரபுகளைப் பற்றி, பத்துப் பகுதிகளைக் கொண்ட தொலைக்காட்சித் தொடரை உருவாக்கினார். சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில், டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, தென்னமெரிக்க கிறித்தவத் தலைமை மாநாட்டுக்கான வடமாநிலங்களின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார். 1975ஆம் ஆண்டில் மக்கள் தொடர்பியல் துறைக்கான 'லேடீஸ் ஹோம் ஜர்னல்' விருது பெற்றார். பற்பல கெளரவப் பட்டங்களைப் பெற்றார். அதிபர் ஜிம்மி கார்ட்டராலும் அதிபர் ஜெரால்ட் ஆர். போர்டாலும் தமக்கே உரிய உயரிய பதவிகள் கொடுத்துப் பெருமைப்படுத்தப் பெற்றார். 'அமெரிக்க ஃபிலிம் இன்ஸ்டிடூட்'டின் நெறியாளர் குழுவில் இடம்பெற்றுப் பணிபுரிந்தார். அமெரிக்கத் திரை இயக்குநர் சங்கத்தின் மிகச்சில பெண் உறுப்பினர்களுள் முதன்மையானவராய்த் திகழ்ந்தார். 'கிங்: ட்ரம் மேஜர் ஃபார் லவ்' என்ற இசைப் படைப்புக்கான பாடல்களை எழுதியவர் இவரே. "கூண்டில் அடைக்கப்பட்ட பறவை ஏன் பாடுகிறது என்று எனக்குத் தெரியும்!" என்ற இந்தத் தன்வரலாறு, தொலைக் காட்சித் தொடராக எடுக்கப்பட்டபோது அதன் திரைக்கதையையும் மாயா ஏஞ்சலுவே எழுதினார். 'சகோதரிகள்' என்ற தொ.கா. தொடரின் திரைக்கதையும் இவரெழுதியதே. "மாயா ஏஞ்சலுவின் அமெரிக்கா: ஓர் இதயத்தின் பயணம்" என்ற புகழ்மிக்க செய்திப்படத்தை கய் ஜான்சனுடன் இணைந்து தயாரித்தார். கடைசியாக, வட கரோலினாவிலுள்ள வின்ஸ்டன்-சேலம் நகரின் வேக் ஃபாரஸ்ட் பல்கலைக் கழகத்தில் ரெனால்ட்ஸ் பேராசிரியராகப் பணி புரிந்தார். ****** நன்றி: திண்ணை.காம்

2.12.07

தமிழ்மாமணி மு.இறைவிழியனார் பாராட்டிய தகுதிமிக்க தமிழகராதி -தேவமைந்தன் தமிழ்மாமணி மு.இறைவிழியனார், 'நற்றமிழ்' என்னும் இலக்கிய இலக்கணத் திங்களிதழை நிறுவியவர். இன்னும் தொடர்ந்து அது நடந்து வருகிறது.* அவர் தமிழுக்குப் பல தளங்களிலும் தொண்டு புரிந்தவர். ஒரு முறை என் இல்லத்துக்கு அவர் வந்தபொழுது என்னிடம், வீட்டு நூலகத்தில் உள்ள அகராதிகளைப் பார்த்துவிட்டு, தமிழ்நாட்டு அரசின் நிறுவனமான தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்1985இல் வெளியிட்டதும் அறிஞர் மு.சண்முகம் பிள்ளை தொகுத்ததுமான 'தமிழ்-தமிழ் அகரமுதலி''யை குறித்துப் பாராட்டிச் சொன்னார். அதை வாங்கிப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தினார். "மற்ற தமிழ் அகராதிகள் போல் அது இருக்காது; "அரசு வெளியீடுதானே, எப்படியிருக்கும் என்று தெரியாதா!" என்று அலட்சியப் படுத்தாதீர்கள். தமிழில் அகராதி தோன்றி வளர்ந்த வரலாறு முழுவதையும் முகவுரை என்ற தலைப்பில் கொடுத்துவிட்டார் தொகுப்பாசிரியர். போதாதற்கு, மொழிக்கு முதலில் வரும் தமிழ் எழுத்துகள் 105ஐயும் வகைப்படுத்தியுள்ளார்.(1) சொல்லுக்கு முதலாக வரும் 105 எழுத்துகளின் வரிசைமுறையில் அகராதிச் சொற்கள் இடம் பெற்றாலும் ஒரு சொல்லில் பின்வரும் எழுத்துகளிலும் அகரவரிசை முறையைக் கொண்டு முறைப்படுத்துதல் என்பதில் - சதுரகராதி முதல் 19ஆம் நூற்றாண்டு முடிய வந்த அகராதிகளுக்கும் நீதிபதி கு. கதிரைவேற்பிள்ளை ஆக்கிய தமிழ்ச்சங்க அகராதி எனப்படும் தமிழ்ச் சொல்லகராதி என்னும் பேரகராதிக்கும் ஏற்பட்ட வேறுபாட்டையும் விளக்கி இருக்கிறார். அவையெல்லாம் போகத் தமிழில் அதுவரை உருவான எல்லா நிகண்டு நூல்களையும் அகராதிகளையும் கால அடைவில்(chronological order) தந்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழர்கள், சரியான பொருளைப் புரிந்து கொள்ளாமல், மனம் போன போக்கில் பயன்படுத்திவரும் வடமொழிச் சொற்கள் அனைத்தையும் இனம்பிரித்து உரிய பொருளைத் தந்திருக்கிறார். வடமொழி எழுத்துகளைப் பயன்படுத்தாமலேயே இதைச் சாதித்திருக்கிறார்"(2) என்று விளக்கமாகச் சொன்னார். அடுத்த நாள் முதலாக, நேரடியாகவும் நண்பர்கள் மூலமாகவும் அந்த அகராதியை விலைக்கு வாங்கத் தேடினேன். எங்கும் அது கிடைக்கவில்லை. அதை வெளியிட்ட தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்துக்கே போய்க் கேட்டும் கிடைக்கவில்லை. கடைசியில் சென்னை அண்ணாசாலையில் உள்ள புத்தக நிலையமொன்றில் இருந்த ஒரே ஒரு புத்தகம் கிடைத்தது. டெமி 1/4 அளவில் 1048 பக்கங்கள். விலை நூறு ரூபா மட்டுமே. அதே விலைக்கு அவர்கள் கொடுத்தது இன்னும் வியப்பு. 'தருமமிகு சென்னை' என்று வள்ளலார் சொன்னது சரிதான் என்று நினைத்துக் கொண்டேன். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இப்படி ஓரு தமிழகராதி அரசு நிறுவனமொன்றில் வெளியான பத்து ஆண்டுகளில் விற்றுத் தீர்ந்ததுதான். சரி, அகராதிக்குள் போகலாம். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்ட இந்தத் 'தமிழ்-தமிழ் அகரமுதலி''யில் 64,048 சொற்கள் இடம்பெற்றுள்ளன. எழுத்து வருக்க அடிப்படையிலும் சொல்தொகை தரப்பட்டுள்ளது. 'க' எழுத்து வருக்கத்தில் மட்டும் 10,749 சொற்கள். சொற்களின் அகரவரிசையில் நீதிபதி கு.கதிரைவேற்பிள்ளை உருவாக்கிய முறையான 'இரண்டாம் எழுத்தில் மெய் முன்னாக உயிர்மெய் பின்னாக வரும் முறைமையே' தழுவப்பட்டுள்ளது. 1732இல் வீரமாமுனிவர் என்றழைக்கப்பெற்ற பெஸ்கி பாதிரியார் தொகுத்து முறைப்படுத்திய சதுரகராதி(முழுவதுமாக அச்சில் வந்தது 1824இல்தான்) முதல் 19ஆம் நூற்றாண்டில் வந்த அகராதிகள் எல்லாம் உயிர்மெய்யை முதலில் கொண்டு மெய்யைக் கடைசியில் அமைத்து வந்தன என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் இந்த அகராதியில், இரண்டாம் எழுத்து மட்டுமல்லாமல் அதற்குப்பின் தொடரும் எழுத்துகளிலும் மூன்று, நான்கு, ஐந்தாம் எழுத்துவரையிலுங்கூட அகரவரிசைமுறையில் சொற்கள் அடுக்கப்பெற்றுள்ளன. அகரவரிசை தொல்காப்பியர் காலத்திலேயே இருந்தது என்பதற்கு 'எழுத்தெனப் படுப அகரமுதல னகர இறுவாய் முப்பஃது என்ப" என்ற நூற்பா சான்று. அகராதிக்கு அடிப்படையான அகரவரிசைப்படுத்தல் என்னும் முறைமையை முதன்முதலாகப் பயன்படுத்தியவர் அப்பரே. தான் இயற்றிய 'சித்தத்தொகைத் திருக்குறுந்தொகை'யில்[தேவாரம் 5: பதிகம் 211] முதன்முதலாக அப்பர் - அகரவரிசைப்படிப் பாடினார். அடுத்து, சிதம்பரம் இரேவணசித்தர் அகராதி என்ற சொல்லை இன்றைய நிலையில் பயன்படுத்தி 1594இல் தாம் இயற்றிய நிகண்டுக்கு 'அகராதி நிகண்டு' என்ற பெயர் சூட்டினார். சொற்பொருள் உணர்த்தும் நூலுக்கு முதன்முதலில் அகராதி என்ற பெயர் தந்தவர் வீரமாமுனிவர் என்றழைக்கப்பெற்ற பெஸ்கி பாதிரியாரே ஆவார். *** "தமிழர்கள், சரியான பொருளைப் புரிந்து கொள்ளாமல் மனம் போன போக்கில் பயன்படுத்திவரும் வடமொழிச் சொற்கள் அனைத்தையும் இனம்பிரித்து உரிய பொருளைத் தந்திருக்கிறார் மு.சண்முகம் பிள்ளை" என்று தமிழ்மாமணி மு. இறைவிழியனார் மொழிந்ததற்குச் சான்றுகள் மிகப்பல. ஆனால் இட அளவு மிகாமல், அத்தகைய சொல் மயக்கங்களில் ஒருசிலவற்றை மட்டும் பார்ப்போம். ஐரோப்பிய மொழிகளில் சொல்லப்படும் 'நண்பர்களைப்போல் நடிப்பவர்கள்'/'False Friends'( The English word 'sensible' and the French word 'sensible' are false friends)-கிட்டத்தட்ட இவைபோன்றவையே. மனிதர்களில் மட்டுமல்லாமல், மனிதர்களால் உருவாக்கப்படும் சொற்களில்கூட இந்த நிலை. *** 'ஆவலாதி' - நண்பர் ஒருவர் தன் நண்பரைப்பற்றி, "நூற்றுக் கணக்கில் நூல்கள் வெளியிட்டு விளம்பரம் தேடிக்கொள்வதில் ஆவலாதியாக அவர் இருக்கிறார்!" என்றார். அவர், 'ஆவலாதி'' என்ற சொல்லை 'ஆசைமிகுந்து'(desirous of) என்ற பொருளில் கையாளுகிறார் என்பது தெரிகிறது. 'ஆவலாதி' என்பதற்கு, "குறைகூறுகை; அவதூறு" என்று பொருள். 'ஆவலாதிக்காரன்' என்பதற்குப் "போக்கிரி; குறைகூறுவோன்; முறையிடுவோன்" என்று பொருள். 'ஆர்வலர்' என்பதில் உள்ள 'ர்' போனால் 'காதலர்/கணவர்' என்றாகிவிடும். ஆவலி எனப்படும் ஆவளி என்றால் வரிசை. தீப ஆவளி = ஒளிவிளக்கு வரிசை. ஊடகங்களில் தீபாவளியன்று - 'தீபஒளி' தீபாவளி ஆயிற்று என்றார்கள். அப்படி, இருமொழிகளிலும் ஆகாது. 'தீப ஆவளி' என்பது தமிழர்களின், வியாபாரிகளின் 'பட்டாசுக் கலாச்சாரம்' வருமுன் இருந்த நல்ல நிலை. 'தனி ஆவர்த்தனம்' என்று இசைக் கச்சேரிகளில் சொல்லலாம். வாழ்க்கையில் சொல்லக் கூடாது. "அவர் எங்களோடெல்லாம் சேர மாட்டார்; தனி ஆவர்த்தனம்தான்!" என்றால் தவறான பொருள் வரும். ஆவர்த்தனம் = மறுமணம். 'ஆவர்த்தித்தல்' என்றால் மறுமணம் செய்து கொள்ளுதல். 'ஆலய விஞ்ஞானம்' என்றால் "சாகும் வரை நிற்கும் உணர்ச்சி " என்று பொருள். யானைகள் தங்கும் கூடத்துக்குப் பெயரும் 'ஆலயம்'தான். 'உதாசீனம்' என்பதற்கு "விருப்பு வெறுப்பில்லா நடுநிலை" என்று பொருள். 'உதாசீனன்' என்பவன், "விருப்பு வெறுப்பின்றிப் பொதுமையாய் இருப்பவன்; இல்லறக் கடனை முடித்து உவர்ப்புப் பிறந்த நிலையுடையவன்" ஆவான். 'உதாசனித்தல்' = இகழ்தல்; நிந்தித்தல். உதாத்தன்=வள்ளல். 'அகராதிபடித்தவன்' என்ற சொல், 'Philistine' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஏற்ற மொழியாக்கம். 'அகராதிபுடிச்சவன்' என்பார்கள் நாட்டுப்புறத்தார். 'பரபாகம்' என்பது பிறர் சமைத்த உணவு. 'நிறக்கூட்டு'ம் ஆகும். 'தீர்க்கவைரம்' = நெடுநாளைய பகைமை. 'தீர்க்கசுமங்கிலி' =சுமங்கலியாய் நெடுங்காலம் வாழ்பவள்;தேவரடியாள். 'துக்கர்' - காசநோயாளிகள். துக்கி - துயரமுடையோன்(ள்). 'அஸ்திரம்' என்ற சொல்லைப் பொதிகைத் தொலைக்காட்சியில் பலமுறை பயன்படுத்திப் பேசினார் மருத்துவர் ஒருவர். அதுவும், மனநலம் தொடர்பாக... அதற்குப் பொருள் 'அம்பு' மட்டுமல்ல; 'நிலையற்றது' 'கைவிடும் படை' 'கழுதை' 'குதிரை' 'கடுக்காய்ப்பூ' 'மலை' ஆகியவையும் பொருள்களே. இதற்கு இன்னொரு வடசொல்லும் சான்று. 'அத்திரசத்திரம்' = கைவிடும் படையும் கைவிடாப்படையும்; அம்பும் வாளும். பிரான்சு அதிபர் தெ கால்(De Gaulle) சொன்னார்: "கருத்தைத் தெளிவாகச் சொல்ல வேண்டிய பணியிலிருப்பவர்கள், ஒரு சொல்லைச் சொல்லும்போது அதற்கு வேறு பொருள்களும் இருக்கின்றனவா என்று யோசித்துப் பேசுங்கள்; கூடுமானவரை ஒரு சொல்லுக்கு ஒரு பொருள் மட்டுமே உள்ளவாறு பார்த்துக்கொண்டு அறிக்கை(notice - பிரெஞ்சில் இது பெண்பாற்சொல்) கொடுங்கள்!"(3) அபிதா=ஆபத்தில் முறையிட்டுக் கூறும்/கூவும் சொல். அபி= அதட்டல், கண்டித்தல், கேள்வி, ஐயம், அதிகம் முதலிய பொருள்களை உணர்த்தும் வடமொழி முன்னொட்டு(Sanskrit prefix) அபிமானபுத்திரன்= வளர்ப்பு மகன்; வைப்பாட்டி மகன். 'beloved son' என்பதை மனத்தில் வைத்துக்கொண்டு "அவன்தான் என் அபிமான புத்திரன்!" என்று சொல்பவர்களையும் "அவ'தான் என் pet"(விலங்குகளுக்குத்தான் அது பொருந்தும்) என்று மெச்சுபவர்களையும் சந்திக்கிறோம். 'Teacher's pet' என்று பேச்சுவழக்கில் சொல்கிறார்கள் - 'apple of your eye' 'blue-eyed boy/girl என்பது போல... ஆனால் அப்படி எழுதக்கூடாதாம். 'அத்தங்கார்' அத்தை மகளை மட்டுமே குறிக்கும். 'அத்திம்பேர்' அத்தை கணவனைத்தான் முதலாவதாகக் குறிக்கும். அடுத்ததாகத்தான் தமக்கை கணவனைக் குறிக்கும். 'அதிட்டம்'(அதிர்ஷ்டம்) நற்பேற்றை மட்டுமல்லாமல் - பார்க்கப்படாதது, மிளகு முதலிய பொருள்களையும் குறிக்கும். 'எதாசக்தி' - தன் வலிமைக்குத் தக்கபடி, கூடியவரை, இயன்றவரை என்பனவற்றை மட்டுமே குறிக்கும். 'எதிருத்தரம்' மறுமொழியை மட்டுமே குறிக்கும். 'யதார்த்தவாதி''=உண்மையுரைப்போன். 'எதேச்சையா இந்தப் பக்கம் வந்தேன்!' என்பார்கள். அது 'யதேச்சை.' தற்செயல், தற்செயலாக என்ற பொருள் அதற்கில்லை. மிகுதியாக, விருப்பத்தின்படி என்பவையே பொருள். "உருளைக்கிழங்குக் கறி கொஞ்சம் யதேச்சையா(அதிகமாக) போடுங்க!' 'நீங்க அழைக்காட்டியும் நானே யதேச்சையாய்(விரும்பி) வந்தேன்" என்றுதான் சொல்ல வேண்டும். 'கட்கம்' - கக்கம்/அக்குளை மட்டுமல்லாமல் காண்டாமிருகத்தின் கொம்பையும் குறிக்கும். 'பட்சி,' பறவையை மட்டும் அல்லாமல் குதிரை யையும் குறிக்கும். 'துமிலன்' என்றால் பேராரவாரம் செய்பவன் என்று பொருள். 'செளக்கியம்' என்பதற்கு ஆரோக்கியம் மட்டுமல்லாமல் மலங்கழித்தல் என்றும் பொருள். சமஸ்கிருத அறிஞர் ஒருவர், "செளக்கியமா என்று கேட்காதே! க்ஷேமமா என்று கேள்!" என்று ஆய்வாளர் ஒருவரிடம் கூறியதை பிரெஞ்சு இந்தியவியல் ஆய்வு நிறுவனத்தில் கேட்டிருக்கிறேன். "நலமா?" என்ற பொருள் "செளகரியமா?" என்பதற்குத்தான் பொருந்தும். 'செளந்தரியம்' அழகு. 'செளந்தரீகம்'தான் பேரழகு. 'செளந்தரி' என்பது உமையம்மை(பார்வதி)யைக் குறிக்கும். (செளந்தரன்=சிவன்) 'சந்தியாராகம்' = செவ்வானம். சந்தியா = மல்லிகை. நிஷா = இரவு. உஷா, உஷை, உஷத்காலம் = வைகறை; சூரியன் உதிப்பதற்கு முன் ஐந்து நாழிகைக் காலம் நிகப்பிரபா = இருட்டு. பாமரன் = அறிவிலாதவன்; இழிந்தவன். பாமினி = பெண். பிரபா = ஒளி; தண்ணீர்ப்பந்தல்; திருவாசி; துர்க்கை. பிதாமகன் = தந்தையைப் பெற்ற பாட்டன். பிதாமகி = தந்தையைப் பெற்ற பாட்டி பிரபிதாமகன் = கொள்ளுப்பாட்டன் பிரபிதாமகி = கொள்ளுப்பாட்டி புத்தி = அறிவு; இயற்கையுணர்வு; ஆராய்ந்து செய்யும் கரணம்; போதனை; வழிவகை; கழுவாய்; உரிமை; கோளின் நடை. பூர்வம் = ஆதி; பழைமை; முதன்மை; முற்காலம்; கிழக்கு; சமண ஆகமம் மூன்றனுள் ஒன்று; முன்னிட்டு. பூர்வஞானம் என்றால், பிறப்புத் தோறும் வரும் ஒரு துறை அறிவு(இசைஞானம் போல) என்று நினைத்துக்கொண்டு பலர் பேசுகிறார்கள். உண்மையில் அது முற்பிறப்புணர்ச்சியை மட்டுமே குறிக்கும். 'புத்திபூர்வம்' என்றால் 'அறிவை முதன்மையாகக் கொண்டு' என்றும், 'பிரத்தியட்ச பிரமாணம்' என்றால் அளவைகள் ஆறினுள் காட்சியளவையை ஆதாரமாகக் கொண்டு' என்றும் பொருள். பழங்கால வழக்காடு முறையிலும் தீர்ப்புக் கூறும் முறையிலும் இந்த அளவைகளே சாட்சி (evidence)அடிப்படைகளாகக் கொள்ளப்பெற்றன. மலையாளத்தில் இப்பொழுதும் உள்ள 'பிராந்தன்' என்ற சொல், தமிழில் முன்பு வழங்கியது. 'அறிவு மயங்கியவன்' என்று பொருள். 'பிராந்தகன்' 'பிராந்து' என்றும்கூட, அறிவு மயங்கியவனைக் குறித்துச் சொன்னார்கள். அதே பொழுது, 'பிராந்திஞானம்' என்றால் திரிபுணர்ச்சி/ஒன்றை மற்றொன்றாக உணரும் அறிவு என்ற பொருள் வழங்கியிருக்கிறது. யவனிகா(யெளவனிகை) = 16 வயது தொடங்கி 50 வயதுக்குட்பட்டவள். சசி = முயற்கறை உடைய சந்திரன்; இந்திராணி; கற்பூரம்; இந்துப்பு; கடல்; மழை. 'சந்தோஷம்' என்பதற்கு இனாம் என்ற பொருளும் உண்டு. 'தாரதம்மியம்' என்பதற்கு ஏற்றத்தாழ்வு என்ற பொருள் மட்டுமே. சிரமம் = களைப்பு; உழைப்பு; படைக்கலப் பயிற்சி. அபிராமி = அழகுள்ளவள்; பார்வதி. 'ரமணன்' = கணவன்; தலைவன்;மன்மதன். 'ரமா' =திருமகள்;இன்பம் தருபவள். சூனியம்(சூன்யம்) = இன்மை; பூச்சியம்; வறிதாயிருக்கை; பயனற்றது; மாயை; இறப்பை விளைக்கச் செய்யும் கலை; சூனியப்பொருள்; தூய்மையின்மை. 'சபாஷ்' என்பதை வியப்பிடைச் சொல் என்று கூறுகிறார். 'வந்தனம்' என்பதற்கு வணக்கம் என்ற பொருள் மட்டுமல்ல; முகம் என்றும் பொருள். நன்றி கூறும் மரியாதைச் சொல்லுமாகும். பணிவு என்றும் பொருள். 'பிரமாதம்' என்ற சொல் பலராலும் தவறாகப் பயன்படுத்தப்படுவது. பிரமாதம் என்றால் தவறு/அபாயம்/அளவில்மிக்கது/விழிப்பின்மை என்று பொருள். 'அபிமானம்' போன்றே 'பிரமாத'மும் பலரால் இன்றளவும் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அகராதியில் இயற்கை மருத்துவ நுட்பம் சார்ந்த வடசொற்கள் பல உள்ளன.அவற்றுள் ஒன்று: அபானம். 'அபானம்' என்ற சொல் முதலில் கடுக்காய் மரத்தைக் குறித்துப் பிறகு மலவாயைக் குறிக்கிறது. பின்னதன் தொடர்பான சிக்கலுக்கு அருமையான இயற்கை மூலிகை கடுக்காய். கடுக்காயை நேர்நிறுத்தித் தட்டி உடைத்து, கொட்டை நீக்கி, தோலை மட்டும் ஒரு குவளை தூயநீரில் இரவு ஊறவைத்து காலை 'வெள்ளென' எழுபவர்கள், வெறும் வயிற்றில் அருந்தி வந்தால், இந்தச் சொல்லின் அருமை தெரியும். குடல் விளக்கமும் ஆகும். இறுதியாக, இந்த அகராதிக்கேயுரிய தனித்தன்மை வாய்ந்த சொற்றொகுப்புத் திறனுக்குச் சான்றுகள் இரண்டு. 'escapist'(adjective&noun) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஏற்ற நல்ல தமிழ்ச்சொல் 'நுழுந்தி' என்பது. 'escapist'ஐப் பேச்சுவழக்கில் கிண்டலாக 'ostrich' என்று சொல்வார்கள். தமிழ்நாட்டுச் சிற்றூர்களில் திருவிழாக் கடமையிலிருந்து நழுவுபவனைத் 'தீக்கோழி'' என்பார்கள். முனைவர் இ. முத்தையாவின் ஆய்வுநூலொன்றின்('தமிழ்நாவல்களில் மொழிப் பயன்பாடு') அட்டைப்படத்தில் தீக்கோழியொன்று தன் தலையைப் புத்தகத்துக்குள் புதைத்துக் கொண்டிருக்கும். அந்தக் குறிப்பேற்றத்தை(suggestion) இன்றும் நினைத்தால் சிரிப்பு வரும். ஆய்வு நூலுக்கே அத்துணைப் பொருள்செறிந்த அட்டைப்படம் போட்ட காலம் அது. 'பலான' என்ற சொல். இதற்கு 'இன்னதென்று அறியப்பட்ட' என்று பொருள். எவ்வளவு 'அபத்தமாக' (அபத்தம்=வழு;பொய்;மோசம்) இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்! *** மின்னஞ்சல் பார்க்கும் பொழுது, நாம் அதை எவ்வளவு பயன்படுத்தியிருக்கிறோம் என்று குறிப்பிட்டுக் காட்டியிருப்பார்கள். அதுபோலப் பார்த்தால் இந்த அகராதியில் உள்ள இத்தகைய சொற்களில் நான் பயன்படுத்தியுள்ள சொற்களின் அளவு ஒரு விழுக்காடு(1%) வந்திருக்குமா, தெரியவில்லை... வடமொழிச் சொற்களின் பொருளறியாமல் விருப்பத்திற்கேற்பப் பயன்படுத்துவது தென்மொழி வடமொழி இரண்டுக்குமே கேடு பயக்கும் என்று அறிஞர் த.நா.குமாரசுவாமி, தொடக்க காலச் சென்னைத் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் சொல்லி வருந்தினார். அந்தக் கருத்து, என் உள்ளத்திலேயே நின்றிருந்தது. அதற்கு எளிய முறையில் சான்றுகள் தரும் இந்தத் தமிழகராதியை எனக்கு அறிமுகம் செய்துவைத்த தமிழ்மாமணி மு. இறைவிழியனார் மறைந்து விட்டாலும் மனத்தில் நிற்கிறார். **** அடிக்குறிப்புகள்: *நற்றமிழ் - திங்களிதழ் நிறுவனர்: தமிழ்மாமணி புலவர் மு. இறைவிழியனார். ஆசிரியர்: திருவாட்டி அரியநாயகி இறைவிழியனார். முகவரி: 43, அங்காடித் தெரு, நெல்லித்தோப்பு, புதுச்சேரி - 605 005. (1) உயிர் எழுத்து 12; உயிர்மெய் எழுத்து 93. ஆக 105 எழுத்துகளே மொழிக்கு(தமிழ்ச் சொல்லுக்கு) முதலில் வருபவை. (2) திண்ணை.காம் வலையேட்டை வாசிப்போர் பலநாட்டினர் பலதிறப்பட்டவர்கள் என்பதால், வடமொழிக்கும் தமிழுக்குமுள்ள பொதுவான எழுத்துகளையும் மொழிமுதல்வாரா எழுத்துகளையும் இந்தக் கட்டுரையில் தேவையான இடங்களில் பயன்படுத்தியுள்ளேன். (3) பிரஞ்சு மொழி வெளியீடுகளில் தேவையற்றுப் பயன்படுத்தப்படும் ஒவ்வோர் ஆங்கிலச் சொல்லுக்கும் இரண்டு பிராங்க் தண்டம் விதிக்கும் சட்டத்துக்குப் பிரான்ஸ் அதிபர் தெ கால் வழிசெய்ததாகச் செய்தியொன்று உண்டு. **** நன்றி: திண்ணை.காம்
தமிழில் சிறுகதை - தொடக்ககால இலக்கணங்கள் -தேவமைந்தன் இன்றைக்குச் சிறுகதை தமிழுலகில் எத்தனையோ தொலைவு பயணம் செய்து வடிவமிழந்து உருவமிழந்து அன்னியமாகி சிறுத்து பயிற்சிப் பட்டறைகளில் சான்றிதழ் மட்டுமே பெறும் அளவு 'மவுசு' குறைந்து தனக்கான அடையாளம் தேடி அலைகிறது. தமிழருக்குக் கரும்பு போலவும்(சீனா) மிளகாய் போலவும்(சிலி) மணிலாப் பயறு போலவும்(மணிலா) மெய்யாகவே அன்னியமான சிறுகதையின் உரைநடை வடிவம் தமிழ் இலக்கிய உலகில் புகுந்து எப்படியெல்லாம் இலக்கணப்படுத்தப்பட்டது என்பதைப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம். எந்த அளவு முன்னோக்கித் தொலைநோக்க முடியுமோ அதே அளவு சரியாகப் பின்னோக்கித் தொலைநோக்கவும் சிங்கத்துக்கு மட்டுமே முடியுமாம். இதற்கு 'அரிமா நோக்கு' என்று பெயரிட்டு, தமிழ் உரையாசிரியர்கள் தம் உத்திகளுள் இதைத் தலையாய உத்தியாக ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்பே கொண்டார்கள். இந்த உத்தியின் ஒரு பாதியை இந்தக் கட்டுரையில் பயன்படுத்துகிறேன். தமிழுக்குப் புதுவரவாக இருந்த சிறுகதைக் குழந்தை, யார் யார் மடிகளிலெல்லாம் தவழ்ந்து ஆளானது, மறக்கப்பட்டுவிட்ட/மறக்கடிக்கப்பட்ட அவர்கள் யார் என்பதைக் கூடுமான அளவு ஒழுங்குடன் வெளிப்படுத்துவதும் இதன் அடுத்த நோக்கம். காவியங்களில் சிறுகதைகள் - டாக்டர் மா.இராசமாணிக்கனார் நோக்கு: நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில், கவுந்தியடிகள் மாதரிக்குக் கூறிய அடைக்கலச் சிறப்புப் பற்றிய வணிகமாதின் கதை, செய்யுளில் அமைந்த சிறுகதை. மதுராபதி தெய்வம் கண்ணகிக்குக் கூறிய பொற்கைப் பாண்டியன் கதையும் சிறுகதையே ஆகும். இங்ஙனமே மணிமேகலை என்னும் காவியத்தில் கூறப்பட்டுள்ள சுதமதியின் வரலாறு, ஆபுத்திரன் வரலாறு ஆகியவற்றில் சிறுகதை நிகழ்ச்சிகள் அடங்கியுள்ளன. இவற்றை விரித்து உரைநடையில் எழுதினால் அவை இலக்கிய நயமுள்ள சிறுகதைகளாக உருவெடுக்கும். இவ்வாறே கொங்குவேள் பாடிய பெருங்கதையிலும் சீவக சிந்தாமணியிலும் சிறுகதைகள் பல செருகப் பெற்றுள்ளன. ஆயினும் இவை அனைத்தும் செய்யுள் வடிவில் அமைந்துள்ளன.(1) தொடக்க காலத்தில் சிறுகதைகள் - டாக்டர் மா.இராசமாணிக்கனார் நோக்கு: இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாளிதழ்களும், கிழமை திங்கள் இதழ்களும் பெருகத் தொடங்கிய பொழுது, மேனாட்டுச் சிறுகதைகளைப் பின்பற்றி நம்மவர் தமிழில் சிறுகதைகளை எழுதலாயினர். பண்டித நடேச சாஸ்திரியார் (1859-1906) 'ஈசாப் கதைகள்,' 'தக்காணத்து பூர்வ கதைகள்,' 'தக்காணத்து மத்திய காலக் கதைகள்' என்று மூன்று கதை நூல்களை எழுதினார். இந்த நூற்றாண்டில் பேராசிரியர் செல்வக்கேசவராய முதலியார் எழுதிய 'அபிநவ கதைகள்' காலத்தால் முற்பட்டவை என்றும், அறிஞர் வ.வே.சு. ஐயர் அவர்கள் பாலபாரதியில் எழுதிய கதைகள் சிறுகதைகளுக்கு உயிரும் ஒளியும் கொடுத்தன என்றும் புதுமைப்பித்தன் எழுதியுள்ளார். கவியரசர் பாரதியாரும், இராமாநுசலு நாயடு என்பவரும் சிறுகதைகள் எழுதினர். 1930க்குப் பின்பு கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள். எஸ்.வி.வி., கொனஷ்டை, ஆகியோர் நகைச்சுவை பொருந்திய சிறுகதைகளை வரைந்து பெயர் பெற்றனர். திருவாளர்கள் ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா., பி.எஸ்.ராமையா, சிதம்பரம் சுப்பிரமணியன், புதுமைப்பித்தன் ஆகியோரும் சுவை மிகுந்த சிறுகதைகளை எழுதலாயினர், மௌனி என்பவர் எழுதியுள்ள 'நட்சத்திரக் குழந்தைகள்,''சிவசைவம்,' 'எங்கிருந்தோ வந்தான்' போன்ற கதைகள் உயர்ந்தவை....வை.மு.கோதைநாயகி அம்மையார் எழுதியுள்ள சிறுகதைகள் - 'மூன்று வைரங்கள்,' 'கதம்ப மாலை,' 'பட்சமாலிகா,' 'சுடர் விளக்கு,' 'பெண் தர்மம்' என்னும் ஐந்து [தொகுப்பு] நூல்களாக வெளிவந்துள்ளன. வாழ்க்கை நிகழ்ச்சிகளுள் ஒன்றை மட்டும் எடுத்து, அதற்கு முதல்-இடை-கடை என்னும் மூன்று உறுப்புகளை அமைத்து, விளங்க வரைவது சிறுகதை அல்லது குறுங்கதை எனலாம். சுருங்கக் கூறின், பெருங்கதை வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் நிலைக் கண்ணாடி எனலாம். புதுமைப்பித்தனுடைய சிறுகதைகளில் பல சிறந்த உண்மைகள் காணப்படுகின்றன. அவற்றுள் இரண்டனைக் கீழே காண்க: (அ) "பெரிய மீன் சின்ன மீனைத் தின்னலாம்; ஆனால் சின்ன மீன் அதற்கும் சின்ன மீனைத் தின்றால், பெரிய மீன், 'குற்றம் செய்கின்றாய்' என்று தண்டிக்க வருகின்றது. இதுதான் சமூகம்." (ஆ) "உணர்ச்சி, தேவனையும் மிருகமாக்கி விடுகிறது."(2) விடுதலைப் போராட்டப் பின்னணி - கல்கியின் சிறுகதைச் சாதனை - கா.திரவியம் நோக்கு: கல்கியின் சிறுகதைகள் தேசியத்துக்கு ஆற்றிய சிறப்பான தொண்டு, அக்கதைகள் பெரும்பாலானவற்றில், நாட்டுப்பற்றும் நாட்டுக்கு ஆக்கம் தேடிய நல்ல கருத்துக்களும் கதையில் இழையோடியதாகும். சிறை சென்ற தேசபக்தனைக் கதாநாயகனாகவும், சமூகசேவை ஆற்றும் பெண்ணைக் கதாநாயகியாகவும் கொண்டு பின்னப்பட்டிருந்த இக்கதைகள், தியாகிகளையும் ஊழியர்களையும் நம் கண்முன் நிறுத்தி, அவர்கள் தொண்டினாலும் துன்பங்களினாலும் ஊழியத்தினாலும் உள்ளக் கிளர்ச்சிகளாலும் படிப்பவர்களை ஆட்கொண்டன. அரசின் அடக்குமுறைக்கும், பொதுவாகப் பலரின் அலட்சியத்துக்கும் ஆளாகியிருந்த இந்த வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் தம் கதைகள் மூலம் சமூகத்தின் ஏற்பையும் பாராட்டுதலையும் பெற்றுத் தந்தது, கல்கியின் சிறந்த சாதனைகளில் ஒன்று.(3) விடுதலைப் போராட்டப் பின்னணி - அகிலனின் சிறுகதைச் சாதனை - கா.திரவியம் நோக்கு: விடுதலைப் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட கதைகளில், போராட்ட உணர்ச்சி பொங்கி வழிகிறது அகிலனின் 'பொங்குமாங்கடல்' என்ற கதையில். சிதம்பரம் பிள்ளையைச் சிறையிலே தள்ளி செக்கிழுக்க வைத்த ஆங்கிலேய அதிகாரிகளைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்த புரட்சிவாதிகளை மையமாகக் கொண்டு நெய்யப்பட்ட நெஞ்சை அள்ளும் கதை இது.(4) முதன்முதலில் தமிழில் சிறுகதை குறித்து ஆய்வுக் கண்ணோட்டத்துடன் சிந்தித்தெழுதிய டாக்டர் அ. சிதம்பரநாதன் கருத்துகள்: "தமிழில் சிறுகதையைப் பற்றி ஆய்வுக் கண்ணோட்டத்தோடு சிந்தித்து, தரம் அறிந்து வகைப்படுத்தித் திறனாய்வு செய்த முதல் தமிழ்ப் பேரறிஞர் இவரே" என்று, "தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்"(ஏப்ரல் 1977) என்ற அரிய சிறு அளவிலான புத்தகத்தைப் பதிப்பித்த பேரா.புளோரம்மாள், ம.செ.இரபிசிங் கூறியுள்ளனர்.(5) 22+vi பக்கங்கள்; ரூபா ஒன்று மட்டுமே விலையுள்ளது இந்நூல். இது [இக்கட்டுரை எழுதும்] இப்பொழுது கிடைப்பதில்லை. மூன்றாவது அகில இந்திய எழுத்தாளர் மாநாட்டில் அ.சிதம்பரநாதன் ஆற்றிய பொழிவின் சுருக்கமும், இலக்கிய இதழ்களில் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன. இதிலுள்ள சில முதன்மைக் கருத்துகளை - கூடுமானவரை சிதம்பரநாதனின் நடையிலேயே தருகிறேன். அந்தப் பகுதிகளில் மட்டும் காலம் வேறுபட்டிருக்கும். எட்கர் ஆலன் போ, ஹென்றி ஹட்சன், பெயின்(Barry Paine) ஆகியோர் கூறும் சிறுகதை இலக்கணம்: 1. சிறுகதை என்பது உட்கார்ந்து ஒரே மூச்சிலேயே படித்துவிடக் கூடியதாக இருத்தல் வேண்டும். 2. 2000 அல்லது 3000 சொற்களுக்குமேல் போவதாக இருக்கக்கூடாது. 3. அரை மணி அல்லது ஒரு மணிக்குமேல் படிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளக் கூடியதல்லாததாக இருக்கவேண்டும். அளவு ஒன்றே சிறுகதைக்கு இலக்கணம் அல்லாவிட்டாலும், அளவும் சிறுகதையின் இலக்கணங்களுள் ஒன்றாகும். கவிஞர் ரவீந்தரநாத் தாகூர் எழுதிய 'குமுதினி' என்னும் கதை 300 பக்கமாயினும் அது சிறுகதைதான் என்று வாதிப்பார் உண்டு. ஆங்கிலத்திலும் மெரிடித் என்பார் எழுதிய 'குளோவின் கதை'(Tale of Chloe) என்பது சிறுகதைதானா அன்றா என்ற செய்தி பற்றி இன்னும் ஆராய்ச்சி நடந்துகொண்டு இருக்கிறது. சிறுகதை எழுத்தாளர்கள் சிக்கலான பெரிய செய்திகளைப் பொருளாக எடுத்துக்கொள்ளக் கூடாது.("They should not saddle themselves with a complicated plot." Paine P.38) ஆடுகின்ற பெண் ஒருத்தி தான் ஆடுகின்ற அரங்கத்தின் நீள அகலத்திற்கேற்ப தனது ஆட்டங்களைச் சுருக்கிக்கொள்ளுதல் போல, சிறுகதை ஆசிரியர்கள் தம்முடைய கதைப்பொருளைத் தேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். சிறுகதைகளில் ஒரே நோக்கமும் ஒரே விளைவுந்தான் எதிர்பார்க்கப்படுகின்றன.("Singleness of aim and singleness of effect are the two great canons by which we have to try the value of a short story - as a piece of art." Henry Hudson, Introduction To The Study Of Literature, P.445) நோக்கம் நிறைவேறும் வகையில் சிறுகதை அமைந்திருத்தல் போதுமானது. பல எழுத்தாளர்களுக்கு இது கைவரப்பெறாததால்தான் புதினங்களை[நாவல்களை] எழுதத் தலைப்படுகிறார்கள் என்று சொல்வது தவறாகமாட்டாது. சிறுகதை எழுதுகிறவர்கள், கதை பொய் என்ற உணர்ச்சி வாசகர்கள் இடத்தில் உண்டாகும்படி எழுதுவார்களேயானால், அக்கதையில் நன்மைகள் பல உண்டு என்றாலும் அவை முழுப்பயன் அளித்தல் இல்லை.("If a story once felt to be false, then all the virtues are of no avail") மெழுகுவர்த்தி பார்ப்பதற்கு அழகாகவும் தொடுவதற்கு இனியதாகவும் முகருவதற்கு மனமுடையதாகவும் இருந்தாலும் அது எரியவில்லை என்றால், எவ்வாறு தக்க பயன் விளைத்தல் இல்லையோ அவ்வாறே மெய்போன்றது என்ற உணர்ச்சியை எழுப்பாத சிறுகதை முழுப்பயன் தராது என்பது நம்பிக்கை. சிறுகதை எழுதுகிறவர்கள் நிகழ்ச்சிகளைப் படர்க்கையில் வைத்துத் தெரிவிக்கலாம்; கதைத் தலைவனோ கதைத் தலைவியோ தானே பேசுவதுபோல அமைக்கவும் செய்யலாம்; கடிதங்கள் மூலமோ, நாட்குறிப்புகள் மூலமோ, பிற பாத்திரங்கள் மூலமோ ஒன்றன்பின் ஒன்றாகச் செயல்கள் வெளிப்படுமாறு செய்யலாம். இந்த மூன்று வகைகளில் எதனை வேண்டுமானாலும் சிறுகதை ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பது மரபு. சிறுகதையில் உரையாடல் இருப்பது விரும்பத்தக்கது என்றாலும்.இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. சிலருடைய சிறுகதை உரையாடலே இல்லாமல் நிகழ்தல் கூடும்; சிலருடைய சிறுகதையிற் சிறிதளவு உரையாடல் இருத்தல் கூடும்; சிலருடைய சிறுகதையில் எல்லாம் உரையாடலாகவே அமைந்துவிடுதலும் உண்டு. சிறுகதையின் தொடக்க வாக்கியங்களைப் படித்த அளவில் கதையின் நோக்கம் இன்னது என்று வாசகருக்குப் புலப்பட்டுவிட வேண்டும்.("Initial sentences should bring out the aim."-W.H.Hudson) சிறுகதையின் முடிவு எவ்வாறிருக்க வேண்டும்? இன்பியல் முடிவினாலோ துன்பியல் முடிவினாலோ கலை அழகு பெற்றுவிடாது; கலையழகிற்கு ஏனைய பல காரணங்கள் உண்டு.("Happiness and unhappiness have nothing to do with art; the artistic ending is the right and inevitable ending." - Paine) அ.சிதம்பரநாதன் 'தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்'(1977)நூலில் சுட்டியுள்ள சிறுகதை ஆசிரியர்களும் அவர்கள் படைத்த சிறுகதைகளும்: 1921வரை வாழ்ந்த சுப்பிரமணிய பாரதியார்தான் சிறுகதை எழுத்தாளர்களுக்கு விடிவெள்ளியாய் இருந்தவர்.. அவர் இயற்றிய 'திண்டிம சாஸ்திரி,' 'சுவர்ண குமாரி' போன்றவற்றின் அடிப்படையில் பின்னர்ச் சிறுகதைகள் எழுந்துள்ளன. வேதநாயகம் பிள்ளை, வ.வே.சு.ஐயர், மறைமலையடிகள் போன்றவர்களும் சிறுகதை போன்ற சிலவற்றை முன்னர் எழுதியுள்ளார்கள்... சரியான சிறுகதை இலக்கியத்தின் தந்தையாகத் தமிழில் மதிக்கத்தக்கவர் 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி என்று கூறுவது பொருத்தமற்றதாகாது. அவருடைய சிறுகதைகளிற் சில நெடுங்கதைகளாக இருக்கின்றன..அவரோடு சமகாலத்திலே வேறு இரு பெரும் எழுத்தாளர்கள் தோன்றினர். கு.ப.இராசகோபாலனும் புதுமைப்பித்தன் என்ற சொ.விருத்தாசலமும் நம் சந்ததியாராலும் விரும்பிப் படிக்கத்தக்க அளவு சிறப்பும் ஆற்றலும் பெற்றிருந்த சிறுகதை ஆசிரியர்கள். அவர்கள் இருவரும் காலஞ் சென்றுவிட்டனர். புதுமைப்பித்தன், உலகச் சிறுகதைகள் பலவற்றை மொழிபெயர்த்துள்ளார்...அவர் மிக்க சுருக்கமாகவும், திட்பமாகவும் எழுதுதலில் வல்லவர்; வரிதோறும் தொனிப் பொருளோடு வரையும் பெற்றி படைத்தவர். கு.ப.இராசகோபாலன், உயிரோடு திகழ்வாரைப் போலப் பல பாத்திரங்களைத் தமது கதைகளில் கொடுத்துள்ளார். சாதாரணமாக நம்மால் ஒதுக்கிவிடப்படுகிற, நம் கண்ணுக்குத் தெரியாது போய்விடக் கூடிய வாழ்க்கை நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டு அவர் கதைகளை எழுப்பியுள்ளார். அவர் சொல்லாட்சி ஒரு தனிமதிப்புடையது. சில சொற்களில் அடங்கிக் கிடக்கும் பொருள் விரித்தால் அகன்று காட்டும். 'காணாமலே காதல்' 'புனர்ஜென்மம்' 'கனகாம்பரம்' முதலிய அவருடைய சிறுகதைத் தொகுதிகளாலன்றியும், 'இரட்டை மனிதன்' போன்ற மொழிபெயர்ப்பு நாவல்களாலும் அவர் புகழ் நிலவும் என்பது உறுதி. சமூக நோக்கில் ஜீவா* எழுதிய சிறுகதைகள், 'வேதாந்த கேசரி' 'பிரதிவாதி பயங்கரம்' முதலியவை. விந்தனின் 'பொன்னி' முதலிய சிறுகதைகள் சமூகப் பார்வையில் அமைந்தவை. கணையாழி எழுதிய 'நொண்டிக் குருவி' வெளியே ஜீவகாருண்யம் பேசி வீட்டில் அதைப் பின்பற்றாதவரை அம்பலப் படுத்தியது. "யார் குற்றவாளி?" என்ற கருத்தோடு எழுதப்படும் கதைகள் பல. இராசகோபாலாச்சாரியார் எழுதிய 'பட்டாசு,' அண்ணாதுரை எழுதிய 'குற்றவாளி யார்?,' புதுமைப்பித்தன் எழுதிய 'பொன்னகரம்,' ஜீவா எழுதிய 'கொலு பொம்மை' ஆகிய கதைகளில் வரும் பாத்திரங்கள் திருடியதாகவோ, விபசாரம் செய்ததாகவோ இருந்தன. அதற்குக் காரணம் அவ்வாறு அவர்களைச் செய்யும்படி பாழான ஏழ்மை நிலையில் விட்டுவிட்ட சமுதாயமே என்பது காட்டப்படுகிறது. புதுமெருகு பெற்ற பழங்கதைகள்: கு.ப.ரா. எழுதிய 'துரோகமா?,' கருணாநிதி எழுதிய 'ராயசம் வெங்கண்ணா' ஆகிய சிறுகதைகள், தஞ்சாவூர் - நாயக்கர்களிடமிருந்து மராத்தியர் கைக்குப் போகும்படி ஏற்பட்ட சரித்திரக் குறிப்பின் அடிப்படையில் எழுதப்பட்டவை. அவ்விரு ஆசிரியர்களும் நிகழ்ச்சியை வெவ்வேறு கோணத்திலிருந்து படம் பிடித்துக் காட்டியுள்ளார்கள். புஷ்பத்துறை சுப்பிரமணியன் அஜாத சத்ருவைப் 'பாடலி' என்ற கதையில் திரும்பவும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். 'கொனஷ்டை' எழுதிய கதைகளில் மகனுக்கு முதுமையைக் கொடுத்து இளமையைத் தான் பெற்றுக் கொண்ட யயாதி ஒரே நாளில் பட்ட அல்லல்கள், ஆயிரம் ஆண்டுகளில் படுவதோடு சமம் என்ற அரிய கருத்து காட்டப்பட்டிருக்கிறது. 'அகல்யை' என்ற புதுமைப்பித்தன் கதை புத்துருவமே பெற்று நிற்கிறது. கதையாசிரியர்களின் வாழ்க்கைநிலையை வைத்து எழுதப்பட்ட கதைகள்: சுண்டு எழுதிய 'சந்நியாசம்' என்ற சிறுகதை, தன்னால் காதலிக்கப்பட்ட பெண்ணொருத்தியைத் திரைப்பட முதலாளியொருவர் தன் ஆசை நாயகியாக ஆக்கிக்கொண்டுவிட்டபடியால் எவ்வாறு படத்திலாவது சந்நியாசியாகிவிட்டார் என்பதைக் காட்டுகிறது. விந்தன் தனக்கேயுரிய பாணியில், தமிழ்நாட்டில் தம் பெருமை அறியப்படாத கதாசிரியர் ஒருவர் வடநாடு சென்று அங்கிருந்துகொண்டு 'வக்ரநாத்ஜி' என்ற புனைபெயரில் கதைகளெழுதித் தமிழ்நாட்டில் புகழும் செல்வமும் பெற்றார் என்பதைச் சித்தரித்தார். ஆண்-பெண்களின் மனநிலைகளை நன்றாகக் கவனித்து உணர்ந்து எழுதிய சிறுகதை ஆசிரியர்கள் -அரு.இராமநாதன்('காதல்' இதழ்க் கதைகள்), டி.கே.சீனிவாசன்('துன்பக் கதை') ஆகியோர். பெண்களின் மனநிலையை நுட்பமாக அறிந்துணர்ந்து, தெளிந்த உணர்த்தலோடு எழுதியவர் லக்ஷ்மி(திரிபுரசுந்தரி). அவர் எழுதிய 'விசித்திரப் பெண்கள்,' 'முதல் வகுப்பு டிக்கெட்' ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஏழைத் தொழிலாளர்களின் மனநிலையை நன்கு உணர்ந்து எழுதியவர், தானும் தொழிலாளராய் இருந்து எழுத்தாளரான விந்தன். பெ.தூரன்,மு.வரதராசன், ராஜம் கிருஷ்ணன்('பிஞ்சு மனம்'), கி.வா.ஜகந்நாதன்('பவள மல்லிகை')ஆகியோரையும் இவருடன் குறிப்பிடலாம். கலைஞர் சிலருடைய முக்கிய விருப்பத்திற்குப் பாத்திரமாக இருப்பவர் கண்முன்னே இல்லாமல் மறைந்து விட்டால், அவருடைய கலைத்திறன் மங்கிவிடுகிறது என்பதை ஜீவாவின் 'பிடில் நாதப்பிரமம்', புஷ்பத்துறை சுப்பிரமணியத்தின் 'ஜீவ சிலை' என்ற சிறுகதைகள் வெளிப்படுத்தின. சினிமாப்பட முதலாளிகளும் டைரக்டர்களும் தரும் தொல்லைகளை ஜீவாவின் 'மிருநாளினி,' கல்கியின் 'சுண்டுவின் சந்நியாசம்' புலப்படுத்தின. சீர்திருத்த நோக்கில் படைக்கப்பட்ட சிறுகதைகள்: கல்கியின் 'விஷ மந்திரம்' தீண்டாமையைப் பொசுக்கிவிடும் வகையில் அமைந்தது. காசி நகரப் பண்டாக்களுக்கு இக்கதையை மொழி பெயர்த்துக் காட்டுதல் வேண்டும். ஏ.எஸ்.பி. ஐயர் எழுதிய 'வான் மலர்' என்னும் கதை, விதவை மறுமணத்தைப் பற்றியது. இது தொடர்பாக, இதைவிட மிகச் சிறந்தது புதுமைப்பித்தனுடைய 'வழி' என்ற சிறுகதை. சுத்தானந்த பாரதியாரின் 'கலிமாவின் கதை' முஸ்லிம் பக்கிரி ஒருவனின் மகள் இந்துமதம் சார்ந்தவன் ஒருவனை மணந்துகொண்டதை விவரித்தது. அண்ணாத்துரையின் 'பேரன் பெங்களூரில்' என்ற சிறுகதை, பிராமண விதவை ஒருத்தி முதலியார் குலத்து ஆசிரியரை மணந்து, ஒரு சூழ்ச்சியால், தந்தையின் ஆசியைப் பெற விழைவதுபோலக் காட்டுகிறது. இலக்கிய மணம் வீசும் சிறுகதைகள்: பொதுமக்கள் மதிப்புக்கு அதிகமாக ஆசைப்படாமல், தம்மை அறிந்து வாசித்து மகிழக்கூடிய மக்களுக்கு ஒத்ததாக மு.வரதராசனின் நடை அமைந்துள்ளது. அவர் எழுதிய 'விடுதலையா?' முதலிய கதைகளைக் காணலாம். 'கட்டாயம் வேண்டும்' என்ற தலைப்பிலே, வேலையின்மையும் வறுமையும் இரந்தும் பெறாமையும் எவ்வாறு ஓர் இளைஞனைத் தற்கொலைக்குத் தூண்டிவிட்டன என்ற கருத்துள்ளது. ஜீவாவின் 'முல்லை,' மகுதூம் என்பவரின் 'திருமறையின் தீர்ப்பு' ஆகிய கதைகளில் நல்ல இலக்கிய மணம் வீசக் காண்கிறோம். சிறுகதைகளைப் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தலாமா? கருணாநிதி, அண்ணாத்துரை, ஏ.எஸ்.பி.ஐயர், சுத்தானந்த பாரதியார் போன்றவர்கள் சமூகக் குறைகளைப் போக்குவதன் பொருட்டு சிறுகதைகள் படைத்தார்கள். ஐரோப்பாவில் இந்நிலை நிலவியது குறித்து "தமது கதைகளைப் படிக்கும் வாசகர்களைப் பொறுத்து, விட்டுக் கொடுக்க வேண்டிய விஷயம் இது" என்று பேர்ரி பெயின் கூறினார். அண்ணாத்துரையின் "சிறுகதைகள்" என்ற தொகுப்பில் பிரச்சாரம் இடம் பெற்ற அளவு "கற்பனைச் சித்திரம்" என்ற புத்தகத்தில் இல்லை. தொகுப்பாக... தொகுப்பாக இறுதியில் டாக்டர் அ. சிதம்பரநாதன் குறிப்பிடும் எழுத்தாளர்களையும் அவர்களின் சிறுகதைகளையும் சுருக்கமாக இங்கே காணலாம். மாயாவியின் 'பனித்திரை' போன்ற கதைகள், மாணவர்களுக்கு ஏற்றதாக சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார் எழுதிய 'சிறுகதைத் திரள்,' கா.அப்பாத்துரையார் எழுதிய 'சமூகக் கதைகள்,' 'நாட்டுப்புறக் கதைகள்'...பி.என்.அப்புசாமி எழுதிய 'விஞ்ஞானக் கதைகள்,' பாலூர் கண்ணப்ப முதலியார் எழுதிய 'சிறுகதைக் களஞ்சியம்' முதலியவற்றை டாக்டர் அ. சிதம்பரநாதன் இங்கே குறிப்பிடுகிறார். பிறமொழிச் சிறுகதைகளை மொழிபெயர்ப்பதில் வல்லவர்களாக - புதுமைப்பித்தன், கு.ப.ரா., ஆர்.வீழிநாதன், சேனாதிபதி, டி.என்.குமாரசாமி, ஏ.கே.ஜெயராமன் முதலியோரைக் குறிப்பிடுகிறார். 1946இல் எஸ்.குருசாமி 'இந்தியச் சிறுகதைகள்' என்ற தலைப்பில் பல்வேறு இந்திய மொழிகளில் எழுதப்பட்ட சிறுகதைகளை மொழிபெயர்த்ததைச் சிறப்பாக நினைவுகூர்கிறார். இலங்கை எழுத்தாளர்களில் அரியரத்தினம், வைத்திலிங்கம், சம்பந்தம், இலங்கையர்கோன் ஆகியவர்களைப் பொதுவாகப் பாராட்டுகிறார். சிறுவர்க்கான கதைகள் எழுதுவதில் வல்லவர்களாக - அழ.வள்ளியப்பா, அம்புலிமாமா, தமிழ்வாணன், கண்ணன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார். சிறுகதை போன்ற உரைநடைச் சித்திரங்களால் வாசகர்கள் மனங்களில் இடம் பிடித்தவர்களாக - எஸ்.வி.வி., தூரன், சுகி, நாடோடி ஆகியோரைக் குறிப்பிடுகிறார். இதழ்களில் வந்த சிறந்த சிறுகதைகளாக டாக்டர் அ.சிதம்பரநாதன் தேர்பவை:- கணையாழி எழுதிய 'நொண்டிக்குருவி' ஜெகசிற்பியன் எழுதிய 'ஜலசமாதி' சோமு எழுதிய 'கடலும் கரையும்' ஞானாம்பாள் எழுதிய 'தம்பியும் தமையனும்' கே.ஆர்.கோபாலன் எழுதிய 'அன்னபூரணி' சோமாஸ் எழுதிய 'அவன் ஆண்மகன்' கெளசிகன் எழுதிய 'அடுத்த வீடு' எஸ்.டி.சீனிவாசன் எழுதிய 'கனிவு' பிற மொழிகளில் மொழிபெயர்த்தேயாக வேண்டிய சிறுகதைகளாக டாக்டர் அ.சிதம்பரநாதன் தேர்பவை:- கு.ப.ராஜகோபாலனின் 'காணாமலே காதல்' புதுமைப்பித்தனின் 'வழி ' கல்கியின் 'விஷ மந்திரம்' சுத்தானந்த பாரதியாரின் 'கடிகாரச் சங்கிலி ' அகிலனின் 'இதயச் சிறையில்' விந்தனின் 'முல்லைக்கொடியாள்' லட்சுமியின் 'வில் வண்டி' ஜீவாவின் 'வேதாந்த கேசரி' டி.கே.சீனிவாசனின் 'துன்பக் கதை' புஷ்பத்துறை சுப்பிரமணியத்தின் 'ஜீவ சிலை' கணையாழியின் 'நொண்டிக் குருவி' தன் காலத்தில் இதழ்களில் அடிக்கடி சிறுகதை எழுதுவோராக டாக்டர் அ.சிதம்பரநாதன் குறிப்பிடும் பிறர்:- கே.என்.சுப்பிரமணியன் ஜி.கெளசல்யா, இராதாமணாளன் தில்லை வில்லாளன் புஷ்பா மகாதேவன் வேங்கடலட்சுமி புரசு பாலகிருஷ்ணன் ஜி.எஸ்.பாலகிருஷ்ணன் 'தமிழில் சிறுகதைகள்' என்ற இந்தக் கட்டுரை, டாக்டர் அ.சிதம்பரநாதன் மறைந்து பத்தாண்டுகள் கழித்து 1977 ஏப்ரல் பதிப்பில் வெளியானபோதும், எழுதப்பட்டு வாசிக்கப்பட்ட காலம் - மூன்றாவது அகில இந்திய எழுத்தாளர் மாநாடு நிகழ்ந்த காலம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அதனால்தான் த.ஜெயகாந்தன் குறித்த குறிப்பு ஏதும் இக்கட்டுரையில் இல்லை. முடிவுரையில், "சிறுகதை இலக்கியம் எனப்படுவது தமிழில் அண்மையான காலத்தில்தான் எழுந்தது" என்று டாக்டர் அ.சிதம்பரநாதன் குறிப்பிட்டிருப்பதும் இதற்கு மற்றுமோர் ஆதாரம். *** 1967 ஜூலையில், 'தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற இதே தலைப்பிலானதும் - இதற்கு முற்றிலும் மாறானதோர் உணர்வெழுச்சி ஊட்டியதும் - - யாழ்ப்பாணப் பல்கலைக் கழக இணைத்தமிழ்ப் பேராசிரியராக அப்பொழுது பணியாற்றிய டாக்டர் கார்த்திகேசு சிவத்தம்பி எழுதியதுமான கட்டுரைத் தொகுதியைத் தமிழ்ப் புத்தகாலயம் திரு கண.முத்தையா அவர்கள் பதிப்பித்தார். இலங்கை 'தினகரன்' வாரப்பதிப்புக்கு எழுதப்பட்ட கட்டுரைகள் அவை. தினகரன் ஆசிரியர் திரு இ.சிவகுருநாதன், திரு செ.கணேசலிங்கன், திருமதி ரூபவதி ஆகிய மூவரால்தான் இந்நூல் வெளிவந்தது என்று கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள், வல்வெட்டித்துறை நடராஜ கோட்டத்திலிலிருந்து 22-7-1967 அன்று எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிறார். கலாநிதி க.கைலாசபதி அவர்கள் பிரதிவாசித்துதவிய பாங்கையும் குறிப்பிடுகிறார். 1980இல் வெளியான என் 'புல்வெளி' என்ற கவிதைத் தொகுதியை வாசித்துக் கலாநிதி க.கைலாசபதி எழுதிய விளக்கமான கடிதத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். தஞ்சையில் ஒருமுறை பிரகாஷ் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்குக்குப்பின்(அப்பொழுது சிவத்தம்பி அவர்களுக்கு ஐம்பது வயதுதானிருக்கும் என்று நினைவு) 'தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற கா.சிவத்தம்பியின் கட்டுரைத் தொகுப்பு, சிதம்பரநாதனின் புத்தகத்தை மட்டுமே அறிந்திருந்த ஆய்வு மாணவர்களுக்கும் தமிழ் முதுகலை மாணவர்களுக்கும் புத்துணர்ச்சியையும் எழுச்சியையும் ஊட்டியது என்று குறிப்பிட்டேன். சிரித்துக் கொண்டார். சிவத்தம்பியின் புத்தகத்தின் சிறப்புக்கு அதன் 160 பக்கங்களிலிருந்து ஒரு மிகச் சிறிய பகுதியை மட்டும் இங்கே முன்வைக்கிறேன்: "ஜெயகாந்தனது இலக்கிய எதிர்காலம் எப்படியிருப்பினும், அவர் சாதித்தவை அவருக்குச் சிறுகதை வரலாற்றில் முக்கிய இடம் அளிக்கின்றன. இலக்கியத் தரமான சிறுகதைகள், சனரஞ்சகமாக அமையமாட்டா என்ற கருத்துத் தவறானது என்பதனைச் சாதனையால் நிறுவியவர் ஜெயகாந்தன். சிறுகதையின் உருவ அமைதியில் ஜெயகாந்தன் கதைகள் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. பொருளமைதியில் முக்கியமான ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தின. அதுவே அவர் வெற்றிக்குக் காரணமாகவும் அமைந்தது. கற்பித மனோரம்மிய இலக்கிய நோக்கு ஆட்சி புரிந்தவிடங்களில் யதார்த்த இலக்கிய நோக்கினைப் புகுத்தி அந்நோக்கின் சிறப்பை நன்கு உணர்த்தியமையே அப்பண்பாகும்."(6) ** தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளைக் குறித்து டாக்டர் இரா.தண்டாயுதம் எழுதிய புத்தகம் இவ்வரிசையில் குறிப்பிடத்தக்கது. தமிழ்ச் சிறுகதை வரலாறு குறித்துச் சிந்தித்தும் ஆராய்ந்தும் எழுதியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் க.நா.சு., தொ.மு.சி.ரகுநாதன், சிட்டி சிவபாதசுந்தரம் டொமினிக் ஜீவா,டாக்டர்கள் மா.இராமலிங்கம், இரா.மோகன், எம்.வேதசகாய குமார் முதலியவர்கள் ஆவர். *** அடிக்குறிப்புகள்: * ஜீவா என்று டாக்டர் அ. சிதம்பரநாதன் கட்டுரையில் குறிப்பிடப்படுபவர் 'உயிரோவியம்' என்ற நாவலால் புகழ் பெற்ற நாரண துரைக்கண்ணன் ஆவார். (1) டாக்டர் மா.இராசமாணிக்கனார், இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி, பக்.243-244. (2) மேலது, ப.252. (3) கா.திரவியம், தேசியம் வளர்த்த தமிழ், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை,1974, பக்.200-201. (4) மேலது, ப.203. (5) டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார், தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். பதிப்பாசிரியர்: பேராசிரியர் பிளோரம்மாள், ம.செ.இரபிசிங். பிலோமினா பதிப்பகம், 5/25, புதுத்தெரு, சென்னை-600004. 1977. ப.v. இந்தப் புத்தகத்தின் கருத்துகளே தொடர்ந்து வருவதால் அடிக்குறிப்புகளிடவில்லை. மொத்தப் பக்கங்களே 22தான். (6)டாக்டர் கார்த்திகேசு சிவத்தம்பி, தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், தமிழ்ப் புத்தகாலயம், 58, டி.பி.கோயில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005. மூன்றாம் பதிப்பு அக்டோபர், 1980. ப.139. **** நன்றி: திண்ணை.காம்
இலஞ்சி சொக்கலிங்கனார் கண்ட 'சமய கிண்டர்கார்டன்(அ) ஆலயங்களின் உட்பொருள் விளக்கம்' -தேவமைந்தன் இந்துமதம் குறித்து அடிப்படையிலிருந்து கற்பிக்கும் இந்துமத பாலபாடம் 1937ஆம் ஆண்டு மே மாதம் அச்சுக்கு வந்தது. திருக்கயிலாய பரம்பரைத் திருத்தருமபுரவாதீனம் 24-ஆவது மகா சந்நிதானத்தின் ஆதரவில் அவ்வாதீன மகாவித்துவானாகவும் 'தொண்டன்' இதழ் ஆசிரியராகவும் பண்டிதபூஷணம் கே. ஆறுமுக நாவலர் என்று அழைக்கப் பட்டவருமாக விளங்கிய நாகர்கோயில் கே.ஆறுமுகம் பிள்ளை அவர்களால் உருவாக்கப்பட்டது. சென்னையில் அக்காலத்தில் புத்தகங்களைத் திருத்தமாக அச்சிடுவதில் புகழ் பெற்றிருந்த புரோகிரஸிவ் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது. இத்தகைய பாலபாடங்கள் வருவதற்கே முன்னோடியாக இருந்தவர் இலங்கை யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர்(1822-1889) அவர்கள். அதே சமயம், பைபிள் தமிழில் முதன்முதல் மொழியாக்கம் ஆவதற்குப் பெருந்துணையாக இருந்து செம்மைப்படுத்தியவரும் அவரே என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. சமயமும் தமிழும் பலர் கற்கப் பாடசாலைகள் அமைத்ததுடன், அவற்றை நடத்துவதற்கு ஆகும் செலவை ஈடுகட்டுவதற்காக வீடு வீடாகச் சென்று அரிசிப்பிச்சை எடுத்தும் தொண்டு செய்தவர் அவரே. அவர் வரலாறு, செய்யுள் வடிவில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மு.ரா. அருணாசலக் கவிராயரால் இயற்றப்பட்டது. 1901ஆம் ஆண்டு படைக்கப்பட்ட 'இந்தியா இலங்கை பர்மா தேசங்களிலுள்ள பெரிய ஆலயங்கள்' என்ற அரிய ஆலயவயண நூல், டாக்டர் போப் பெர்னட் என்பவரால் தொகுக்கப்பட்டு 1909இல் அச்சுக்கு வந்ததாக அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை 1952இல் செய்த பதிவு தெரிவிக்கிறது. ஆகமங்களைப் பற்றி சமஸ்கிருதத்தில்தான் நூல்கள் இருப்பதாகப் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். தமிழில் ஆகமப் பிரமாண்யம் என்றொரு நூலை பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆளவந்தார் இயற்றியுள்ளார். தவிர, ஆசிரியப்பா என்னும் செய்யுள் வடிவில் பதினெட்டாம் நூற்றாண்டில் குமாரதேவர், சாத்திரம் ஒன்றைச் செய்திருக்கிறார். அதன் பெயர் ஆகம நெறியகவல். இதுதவிர மேலும் பதினைந்து சாத்திர நூல்கள் செய்தவர் குமாரதேவர். நமக்கு இன்றும் எளிதாகக் கிடைக்கும், சமயதத்துவ நோக்கில் ஆலயங்களின் உட்பொருளைத் தெளிவாகவும் செறிவாகவும் அதே பொழுது மிக விரிவாகவும் உணர்த்துவதாகவுள்ள பழைய நூல், இலஞ்சி ஏ. சொக்கலிங்கம் அவர்கள் உருவாக்கிய 'சமய கிண்டர்கார்டன் அல்லது ஆலயங்களின் உட்பொருள் விளக்கம்' என்பதே. இரண்டு பெரும் பகுதிகளை உடைய இந்த நூல் 1952இல் வெளிவந்தது. என்றால், பல்லாண்டுகளுக்கு முன்பிருந்தே இலஞ்சியார் தம் உழைப்பைத் தொடங்கியிருக்க வேண்டும். முதல் பகுதியில் இந்து சமயமும் அதன் உட்பிரிவுகளும் கொண்ட ஆலயங்களின் உட்பொருள் விளக்கங்களும்; இரண்டாவது பகுதியில் கிறித்துவ தேவாலயங்களின் உட்பொருள் விளக்கங்களும் என ஆழமும் நுட்பமும் கொண்ட செய்திகள் பற்பல இடம் பெற்றுள்ளன. திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் சீரிய உருவாக்கமான இந்நூல் இந்து மறையியல் கல்விக்கு மட்டுமல்லாமல் தனிப்பட்ட சமய/ஆலயத் 'தேடல்' கொண்டவர் களுக்கும் கைக்கருவி போன்றது. மனிதனின் உடம்புதான் திருக்கோயில் என்பதைத் தெற்றென விளக்கும்பொருட்டு, பெரிய அளவில் வரையப்பட்ட அரிய விளக்கச் சித்திரம் ஒன்று இதனோடு இணைக்கப்பெற்றிருந்தது. பல பதிப்புகளை இந்நூல் அடைந்து விட்டதாக அறிகிறேன். பிருதுவி கணங்கள் முதலான மனிதக் கண்களுக்குப் புலப்படாத ஐந்து கணங்கள் எப்படி உலக மாந்தரோடு தாமும் இணை உலகங்களில்(parallel worlds) இயங்கிக் கடமையாற்றி வருகின்றன என்பது போலும் அரிய செய்திகள் பலவும் இந்நூலில் விரவிக் கிடக்கின்றன. விரிவு அஞ்சி, இதிலுள்ள பொதுவானவும் எளியவுமான கருத்துகள் சிலவற்றை மட்டும் இக்கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறேன். உண்மையான பகுத்தறிவு என்பது எது என்று முதலாவதாக இலஞ்சியார் வினாத் தொடுத்துக்கொண்டு, திருவள்ளுவர் மொழிந்த இரு வேறு திருக்குறள்களையும் (மெய்யுணர்தல், 5: அறிவுடைமை, 3) இணைத்து -- "எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் - அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்றவாறு ஒரே விதியாகச் செய்தார். இதை- உண்மையான பகுத்தறிவு என்பது எது என்பதை ஆய்வுக்கூட முறையில் சோதனை செய்து அறிவதற்கேற்ற ஓர் அறிவியல் விதியைப் போலவே பயன்படுத்தச் சொன்னார். "இந்து மதத்தின் சந்நியாசிகளுக்கு ஆலய வழிபாடு விதிக்கப்படாதது ஏன்?" என்பதற்கு, "அவர்கள் ஞானநெறியில் நிற்பவர்கள் என்பதால்" - என்று மறுமொழி தந்ததுடன், அதற்கு ஆதாரமாக - "மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்புஅறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை"[துறவு:5] என்னும் திருக்குறளை முன்வைத்தார். சமயங்கள் தேவையா என்று கேட்கப்படுவதற்கு விடையாக, "சமயங்கள் யாவுமே, மனிதனுக்குச் சீவத்தன்மையைப் போக்கிச் சிவத்தன்மையைத் தர அமைந்த வெவ்வேறு முறைகளாம்" என்று கூறினார். எல்லா மக்களுக்கும் ஒரே நெறியை வகுக்கும் மேலாண்மை, சமயங்களுக்குச் சரிவராது என்பதற்கு, "இரயில் தண்டவாளம் போல் எல்லா மக்களுக்கும் ஒரே நெறியை வகுப்பவர் உத்தம அநுபூதிமான் ஆகார்" என்றார். திருக்குறளை ஆதாரம் காட்டியவர், பரம்பொருளைத் தேடுபவர் மிகச் சிலரே என்பதற்கு "அறுப்பு மிகுதி; வேலையாட்களோ கொஞ்சம்" என்ற இயேசு மொழியை அடிப்படையாக்கினார். 'இறைவன் என் கண்களுக்கு முன் தோன்ற வேண்டும்; ஏனைய புலன்கள் மூலம் அவனை நான் உணர வேண்டும்! என்பவர்களுக்கு இறைவனின் உண்மை என்ன என்பதை அப்பர் என்னும் திருநாவுக்கரசரின் சொற்களால்- "விறகில் தீயினன், பாலில் படுநெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோல்நட்(டு) உணர்வு கயிற்றினால் முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே" என்னும் தேவாரத்தால் நன்கு விளக்கியுள்ளார். "பாலினுள் நெய்யிருப்பது, பாலைப் பார்த்தபோது காண முடிகிறதா? இல்லையே! அதனால் பாலில் நெய் இல்லை என்று கூறுவோர் யாரேனும் உளரோ? ஒருவரும் இலர். நமது கண்ணுக்குக் காண முடியாததும், பாலில் எங்கும் வியாபித்திருப்பதுமாகிய நெய்யைக் காண, பாலைக் காய்ச்சித் தயிராக்கித் தயிரில் மத்தினை ஊன்றி முறுகக் கடைதல் வேண்டும்; கடைந்தால் அதிலிருந்து வெண்ணெயும் பின் நெய்யும் பெறலாம். அதுபோல, கடவுள் இவ்வுலகத்தில் காண முடியாதபடி மறைந்திருக்கின்றார். அறிவாகிய கயிற்றினால் முறுகக் கடைந்தால் அவரைக் காணமுடியும் என்பது அதன் விளக்கம். திருவருட் பிரகாச வள்ளலார் மொழிந்த 'அருட்பெருஞ்ஜோதி ' மெய்ப்பொருளுக்கு மட்டுமல்லாமல், ஐரோப்பாவைச் சார்ந்த 'பின் இறப்பியல்' ஆய்வாளர்களான குப்ளர்றாஸ் முதலானோர் சொன்ன 'ஒளிக்கடவுள்' செய்திக்கும் ஏலவே நெடுங்காலத்துக்கு முன் கிரேக்கத்தில் நிலவிய எல்லிஸ்/எல்லீசர் என்ற ஒளிக்கடவுள் வழிபாட்டுக்கும் 'மாமணிச் சோதியான்' என்பது மிகவும் ஒத்துப் போகிறது. 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்று பிற்கால ஒளவையாரால் 'கொன்றை வேந்த'னிலும்(1) ''கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று உலகநாதனாரின் 'உலகநீதி'யிலும் கூறப்பட்டவற்றை உள்ளத்தில் பொதிந்து வைத்திருந்த மக்களிடையே, ஆலயத்துக்குச் செல்வதைக் கொச்சைப்படுத்தியவர்கள் யார்? - என்பதற்கு இலஞ்சியார் மறுமொழி: "இன்று ஆலயஞ் செல்வோரிற் பெரும்பாலர், வியாபார முறையில் இறைவனோடு பேரஞ் செய்யச் செல்கின்றாரே ஒழிய அன்போடோ பகுத்தறிவோடோ இறைவனை வழிபடச் செல்கின்றார் என்று சொல்லல் இயலாது." அறுபது ஆண்டுகளுக்கு முன்னிருந்த இந்த நிலை, இன்றைய 'மீடியா'க்களின் 'ஆன்மிகக்கொச்சைப்படுத்த'லுக்குமுன் எவ்வளவோ தேவலாம். இதே நிலையை அக்காலத்தில் இயேசு தேவாலயங்களில் கண்டு ஆத்திரப்பட்டதை 'மத்தேயு சுவிசேஷ'த்தில் காணலாம். இடச்சுருக்கம் கருதி, இலஞ்சியார் மொழிந்தவற்றை அப்படியே தருகிறேன்: ஆலயத்தின் உயிர் மூலஸ்தான மூர்த்தி யந்திரப் பிரதிஷ்டை இலாத விக்கிரகம் சக்தியுடைய மூர்த்தியாகாது. ** மனிதன் உடம்பல்ல ஆன்மா ஆலயத்தின் முன்கோபுரமும் உள்ளிருக்கும் மூலஸ்தான மூர்த்தியும் 'மனிதன் உடம்பல்ல; ஆன்மா' என்ற உண்மையை இடைவிடாமல் நமக்கு ஞாபகமூட்டி நிற்பதே. அடியார் ஒவ்வொருவரும் ஆலய மதிலையும் கோபுரத்தையும் புறத்தே கண்டவுடனே ''நான் இந்த உடம்பல்ல; உள்ளிருக்கும் ஆன்மா" என்ற உண்மையை அறிவுறுத்திக் கொள்ளுதல் வேண்டும். இவ்வுண்மையைப் பற்றிய இடைவிடாத(நமது நெடுங்கால வாசனைக்கெதிரான) சிந்தனையே பிற உயிர்களிடம் அன்பைப் பெருக்கித் தனக்கும் உயர்ந்த மனநிம்மதி தரும். ** ஆவரண மயக்கம் உடம்பை நான் என்று கொள்ளும் மயக்கம் இயற்கையிலுள்ள ஆவரண சக்தியின் மறைப்பால் ஆகின்றது. இந்த மறைப்பு இறைவனின் ஐந்தொழிலில் திரோபவம் அல்லது மறைத்தல் என்றழைக்கப்படும். இந்த ஆவரண மயக்கம், 'நான் யார்?' என்று பகுத்தறிவதனாலும், "நான் அழிவில்லாத ஆன்மா, இந்த உடம்பு நானல்ல" என்று இடைவிடாது சிந்திப்பதாலும் நீக்கப்பட வேண்டும். ஆலய கோபுரத்தை தூரத்தே கண்டவுடன் இவ்வுண்மையை நினைப்பூட்டிக் கொள்ளவேண்டும்.(2) ** சிவாலயங்களும் ஆன்மாவின் ஆறுநிலைகளும் 1. முன்கோபுரம் - ஸ்தூலலிங்கம் - பூதான்மா 2. மகாபலிபீடம் - பத்திரலிங்கம் - அந்தரான்மா 3. கொடிமரம் - துவஜலிங்கம் - தத்துவான்மா 4. மூலவர் - சதாசிவலிங்கம் - சீவான்மா 5. ஆசாரியர் - ஆன்மலிங்கம் - மந்திரான்மா 6. பரவெளி - அகண்டலிங்கம் - பரமான்மா ** பூதான்மாக்கள், தேகான்மாக்கள் (சிற்றின்ப அனுபவங்கள் காரணமாக) ஸ்தூல உடம்பைத் 'தான்'-ஆக எண்ணும் ஆன்மாக்கள் தேகான்மாக்கள், பூதான்மாக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ** மூலஸ்தான மூர்த்தி "நான் இன்ப துன்பங்களின் இருப்பிடமாகிய உடம்பல்ல; இச்சையல்ல; மனமல்ல" "எனக்கு இத்தத்துவங்களை அடக்கவும் ஆளவும் கூடும். ஆகையால் நான் பிரம்மம்" - இந்நிலையே ஜீவான்மா நிலை. அதன் அறிகுறியே மூலஸ்தான மூர்த்தி. ** ஆகமவிதி ஒன்று அடியார்கள் ஆலயம் செல்லும்பொழுது வெறுங்கையுடன் போவது முறையல்ல. தேங்காய், பழம், கற்பூரம் இவற்றைக் கொண்டு செல்லுதலே ஆகமவிதி. தேங்காய் - ஆன்மா வாழைப்பழம் - நல்வினைப் பலன்கள் கற்பூரம் - இறைவனோடு இரண்டறக் கலக்கும் பக்குவம் வாய்ந்த ஆன்ம நிலை ** ஆலயத் தானம் ஒவ்வொன்றிலும் அருட்சக்திகளின் தீவிர நிலைகள் ஆலயங்களில் ஆகமமுறை வழுவாது பூசை நடைபெறுமானால், அப்போது அங்கு உற்பத்தியாகும் அருட்சக்திகள், கர்ப்பக்கிரகத்தில் மிகக் கொடுந் தீவிரத்துடனும்; அர்த்த மண்டபத்தில் மிகத் தீவிரத்துட னும்; மகாமண்டபத்தில் தீவிரத்துடனும், கொடிமரத்தை அடுத்து மந்தமாகவும்; வெளிவீதியில் மந்ததரமாகவும் வேலைசெய்யும். ** ஆலயங்களில் எண்ணெய், நெய் விளக்குகளின் மகத்துவம் எண்ணெய், நெய் விளக்குகளுடைய உட்பொருளும், சூடும் ஒளியும் ஒருசேரப் பரப்பவல்ல அந்த அக்கினிக்கும் தேவகணங்களுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பும் அதனாலேற்படும் உத்தம பலனும் இன்றைய ஆலயங்களில் மிகவும் குன்றிப் போயுள்ளன. மின்விளக்குகள், ஆலயங்களில் தியானத்தைக் கெடுக்கின்றன. முன்பு ஆலயங்களில் அடியார்களுக்குக் கிடைத்த ஆழ்மனநிலை(trance) - இப்பொழுதுள்ள மின்விளக்குகளாலும் பக்தர்களின் சளசளப்பாலும் இடம்ப ஆரவாரங்களாலும் சிலருக்கு மட்டும் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தாலும் பொதுவாகக் கோயிலொழுங்கு அத்துமீறப்படுவதாலும் - இப்போதுள்ள பக்தர்களுக்குக் கிடைப்பதில்லை. ** எல்லாவற்றுக்கும் மேலாக... "பரம்பொருள் ஒன்றே எச்சிற்படாதது." பரம்பொருளைப் பற்றி இராமகிருஷ்ணர் மொழிந்தவாறு 'அது இருக்கின்றது'(that IS - Sri Ramakrishna: there IS - Jiddu Krishnamurti) என்பதையன்றி வேறு சொல்ல வல்லவர் யார்? "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்" என்ற முதுமொழி அதனாலேயே உண்டாயிற்று. ** இவ்வாறு நான் இங்கே தந்துள்ள இலஞ்சியாரின் கருத்துத் தொகுப்பு, அவருடைய நூலின் 'ஆகிருதி'யை நோக்க, பானைசோற்றுக்கு ஒரு பதம்'தான். இந்த நூல், சென்ற நூற்றாண்டில் ஐம்பதுகளின் ஆகத் தொடக்கத்தில் வந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த நூலுக்குப் பின்பு எத்தனையோ நூல்கள் இதை அடியொற்றி வந்துவிட்டன, ஏன்! சென்ற எண்பதுகளில் 'அமோக'மாகக் காசுபார்த்த இது சம்பந்தமான புத்தகங்களில் இந்த நூலின் கருத்துகள் ஏராளமாக இடம்பெற்றன. என்ன.. இலஞ்சியாரின் பெயரோ நூலின் பெயரோ அவற்றில் ஓரிடத்தும் வரவில்லை. என்ன செய்வது? அவர்தான் போய்ச் சேர்ந்து விட்டாரே! அப்படிக் குறிப்பிடுவதால் இவர்களுக்கு ஆதாயம் ஏதேனும் உண்டா! **** அடிக்குறிப்புகள்: (1) திருநெல்வேலியிலிருந்து கிடைத்த ஓலைச்சுவடியொன்றில் கொன்றை வேந்தனுக்கு 'அன்னையும் பிதா' என்று பெயர் காணப்பட்டதாகத் 'தமிழ்க் கடல்' பேராசிரியர் கா.நச்சிவாய முதலியார் தெரிவித்துள்ளார். [மைக்ரோசோஃட் வொர்ட் தானாகச் சேமிப்புத் தலைப்பு கொடுக்கும் பாணி இது என்பது கணினியறிவு உள்ளவர்களுக்குத் தெரியும்.] (2) மூலத்தானத்தைப் புறத்திலிருந்து காணவொட்டாமல் மறைக்கும் கோயில் திருமதிலுக்கு 'ஆவரணச் சுவர்' என்று பெயர். **** நன்றி: திண்ணை.காம்
பெண்ணியக் கோட்பாட்டின் தோற்றமும் ஆய்வு வளர்ச்சியும் -தேவமைந்தன் இரண்டு முறைகளில் இது குறித்துச் சிந்திப்போம். முதலாவது, எளியவரின்(layperson) அணுகுமுறை. இரண்டாவது, பெண்ணியம் என்பது, தாய்த்தலைமை இனக்குழுவிலிருந்து தோன்றிய உலகளாவிய பெரும் சமூக அமைப்பின் உறுப்பினளாகத் தான் விளங்கியதை ஆய்வுகளின்வழி ஓர்மையுடன் சிந்தித்துப் புரிந்து கொண்டு, அதனை மீண்டும் உருவாக்கப் பெண்ணொருத்தி தொண்டாற்ற உதவும் ஆய்வியல் அணுகுமுறை. முதல் வகை -எளியவர் அணுகுமுறை: சமூகம்தான் ஒவ்வொன்றையும் தீர்மானிக்கிறது. முன்பெல்லாம் சமூகம் சிறுத்த அலகாக(unit) இருந்ததை நூறு ஆண்டுகளுக்கு முந்திய கடிதங்கள் காட்டும். கூட்டுக் குடும்பம்தான் அப்பொழுதைய சமூகம். 'தாங்களும் தங்கள் சமூகமும்' என்று சொல்லி விசாரித்தார்களென்றால், 'தாங்களும் தங்களைப் பெற்றோரும் உற்றார் உறவினரும்' என்ற குடும்பக் கட்டுமானத்தை(family pack)க் குறிப்பதோடு சரி. ஏங்கெல்ஸ் அதனால்தான் தன் சமூக ஆய்வைக் குடும்பத்திலிருந்து தொடங்கி, தனிச்சொத்து அரசு என்று விரிவாக்கி அவற்றின் தோற்றத்தை ஆராய்ந்தார்.(1) இப்பொழுது குடும்பம் அணுக்கருக் குடும்பம் (nuclear family - a family unit consisting of a mother, a father, and their children) என்று ஆகிவிட்டது. நகர்ப்புறச் சமூகத்துக்கும் நாட்டுப்புறச் சமூகத்துக்கும் இருந்த புற இடைவெளி குறைந்து கொண்டே போகிறது. ஆனால் நகர்ப்புறச் சமூக மக்கள் - குறிப்பாக இளைய தலைமுறைக்கும்; கிராமப்புற மக்களுள் முக்கியமான இளைய தலைமுறைக்கும் அக இடைவெளியாகிய மனவிரிசல் மேலதிகமாகக் கூடிக்கொண்டே போகிறது. கிராமப் புறங்களில் வேர்பிடித்திருந்த குடும்ப உறவும் மூலக்குடும்பத்துடன் கொண்ட பிணைப்பும் மிகவும் அசைந்து கொடுத்திருக்கிறது. தொழிற்புரட்சிக் காலத்தை ஒட்டியும் அதற்குப் பின்னும் நாடெங்கும் இரயில் வண்டியானது ஊர்களை இணைத்து அறிவு பரவ வழிவகுத்தது. இப்பொழுதோ பேருந்துகள் கிராமப்புறங்களையும் நகரங்களையும் நன்றாக இணைத்தபின், கிராமப்புறத்து இளைஞர்கள் 'பட்டணத்து மாயை'களில் வசமாகச் சிக்கிக் கொள்ளவும் நகர்ப்புறப் பண்பாட்டின் பேரளவு தீமைகளாகிய சூது-மது-விபச்சாரம் ஆகியவற்றில் எளிதாக மாட்டிக் கொள்ளவும் வழி திறந்துவிட்டது. கல்வி வளர்ச்சி இதனால் ஏற்படவில்லையா? ஆம். ஏற்பட்டிருக்கிறது. எப்படி? நகர்ப்புறக் கல்வி நிலையங்களில் உயர்சாதி மாணவ மாணவியருடன் போட்டி போட முடியாமலும், இப்பொழுது தழைத்தோங்கியுள்ள 'மேலைமயமாத'லில் நகர்ப்புற இளைஞர்-இளைஞியரின் பண்பாட்டு விழுமிய வீழ்ச்சிகளைக் கண்டு, தம்மை அவர்களோடு ஒப்புநோக்கிக் கொண்டு தாழ்வு மனப்பான்மையால் உள்ளம் புழுங்கி கிராமப்புறத்து இளைஞர்-இளைஞியர் ஆற்றல் குறையவுமே ஆகியுள்ளது. நாட்டுப்புறங்களிலிருந்து முன்பெல்லாம் 'பஞ்சம் பிழைப்பதற்காக' மட்டுமே மக்கள் செல்வார்கள். இப்பொழுதோ வேளாண்தொழில் நன்கறிந்த குறுநில விவசாயிகளும் விவசாயத்தொழிலாளர்களும்கூட கந்துவட்டிக்காரர்களிடமிருந்து தப்பிப் பிழைக்கப் பட்டணம் சென்று, சாலை போடும் வேலைகள் பாதாளச் சாக்கடைத் திட்டம் முதலியவற்றில் வேலை செய்து பிழைக்கிறார்கள், நிலையான பெரிய அரசியல் கட்சிகளின் 'தய'வைப் பெற்ற பெருநிலக்கிழார்கள் மட்டும் இன்றும் கிராமங்களில் கோலோச்சுகிறார்கள். அவர்களின் 'தய'வை முழுமையாகப் பெற்ற குறுநில விவசாயிகள், அங்கே ஓரளவு உத்தரவாதத்துடன் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். வாழ்வென்பதே கேள்விக்குறி ஆகிவிட்ட இந்தச் சூழ்நிலையில் பெண்ணியக் கோட்பாடு அத்தகைய குடும்பங்களின் பெண்களைச் சென்றடையும் வழி இன்னும் ஏற்படவில்லை. நகர்ப்புற - பெருநகரம் சார்ந்த - நன்கு கல்வி கற்று, சுயமாகச் சிந்திக்கத் தெரிந்த - பல்வேறு வேலைகளுக்குச் சென்று உழைக்கும் பெண்களிடம் பெண்ணியக் கோட்பாடு இயல்பாகவே எடுபடுகின்றது. ஐரோப்பாவில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே பெண்ணியம் தோற்றம் பெறக் காரணம், பொருளியல் சுதந்திரத்தை நோக்கி அங்குள்ள பெண்கள் உறுதியாக நகரத் தொடங்கியதுதான். பெண்கள் அரசியலில் பங்கேற்பதற்கு முன்னரே ஐரோப்பாவில் பெண்கல்வி முதன்மைப்படுத்தப்பட்டது. இந்தியப் பெண்களின் நிலையைப்பற்றிப் பக்கம் பக்கமாகக் கண்ணீர் சிந்தி நூல் எழுதுபவர்களும், மேடைகளில் முழங்குபவர்களும், கவியரங்கங்களில் கவிதை வாசித்துக் கைதட்டல் பெறுபவர்களும் மிக முக்கியமான ஒன்றை வசதியாக மறந்து விடுகிறார்கள். அதுதான் தற்சார்பு மட்டுமே கொண்ட பொருளியல் விடுதலை. தன் கணவர் பெயரைத் தன் பெயருடன் இணைத்து எழுதும் - பேசும் எந்தப் பெண்ணும், கணவருடன் இணைந்த ஒளிப்படம் எடுக்கச்சொல்லி, அதைத் தன் நேர்காணலில், முற்றிலும் வணிகப்போட்டி நிரம்பிய இதழில் போடச் சொல்லும் எந்தப் பெண்ணும் பெண்ணியம் அறிந்தவரல்லர். முற்றிலும் தற்சார்பாக இருக்கவல்ல பெண்ணே பெண்ணியம் உணர்ந்தவர். அவர் குடும்பத்தில், குடும்பத்தோடு இணைந்து வாழ்வார்; சார்ந்துவாழ மட்டார். பணியாற்றும் நிறுவனத்தில் கூடத் தனக்கென்று வரையறுக்கப்பட்டுள்ள வேலைகளை மட்டுமே தெளிவாகவும் திறம்படவும் செய்வார். மேலாண்மையின் தனிப்பட்ட கோரிக்கைகள்(விழாவுக்கு ஏற்பாடு செய்வது போல) எதையும் அவர் ஏற்க மாட்டார். தன்மேல் சுமத்தப்படும் எவ்வகையான நிர்ப்பந்தத்துக்கும் உடனடியாக வழக்குப்போடுவார். நீதிமன்றம் செல்லத் தயங்க மாட்டார். தனக்கு உரிமையுள்ள சொத்து முதல் எதற்கும் அவர் அவ்வாறே செய்வார். சடங்குகள் சம்பிரதாயங்கள் முதலான தன்னைக் கட்டிப்போடும் எதையும் பின்பற்ற மாட்டார். தொலைக்காட்சி பார்ப்பதைக்கூட முற்றிலும் தவிர்க்கும் பெண்கள் டென்மார்க்கிலும் பிரான்சிலும் பெருகி வருகிறார்கள். 'முற்றிலும் தற்சுதந்திரம்' ஒன்றே அவர்கள் நிலை. இது இந்தியாவில் சாத்தியமா என்பவர்களுக்குப் பாரதி சான்று தருகிறேன். ரகுநாதன்(திருச்சிற்றம்பலக் கவிராயர்) எழுதினார்: "ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியை பிரெஞ்சுப் புரட்சியின் குழந்தை என்கிறார்களே! ஏன் தமிழ்க் கவிஞன் பாரதியை 'ரஷ்யப் புரட்சியின் குழந்தை' என்று முழங்க மறுக்கிறீர்கள்?" 1905-1907ஆம் ஆண்டு நிகழ்ந்த ரஷ்யப் புரட்சிகளின் பெருந்தாக்கத்தை 'இந்தியா' ஏடு - 1906இன் பிற்பாதி இதழ்களில் பாரதி ஐந்து தலைப்புகளில் பதிவு செய்திருக்கிறார். 1907இல் பாரதி பாடி வெளியிட்ட 'சுதந்திரப் பள்ளு,' 1917 பிப்ரவரிப் புரட்சியின் பின் 'பொழுதுபோக்கு'(உரையாடல்), 'The Coming Age' என்ற ஆங்கிலக் கட்டுரை, 1917 அக்டோபர்ப் புரட்சி வெற்றிபெற்றவுடன் 'புதிய ருஷ்யா' என்ற கவிதை முதலானவற்றைப் பாரதி உடனடியாக இங்கு பதிவு செய்தார்.(2)[மேலும் தரவுகள் வேண்டுவோர் - பெ.தூரன் தொகுத்த 'பாரதி தமிழ்,'இளசை மணியன் தொகுத்த 'பாரதி தரிசனம்,' ஆகிய புத்தகங்களில் பெறலாம்] அப்படியானால் ரஷ்யாவில் நிகழ்ந்த புரட்சியின் தாக்கம் உடனே இங்கு விளைகிறதென்றால் - ஐரோப்பாவில் உருவான பெண்ணியத் தாக்கம், கிட்டத்தட்ட ஒன்றேகால் நூற்றாண்டு கழித்து இங்கு உருவாகத் தொடங்குகிறது என்பதற்கு என்ன பொருள்? மூவலூர் இராமாமிர்தத்தம்மையார் முதல் தற்சார்பு கொண்டிருந்த படித்த, சுயசிந்தனையுள்ள (பெண்)அறிஞர்கள் ஏன் தங்களைப் பெரியார் இயக்கத்தில் மட்டுமே கரைத்துக் கொண்டார்கள்? ஐரோப்பியப் பெண்ணியத்தை ஏன் இந்தியாவில் முன்னெடுத்துச் செல்லவில்லை? கேரளப் பழங்குடியினப் போராளியான ஜானு ஏன் தன்னைப் பெண்ணியத்தை முன்னெடுத்துச் செல்ல ஒப்புக்கொடுக்கவில்லை? இந்த 'ஏன்'களுக்குத் திட்டவட்டமான விடைகள் உள்ளன. அவற்றை இந்தியப் பெண்ணியவாதிகள் எடுத்துக்கொண்டு தங்கள் பரப்புரையில் முன்வைக்க வேண்டும். அப்பொழுது இந்தியாவில் ஆண்களை விட்டுவிட்டுப் பெண்களைக் கட்டிப்போட்ட மதவாதத்தின் பிடியிலிருந்து இந்திய மக்கள் தொகையில் சரிபாதியான பெண்களை மீட்டெடுக்க வேண்டிய பெரும் பொறுப்புக்கு அவர்கள் உட்பட நேரிடும். இன்னும் குறிப்பாகச் சொன்னால் எழுத்திலிருந்து பெண்ணியவாதிகள் நீங்கி இயக்க அடிப்படையில் பேருருவம் கொண்டு, இந்தியாவில் பெரும்பான்மையாகவுள்ள கிராமங்களிலிருந்து பெண்ணியப் பரப்புரையைத் தொடங்க வேண்டும். ஒற்றைவரியில் சொல்ல வேண்டுமானால் "இங்கே பெண்ணியம் எழுத்துடன் இயக்கமாகவும் மாறவேண்டும்." ஐரோப்பியச் சாயலை விடுத்து இந்தியச் சாயலில் இந்தியப் பெண்களைப் அவர்களின் பொருளியல் சார்புகள் அனைத்திலுமிருந்து மீட்க வேண்டும். இரண்டாம் வகை - ஆய்வியல் அணுகுமுறை: 1817ஆம் ஆண்டு டார்வின்(Charles Darwin), அழுத்தமான முடிபு ஒன்றை உலகின் முன் வைத்தார். கூர்தலறத்தின்(Evolution Theory)படித்தான் உலகம் இயங்குகிறது; 'hominoid' என்ற பெருங்குரங்கினத்திலிருந்தே மனிதர்கள் தோன்றினார்கள் என்பதே அது. குரங்கிலிருந்து மனிதர்கள் எவ்வாறு வேறுபடுகிறார்கள் என்ற வினாவுக்கு 1876ஆம் ஆண்டு, தன் ஆய்வான 'மனிதக் குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்' என்ற கட்டுரையில் விடைதந்தார். அவருக்குச் சற்றேறக்குறைய சமகாலத்தவரான மார்கன்(Morgan) தன் மானிடவியல் ஆய்வுகள் மூலம் ஏங்கெல்ஸ் மொழிந்தவை நூலக ஆய்வு(library research) மட்டுமல்ல, கள ஆய்வுக்கே பொருந்தி வருபவை என்று எண்பித்தார். சமூக உறவு என்பது உண்மையில் ஒன்றுக்கொன்று உற்பத்தியில் கொள்ளும் உறவே(3) என்பதால், குறிப்பிட்ட ஓர் இனத்தின் சமூக அமைப்பை - உற்பத்தியின் தன்மையும், உற்பத்தியில் ஈடுபடும் ஒவ்வொன்றும் தமக்குள் கொண்டிருக்கும் இருபால் உறவுமே தோற்றுவிக்கின்றன - என்ற சமூகவியல் கோட்பாட்டை மானிடவியல் அடிப்படையிலும் உறுதி செய்தவர் மார்கன். எந்திரமயமாதலின் குழந்தையென்று சொல்லத்தக்க தொழில்நுட்ப முன்னேற்றம் போலும் காரணங்களால் உற்பத்தியின் தன்மை மாறும்பொழுது, குறிப்பிட்ட இனத்தவரின் சமூக அமைப்பே மரபியல் அடிப்படையோடு மாறிவிடுகிறது என்பது 19ஆம் நூற்றாண்டிறுதி அறிஞர்கள்(மார்கன்,டைலர் முதலானோர்) பலரின் வலியுறுத்தலானது. காட்டுமிராண்டி நிலை>அநாகரிக நிலை>நாகரிக நிலை என்ற காலகட்டங்களாகப் பகுத்துக்கொண்டு சமூக-பொருளியல் அடிப்படையில் தம் அரிய ஆய்வை நிகழ்த்திய மார்கன், எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய முடிபை இவ்வாறு மொழிந்தார்: காட்டுமிராண்டிகளும் அநாகரிகர்களும் சாதித்த சாதனைகளால்தான் நாகரிகத்தின் முற்றத்தில் மாந்தரினம் காலெடுத்துவைக்க முடிந்தது. பிறகு வரிசையாக ஆய்வுகள்.. உலகத்தின் முதல் சமூக அமைப்பு தாய்வழி வந்ததா தந்தைவழி வந்ததா? தொடங்கிவிட்டது - பெண்மொழி, ஆண்மொழி, பெண்ணிய வெளிப்பாடு - ஆகிவற்றின் மூலங்களுக்கான தேடல். மாந்தரினத்தின் தொடக்கக் காலகட்டத்திலேயே ஆண்தலைமை/தந்தைவழிக் குடும்பங்கள் தோன்றிவிட்டன என்றார் வெஸ்டர்மார்க்(1903). ஆண்தலைமை விரும்பிகள் மிகப்பலராக அப்பொழுது இருந்ததால் அவருடைய ஆய்வு மிகவும் வரவேற்கப்பட்டது. இன்று மட்டும் என்ன? பிரதீபா பாட்டீல் இந்தியக் குடியரசுத் தலைவராக வருவதற்கு எத்தனை வகையான எதிர்ப்புகள்! ஏனைய விலங்கினங்களை விடவும் சிம்பன்சிகள், ஒர்ராங் உட்டாங் முதலான குரங்கினங்களில் தாய்மைப் பண்பு நீடித்தலை அடிப்படையாக வைத்து, 1927ஆம் ஆண்டில் 'அன்னையர்' (The Mothers) என்ற ஆராய்ச்சியை ராபர்ட் ஃப்ரிவோல்ட் முன்வைத்தார். இவை அனைத்துக்கும் மேலாக 1974ஆம் ஆண்டில் 'தாய்வழி இனக்குழுவிலிருந்து தந்தைவழிக் குடும்பத்துக்குப் பெண்கள் அடைந்த பரிணாமம்' (Women's Evolution From Matriarchal Clan To Patriarchal Family) என்றதோர் அரிய ஆய்வை எவெலின் ரீட் வெளியிட்டார். இனக்குழுக்களின் வாழ்வியலில் தாய்வழிச் சமூகம் பெற்றிருந்த முதன்மையை அதுவரை எவெலின் ரீட் போல எவரும் ஆராயவில்லை. இனக்குழு வரலாற்றில் தாய்வழிச் சமூகம் பெற்ற முதன்மையை இந்தியாவில் முதன்முதல் தன் இருபது கதைகளின் தொகுப்பின் தொடக்கக் கதைகளான நிஷா, திவா, அமிர்தாஸ்வன், புருகூதன் ஆகியவற்றில் வைத்துச் ராகுல சாங்கிருத்தியாயன். இந்தோ ஐரோப்பிய, இந்தோ ஈரானிய மொழிகளையும் அவற்றின் வரலாற்று வாழ்வியல் மூலங்களையும் ஆராய்ந்து ராகுல்ஜி கற்றதன் பின்பே அந்த முதல் நான்கு கதைகளை எழுதினார். அத்தகைய 'வால்காவிலிருந்து கங்கைவரை(தமிழில்: கண.முத்தையா. முதற் பதிப்பு ஆகஸ்ட் 1949)(4) என்ற அவரது இணையற்ற நூலை இந்திய அறிவுலகம் என்றும் மறக்காது. இந்தக் கதைநூலின் சித்தாந்த வடிவத்தை வாசிக்க விரும்புவோர் அவரது 'மனித சமுதாயம்' என்ற பெரிய நூலை வாசிக்கலாம். பெண்களைச் சமமாக ஆண்கள் நடத்த வேண்டும் என்பதைத் தன் இயக்கம் மூலமாகவும், 'பெண் ஏன் அடிமையானாள்?' என்ற நூல் மூலமும் கருத்தியல் அடிப்படையில் சொன்னவர் பெரியார். தமிழகத்தின் முதல் பொதுவுடைமைக் கொள்கையர் மா.சிங்காரவேலர், 'பொதுவுடைமையும் பெண்களும்' என்ற 'குடியரசு'(08-11-1931) நாளேட்டுக் கட்டுரையில் ''பெண்களைத் தாழ்த்தி வருவதனால்தான் மக்களில் எழுபது விழுக்காட்டினருக்குத் தீராநோய் வருகிறது" என்று தொலைநோக்குடன் சொல்லியிருப்பதை இன்றைய 'எய்ட்ஸ் தடுப்பு'த் தன்னார்வலர்கள் மக்களிடையே பரப்ப வேண்டும்.(3) தந்தைவழிச் சமூகம்தான் முதலில் தோன்றியது என்று வற்புறுத்துபவர்களின் மொழியைத் தொடர்ந்து நாம் உற்றுக் கவனித்தோமானால் அதில் அடக்குமுறையும் ஆதிக்கமும் சுவடு பரத்துதலைக் காணலாம். தந்தைவழிச் சமூக முறையைவிட தாய்வழிச் சமூக முறை போரை எதிர்த்த, போர் புரிபவர்களை ஒதுக்கி வைத்த, முற்ற முடிய ஆக்கப்போக்கிலான உலகளாவிய அமைப்பாக விளங்கிய வரலாற்றை, எவெலின் ரீட்'டின் ஆழமான ஆய்வைத் தம் உள்ளத்தில் பதியன் போட விரும்புபவர்கள், சாந்தி சச்சிதானந்தத்தின் "பெண்களின் சுவடுகள்" நூலை(5) வாசிக்க வேண்டும். அது புத்தகம் மட்டுமே அல்ல; மனிதர்களின் முதல் சமூக அமைப்பின் வாழ்க்கைச் சித்திரம். அது தொடர்பாக அறிய விரும்பிய என்னை அப்புத்தகத்துக்கு அறிமுகப்படுத்திய முனைவர் க. பரிமளம் அவர்களுக்கு நன்றி. இதேபோல, தந்தைவழிச் சமூகத்தில் பெண் எவ்வாறு ஒடுக்கப்படுகிறாள் என்ற வரலாற்றுத் துயரத்தை "நம் தந்தையரைக் கொல்வது எப்படி?" என்ற தலைப்பிலான நிகழ் தலித் பெண்ணிய இலக்கியப் பார்வையில் முன்வைத்திருக்கும் 'அணங்கு' இதழ்(6) ஆசிரியர் மாலதி மைத்ரி குறிப்பிடத் தக்கவர். சிமோன் தெ பொவா(Simone de Beauvoir)ரின் 'இரண்டாம் பாலினம்'(The Second Sex) என்ற உலகப் புகழ்பெற்ற பெண்ணியத் தத்துவநூல், நாகரத்தினம் கிருஷ்ணாவின்(பிரஞ்சிலிருந்து தமிழ்) மொழிபெயர்ப்பில் 'அணங்'கில் தொடராக வரத் தொடங்கியுள்ளது.(7) வெகு இயல்பாகவும் தெளிவாகவும் பெண்ணியக் கொள்கையை உலகின் முன் வைத்தவர் 'மதாம் சிமோன் தெ பொவார்.' பெண்ணியம் உருவாகக் காரணமாயிருந்த வரலாற்றின் அத்தனை கூறுபாடுகளையும் அலசிய அவர், சமூகத்தில் பெண்ணியத்துக்கு எதிராக எழுப்பப்படும் தடைவினாக்களுக்கு உரிய விடைகளைத் தந்ததுடன், ஆண்களுக்கே உரிய 'கொச்சைப்படுத்துத'லாக எழும் சவால்களுக்கு ஏற்ற பதிலடிகளையும் கொடுத்தார். 'இருத்தலியல்' கோட்பாட்டின்(Existentialism) பிதாமகனான ழோன் போல் சார்த்தர், சிமோன் தெ பொவாரின் கருத்துகளை மிகவும் மதித்தார். எப்படி, எந்த அணுகுமுறையில் பார்த்தாலும் - அறிவும் அறிவியலும் மிகவும் வளர்ந்துவரும் இந்தக் காலகட்டத்தில் பெண்ணியம் கோட்பாட்டளவிலிருந்து செயல்முறைக்கு உயர்வதில் எந்த வியப்புக்கும் இடமில்லை. *** மிகவும் உதவிய நூல்: சாந்தி சச்சிதானந்தம், பெண்களின் சுவடுகளில்..., தமிழியல்(வெளியீடு),யாழ்ப்பாணம். மார்ச் 1989. (வி.உ.)க்ரியா, சென்னை-600 014. வயல்,சென்னை - 600 004. ** அடிக்குறிப்புகள்: 1. எங்கெல்ஸ், குடும்பம்,தனிச்சொத்து,அரசு ஆகியவற்றின் தோற்றம், 1884.[இக்கட்டுரையில் பயன்படுவது 1978ஆம் ஆண்டுப் பதிப்பு] 2. ரகுநாதன், அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை - 600098. 1977. 3. மேலது, மார்ச் - ஆகஸ்டு 2007 இதழ். பக்கம் 65. 4. ராகுல சாங்கிருத்தியாயன், வால்காவிலிருந்து கங்கை வரை. தமிழில்:கண. முத்தையா, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை-600005. 11ஆம் பதிப்பு 1980. 5. சாந்தி சச்சிதானந்தம், பெண்களின் சுவடுகளில்..., தமிழியல்(வெளியீடு),யாழ்ப்பாணம். மார்ச் 1989. (வி.உ.)க்ரியா, சென்னை-600014. வயல்,சென்னை - 600004. பக்கம் x. 6.அணங்கு - பெண்ணிய வெளி - ஆசிரியர்: மாலதி மைத்ரி. #1, மாதா கோயில் வீதி, ரெயின்போ நகர், புதுச்சேரி - 605011. 7. நாகரத்தினம் கிருஷ்ணா(மொழிபெ) - 'பெண்ணெனும் இரண்டாமினம்' சிமோன் தெ பொவார் முன்னுரை, அணங்கு மார்ச்-ஆகஸ்டு 2007, பக். 32- 45. **** நன்றி: திண்ணை.காம்