18.9.11

இது உண்மையா நண்பர்களே?

"என் கவிதை இணையதளத்தில் வந்திருக்கிறது, விகடனில் வந்திருக்கிறது என்று தெரிந்த முகங்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பிப் பாராட்டு மழையில் நனைவதற்குக் கவிதை துணைசெய்துகொண்டிருக்கலாம். படாதபாடுபட்டுப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் கவிதையைச் சேர்த்துவிட்டோம்; ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிப்பார்கள் என்கிற மனோலகரியில் மயங்கிக் கிடக்கப் பயன்படலாம். ஆங்கிலத்தில்[+ பிரெஞ்சில்?] மொழிபெயர்த்து லண்டனிலோ நியூயார்க்கிலோ வெளியிட்டு அங்குள்ள அமைப்புகள் வழங்கும் பரிசுகளைத் தட்டிப் பறித்து வந்து உள்ளூர் பத்திரிக்கைகள் அனைத்திலும் ஒன்றுவிடாமல் வெளியிட ஏற்பாடு செய்து மகிழ்ச்சியில் மிதக்கப் பயன்படலாம். கவிதைக்குப் புறம்பான இத்தனை நடவடிக்கைகளுக்கு நடுவிலும் கவிதை இன்னும் தமிழில் பன்முகப்பட்ட வகைகளில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது." - 'எதிர்காலத் தமிழ்க்கவிதை - சில குறிப்புகள்' - பஞ்சு

மேலும் வாசிக்க: 'சூரியோதயம்,'ஆசிரியர்: ஆர்.மணவாளன்(Publisher,Editor-Designer),144 மகாலட்சுமி இல்லம்,பாக்கமுடையான்பட்டு மெயின்ரோடு, பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி-605008. மின்னஞ்சல்: sooryodayamtamil@yahoo.com தொ.பே.: 0413 2252050 செல்.: 9944541993

குறிப்பு: இதே இதழில் திண்ணை.காம் வலையேட்டில் வெளிவந்த என்னுடைய கட்டுரையும் மறுவெளியீடாகியுள்ளது.

24.8.11

தங்கப்பா ஐயாவின் 'சோளக்கொல்லைப் பொம்மை' நூலுக்கு சாகித்திய அகாதெமி பரிசு கிடைத்திருப்பதை அறிந்து பெருமகிழ்வுற்றேன். அதுதொடர்பாக, திரு ஏர்வாடி இராதாகிருட்டிணன் அவர்களுக்கு வேண்டிய திரு இளவரசு என்பாரின் வேண்டுகோளுக்கு இணங்கிய தங்கப்பா அவர்களை, நான் இணையமுலாவு நடுவத்துக்கு அழைத்துச் சென்று, என் மின்னஞ்சல் வழி அவர் படத்தை அனுப்பி வைத்தபொழுது, நாற்பத்திரண்டு காலமாக அவருடன் கொண்ட நட்பின் புதிய பருமானமாக அவர்தம் எளிமையும் இயல்பான அணுகுமுறையும் மென்மேலும் கூர்மைபெற்று ஒளிர்வதை உணர்ந்தேன். (ஒளிப்படம்: புதுவை இளவேனில்)
அன்புள்ள நண்பருக்கு வணக்கம். புள்ளுவக்குடி பள்ளிக்கட்டடத் திறப்புவிழவைப்பற்றிய உங்கள் பதிவைப் பார்த்து மகிழ்ந்தேன். மகிழ்ச்சி. நம் மக்கள் பயன்பெற அவர்கள் இபப்டி உதவுவது சந்தோஷமாக உள்ளது. * தற்செயலாக உங்கள் பதிவில் பேராசிரியர் வெங்கடராமன் கட்டுரையை ஒட்டி யாரும் எழுதவில்லை என்கிற பதிவையும் பார்த்தேன். வெங்கடராமன் நூல் பற்றி திண்ணையில் நான் விரிவாகவே எழுதியிருந்தேன். அவர் குறிப்பிட்ட பிறகுதான் ஆவுடை அக்காள் பாடல்தொகுப்பை வாங்கிப் படித்துவிட்டு, அதையொட்டி ஒரு விரிவான க்ட்டுரையை எழுதியிருந்தேன். அக்கட்டுரை உங்கள் நூலகம் இதழில் அப்போது வெளிவந்தது. அதன் இணைப்பு அப்போது கீற்று இணைய தளத்தில் இருந்தது. இன்னும் இருக்கிறதா இல்லையா தெரியவில்லை. ஓய்விருக்கும்போது நீங்கள் ஒருமுறை ப்டித்துப் பாருங்கள். * அன்புடன் பாவண்ணன்

22.8.11

பின்வரும் இடுகையிலுள்ள கல்வராயன்மலை, புள்ளுவக்குடியில் பிரான்சு நார்மண்டிப் பள்ளி மாணவியர் கட்டியுள்ள பள்ளியின் இயற்கையான சூழல். இதன் திறப்புவிழாவில் எம்மைத் தலைமையேற்கச் செய்த(பிரான்சு நார்மண்டிப் பள்ளி)தலைமாணவியர் செல்வி நதியாவுக்கும்;'SOLEIL INDIEN'பொறுப்பாளர் திரு நேரு கிருட்டிணன் அவர்களுக்கும் நனிநன்றியேம்.
கல்வராயன்மலை, 'புளுவபாடி' என்றழைக்கப்படும் புள்ளுவக்குடியில் சென்ற 18ஆம் நாளன்று(18/08/2011)பிரான்சு நார்மண்டிப் பள்ளி மாணவ - மாணவியர் தம் பணித்திட்டத்தின்கீழ்க் கட்டிய மலைமக்களின் சிறார்க்கான் பள்ளியின் திறப்பு விழாவில் நானும் என் துணைவியார் கலாவதியும்(முகநூல்:Calavady Batmanabin)தலைமைப் பொறுப்பேற்றோம். பிரான்சு திராசுபூர் திரு வே.துக்காராம், வண்ணத் துணிப்பட்டியை வெட்டித் திறந்து வைத்தார். 'SOLEIL INDIEN' பொறுப்பாளர் திரு நேரு கிருட்டிணன் அனைத்து ஏற்பாடுகளையும் ஒழுங்கு செய்திருந்தார்.நார்மண்டிப் பள்ளி மாணவ மாணவியரின் அன்பும் அவர்களை மேற்பார்வை செய்திருந்த தோழியர் செல்வி நதியா துக்காராமின் தோழமையும் எம்மைத் திகைக்க வைத்தன. மேலாக, நவீனா துக்காராம்(திராசுபூர், பிரான்சு), உமேஷ் (சென்னை)அவர்களும் எம்மை அங்கு எல்லா ஏற்பாடுகளுக்கும் உட்படுத்தி அன்புடன் உடனிருந்தனர்.[சுவரில் பதிக்கப்பெற்றுள்ளவை - பள்ளியைக் கட்டி முடித்த பிரெஞ்சு மாணவ மாணவியரின் கைப்பதிவுகள்.]

28.6.11

மூன்று குரங்குகள் படிமம்

புதுச்சேரியில், மாசிமகத் திருவிழாவின்பொழுது, சாலையோரம் விற்பதற்காகப் பரப்பியிருந்த மண்பொம்மைகளில் 'மூன்று குரங்குகள்' பொம்மை, எங்கள் பெயர்த்தியின் கவனத்தைக் கவர்ந்தது. வாங்கியபின், வீட்டுக்குப் போனதும் இயல்பாக(குழந்தைகளின் இயல்பாக)மூன்று குரங்குகள் எதற்கு ஏன் என்று காரணம் கேட்டாள். காந்தியடிகளுக்குப் பிடித்த உருவம் என்று இந்த பொம்மையைச் சொல்வார்கள். "தீயதைப் பார்க்காதே! தீயதைக் கேட்காதே! தீயதைப் பேசாதே!" என்பவற்றை உணர்த்தவே குரங்கொன்று தன் கண்களையும்; மற்றது செவிகளையும்; மூன்றாவது வாயையும் பொத்திக் கொண்டிருப்பதாக விளக்குவார்கள். மெய்யாக எப்படி இந்தப் படிமம் தோன்றியது? ஜப்பான் நாட்டின் நிக்கோ[ர்] நகரத்தில் உள்ளது கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பெற்றதொரு புத்த விகாரை.'டோஷோ' என்பது அவ்விகாரையின் பெயர். அதில் இந்த உருவம் பழமையானதோர் ஓவியமாக உள்ளது. இதாரி ஜிஸ்கோ என்ற ஓவியர் தன் இடது கையால் தீட்டிய சித்திரம் அது. ஜப்பான் மொழியில் இதாரி என்றால் இடதுகைப் பழக்கமுள்ள ஆள் என்று பொருள். ஜிஸ்கோ என்ற அந்த ஓவியரின் இடக்கைப் பழக்கமே அவர் பெயருக்கு அடைமொழி ஆனது. இங்குள்ள பொருளற்ற - பொருத்தமற்ற விருதுப் பெயர்களைப் போன்றதன்று 'இதாரி.' சரி.. அந்த மூன்று குரங்குகள்? மூன்று குரங்குகள் படிமத்தை நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனச் சொல்வார்கள். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குரிய சீன நன்னெறியின் விளக்கம் அது என்றும் சொல்வார்கள். தமிழ் நன்னெறி நூலான 'வாக்குண்டாம்' சொல்லாததா இது? ஒன்றன் பெயர் மீசா[ஜா]ரு. மற்றதன் பெயர் இவாசா[ஜா]ரு. மூன்றாவதன் பெயர் சிக்சா[ஜா]ரு.(மிஜாரு, இஜாரு, கிஜாரு என்று மக்கள் மொழியில் சொல்வார்களாம்) மீசா[ஜா]ரு என்பதற்கே குரங்குகள் மூன்று என்ற பொருள் ஜப்பான் மொழியில் உண்டாம். இந்தச் சேதியை, நான் பணிக்கு வந்து இரண்டாண்டுகள் கழிந்தபின், பணிபுரிந்த தாகூர் கல்லூரியில் இடண்டாமாண்டு கணிதவியல் படித்த திரு த. மணிகண்டன் வழி தெரிந்து கொண்டேன். 31.1.1971 நாளிட்ட 'கல்கி' இதழில் வயணம் வந்திருந்தது. அப்பொழுதெல்லாம் குமுதம் இதழ் கூட ஒழுக்கத்துடன் வெளிவந்து கொண்டிருந்தது.

2.6.11

பிரெஞ்சுப் பேராசிரியர் முனைவர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயக்கர்
என் நண்பரும் பிரெஞ்சுப் பேராசிரியருமான முனைவர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயக்கர் அவர்கள் செம்மொழித் திட்டத்தின்கீழ் ஆற்றியதும் உண்மையான உழைப்புடன் கூடிய அரிய முயற்சியால் ஆனதுமான சங்க இலக்கியமான குறுந்தொகையின் பிரெஞ்சு மொழிபெயர்ப்புப் பணி நிறைவுபெற்று உரியவர்களிடம் ஏடு ஒப்படைக்கப் பெற்றுள்ளது. முனைவர்ப் பட்ட ஆய்வேட்டை விடவும் ஆகப் பெரியதாய் உள்ள அந்தப் பிரெஞ்சு ஆக்கத்துடன் ஆங்கில எழுத்துகளாலான பாடல் ஒலிப்பும், குறுந்தொகைக் காலத்து மலர்களின் வண்ணப்படங்களும் இணைக்கப்பெற்றிருப்பது மிகப்பெரும் சிறப்பு.

16.5.11

தி.பி. 2042, மேழத் திங்கள் 18-ஆம் நாள் (2011,மே 1, உழைப்பாளர் பெருநாள்)அன்று , புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தில், நம் அன்புக்குரிய தமிழநம்பி ஐயா அவர்கள் பாவாணர் மடல்கள் குறித்து ஓர் அருமையான பொழிவை நிகழ்த்தினார். அதன் விரிவை நூலாக நண்பர் சீனு அரிமாப் பாண்டியன் ஐயா வெளியிடவுள்ளதாக அறிந்தேன். அப்பொழிவின் எழுத்துப்படியைத் தன் வலைப்பதிவில் பதிவிடுமாறு தமிழநம்பி ஐயாவைக் கேட்டுக் கொண்டுள்ளேன். அதை வாசிக்க இணைப்பு இதோ: http://thamizhanambi.blogspot.com

14.4.11

ஆவுடையக்காள் பற்றிப் பாரதியார் கூறாது மறைத்ததேன்?-ஆய்வறிஞர் சு.வேங்கடராமனின் கேள்வி • தேவமைந்தன் 'அறியப்படாத தமிழ் இலக்கிய வரலாறு' என்ற தலைப்பில் மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்டுள்ள முனைவர் சு. வேங்கடராமனின் ஆய்வு நூலை வாசித்துக் கொண்டிருந்தேன். எட்டாவது இயலான 'ஆவுடையக்காள் வேதாந்தப்பாடல் திரட்டு' எனக்குப் பல்வேறு வகைகளில் அதிர்ச்சியளித்தது. இதில் பாரதியாரின் படைப்பியல் நேர்மை குறித்து எழுப்பப் பட்டுள்ள ஐயத்துக்குப் பாரதி ஆய்வாளர்களும் அன்பர்களும் விளக்கம் கொடுத்துள்ளார்களா என்பது இதைத் தட்டெழுதிக் கொண்டிருக்கும் இக்கணம் வரை எனக்குத் தெரியவில்லை. இந்த ஐயத்தை எழுப்பியிருப்பவர் மகாகவி பாரதியார் மேல் காழ்ப்புணர்வு கொண்டவரல்லர். பாரதியாரின் படைப்புகளையும் பாரதி ஆய்வாளர்களின் ஆய்வுகளையும் திறம்படக் கற்றவர். ஆய்வு மாணவர்களின் ஆய்வேடுகளைக் கண்டிப்பான மதிப்பீட்டுக்கு உள்ளாக்குபவர். நேர்மையான புறநிலைத் தேர்வாளர் என்றும் பெயரெடுத்தவர். மறைந்த ஞானபீட விருதாளரும் புகழ்மிக்க எழுத்தாளருமான அகிலனைக் குறித்து முதன்முதலாக ஆராய்ச்சி செய்தவர். தமிழ் வளர்த்த வைணவம் பற்றியும் அரையர் சேவை குறித்தும் முறையான ஆய்வு நிகழ்த்தி நூல்கள் வெளியிட்டவர். பழுத்த பணி - ஆய்வு அனுபவம் கொண்டவர். மதுரை காமராசர் பல்கலைக் கழகத் தமிழியல் புலத்தில் இக்கால இலக்கியத்துறையின் தலைவராகவும் பேராசிரியராகவும் உள்ளவர். பாரதியின் படைப்பியல் நேர்மை குறித்து அவர் எழுப்பியுள்ள வினாவை அப்படியே இங்கு திண்ணை குழாம் முன் வைக்கிறேன். "மகாகவி பாரதியார் கவிதைகளிலோ, உரைநடையிலோ ஆவுடையக்காளைப் பற்றி ஏன் குறிப்பிடவில்லை என்பதே அந்த வினா. ஒளவையார், சகோதரி நிவேதிதை ஆகிய பெண்களைக் கொண்டாடும் பாரதி.. எங்கோ, ஜப்பானில் ஹைக்கூ கவிதை எழுதிய கவிஞர் பெயர்களை எல்லாம் விதந்து கூறும் மகாகவி தம் மனைவி செல்லம்மாளின் ஊரான கடையத்திற்கு அருகேயுள்ள செங்கோட்டையில் வாழ்ந்தவரும் தமக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியவருமான ஆவுடையக்காள் பற்றி எந்தக் குறிப்பையும் ஏன் பதிவு செய்யவில்லை? என்ற வினா விசுவரூபம் எடுத்து நிற்கிறது. இளம் வயதில் விதவையாகி, ஊரின் ஏச்சையும் பேச்சையும் சாதிப்புறக்கணிப்பையும்(அந்நாளில் ஆவுடையக்காள் அந்தணர்களால்சாதிப்பிரஷ்டம்சாதிநீக்கம்செய்யப்பட்டவர்)தாண்டி,ஆத்மானுபவத்தில் தான் வளர்ந்ததோடு மற்ற பெண்களுக்கும் உபதேசம் பயிற்சி தந்து, நிஜமான பெண் விடுதலையைச் செய்துகாட்டிய செயல் வீரர் அக்காள். பெண் விடுதலை பேசும் பாரதியார், ஆவுடையக்காள் பற்றி எதுவும் கூறாமல் போனது தற்செயல் நிகழ்வா? திட்டமிட்ட இருட்டடிப்பா? அக்காள் பெண் கவிஞர் என்பதுதான் இதற்கான காரணமா? என்னதான் சரிநிகர் சமானமாய் வாழ்வோம் என்று பாடினாலும், பாரதி ஆண் என்பதால், ஆவுடையக்காளைப் பற்றிக் கூறவில்லை என்பது எஞ்சி நிற்கும் விடை. கோமதி ராஜாங்கம் அம்மையார் இத்தகவல்களைத் தராவிட்டால் தமிழ் உலகிற்கு இந்த அகச்சான்றுகள் தெரியாமலே போய் இருக்கும். (பக்.97-98)" கோமதி ராஜாங்கம் என்பவர் (சங்கரக்ருபா - 1964 நவம்பர் -டிசம்பர்)எழுதிய ஆவுடையக்காள் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு அக்காள் குறித்த விவரங்களைச் சு.வே. தந்துள்ளார். திருமதி கோமதி ராஜாங்கம், பல ஆண்டுகளாக நெல்லை, நாகர்கோவில் மாவட்டங்களில் பல ஊர்களில் (செங்கோட்டை, சுந்தர பாண்டியபுரம், சாம்பூர் வடகரை, ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி, முன்னீர்ப் பள்ளம், நாகர்கோயில் வடிவீச்சுரம்) களஆய்வு செய்து அக்காளின் பாடல்களையும் வாழ்க்கைக்குறிப்புகளையும் தேன் கூட்டும் தேனீபோலத் திரட்டியுள்ளார். ஆவுடையக்காளின் கவிப்புலமையை மிகவும் அனுபவித்து ஒளவையாருடன் அவரை ஒப்பிட்டுள்ளார். "நம் தமிழ் நாட்டுப் புலவர்களில் முன்னணியில் நிற்கும் ஸ்ரீஒளவைப் பாட்டிக்கு நிகரானவள் என்பதை மட்டும் துணிந்து கூறுவேன். இதுபோன்று எத்தனை மாணிக்கங்கள் நம்நாட்டுப் புனித மண்ணில் மறைந்து கிடக்கின்றனவோ? அவைகளை வெளிக்கொணர எத்தனை உ.வே.சாமிநாதஅய்யர்கள்அவதாரம்செய்யவேண்டுமோ?(ஆவுடையக்காள் பாடல் திரட்டு, நித்யானந்த கிரிசுவாமிகள் (ப.ஆ), ப.xx) கோமதிராஜாங்கம் அம்மையாரின் மேற்கண்ட வினா, தமிழ் ஆய்விற்கு விடப்படும் சவால். ஆனால், அவை பொன்னெழுத்துக்களால் வடித்தெடுக்கப்படத்தக்கவை என்றும் சு.வே. கருதுகிறார்.(ப.96) இனி அடுத்து வரும் பகுதியை சு.வே. அவர்கள் நடையில் தருவதுதான் அவர் கேட்டுள்ள கேள்விக்கு உதவும் என்பதால் அப்படியே தருகிறேன். "திருமதி கோமதி ராஜாங்கம் நெல்லை மாவட்டம் கடையத்தில் பிறந்து ஸ்ரீவைகுண்டத்தில் வாழ்க்கைப்பட்டவர். கோமதியின் தாயார் சீதாலட்சுமி, மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பாரதிக்கு உடன்பிறந்த மூத்த சகோதரி. பாரதியார் ஆவுடையக்காள் பாடல்களை நன்கு கேட்டுக் கேட்டு அவைகளில் நெஞ்சம் பறிகொடுத்த பாவியாவார். ஆவுடையக்காளிடமிருந்து அவர் (பாரதி) நிறையவே தாக்கம் பெற்றிருக்கிறார். வேதாந்தக் கருத்தாக்கம் மட்டுமல்லாமல், சொற்கள், பெண்ணுரிமைச் சிந்தனை என்று பல நிலகளில் மகாகவி பாரதியாருக்கு ஆவுடையக்காளே முன்னோடி. அக்காளின் பாடல்களை முதன் முதலாகப் படிப்பவருக்கு இது புலப்படும். இதனைக் கோமதி ராஜாங்கம் அம்மையார் கூறும் அகச்சான்று புலப்படுத்தும்; உறுதிசெய்யும். "ஸ்ரீசுப்பிரமணிய பாரதியாருக்கு ஸ்ரீஅக்காள் அவர்களின் பாடல்கள் என்றால் உயிர். அவரும் ஸ்ரீஅக்காள் வரலாற்றை அறிய முயற்சி செய்ததாகத் தெரிகிறது. அவளுடைய அநேகப் பாடல்களின் கருத்துக்களை ஒட்டியே அவரும் (பாரதியாரும்) அநேக வேதாந்தப் பாடல்களைப் புனைந்திருக்கிறார். அவர் (பாரதியார்) எனது தாயார் அவர்களுக்குச் சகோதரியின் கணவராகையால், (என்) சிறுவயதில் அவர் (பாரதியார்) மூலமாகவும் சில தகவல்களை அறியும் (அக்காள் பற்றிய தகவல்கள்) பாக்கியம் கிடைத்தது (ஆவுடையக்காள் பாடல் திரட்டு, பக். xix,xx). [அடைப்புக் குறிகளுக்குள் உள்ளவை சு.வே. அவர்களால் விளக்கத்திற்காகத் தரப்பட்டவை. தடித்த எழுத்துகள் இக்கட்டுரையாசிரியனால் இடப்பட்டவை.] ஆவுடையக்காள் குறித்துச் சுருக்கமாகக் காண்போம். நெல்லை மாவட்டம் செங்கோட்டையைச் சார்ந்தவர் அக்காள். காலம் கி.பி. 17ஆம் நூற்றாண்டு. அந்நாட்களில் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்தது செங்கோட்டை. அக்காள், சிறுவயதிலேயே வயதுக்கு வருமுன்பே மணமாகிச் சில காலத்திலேயே கணவனை இழந்து விதவையானவர். அப்பொழுது தன் அம்மாவும் உறவினர்களும் ஓவென்று அழுதபொழுது, அவர்களைப் பார்த்து அக்காள் கேட்டாராம்:- "அவர்கள் வீட்டில் பையன் இறந்தால் நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?" ஊரார் எதிர்ப்பையும் மீறி அக்காளின் தாயார் தன் வீட்டிலேயே ஆவுடைக்குக் கல்வி கற்பித்தாள். பருவமெய்தியதும் குலவழக்கப்படி கட்டாயமாக விதவைக் கோலத்துக்கு ஆவுடையக்காள் உட்படுத்தப்பட்டு வருந்திக் கொண்டிருக்கும் காலத்திலே அவ்வூருக்கு வர வாய்த்த, தஞ்சை மாவட்டத் திருவிசைநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள், அக்காளுக்கு ஆறுதல் கூறியதோடு மந்திரோபதேசமும் செய்து வைத்திருக்கிறார். ஊராரின் பேச்சும் கேலியும் குறித்துக் கவலைப்படாதே என்று அவர் உபதேசித்ததை அக்காள். தன் 'பண்டிதன் கவி' என்ற பாடலில் (ஆவுடை அக்காள் பாடல் திரட்டு, பா.23;ப.3) "துர்ஜனங்கள் வார்த்தையைச் செவியிலும் கேளாதே!" என்று குறிப்பிட்டுள்ளார். மிக விரைவிலேயே நிர்விகல்ப சமாதி கிட்டும் சுவானுபூதி நிலை கைவரப் பெற்றார். மிகக் குறைந்த கல்வியறிவு உடையவர்களும் எளிதில் புரிந்து கொள்ளுமாறு இசைப்பாடல்களாகவும்,நாட்டார்நாநவில்இலக்கியவகைப்பாடல்களாகவும் பாடியுள்ளார். ஓர் ஆடி அமாவாசையில் குற்றால மலை மீதேறிச் சிறிது நேரம் தியானம் செய்து வருவதாகச் சொல்லிப் போனவர் திரும்பவில்லை என்பதுடன் எவ்வளவு தேடியும் ஆவுடையக்காளின் சடலம் கூடக் கிடைக்கவில்லையாம். இனி, அக்காளின் வேதாந்தப் பாடல்களின் பகுதிகளைக் காண்போம். இவை பாடப்பெற்ற காலம் 17ஆம் நூற்றாண்டு என்பதை மனத்துள் கொண்டு பார்க்கும் பொழுதுதான் அவர் அருமை நமக்கு மிகவும் விளங்கும். இவை 'ஆவுடையக்காள் வேதாந்தப் பாடல் திரட்'டிலிருந்து சு.வே. கொடுத்துள்ளவை:- அத்வைத விளக்கம் "எங்கிருந்தெங்கே வந்தாண்டி அவன் எங்கும் நிறைந்தவன்தாண்டி மாயையினால் மறைந்தாண்டி இவன் மனதுக்குள்ளே இருந்தாண்டி!" சாதிபேதமற்ற நிலை "கோத்திரங்கள் கல்பிதகுணங்கள் குடிகளும் போச்சே! குணாதீதமான பரபிரம்மம் நானென்பதாச்சே!" "மோகத்தைக் கொன்றுவிடு!" என்ற பாரதிக்கு மூலம் "மோகத்தை வெல்லாமல் மோசம் போகாதேயென்று" பயனென்ன? "காசிராமேசுவரம் சென்றாய் காகம்போல் மூழ்கிநின்றாய் உன்னாசை போச்சோ மூடா.." வேதாந்தக் கப்பல்/கப்பல் பாட்டு "தள்ளப்பா தள்ளு ஷண்மதவாதிகளைத் தள்ளு தொடுத்து அடித்து முடுக்கித் தள்ளு சோகமென்னும் சாகரத்தை அப்புறத்தில் தள்ளு ஏலேலோ ஏகாந்த ரஸம்! ஏலேலோ வேதாந்த ரஸம்!" குயில் கண்ணி "மனமும் பொய்யடியோ குயிலே மனக்கூடும் பொய்யடியோ! இனமும் பொய்யடியோ, குயிலே தனமும் பொய்யடியோ!" தீட்டு எதிர்ப்பு "எச்சில் எச்சிலென்று புலம்புகிறார் மானிடர்கள் எச்சில் இலாத இடம் இல்லை பராபரமே!" "உலகத்துப் பிள்ளையும் உன் கக்கத்துத் தீட்டன்றோ? உன்னுடைய வெட்கத்தை யாரொடும் சொல்வேன் பராபரமே!" "தீட்டென்று மூன்றுநாள் வீட்டைவிட்டு விலக்கி நாலாம்நாள் உதயத்தில் நன்றாய் உடல் முழுகி ஆசாரமாச்சுதென்று ஐந்தாம் நாள் முழுகி அகத்திலுள்ள பொருள் தொடுவாய் அகத்தீட்டுபோச்சோ?" -இங்கே முனைவர் சு.வே., பாரதியை ஆவுடையக்காளுடன் ஒப்பிட்டுக் கூறியிருப்பது ஆழ்ந்த சிந்தனைக்கு உரியது. பாரதிக்கு நூற்றாண்டுகள் முந்திய அக்காள் முற்போக்காய் விளங்க, காலத்தால் பிற்பட்ட பாரதி பிற்போக்குடன் விளங்குவதை, "ஆவுடையக்காளின் பாடல்கள் மூலம் பெண்சம உரிமை, சரிநிகர் சமானம் என்ற கருத்தாக்கத்தைப் பெற்ற மகாகவிகூட, இந்தத் தீட்டு என்று பெண்ணை அடிமைப்படுத்தும் கருத்தை எதிர்த்துக் குரல் எழுப்பவில்லை. மாறாக, அதை ஆதரித்தே பாடுகிறார். பாஞ்சாலி சபதத்தில் பாஞ்சாலி, ".......மாதவிலக்காதலால் ஓராடை தன்னில் இருக்கிறேன்...." ...என்று கூறுகிறாள். ஆவுடையக்காள் இதில் உச்சநிலையில், ஆணாதிக்கக் கருத்தியலை எதிர்த்துக் குரல் எழுப்பியது அறியத்தக்கது" என்று எடுத்துக் கூறியுள்ளார். தமிழின் முதல் பெண்ணியப் பாவலர் என்று ஏன் ஆவுடையக்காளை(கி.பி. 17ஆம் நூற்றாண்டு) நாம் குறிக்கக் கூடாது? ஏன் அத்தகைய தன் முன்னோடியை பாரதியார் தன் படைப்புகளில் எங்கும் குறிப்பிட்டுப் பதிவு செய்யத் தவறினார்? என்ற கேள்விகளை நம் உள்ளத்துள் விதைத்துள்ளார் முனைவர் சு. வேங்கடராமன். பாரதி அன்பர்களுள் யாரேனும் இதற்கு விடை தர முன்வருவார்களா? ****** இக்கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் புத்தகம்: அறியப்படாத தமிழ் இலக்கிய வரலாறு மீனாட்சி புத்தக நிலையம், மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை - 625 001. பக்கம்:148. விலை: ரூ.55.00 பேசி: அலுவலகம் - 0452 2345971. வீடு - 2560517. மின்னஞ்சல்: meenakshiputhakam@hotmail.com நன்றி: திண்ணை.காம்

24.3.11

பாரதியாரின் தனித்தன்மை வாய்ந்த சிந்தனைகள் - தேவமைந்தன்

"அதென்ன, நேரடியாகச் சிந்திப்பவர் என்றோ சுற்றி வளைத்துச் சிந்திக்காதவர் என்றோ கவிஞர்கள் சிலரைப் பற்றித் தலைப்பிடுகிறீர்கள்?" என்று நண்பர் கேட்டார். எனக்கு செர்வாண்டெசின் டான் குவிசோட்'டில் வருமொரு வாக்கியம் நினைவுக்கு வந்தது. "என் சிந்தனைகள் [கம்பளி சேகரிப்பதுபோல்] ஞாபகமறதியில் எங்கெங்கோ ஓடிவிடுகின்றன!"(My thoughts ran a wool-gathering. - CERVANTES --Don Quixote. 'கம்பளி சேகரிப்பதுபோல்' என்று ஒரு வசதிக்காக இடைப்பிறவரல் அடைப்பில் கொடுத்துள்ளேன். wool gathering என்பது மொழிமரபுப்படி absent-mindednessஐக் குறிக்கும்) செர்வாண்டெசின் புலப்பாடுபோல, படைப்பாளர்கள் பலர் தாங்கள் எதைச் சொல்ல வருகிறார்களோ அதில் நிலைக்காமல் எங்கெங்கோ சுற்றி விட்டு 'அடடா! எங்கோ போய் விட்டோமே.." என்று தன்னிரக்கம் கொண்டு, மீண்டும் தாங்கள் விட்ட புள்ளியிலிருந்து தொடர்வார்கள். பாரதியார் அப்படிப்பட்டவர் அல்லர். சொல்ல வந்த செய்தியைச் சுளைபோலக் கொடுப்பவர். 'வெட்டொன்று துண்டிரண்டாக'ச் சொல்பவர். பாரதியாரின் கட்டுரைகள் தொடக்கத்தில் நான்கு பகுதிகளாக வெளிவந்தன. பின்னர், 'பாரதி நூல்கள் என்று' தனித்தனியாக - பகுதிகள் பலவாகப் பதிப்பிக்கப் பெற்றன. பின்னர் சென்ற எழுபதுகளில்தாம் அவை முழுவதும் கொண்ட தொகுப்புகளாக வெளிவரத் தொடங்கின. களத்திலிருந்து பொறுக்குமணிகளாகச் சிலவற்றை முதலிலும், கதிர்களாகச் சிலவற்றைப் பின்னாலும் - அவற்றிலிருந்து, இங்கே தருகிறேன். **** ஒருவர்க்கொருவர் மனத்தாலும் தீங்கு நினைப்பதில்லை. ஒருவர்க்கொருவர் பயப்படல் இல்லை. மானிடரே, இந்த விரதம் எடுத்துக் கொள்ளுங்கள். இது பிழைக்கும் வழி. ** கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும், நடுவயதிற்குள்ள மனத்திடனும், இளைஞனுடைய உற்சாகமும், குழந்தையின் இருதயமும், தேவர்களே - எனக்கு எப்போதும் நிலைத்திருக்கும்படி அருள் செய்க! ** எதிலும், எப்போதும், யாருக்கும் பயந்தும், மனம் வேறு செய்கை வேறாக நடிக்கலாகாது. ** பக்தியாவது தெய்வத்தை நம்புதல்; குழந்தை தாயை நம்புவது போலவும், பத்தினி கணவனை நம்புவது போலவும், பார்த்த பொருளைக் கண் நம்புவது போலவும், தான் தன்னை நம்புவது போலவும், தெய்வத்தை நம்பவேண்டும். ** யோக்யதை இல்லாத பூசாரி தொட்ட மாத்திரத்தில் பகவான் கல்லை விட்டுப் போய் விடுவார். ** பரிபூரண விருப்பத்துடன் தியானம் செய். சோர்வும் அதைரியமும் விளைவிக்கத்தக்க எண்ணங்களுக்கு இடம் கொடாதே. ஊற்றிலிருந்து நீர் பெருகுவது போல, உனக்குள்ளிருந்தே தெளிந்த அறிவும், தீரத்தன்மையும், சக்தியும் மேன்மேலும் பொங்கிவரும். உன் இஷ்டசித்திகள் எல்லாம் நிறைவேறும். இது சத்தியம். அநுபவத்திலே பார். ** எதையும் தோன்றிய மாத்திரத்திலே சூட்டோடு செய்யும் போது, அதில் வெற்றி பெரும்பாலும் நிச்சயமாகக் கிடைக்கும். ** தைரியமாக, நீங்கள் உண்மை என்று உணர்ந்தபடி நடவுங்கள். ** சிதம்பரமே ஸ்ரீரங்கம்; அதுவே பழனிமலை. எல்லாப் புண்ணியத் தலங்களுமே ஜீவன் முக்திச் சின்னங்கள். ** இகலோக இன்பங்கள், பரலோக இன்பங்கள் இரண்டுமே இறைவனிடம் வேண்டலாம். இகலோகத்தில் நமக்குத் தெய்வம் தர வேண்டிய மூன்று சக்திகள்: 1. அறிவு 2. செல்வம் 3. தைரியம் தெய்வம் எல்லாம் செய்யும். ** நம்பிக்கையே காமதேனு. அது கேட்ட வரமெலாம் கொடுக்கும். நம்பினார் கெடுவதில்லை - இது நான்குமறைத் தீர்ப்பு. ** மனிதனைக் கெடுக்கும் உட்பகை - நம்பிக்கைக் குறைவு. ** தற்கால அசௌகரியங்களையும் கஷ்ட நஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் மனிதர் உண்மை என்று கண்டதை நடத்தித் தீர்த்துவிட வேண்டும். ** நம்பு; கேள், ஓயாமல் தொழில் செய்து கொண்டிரு. பயனுக்கு அவசரப்படாதே. தெய்வம் நிச்சயமாக வரம் கொடுக்கும். ** தனக்குத் தானே நாயகனாயிருக்கும் உரிமை எல்லா மனித உரிமைகளிலும் பெரிது. ** திருவிழாவில் தெய்வம் நம்மைக் கூப்பிடுகிறது. பூசாரி தடுக்க நாம் இடம் கொடுக்கலாமா? சிறுபணக்காரர் வந்தால் பூசாரி பல்லைக் காட்டுவான். திருவிழாக் கடவுளுக்குக் கண் குருடில்லை. இப்படிப்பட்ட வேற்றுமைகளை அவர் பொறுக்க மாட்டார். உள்ளத்திலே பாவம் வெட்கமாக வந்து சுடாவிட்டால், வெளியே தெய்வகோலமாக வந்து சுடுகின்றது. ** பசி வந்தால் கோபம் வருகிறது. பசி அடங்கினால் கோபம் அடங்குகிறது. அன்னதானமே உத்தம தர்மம். *** மதுரையிலே ஒரு சாஸ்திரியார் நேற்று மாலை இறந்து போனதாக வைத்துக் கொள்ளுவோம்.அவர் திரும்பவும் பிறப்பாரா? தெரு வழியாக ஒருவன் நடந்துபோகும்போது காலிலே ஒரு சிற்றெறும்பு மிதிபட்டு இறந்து போவதாக வைத்துக் கொள்ளுவோம். அது திரும்பவும் பிறக்குமா? இதையெல்லாம் பற்றிச் சாஸ்திரங்கள் மிகவும் விஸ்தாரமாகப் பேசியிருக்கின்றன. அவற்றிலே படித்துக் கொள்ளலாம். ஆனால், நான் இப்போது சொல்ல வந்த கதை இதுவன்று. நான் சொல்ல வந்த விஷயம் ஹிந்துஸ்தானத்தின் புனர்ஜன்மம். 'ஹிந்து ஸ்தானம்' என்பது ஹிந்துக்களின் ஸ்தானம். இது நமது தேசத்திற்கும், தேசத்திலுள்ள ஜனக்கூட்டத்திற்கும் பெயர். இந்த ஜனக்கூட்டத்திற்கு 'பாரத ஜாதி'' என்று பெயர் சொல்வதுண்டு. ** கோவிலுக்குப் போனாலும் சரி; போகாவிட்டாலும் சரி! தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி; கும்பிடாவிட்டாலும் சரி; பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினால், தெய்வம் அருள்புரியும். துளிகூட, ஓர் அணுக்கூட மற்றவர்களை ஏமாற்றுவதே கிடையாது என்று ஒருவன் பரிபூரண சித்தி அடைவானாகில், அவனே ஈசுவரன். குருவி, காக்கை, காக்கை, புழு, எறும்பு ஒரு ஜந்துவுக்கும் வஞ்சனை பண்ணக் கூடாது. வஞ்சனை இல்லாமல், "ஏதோ உலகத்திற் பிறந்தோம். தெய்வம் விட்டதே வழி" என்று ஆற்றின் மீது மிதந்து செல்லும் கட்டைபோல் உலக வெள்ளத்தில் மிதந்து செல்ல வேண்டும். அங்ஙனம் முற்றிலும் பராதீனனாய் எவன் ஈசுவரன்மீது சகல பாரத்தையும் போட்டுவிட்டு நடக்கிறானோ, அவனுக்குத் தெய்வத் தன்மை உண்டாகும். இதில் சந்தேகமே கிடையாது. ** நடந்தது எல்லாம் போக; இனிமேல் நடக்க வேண்டிய காரியத்தை நாம் யோசனை செய்யவேண்டும். கோவில் குருக்களுக்கு இனி நம்முடைய தேசத்து ஜனங்கள் ஒத்து நடக்க வேண்டுமானால், ஜனங்களிடம் பூசாரிகள் எதையும் மறைக்காமல், எந்த விஷயத்திலும் ஜனங்களை ஏமாற்றாமல், விஷயத்தைச் சொல்ல வேண்டும். "கடவுள் எங்கும் இருக்கிறாரே? எல்லாம் கடவுள்தானே? ஊருக்கு நடுவில் ஒரு கோவிலைக் கட்டி, அதில் ஒரு கல்லையோ செம்பையோ நட்டு, அங்கேதான் எல்லோரும் வந்து கும்பிட வேண்டும் என்ற நியமம் எதற்காக?" என்றால், ஜனங்களுக்குள் ஐக்யம் ஏற்படுவதற்காக. கல்லில் மாத்திரம் தெய்வம் இருக்கிறதென்று நம்பி, நம்மைச் சூழ்ந்த ஜனங்களிடம் தெய்வம் இல்லையென்று நம்பலாமா? கவனி! அண்ட பகிரண்டங்கள் எல்லாவற்றையும் உள்ளே இருந்து ஆட்டுவிக்கும் பரஞ்சுடரே நம்மைச் சூழும் அநந்த கோடி ஜீவராசிகளாக நின்று சலிக்கிறது. இதுதான் வேதத்தின் கடைசியான கருத்து. 'தன்னிடத்தில் உலகத்தையும் உலகத்தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்' என்பது முன்னோர் கொள்கை. உன்னுடைய ஆத்மாவும் உலகத்தினுடைய ஆத்மாவும் ஒன்று. நீ, நான், முதலை, ஆமை, ஈ, கருடன், கழுதை --- எல்லோரும் ஒரே உயிர். அந்த உயிரே தெய்வம். ஒன்றுகூடிக் கடவுளை வணங்கப் போகுமிடத்து, மனிதரின் மனங்கள் ஒருமைப்பட்டு, தமக்குள் இருக்கும் ஆத்ம ஒருமையை அவர்கள் தெரிந்து கொள்ள இடம் உண்டாகுமென்று கருதி முன்னோர் கோவில் வகுத்தார்கள். ஊரொற்றுமை கோவிலால் நிறைவேறும். வீட்டுக்குள் தனியாகச் சிலை வைத்துக் கும்பிடுவது குடும்ப ஒருமை உண்டாகும் பொருட்டாக. கவனி! நல்ல பச்சைத் தமிழில் சொல்லுகிறேன்; ஆணாகிய நீ கும்பிடுகிற தெய்வங்களில் பெண் தெய்வம் எல்லாம், உன் தாய், மனைவி, சகோதரி, மகள் முதலிய பெண்களிடத்தே வெளிப்படாமல் இதுவரை மறைந்து நிற்கும் பராசக்தியின் மகிமையைக் குறிப்பிடுகின்றன. அம்மன் தாய். அவளைப் போலவே நம்முடைய பெண்கள், மனைவி, சகோதரி, மாதா முதலியோர் ஒளி வீச நாம் பார்க்க வேண்டும் என்பது குறிப்பு. ஆண் தெய்வமெல்லாம், நீ, உன் பிதா, உன் சகோதரர், உன் மகன், உன்னைச் சேர்ந்த ஆண்மக்கள் அடைய வேண்டிய நிலைமையைக் குறிப்பிடுகின்றன. சிவன் நீ ; சக்தி உன் மனைவி . விஷ்ணு நீ ; லக்ஷ்மி உன் மனைவி. பிரம்மா நீ ; சரஸ்வதி உன் மனைவி . இதைக் காட்டி மிருக நிலையிலிருந்து மனிதரைத் தேவ நிலையிற் கொண்டு சேர்க்கும் பொருட்டாக ஏற்பட்ட தேவப் பள்ளிக்கூடங்களே கோயில்களாம். இதைப் பூசாரிகள் மறைக்கிறார்கள். கும்பிடுவோர் நித்ய அடிமைகளாகவும், தெய்வாம்சம் உடையோர் தாமாகவும் இருந்தால் நல்லது என்று பூசாரி யோசனை பண்ணுகிறான். பிறரை அடிமை நிலையில் வைக்க விரும்புவோரிடம் தெய்வாம்சம் ஏற்படாது. ** இந்தக் காலத்தில், பல பொய்கள் இடறிப்போகின்றன. பல பழைய கொள்கைகள் தவிடு பொடியாகிச் சிதறுகின்றன. பல அநீதிகள் உடைக்கப்படுகின்றன. பல அநியாயக்காரர்கள் பாதாளத்தில் விழுகிறார்கள். இந்தக் காலத்தில், யாருக்கும் பயந்து நாம் நமக்குத் தோன்றுகிற உண்மைகளை மறுக்கக் கூடாது. பத்திரிகைகள்தான், இப்போது உண்மை சொல்ல, சரியான கருவி. பத்திராதிபர்கள் இந்தக் காலத்தில் உண்மைக்குப் புகலிடமாக விளங்குகிறார்கள். ** இன்னும் எத்தனை எத்தனையோ சிந்தனை அலைகள் பாரதி எனும் கடலின் வாசிப்புக் கரையில் வந்து மோதுகின்றன. அவை, ஆழமிக்க நடுக்கடலுக்குச் சென்று பார்க்க உதவும் தூண்டுதல்கள் மட்டுமே. **** நன்றி: திண்ணை.காம்

18.2.11

தமிழ் ஒருங்குகுறி: கரவு வினைகளும் காப்பு முயற்சிகளும்! - தமிழநம்பி உலகளாவிய அளவில் கணிப்பொறியில் எல்லாரும் எல்லா எழுத்து முறைகளையும் எழுதவும் படிக்கவும் இயலும்வகை ஏற்படுத்தப்பட்ட எழுத்துத் தகைமைக் குறியீடே ஒருங்குகுறி (அல்லது ஒருங்குறி) ஆகும். தமிழ்நாட்டரசு கடந்த ஆண்டு நடத்திய தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் ஒருங்குகுறியை ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தது பலருக்கும் தெரிந்திருக்கும். ஒருங்குகுறி குழுமக்கூட்டிணைப்பு (Unicode consortium) என்னும் அமைப்பே உலகிலுள்ள மொழிகளின் எழுத்துக்களுக்கு ஒருங்குகுறி உருவாக்கிப் பேணுகின்றது. வணிக நோக்குள்ள கணிப்பொறி நிறுவனங்கள் இணைந்து உலக எழுத்துமுறைகளைத் தகைமைப்படுத்த ஏற்படுத்தியதே இவ்வமைப்பாகும். இதில் பல்வேறுநாட்டு அரசுகளும், கணிப்பொறி, மொழி தகுதியுடைய தனியரும் அமைப்பாரும் உறுப்பினராக உள்ளனர். இவ் அமைப்பில் உறுப்பினராக இருந்த தமிழ்நாட்டரசு இடையில் கட்டணம் செலுத்தத் தவறியதால் உறுப்பாண்மையை இழந்துள்ளதாகவும், இப்போது கட்டணம் செலுத்தி உறுப்பினராக முயல்வதாகவும் கேள்விப்படுகிறோம். கிரந்தத்திற்கு ஒருங்குகுறி உருவாக்க வேண்டுமென ஒருங்குகுறிக் குழுமக்கூட்டமைப்பிற்கு அனுப்பப்பட்ட முன்மொழிவுகளில், மூன்று முன்மொழிவுகள் தமிழ்மொழிக்குப் பெருங்கேடு விளைவிப்பனவாகும். தமிழைச் சிதைத்து அழிக்கக்கூடியனவாகும். அவற்றுள் முதலாவது, காஞ்சி சங்கரமட சிரீரமணசர்மா, 26 கிரந்தக் குறிகளை ஒருங்குகுறித் தகைமைபாட்டுக்குள் கொண்டுவந்து அதனைத் ‘தமிழ் நீட்சி அல்லது நீட்டித்த தமிழ்’ என்று வழங்கவேண்டுமென 10.07.2010 நாளிட்டு அனுப்பிய முன்மொழிவாகும். இம் முன்மொழிவும் தமிழுக்குக் கெடுதி செய்யும் பிறவும் கனடா நாட்டுப் பேராசிரியர் செல்வகுமார் மற்றும் சிலரின் முயற்சியால் பலருக்குத் தெரிய, 2010 அக்குதோபர் பிற்பகுதியில் உலகோர் அனைவர்க்கும் தெரிந்தது. ஒருங்குகுறி அறிஞர் திரு. முத்து. நெடுமாறன் அளித்த உடனடி விளக்க மறுப்பினை ஏற்று ஒருங்குறிக் குழுமக்கூட்டிணைப்பு சிரீரமண சர்மாவின் மேற்கூறிய முன்மொழிவைப் புறக்கணித்துவிட்டது. தமிழுக்குக் கேடு விளைவிக்கும் இரண்டாவது முன்மொழிவு, நா.கணேசன் என்பார் (அமெரிக்காவில் ‘நாசா’ வில் வேலை செய்வதால் இவரை நாசா கணேசன் என்றுங் கூறுகின்றனர்), 68 கிரந்தக் குறியீடுகளோடு தமிழ் எழுத்துக்கள் எ, ஒ, ழ, ற, ன என்னும் ஐந்துடன் எகர உயிர்மெய்க் குறி, ஒகர உயிர்மெய்க் குறி ஆகிய இரண்டையும் சேர்த்து 7 தமிழ்க் குறிகளை கிரந்தத் தொகுப்பில் கலந்து 75 குறிகளைக் கொண்ட கிரந்தத்தமிழ்க் கலவைக் குறியிடுகளை உருவாக்க வேண்டும் என்று கூறியதாகும். நா.கணேசனுக்கும் சிரீரமணசர்மாவுக்கும் இடையே ஏற்பட்ட தருக்கத்தால் குழம்பிப்போன ஒருங்குகுறிக் குழுமக்கூட்டிணைப்பு, இம் முன்மொழிவை எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில், அக் குழுமக்கூட்டிணைப்பு இந்திய நடுவணரசின் உதவியை நாடியது. தமிழைத் தாரைவார்த்துக் கிரந்தத்தை நிலை நிறுத்தும் நா.கணேசன் முன்மொழிவில் சிறசிறு மாற்றங்கள் செய்து, ‘மணிப்பவள மொழிக்காகவும், சமற்கிருத மொழிக்காகவும்’ தமிழ் கலந்த கிரந்தக் குறியீட்டை ஏற்படுத்துமாறு ஒருங்குகுறி குழுமக்கூட்டிணைப்பிற்கு இழதிய அரசு தனது முன்மொழிவைத் தந்தது. இம் முன்மொழிவு, மேற்கூறிய 75 குறிகளுடன் வேறு சில குறிகளையும் இணைத்து 89 குறிகள் கொண்டிருந்தது. இதுவே, தமிழுக்குக் கேடு விளைவிக்கும் மூன்றாவது முன்மொழிவானது. நடுவணரசில் இத்துறைக்குப் பொறுப்பாக இருந்த தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் நடுவண் அமைச்சர் ஆ.இராசா இவ்வளவு நடந்தும், இவை தாய்த்தமிழின் அழிவிற்கு அடிகோலுபவை என்ற அக்கறை கொண்டிருந்ததாகவே தெரியவில்லை. நவம்பர் 2010 தொடக்கத்தில் ஒருங்ககுகுறி குழுமக்கூட்டிணைப்பு நடுவணரசின் முன்மொழிவு குறித்து முடிவெடுக்க இருந்த நிலையில், தமிழ்நாட்டிலும், உலகின் பிற பகுதிகளிலுமிருந்த செய்தியறிந்த தமிழர் கிளர்ந்தெழுந்தனர். அறிஞர் இராம.கி., பேரா.இ.மறைமலை, இ.திருவள்ளுவன், விடுதலை கி.வீரமணி ஆகியோர் முயற்சியால் தமிழ்நாட்டரசு 3.11.2010-இல் அறிஞர் கருத்தறியும் கூட்டம் நடத்தியது. இக் கூட்டத்தில் ஒருமனத்தோடு எடுத்த தீர்மானத்தின்படி முதல்வர் இந்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். இதன் விளைவாக இந்திய அரசு ஒருங்குகுறிக் குழுமக்கூட்டிணைப்பிற்குக் கிரந்தத்தோடு தமிழ்க் குறியிடுகளைக் கலப்பது தொடர்பாகத் தீர்மானிக்க இருந்த கூட்டத்தைத் தள்ளிவைக்குமாறு மடல் விடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், தமிழ்க்காப்பு இயக்கங்கள் சார்பில் சென்னையில், “ஒருங்குகுறியில் கிரந்தத் திணிப்பும் தமிழ்க்காப்பும்” என்ற தலைப்பில் நடைபெற்ற அரிய மாநாடு, தமிழ்க்காப்புத் தீர்மானங்களை நிறைவேற்றி தொடர்புடைய அனைவர்க்கும் விடுத்தது. தமிழ்நாட்டரசு, ஓய்வு பெற்ற நயனகர் திரு. மோகன் தலைமையில் தமிழ் ஒருங்குகுறி அமைப்பு குறித்து அனைத்துக் கருத்துக்களையும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கக் கீழ்க்காணும் 14 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளதாக 18.1.2011-இல் அறிவித்தது. பேரா.இராசேந்திரன், துணைவேந்தர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம். முனைவர் வா.செ.குழந்தைசாமி, முன்னாள் துணைவேந்தர் பேரா. மு.ஆனந்தகிருட்டிணன், தலைவர், ஐ.ஐ.டி., கான்பூர் பேரா. பொன். கோதண்டராமன் (பொற்கோ) முனைவர் ஐராவதம் மகாதேவன் இ.ஆ.ப., (ஓய்வு) பேரா. சோ.ந.கந்தசாமி, செம்மொழித்தமிழாய்வு நடுவண் நிறுவனம் பேரா.கே.நாச்சிமுத்து, உலகத்தமிழ்ச்செம்மொழி தொல்காப்பியர் பேரவை பேரா. அ. அ. மணவாளன், செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம் முனைவர் ப. அர. நக்கீரன், இயக்குநர், தமிழ்இணையக் கல்விக்கழகம், சென்னை முனைவர் மு. பொன்னவைக்கோ, முதன்மைக் கல்வி அதிகாரி, எசு.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலைக் கழகம், காட்டாங்குளத்தூர் திரு. வைரமுத்து, தமிழ் அறிஞர், பாவலர் திரு. அரவிந்தன், தகவல் தொழில்நுட்ப வல்லுநர், சிங்கப்பூர் திரு. மணி. மணிவண்ணன், முதுநிலை இயக்குநர் (கணினி) முனைவர் என். தெய்வசுந்தரம், சென்னை. தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் சார்பில், 27.12.2010 அன்று காஞ்சிபுரத்தில், தமிழ் ஒருங்குகுறியில் கிரந்த எழுத்துக்களைக் கலக்கமுனையும் சங்கர மடத்தைக் கண்டித்துப் பெருமுழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சையில் 9.1.2011-இல் தாளாண்மை உழவர் இயக்கம், தமிழ்மக்கள் புரட்சிக் கழகம் முதலியோரால் தமிழ் ஒருங்குறியில் கிரந்தத் தாக்குதலைக் கண்டித்து மாநாடு நடைபெற்றது. புதுவையில் 30.01.2011-இல், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில், தமிழ் ஒருங்குகுறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாடு திரு.இரா.சுகுமாரன் முயற்சியில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்உரிமைக் கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் 4.2.2011-இல் பெருந்திரளானோர் கலந்து கொண்ட பெருமுழக்க ஆர்ப்பாட்டம் சென்னைப் பொது மருத்துவமனை எதிரில் நடந்தது. இவை தவிர, மறைமலைநகர், ஈரோடை, சேலம் போன்ற இடங்களிலும் தமிழ் ஒருங்ககுகுறியில் கிரந்தத்தால் விளையவிருக்கும் கேட்டை எதிர்த்துப் பொதுக்கூட்டங்களும் முழக்க ஆர்ப்பாட்டங்களும் பரவலாக நடந்துள்ளன. கிரந்தக்கலப்பை எதிர்க்கும் தமிழ்க்காப்புப் பரப்புரை ஊர்தி, ஓசூரிலிருந்து சென்னை நோக்கி விழிப்புணர்வூட்டிச் சென்றதைச் செய்தித்தாள்கள் விளக்கின. சென்னையிலும், தஞ்சையிலும், புதுவையிலும் நடந்த மாநாடுகளில் திருவாளர்கள் இராம.கி, பேரா.தெய்வசுந்தரம், இ.திருவள்ளுவன், ‘தென்மொழி’ பூங்குன்றன் ஆகியோர் செய்திகளைச் சிறப்பாக விளக்கி, வினாக்களுக்கும் விளக்கம் தந்தனர். பேரா. தெய்வசுந்தரம், நடுவணரசின் முன்மொழிவு தமிழ்மொழிக்கு எதிரானது மட்டுமன்று, தமிழ்த் தேசிய உணர்வுக்கு எதிரான வல்லாண்மை நடவடிக்கை என்றும் இந்துமதவெறியின் வெளிப்பாடு என்றும் மாநாடுகளில் விளக்கி கூறிவருகிறார். ஐயா இராம.கி., ஒளிப்பட உதவியுடன், எழுத்தில் தொடங்கி, ஒருங்குகுறி குறித்தும் இற்றைச் சிக்கல் குறித்தும் தெளிவாக மாநாடுகளில் விளக்கி வருகிறார். தஞ்சைத் தாளாண்மை உழவர் இயக்கம் அறிஞர் கருத்துக்களைத் தொகுத்து “ஒருங்குறித் தமிழ் மெய்யும் மீட்பும்” என்ற தலைப்பில் அரிய நூலை அச்சிட்டு வெளியிட்டுள்ளது. இணையத்தில், ‘நயனம்’, ‘வளவு’ வலைப்பதிவுகளில் நாக.இளங்கோவனும் இராம.கியும் விளக்கமாக எழுதியுள்ளனர். இன்னும் ‘தமிழ்நிலம்’, ‘தமிழநம்பி’, ‘புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்’ போன்ற வலைப்பதிவுகளிலும் விழிப்புணர்வுக் கட்டுரைகட்டுகள் எழுதப்பட்டுள்ளன. ‘வல்லமை’ வலைப்பதிவில் பெரியண்ணன் சந்திரசேகரன், செல்வக்குமார், தெய்வசுந்தரம் ஆகியோரின் அரிய விளக்கங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் ‘தென்மொழி’, ‘முதன்மொழி’ போன்ற இதழ்களும் புதுவைத் ‘தெளிதமிழ்’, ‘நற்றமிழ்’ இதழ்களும் கிரந்த ஒருங்குகுறிக் குறியீட்டு முயற்சியின் வழியே தமிழை சிதைத்தழிக்கும் முயற்சியைக் கண்டித்துள்ளன. தொடர்ந்து தமிழ்நாடெங்கும் நடுவணரசின் முன்மொழிவுக்கு எதிரான இயக்க நிகழ்வுகள் நடந்து வருகின்றன. தமிழநாட்டரசு அமைத்துள்ள குழு 12.2.2011 அன்று கூட இருப்பதாக அறிகிறோம். இக்குழு உறுப்பினர்களில் நா.கணேசனின் முன்மொழிவை ஏற்போர் பெரும்பான்மையராக உள்ளவாறு அமர்த்தப் பெற்றுள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. தமிழ்நாட்டரசு இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து உறுப்பினர்களைத் தேர்ந்துள்ளதா? - என்ற கவலை தமிழர் நெஞ்சை வருத்தி வருகிறது. நா.கணேசனுக்கு வேண்டியவரும் சமற்கிருதச் சார்புடையவரும் ஆகிய கொங்குப் பகுதித் தொழில்வல்லாரின் உறவினரும் அவருக்குக் கட்டுப்பட்டவர்களும் குழுவில் இடம்பெற்றுள்ளதாகக் கேள்விப்படுகிறோம். தமிழ்நாட்டரசு தமிழ்க் காப்பில் கவனம் செலுத்தவேண்டும். தமிழ் ஒருங்குகுறித் தொகுப்பில் கிரந்தம் கலக்கக்கூடாது. அவ்வாறே, கிரந்தக் கொத்தில் தமிழ் எழுத்துக் குறியீடுகள் இடம்பெறக் கூடாது. கிரந்த ஒருங்ககுகுறி தனியே இடம்பெற்றால், அதற்கு முதன்மைப் பன்மொழித் தளத்தில் (BMP) இடமளிக்கவே கூடாது. இதற்கு மாறாகக் கருத்துரைப்போர் எவரையும் வரலாறு மன்னிக்காது; அவர்கள் தீராப்பழி சுமக்க வேண்டியவர்களாவர் என்பதை வலியுறுத்துகின்றோம். இனக் காப்பில் தமிழ்நாட்டரசு இழைத்த இரண்டகத்தால் தமிழர் நெஞ்சில் ஏற்பட்டுள்ள கொதிப்பை, மொழிக்காப்பால் ஓரளவேனும் தணிக்க முனையட்டும். --------------------------------------------------------------------------------------------------------------------- (consortium : an association of several companies – The Compact Oxford Reference Dictionary) ___________________________________________________________________________ நன்றி உரைப்பு: இக்கட்டுரை எழுத உதவியாகச் சில செய்திகளுக்கு விளக்கம் அளித்தது திரு நாக. இளங்கோவனாரின் வலைப்பதிவு. அவருக்கு நம் நன்றி. அவர் வலைப்பதிவு: http://nayanam.blogspot.com ------------------------------------------------------------------- Copyright thinnai.com நன்றி உரைப்பு:‘தமிழநம்பி’வலைப்பதிவு http://thamizhanambi.blogspot.com

20.12.10

கிரந்தக் கலப்பு: கணிப்பொறிக் காலத்தில் தமிழை அழித்தொழிக்கும் முயற்சி!
- தமிழநம்பி -
1970-ஆம் ஆண்டில் கணிப்பொறி பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்தது. 1980 ஆம்ஆண்டுக்காலப் பகுதியிலிருந்தே கணிப்பொறியில் தமிழைப் பயன்படுத்தி வருகின்றோம். ஆனால், நம் தமிழறிஞர்கள், தமிழ்ப் பேராசிரியர்களில் மிகச் சிலரே கணிப்பொறியைப் பயன்படுத்துகின்றனர். தமிழாசிரியப் பெருமக்களோ, (மிகச் சிறுபான்மையர் தவிர, மற்றெல்லாரும்) பாடத்திட்டத்தில் வந்துள்ள பாடங்களைத்தவிர வேறெதையும் பார்க்கவும் விருப்ப மில்லாதவர்களே! இந்நிலையில், தமிழ்ப்பகைவர் மிக விழிப்பாகச் செயற்பட்டு, கணிப்பொறிப் பயன்பாட்டைக் கொண்டே தமிழை அழித்தொழிக்கும் முயற்சியில் திறக்கரவுடன் முனைந்துள்ளனர். பெரும்பான்மைத் தமிழர்கள் என்ன நடக்கிறதென்றே அறியாதவர்களாக இருக்கின்றார்கள்.
அச்சு நூல்கள் எதிர்காலத்தில் எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்று கூறஇயலாது. எல்லா ஆவணங்களும் கணிப்பொறி வழியே எழுதப்படுகின்ற காலம்வந்துவிட்டது. எல்லா நூல்களுமே கணிப்பொறி வழி எழுதிக் காக்கப்படுகின்றன.இந்நிலையில் கணிப்பொறியையே புறக்கணிக்க நினைப்பது பேதைமை. காலங்காலமாகத் தமிழ்அழிப்பு வினையில் ஈடுபட்டு வருகின்றவர்கள், இந்தச் சூழலைப்பயன்படுத்திக் கிரந்தக் கலப்பின்வழி, தமிழ்ச் சிதைப்புக்கும் அழிப்புக்கும் மிகச் சூழ்ச்சியாக முனைந்துள்ளனர்.

இக் கரவுவினை பற்றித் தமிழர்களிடத்தே எந்த விழிப்பும் இல்லாத நிலைஇரங்கத் தக்கதாகும்! தமிழர்களிடம் இதைப்பற்றிய விழிப்புணர்வைஏற்படுத்துவது இன்றைய இன்றியமையாக் கடமையாகும். இப்பொழுது எழுந்துள்ள இச்சிக்கலை நுட்பமாக அறிந்துகொள்ளாவிட்டாலும் தாய்த்தமிழைக் காக்கும் நோக்கில் எச்சரிக்கை உணர்வுடன் செய்திகளைப் புரிந்துகொண்டு செயல்படவேண்டிய நிலையில் தமிழர்கள் இருக்கின்றனர்.

இதைப்பற்றிப் புரிந்துகொள்ள கிரந்தம் பற்றியும், கணிப்பொறியில் இப்போ தைய தமிழ்ப் பயன்பாட்டு நிலை பற்றியும், ஒருங்குகுறி, ஒருங்குகுறி கூட்டிணையம், போன்றவை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

கிரந்தம்: கிரந்தம் ஒரு எழுத்துமுறை; மொழியன்று. மொழியும் எழுத்துமுறையும் வேறுவேறானவை. தமிழர் உருவாக்கிய இக் கிரந்த எழுத்துக்கள் சங்கதமொழி எழுதவும், சமற்கிருதமொழி எழுத்தமைத்துக் கொள்ளவும் பயன்பட்டன.

அவற்றோடு, இக் கிரந்த எழுத்துக்கள், சமற்கிருதச் சொற்களைத் தமிழில்கலந்து எழுதி மணிப்பவள நடையினால் தமிழுக்குக் கேடுண்டாக்கவும் காரணமாயின.

மேலும், தமிழும் வடமொழியும் கலந்த பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் கிரந்த எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

தமிழ்க் கணிப்பொறி: கணிப்பொறியைத் தமிழ்ப் பயன்பாட்டுக்குக் கொணர்ந்த தொடக்கக் காலத்தில், அவரவரும் ஒரு குறியீட்டு முறையையும், எழுத்துரு(வார்ப்புரு)வையும் பயன்படுத்தினர். இப்படிச் செய்ததால், ஒருவர் எழுதியதை இன்னொருவர் பயன்படுத்த இயலாத நிலை இருந்துவந்தது. அந்தக் குறிப்பிட்ட எழுத்துருவே, இன்னொருவரின் கணிப்பொறியிலும் இருக்க வேண்டும் என்ற நிலையே கணிப்பொறிப் பயன்பாட்டில் இருந்துவந்தது. இணையம் வளர்ச்சிபெற்ற நிலையில் தமிழ்ப் பயன்பாட்டிற்கு இது பெரும் சிக்கலாகவும் தடையாகவும் இருந்துவந்தது.

ஒருங்குகுறி (Unicode): மேற்கூறிய சிக்கலும் தடையும் இன்றி அனைத்துக் கணிப்பொறியிலும் தமிழைப் பயன்படுத்தற்கேற்ற ஒரு வசதி தேவைப்பட்டது. இந்நிலையில், உலகின் பல்வேறு மொழிகளின் எழுத்துக்களுக்கும் எண்களைக் கொடுத்து அவ் வெழுத்துக்களை ஒருங்குசேர்த்து ஒரே ஆவணத்தில் பயன்படுத்தஇயலும் வகையில் அமைந்த ஒருங்குகுறி (அல்லது ஒருங்குறி) முறை இச்சிக்கலுக்குத் தீர்வாக அமைந்தது.

இக்கால், பல்வேறு கணிப்பொறி நிறுவனங்களும் எண்மமுறைக் கருவி நிறுவனங்களும் ஒருங்குகுறியை ஏற்றுக்கொண்டு தம் உருவாக்கங்களில் இக்குறியீட்டு முறையைச் சேர்த்துக்கொண்டுள்ளன. புதியதாகத் தோன்றும் பல உருவாக்க நெறிகளும் ஒருங்குகுறியை அடிப்படையாகக் கொள்கின்றன.

ஒருங்குகுறிக் கூட்டிணையம் (Unicode consortium): உலகிலுள்ள எல்லா மொழிகளின் எழுத்துக்களையும் எவ்வகைத் தடையுமின்றி எல்லாரும் பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்யும் அமைப்பாக ஒழுங்குகுறி கூட்டிணையம் உள்ளது. இவ்வமைப்பில் பல நாடுகளும் தனியாள்களும்கூட உறுப்பினராக உள்ளனர்.

தமிழ்க் கணிப்பொறிக்கான ஒருங்குகுறி குறித்து உரியவண்ணம் அக்கறை கொள்ள வேண்டிய தமிழ்நாட்டரசு தன் உறுப்பாண்மையை உறுதி செய்து கொள்ளாத நிலை வியப்பும் ஏமாற்றமும் அளிக்கக் கூடியதாகும்.

இன்றைய சிக்கல்: இந்திய அரசின் கணிப்பொறிநுட்பத்துறை ஒருங்குகுறி கூட்டிணையத்தில் ஒப்போலை பெற்ற உறுப்பினராக உள்ளது. இத்துறை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்ற 22 மொழிகளையும் இக் கூட்டிணையத்தின் அடைவுப்பட்டியலில் இடம்பெறச் செய்தது; அத்துடன் வழக்கிழந்த வேதசமற்கிருத எழுத்துக்களும் கிரந்த எழுத்துக்களும் அப்பட்டியலில் இடம்பெறவேண்டுமெனக் கருதியது.

இதன் தொடர்பாக, 6.9.2010-இல் 14 பேர் கொண்ட ஒரு குழுவைக் கூட்டியது.

இக்குழுவில் தமிழறிஞர்களோ, கணிப்பொறி வல்லுநரோ, ஒருங்குகுறித் தெளிவறிவினரோ, தொல்லியல் அறிஞர்களோ இல்லை. அந்தப் 14 பேரில்,தமிழ்நாட்டிலிருந்து கலந்து கொண்டவர்கள் இரண்டு பேர். ஒருவர்ஆர்.கிருட்டினமூர்த்தி சாத்திரி; இன்னொருவர் காஞ்சி சங்கரமட ரமணசர்மாஆவர். அக்குழு எடுத்த முடிவினைப் பரிந்துரைத்து இந்திய அரசுத்துறை ஒருங்குகுறி கூட்டிணையத்திற்கு அனுப்பியது.

இறுதியாக, இந்திய அரசு, 68 குறியீடுகள் கொண்ட கிரந்தத்தோடு எ, ஒ, ழ, ற, ன ஆகிய தமிழ்எழுத்துக்கள் உள்ளிட்ட தமிழின் 7 குறியீடுகளையும் இணைத்து இடம்பெறும் குறியேற்றத்தை ஒருங்குகுறி கூட்டிணையத்திற்குப் பரிந்துரைத்துள்ளது.

தமிழ் எழுத்துக் குறியீடுகளோடு கிரந்த எழுத்துக் குறியீடுகள் கலந்தாலும் கிரந்த எழுத்துக் குறியீடுகளோடு தமிழ்எழுத்துக் குறியீடுகள் கலந்தாலும், விளைவு தமிழ்மொழிக்குப் பெருங்கேடாகவே இருக்கும். தமிழ் நூல்களும் இதழ்களும் சிறிதளவு தமிழ் கலந்த கிரந்த எழுத்துக்களாலேயே எழுதப்படும்.

அரிசியில் கல் கலந்ததைப் போலன்றிக் கல்லில் அரிசி கலந்த கதையாகும்.

சமற்கிருத மொழி ஒலிவடிவங்களுக்கு உருவாக்கப்பட்ட வரிவடிவங்களான கிரந்த எழுத்துக்களைக் கொண்டே, அக் கிரந்த எழுத்துக்களை உருவாக்கிய தமிழர்களுக்குச் சொந்தமான தமிழ் வரிவடிவங்கள் புறக்கணிப்புறுமாறும் பயன்பாடின்றிச் செயலிழந்து வழக்கற்றுப் போகுமாறும் செய்யப்படும்.

இவற்றையெல்லாம் எண்ணிக் கவன்ற தமிழறிஞர்கள் - குறிப்பாக இலக்குவனார் மறைமலை, இலக்குவனார் திருவள்ளுவன் போன்றோர் - எடுத்த முயற்சியின் பயனாகத் தமிழ்நாட்டரசு, அறிஞர் கருத்தறிய 3.11.2010 அன்று தமிழ்ப் பல்கலைக்கழத்தின் மூலம் 17 பேர் கலந்துகொண்ட கூட்டத்தை நடத்தியது.

அவர்கள் ஒரு மனத்தோடு எடுத்த தீர்மானத்தின்படி, தமிழக முதல்வர் இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியதன் விளைவாக, ஒருங்குகுறி கூட்டிணையம், 6.11.2010-ஆம் நாள் கூட்டத்தில் கிரந்த எழுத்தோடு தமிழ்க் குறியீடுகளைக் கலப்பது தொடர்பாகத் தீர்மானிக்க இருந்ததை 26.2.2011-ஆம் நாள் கூட்டத்திற்குத் தள்ளி வைத்துள்ளது.

‘தினமணி’யின் குறை: இந்தச் சிக்கலைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், "ஸ,ஷ, க்ஷ, ஜ, ஹ" என்னும் ஐந்து கிரந்த எழுத்துக்களைச் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே தமிழ்நாட்டரசு இந்திய அரசின் கணிப்பொறிநுட்பத்துறைக்கு மடல் எழுதியுள்ளதாகக் குறைபட்டுக் கொண்டு எழுதிய ‘தினமணி’ நாளிதழ், அதன் 9.11.2010-ஆம் நாள் ஆசிரியருரையில் தன் வெளிறை வெளிப்படுத்திக் கொண்டது. தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முதலிய பலரும் உணர்த்திய பின்னரும்கூட ‘தினமணி’ தன் தவற்றுக்கு வருந்தவில்லை.

கலப்புக்கு முனையக் காரணம்: தமிழின் தூய்மையைக் கெடுத்து, வளங்குன்றச் செய்து, சிதைத்து, காலப்போக்கில் தமிழை அழித்துவிடவேண்டு மென்ற எண்ணமே, கிரந்த எழுத்துக் குறியீடுகளோடு தமிழ் எழுத்துக் குறியீடுகளைக் கலக்கப் பரிந்துரைத்ததற்குக் காரணமாக இருக்குமோ என்றே எண்ணத் தோன்றுகிறதன்றோ?

கிரந்தத்தை இந்திய மொழிகள் அனைத்துக்குமான எழுத்தாக ஆக்கி ஒரே வரிவடிவத்தைக் கொண்டு பல இந்திய மொழிகளிலும் மின்னஞ்சல், இணைய இதழ்கள் இடம்பெறச் செய்யலாமென்ற எண்ணமும் காரணமாகக் கூறப்படுகிறது. உலக மொழிகள் அனைத்திற்குமான ஒரே எழுத்துவடிவம் (International phonetic alphabet -IPA) உருவாகிப் பயன்பாட்டில் உள்ள நிலையில், இக் காரணம், பெரிய பூனையும் குட்டிப் பூனையும் போகவர கதவில் பெரிய துளையும் சிறிய துளையுமாக இரண்டு துளைகள் போட்ட கதையை நினைவு படுத்துவதாக உள்ளது.

கலப்பால் விளையும் கேடும் காப்புணர்வின் தேவையும்: ஏற்கெனவே, தமிழரின் விழிப்பின்மையால், சமற்கிருத ஒலிப்புண்டாக்கவெனக் காரணம் கூறி, கிரந்த எழுத்துக்கள் ஸ, ஷ, ஜ, ஹ - வுடன் கூட்டெழுத்துக்கள் க்ஷ, ஸ்ரீ - யும் தமிழிற் கலக்கப்பட்டதால் நேர்ந்திருக்கும் சிதைவினின்றும் தமிழை மீட்கவே, மறைமலையடிகள் தனித்தமிழ் இயக்கம் தோற்றித் தமிழ் மீட்சிக்குப் பாடுபட்டார். மொழிஞாயிறு பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார், பேராசிரியர் இலக்குவனார், அறிஞர் வ.சுப.மா., பாவேந்தர், அறிஞர் அண்ணா போன்றோரின் இடைவிடாத முயற்சியால் தமிழ் மென்மேலும் சிதைவது தடுத்தாற்றப் பெற்று ஒரளவு மீட்சி கண்டுள்ளது.

இப்போது, 68 குறியீடுகள் கொண்ட கிரந்தக் கொத்தில் 7 தமிழ்க் குறியீடுகள் கலந்தால், தமிழ் ‘கிரந்தமொழி’யாக்கப்படும் உலகின் மூத்த மொழியின் வரிவடிவம் கிரந்தமாகிப் போகும். இதனால், பிற்காலத்தில் சமற்கிருதத்திலிருந்து அல்லது சங்கத மொழியிலிருதுதான் தமிழ் பிறந்தது என்றும் சிலர் நிறுவத் துணிந்தாலும் வியப்பதற்கில்லை.

இக் கிரந்த எழுத்துக்கள் தமிழிற் கலப்பதைத் தடுக்கவே, ஒல்காப்பெரும்புகழ் தொல்காப்பியம், "வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடுபுணர்ந்த சொல்லா கும்மே" என்ற நூற்பாவின் வழி காப்புச் செய்ய முனைந்தது. ‘நன்னூல்’ பவணந்தியாரும் தற்பவம் தற்சமம் கூறி இரண்டின் வழியும் கிரந்த எழுத்து வராதிருக்கத் தடையிட்டார். தொல்காப்பியத்திலும், கழக இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகையிலும், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், சீறாப்புராணம், வீரமாமுனிவரின் எழுத்தோவியங்கள், நாலாயிரப் பனுவல்கள் முதலானவற்றிலும் கிரந்த எழுத்துக்கள் இடம்பெறவே யில்லை.

தேவையின்றி வேற்றுச் சொற்களை ஏற்றுக்கொண்டே போவதால் தமிழ், பன்மொழிக் கலவையாக மாற நேர்கிறது. தமிழர் அடையாளமற்ற வரலாறற்ற குடியாக மாறும் பெருங்கேட்டிற்கு வழிசெய்கிறது.

எம்மொழியிலும் எல்லாமொழிப் பெயர்களும், எல்லா ஒலிப்பும் இல்லை. சீனஎழுத்தின் ஒலிப்பு வேறு எந்த மொழியிலுள்ளது? ஒரு மொழி தன் இயல்பிற்கேற்காத ஒலியை ஏற்பின், நாளடைவில் சிதைவுற்று மாற்றமடைந்து வேறொரு மொழியாகிவிடும். இதற்கு, மலையாள மொழியே எடுத்துக் காட்டாகும். தமிழ் என்பதை ‘டாமில், டமில், டாமிள், தமில், தமிள், தாமில், தமிஷ், தமிஸ்’–என்றெல்லாம் தானே ஆங்கிலத்தில் எழுதுகின்றனர்; பலுக்குகின்றனர்! ஆங்கிலம் ஏன் ழ, ற, ண முதலிய தமிழ் எழுத்துக்களை ஏற்கக்கூடாது என்று கேட்பதா?

தமிழரின் இன்றைய கடமை: தமிழில் கிரந்தம் கலந்தாலும் கிரந்தத்தில் தமிழ் கலந்தாலும் சிதைவும் அழிவும் தமிழுக்கு நேர்வது உறுதி என்பதால் உலகெங்கணும் உள்ள தமிழர், ஒருங்குகுறியில் தமிழுக்கு உரிய இடத்தில் கிரந்த எழுத்துக்கு இடமளிப்பதற்கும், கிரந்தத்தோடு தமிழ் எழுத்துக்களைச் சேர்ப்பதற்கும் தம் எதிர்ப்பை மிக உறுதியாக வெளிப்படுத்தி அம முயற்சியைத் தடுக்கவேண்டும்.

கல்வெட்டு, செப்பேடு, ஈடு உரைகள் ஆராய்ச்சிக்குக் கிரந்த எழுத்தின் தேவை குறித்தெல்லாம் தொடர்புடைய பல்துறை அறிஞர் குழு அமைத்து அமைதியாக முடிவெடுக்கலாம்.

தமிழ்நாட்டரசு, இனக்காப்பில் இழைத்த இரண்டகம் தமிழர் நெஞ்சில் மாறாப் பெருவடுவாக நிலைத்திருக்கின்றது. இப்போது, மொழிக் காப்பிலும் கோட்டைவிட்டுப் பழிதேடிக் கொள்ளக் கூடாதென்று நல்லுணர்வோடு வலியுறுத்துகின்றோம்.

செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க

செய்யாமை யானுங் கெடும். – (குறள். 466)

--------------------------------------------------------------

--

தமிழநம்பி

கிரந்தக் கலப்பு: கணிப்பொறிக் காலத்தில் தமிழை அழித்தொழிக்கும் முயற்சி!

ஒருங்குறி(யூனிகோடு) என்றழைக்கப்படும் ஒருங்குகுறியில் இப்பொழுது நிகழ்த்தப்பட்டிருக்கும் கரவுவினை குறித்ததொரு தெளிவான கருத்தாடலை முன்வைத்திருப்பது - "கிரந்தக் கலப்பு : கணிப்பொறிக் காலத்தில் தமிழை அழித்தொழிக்கும் முயற்சி!" என்னும் புதிய கட்டுரை ஆகும்.
இதனைப் படைத்தவர் தமிழநம்பி ஐயா.
தமிழ் மொழி இலக்கியங்களில் ஆழங்காற்பட்டவர்; தூயதமிழியக்கத்தில் பாவலரேறு பெருஞ்சித்திரனாருக்குத் தோள் கொடுத்தவர். சொல்லிக்கொண்டே போகலாம் இவர்தம் வினைப்பாட்டுப் பெருமைகளை. ஐயா விரும்பமாட்டார்.
தூய தமிழ்த்தொண்டுள்ளம் வாழ்க!
நற்றமிழ் 20சக, சிலை - 16.12.2010 இதழில்[பக்கங்கள் 7-10] இவ்வரிய கட்டுரை வெளிவந்துள்ளது.
தமிழநம்பி ஐயாவின் வலைப்பதிவான http://thamizhanambi.blogspot.com/ இலும், நமது இந்த வலைப்பதிவிலும் தேவமைந்தன் வலைப்பதிவான http://httpdevamaindhan.blogspot.comஇலும்/ இக்கட்டுரை இடுகை பெறுகிறது.
தொலைபேசி வேண்டுகொளுக்குச் செவிசாய்த்து, கட்டுரை அனுப்பிய தமிழநம்பி ஐயாவுக்கு என் மனமார்ந்த நன்றி.
For further details view:

15.10.10

சாமிகிரி சித்தர் மறைவும் தொடர்புடையதொரு சிந்தனையும்

பலருக்குச் செவிப்புலனைச் சீர்செய்து வந்தவர் சாமிகிரி சித்தர். என்னைப் போன்ற பிசிராந்தையார் - சோழன் நட்பினருக்கும் தொடர்ந்து தன் எல்லாப் பெருநூல்களையும் சிறுநூல்களையும் காப்பான பதிவுடன் காசுபணம் கருதாமல் அனுப்பி வைத்து வந்தார். நட்பை வணிக நோக்குடன் பார்க்காதவர். என் நண்பரும் பிரெஞ்சுப் பேராசிரியருமான முனைவர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயக்கர் அவர்களின் மாமனார் அவர்களுக்குச் செவிப்புலன் சீர்ப்படுத்துதல் தொடர்பாக என் அண்ணார் மகனார்வழி தொடர்புகொண்டபோது, 'செவிப்புலன் கருவியைப் பயன்படுத்திவிட்டவர்களுக்கு மீண்டும் இயல்பாக அப்புலனை இயக்க இயலாது' என்ற உண்மையை அன்புடன் தெரிவித்தவர். அவரத்தனை ஆற்றல் இருந்தால் ஒவ்வொருவர் எப்படி ஆட்டமாய் ஆடிவிடுவர்! அன்பும் உண்மையும் துணைவியார்பால் பெருமதிப்பும் பேரன்பும் கொண்டு வாழ்ந்தவர் சாமிகிரி சித்தர். என்னைப் போன்றவர்களின் நெஞ்சங்களில் அவர் எப்பொழுதும் வாழ்வார். (படத்துக்கு நன்றி: thats tamil: by oneindia.in)

11.10.10

எத்தகைய உரையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்? - முனைவர் க. தமிழமல்லன்

புன்செய்யில் தோன்றியது சிறிய இலை நெருஞ்சிச்செடி. அதன் பூக்கள் கண்களுக்கு இனிமையானவை. அது முள்ளுடையதைப் போன்று, காதலர் இன்பத்தை மட்டும் செய்தாரல்லர்; துன்பத்தையும் செய்தார். அதனால் என் நெஞ்சம் துன்புற்றது.......... துன்புற்றது. நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக் கட்குஇன் புதுமலர் முட்பயந் தாஅங்கு இனிய செய்தநம் காதலர் இன்னா செய்தல் நோமென் நெஞ்சே. (௨0௩) (அமன்ற - நெருங்கி முளைத்த : கட்கு - கண்ணுக்கு : இன் - இனிய) இப்பாடலை இயற்றியவர் அள்ளூர் நன்முல்லை. தலைவன் தலைவிக்குத் துன்பமும் செய்தான். அது குடும்பத்தில் நிகழ்வது இயல்பு. அதனால் தன் துன்பத்தைத் தலைவி தோழியிடம் சொல்லி வருந்துகிறாள். இதுவும் இயல்பே. கட்குஇன் புதுமலர் முட்பயந்தாங்கு என்று சொல்லும் உவமை அதை வெளிப்படையாக்கி விட்டது. ஆனால் இப்பாடலுக்கு உரை வரைந்தவர்கள் தலைவன் பரத்தை ஒழுக்கமே தலைவிக்குச் செய்த துன்பம் என்று குறிப்பிட்டுள்ளனர். பரத்தையிடமிருந்து திரும்பிய தலைவனின் தூதாகத் தோழி வந்தாள் என்றும் உரையாசிரியர் கூறுகிறார். இப்படிச் சொல்லுதல் வழிவழியாக வந்து விட்டது. இத்தகைய உரைகளை மறு ஆய்வு செய்தல் வேண்டும். வெல்லும் தூயதமிழ் ௨0௪௧, கன்னி, அகுத்தோபர், ௨0௧0. பக். ௧௧-௧௨.

1.8.10

ஆனந்த விகடனுக்கு நன்றி!

ஆனந்த விகடன் மாலை 85 மணி 31, 4.8.10 நாளிட்ட இதழின் பக்கம் 19-இல் ‘விகடன் வரவேற்பறை’யில் நம் இந்த வலைப்பதிவைப் படித்துப் பாராட்டியுள்ள விகடன் ஆசிரியர் குழுவார்க்கும், புகைப்படக்காரர் குழுவார்க்கும் வடிவமைப்புக் குழுவார்க்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மை உழைப்பை நடுநிலையில் நின்று வாசகர்க்கு அறிவித்த ஆனந்த விகடனுக்கு, பத்து ஆண்டுகளுக்கு முன்பே பணிநிறைவு பெற்றும் ஓயாமல், புதிதாகக் கணினி - இணையக் கல்வி பெற்று, பின்னர் இப்பதிவைத் தொடங்கி எளிமையான வடிவமைப்பில் பதிந்து வரும் நான் தெரிவித்துக் கொள்ளும் நன்றியும் உண்மையானதே. அன்புடன், அண்ணன் பசுபதி (தேவமைந்தன்)

19.5.10

பரிதிமாற்கலைஞர் தம் பெயரைத் தனித்தமிழ்ப் பற்றினால் மாற்றிக்கொள்ளவில்லை

ஐயா. வணக்கம். பரிதிமாற்கலைஞர் தம் பெயரைத் தனித்தமிழ்ப்பற்றினால் மாற்றிக்கொண்டு மறைமலையடிகளுக்கு முன்னோடியாக இருந்தார் என்று புதியதலைமுறை கட்டுரையில் கண்டேன். புதிய தலைமுறைக்குப் பிழையான செய்தி போய் விடக்கூடாது. மறைமலையடிகளும் பாவாணரும் இது போலவே நம்பி எழுதியீருக்கின்றனர். வி.கோ.சூரியநாராயண சாத்திரியார் என்னும் பெயரை அவர் தனித்தமிழ்ப் பற்றினால் மாற்றிக்கொள்ளவில்லை. புனைபெயராகவே பயன்படுத்தினார். அதுவும் தனிப்பாசுரத்தொகை என்னும் ஒரு நுாலில் மட்டுமே அப்பெயரைப் பயன்படுத்தினார். அவர் தன் படைப்பின் தன்மையை முழுமையாகப் படிப்பவர் வாயிலாகத் தெரிந்துகொள்ளும் நோக்கத்திற்காகப்பரிதிமாற்கலைஞர் என்னும் பெயரைப் பயன்படுத்தியதாக அந்நுாலில் குறித்துள்ளார். எனவே தமிழ்ப்பற்றால் பெயரை மாற்றிக் கொண்டார் என்பது சரியன்று. அவர் தமிழ்ப்பற்று இரு வகைகளில் சிறந்தது. அவர், பார்ப்பனர்களால் தான் தமிழ் கெட்டது என்பதைத்தமிழ்மொழி வரலாறு என்னும் நுாலில் மறைக்காமல் எழுதியுள்ளார். தமிழ் தனித்தியங்க வல்லது என்னும் கருத்தையும் அவர் வலியுறுத்தினார். ஆனால் தனித்தமிழ்ப்பற்றினால் பெயரை மாற்றிக்கொண்டார் என்னும் செய்தி பரவி விட்டது. அன்புடன், முனைவர் க.தமிழமல்லன்

5.5.10

சிங்காரவேலர் - முனைவர் க.தமிழமல்லன் தமிழர் இனத்தின் தலைவர்தாம் யாரோ? இமிழ்கடல் சிங்காரர் ஏத்து. உரத்தால் பயிர்தழைக்கும் முற்போக்கு வேலர் தரக்கொள்கை நாடுயர்த்தும் தான். புதுவுலகம் காணப் பொதுவுடைமைக் கொள்கை உதவுமெனல் வேலர் உரம். சிந்தனைச் சிற்பியாம் சிங்கார வேலரே நம்தமிழ் நாட்டுக்குத் தூண். பெரியார்க்குச் சிங்கார வேலர் பெரியார் உரியாரின் மாண்பை உயர்த்து. கதிரிருக்க வெண்ணிலவைக் கைதொழுதல் ஆமோ, எதிரிருக்கும் ஏந்தலைத்தான் ஏத்து. மறைமலை யாரைப்போல் மானமீட்பர் வேலர் குறைதீர்க்க வந்தார் குறி. அறிஞர்க் கறிஞராய் ஆற்றல் வினையால் நெறிஞராய் வாழ்ந்தார் நிறுத்து. சிங்கார வேலர்தான் சீர்திருத்தக் காரர்நம் பங்காளர் ஆவார் பகர். பொதுவுடைமைக் கொள்கையை நல்வேகத் தெம்பாய் எதிர்ப்பிருக்கக் காத்தார் அவர். மீனவர்கள் எல்லாரும் மீட்சிபெற்று மேலெழுதல் மானத்தின் வாழ்வாய் மதி. புரட்சிப் பரிசென்றே பொங்கரிமா சிங்காரர் புத்தூழி எண்ணத்தைப் போற்று. Singaravelar photo transparency - Thanks to: http://www.pragoti.org