20.10.08

தமிழ்நாட்டின் சித்தர்களும் சூஃபியர்களும் - தேவமைந்தன் சித்தர் என்றால் 'கைகூடுகை பெற்றவர்கள்.' 'கைகூடுகை' என்பது 'அறிவின் தெளிவு.' மனத்தின் நான்கு வடிவங்களுள் ஒன்றான 'சித்தம்' என்பது பெரும்பாலானவர்களுக்குச் செயலற்ற நிலையில்(inert) இருக்கும். அதைச் செயற்படுத்தக் கூடியவர்கள் சித்தர்கள். மனத்தின் வடிவங்கள் - மனம்(conscious), புத்தி(subconscious), சித்தம்(unconscious), அகங்காரம்(ego) என்ற நான்கு. சித்தம் என்பது மனத்தின் நான்கு வடிவங்களுள் மூன்றாவது. சித்தத்துக்கு, 'முடிவான மனக்கொள்கை,' 'மூலப்பகுதி' என்றும் பொருள் உண்டு. சிவாகமத்துள் ஒன்றனுக்கும் மரங்களுள் முருங்கைமரத்துக்கும் சித்தம் என்று பெயர். அணியமாக/திண்ணமாக/ஆயத்தமாக உள்ளதற்கும் 'சித்தம்' என்பார்கள். 'சித்தன்' என்ற சொல் முருகக் கடவுளையும் அருக தேவனையும் சிவபெருமானையும் வைரவனையும் வியாழனையும் குறிக்கும். மரங்களுள் இலவமரத்தைச் 'சித்தன்' என்பார்கள். காந்தக் கல்லுக்கும் அதே பெயருண்டு. 'சித்தாதிகள்' என்ற சொல்தான், இரசவாதம் முதலான அரிய வித்தைகள் கைவரப்பெற்ற யோகிகளைச் சுட்டும். திருமூலர் 'முக்கரணம்' பற்றிக் கூறிய பாடல்களுக்கான உரைகளை வைத்துக்கொண்டு 'சித்தர்' என்பவர் யார் என்பதைக் குறித்துத் திருமூலர் விளக்குவதாகக் கூறி, தாங்களே விளக்கினர் சிலர். சட்டைமுனி நாயனாரின் ஞானப்பாடல்களில் சித்தர் குறித்த விளக்கம் உண்டு. இன்னும் அகத்தியர், கருவூரார் இராமதேவர்,வால்மீகர்,காகபுசுண்டர் முதலானோர் சித்தரை அடையாளப்படுத்தியுள்ளார்கள். சித்தமெனும் சிந்தையில் தெளிவு கொண்டவனே சித்தன்('சூத்திரஞானம்' தொடக்கப் பாடல்கள்) என்ற வால்மீகர் கருத்து இவற்றுள் தெளிவாக நாம் அறியுமாறு உள்ளது. 'கைகூடுகை' என்னும் அறிவின் தெளிவு என்பதில் அறிவில் விளக்கம், துலக்கம், மன அமைவு, நற்காட்சி, ஆராய்ச்சி என்ற ஐந்து தன்மைகள் உள்ளன. 'சித்து' என்ற சொல்லுக்கு "அறிவுடையது" என்ற பொருளையும் 'அசித்து' என்பதற்கு "அறிவில்லாதது" என்ற பொருளையும் சிவஞானசித்தியார் சுபக்கம்(பாடல் எண் 159இல் வரும் 'சித்தசித்து' என்ற சொல்லால்) சுட்டுகிறது. ("சித்தினை அசித்துடன் இணைத்தாய்!" - பாரதி, தோத்திரப் பாடல்கள்; எண்:36) 'சித்தி' என்ற சொல்லுக்கு, கைகூடுகை, வீடுபேறு முதலான பதினைந்து பொருள்கள் உள்ளன.(Madras University Tamil Lexicon III:I. ப.1412) ஒன்றை நினைக்கிறோம். அது கைகூடுவதில்லை. அழுந்த நினைப்பது கைகூடினால் அது 'சித்தி' எனப்படும். "ஸித்' என்ற வடமொழி வேர்ச்சொல்லே 'ஸிது' என்றாகி 'ஸித்த' என்னும் சொல்லாகியது" என்பது(முனைவர் க. இளமதி சானகிராமன், சித்தர்களும் சமூகப் பார்வையும், புதுச்சேரி, 1990. ப.1) இதற்குப் பொருந்தாது. ஆனால் "தாங்கள் ஆணையிடுங்கள்; நிறைவேற்ற நான் சித்தமாக இருக்கிறேன்" என்பதற்கும் "தங்கள் சித்தம் என் பாக்கியம்!" என்பதற்கும் பொருந்தும். 'சித்தித்தல்' என்ற சொல்லுக்கு 'கைவரப்பெறுகை/ கைவரப்பெறுதல்' என்று பொருள். இது எப்படியென்றால், 'அன்னம்' என்ற சொல் பறவையை உணர்த்தும்பொழுது தமிழாகவும் உணவை உணர்த்தும்பொழுது சமற்கிருதமாகவும் ஆவது போலவும்; 'நாகம்' என்ற சொல் மலையை உணர்த்தும்பொழுது சமற்கிருதமாகவும் பாம்பை உணர்த்தும்பொழுது தமிழாகவும் இருப்பது போலவும் ஆகும். மரங்களுள் எட்டிமரத்துக்கும் மூலிகைச் செடிகளுள் 'நிலப்பனை'க்கும் கீரைகளுள் பொன்னாங்காணிக்கும் தூய்மையாக்கும் மருந்துகளுள் சவர்க்காரம்/சலவைக்கட்டி என்று பொருள்படுகின்ற வழலைக்கும் 'சித்தி' என்ற பெயர் உண்டு.(புண்ணிலிருந்து வடியும் நீர், பாம்பு வகையில் ஒன்று, உப்பு வகையில் ஒன்று, கோழை/சிலேத்துமம் - என்பவை 'வழலை'க்கு ஏனைய பொருள்கள்) சூஃபியர் என்ற சொல், 'சூஃபி' என்ற அரபுச் சொல்லின் ஆக்கம். அரபுமொழியில் ‘சூஃப்’ என்ற சொல் கம்பளி(wool)யைக் குறிக்கும். பின்னர் அச்சொல்லே ‘கம்பளியை உடையவன்’ (a man of wool) என்ற பொருள் குறிக்கும் ‘சூஃபி’ என்னும் சொல்லை அரபுமொழி இலக்கியத்துக்குத் தந்தது. படிப்படியாக, பாரசீகத்தில் முஸ்லிம் மெய்ப்பொருளியலும் ஆன்மிக மறையியலும் இணைந்தவொரு முறையைப் பின்பற்றுகின்ற ஒருவரை அச்சொல் குறிக்கலானது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சூஃபிய மெய்யுணர்வாளர்களில் பீருமுகம்மது வாவா என்று நெல்லை மக்களால் அன்புடன் அழைக்கப்பெறும் பீர்முஹம்மத் அப்பா(ரலி) முதலாமவர். (கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலையில் அவருடைய அடக்கத்தலம் உள்ளது.) "பீர்முஹம்மத் அப்பா(ரலி) அவர்களே [தமிழ் சூபித்துவ] ஞானப் பாடல் வரிசையில் முதலாமவராக விளங்குகிறார்கள்" என்று தேசமானிய டாக்டர் ஏ.எம்.முஹம்மத் சஹாப்தீன் தன் ஆய்வில் கூறியுள்ளார். 'அட்டமாசித்தி' எனப்படும் சித்திகள் அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பன. 'அட்டமாசித்தி'யைத் தூயதமிழில் 'எண்மாப் பேறுகள்' என்றும் அவற்றை நுண்மை, பருமை, மென்மை, விண்டன்மை, விரும்பியதெய்தல், தன்வயமாக்கல், நிறைவுண்மை, ஆட்சியனாதல் எனவும் மொழிவர். அணிமாவுக்கு பிருகி முனிவர் வண்டு வடிவம் எடுத்ததையும்; மகிமாவுக்குத் திருமால் வாமனராக வந்து நெடிய தோற்றம் கொண்டதையும்; இலகிமாவுக்கு அப்பர் என்ற திருநாவுக்கரசரைக் கல்லில் கட்டிக் கடலில் இட்டபொழுது கல் மிதந்ததையும்; கரிமாவுக்குச் சிபி, புறாவின் எடைக்குத் தானே அமர்ந்ததையும்; பிராத்திக்கு இராவணன், சூரபதுமன் ஆகியோர் எவ்வுலகத்தும் எவ்விடத்தும் தடையின்றிச் சஞ்சரித்ததையும்; பிராகாமியத்துக்கு மூலன் உடம்பில் நுழைந்து திருமூலராய் எழுந்த யோகியையும்; ஈசத்துவத்துக்கு ஞானசம்பந்தர், சுந்தரர், வள்ளலார் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளயும்; வசித்துவத்துக்கு, சுந்தரருக்காக இறைவன் தூது சென்றதையும் சான்று காட்டினார் முனைவர் இரா.மாணிக்கவாசகம்.(சித்தர்கள் பரிபாஷை அகராதி, 1982.பக்:188-189.) 'கைகூடுகை' என்பதற்கு, பொதுவான மாந்தருக்குக் கிடைக்காத அரிய பேறு என்ற பொருளையே பொதுமக்கள் எப்பொழுதும் கற்பித்து வருகிறார்கள். மாந்தருக்கு இயல்பானவற்றில் உள்ள நாட்டத்தைவிடவும் இயல்புக்கு மீறியவற்றில் நாட்டம் மிகுதி. அதனால்தான் தமிழ்ச்சித்தர்களுக்கு எண்மாப்பேறுகள் போதா என்று அறுபத்து நான்கு வகைச்சித்துக்களை உடைமையாக்கி மனநிறைவடைந்தனர். ஞானவெட்டியான், யாகோபு வைத்தியவாத சூத்திரம் ஆகிய நூல்களும் இதற்கான குறிப்பைத் தருகின்றன. [முனைவர் க.நாராயணன், சித்தர் தத்துவம், புதுச்சேரி, 1988.] சூஃபியாக்கள் [பாரசீக சூஃபி மெய்யுணர்வாளர்] பரம்பொருளை ‘உண்மை” என்றே சுட்டுகின்றனர். ‘தன்னுணர்வு கொண்ட விழைவு,’ ‘அழகு,’ ‘ஒளி’ அல்லது ‘எண்ணம்” என்ற முந்நிலையில் அவர்கள் கடவுளை வைத்துச் சுட்டுவதாக அல்லாமா இக்பால் அவர்கள் கூறியுள்ளார். [Dr.Shaik Muhammad Iqbal, The Development of Metaphysics in Persia, London. மேற்கோள்: தேசமானிய, டாக்டர். ஏ.எம். முஹம்மத் சஹாப்தீன், இறைவனும் பிரபஞ்சமும், கொழும்பு-7. 1995.] தமிழ்நாட்டுச் சித்தர்களை மரபு வழியாக 1.அகத்தியர் 2.போகர் 3.கயிலாயநாதர் 4.கோரக்கர் 5.திருமூலர் 6. சட்டைமுனி 7.கொங்கணர் 8.கூன்கண்ணர் 9.இடைக்காடர் 10.நந்தீசர் 11.புண்ணாக்கீசர் 12.உரோமர் 13.மச்சமுனி 14.கூர்மமுனி 15.கமலமுனி 16.வாசமுனி 17.பிரமமுனி 18.சுந்தரானந்தர் என்றும் அவர்கள் அல்லாமல் கரூர் சித்தர் என்ற கருவூரார், புலத்தியர், புசுண்டர், இராமதேவர், தன்வந்திரி, கபிலர் முதலானோரையும் வரிசைப் படுத்துவார்கள். தமிழ்நாட்டுச் சூஃபியர்களுள் முகமையானவர்கள் - பீர்முஹம்மத் அப்பா(ரலி), கோட்டாறு ஞானியார், குணங்குடி மஸ்தான் சாஹிபு, கலீபத் ஷைகு ஷாஹூல் ஹமீத் அப்பாநாயகம், பரிமளம் முகம்மது காஸிம், இறசூல் பீவி, ஐயம்பேட்டை அப்துல் கரீம் பாவா, குஞ்சலி சாஹிப், இளையான்குடி மஸ்தான் ஸாஹிப், கோட்டாறு சைகுத்தம்பி ஞானியார், அப்துல் காதிர் வாலை மஸ்தான், பெரியநூஹூ லெப்பை ஆலிம், 'காலங்குடி மச்சரேகைச் சித்தன்' என்றழைக்கப்படும் செய்யிது அப்துல்வாரித் ஆலிம்மௌலானா ஐதுரூஸ், மேலைப்பாளையம் முகியித்தீன் பஸீர், மோனகுரு மஸ்தான் ஸாஹிப், முகம்மது ஹம்ஸாலெப்பை ஆகியோர். வேதத்தையும் மதத்தையும் எதிர்த்தவர்களாகிய சித்தர்களுள் அகப்பேய்ச் சித்தர், சிவவாக்கியர், பாம்பாட்டிச் சித்தர், திருவருட்பிரகாச வள்ளலார் ஆகியோர் மிகவும் குறிப்பிடத் தக்கவர்கள். நிகழ்சமூகம்போல் வேத-மத எதிர்ப்பாளர்களுக்குப் பாதுகாப்புத் தராத காலத்தில் இவர்கள் வாழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. மறுப்பாளராக மட்டும் இல்லாமல் உடன்பாட்டு முறையில் சீர்திருத்தங்கள் பலவற்றுக்கு வித்திட்ட துணிவு வள்ளாலாருக்கு மிகுந்திருந்தது. அவர் அவ்வாறு ஆற்றிய சீர்திருத்தங்கள்:- 1. நாட்டிலும் சமூகத்திலும் வீட்டிலும் ஒருமைப்பாடு நிலவப் பாடுபட்டார். 2. சாதி, மத, குல வேறுபாடுகள் ஒழிய எழுத்தாலும் பேச்சாலும் செயலாலும் பாடுபட்டார். 3. வகுப்பு வேற்றுமை என்பது புண்ணிய பாவங்களால் இயற்கையாக விளைவது என்ற பிரச்சாரத்தை வன்மையாகச் சாடினார். 4. அறிவுக் கல்வியும் ஆன்மிகக் கல்வியும் முறையாகப் பெறுவதற்கு மகளிர்க்கு முழு உரிமை உண்டு என்று வெளிப்படையாக அறிவித்தார். 5. கோயிலுக்குள் புகலாகாது என்று பலரை மதக்கோட்பாட்டினர் கருத்துப் பரப்பலாலும் வன்முறையாலும் தடுத்துக் கொண்டிருந்த காலத்தில், உலகில் வாழும் எல்லாரும், சமய-மத வேறுபாடு எதுவுமின்றி, சென்று கூடி வழிபடக்கூடிய சன்மார்க்க சுத்த சத்திய சங்கத்தை உருவாக்கினார். 6. கிழக்கிந்தியக் கம்பெனியின் வழி பிரிட்டிஷ் பேரரசு இந்தியாவுக்குள் நுழைந்து அறிவடிப்படையாலும் அதிகார அடிப்படையாலும் மாந்தரை அடிமைப்படுத்திய காலத்தில் ‘கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக, அருள் நயந்த சன்மார்க்கர் ஆள்க!’ என்ற விடுதலை முழக்கத்தை முன்வைத்தார். 7. உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கத்தை முதன்முதலாகக் கண்டித்தார். 8. தனிமனிதர்கள் தம் உடம்பைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய முறைமைகளையும் ‘நித்திய கரும விதி’ என்ற தலைப்பின்கீழ் வகுத்ததுடன், திருமூலர் வழியில் 'உடம்பா'ரையும் 'உயிரா'ரையும் காப்பதற்கென்றே ‘மூலிகை குண அட்டவணை,’ ‘சஞ்சீவி மூலிகைகள்,’ ‘மருத்துவக் குறிப்புகள்’ என்ற மூன்றையும் ஆராய்ந்து தொகுத்தார். 9. பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே, தமிழ்மொழியின் உரைநடையை வளர்க்கும் படைப்புகளைத் உருவாக்கினார். 10. ‘சத்தியப் பெரு விண்ணப்ப’த்தில், இறைவனைப் புகழ்ந்தேத்தத் தமிழே உகந்தது என்பதை, “எந்தையுனைப் பாடி மகிழ்ந்து இன்புறவே வைத்தருளிச் செந்தமிழை வளர்க்கின்றாய்!” என்று பாடி, “அருச்சனை பாட்டேயாகும்" என்ற சேக்கிழார்தம் கருத்தை வலிமைப்படுத்தினார். 12. ‘மனுமுறை கண்ட வாசகம்’ இயற்றி விதி என்னும் ஊழ்வினைக் கோட்பாட்டை(fatalism) அறிவுக் கோட்பாட்டால்(epistemology) வென்று காட்டினார். வள்ளலார் அறிவுறுத்திய சுத்த சன்மார்க்கத்தின் முதன்மை நோக்கம், பேரின்ப சித்தி பெறுதலேயாகும். பேரின்ப சித்தி என்றால் சிற்றின்ப சித்தி உள்ளதா என்ற வினா எழும். ஆன்ம சாதகன் இறைநிலையை முழுமையாக அடையாத காலத்தில் அவனை வந்தடையும் சித்திகளே அவை. பேரின்ப சித்திபெற என்ன வழி? சாதி மதங்களை விடுத்துப் பொது நோக்கம் பெற்றுச் சீவகாருண்யம் வளர்ந்து கடவுள் அருளைப் பெறும்பொழுதே அதனைப் பெறலாம்.(இது குறித்து மேலும் அறிய: முனைவர் அ.செகதீசன், தமிழ் இலக்கியத்தில் யோகம், லில்லி பதிப்பகம், பத்மாவதி நகர், திருப்பதி-2. 1987. பக்.254-314) தவிர, இன்று ஊடகங்களால் பெரிதும் பரப்பப்படும் யோகாசனங்கள் குறித்து, அன்று வள்ளலார் எதுவும் கூறாமல் விட்டதற்கு இல்லறவாழ்க்கையில் உள்ளவர்களுக்கு ஹடயோகமும் அதன் பகுதியான ஆசனங்களும் சிறப்பாகப் பயன்படாது என்ற காரணம் இருக்கலாம். ஆனால், வள்ளலார் பெயரைப் பயன்படுத்திக்கொண்டு வடலூரிலும் மற்ற இடங்களிலும் தாமே உருவாக்கிய ஆசனப் பயிற்சிகளைக் கற்பிக்கும் சுவாமிகள் சிலர் உருவாகியிருப்பதற்கு என்ன சொல்வது? வள்ளலார் என்னும் வடலூர் இராமலிங்கசுவாமிகளின் திருவருட்பாவின் ஆறாம் திருமுறை மேலும் அவர் காட்டிய 'மரணமிலாப் பெருவாழ்வு' மீதும் அளவிறந்த ஈடுபாடு கொண்டிருந்தார் பாரதி. வள்ளலார் மட்டுமல்லர்; சித்தர்கள்மேல் பொதுவாகவே பாரதியாருக்கு ஈடுபாடு அதிகம். இதே கட்டுரையில் புதுச்சேரிச் சித்தர்களுள் ஒருவராகக் குறிப்பிடப் பெற்றிருக்கும் யாழ்ப்பாணத்துச் சாமிகளைத் தன் வீட்டுக்குக் குரு குவளைக் கண்ணன் அழைத்துவந்ததை பாரதியார், "ஜகத்தினிலோர் உவமையிலா யாழ்ப்பா ணத்து சாமிதனை இவனென்றன் மனைக் கொணர்ந்தான். அகத்தினிலே அவன்பாத மலரைப் பூண்டேன்; 'அன்றேயப் போதேவீ டதுவே வீடு" (சென்னை சக்தி காரியாலய மூன்றாம் பதிப்பு, 2/10/1957, ப.43) என்று கூறியதுடன் நில்லாது யாழ்ப்பாணத்துச் சாமிகளைப் பற்றி, "குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பா ணத்தான், தேவிபதம் மறவாத தீர ஞானி சிதம்பரத்து நடராஜ மூர்த்தி யாவான் பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி, பரமபத வாயிலெனும் பார்வை யாளன்; காவிவளர் தடங்களிலே மீன்கள் பாயுங் கழனிகள்சூழ் புதுவையிலே அவனைக் கண்டேன்" என்பதோடு நில்லாமல், "தோழரே! எந்நாளும் எனக்குப் பார்மேல் மங்களஞ்சேர் திருவிழியால் அருளைப் பெய்யும் வானவர்கோன் யாழ்ப்பாணத் தீசன் தன்னைச் சங்கரனென் றெப்போதும் முன்னே கொண்டு சரணடைந்தால் அதுகண்டீர் சர்வ சித்தி" (சென்னை சக்தி காரியாலய மூன்றாம் பதிப்பு, 2/10/1957, பக்.40-41) என்றும் தெரிவித்துள்ளார். பாரதி பற்றிக் கட்டுரை எழுதுபவர்களும் படமெடுப்பவர்களும் குருகுள்ளச்சாமி குறித்து வெளிப்படுத்தும் அளவு புதுச்சேரியின் புகழ்மிக்க சித்தர்களுள் ஒருவரான யாழ்ப்பாணத்து சாமிகளைப் பற்றி வெளிப்படுத்துவதில்லை. ஹடயோகியும் ஞானியுமான குரு கோவிந்தசாமி என்றவராலும் புதுச்சேரியில் விந்தையான இரண்டு அனுபவங்களை அடைந்தார் பாரதி.(பார்க்க: மேற்படிப் பதிப்பு, ப.275) என்றாலும், பாரதியை அவருடைய வேதாந்தப் பாடல்கள்தாம் அடையாளங் காட்டுகின்றன என்றார் ப.கோதண்டராமன் அவர்கள்.(புதுவையில் பாரதி, பழனியப்பா பிரதர்ஸ், 1980, பக்.55-56) இவர்(ப.கோதண்டராமன்) தமிழ்நாட்டை விட்டு நீங்கிப் புதுவையில் அரவிந்தாசிரமத்திலேயே தங்கிப் பணி செய்தவர். 'புதுவையில் பாரதி' என்ற இந்த அரிய புத்தகத்தில் பாரதியாரின் 'சித்தக் கடல்' என்ற சிறிய நூலின் 1/7/1915, 2/7/1915 தேதிகளிட்ட குறிப்புகள்(பக்கம் 41 முதல் 47 வரை) பாரதியின் உண்மையான அன்பர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பயன்படுவன. நோய், அச்சம், கடன்காரர் தொல்லை, குடிக்கூலிக்காக வீட்டுக்காரன் கொடுக்கும் தொல்லை முதலாக, தமக்கேற்பட்ட புகையிலைப் பழக்கம் உட்படப் பலவற்றை அவற்றில் புலப்படுத்தியிருக்கிறார் பாரதி. [புதுவையில் பாரதியார் வாழ்ந்தபொழுது அரவிந்தர், பாரதியின் துணைக்கொண்டு செய்த திருவள்ளுவர், ஆண்டாள், நம்மாழ்வார் குலசேகராழ்வார் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் குறித்து முதன்முதலாகச் சிந்திக்க வைத்ததும் 1980இல் பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்ட ப.கோதண்டராமனின் புத்தகமே. பார்க்க: பக்.88-117] சித்தர்கள் தொகை முதலில் பதினெட்டாகவும் பிறகு இருபதாகவும் ஆனதற்கு, அவ்வப்பொழுது வெளிவந்த சித்தர் பாடல்களின் பதிப்புகளே காரணம். உண்மையில் சித்தர்கள் தொகையை எண்ணி மாளாது. சிறிய மாநிலமான புதுச்சேரியில் மட்டும் கழுவெளிச் சித்தர், சிவஞானபால சித்தர், தொள்ளைக்காது சித்தர், மௌலா சாஹிப் மெய்ஞ்ஞானி, நாகலிங்க சாமிகள், அழகர் சாமிகள், சித்தானந்த சாமிகள், சக்திவேல் பரமானந்த குரு சாமிகள், இராம பரதேசி சாமிகள், அப்பா பைத்திய சாமிகள், அக்கா சாமிகள், மகான் படே சாயபு, கம்பளி சாமிகள், யாழ்ப்பாணம் கதிர்வேல் சாமிகள், ஞானகுரு குள்ளச் சாமிகள், சட்டி சாமிகள், சீமான் சாமிகள், சடைத்தாயாரம்மாள், திருக்காஞ்சி சாமிகள் முதலான சித்தர்கள், தோராயமாக முப்பதின்மர் வாழ்ந்தார்கள். தமிழ்நாட்டில் கரூர், திருவண்ணாமலை முதலான ஊர்கள் ஒவ்வொன்றிலும் ஒற்றைவேட்டிச் சாமிகள், அருணாசல சாமிகள், ஆற்றுச் சாமிகள், இராமேசுவரம் சாமிகள், பேயன்பழத் தாத்தா சித்தர் முதலான சித்தர்கள் பற்பலர் வாழ்ந்திருக்கிறார்கள். உண்மையான சித்தர்கள் இரசவாதம் முதலானவற்றை நாடிவந்த மக்களை ஊக்குவித்ததில்லை. மூலிகைகள் பலவற்றின் முதன்மைக் குணங்களை அறிந்து வைத்திருந்த சித்தர்கள் அவற்றின் இனங்கள் பல அழியாமல் காத்தார்கள். மாழை எனப்படும் உலோகங்களின் நுட்பங்களையும் முப்பூ போன்ற சஞ்சீவினி/குருமருந்து(panacea)களின் செய்முறையையும் சித்தர்களுள் பலர் தெரிந்து வைத்திருந்ததோடு மக்களின் தீராத நோய்கள் சிலவற்றைத் தீர்த்துவைக்கவும் முயன்றார்கள். சித்தர்களின் புறத்தோற்றம் இயல்பானதாகத்தான் இருக்கும், குறிப்பாகவும் சிறப்பாகவும் எதுவும் தோன்றாது என்பதை, “வேர்த்தால் குளித்துப், பசித்தால் புசித்து, விழி துயின்று பார்த்தால் உலகத் தவர்போல் இருப்பர் பற்று அற்றவரே!” (பட்டினத்தார் பாடல்கள்: பொது. பா.19) என்ற பட்டினத்தார் பாடல் தெரிவிக்கிறது.[“மாத்தானவத்தையும்” என்று தொடங்கும் இப்பாடலைத்தான் குமரி முதல் வேங்கடம் வரையிலுள்ள இடு-சுடுகாடுகளில் பணிபுரிவோர் தவறாது பாடுகின்றனர்; ‘பிதாமகன்’ என்ற தமிழ்த் திரைப்படத்திலும் இப்பாடல் இடம்பெற்றது] சித்தர்களுக்கு இயல்பு மீறிய(abnormal) புறத்தோற்றமும் இருக்கக் கூடும் என்பதை, “பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்து, இட்ட பிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி, நரிபோல் உழன்று, நன்மங்கையரைத் தாய்போல் கருதித், தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச் சேய்போல் இருப்பர்கண்டீர்! உண்மை ஞானம் தெளிந்தவரே!” (மேலது, பா.35) என்ற பட்டினத்தார் பாடல் சித்தரிக்கிறது. சித்தர் பாடல்களின் பல்வேறு பதிப்புகளிலும் அவற்றுக்கு முந்திய பதிவுகளான ஓலைச்சுவடிகளிலும் காலந்தோறும் கலப்படம் நிகழ்ந்து வந்திருக்கிறது. அதனால்தான் கயிலாயக் கம்பளிச்சட்டைமுனி நாயனார் போன்ற சித்தர் பாடல்களில் முன்னுக்குப்பின் முரண்களும் கருத்தோர்மைச் சிதைவுகளும் கடுமையாக ஏற்பட்டுள்ளன. சான்று: “மயங்குவான் பொன்தேடப் புரட்டுப் பேசி மகத்தான ஞானமெல்லாம் வந்த தென்பான்; தயங்குவான் மண்ணாலே சார்வு காணான் சாதகமா யோகத்திற் சார்ந்தே னென்பான்” என்றும், “ஆரப்பா உலகத்தில் ஞானி யுண்டோ? ஆராய்ந்து நான்கண்டே னென்பார் கோடி; ஏரப்பா உழுத(ல்)லோவெள் ளாமை யாகும்? ஏரில்லான் அறுத்தடித்த கதையும் ஆச்சே!” என்றும் வருபவை இரண்டுமே அவர் பாடியவை என்பது. மேலே உள்ள பாட்டின் மூன்றாவதும் நான்காவதும் ஆன அடிகளில் கயிலாயக் கம்பளிச்சட்டைமுனி நாயனார், உலகோர்முன் வைக்கும் அளவையியல்(logic) நியாயம் மிகவும் துல்லியமானது. ‘அங்கை நெல்லி’யெனும் மற்றொரு நியாயம் போல ‘நெற்றியடி’ கொடுப்பது. கொங்குப்புலவர் நா. வையாபுரியாரின் தலைமாணாக்கர் அறிஞர் கு. நடேச(க் கவுண்ட)ர் இயற்றிய ‘நியாயக் களஞ்சியம்’ என்ற அரிய நூலை முழுவதுமாக வாசித்தால், இதில் பொதிந்துள்ள அளவையியல் நியாயம் ‘பொறி தட்டியது போல’ப் புலனாகும். இவ்வாறு ஆழ்ந்தகன்ற நுட்பத்துடன் பாடிய கம்பளிச்சட்டைமுனிச் சித்தரின் மற்றொரு அல்லது கடைசிப் பாடலாகப் பதிப்புகள் பலவற்றுள் வந்துள்ள மற்றொரு பாடல் இதோ: “மெளனமென்றீர் எனையாண்ட தட்சிணாமூர்த்தி மலர்பணிந்தே ஞானமது நூறுஞ் சொன்னேன் மெளனமென்ற நாதாக்கள் பதத்தைப்போற்றி வகையோடே நிகண்டாக வாதஞ் சொன்னேன் மெளனமென்றீர் ஞானம்பொய் யென்று சொல்லி வாகான செயமண்டி போட்டே நூற்றில் மெளனமென்ற சமரசத்தான் மக்காள் மக்காள் வாகான ஞானமுறை முற்றுங் காணே” கயிலாயக் கம்பளிச் சட்டைமுனி நாயனாரின் முந்திய பாடல்களுக்கும் இதற்கும் எத்தனை வேறுபாடு? தெரிந்தே செய்தார்களா அல்லது தெரியாமல் செய்துவிட்டார்களா என்று தெரிந்துகொள்ள முடியாத ஓர் அடையாளக் குழப்பம் தமிழகத்தில் நிலவுகிறது. 'சித்தர்' என்பதற்கும் 'சித்த மருத்துவர்' என்பதற்கும் இடையில் அது நிலவுகிறது. சித்தர்கள் இயற்கை மருத்துவர்களாகவோ, தமிழ் மருத்துவர்களாகவோ திகழ்ந்திருக்கலாம்; தம்மைச் சார்ந்த சமூகத்தின் குடும்ப மனிதர்களுக்கு இவ்வகையில் அவர்கள் உதவியிருக்கலாம். சித்த மருத்துவர்களும் ‘ஆயுள்வேத’ மருத்துவர்களும் அப்படியல்லாத தொழில்முறை மருத்துவர்கள். அவர்களையும் சித்தர் என்று ஏற்றுக்கொள்வது சரியா? புதுச்சேரியிலுள்ள பிரஞ்சு ஆராய்ச்சி நிறுவன நூலகத்தில் ஒரு பழைய நூல் உள்ளது. அதன் பெயர் “சித்தர் களஞ்சியம்.” குடந்தை பரஞ்சோதி மருத்துவசாலை பொன்னம்பலனார் (K.S. பொன்னம்பலம் என்றுள்ளது) இயற்றியது. ‘பாரம்’(form) என்பது எட்டுப் பக்கங்களாக இருந்த காலத்தில் அச்சிடப்பெற்றது. அந்நூலுக்கான மதிப்புரை, ‘பார்த்துரை’ என்ற பெயரில் உள்ளது. வழங்கியவர் ‘யதார்த்தவசனி’ இதழாசிரியர் டி.வி. கோவிந்தசாமிப் பிள்ளை அவர்கள். அந்தப் ‘பார்த்துரை’யின் பகுதி: “கும்பகோணம் வைத்திய இரத்தினம் எனும் நற்பெயர் படைத்த ஆயுள்வேத பண்டித சிகாமணியாகிய மகா-ள-ள-ஸ்ரீ பொன்னம்பல பண்டிதர் பிரசுரம் செய்துள்ள “சித்தர் களஞ்சியம்” என்னும் நன்னாமம்பூண்ட நூல்பிரதி ஒன்றை நாம் பார்வையிட்டோம். சகல சித்திகளையும் அடைபவர் சித்தர் எனினும் ஆயுள்வேதியர்க்கு சித்தர்நூல் இன்றியமையாத துணைக்கருவியாகும்...” மேலே சாய்வெழுத்தில் வந்த பகுதி, சித்தர்நூலைத் துணைக்கருவி என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. “சித்தர் களஞ்சியம்” நூலிலோ யோகமுறைகளும் ஆசனமுறைகளும் மருத்துவ முறைகளுமே உள்ளன. ‘காப்பு நேரிசை வெண்பா,’ ‘விநாயகர் துதி,’ ‘பரமசிவ வணக்கம்,’ ‘அம்பிகை தோத்திரம்” என்று தொடங்கி, ‘சித்தர்கள் தோத்திரம்” கட்டளைக் கலித்துறையில் படைக்கப்பெற்று, ‘வழிபடு குருவணக்கம்,’ ‘குருவணக்கம்,’ ‘அவையடக்கம்,’ ‘சரிதை’[சரியை], ‘கிரியை,’ ‘யோகம்,’ என்ற தலைப்புகளில் பாயிரம் அமைந்து, ‘அதிகாரியின் இலக்கணம்’[யோகம் செய்யும் அதிகாரம் பெற்றவர்] என்று நூலே ஐந்தாம் பக்கத்தில்தான் தொடங்குகிறது. இந்தப் பக்கங்களுக்கு முன் ரோமன் எழுத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ள பதினாறு பக்கங்கள் நூலைப் பற்றியவை. அவற்றுள் கடைசி மூன்று, ‘விஷயசூசிகா’ என்னும் பொருளடக்கம். எழுபத்தாறு தலைப்புகளில் நூல் அமைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் யோகம் பற்றியும் மருத்துவம் பற்றியும்தான்... இத்தோடு போய்விடவில்லை. சித்தர் பாடல்களுள் கலப்படமும் இடைச்செருகல்களும் ஏராளமாய் நடந்தேறியுள்ளன. அண்மையில் வாழ்ந்தவரும் வாழ்ந்துகொண்டிருப்பவரும் கூட,சித்தர் பாடல்களைப்போல் தாமே எழுதிச் சேர்த்திருக்கிறார்கள். உலோகாயதச் சித்தர், தடங்கண் சித்தர் போன்ற பெயர்களில் சித்தர் பாடல்கள் தொகுப்பில் அவர்களின் பாடல்கள் உள்ளதுடன், மிகச் சிறந்த ஆய்வாளர்களும் அவற்றை நம்பி மேற்கோள் காட்டியிருக்கிறார்கள். சித்தர்களின் பின்புலமோ கருத்தியலோ அறிய அவர்களின் பதிவுகளை நேர்மையுடன் தொகுத்துப் பதிப்பித்தல் வேண்டும். தவிர, திரு த. கோவேந்தன் இரா.இளங்குமரன் போன்ற பதிப்பாசிரியர்களும் சித்தர் பாடல்களின் எழுத்துப் பிழைகள் நீக்கி யாப்பைச் செம்மைப்படுத்துவதில் ஈடுபட்டனரே தவிர பாடல் தொகுப்பை வரிசைப்படுத்துவதில் ஆர்வம் காட்டியதாகவோ முயன்றதாகவோ தெரியவில்லை...ஒருவர் பதிப்பில் பாடல் எண்ணிக்கை கூடியுள்ளதற்கும் மற்றவர் பதிப்பில் குறைந்துள்ளதற்கும் யாரும் காரணம் காட்டவில்லை.(முனைவர் க.நாராயணன், சித்தர் சிவவாக்கியர், 2003. ப.63) தமிழ்நாட்டு சூஃபியர்களின் தொண்ணூற்றிரண்டு 'வகைமாதிரி'க் கவிதைகள், 'இறைவனும் பிரபஞ்சமும்' நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. (தேசமானிய, டாக்டர். ஏ.எம். முஹம்மத் சஹாப்தீன், இறைவனும் பிரபஞ்சமும், கொழும்பு-7. 1995.) பொதுவாக, சித்தர்களும் சூஃபியர்களும் - 1. மதங்கள் மனிதர்களுக்கிடையே பிளவுகள் ஏற்படுத்தாமல் தலையிட்டு, மக்களை ஒற்றுமைப்படுத்தினார்கள். "..இலங்கை இந்திய கலாசாரப் பின்னணியின் மூலம் சூஃபி ஞான வளர்ச்சியில் இன்னொரு திருப்பத்தையும் காண்கிறோம். பற்பல இடங்களிலும் சூஃபிஞானியர்களுக்கு ஸியாரங்கள் கட்டப்பட்டும் அவர்களின் நினைவுதினம் கொண்டாடப்பட்டும் வருவதை அறிகின்றோம். இவ்வரிசையில் மிகவும் கீர்த்தி பெற்று விளங்குவது மாணிக்கப்பூர் தந்த மகாமேதை மீரா சாஹிப் ஆண்டகை அவர்களுடைய இடமாகும். இந்து, கிறிஸ்த்துவ, இஸ்லாமிய சகோதரர்களனைவரும், அங்கு சென்று, அன்னாரை நினைவு கூர்வதைக் காண்கிறோம்."(தேசமானிய டாக்டர் ஏ.எம்.முஹம்மத் சஹாப்தீன், இறைவனும் பிரபஞ்சமும், கொழும்பு, 1995. ப.97) 2. பல்வேறு நுட்பமான முறைகளைப் பின்பற்றி, உட்சமயங்களின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டும் தனித்தனிக் கடவுளரைக் கற்பித்துக்கொண்டும் மக்கள் அஞ்ஞானத்தில் அழுந்துவதைத் தடுத்தார்கள். 3. பக்தியின் பெயரால் மக்கள் மனங்களில் ஏற்பட்ட உருவ வழிபாட்டு முறைகளையும் புறச் சடங்குகளையும், போலிவாழ்வையும் மூடப் பழக்கங்களையும் களைந்து அறிவார்ந்த ஆன்மிக வாழ்விற்கு வழிகாட்டினார்கள்.(முனைவர் க.நாராயணன், சித்தர் சிவவாக்கியர், 2003. ப.67) 4. குறிப்பாக, எவ்வாறு கலப்புத் திருமணங்களால் சாதிமுறை ஆட்டங்காணுமோ, அவ்வாறு சித்தர் பீடங்களைப் பின்பற்றிய மக்களிடத்தில் சாதிவேற்றுமை மதிப்புப் பெறாதவாறு பாதுகாத்தார்கள். 5. உடைமைச் சமூகத்தில் இல்லாரும் வாழ வேண்டி, நிலையாமைகள் பலவற்றைத் தம் எளிய - தெளிவான - நேரடியான பாடல்களால் உணர்த்தி, உடைமை/சொத்துக் குவிப்பவர்களின் 'வேக'த்தை மட்டுப்படுத்தினர். "ஊனாகி ஊனினுயி ராகியெவ் வுலகுமாய் ஒன்றா யிரண்டு மாகி உள்ளாகி வெளியாகி யொளியாகி யிருளாகி ஊருடன் பேருமா கிக் கானாகி மலையாகிவளைகடலு மாகியலை கானக விலங்கு மாகிக் கங்குல்பக லாகிமதி யாகிரவி யாகிவெளி கண்டபொரு ளெவையு மாகி நானாகி நீயாகி அவனாகி அவளாகி நாதமொடு பூத மாகி நாடுமொளி புரியஅடி யேனுமுமை நம்பினேன் நன்மைசெய் தாளு தற்கே வானோரும் அடிபணித லுள்ளநீர் பின்தொடர வள்ளல் இற சூல்வரு கவே வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண் மணியே முகியித் தீனே" என்ற பாடல் குணங்குடி மஸ்தான் ஸாஹிபு அவர்கள் பாடியது. சித்தர் திருமூலர் பாடியவை பின்வருமாறு: "புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப் புகுந்துநின் றான்புகழ் வாய்இதழ் வாகிப் புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப் புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே தானே திசையொடு தேவரு மாய்நிற்குந் தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்குந் தானே கடல்மலை யாதியு மாய்நிற்குந் தானே உலகில் தலைவனு மாமே உடலாய் உயிராய் உலகமே தாகிக் கடலாய்க் கார்முகில் நீர்பொழி வானாய் இடையாய் உலப்பிலி எங்குந் தானாகி அடையார் பெருவழி அண்ணல் நின்றானே" திருமூலரின் பாடற்பொருளை மஸ்தான் சாஹிபு அவர்களின் பாடற்பொருளோடு ஒப்பு நோக்கினால்(இறைவனும் பிரபஞ்சமும், ப.147) தமிழ்நாட்டுச் சித்தர்களும் சூஃபியர்களும் எத்தகைய புரிந்துணர்வுடன் தாங்களும் வாழ்ந்து மக்களையும் நெறிப்படுத்தினார்கள் என்பது தெளிவாகப் புரியும். ******** karuppannan.pasupathy@gmail.com திண்ணை.காம் வலையேட்டில் அக்டோபர் 09, 2008 வியாழக் கிழமையன்று 'அரசியலும் சமூகமும்' என்ற தலைப்பின்கீழ் வெளியிடப்பெற்றது.

30.8.08

எப்பொழுதுமே தமிழராக இருக்கக் கூடாதா? - தேவமைந்தன் உலகத் தமிழர் நல வாழ்வுக்காக ஆதரவு தேடி, பல இடங்களுக்கும் சென்று வந்தனர் சிலர். போகிற போக்கில் கல்லூரி ஒன்றைக் கண்டு, உள்ளே நுழைந்து முதல்வரின் இசைவு பெற்று முதலாவதாக அவர் அறைக்கு அருகில் இருந்த துறையொன்றுக்குள் நுழைந்தனர். அது அறிவியல் துறை. துறைத் தலைவராக வீற்றிருந்தவரிடத்தில் சென்று, தாம் வந்த நோக்கத்தைத் தெரிவித்தனர். விழிகளில் வியப்புப் பொங்க, புருவங்களை நெறித்தவாறு அவர் சொன்னார்: "நீங்க தப்பா இங்க நுழைஞ்சிட்டேங்க.. இது தமிழ் டிபார்ட்மெண்ட் இல்லே.. சயின்ஸ்..." போனவர்களுக்கோ அதிர்ச்சி. "ஐயா! நாங்கள் தமிழர்கள் நலவாழ்வு தொடர்பாக ஆதரவு தேடி வந்தோம்..இதில் துறை வேறுபாடு கிடையாது... இதோ பாருங்கள்..எங்களுக்குள் மருத்துவர் உள்ளார்..பொறியியல் வல்லுநர் உள்ளார்..தமிழர்தாமே நாமெல்லாரும்.." என்று அவர்களுள் மூத்தவர் சொன்னார். பிறகு அங்கு என்ன உரையாடல்கள் நடைபெற்றன என்பதை இங்கு நாம் சொல்ல வேண்டுவதில்லை. என் பெயர்ப்பலகையைக் கண்டு இளைஞர் இருவர் உரக்கச் சொன்னார்கள்: "சார் தமிழ் வாத்தியார். அதுதான் தமிழ் போர்டு மாட்டியிருக்கிறார்!" ஆக, தமிழில் பெயர்ப்பலகை இருந்தால் தமிழாசிரியர்; தமிழெண் உந்தில் இருந்தால், தமிழ் தொடர்பானவர்; தமிழைக் குறித்து அக்கறையாகப் பேசினால் தமிழால் பிழைப்பவர்; தூயதமிழ் குறித்து வலியுறுத்தினால் பா.ம.க. அல்லது 'மக்கள் தொலைக்காட்சி ' தொடர்பானவர்..... அறுபதாண்டுகளுக்கு முன் எவராவது 'வணக்கம்' என்று சொன்னால், "என்னடா! நீ தீனா மூனா கானா'வா?" என்று கேட்பார்கள். அதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு? காலம் இங்குமட்டும் உறைந்து போனதா? தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பங்குச் சந்தை குறித்து இல்லத்தரசிகளும் அறிந்து கொள்ள 'ஹலோ சந்தை.' 'பரஸ்பர நிதியம்' குறித்து ஓர் ஐயத்தை வல்லுநர் விளக்குகிறார். பக்கத்தில் இருந்த விருந்தாளி கேட்கிறார்: "பரஸ்பர நிதியம் என்று தமிழில் சொல்லுகிறாரே.. அது 'ம்யூச்சுவல் ஃபண்ட்' தானே?" அது தமிழ் அன்று என்று சொல்லுவதைக் கவனிக்காமல், தொ.கா. பெட்டியையே பார்க்கிறார். "அப்ப வரட்டுமா?".. 'சட்'டென்று புறப்பட்டுப் போய்விடுகிறார். "கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனால் அங்கும் ஒரு கொடுமை வந்து தலைவிரித்தாடுகிறதாம்!" என்று மக்கள் சொல்வார்கள். கோவிலொன்றில் சிறுவன், தன் தங்கையைக் குறித்து தாயிடம் முறையிடுகிறான். "மம்மீ! இங்க பாருங்க! இந்தக் 'கேட்'டை செளம்யா புடிச்சி புடிச்சி இழுக்கிறா!" நான் தலையிடுகிறேன். "தம்பீ! அது 'கேட்' இல்லே.. பூனை.." அவன் சொல்கிறான்: "அங்கிள்! எங்க மிஸ் அதைக் 'கேட்'டுன்னுதான் சொல்லச் சொல்லியிருக்காங்க.. அவங்க 'ஃபர்ஸ்ட் தெளசண்ட் வொர்ட்ஸ்'ன்னு 'புக்' வச்சுக் காட்டிருக்காங்களே.." அவனாவது பேசினான். அவன் தாயோ என்னைப் பார்த்து முறைத்தார். அவர்களிருவரையும் பிடித்து இழுத்தவாறு அவ்விடத்தை விட்டே அகன்றார். இப்பொழுது சீனத்தில் நிகழும் உலக விளையாட்டுப் போட்டி குறித்து அங்குள்ள மூத்த மொழியியல் அறிஞர்(#) மொழிகிறார்: "எங்கள் நாட்டில் இப்போட்டி நடைபெறுவது குறித்து எங்களுக்கு மகிழ்ச்சிதான்; எங்கள் வீரர்கள் வெற்றிமேல் வெற்றி பெறுவது பற்றிப் பெருமிதம்தான்; ஆனால் இதைச் சாக்கிட்டு விளையாட்டு வகைப் பெயர்கள், உணவு வகைப்பெயர்கள் முதலியவை பல்லாயிரக்கணக்காக எங்கள் மொழியில் புகுகின்றனவே! இதை நினைத்தால் எனக்குக் கவலையே மேலிடுகிறது!" "நாம் தமிழர்!" என்னும் உணர்வு, எப்பொழுது நம்மவர்களுக்கு வரும்? அவர்கள் தொடர்ந்து பெற்று வரும் ஊதியத்தில், அதன் உயர்வில், பணியிடம் தொடர்பான மாற்றங்களில், அடைந்துவரும் ஏந்துகளில், ஊதிய உயர்வுப் பரிந்துரைகளில் வேற்று மொழிக்காரர்கள் கைவைத்தால் மட்டுமே வரும். எல்லாம் சரியானதும், வந்த விரைவில் போய்விடும். தன் பிள்ளை வேற்றுமொழிச் சொற்களைப் பயன்படுத்திப் பேச வேண்டிய நிலைக்கு வருந்தாமல், படிக்கும் பள்ளிகளில் தமிழ்ச் சொற்களைப் பேசினால் தண்டம் கட்ட வேண்டி வருவதற்கும் அருவருப்படையாமல், அந்தப் பள்ளிகளுக்கு அளவுக்கு மிகுதியாகக் கல்விக்கட்டணத்தையும் - கட்டடங் கட்ட நன்கொடையையும் கடன்வாங்கியாவது தரவும் கவலைப்படாத பெற்றோர்களும்; இவைகுறித்து இரட்டை நடிப்பை இயல்பாகப் போட்டு அன்றாடம் நடிக்கும் அரசியல்வாணர்களும் இருக்கும் நாட்டில், நச்சுமரம் பழுத்ததுபோல் உலகமயமாதலும் முதிர்ந்து வரும்பொழுது, "நாம் தமிழர்!" என்ற உணர்வு தமிழர்க்கு ஒவ்வொரு நிமையமும் நீடிக்கப் பாடாற்ற வேண்டிய பங்களிப்பைச் சிறு - பெரு வணிகர்களும் தொழில் முனைவோர்களும் ஊடகம் நடத்துவோரும் தர முன்வந்தால்தான் தமிழுக்கு உரிய இடம் தமிழகத்தில் கிடைக்கும். அடிக்குறிப்பு: இத்தனைக்கும் சீனத்தின் வடக்கு - நடுவண் -மேலைச் சீனப்பகுதிகளில் பேசப்படும் 'மண்டாரின்' என்ற கிளைமொழியே சீன அரசின் ஆட்சிமொழியாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் ஒலிப்புமுறை இடத்துக்கு இடம் மாறுபடாதிருக்க, பீஜிங் மக்களின் ஒலிப்புமுறையை அடிப்படையாகக் கொண்டு 1956ஆம் ஆண்டில் 'பின்-யின்' என்ற ஒலிப்புமுறை உருவாக்கப்பெற்றது. நடைமுறை ஆய்வுகளின் பின்னர், இரண்டாண்டுகளுக்குப்பின் அது செயல்முறைக்கு வந்தது. இந்தப் பின்-யின் ஒலிப்புமுறையைக் கொண்ட சீனமொழி, உரோமன் எழுத்துமுறையை ஏற்றுக் கொண்டது. இதுவே இன்றைய சீனத்தின் கல்விமொழி; பன்னாட்டுத் தொடர்பு மொழியும் இதுவே. இம்மொழியையே - மூத்த அறிஞர் சுட்டுகிறார். நன்றி: தமிழ்க்காவல்.நெட் 17-8-2008.

12.8.08

துய்ப்பேம் எனினே தப்புந பலவே - வாழ்க்கை இதுதான்! - தேவமைந்தன்

‘கணக்கு, பிணக்கு, ஆமணக்கு’ என்றாராம் பாரதி. கணக்குப் பாடத்தில் மக்கு என்ற ‘பாராட்’டை ஆசிரியரிடம் வாங்கிய மாணவர், வாழ்க்கைப் பாடத்தில் வென்று விடக்கூடும். ஆம். வாழ்க்கை, நாம் விதிக்கும் எந்த விதமான நிபந்தனையையும் ஏற்றுக் கொள்வதில்லை. மெய்யாகப் பார்த்தால், அது எந்த விதமான நிபந்தனையையும் நம்மேல் விதிப்பதும் இல்லை. அடிமைப் புத்தியே நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளும். விடுதலையான உள்ளம் எந்த நிபந்தனையை யார் விதித்தாலும் ஏற்காது. அன்பாகச் சொன்னால் மட்டுமே ஏற்கும். அன்புக்கு மாறானது வன்பு என்னும் ‘வம்பு.’ உலக அரசியலில், நாட்டு அரசியலில், அவையே போன்ற உலக - நாட்டு வணிகவியல்/சமூக இயல்களில், ஏன்.. வாழ்வியல் அன்றாடத்திலுங்கூட இன்றைய நாளில் முதன்மை இடம் தாங்குவது வன்பேதான். ‘எனக்கு எல்லாம் தெரியும்!’ என்ற இறுமாப்போடு அது உலகை வலம் வருகிறது. “அவர் வெறும் அரசு! நான் பெரிய பேரரசு!” என்பவருக்கு, அன்றன்று ஆட்சிப் பீடம்கூட ‘காலை வணக்கம்’ செலுத்துகிறது. ஆற்றல் மிக்க எளிமை, “வென்றவன் சொல்வதெல்லாம் வேதம்;அல்லாமல் என்ன?” என்ற கவியரசு கண்ணதாசன் வரியை முணுமுணுத்துக் கொள்கிறது. சங்க இலக்கியத்தில் சோழன் நல்லுருத்திரன் குறிப்பிட்ட ‘மெலிவு இல்லாத உள்ளம் உடைய உரனுடையாளர்’ (புறநானூறு 190) கேண்மையை விட, “உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்’(திருவருட்பா) உறவே நிகழ்வில் எங்கு பார்த்தாலும், சென்றாலும், பழகினாலும் மலிவாகக் கிடைக்கிறது. இந்தப் பொருளுக்கு மட்டுமே விலைவாசிப் புள்ளி - “வரலாறு காணாத விதத்தில்” - மிகவும் குறைந்து காணப்படுகிறது. ‘கச்சா எண்ணெ’யால் இதன் விலைப்புள்ளியை மட்டும் என்றும் ஏற்றிவிட முடியாது. ஒளவையார் பாடினாரே - நாடா கொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே! என்ற பாட்டு...(புறநானூறு 187) அந்த அளவுகோலை வைத்து இன்று அளந்தால், ஐந்து கண்டங்களிலும் ஓர் ஊர் கூட எஞ்சாது. கொள்கைகள் தடம் புரண்டுவிட்ட காலம் இது. ஏழைகளுக்கும் தொழிலாளருக்கும் உதவுபவர்கள் ‘ஏ.சி.’ இல்லாமல் இருக்க முடியாத காலம் அல்லவா.. பணம் படைத்தவர்களுக்கு அவர்களுள் சிலர் உதவும் அளவுக்கு, மற்ற ‘முதலாளித்துவச் சுரண்டல்வாதி’கள் துணைபோக முடியாது. நாடு, காடு, பள்ளம், மேடு என்ற நில வேறுபாடுகளை மட்டும் ஒளவையார் சுட்டினார். செவ்வாய்க் கோள் முதலான கோள்கள்கூட அந்தப் பட்டியலில் சேர்ந்துவிடப் போகும் காலம் வந்து கொண்டிருக்கிறது. என்ன.. “எவ்வழி நல்லவர் ஆடவர்” என்பது மட்டும் பேரளவு மாற்றம் பெற்று விடும்... ‘புரொகிராமிங்’ என்பது, கணினித் துறையில் மட்டுமே வெல்லக் கூடியது. சோதிடர்கள் இந்தச் சொல்லைக் கொச்சைப் படுத்தி விட்டார்கள். உள்ளபடி, அவர்களைப்போல் ஆற்றலுடன் ஒருவரைக் கடவுளுக்கு எதிராக எந்த நாத்திகவாதியாலும் திருப்பிவிட முடியாது. இதைப் பட்டறிந்தவர்கள் மட்டுமே உணர முடியும். ஆனால் இந்தத் திட்டமிடல்(programming) என்பதைச் ‘செயல் நம்பிக்கையாளர்கள்’ (pragmatists) அளவுக்கு மேல் நம்புகிறார்கள். இப்பொழுதெல்லாம் வெளியிடப்படும் நாட்குறிப்பேடுகள், அந்த அமெரிக்கப் பாணியில் அமைந்திருப்பதைப் பார்க்கலாம். நம்மவர்கள் பலர் அந்த ‘பிளானிங்’(planning) பகுதியில் தான் உப்பு புளி மிளகாய்க் கணக்கை எழுதி வைப்பார்கள். “பத்துப் பொருள் வாங்க வேண்டுமென்று போனால், எட்டுப் பொருள் கூட வாங்கிவர அமையாது” என்று என் துணைவியார் அடிக்கடி கூறுவார்கள். திட்டமிடுவது எல்லாம் தோற்கும் என்பதல்ல; ஒவ்வொருவர் திட்டத்தையும் உடைத்தெறிய என்றே மற்றொருவர் இவ்வையகத்தில் தோன்றியிருப்பார் என்பதே உண்மை. திருமணங்களிலும் இப்படித்தான். காதல் படங்களாய் எடுத்துத் தள்ளும் நம் திரைப்பட வல்லுநர்கள், காதலுக்குப் பிந்திய திருமண வாழ்க்கையையே பொருளாக வைத்துப் படமெடுக்குமளவு முட்டாள்கள் அல்லர். அவர்களுக்குத் தெரியும், நம் மக்கள் பார்க்க மாட்டார்கள் என்று. வாழ்க்கையில் தாங்கள் பார்த்துக் கொண்டிருப்பதையே ‘சினிமா’விலும் பார்ப்பதற்கு நம் மக்கள் என்ன கலைப்படச் சுவைஞர்களா? இதைப் புரிந்து கொண்டுதான் ‘பொதிகை’ அலைவரிசை, குறும்படங்களுக்கு ‘உரிய’ நேரம் ‘ஒதுக்குகிறது.’ பற்றாக்குறைக்கு, முன்பெல்லாம் நூல் வெளியிட்டு விழாக்கள் அடிக்கடி நடத்தப் பட்டதுபோல, இப்பொழுது ‘குறும்பட விழாக்கள்’ மலிந்து விட்டன. ஒரே நன்மை..புத்தகங்கள் வீட்டை அடைப்பதுபோல குறும்படங்கள் அடைப்பதில்லை. வட்டமான ‘டப்பா’க்கள் சில போதும்.. மூலையில் வைத்துக் கொள்ளலாம். “திட்டமிட்டால் போதும்!” என்பவர்களுக்கு எதிராக ஓர் உண்மையை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிவைத்தார்: தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும் உண்பது நாழி உடுப்பவை இரண்டே பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே (புறநானூறு 189) கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்”(புறநானூறு 192) என்ற வாழ்க்கை மெய்ப்பொருள் பாடலின் பதின்மூன்று வரிகளுக்குப் பின்னால், வாழ்க்கை மெய்ம்மையை எதனுடனும் சமரசம் செய்து கொள்ளாமல் தெளிவாக வெளிப்படுத்தும் பாடல் இது. வல்லரசுகள் பேரரசுகளை ஆள்பவர்களாயினும் சரி; நண்பகலோடு நள்ளிரவும் கண்துயிலாமல் வேட்டையாடும் வேடுவர்களாயினும் சரி; எவருக்கும் அடிப்படைத் தேவைகள் ஒன்றுபோலவேதான். மற்றவையும்(‘பிறவும் எல்லாம்’ என்ற இரண்டே சொற்கள் உணர்த்துபவை அனைத்தும் - காலங்கடந்தும் ஒன்றேபோல் இருப்பவை; ஏனெனில், அவை மனிதனின் கருவி-கரணம் சார்ந்தவை) அவ்வாறே. ஆகவே செல்வத்தை ‘உபரி’யாகச் சேர்த்தவர்கள் அந்த ‘உபரி’யை எப்பாடுபட்டேனும்(இது இக்காலப் பொருள்) எவ்வாறேனும் துப்புரவாகப் பகிர்ந்தளித்துவிட வேண்டும்.(இதைப் ‘பாத்தீடு’ என்ற கட்டுச் செட்டான சொல்லில் பழந்தமிழர் குறிப்பிட்டார்கள்.. ஆங்கிலத்தில் distribution என்பார்கள்). அவ்வாறு செய்யாமல் நாமே அச்செல்வத்தை நுகர்வோம் என்று முடிவெடுப்பவர்கள் இயற்கையான காரணங்களாலும் மன்னன் - படையெடுப்பு போன்ற செயற்கையான காரணங்களாலும்(இது அக்காலப் பொருள்) பலவகைகளில் அதைக் கைவிட்டு வருந்த நேரிடும்... அந்தப் பாட்டின் பிற்பகுதிக்கு, இந்தக் காலத்துப் பொருள் என்ன தெரியுமா? “...அப்படி அல்லாமல் நாமே இந்த உபரிச் செல்வத்தையும் அனுபவித்து விட வேண்டும் என்ற ‘பொல்லாத’ முயற்சியில் ஈடுபடுபவர்கள், ‘தினத்தந்தி’ போன்ற நாளேடுகளின் முதற் பக்கத்தில் முதல் இரு நாள்களும் - பிறகு ஐந்தாம் பக்கத்திலும் இடமும் ‘புக’ழும் பெற்று, படிப்படியாக ‘எதையும் மறக்கும்’ நம் மக்களால் அறவே மறக்கப்பட்டு, ஆண்டுகள் சில கழிந்தபின்னர் பழையபடி வாழவேண்டி வரும்!” என்பது. ******** நன்றி: திண்ணை.காம்

18.7.08

ஆங்கில வழிக் கல்வியால் விளையும் தீங்குகள் - ம.இலெ. தங்கப்பா

தாய்மொழியே கல்விமொழியாக இருப்பதுதான் இயல்பானது. ஆங்கில வழிக் கல்வி இந்த இயல்புநிலையைச் சீர்குலைக்கின்றது. கல்வியைச் செயற்கையாக்குகின்றது. தங்கள் சொந்தமொழியின் வாயிலாகக் கல்வி கற்பது மக்கள் உரிமை. மக்களாட்சி உரிமை. மண்ணின் மக்கள் கல்வி கற்கத் தாய்மொழியை விட்டுவிட்டு வேறொரு மொழியைத் தேடிப்போக வேண்டுமென்பது அடிமைத்தனத்தை மக்கள் மேல் புகுத்துவதாகும். மழலை வகுப்புகளிலேயே புகுத்தப்படும் ஆங்கில வழிக் கல்வி குழந்தைகள் மீது தேவையற்ற சுமையை ஏற்றுகின்றது. கல்வியைக் கடுமைப்படுத்திக் குழந்தைகளின் மகிழ்ச்சியைக் கெடுக்கின்றது. நேரத்தை விழுங்குகின்றது. நாள்தோறும் பேசிப் பழகும் வீட்டுமொழியாகிய தமிழில் கற்பது எளிது; இன்பம் தருவது. ஆங்கில வழிக் கல்வியோ தமிழ்க் குழந்தைகட்கு மிகமிகக் கடினமானதும், சோர்வூட்டுவதுமாக இருக்கின்றது. தமிழில் பத்தே மணித்துளியில் படிக்கக்கூடிய வரலாற்றுப் பாடத்தைக் கூடக் குழந்தைகள் ஆங்கிலத்தில் படிக்க ஒரு மணி நேரம் ஆகின்றது. ஆங்கில வழிக் கல்வி சொந்தப் புரிந்து கொள்ளுதலுக்கு இடமில்லாத குருட்டுப் படிப்பாக இருக்கின்றது. எண்ணத்தைத் தூண்டாமல் மூளையை மழுங்கடிக்கின்றது. வட்டரங்கு(circus) விளையாட்டுகட்காகக் குரங்கையும் நாய்களையும் பழக்குவதுபோலவே ஆங்கில வழிக் கல்வி குழந்தைகளைப் பழக்குகின்றது. குருட்டுத்தனமாய்ப் பாடங்களைத் திணிக்கின்றது. எண்ணும் திறனை அழிக்கின்றது. குழந்தைகளின் ஆங்கிலத் திறமை வெறும் வட்டரங்குத் திறமையே. ஆங்கில வழிக் கல்வி சொந்தப் பண்பாட்டிலிருந்து குழந்தைகளை விலக்கி வைக்கின்றது. தன் மொழி, இனம், பண்பாடு எதிலும் பற்றில்லாதவர்களாக அவர்களை வளர்த்து வெறும் பொருளீட்டிகளாக ஆக்குகின்றது. ஆங்கில வழிக் கல்விக்கு ஏற்பட்டுள்ள போலி மதிப்பினாலும் பள்ளியில் தாய்மொழியாகிய தமிழ் ஒரே ஒரு பாடமாக மட்டும் கற்பிக்கப் படுவதாலும், தமிழை அவர்கள் தாழ்வாக நினைக்கின்றனர். தமிழ்வழிக் கல்வி மதிப்புக் குறைவாகக் கருதப்படுகின்றது. தமிழ் சொந்த மக்களாலேயே இழிவு படுத்தப் படுகின்றது. வேலை வாய்ப்பை முன்னிறுத்தியே ஆங்கில வழிக் கல்வி அமைந்திருப்பதால் ஆங்கில வழிக் கல்வி கற்றவர்கள் வேலை பார்த்துச் சம்பளம் வாங்கும் படித்த கூலிகளாகவே உருவாகின்றனர். ஆங்கில வழிக் கல்வியாளர் எல்லாருமே அடிமை உள்ளத்தினராக இருப்பதால் கல்வியின் விரிந்த நோக்கங்களும் உயர்ந்த குறிக்கோள்களும் கைவிடப்பட்டு வேலை பார்க்கவே கல்வி என்று குறுகிப் போனமையால் ஆங்கில வழிக் கல்வி கற்றவர்கள் நல்லியல்புகளும், மாந்தப் பண்பும், மக்கள் நேயமும் இல்லாத, அருவருக்கத்தக்க வறட்டு மாந்தராக நிற்பதையே இன்றைய படித்தவர் நடுவில் கண்கூடாகக் காண்கிறோம். தன்னலம் பிடித்த உலகியலாளராய் வாழும் இவர்கள் நாட்டுக்கோ மக்களுக்கோ சிறிது கூடப் பயன்படுவதில்லை. பயன்படும் எந்த ஆக்கப் பணியையும் இவர்கள் செய்வதில்லை. ஆங்கில வழிக் கல்வி, பள்ளிகளையும், பள்ளிக் கல்வியையும் மட்டுமல்ல நாட்டின் கல்விச் சூழல் முழுமையையுமே ஆங்கில வண்ணமாய் ஆக்கி வைத்துள்ளது. எல்லா அறிவியல் நூல்களும் ஆங்கிலத்திலேயே அமைகின்றன. தாய்மொழி மட்டுமே படித்தவர்கட்கு அறிவுலகிற் புகும் வாய்ப்பு முற்றுமாய் அடைக்கப்பட்டுள்ளது. தமிழிலக்கிய நூல்களைத் தவிரப் பிற துறை நூல்கள் அனைத்துமே ஆங்கிலமாயிருப்பதால் தமிழ் படித்தவர்கள் வேறு எந்தத் துறையிலும் அறிவு பெறாதவர்களாய் நின்று போகின்றனர். எந்த அறிவையும் சொந்த மொழியில் பெறும் வாய்ப்பும் உரிமையும் மறுக்கப்படுவதைப்போல் உலகப் பெருந் தீமை வேறில்லை; இல்லை; இல்லை. தாய்மொழியே கல்வி மொழியானால், பாடநூல்கள் மட்டுமல்ல, எல்லாப் பொதுவான அறிவுநூல்களும் அறிவியல் நூல்களும் ஆய்வு நூல்களும் தமிழிலேயே கிடைக்கும். நூலகங்கள் யாவிலும் தமிழில் அறிவியல் பல்துறை நூல்கள் நிரம்பும். ஏழாம் எட்டாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்ட ஒரு சிறுவன்கூட நூலகங்களில் சென்று எத்துறை நூலையும் தன் தாய்மொழியாகிய தமிழில் பயின்று மேற்சென்று உலக அறிஞனாக விளங்க முடியும். ஆங்கில வழிக் கல்வி இவ் வாய்ப்பை முற்றும் மறுக்கின்றது. கல்வி நிலையங்களில் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருப்பதால் தமிழர் அல்லாத வேறு மொழியினரும், அயல் மாநிலத்தினரும் தமிழ் நிலங்களில் புகுந்து கல்வி வாய்ப்பும் அதன் வழி வேலை வாய்ப்பும் பெறுகின்றனர். தமிழ் இளைஞர்களின் கல்வி வாய்ப்பும் வேலை வாய்ப்பும் இவர்களால் பறித்துக் கொள்ளப்படுகின்றன. ஆங்கில வழிக் கல்வியின் மிகக் கொடிய தீய விளைவுதான் ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருப்பதுமாகும். ஆங்கிலமே ஆட்சிமொழியாக இருப்பதால் தமிழறியாதவரும் தமிழரல்லாதவருமான எவரும் அலுவலகங்களில் நுழைந்து தமிழ் இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறித்துக் கொள்ள முடிகின்றது. இப்படி உள்ளே நுழைந்த தமிழரல்லாதவர்களே மேல் அதிகாரிகளாகித் தமிழ் வழிக் கல்வியை முற்றும் மறுக்கின்றனர்! மக்களுடன் ஒட்டுறவு அற்ற வேற்றவர்களான இவர்கள் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமலேயே காலத்தை ஓட்டி விடுகின்றனர். தமிழ் வழிக் கல்விக்கு முட்டுக்கட்டையிடுபவர்களும் இவர்களே. ஆங்கில வழிக் கல்வி எண்ணும் ஆற்றலை அழித்து ஒழித்துப் படித்தவர்களின் மூளையை மழுங்கச் செய்து அவர்களின் அறிவைக் கெடுத்துவிட்டது என்பதற்கு நடைமுறைச் சான்றாக விளங்குபவர்கள் இன்றைய ஆட்சியாளரும், கல்வியாளரும், கல்வித் துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களுமே. தாய்மொழி வழிக் கல்வி என்பது உலகமுழுவதும் ஒப்புக் கொண்டுள்ள ஒரு சீரிய கொள்கை. காந்தியடிகள், தாகூர் போன்ற பேரறிஞர்கள் தாய்மொழிக் கல்வியையே வற்புறுத்தினர். இன்று தமிழ் பேசும் மக்களைக் கொண்ட தமிழ் நாட்டிலும் புதுவை மாநிலத்திலும் தவிரப் பிற மாநிலங்களிலெல்லாம் அவரவர் தாய்மொழிக் கல்வியே நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது. இங்குப் பணிபுரிய வந்துள்ள வடநாட்டு அதிகாரிகள் சிலர் கூடத் தமிழ் வழிக் கல்வியை வற்புறுத்துகின்றனர்! ஆனால் மேற்கூறிய தமிழ்நாட்டு முட்டுக்கட்டைகள்தாம் தாய்மொழிவழிக் கல்விக்கு எதிர்ப்பாக இருந்து வருகின்றனர். ஆங்கில வழிக் கல்வியே நம்மை முன்னேற்றும் என்கின்றனர். சொந்த மக்களின் உரிமைகளையும் வாய்ப்புகளையும் மறுத்துப் புறந்தள்ளும் அயல் மொழி வழிக் கல்வி எப்படி அவர்களின் உண்மை முன்னேற்றத்துக்குத் துணைபுரிய முடியும்? மக்களின் உரிமைகளையும், விடுதலை உணர்வையும், சொந்தப் பண்பாட்டையும், அடையாளங்களையும், அறிவையும், எண்ணும் ஆற்றலையும் அழிப்பதைப் போன்ற மிகப்பெருந்தீமை வேறு இருக்க முடியுமா? ஆங்கில வழிக் கல்விதான் இதனைச் செய்கின்றது. இதைத் தீமை என்று உணராமல் - இது நம்மைப் பின்னோக்கி இட்டுச் செல்கிறது என்று தெரியாமல், ஆங்கிலவழிக் கல்வி நம்மை முன்னேற்றும் என்று மிக அறியாமையோடு மேற்கூறியவர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனரே, இத்தகைய பேரவல நிலையை விளைவித்திருப்பது எது? ஆங்கில வழிக் கல்வியே என்பதை எவரேனும் மறுக்க முடியுமா? ******** நன்றி: தமிழ்க்காவல்.நெட்

உலகமயமாதலின் தாக்கத்திலிருந்து நம் தமிழ்மொழி மீள்வது எவ்வாறு? --தேவமைந்தன்

புதுச்சேரியிலுள்ள பிரெஞ்சு ஆய்வியல் நிறுவன நூலகத்தில் ‘அம்ருதா’ என்ற திங்களிதழைப் பார்க்க வாய்த்தது. அதில், தோப்பில் முகம்மது மீரான் எழுதியிருந்த “21ஆம் நூற்றாண்டில் தென்னிந்திய மொழிகளில் குறிப்பாகத் தமிழ் எதிர்கொள்ளும் சவால்கள்” என்ற கட்டுரை[சூன் 2008; பக்.17-20] என் கருத்தைக் கவர்ந்தது. உலகமயமாதலால் தமிழ்மொழி அடைந்துவரும் எதிர்நிலை விளைவும் நாடு, நகரங்களை மட்டுமல்லாமல் தீவுகளைக் கூட அது விட்டு வைக்காமையும் விரிவாக அதில் விளக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, இலட்சத் தீவில் உள்ள மொழிநிலை அதில் மிகுந்த இடம் பெற்றிருந்தது. இலட்சத் தீவில் ‘ஜெசரி மொழி’ பேசப்படுகிறது. இது முற்றிலும் பேச்சுமொழி. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகியவற்றின் கலப்புமொழி இது. பேசும்பொழுது மட்டுமே இதை இலட்சத் தீவு மக்கள் பயன்படுத்துகின்றனர். எழுதவேண்டும் என்று வரும்பொழுது, மலையாள மொழியைத்தான் அந்த மக்கள் பயன்படுத்துகின்றார்கள். உலகமயமாதலின் விளைவாக இலட்சத் தீவுக்குள் ஆங்கிலம் முதன்மையிடம் பெற்று, ஆங்கிலமொழிவழிக் கல்வி நிறுவனங்களில் மட்டுமே தம் மக்களைப் பெற்றோர் சேர்க்கும் நிலை உருவாகியுள்ளது. தமிழைப் பழைய மொழி என்று அங்கு மதித்த நிலை மாறியுள்ளதுடன் மலையாளத்தையும் ஆகக் கலப்பாக எழுதத் தொடங்கி விட்டார்கள் இலட்சத் தீவு மக்கள். “ஏன் தூய மலையாளத்தில் நீங்களெழுதக் கூடாது?” என்று தோப்பில் முகம்மது மீரான் கேட்டிருக்கிறார். “இலக்கியம் வாயிலாக அல்லாமல் எங்கள் மொழியைக் காப்பாற்றுவது எப்படி?” என்று அவர்கள் எதிர்வினா எழுப்பியிருக்கிறார்கள். இங்கே நாம் கவனிக்க வேண்டிய முகமையான செய்தி என்னவென்றால், ஏற்கெனவே தீவுகளின் கலப்புப் பேச்சு மொழியில் இடம்பெற்றுள்ள தமிழுக்கும் உலகமயமாதலின் முடுக்கத்தால் இன்னல் நேர்ந்திருக்கிறது என்பதே. மொரீசியசு, ரெவ்யூனியன் முதலான தீவுகளின் பேச்சுமொழியிலும் கூட பிரெஞ்சு மொழிதான் தலைமை செலுத்தி வருவதை நாம் அறிவோம். ஆங்கில மொழியின் ‘ஆதிக்கம்’ குறித்துக் கவலைப்படும் நம்மவர்கள் பலர், பிரெஞ்சு மொழியின் ‘ஆதிக்கம்’ குறித்துக் கவலையே படுவதில்லை. தமிழ் மேல் எந்த மொழி ஏறி அமர முயன்றாலும் விழிப்புடன் எதிர்ப்பதும் அந்தத் தாக்குதலை முறியடிப்பதும்தானே தமிழரின் கடமைகளாக இருக்க வேண்டும்? திராவிட இயக்கங்கள் தமிழை வளர்ப்பதாகச் சொல்லிக் கொண்டு ஆங்கிலத்தை வளர்க்கின்றன என்று குணா சொன்னபொழுதும் எழுதிய பொழுதும் திராவிட இயக்கங்களின் மேல் கொண்ட பற்றால் அவரை எதிர்த்தோம். ஆனால் அவர் சொன்னது இன்று பேருரு எடுத்திருப்பதைத்தானே பார்க்கிறோம். ஆங்கிலத்தை முனைந்து பரப்புபவர்களும் திராவிட இயக்கங்களின் நெருங்கிய நட்பில் திளைப்பவர்களுமான ஊடக முதன்மையர்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ‘அறிவுக்கனியைத் தொடுவானேன்?’ என்ற ஆய்வுநூலை குணா அண்மையில் படைத்திருக்கிறார். தமிழர்களிடையே இப்பொழுது உலகமயமாதலின் முதன்மைக்கூறுகளுள் முதன்மையான ‘வணிக மனப்போக்கு’ ஓங்கியுள்ளது. ஒருவர் தமிழரா, தமிழறிஞரா என்பதைவிட - “அவரால் எனக்கு என்ன ஆதாயம்?” என்ற மனக் கணக்கே விஞ்சியுள்ளது. யாருடன் பழகினால் என்பது அன்று... யாருடன் பேசினால் தனக்கு ஆக்கம் அதிகம் வரும் என்ற அளவுக்கு இன்று போயிருக்கிறார்கள் தமிழர்கள். தங்களுக்குப் பொருள் அடிப்படையில் பயன்படாதவர்களை ‘வீண்’ என்று தமிழில் சொல்லவும் விரும்பாமல் ‘வேஸ்ட்’ என்கிறார்கள் ஆங்கிலத்தில். உலகமயமாதல், சிறுவணிகர்களை அழிப்பதுடன் மட்டும் நின்று விடாது. ஓர் இனத்தின் அடையாளத்தையே அழித்துவிடும் - என்று சுருக்கமாக இதைச் சொல்லலாம். இன்றைய நிலையில் தமிழ் பேசும் தமிழர் என்பவர்களே உலக மக்கள்தொகை அளவில் அருகி வருகிறார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. “உங்கள் தமிழில் அயன்மொழிச்சொற்கள் பல கலந்திருக்கின்றன. என்னுடன் பேசுவதானால் நீங்கள் தனித்தமிழில்தான் உரையாட வேண்டும்!” என்று சொன்னால், பேரினக் கோட்பாட்டினருக்குத்தான் அது ஆக்கமாய் முடியும். இன்றைய உலகில் பல நாடுகளில் தமிழ் குறித்துப் பிறமொழியினர் சிந்திக்குமாறு செய்துள்ள ஈழத்தமிழரின் மொழிநடையைக் கவனித்தோமானால் இது புரியும். எழுத்தாலும் பேச்சாலும் எவ்வகையாலும் தமிழர் தம்முள் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற உணர்வைத் தோற்றுவிக்க எண்ணவும் கூடாது. பழைய போக்கைத் தொடர்வோமானால், ‘புதிய பூத’மான உலகமயமாதல், அதையும் தனக்கு ஆக்கமாக வளைத்துக் கொள்ளும். இன்னொன்றைக் கூட நீங்கள் கவனிக்கலாம். இப்பொழுதெல்லாம் மொழிபெயர்ப்பு, மொழியாக்கம் பற்றி நிறைய எழுதவும் பேசவும் படுகின்றன. நான் எழுதிய ‘மொழிபெயர்ப்புலகில் தங்கப்பா’ போன்றன்று; வேறுவகைகளில். “தமிழ்ப் புலவர், தமிழ்ப் பேராசிரியர் என்றால் மற்றவர் படைப்புகளில் உள்ள பிழைகளைச் சுட்டுபவர்கள்; தாமே சொந்தமாகப் படைப்புகளை உருவாக்கத் தெரியாதவர்கள்” என்ற கருத்து பிரான்சு முதலான தமிழர் மிகுந்து வாழும் நாடுகளில் உலவுகிறது. புலவர்கள், பேராசிரியர்கள் அல்லாதவர்களும் அந்த முன்னொட்டுகளைப் பொருத்திக் கொள்வதும் அந்நாடுகளில் இயல்பாகியுள்ளது. “பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் இலக்கியங்களைப் பெயர்ப்பவர்கள்தாம் தகுதியுள்ளவர்கள்; தமிழுக்கு ஆக்கம் தருபவர்கள்” என்ற கருத்து அங்கும் இங்கும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. பிரெஞ்சுக்காரர், பிரெஞ்சில் தன் ஆக்கங்களைப் படைக்கின்றனர்; ஆங்கிலேயர் முதலானவர்களும் அவ்வாறே. தமிழில் தம் ஆக்கங்களைப் படைப்பவர்களும் அப்படிப்பட்டவர்கள்தாமே? பிரெஞ்சுக்காரர் எவராவது, “தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்ப்பவர்கள்தாம், பிரெஞ்சில் புலமையுள்ளவர்களை விட உயர்ந்தவர்கள்” என்று பேசுவார்களா? பேசமாட்டார்கள். ஏன் அவர்கள் ஆண்டவர்கள். இவர்கள் ஆளப்பட்டவர்கள். இப்பொழுதும் அந்த நாடுகளில் ஈழத்தமிழர் போலல்லாமல், அடிமையுணர்ச்சியுடன் ‘விளங்கு’பவர்கள். உலகமயமாதல், குடியேற்ற உணர்ச்சியை(காலனியாதிக்கத்திலிருந்தவர்களின் உணர்ச்சியை) ஊக்குவிக்கிறது. இதுபோலும் அயன்மைகள்தாம் அது தரும் அடிமை ஊழியத்தைத் திறம்படச் செய்ய முடியும். ஆங்கிலவழிக் கல்வி, ஆங்கிலத்தில் நன்றாகப் பேசும் திறம் இவற்றுக்கு மாற்றுகளாகத் தமிழ்வழிக் கல்வி, தமிழில் நன்றாகப் பேசும் திறம் - இவைதாமே இருக்க வேண்டும்? கணிப்பொறி நிறுவனங்களிலும், கணினிமுறைசார் வணிக நிறுவனங்களிலும் கேட்டுப் பாருங்கள். ஆங்கிலவழிக் கல்வி, ஆங்கிலத்தில் நன்றாகப் பேசும் திறம் இவற்றுக்கு மாற்றுகளாகப் பிரெஞ்சில்/செர்மனியில்/சுபேனியத்தில் நன்றாகப் பேசும் திறத்தை அவர்கள் முன்வைப்பார்கள். இந்த மொழிகள்தாம் இப்பொழுது உலகமயமாதல் என்ற ஆசிரியர்முன் தம்முள் யார் சிறந்த மாணவர் என்று போட்டி போடுகின்றன. ‘சட்டாம்பிள்ளை’யாகவும் முந்திச் செல்லும் குதிரையாகவும் ஆங்கிலமே இன்றுமிருப்பதைப் பார்க்க முடிகிறது. உலகமயமாதலின் தாக்கத்திலிருந்து நம் தமிழ்மொழியை மீட்பது, ஒவ்வொரு தமிழருக்கும் கடமை மட்டுமன்று; உரிமையுமாகும். அதற்கு ஒரே வழி, தம்முள் பலவகைகளில் மேற்கொண்டு வரும் குழு - உட்குழுப் பூசல் மனப்பான்மையைப் போக்கிக் கொண்டு, அல்லது தற்காலத்துக்கேனும் சற்று விட்டுக் கொடுத்து, உலகமயமாதலின் போக்குக்கேற்பத் தமிழ்வழிக் கல்வியை உடனடியாக எல்லாத் துறைகளுக்கும் கொண்டுவர வேண்டும். அதற்கு ஒத்துவராத கட்சிகளைத் தேர்தலின் பொழுது பின்னிறுத்த வேண்டும். ஏதேதோ விளக்கங்களை முன்வைக்கும் அரசியல்வாணருடன் எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காமல், “முதலில் தமிழை முழுமையான கல்விமொழியாக்குங்கள்! பிறகு மற்றவற்றைப் பேசுங்கள்!” என்று வலியுறுத்தும் மனநிலையைத் தமிழர் வளர்த்துக்கொள்ள வேண்டும். “கோடி கோடியாக எதெதெற்கோ செலவிடுகிறீர்களே! ஆட்களைக் கூட்டுகிறீர்களே! தமிழ்வழிக் கல்விக்கென்று மாநாடு நடத்துங்கள்! தனிமாந்த விளம்பரம் விடுத்து, தமிழ்வழிக் கல்விக்கு உங்கள் தொலைக்காட்சி வரிசைகளின் பரப்புரைகளைத் திருப்புங்கள்!” என்று தமிழர் ஒவ்வொருவரும் அவர்களிடம் வலியுறுத்த வேண்டும். அப்பொழுதுதான் உலகமயமாதலின் தாக்கத்தினூடும் தமிழ் தழைக்கும். ******** நன்றி: தமிழ்க்காவல்.நெட்

16.6.08

ஆர்.கே.நாராயணன்: ஆங்கிலத்தில் எழுதிவென்ற சென்னைத் தமிழர் - தேவமைந்தன்

'ஆர்.கே.நாராயண்' என்று ஆங்கிலத்தில் பெயர் கொண்டவர் ஆர்.கே.நாராயணன். அவர் பெயரைச் சொன்னாலே அவர் எழுத்தில் வெளிப்பட்ட 'ஹ்யூமர்' எனப்படும் மெல்லிய நகைச்சுவைதான் நினைவுக்கு வரும். சென்ற அறுபதுகளிலேயே பல்கலைக் கழகப் பாடத்திட்டங்களில் அவருடைய படைப்புகள் தகுந்த இடம்பெற்றன. தன்னுடைய நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டதில் அவருக்கு முழு மகிழ்ச்சி இல்லைதான். 'வழிகாட்டி' என்று பொருள்படும் 'The Guide' என்ற அவருடைய நாவல், சென்ற எண்பதுகளின் தொடக்க ஆண்டுகளுக்குள்ளேயே தமிழ், பிரெஞ்சு, இத்தாலி, ஜெர்மன், ருஷ்யன், சுவீடிஷ் முதலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டது. அதன் இந்தியப் பதிப்பு மட்டும் அப்பொழுது ஒன்றரை லட்சம் புத்தகங்களுக்கு மேல் விற்றுத் தீர்ந்ததாம். ஆர்.கே.நாராயணன் "சாதாரணமாக எழுதியதாக"க் குறிப்பிட்டதும் 1935ஆம் ஆண்டில் வெளியானதுமான அவருடைய முதல் நாவல் 'சுவாமி அண்ட் ஃப்ரெண்ட்ஸ்'(Swami and Friends), தமிழ் முதலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. ஆனந்த விகடன் இதழில், 'சுவாமியும் சிநேகிதர்களும்' என்ற தலைப்பில், கிருஷ்ணசாமி அவர்களின் மொழிபெயர்ப்பில் அந்த நாவல் தொடராக வெளிவந்து, தமிழ் வாசகர்களின் உள்ளங்களைக் கவர்ந்தது. அந்த நாவலில் வரும் சுவாமி பத்து வயதே நிரம்பிய சிறுவன்; வீட்டுப்பாடங்கள் எழுதுவதின் கொடுமையை வெறுத்து, தன் நண்பர்களுடன் வீரதீரச் செயல்களில் ஈடுபட்டவன். ஆனாலும் தான் அன்றாடம் சந்திக்க நேரும் ஆசிரியர்களிடமும் பெரியவர்களிடமும் கூடுமானவரை ஒத்துப்போகிறவன். 'எம்.சி.சி.' என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட 'மால்குடி கிரிக்கெட் கிளப்'தான் அவனுடைய பேரார்வத்தைக் கொள்ளை கொண்டது. அவனும் அவன் நண்பர்களும் சேர்ந்து தோற்றுவித்ததல்லவா அது? தேர்வுகள் எல்லாம் முடிந்து, கோடை விடுமுறை விடுகிற காலமே சுவாமியின் கனாக்காலம். 1930இல், நம் இந்திய தேசத்தில், பிரிட்டிஷ் அடக்குமுறையின்கீழ் பல தேசபக்தர்கள் சிறைசெய்யப்பட்டனர். அதன் அடிப்படையில் 1930, ஆகஸ்ட் 15ஆம் நாளன்று சரயு நதியின் வலக்கரையில் மால்குடியைச் சேர்ந்த இரண்டாயிரம் குடிமக்கள் கூடினர். மும்பையில் கெளரி சங்கர் என்ற விடுதலைப் போராட்ட வீரர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்துக் கூடிய கூட்டம் அது. கதராடை அணிந்தவரும் கம்பீரமும் மிக்கவருமான பேச்சாளர் ஒருவர், அங்கே, உணர்ச்சிமிக்கதோர் உரையாற்றினார். மால்குடி மக்கள் அதைக் கேட்டு உள்ளம் உருகினர். அவர்களுக்கிடையில் நம் சுவாமிநாதனும் அவன் நண்பன் மணியும் இருந்தனர். பத்து வயதே ஆன சிறுவன் சுவாமிநாதன் (நாவலில் கதைசொல்லுதலின்பொழுது 'சுவாமிநாதன்' என்ற முழுப் பெயரும், உரையாடல்களின்பொழுது 'சுவாமி'' என்ற சுருக்கப் பெயரும் வரும்) பேச்சாளர் ஆத்திரத்துடன் சொன்ன ஒன்றைக் கூர்ந்து கவனித்தான். அவர் சொன்னார்: "ஏன் நாம் அச்சப்பட்டுப் போனோம்? அடிமைகள் ஆனோம்? நம்மிடம் எந்த விதக் குறையுமில்லையே! பிரிட்டிஷ் நிர்வாகம் இப்படி எல்லாம் நம்மை ஆக்கி விட்டிருக்கிறது. நன்றாகக் கேளுங்கள். நீங்கள் ஒன்றும் அதிகமாகச் செய்துவிட வேண்டாம். ஒவ்வோர் இந்தியனும் இங்கிலாந்தின் மீது ஒரே நேரத்தில் எச்சில் உமிழ்ந்தால்கூடப் போதும்; இந்திய மக்கள் எல்லோரும் உமிழும் அந்த அளவு எச்சில் போதும், இங்கிலாந்தையே மூழ்கடித்துவிட....." சுவாமிநாதன் அதைக் கேட்டு வியப்பில் மூழ்கி, நண்பன் மணியிடம் அது குறித்து விவாதித்தான். முதலில் மணி சுவாமிநாதனை எச்சரித்துப் பார்த்தான். பயனில்லை. சுவாமிநாதன், இந்திய மாதாவையும் காந்தி அடிகளையும் சுதந்திரப் போராட்டத்தையும் வாழ்த்திக் 'கோஷம்' போட்டு, அடுத்தடுத்து இரண்டு பள்ளிகளிலிருந்து விரட்டியடிக்கவும் படுகிறான். கடைசியில், வேறுவழியே இல்லாமல், வீட்டை விட்டும் ஓடுகிறான். இப்படி 'Swami and Friends' செல்கிறது. சிறுவர் உலகத்தை, சிறுவர்களின் பார்வையிலிருந்தே சித்தரிக்கும் கதைசொல்லலினூடு, அதற்குப்பிறகு அவர்கள் ஆகவுள்ள பெரியவர்களின் உலகத்தையும் மால்குடியைக் களமாகக் கொண்டு ஆர்.கே.நாராயணன் நுட்பமாக இந்த நாவலில் வெளிப்படுத்தியுள்ளார். கிரகாம் கிரீன், அந்த நாவலைப் "பத்தாயிரத்தில் ஒரு புத்தகம்" என்று பாராட்டினார். முதற் பதிப்பு, லண்டனில் ஹமிஷ் ஹாமில்டன் நிறுவனத்தால் 1935ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. முதல் இந்தியப் பதிப்பு 1944இல் வந்தது. 1993இல் இருபதாவது மறுஅச்சு வந்தவரை எனக்குத் தெரியும். சென்ற எண்பதுகளின் முதற்பகுதியில் ஆர்.கே.நாராயணனின் 'The Painter of Signs' போலிஷ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. தன் நாவல்களின் மொழிபெயர்ப்புகள் குறித்து ஆர்.கே.நாராயணனுக்கு மகிழ்ச்சி இல்லை என்று முதலிலேயே குறிப்பிட்டேன். காரணத்தை அவரே நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். "மொழிபெயர்ப்பைப் பற்றி எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. பொதுவாகவே என் நாவல் மொழிபெயர்ப்புகளை நான் வாசிப்பதுமில்லை. ஒரு நாவலில் உள்ள ஹியூமரை, மொழிபெயர்ப்பாளரால் இன்னொரு மொழியில் எப்படிக் கொண்டு வர முடியும்? ஆனால் கருத்தோட்டத்தைத் தெரிந்துகொள்ள மொழிபெயர்ப்பு தேவைதான். ஐரோப்பிய மொழிகளில் என் நாவல்களின் மொழிபெயர்ப்பு நன்றாக வந்திருப்பதாகச் சொல்லுகிறார்கள்." ஆர்.கே.நாராயணன் தன் பெரும்பாலான நாவல்களில், மால்குடி என்ற ஊரையே களமாகக் கொண்டதன் காரணம் என்ன? "சின்ன ஊர், குறைச்சலான ஜனங்கள். கடைக்குப் போய் சாமான் வாங்கிய பிறகு காசு குறைந்தால், நாளைக்குத் தருகிறேன் என்று வாங்கிய சாமான்களை எடுத்துக் கொண்டு வந்துவிடலாம்.." என்று இது குறித்து ஆர்.கே.நாராயணன் நகைச்சுவையாகக் கூறியிருக்கிறார். "The Painter of Signs'க்கும் 'A Tiger for Malgudi'க்கும் இடையில் ஏழாண்டுகள் இடைவெளி விழுந்தது. அவரின் படைப்புத் திறன் குன்றிவிட்டதோ என்று திறனாய்வாளர்கள் ஐயம் கிளப்பினர். அது ஒன்றும் புதியதல்ல, ஏற்கெனவே 'The Vendor of Sweets'க்கும் 'The Painter of Signs'க்குமிடையில் கிட்டத்தட்ட பத்தாண்டு இடைவெளி இயல்பாகவே ஏற்பட்டது. 'A Tiger for Malgudi' மீண்டும் அவரைப் புகழ் ஏணியில் ஏற்றியது. 'A Tiger for Malgudi' நாவலில், முதன்மைப் பாத்திரமாய் வரும் ராஜா என்கிற புலியின் இயற்கையான காட்டு வாழ்க்கை சொல்லப்படுகிறது. இளைய 'ராஜா'வின் கானக வாழ்க்கை, குறிப்பாக மெம்ப்பி காடுகளின் விலங்குகள் உலகத்தில் அது வலிமை மிக்க புலியாக உருவாகும் விதம் நாவலில் நன்கு விளக்கப் பட்டிருக்கிறது. பெண்புலி ஒன்றுடன் போர்செய்து தோற்கடித்து அதைத் தன்னுடையதாக்கி. பின்னர் நான்கு புலிக்குட்டிகளுக்குத் தந்தை ஆகிறது ராஜா. கேவலமானவர்களும் குரூரமானவர்களுமான மனிதர்களின் கைகளில் அந்தப் பெண்புலியும் குட்டிகளும் மாட்டிக்கொண்டு இரையாகின்றன. தன் துணையையையும் குட்டிகளையும் இழந்துவிட்ட நிலையில், எவ்வளவுதான் எச்சரிக்கையுடனிருந்தும் 'கிரேண்ட் மால்குடி சர்க்க'ஸின் உரிமையாளரான 'கேப்ட'னிடம் சிக்கிக் கொள்கிறது. சர்க்கஸ் உலகில் அவனால் தன்மேல் சுமத்தப்படும் வேலையைச் சிறப்பாக நிறைவேற்றும் அளவு கடுமையான பயிற்சிகளைப் பெறுகிறது. மேலும், திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரிடமும் அதை நடிக்க வைத்துப் பணம்பெற 'கேப்டன்' ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்கிறான். அடுத்து, ராஜாவை மேலும் ஒடுக்கிப் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டாக, 'உலோக நாக்கு'('metal tongue') எனப்படும் கொடிய கருவியைப் பயன்படுத்தவும் தொடங்குகிறான். ராஜாவுக்குப் பழைமை - கானக நியாயம் - திரும்புகிறது. கொடுமையும் பேராசையும் நிரம்பிய 'கேப்ட'ன் மேல் பாய்ந்து அவனைக் கொன்றுவிட்டு, அந்த இடத்தை விட்டே அகன்று விடுகிறது. பள்ளிக்கூடக் கட்டடம் ஒன்றில் தஞ்சம் அடைகிறது. அங்கு, சுவாமி என்கிற தனக்கான குருவைச் சந்திக்கிறது. இந்த சுவாமி என்ற கதைப்பாத்திரம், ' Swami and Friends' நாவலில் இடம்பெறும் சுவாமிநாதன் என்ற சுவாமியேதான். அவன் இப்பொழுது நன்கு வளர்ந்து பெரியவனாயிருக்கிறான். சரயு நதி பாயுமிடத்திற்கு அருகிலுள்ள எல்லம்மன் தெருவில்('The Painter of Signs' நாவலில் ராமன் தன் அத்தை வீட்டில் வாழும் தெரு) சுவாமி தன் மனைவியுடனும் குழந்தைகளுடனும் வாழ்கிறான். 'வெள்ளையனே வெளியேறு'(Quit India movement) இயக்கத்தில் மிகவும் சிறப்பாக அவன் பங்கேற்று, பாராட்டப் பெற்றிருக்கிறான். ஒருநாள் நள்ளிரவில் சித்தார்த்தன்போல் வீட்டைவிட்டே வெளியேறி விடுகிறான். உலகில் நன்மையை நிலைநாட்டத் தன் எஞ்சிய வாழ்வை அர்ப்பணிக்கிறான். அவனைத்தான் தன் குருவாக ராஜா என்னும் அந்தப் புலி ஏற்கிறது. ஒவ்வொரு படிநிலையிலும் அவனிடம் கீழ்ப்படிந்து நடக்க அது கற்றுக் கொள்கிறது. அதற்கு வயதாவதால், 'சமாதி நிலை'யை அது அடையும் முன்பு, அதன் பாதுகாப்புக்காக விலங்குக் காட்சிச் சாலைக்கு அதன் குருவான சுவாமி அனுப்பி விடுகிறான். தன் சீடனான ராஜாவை அடுத்த பிறப்பில் சந்திக்கப் போவதாகவும் சுவாமி நம்புகிறான். இந்த நாவல், அது படைக்கப்பெற்ற காலம் வரை இல்லாத புதிய கோட்பாட்டைக் கொண்டிருந்தது. அப்பொழுதெல்லாம் சில வீடுகளின் கூடத்தில் பார்த்தீர்களானால், சுவர்மேல் ஒரு 'வீரமான' படம் தவறாமல் மாட்டப்பட்டிருக்கும். மெய்யாக வேட்டையாடினாரோ இல்லையோ, அந்த வீட்டின் தலைவர், தன் வலது கையில் ஒரு வேட்டைத் துப்பாக்கியைத் தாங்கிக் கொண்டு, இறந்து கிடக்கும் புலி ஒன்றின் மேல் தன் பாதத்தை வைத்து நின்று புகைப்படத்துக்குப் 'போஸ்' கொடுத்திருப்பார். இது, சாதாரணமான வீடுகளில் கண்ட காட்சி . 'அசாதாரணமானவர்கள்' வீடுகளில், வளைந்த மாடிப்படிகளுக்கு முன்னால் உயரமான பீடமொன்றில் உண்மையான புலியே போல இறந்த 'பாடம்' பண்ணப்பட்ட புலி அமர்ந்திருக்கும். அப்படிப்பட்ட காலகட்டத்தில், பிற்காலத்தில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துபோய்விடும் என்பதைக் கவனத்தில் இருத்திக் கொண்டோ என்னவோ, மனிதருக்கும் புலிகளுக்கும் இருக்க வேண்டிய இயற்கை இணக்கத்தை ஆர்.கே.நாராயணன் இந்த நாவலில் வலியுறுத்தியிருக்கிறார். அதனால்தான், மனிதர்கள் கொண்டிருக்க வேண்டிய நேயத்தை விடவும் அதிகமான ஆன்மநேயத்தை இந்த நாவலின் தலைமைப் பாத்திரமான ராஜா என்கிற புலி கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் ராஜா, புலி என்ற விலங்கு நிலையிலிருந்து உயர்மனித நிலைக்கு மாற்றம் பெற்றிருக்கிறது. தனக்கு என்றைக்கு உன்னதமான உய்திநிலை(salvation) கிடைக்குமோ என்று நாடி ஏங்கியிருக்கிறது. உண்மையில், நாலாசிரியர்தான் ராஜாவுக்குள் புகுந்து கொண்டு தன்னுடைய வெவ்வேறான வாழ்க்கை அனுபவங்களையும் அவற்றின்பொழுது தான் அடையும் வெவ்வேறான மனநிலைகளையும் புலப்படுத்துகிறார் என்பதை வாசகர் புரிந்துகொண்டு வாசித்துச் செல்ல முடிவது, இந்த நாவலின் சிறப்பம்சங்களுள் ஒன்று. ஆர்.கே.நாராயணனின் முதிர்ந்து பக்குவம் மிக்க வயதில் 'The Painter of Signs' நாவல் எழுதப்பெற்றது. விடுதலைக்குப் பிறகு மால்குடியில் ஏற்பட்ட மாற்றங்கள் அதில் பதிவு செய்யப்பட்டன. முதலிலேயே வெளிவந்ததும், மால்குடி நாவல்களில் இரண்டாவதுமான 'The Dark Room'இல் வெளிப்பட்டுள்ள குடும்ப வாழ்க்கையின் கூறுபாடுகளும் பெண்ணின் சமூக உறவு நிலைகளும் 'The Painter of Signs'இல் மிகவும் மாற்றம் கண்டுள்ளன. திரு எஸ்.கிருஷ்ணனுக்கு அளித்த நேர்காணலில் அது குறித்து ஆர்.கே.நாராயணன் கூறியுள்ளார். " 'The Dark Room' நாவலில், சமூகத்தில் பெண் எவ்வாறு ஆணைச் சார்ந்தே வாழ வேண்டியுள்ளது என்பதைத் தெரிவிப்பதிலேயே கவனத்தைச் செலுத்தினேன். இந்த('The Painter of Signs') நாவலில் நான் சொல்லியிருக்கும் பெண்(Daisy), ஆண்களைச் சார்ந்திருக்கவில்லை என்பது மட்டுமல்ல; அவளுடைய ஒருங்கிணைந்த வாழ்வில் ஆண்களுக்கு முக்கியத்துவமே இல்லை." 'The Painter of Signs' நாவலில், வெறும் தொழிலாக மட்டும் அல்லாமல் முருகியல் மதிப்பீடு கொண்டதாகவும் பெயர்ப் பலகைகளைத் தீட்டுகின்ற இளம் ஓவியத் தொழிலாளி ராமன், எல்லம்மன் தெருவின் கடைசி வீட்டில் தன் அத்தையின் ஆதரவில் வாழ்கிறான். சரயு நதி பாய்கிற அழகான இடம் அது. நாவலின் தொடக்கத்திலேயே, தன் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கும் ஒருவருக்கான பெயர்ப் பலகையை ராமன் உருவாக்குவதும், அவர் ஆயிரத்தெட்டு குறைகள் சொல்லி, அவனுக்கு அதற்கான பணத்தைத் தராமலிருக்க முயற்சி செய்வதும், அவர்களிடையே நிகழும் வாதங்களும் சொல்லப் படுகின்றன. ராமன் வெறும் பெயர்ப்பலகை தீட்டுபவன் மட்டுமல்ல; உலக முழுதும் காரணம் முதன்மைபெறும் காலத்தை(Age of Reason) நிறுவ முற்படுபவன் என்பது மெல்லிய நகைச்சுவையுடன் தெரிவிக்கப் படுகிறது. ராமனுக்கு, ஒவ்வொன்றுக்கும் பகுத்தறிவு அடிப்படையிலான விளக்கம் இருந்தே ஆக வேண்டும். 'டவுன் ஹால்' பேராசிரியர், அவையினர்முன் ஆற்றும் சொற்பொழிவில் நிலவும் ஆன்மிகச் செய்தியைக் கேட்க, ராமனின் பகுத்தறிவுக் கொள்கை படாத பாடு படுகிறது. மால்குடியின் குடும்பக் கட்டுப்பாட்டு மையத்தின் பொறுப்பாளராகப் பணியாற்றும் டெய்சியை ராமன் தன் தொழில் அடிப்படையில்தான் முதலில் சந்திக்கிறான். ஆனால் போகப் போக, தன் வறட்டுத்தனத்துக்கும் டெய்சியின் யதார்த்தத்துக்கும் உள்ள வேறுபாடு கண்டு மலைத்துப் போகிறான். அவன்தான் டெய்சிமேல் ஆராக்காதல் கொண்டு உருகித் தவிக்கிறான். அவளோ அவன்மேல் எந்த விதமான ஆர்வமும் கொள்வதில்லை. டெய்சியின் அலட்சியப் போக்கால், ராமனின் தன்மதிப்பு காயமுறுகிறது. அவள் பணி புரியும் இடத்துக்குப் போவதையே தவிர்த்து விடுகிறான். சில நாள்கள் கழித்து டெய்சியே தன்னுடன் அக்கம் பக்கத்து ஊர்களுக்கு வந்து, குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரம் செய்வதில் உதவுமாறு ராமனுக்கு வேண்டுகோள் விடுக்கிறாள். அந்தந்த ஊர்களின் முதன்மையான இடங்களில் குடும்பக் கட்டுப்பாட்டு விளம்பரத் தட்டிகளை வரைந்து வைக்கும் வேலை தருகிறாள். எந்த ஊரானாலும் அங்கு வாழ்பவர்களின் வாழ்முறையோடு ஒத்துப்போகும் டெய்சியின் மனநிலையை ஆங்காங்கே கண்டு ராமன் வியந்து போகிறான். ஊர்க்கேணியில் நீர் எடுத்து, அங்கேயே இயல்பாகக் குளித்து, உடைகளைத் துவைத்துக் காயப்போடுவதுடன் மாற்றிக் கொள்ளும் டெய்சியின் போக்கு, ஆணான தனக்குங்கூட வாய்க்காதது உணர்ந்து தன்னிரக்கம் கொள்ளுகிறான். டெய்சி எஃகு உள்ளம் வாய்ந்தவள். ஆனால், எளிய சிற்றூர் மக்களைக் கூடவைத்து, அவர்களுக்கு 'பிள்ளைப்பேறும் குடும்பக் கட்டுப்பாடும்' குறித்துப் படம் வரைந்து விளக்குகிறாள். அவர்கள் அவை தொடர்பாகக் கேட்கும் எந்தக் கேள்விக்கும் கூச்சமில்லாமல் மறுமொழி சொல்கிறாள். அதையெல்லாம் பார்க்க, ராமனுக்குத் தாழ்வு மனப்பான்மை தீவிரமாக ஏற்படுகிறது. விளைவாக, பிரச்சாரப் பணி முடிந்து அவர்கள் வீடு திரும்பும் சமயத்தில், வழியில் கிடைத்த தனிமையைப் பயன்படுத்திக் கொண்டு, டெய்சியைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்த ராமன் முயல்கிறான். அவளுடைய முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அவனுடைய முட்டாள்தனமான செயல் தோற்கடிக்கப்படுகிறது. டெய்சி, அதற்கப்புறம் நெடுநாட்கள் ராமனுடன் பேச்சு வைத்துக் கொள்ளவில்லை. ராமனின் அடாவடிச் செயல் குறித்துக் காவல்துறைக்குப் புகார் தெரிவித்து விடுவதாகவும் மிரட்டுகிறாள். அதற்கு அஞ்சிய அவன், அவளை விட்டே ஒதுங்கி விடுகிறான். ஆனால் அந்த இடைவெளியில்தான் டெய்சியும் ராமனும் தங்களுக்குள் நிலவும் மெய்யான காதலை உணர்கிறார்கள். மீண்டும் சந்திக்க வாய்த்த பொழுது, காதலர்களாகச் சந்திக்கிறார்கள். கந்தருவ முறையில் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ராமன் நினைக்கிறான். அத்தகைய திருமணத்தில்தான் அதிக பந்தம் இருக்காது என்றும் டெய்சிக்கும் அதுதான் பிடித்திருக்கும் என்றும் ராமன் நம்புகிறான். இதற்கிடையில் ராமனின் அத்தை, சாதி மதக் கலப்புத் திருமணத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள். காசிக்குப் போகும் தன் உறுதியான எண்ணத்தை ராமனிடம் தெரிவிக்கிறாள். காசிக்குப் போவதுடன் வாழ்வின் இறுதி இலட்சியம் நிறைவேறும் என்று அவள் நம்புகிறாள். அதனாலொன்றும் நாவலின் போக்கு மாறுவதில்லை. 'பிளாட்' என்று திறனாய்வாளர்கள் சொல்லும் கதைப் பின்னலில், ஆர்.கே.நாராயணன் சமரசம் செய்து கொள்வதே இல்லை. நாடக பாணியில் கதைமாந்தரின் உணர்வுகளை ஆட்டி வைப்பதில்லை. வாசகர்களுக்காகக் கதைப்போக்கில் விறுவிறுப்புச் சேர்த்தல், வேகம் கூட்டுதல் முதலானவற்றை அவர் செய்ததில்லை. திட்டவட்டமான ஆழ்ந்த சிந்தனைக்குப்பின், டெய்சியின் மனம் மாற்றம் கொள்கிறது. ராமனைத் திருமணம் செய்து கொள்ளத் தெளிவாக மறுத்து விடுகிறாள். கடைசியில், குடும்பக் கட்டுப்பாட்டுப் பிரச்சாரம் தொடர்பான நெடும்பயணம் ஒன்றை மேற்கொண்டு, ராமனை விட்டே பிரிந்து செல்கிறாள். இவ்வாறு, நெடுங்காலம் நம்பிக்கையூட்டி ஏமாற்றிச் சுமத்தப்பட்ட கனத்த தனிமைச் சுமையை ராமன் ஏற்றுக் கொள்ளுமாறு நேர்ந்து விடுகிறது. இந்த நாவலில், பழைமையிலிருந்து விடுபட்டுப் புதுமையைத் தழுவும் மால்குடியை நாம் பார்க்க முடிகிறது. இந்தக் கதை சொல்லப்பட்ட பொழுதில், அது பரபரப்பான நகரமாகி விட்டது. 1976ஆம் அண்டு வெளியான இந்த நாவல் சித்தரிக்கும் காலகட்டத்திலேயே 'நவீனப்பட்டுவிட்ட' ஆணும் பெண்ணுமாக ராமனும் டெய்சியும் திகழ்கின்றனர். டெய்சி, ராமனை விடவும் வலிமையான பாத்திரமாகவும் 'தேசவிடுதலைக் காலத்துக்குப் பிந்திய வகைமாதிரிப் பெண்'(typical woman of the post indepentent era) உருவாக்கப்பெற்றுள்ளாள். தன் நினைவுகளைத் தொகுத்து(memoirs) அவர் எழுதிய 'My Days' என்ற புத்தகம், நாராயணனை உணர்ச்சிமிக்க மனிதராக நம்மை அறிய வைத்துள்ளது. ஒருவருக்கு மிகவும் நெருக்கமாக வாழ்ந்து இறந்து போனவர்கள், அவரை மீண்டும் தேடி வருவார்கள் என்ற சொந்த அனுபவத்தை அவர் எழுதிய விதம், வாசகர்களை அதிர வைத்தது. "The Painter of Signs' ராமனைப் படைத்தவரல்லவா அவர்? அவரா இப்படி எழுதினார்? - என்று பகுத்தறிவுக் கொள்கையுள்ள வாசகர்கள் எண்ணினர். எழுத்தாற்றல் மிக்கவராக மட்டும் அல்லாமல், ஒரு சராசரி மனிதராக ஆர்.கே.நாராயணனை நாம் பார்க்க முடிவது இந்தப் புத்தகத்தில் மட்டுமே. தனக்கு மகிழ்ச்சி கொடுப்பது, படிப்பதும் எழுதுவதும்தான் என்று குறிப்பிட்ட ஆர்.கே.நாராயணன், ஒருநாளைக்கு இரண்டாயிரம் சொற்களை இரண்டு மணி நேரத்தில் எழுதிவிடுவதாகவும் சொன்னார். அதுதான் முதல் வரைவு(draft) என்றும் பிறகு அதைப் படித்துப் பார்த்துத் திருத்த நான்குமணி நேரம் போலப் பிடிக்கும் என்றும் "திருத்தியதை மறுபடியும் திருத்தி எழுதுவேன்; வார்த்தைகளை மாற்றிப் போடுவேன்; அதற்கு எட்டு மணி நேரம், பத்து மணி நேரம் போலப் பிடிக்கும்; மெதுவாக யோசித்து யோசித்துதான் திருத்தி எழுதுகிறேன்" என்றும் சொன்னார். அதற்கெல்லாம் காரணம், எழுதுவது நன்றாக வரவேண்டும் என்ற அக்கறைதான். "வெட்டிக் குறைக்க நான் கவலைப் படுவதே இல்லை. எழுதியதில் நிறையவே தாட்சண்யம் இன்றி அடித்து விடுவேன். எழுத்தாளனுக்குத் தான் எழுதினதையே அடிக்கத்தான் தைரியம் வேண்டும்" என்றார். "வாசகர்கள் ஒரு புத்தகத்தின் பக்கங்களைத் தள்ளி விடுவதற்கு இடங் கொடுக்காமல் சரியாக எழுத வேண்டும். அதற்கு எழுத்தாளன், தான் எழுதியதைப் படித்துப் பார்க்க வேண்டும். திருத்தி எழுத வேண்டும். சில தமிழ் எழுத்தாளர்கள் எழுதியதைத் திருப்பிக் கூடப் பார்ப்பதில்லை என்றும், அவை அப்படியே அச்சு ஏறி புத்தகமாக வந்துவிடும் என்றும் கேள்விப்படுகிறேன். அது எப்படிச் சாத்தியம் என்று தெரியவில்லை. கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது.... எழுதி எழுதித்தான் - திருத்தி எழுதித்தான் சரிபண்ண முடியும் என்ற வகையைச் சார்ந்தது என் எழுத்து..." என்று திட்டவட்டமாகச் சொன்னார். ஆர்.கே.நாராயணன், சென்னையில் புரசைவாக்கத்தில் 1907ஆம் ஆண்டு பிறந்தவர். இதை அவரே தன் மைசூர் இல்லத்தில் ‘குங்குமம்’ சிறப்பு நேர்காணலில் சொல்லியுள்ளார். விக்கிபீடியா கட்டுரை முதலான சிலவற்றில் அவர் 1906ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் நாள் பிறந்ததாகச் செய்தி உள்ளது. தமிழ் அவர் தாய்மொழி. முதலில் நுங்கம்பாக்கத்தில் இருந்தார். உயர்நிலைப் பள்ளி வரை சென்னையில்தான் படித்தார். தகப்பனார் கிருஷ்ணசாமி தலைமையாசிரியராக மைசூர் வந்ததால், கல்லூரியில் படிக்கத் தானும் மைசூர் வந்ததாகத் தெரிவித்துள்ளார்.[குங்குமம் சிறப்பு நேர்காணல்] மைசூர்ப் பல்கலைக் கழகத்தில், உ.வே.சாமிநாத ஐயர் அமைத்துக் கொடுத்த தமிழ்ப் பாடத்திட்டத்தைத் தன் இரண்டாவது மொழித் தெரிவின்கீழ்ப் பயின்றார். பின்னர், பெரும்பாலும் மைசூரிலேயே வாழ்ந்தார். சென்னைக்குத் தன் உறவினர்களைப் பார்க்கவும் பிற காரணங்களுக்காகவும் அடிக்கடி பயணம் செய்தார். இந்தியாவில் பல மாநிலங்களுக்கும் சென்று வந்துள்ளார். உலகப் பயணமும் செய்துள்ளார். சென்னைதான் தனக்குப் பிடித்தமானது என்று நேர்காணல்களில் சொல்லியுள்ளார். ராசிபுரத்தில் தன் முன்னோர்கள் வாழ்ந்ததால், குடும்பத்தினர் பெயர்களின் தலைப்பெழுத்துகளில் 'ஆர்' கட்டாயமாக இடம்பெற்றதாம். 1936ஆம் ஆண்டு 'கலா நிலையம்' என்ற தரமான தமிழ் இதழைத் தொடங்கியவர் தன் மாமா சேஷாசலம் அவர்கள் என்று தெரிவித்துள்ளார். ஒய்.எம்.சி.ஏ.'வில் மாலைநேரத் தமிழ் வகுப்புகள் நடத்தியதோடு 'கலா நிலயம்' இதழில் 'தமிழ்ப் பாடம்' என்ற பகுதியில் நளவெண்பா பாடம் நடத்தி, சேக்கிழார் பற்றியும் தொடர் கட்டுரையை அவர் வெளியிட்டாராம். மக்களுக்குப் புரியாது என்று சொல்லித் தரம் தாழக் கூடாது என்பதைத் தன் உள்ளத்தில் உருவேற்றியவரும் அவரே என்று தெரிவித்தார். உயர்நிலைப் பள்ளிக் காலத்திலேயே, தான் 'பிரதாப முதலியார் சரித்திரம்' 'கமலாம்பாள் சரித்திரம்' முதலான தமிழ் நாவல்களைப் படிக்க முடிந்ததற்கும் தன் மாமா தந்த ஊக்கமே காரணம் என்றும் குறிப்பிட்டார். 'கலா நிலையம்' இதழ்களைத் தொகுப்புகளாகச் செய்து வைத்திருந்தபொழுது பேராசிரியர் ஏ.கே.ராமானுஜன் அவற்றுள் இரண்டு தொகுப்புகளை வாங்கிச் சென்று சிகாகோ பல்கலைக் கழகத்தில் 'மைக்ரோ பிலிம்' செய்து பாதுகாத்தாராம். மால்குடி வரிசையில் ஆர்.கே.நாராயணனின் நாவல்கள்: The Bachelor of Arts The Dark Room The English Teacher Mr.Sampath - The Printer of Malgudi The Financial Expert Waiting for the Mahatma The Guide The Man-eater of Malgudi The Vendor of Sweets The Painter of Signs A Tiger for Malgudi Talkative Man [சென்னையிலிருந்து வெளிவந்த 'Frontline' மாதமிருமுறை இதழில் தொடராக ஓராண்டுக் காலம் வெளிவந்தது. ஆர்.கே.நாராயணன் எழுதிய நாவல்களிலேயே அளவில் மிகச் சிறியது இதுதான். 'TM' என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படும் 'Talkative Man,' அவர் எழுதிய சிறுகதைகளை வாசித்தவர்களுக்குப் புதிய 'கேரக்டர்' அல்ல.] The World of Nagaraj இதிகாசங்களின் புதிய ஆக்கங்கள்: Gods, Demons and Others The Ramayana The Mahabharata கதைகள்: A Horse and Two Goats An Astrologer's Day and Other Stories Lawley Road Malgudi Days Under the Banyan Tree and Other Stories நினைவுத் தடங்கள்: My Days பயண நூல்கள்: My Dateless Diary The Emerald Route கட்டுரை நூல்கள்: Next Sunday Reluctant Guru A Writer's Nightmare The World of the Story-Teller ****** குறிப்பு: ஆர்.கே.நாராயணன் தன்னை நேர்கண்டவர்களுக்குச் சொன்ன சேதிகளே இக்கட்டுரையில் உள்ளன. விக்கிபீடியா முதலியவற்றின் செய்திகளை இக்கட்டுரை தழுவவில்லை. பார்வை: மைசூரில் ஆர்.கே.நாராயணன் இல்லத்தில், 1983 நவம்பர் இறுதி வாரத்தில் எடுக்கப்பட்ட குங்குமம் இதழின் சிறப்பு நேர்காணல். வெளியான இதழ்: குங்குமம் 7:8. 5-2-1984. பக்கங்கள்: 31, 34, 48. திரு எஸ்.கிருஷ்ணனுக்கு அளித்த நேர்காணல். **** நன்றி: திண்ணை.காம்

23.5.08

உலகப் போர்க்காலத் தமிழ்ச் சமூகச் சிறுகதைகள் - தேவமைந்தன் இன்றைக்கு அறுபத்தாறு ஆண்டுகளுக்கு முன்பு, உலகப்போர்க் காலத்தில் தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு ஒன்று, தொகுதிகளாகப் பதிப்பிக்கப் பெற்றது. 'கதைக் கோவை' என்று அதற்குப் பெயர். பதிப்புத் துறையில் முதற்பெயர் பெற்ற அல்லயன்ஸ் கம்பெனி வெளியீடு. அதே போர்க்காலத்தில்தான் அறிஞர் வெ.சாமிநாத சர்மா அவர்களும், இன்றைக்கும் பாராட்டத் தக்க செறிவு மிக்க நூல்களைப் படைத்தார். 'பங்கர்' எனப்பட்ட பதுங்குமிடங்களில் தாள்கற்றைகளை ஒருபுறமும் மைக் கூட்டை ஒருபுறமும் வைத்துக் கொண்டு, அவர் படைத்த புத்தகங்களின் அர்ப்பணித்தல்(dedicating) உணர்வு, உலகமயமாதலை உட்கொண்ட நிகழ்சமூகத்தின் புத்தங்களுக்கு வருமா? சாமிநாத சர்மா தமிழுக்குக் கொண்டு வந்த பிளேட்டோவின் 'தி ரிபப்ளிக்'('The Republic') என்ற நூலின் மொழியாக்கமான 'குடியரசு'தானே தமிழகத்தில் சாக்ரடீஸ் குறித்தும் பிளேட்டோ பற்றியும் அறியும் ஆர்வம் தந்தது? போர்க்காலத்திலும் படைப்புணர்வை விட்டுவிடாத தன்னுணர்வு குறித்து அவர் எழுதியுள்ள உணர்ச்சி மிக்க எழுத்துகளை பர்மாவிலிருந்து அவர் வழிநடந்த பயணம் பற்றிய 'எனது வழிநடைப் பயணம்' புத்தகத்தில் இன்றும் வாசிக்கலாம். இரங்கூனில் அவர் வாழ்ந்தபொழுது 'ஜோதி'' என்ற இதழை நடத்தியிருக்கிறார். புதுமைப்பித்தன் சிறுகதைகளை வெளியிட்டிருக்கிறார். அந்தப் பாடுகளை அதே போர்க்காலத்தில் பர்மாவிலிருந்து இந்தியாவுக்கு நடந்துவந்த என் தந்தையார் இரங்கூன் பி.கே.அண்ணார் கூறியும் கேட்டிருக்கிறேன். திண்ணை. காம் ஏட்டில் "ஒரு மனிதரின் கதை: பி.கே.அண்ணார்" என்ற தலைப்பில் பதிவுசெய்தும் இருக்கிறேன். அப்படிப்பட்ட காலத்தில் பதிப்பித்ததால்தான் "ஒரு புத்தகம் வெளியிடுவதில் பலவகையான தொல்லைகளுக்குட்பட வேண்டிய இந்த யுத்தகாலத்தில் இந்தப் பெரிய வெளியீட்டைப் பிரசுரம் செய்ய எங்களைக் கருவியாக்கிக் கொண்ட சர்வேசுவரன் திருவருள் இனியும் எங்கள் முயற்சிகளுக்குத் துணையாக நின்று அரண் செய்யும் என்றும், எழுத்தாளர்களும், வாசகர்களும் என்றும் குன்றாத அன்புடன் எங்களுக்கு உதவி செய்வார்களென்றும் நம்பி இந்தக் கதைக் கோவையாகிய முத்துமாலையைத் தமிழுலகத்திற்கு சமர்ப்பிக்கின்றோம்" என்று 1942-இல் அல்லயன்ஸ் பதிப்பாளர் எழுதியிருக்கிறார். அப்பொழுதெல்லாம் கதை வாசிக்கும் ஆர்வம் தமிழ் வாசகர்களுக்கு அதிகம் இருந்திருக்கிறது. சிறுகதைகளுக்கு மதிப்பு ஓங்கிய காலம் அது. ஆங்கிலத்தில் ஜாக் லண்டன் போன்றோர் கதைகளையும் ருஷ்யத்தில் டால்ஸ்டாய் கதைகளையும் இந்தி வங்காளிக் கதைகளையும் மொழிபெயர்ப்பில் படித்த நிலை ஓய்ந்து, தமிழ் எழுத்தாளர்கள் தாங்களே சொந்தமாகப் படைத்த சிறுகதைகளை வாசகர்கள் விரும்பிப் படிக்கத் தொடங்கிய காலம் அது.(1930-1940) சென்ற நூற்றாண்டின் முப்பதுகளின் கடைசியிலேயே வ.வே.சு.ஐயர், சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் ஆகியோர் படைத்த கதைகள் தொகுப்புகளாக வெளிவரத் தொடங்கின. அப்படி அரசியல் துறையில் பெயர்பெற்றவர்களின் சிறுகதைகள் தொகுப்புகளாக வெளிவந்த நிலை சற்று மாற்றம் கொண்டு, புத்தக உருவத்தில் கொண்டு வருவதற்கு முடியாத திறமைசாலிகளின் தனித் தனிச் சிறுகதைகளை வெளிக்கொண்டுவரும் முயற்சியே 'கதைக் கோவை'யின் முதல் இரு தொகுதிகள். மூன்றாவது தொகுதியும், அதற்கு மேலும்கூட வந்திருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. இந்தத் தொகுதிகளில் தொண்ணூறு சிறுகதைகள் வெளிவந்தன. இவற்றில், ஆனந்த விகடன், கலைமகள், சந்திரோதயம், கல்கி, இந்துஸ்தான், தினமணி மலர்கள், சில்பஸ்ரீ, ஜகன்மோகினி, மணிக்கொடி, நவசக்தி, சுதந்திரச் சங்கு, பாரதமணி, லோகோபகாரி ஆகிய இதழ்களில் முன்பே வெளியாகியிருந்த கதைகளும் அடக்கம். சிறுகதைகளை அவற்றின் வடிவம் பற்றிய விழிப்புணர்வோ உள்ளடக்கம் பற்றிய அலசலோ இல்லாமல் 'நிம்மதி'யாக வாசித்த காலமல்லவா அது? இல்லாவிட்டால், வை.மு.கோதைநாயகி அம்மாள் எழுதிய 'காலச் சக்கரம்' சிறுகதை, இருபத்து மூன்று பக்கங்களைக் கொண்டிருந்து, வாசகர் உள்ளங்களை வென்றிருக்க முடியுமா? 'ஜகன்மோகினி'' இதழில் இது வெளிவந்தது என்ற குறிப்பும் இருக்கிறது. அந்தக் காலத்தில் 'மணிக்கொடி' இதழில் வெளிவந்த புதுமைப்பித்தனின் 'துன்பக் கேணி' யும் பக்க அளவில் பெரிய சிறுகதைதான். 'காலச் சக்கர'மும் 'துன்பக் கேணி'யும் கிட்டத்தட்ட ஒரே காலத்தைச் சார்ந்தவைதாம்(20ஆம்நூற்றாண்டின் முப்பதுகளின் நடுப்பகுதி) எனினும், இவை இரண்டுக்கும் நடையிலும் சொற்கட்டுமானத்திலும் சொல்ல வரும் பொருளின் சமூக நோக்கின் அழுத்தத்திலும் கதைசொல்லலிலும்தான் எத்தனைப் பெரிய இடைவெளி? வை.மு.கோதைநாயகி அம்மாளின் 'காலச் சக்கரம்' சிறுகதையும் சரி, புதுமைப் பித்தனின் 'துன்பக் கேணி'யும் சரி - இரண்டுமே தம் அடிப்படைச் சித்தரிப்பில் ஒன்றுபடுகின்றன. இரண்டுமே எதிர்மறை நோக்கில் சமூகத்தைப் பார்ப்பவைதாம். மனப்புழுக்கம், விரக்தி, வேதனை முதலான எதிர்மறை உந்துதல்கள் இவ்விரண்டிலுமே சம அளவில் இருக்கின்றன. ஆனாலும் வை.மு.கோதைநாயகி அம்மாளின் 'காலச் சக்கர' சுபாஷிணிக்கும் புதுமைப் பித்தனின் 'துன்பக் கேணி' மருதிக்கும் ஆகவும் பெரிய பாத்திரகுண இடைவெளி விழுந்திருக்கிறது. 'இடைவெளி'தான் இறப்புநிலை என்றல்லவா காலஞ்சென்ற எழுத்தாளர் சம்பத், அதே தலைப்பிலான தன் நெடுங்கதையில் கருத்துரைத்தார்? சமகாலத்தில் இரண்டு படைப்பாளிகளின் படைப்புகளிலுள்ள இந்த இடைவெளியைக் குறித்து சமூகவியல் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால், என்னென்னவோ உண்மைகள் எழும். பணத்தின் பின்னே போய்விட்ட பாஸ்கரனை நினைத்து நினைத்து மறுகி மடியும் சுபாஷிணிக்கும்(காலச் சக்கரம்); ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து, திருநெல்வேலியின் குறுஞ்சிற்றூரொன்றில் பண்ணைக்கு அடிமைப்பட்டவனுக்கு மனைவியாக நேர்ந்ததால் பண்ணையின் கையாளான தலையாரித் தேவனின் அடி உதைகளுக்கு ஆட்பட்டு, தன் வாழ்க்கையின் அடுத்த கட்டமான இலங்கைத் தேயிலைத் தோட்டத்தில் தேயிலை ஸ்டோர் மேனேஜரின் காமத்துக்கும் உட்பட்டு, பாட்ரிஸன் ஸ்மித் துரையின் கொடையான 'பரங்கிப் புண்'ணையும் வாங்கிக் கொண்டு, சந்தேகம் என்ற ஒன்றின் பேரால் கங்காணிச் சுப்பனின் மூர்க்கமான தாக்குதல் தந்த கொடிய விளைவுக்கும் உடல் நலத்தை அழித்துக் கொண்டு, தம் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொள்ளும் தேயிலைப் பெண் தொழிலாளிகள் சிலரின் வழக்கமான தீர்மானத்துக்கு மட்டும் அறவே இடங்கொடுக்காமல் தன் தலைமுறையிலும் தன் மகள் வெள்ளைச்சியின் தலைமுறையிலும் விடாது போராடும் மருதிக்கும்தான்(துன்பக்கேணி) எவ்வளவு பெரிய வாழ்வின் - இருப்பின் - உயிர்த்திருத்தலின் இடைவெளி? சாதியளவிலும் கூட, இவ்விரு படைப்பாளர்களுக்கும் இடையில் பெரிய வேறுபாடு இல்லை. இருபதாம் நூற்றாண்டின் முப்பதுகளில் உயர்ந்த சாதியாகக் கருதப்பட்ட இரு வேறு சாதிகளில் பிறந்தவர்களில் ஒருவர், உயர்சாதிப் பெண்ணொருத்தியின் கருத்தியலால் அவள் வீழும் வீழ்ச்சியைக் குறிக்க இருபத்து மூன்று பக்கங்களை எடுத்துக் கொள்ள; மற்றவர், ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்ணொருத்தியின் சளைக்காத - நடப்பியல் சார்ந்த - உடலால் வீழ்ந்தாலும் உள்ளத்தால் வீழாத போராட்ட வாழ்வைக் குறிக்க முப்பத்தெட்டுப் பக்கங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்! இதை வெறும் அளவுக்குக்காகவே குறிக்கிறேன். மற்றபடி எடுத்துக் கொள்ளும் பொருளின் உட்கிடக்கைதான் முதன்மையானது. அல்லயன்ஸின் வெளியீடான 'கதைக் கோவை'யில் கூர்மையான வாசகரின் புருவங்களை உயர்த்த வல்லதொரு சிறுகதை, அ.நா. சிவராமன், பி.ஏ. அவர்கள் எழுதிய "நாலு' அவுன்ஸ் பிராந்தி" என்பது. இதுவும் மணிக்கொடியில் தான் வந்திருக்கிறது. முற்றிலும் நாம் உள்வாங்கிக்கொள்ள முடியாத 'தாம்பத்திய'த்தை அடிநாதமாகக் கொண்ட சிறுகதை. அளவு ஏழரைப் பக்கங்கள்தாம். உணர்த்தாமல் உணர்த்தும் உட்கிடக்கையோ பெரிது. சொல்லாமல் விட்டுவிட்டவற்றை வாசகர்களே புரிந்துகொள்ள வைக்கும் உத்தியைக் கொண்ட, அன்றைய நிலைக்கு வேறுபாடான கதைசொல்லல். அன்றாடம் சந்திக்க நேரும் வாழ்க்கை உண்மைகள் தரும் படிப்பினைகளால் சிராத்தம்(சொல் - கதையிலுள்ளவாறே)போன்ற - இறப்புக்குப் பிந்திய சடங்குகள் குறித்துக் கொஞ்சமும் நம்பிக்கை கொள்ள முடியாத கணவன், தன் தீரா நோய் நிலையிலும் தனக்கு வேண்டியவற்றை முழு ஈடுபாடு கொண்டு செய்யும் கணவனிடம் மட்டும் முழுநம்பிக்கை கொள்ளாமல், மடி, சிராத்தம், பிதிர்தோஷம்(சொற்கள் - கதையிலுள்ளவாறே)ஆகியவற்றில் அளவில்லாத நம்பிக்கை கொள்ளும் நோயாளி மனைவி ஆகிய இருவரும் இதில் முக்கியமான பாத்திரங்கள். கோமதி என்ற பெயருடைய அவள், தான் நெடுநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த - 'பிராணன்' போகும் நொடிப்பொழுதை, தானே எதிர்பார்க்க முடியாதவாறு சந்திக்கும்படி அவள் கணவன் திட்டமிடாமல் செய்துவிடும் விலங்குணர்வு(id)ச் செயல் இந்தக் கதையின் திருப்புமுனை. முடிவில் தன் நண்பன் கிட்டுவிடம், தன் செயலை மறந்து அன்றைய நாளிரவு தூங்க அவன் வாங்கி வரச் சொல்லிக் கேட்கும் நான்கு அவுன்ஸ் பிராந்தி கதைத் தலைப்புக்குக் காரணம். இடையில், தனக்கு வழக்கமில்லாத கடன் வாங்க நண்பன் கிட்டுவைச் சந்திக்கத் திருவல்லிக்கேணிக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்பொழுதில், பேருந்தில், தன் தோற்றத்தை நோக்கி நடத்துநர் கொள்ளும் நம்பிக்கையை அரையணாவுக்காக ஏமாற்றும் புத்திசாலித்தனமும், முடிவில் நண்பனை வாங்கிவரச் சொல்லும் நான்கு அவுன்ஸ் பிராந்தியும் அவன் ஏற்றிருக்கும் காந்தியடிகளின் கொள்கைக்கு எதிர்ப்பானவை. "பின்பற்றுபவர்கள் குருவை அழிக்கிறார்கள்"("Followers destroy their Guru") என்ற ஜே. கிருஷ்ணமூர்த்தியின் வாக்கியத்துக்கு இந்தக் கதையைவிடவும் விளக்கம் ஒன்றிருக்குமா? "சுகி" அவர்கள் எழுதிய 'நல்ல பாம்பு' என்ற கதை, இந்தக் கோவையில் உள்ளது. கதைக் கோவை இரண்டாம் தொகுதிக்கென்றே "சுகி" இதைப் படைத்திருக்கிறார் என்று பதிப்புரையின்வழி ஊகிக்க இடமுள்ளது. கதையில் வரும் பாம்பாட்டி முனியனும் அவனுடைய இரு புதல்வர்களான நாகப்பனும் ரங்கப்பனும் முனியனின் தங்கை மகளான செங்கமலமும் வாசகர் உள்ளங்களைப் பிணைத்துக்கொள்ளும் பாத்திரங்கள். ஒன்பதரைப் பக்கங்களை எடுத்துக் கொண்ட கதையில் இடம்பெறும் இருளர் வாழ்வை "சுகி" அவர்கள் உடனிருந்து அறிந்து கொள்ளாமல் அல்லது நன்கு விசாரித்து அறிந்து கொள்ளாமல் இவ்வளவு தெளிவாகப் படைத்திருக்க முடியாது. ஒரு பெண்ணால், ஒற்றுமையாக இருந்த அண்ணன் தம்பிக்குள் பிளவும் அண்ணனுக்குக் குரூரமும் வருவது புதிய கதைக் கரு அல்லவென்றாலும் கதை சொல்லப்பட்ட முறை சிறப்பாக உள்ளது. 1994இல் இந்தக் 'கதைக் கோவை'யின் தொகுதிகள் மீண்டும் வெளியிடப்பட்டிருப்பதால் சிறுகதை வளர்ச்சி வரலாற்றில் ஈடுபாடு கொண்ட நண்பர்கள் இவற்றை ஒருமுறை வாசித்துப் பார்க்கலாம். இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதிச் சமூகம் குறித்துக் கதைகள் வழியாக அறிய விரும்புகிறவர்களும் வாசிக்கலாம். அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை மயிலை ராமகிருஷ்ணா மடத்துச் சாலையில் இருக்கிறதென்று நினைக்கிறேன். **** நன்றி: திண்ணை.காம்
சமூக-அரசியல்-பொருளியல் சிந்தனையாளரும் செயல்வீரருமான குணாவின் ஆராய்ச்சிகள் - தேவமைந்தன் பெங்களூரு நகரிலும் தமிழ்நாட்டிலுமுள்ள தூயதமிழ் நாட்டமுள்ள இடதுசாரிச் சிந்தனையாளர்களால் அன்புடனும் தோழமையுடனும் அறிஞர் குணா என்று அழைக்கப்படும் திரு சாமுவேல் குணசீலன், கோலார் தங்கவயலில் 1941ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று பிறந்தவர். தந்தையார் திரு அ.மா.து. சாமுவேல் அவர்கள். தாயார் திருமதி மனோன்மணி அவர்கள். ஏந்துகள் மிக்க வங்கிப் பணியைத் துறந்து மக்கள் இயக்கங்களில் இறங்கிப் பாடாற்றிய அறிஞர் குணா, கருநாடகச் சிறைகளில் பலமுறை இருந்தவர். அண்மைய நெடுஞ் சிறைக்காலத்துக்குப்பின் மக்கள் உரிமை இயக்கத்தின் தொடர்ந்த முயற்சிகளால் விடுதலை பெற்றவர். இவரைப் போற்றிய தூயதமிழ் இயக்கம் சார்ந்த அறிஞர்களில் திராவிட இயக்கத்தின்பால் பற்றுக் கொண்டவர்கள் வெறுத்தாலும் சரி என்று 'திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்ற ஆய்வைத் துணிந்து வெளிப்படுத்தியவர். அந்த ஆய்வின் முடிபுகள், நம் திண்ணை வலையேட்டின் மே 1, 2008 பதிவேற்றத்தில், தோழர் எஸ்ஸார்சி தந்துள்ள குறிப்புகளாக வெளிவந்துள்ளன. குணாவின் ஆராய்ச்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்காக, அவர் அறிவாற்றலின் தோழர்கள் அமைத்துக் கொண்டதுதான் 'FORT' என்ற அமைப்பு. 'Forum For Research On Tamilnadu' என்பது இதன் விரிவாக்கம். பெங்களூரு நகரில் 'டிஸ்பென்ஸரி சாலை' 48ஆம் இலக்கத்தில் இது இயங்கத் தொடங்கியது. இதுவே 'தமிழக அரண்' என்று பின்னர் பெயர் தாங்கியதாக நினைக்கிறேன். குணாவின் சிறந்த ஆராய்ச்சிகளாக எனக்குத் தெரிந்தவை பின்வருமாறு: 1. சாதியத்தின் தோற்றம் (Origin of Casteism)(1972, 1974, 1979) 2. தமிழர் மெய்யியல்(1980) 3. Marxist Dialectics(1983) 4. Asiatic Mode - A Socio-cultural Perspective(1984) 5. தமிழியப் பொதுவுடைமை(1985) 6. மார்க்சியமும் பெரியாரியமும் 7. மார்க்சிய இயங்கியல் 8. தமிழீழ அரசியலின் அகப்புற அழுத்தங்கள் (கட்டுரை)(1985) 9. இந்தியத் தேசியமும், திரவிடத் தேசியமும்(1986) 10.தமிழ்த் தேசிய இனச் சிக்கல் - உலக நம்பிகளின் இயங்காவியல்(The Metaphysics of the Abstract Internationalists)(1987) 11.வகுப்பும் சாதியும் வரணமும்(1988) 12.திராவிடத்தால் வீழ்ந்தோம் (1994) இவற்றுள் முதலாவதை இக்கட்டுரையில் பார்ப்போம். சாதியத்தின் தோற்றம் (Origin of Casteism)(1972, 1974, 1979) இந்நூலை 1972ஆம் ஆண்டே குணா எழுதினார். மூன்றாண்டுகளுக்குப் பின், அச்சுக்குத் தந்துவிட்டு வீடு திரும்பிய போது, 'மிசா'வின்கீழ் சிறையிடப்பெற்றார். இதன் சுருக்கத்தை 1974ஆம் ஆண்டே, 'Origin Of Casteism - An Integral Theory' என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்தார். அதற்குப்பின் ஐந்து ஆண்டுகள் கழித்துத் தமிழில் முழுமையான வடிவம் பெற்று ஆறு ரூபாய் விலைக்கு 1979 சனவரியில் வெளிவந்தது. கோயம்புத்தூர் உப்பிலிபாளையத்தில் தென்றல் நூலகத்தால் வெளியிடப்பட்டது. அதற்கு முன் அத்தகைய சிந்தனை தமிழில் - தூயதமிழில் வெளிவந்ததில்லை. மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணருக்கு மிகவும் பிடித்த குணாவின் ஆய்வு இது. இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், பாவாணருக்கு இடதுசாரிச் சிந்தனைகள்மேல் ஈடுபாடு இருந்ததில்லை. இறைநம்பிக்கை மிகுந்தவராக விளங்கியவர் பாவாணர். அப்படிப்பட்டவரையே ஈர்த்த நூல் 'சாதியத்தின் தோற்றம்.' "சாதியம் என்பது ஒருவகைப் பொருளியல் - சமுதாய வாழ்க்கை முறை. இன்றைய அரை நிலவுடைமைச் சமுதாயத்தின் அரசியல், பண்பாட்டுத் துறைகளின் உள்நோக்கமாகவும் அது அமைகின்றது. அச் சாதியத்திற்கு, அதற்கே உரிய கட்டுமானங்கள் உண்டு; தனி வடிவமைப்புகள் உண்டு. அவ் வடிவமைப்புகள் அதற்கேயுரிய உருவவியலைப் படைக்கின்றன. அச் சாதியத்திற்குத் தனித்த உள்ளியக்கமும் உண்டு. அவ்வுள்ளியக்கமே அதனை நீட்டிக்கும் உள்ளாற்றலாகும்" எனத் தொடங்கி, சாதியத்தின் தோற்றம், வளர்ச்சி, இயக்கம் பற்றிய சிக்கலைப் பொருள்முதல் இயங்கியல் என்னும் மார்க்சிய முறையில் அணுகி, அவற்றின் காரணங்களைப் பொருளியல் காரணம், சமுதாயவியல் காரணம், அரசியல் காரணம், பண்பாட்டுக் காரணம், மதக் காரணம், உளவியல் காரணம் ஆகிய அகநிலை(பண்பாட்டுக் காரணம், மதக் காரணம், உளவியல் காரணம்)க் காரணங்கள் மூன்றாகவும் புறநிலைக் காரணங்கள் மூன்றாகவும்(பொருளியல் காரணம், சமுதாயவியல் காரணம், அரசியல் காரணம்) பகுத்து, ஒவ்வொன்றையும் தனித்தனியே ஆராய்ந்திருக்கிறார். அறிவாராய்ச்சியியல்(epistemology), மார்க்சீயச் சிந்தனையியல் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் மட்டுமல்லாமல் அம்பேத்கர் சிந்தனையியலில் ஈடுபாடு கொண்டவர்களும் வாசித்தறிய வேண்டிய ஆராய்ச்சி இது. இதில் உள்ள நான்காம் - அகநிலைக் காரணமான - பண்பாட்டுக் காரணம் குறித்த ஆய்வில் டாக்டர் பாபுராவ் சாகேப் அம்பேத்கர் அவர்களின் 'Castes in India - their Mechanism, Genesis and Development' என்ற நூலில் இடம்பெறும் அறிஞர் கப்ரியேல் தார்த் கண்டறிந்த 'போலி நடத்தை விதிகளை' சாதியத்தின் தோற்றத்துக்கு அறிவியல் விதிகளாக அம்பேத்கர் எடுத்தாள்வதைக் குணா திறனாய்ந்திருப்பதை மீள்வாசிப்பில் தலித்தியக் கொள்கை அறிஞர்கள் திறனாய்ந்திருக்கிறார்கலா என்று எனக்குத் தெரியவில்லை. நண்பர்கள் எவரேனும் தெரிவித்தால் பயன்பெறுவேன். ஐந்தாம் இயலான மத/சமயக் காரணம் பற்றிய பகுதி... பண்டைக் கிரேக்கத்தில் பெலொப்பனீசியப் போருக்குப் பின்னர் ஏதென்சு, கடலரசியாகத் தான் செம்மாந்திருந்த நிலையினின்றும் தாழ்ந்து இழிந்தபொழுது, அத்தீனிய உயர்குடியாட்சியினருக்கு (Athenian aristocrats) பிளேட்டோ அகத்தியமானதோர் அறிவுரை தந்தார். அறநிலையாளர்களுக்கு அதிர்ச்சியூட்டும் அந்த அறிவுரை, "மேன்மையான பொய்களை(Noble Lies) வடித்துச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்!" என்பதே. அப்பொழுதுதான் அவர்கள், பெலொப்பனீசியப் போரின் முடிவால் தங்களுக்கு ஏற்பட்ட மானக்கேட்டை மக்களிடையில் மறைத்து, தங்களுக்கே உரியதாகத் தாங்கள் நம்பிவந்த நாட்டாட்சியாகிய 'உயர்குடியாட்சி''(Aristocrocracy)யைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது அவர் தருக்கம். இதை, பண்டைய இந்திய ஆட்சியாளர்கள், புரோகித வர்க்கத்துடன் சேர்ந்துகொண்டு புனைந்த நான்முகன் - நால்வருணக் கோட்பாட்டுடன் குணா ஒப்பிடும் பகுதி(ப.122) ஆய்வாளர்களுக்கு விருந்தாகும். இதே இயலில் தொடர்ந்து பிளேட்டோ போன்றே மக்கள் சமமானவர்களாக வாழ்வதை விரும்பாத அவர்தம் மாணவர் அரிஸ்டாட்டிலின் கருத்தோட்டங்களை, இந்து வேதங்கள் - குறிப்பாக இருக்கு வேதம், அதன் பின்னுழைவு என்று கருதப்படும் 'புருஷசூக்தம்' ஆகியவற்றின் நால்வருணச் சாதிப்புடன் ஒப்பிட்டு ஆராயும் குணாவின் திறன் வாசித்தறிய வேண்டியதாகும். வேதங்கள் இந்திய மண்ணிலேயே பிறந்தவை, குறிப்பாக ஆரியர் அல்லாதவர்களாலேயே பெரிதும் இயற்றப்பட்டவை என்பதற்குப் பாவாணர் தம் 'தமிழர் வரலாறு' என்ற நூலில் காட்டும் எட்டுக் காரணங்களை குணா எடுத்துக்கூறியிருக்கிறார். பிந்திய சமணர்கள் வருணாச்சிரம தர்மத்தை சூழ்நிலைக்கேற்பத் தாமும் ஏற்றுக்கொள்ள முன்வந்ததை இளங்குளம் குஞ்ஞன் பிள்ளை தம் 'பண்டைய கேரளம்' என்ற நூலில் ஆய்ந்திருப்பதை எடுத்துக் கூறியுள்ளதோடு அதற்குத் தமிழகச் சான்றாகத் திருத்தக்க தேவர் தம் சீவக சிந்தாமணியின் இலக்கணையார் இலம்பகத்தில்(பாடல்கள் 2462 - 2469) சீவகனின் திருமணச் சடங்குகள் வைதிக முறையில் நடந்ததாகப் பாடியிருப்பதை ஒப்புநோக்கியுள்ளார். பிந்திய காலப் பௌத்தமும் அதே வருணாச்சிரம வழியில் சென்ற நிலையை எடுத்துரைக்கிறார். கிட்டத்தட்ட நூற்று அறுபது பக்கங்கள் உள்ளதாக வெளியிடப்பட்டுள்ள 'சாதியத்தின் தோற்றம்' முதற்பதிப்பில் குணா மொழிந்த கருத்துகளையெல்லாம் குறிப்புகளாக்குவதோ கூறிமுடிப்பதோ என்னால் இயலாதவை. **** நன்றி: திண்ணை.காம்

1.5.08

வரைகலைப் புதினங்கள்(graphic novels): தொடர்புடையோர் விழித்துக் கொள்க! -தேவமைந்தன் இலக்கிய வகைகள், ஒவ்வொரு காலகட்டத்திலும் தளர்ச்சியின்றி மாறியும் வளர்ந்தும் வந்திருக்கின்றன. இலக்கிய வகை ஒன்று பிறப்பெடுப்பதற்கே நிகழ்சமூகத்தின் கடுமையான தூண்டுதல் தேவைப்படுகிறது. அதற்கென்றே பிறந்தவர்போல் ஒருவர், அவர் வாழும் சமூகத்தால் அப்படிப்பட்ட பணியை முடிப்பதற்கென்று உந்தப்பட்டார். அரசுப் பணியில் வெற்றியுடன் வாழ்ந்தவர். அவர் பெயர்தான் வேதநாயகம் பிள்ளை. தமிழில் முதல் புதினம்[மாற்றுக் கருத்தாளர்கள் இதற்கும் உள்ளனர்] படைக்க வேண்டிய தேவை அவருக்கு அப்படியென்ன வந்தது? 'பிரதாப முதலியார் சரித்திரம்'தான் தமிழில் முதல் புதினம் என்பதற்குச் சான்றும் இந்த வினாவுக்கான விடையிலேயே தொக்கியுள்ளது. மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை வாழ்ந்த காலம் - ஆங்கிலேயருக்குத் தமிழ்நாட்டில் அகத்தியம் மிகுந்திருந்த காலம். மெய்யான தமிழர்கள், தங்கள் பண்பாட்டுக் கூறுகளையும் வாழ்வியல் செம்மையையும் ஆங்கிலேயர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று பேரவா உற்ற காலம். அதே சமயம் ஆங்கிலேயருக்கு அவை தெரிந்தால்தான், இங்கிருக்கும் ஆங்கிலேய அடிவருடிகளும் தங்கள் அறியாமையைச் சற்றே அறிந்துகொண்டு, தங்களின் மரபு குறித்து மறைவாகவேனும் பெருமைப் பட்டுக் கொள்வார்கள் என்று அவர்கள் நம்பினார்கள். அத்தகைய தமிழர்களில் முதன்மையானவராக விளங்கினார் வேதநாயகம் பிள்ளை. நம் மரபுசார் ஒழுக்க விழுமியங்களும், தமிழ்மொழியின் அறநெறி மையப்படுத்தப்பெற்ற இலக்கியங்களின் சிறப்பும், தங்குதடையற்றும் மிகுந்த முயற்சி இல்லாமலும் பேசவல்ல மொழியின் இயல்பும் ஆங்கிலேயருக்குத் தெரிய வேண்டுமே என்ற 'பண்பாட்டுக் கவலை'யுடன்(1) தம் முதல் புதினத்தைப் படைத்திருக்கிறார் அவர். அதனால்தான் அதற்கு முன்னுரையை அவர் ஆங்கிலத்திலேயே எழுதினார். அவர் எண்ணியது போலவே 'பிரதாப முதலியார் சரித்திரம்' ஆங்கிலேயர் கவனத்தைப் பெற்றது; இங்கிலாந்தில் மொழிபெயர்ப்பு நூலாக வெளிவந்தது. ஆங்கிலேயரை நோக்கிய பண்பாட்டுக் கவலை ஒருபுறம்; 'அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?' என்ற ஆணாதிக்கத்தை எதிர்க்கும் அடிப்படை உணர்வுகூடப் பெறாமல் கொல்லை/ வயல்வேலைகளிலோ, வசதியானவர்களின் வீட்டு வேலைகளிலோ, அடுக்களைகளிலோ; ஆடவர் மட்டுமல்ல - தம்மைப் போன்ற பெண்களே தம்மை வியக்க வேண்டும் என்று அணிசெய்துகொள்வதே வாழ்வியலான மடமையிலோ மூழ்கிக் கிடந்த மகளிர், பெற்றே ஆக வேண்டிய பெண்கல்வி குறித்த சமூகக் கவலை மறுபுறம். அதைப் போக்கிக் கொள்ளவே அவர் படைத்த ஞானாம்பாள் பாத்திரம், அன்றைய தமிழ்ப் பெண்ணுலகத்துக்கு வரமாகவும் விளங்கியது அல்லவா? தமிழ்நாட்டில், முழுமையான நீதிமன்ற மொழியாகத் தமிழே விளங்க வேண்டுமென்று ஞானாம்பாள் கூற்றாக வேதநாயகம் பிள்ளை பேசுவது, ஆங்கிலக் கல்வியை அந்தக் காலச் சூழ்நிலையில் அவர் ஆதரிக்க வேண்டியிருந்த கட்டாயத்தையே புலப்படுத்துகிறது. சந்து மேனன் அப்படியல்லர். இதற்குப் பத்தாண்டுகள் பிற்பட்டு, 1889இல் மலையாளத்தில் வந்த 'இந்துலேகா' என்ற புதினத்தின் ஆசிரியர் சந்து மேனன், வேதநாயகம் பிள்ளையைப் போலவே அரசுப் பணியில் வெற்றி பெற்றவர்தாம்; மாவட்ட நீதிபதிப் பணியில் இருந்தவர். நெல்லையிலும் சந்து மேனன் பணிபுரிந்திருக்கிறார். அவருக்கு வேதநாயகம் பிள்ளையைக் குறித்தும், 'பிரதாப முதலியார் சரித்திரம்' குறித்தும் நன்றாகவே தெரிந்திருக்கிறது. அதனால்தான் பெண்கல்வியைக் குறித்த அதிக அழுத்தம் இந்துலேகாவில் பதிவாகியிருக்கிறது. ஆங்கிலக் கல்வியையே நாயர் சமூகத்துப் பெண்கள் பெறவேண்டும் என்று மேலதிகமாக விழைந்ததுதான் சந்துமேனனுக்கும் வேதநாயகம் பிள்ளைக்கும் இருந்த வேறுபாடு. தம் புதினத்தின் முதல் படியை யாருக்கு விரும்பி அனுப்பினாரோ அந்த ஆங்கிலேய நண்பருக்கு அவர் எழுதிய கடிதத்தில், "......எமது நாயர் சமூகப் பெண்கள் தமக்கியல்பாகவுள்ள அறிவுடனும் அழகுடனும் ஆங்கிலக் கல்வியும் பெற்றுக்கொண்டார்களானால் சமூகத்தில் அவர்கள் மிகுந்த செல்வாக்குப் பெறுவார்கள்..." என்று அவர் எழுதியிருப்பது அந்த வேறுபாட்டுக்கொரு சான்று.(2) தமிழிலும் மலையாளத்திலும் இப்படி ஒரு தேவை - சமூக, பண்பாட்டு நோக்கில் இருந்தது. அதனால், அம்மொழிகளுக்குப் புதிய இலக்கிய வகையாகிய புதினம்(நாவல்) தோன்றியது. 'கிராஃபிக் நாவல்' எனப்படும் புதியவகை. தோன்றுவதற்கான காரணங்கள் என்ன? 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டின் இணைப்பேடான 'யூத் எக்ஸ்பிரஸ்' சொல்வதைக் கேட்போம்: இந்தியாவில் புத்தக வாசிப்பு மிகுந்துள்ள பொழுதும், இங்குள்ள 'புத்தகப் புழு'க்களில் பெரும்பாலோருக்கு, முழுவதுமான புதினங்களை முயற்சி எடுத்துக்கொண்டு ஈடுபட்டு வாசிப்பதற்குப் போதுமான நேரம் இல்லை. இன்றுள்ள, சிந்திக்கும் இளைய இந்தியன்('சிந்திக்கும்' என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்) வாசிக்கும் வழக்கத்தைவிட்டு வேறெதாவதற்கும் போகாமல் பிடித்து வைக்கவே இந்த வரைகலைப் புதினம். நாம் 'டின்டின்'(Tintin)-ஐயும் 'ஆஸ்டரிக்ஸ்'(Asterix)-ஐயும் எப்பொழுதுமே விரும்பி வாசித்து வந்திருக்கிறோம். அவை என்ன வகையைச் சார்ந்தவை என்ற தொல்லையான வகைப்படுத்தலில் வாசகருள் மிகச் சிலரே முயற்சி மேற்கொண்டுள்ளனர். குழந்தைகளுக்கான சித்திரக் கதைகள் என்று அவற்றைச் சொல்லி விடுவது சரியாகாது. ஏனென்றால், அவற்றுள் வரும் உரையாடல்களையும் சூழல்களையும் அறிவு முதிர்ச்சி பெற்ற வாசகர்களே உணர்ந்து பாராட்ட முடியும். அவை திரைக்கதை வடிவங்களல்ல; சித்திர விளக்கம் தரப்பெற்ற புதினங்களாக வடிவமைக்கப்படும் பழைய இதிகாச - புராணப் புனைகதைகளுமல்ல. ஆனாலும், 'டின்டின்'னும் 'ஆஸ்டரிக்'சும் கிட்டத்தட்ட வரைகலைப் புதினங்கள் போன்றவையே. ஒரு வரைகலைப் புதினமென்பது, அறிவு முதிர்ச்சி பெற்ற வாசகரை இலக்காகக் கொண்டு சித்திரக் கதை வடிவத்தில் மேற்கொள்ளும் முழுமையான புதின முயற்சி தான். அவை எப்பொழுதுமே வேடிக்கையைப் பொருளாகக் கொண்டவை அல்ல. முழுவதுமாக நேரம் ஒதுக்கி வாசிக்க முடியாதவர்களுக்கு, அதாவது 'புத்தகப் புழுக்கள்' அல்லாத 'இருக்கை உருளைக்கிழங்கு'களுக்கு(3) மிகவும் உகப்பானவை வரைகலைப் புதினங்களே. 'வரைகலைப் புதினம்'('graphic novel') என்ற இலக்கியக் கலைச்சொல்லை முதன்முதல் அறிமுகப்படுத்தியவர் - வில் எய்ஸ்னர்(Will Eisner). 1978ஆம் ஆண்டு, இத்தகைய தன் படைப்பை வாசகர்கள் 'சித்திரக் கதைப் புத்தகம்'('comic book') என்று அதைவிட வேறு வழி தெரியாமல் அழைத்தபொழுது, 'வரைகலைப் புதினம்' என்று சொல்லுவதற்கு அவர்களைப் பழக்கினார் எய்ஸ்னர். "இதெல்லாம் இங்கே, தமிழில் வர, ஆண்டுகள் பல பிடிக்கும். அதுவரை கவலைப்படாமல் 'திண்டுகளை' வாசியுங்கள்!" என்பவர்களுக்கு ஒரு செய்தி. அமெரிக்காவில் செப்டம்பர் 11ஆம் நாள்தாக்குதல்களை தொடர்ந்து எழுதப்பட்ட வரைகலைப் புதினத்தின் அத்தனைப் படிகளும்(copies) உடனடியாக விற்றுத் தீர்ந்தன. அங்கே என்ன? 2004-ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் வரைகலைப் புதினமான 'காரிடர்'('Corridor') வெளியானபொழுது, பதிப்பாளர் அச்சிட்ட முதல் பதிப்பின் 2000 படிகளும் உடனடியாக விற்றுத் தீர்ந்துள்ளன. அதை எழுதியவர் சார்நாத் பானர்ஜி . நிகழ்ச்சிகளுக்குச் சித்திர விளக்கம் தருவதில் தேர்ச்சிபெற்ற, திரைப்படத் தயாரிப்பாளர். ('ரே' என்று செல்லமாக அழைக்கப்படும் சத்யஜித் ரே, நினைவுக்குள் நுழைகிறார். 'பதேர் பாஞ்சாலி'' திரைக்கதையை முதலில் அவர் சித்திரங்களின் தொகுப்பாகத்தான் வரைந்து கொண்டாராம்.) அடுத்த மூன்றாண்டுகளிலேயே, சார்நாத் பானர்ஜியின் இரண்டாவது வரைகலைப் புதினமாகிய 'தி பார்ன் ஒளல்'ஸ் வொண்டரஸ் கேபர்ஸ்'('The Barn Owl's Wondrous Capers'), அணுகுமுறையிலும் உட்பொருளிலும் முழுமையாய்த் தன் முன்னோடியான முதல் வரைகலைப் புதினத்திலிருந்து வேறுபட்டு வெளிவந்து வெற்றி கண்டது. 'டிஜிட்டல் தத்தா' என்ற கதைப்பாத்திரம் முதலாவதில் போலவே இரண்டாவது வரைகலைப் புதினத்திலும் வருவது ஒன்றே ஒற்றுமை. இந்த ஆண்டின்(2008) தொடக்கத்தில் வெளிவந்துள்ள 'காரி'('kari') என்ற வரைகலைப் புதினமே இந்த வகையில் அண்மையானது. இதை எழுதியவர் அம்ருதா பாடீல் என்ற பெண் எழுத்தாளர். இந்தியாவின் முதல் பெண் வரைகலைப் புதின ஆசிரியர் என்ற புகழுக்குரியவர். சார்நாத் பானர்ஜியைப் போலவே அம்ருதா பாடீலும் - தன் புதினத்துக்குத் தானே சித்திர விளக்கங்களைத் தந்துள்ளார். வண்ணங்களுக்கும் கறுப்பு வெள்ளைத் தீட்டல்களுக்கும் இடைப்பட்டவை அவை. மும்பையில் விளம்பர நிறுவனமொன்றில் வேலை செய்யும் காரி என்ற பெண்ணே(சார்நாத் பானர்ஜியின் 'டிஜிட்டல் தத்தா' போல) 'காரி' - வரைகலைப் புதினத்தின் முதன்மைக் கதைப் பாத்திரம். வரைகலைப் புதினத்தை வரவேற்று இவ்வளவு அழுத்தமாக எழுதியுள்ள ஆஷா பிரகாஷ் என்பவர், ஏனோ, தன் கட்டுரை இறுவாயில், "ஆனாலும் இந்தப் புதினவகை நம் நாட்டில் இன்னும் நன்றாகக் காலூன்றத்தான் வேண்டியுள்ளது. அது மட்டுமல்லாமல் பரந்த அளவில் வாசகர்களைச் சென்றடைய இன்னும் அது நெடுந்தொலைவு பயணம் செய்ய வேண்டியுள்ளது" என்றும் சொல்கிறார். சார்நாத் பானர்ஜியும் அனிந்தா ராயும்தொடங்கியுள்ள 'ஃபாண்டம்வில்' என்ற புத்தக வெளியீட்டு நிறுவனம், இந்தப் புதின வடிவத்தை உயர்த்திப்பிடிக்கவும் - இவ்வகையில் எழுத முன்வரும் எழுத்தாளர்களுக்குச் சிறப்பான தளம் அமைத்துத் தரவும் ஆகவேண்டிய முயற்சிகளைத் தளராமல் செய்து வருகிறது. அந்த வகையில், அப்துல் சுல்தான் எழுதியுள்ள 'நம்பிக்கையாளர்கள்'('The Believers') என்னும் வரைகலைப் புதினத்தை 'ஃபாண்டம்வில்' பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இதன் மொழிவடிவத்தை எழுதியவர்தான் அப்துல் சுல்தான். வரைகலையை உருவாக்கியவர் பார்த்தா சென்குப்தா. கேரளத்தின் மலைப்புரம் மாவட்டத்தின் தொலைவான சிற்றூர்களில் உணரப்படும் மதப் பொறையின்மையை அத்தகைய ஊரொன்றில் பிறந்தவரான அப்துல் சுல்தான் அதில் வெளிப்படுத்தியுள்ளார். முந்திய வரைகலைப் புதினங்களை அவற்றின் ஆசிரியர்களே உருவாக்கியது போலல்லாமல், இன்னொருவரைப் பணியமர்த்தி, தன் புனைவை அவர் வரையும் படங்களில் புலப்படுத்துமாறு செய்திருக்கிறார். நூலாசிரியரும் படம் வரைந்து விளக்குபவரும் ஒருவரேபோல் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியுள்ளதால், அவ்வாறு செய்வது மெத்தக் கடினமானது என்றும் அவர் ஒத்துக்கொண்டுள்ளார். தவிர, சிறப்பான சந்தைப்படுத்துதல் இல்லாததால், சில வரைகலைப் புதினங்கள், புத்தக விற்பனை நிலையங்களின் அடுக்குகளில் வாங்குவாரற்றுத் தேங்கிக் கிடப்பதாகவும் ஆஷா பிரகாஷ் சொல்லுகிறார். இருந்தாலும், அவை வாங்கிப் படிக்கத் தகுதியானவையே என்பது அவர் கருத்து. "வரைகலைப் புதினங்களைப் பொருத்தவரை ஒரு சிறப்பான தன்மை அவற்றுக்கு உண்டு. பொதுவான புதினத்தை வாசிக்கத் தேவைப்படும் அமைதியான மூலையொன்றோ, வாரத்தின் கடைசி நாட்களோ, வரைகலைப் புதினம் படிக்கத் தேவைப்படுவதில்லை. பெருநகரங்களில் வேலைக்குச் சென்று திரும்பும் உள்ளூர்த் தொடர்வண்டிகளோ, விமானத்துக்குக் காத்திருக்கும் வெட்டிப்பொழுதுகளோ அதற்குப் போதுமானவை" என்று அவர் வலியுறுத்துகிறார். "அடிப்படைநிலைப் பொழுதுபோக்கு, அறிவூட்டம், சிந்தனைக்கு உணவு என்ற மூன்றும் குளிகை(capsule)யொன்றில் கிடைப்பது போன்றதே வரைகலைப் புதின வாசிப்பு" என்று முத்தாய்ப்பும் வைத்துவிடுகிறார். "Say yes' என்று வெடிப்பில்(blast) புதுமையைக் கொண்ட 'Youth Express' என்னும் புதிய இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டின் 09/04/2008 இணைப்பின் முதற் பக்கம் முழுதும், வரைகலையில், இதுகுறித்த வலியுறுத்தல் மிகுந்து காணப்படுகிறது. அந்த உரைப்பகுதி இதோ: "இதைப் பாருங்கள்! அமி காமிக்ஸ் படிக்கிறாள்!" "அது காமிக்ஸ் இல்லடா முட்டாளே..அது ஒரு கிராபிக் நாவல்.." "அதைப் பாத்தா பழைய காமிக் புத்தகம் போலத்தான் இருக்கு!" "காமிக்சுக்கும் கிராஃபிக் நாவல்களுக்கும் வித்தியாசமிருக்கு. ஏன் நீங்க புதிய 'YES'-ஐப் படிச்சு கிராஃபிக் நாவல்களைப் பத்தி நெறைய்ய தெரிஞ்சுக்கக் கூடாது? நல்லாவும் தெரிஞ்சுக்கலாம்!" *** இந்த வரைகலை முயற்சியை, எஸ்.ஏ.பி. அவர்களை ஆசிரியராகக் கொண்டிருந்த 'குமுதம்' இதழ் பல ஆண்டுகளுக்கு முன்பே செய்து பார்த்தது. ஒரு படி மேலே போய், அந்நாட்களில் புகழ் பெற்றிருந்த கண்ணன் முதலான நடிகர்களை நடிக்கவைத்து ஒளிப்படங்களை எடுத்தும் கதைகளை வெளியிட்டது. அண்மைக் காலங்களில்கூட நடிகர்களின் முகச்சாயலில் படங்களை வரைந்து கதைகளைக் குமுதம் வெளியிட்டதாக நினைவு. ** வரைகலைப் புதினங்கள் தொடர்பாக நம் எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் முன்னதாகவே விழித்துக் கொள்வது நல்லது. இதனால் ஓவியர்களுக்குச் சிறப்பான முதன்மை இலக்கிய உலகில் ஏற்படுமென்பது பாராட்டத்தக்கதே. ஆனாலும் மொழி பின்னே தள்ளப்பட்டு, சித்திரம் முன்னே வரும் வாய்ப்புள்ளது. ஓரு மூலையில் அமர்ந்து, கண்களை மூடிக் கொண்டு, சிந்தனை ஓடுவதைக் கவனித்துப் பார்ப்போமேயானால், மொழிதான் நம் எண்ணங்களுக்குக் கனபரிமாணம் தந்துகொண்டே செல்கிறது என்பதை நாம் உணர முடியும். மொழியில்லாத எண்ணங்களை வெறுமனே எண்ண முடிந்தவர், 'சமாதி யோகம்' அறிந்தவராகத் தான் இருக்க முடியும். ரிஷிகேசில் குடில் வைத்திருந்த சுவாமி சிவானந்தரின் 'சமாதி யோகம்' நூலை, இப்பொழுதுள்ள 'கார்ப்பரேட் சாமியார்களின்' ஆரவாரத்துக்கிடையில் வாசித்துப் பார்ப்பவர்கள் இதை உணர முடியும். அதேபொழுது 'எண்ணத்தை நிறுத்துதல்'(stop-thought-process) என்னும் மனவியல் மருத்துவ உத்தியைக் குறித்துக் கூறியவர்கள்(மனவியல் மருத்துவர் மாத்ருபூதம் போன்றவர்கள்) சமாதி யோகத்தை ஏற்றுக் கொள்வார்களா என்றும் தெரியவில்லை. * ஆனால் ஒன்று உறுதி. கல்கியின் 'சிவகாமியின் சபதம்' 'பொன்னியின் செல்வன்' போன்ற வரலாற்றுப் புனைகதைகளின் அருமையை 'வரைகலைப் புதினம்' வாசிக்கும் இளைய தலைமுறை உணர முடியுமா? குழப்பமான சுவையைக் கொண்ட அதிரடி உணவை வாயிலும்(junk food) வரைகலைப் புதினங்களை மூளையிலும் திணித்துக் கொண்டிருக்கும், 'ஒருபொழுதும் வாழ்வதறியா' இளைய தலைமுறையே நீ வாழ்க! *** குறிப்புகள்: 1. இத்தொடரும் கருதுகோளும் பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி) - சோ.சிவபாதசுந்தரம் ஆகியோருடையவை. 2. Chandu Menon: T.C. Sankara Menon, Sahitya Academi 1974, p.31. quoted in பெ.கோ. சுந்தரராஜன்(சிட்டி), சோ. சிவபாதசுந்தரம், தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும், வளர்ச்சியும். முதற் பதிப்பு, 1977. ப.16. 3. உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்து, அளவுக்கதிகமான நேரத்தைத் தொலைக்காட்சி பார்ப்பதிலேயே ஒழித்துக்கட்டுபவ'ர்களை 'couch potatoes' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். **** நன்றி: திண்ணை.காம்
வண்ணநிலவன்: ஜே.கே மொழிந்ததுபோல் கணங்களை எழுத்தால் வளைத்துப் பிடித்தவர் · தேவமைந்தன் கணங்கள், காலவெள்ளத்தில் நீர்க்குமிழிகள் போல் உடனே தோன்றி உடனே மறைய வல்லவை. அவற்றை எழுத்தால் பிடிப்பது என்பது எல்லோருக்கும் எளியதன்று. எளிமையாக வாழ்ந்து எளிமையாகப் பழகி அன்புடன் வாழக்கூடிய எழுத்தாளர்களுக்கே அது கைவரக் கூடும். அவ்வாறு வாழ்ந்த வல்லிக்கண்ணன் அவர்களால் வண்ணநிலவன் என்று புனைபெயர் சூட்டப்பெற்றவரான இராமச்சந்திரன், அவற்றைத் தன் எழுத்தால் வளைத்துப் பிடிக்கவும் செறித்து வைக்கவும் சேமிக்கவும் முயல்கிறார். ‘நாலாறு மாதமாய்க் குயவனை(படைத்தோன்) வேண்டி’ உலகுக்குக் கொண்டுவந்த ‘தோண்டி’யை(உடம்பை) ‘நந்தவன’த்தில்(உலகத்தில்) ஓர் ஆண்டி(“கொ[ண்]டுவந்த தொன்றுமி[ல்]லை / இனிக் கொ[ண்]டுபோவது மொன்றுமில்லை” என்று வாழ்வதால் மனிதனை ஆண்டி என்றார் சித்தர்) கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்த கதையாய் விபத்தேபோல் பிறந்து, வேறு வழியே இல்லாமல் வளர்ந்து, வாழ்ந்த கணங்கள் வசப்படாததால் பிறந்தது முதலே செத்து, ஒருநாள் தாங்களே முற்றிலுமாகத் தொலைந்தே போய்விடும் மனிதர்களிடையே கணங்களைச் செறித்து வைக்கவும் சேமிக்கவும் இயன்றால் தங்கள் படைப்பில் உறைந்துபோக வைக்கவும் முயற்சி செய்பவர்கள் இல்லாமலா போவார்கள்? இவ்வாறு, கணங்களை எழுத்தால் வளைத்துப் பிடிக்கும் ‘விக்கிரமாதித்திய’ முயற்சியினூடே விளையும் தவிப்பை, ‘மனச் சிற்பங்கள்’ என்ற கதையில் படர்க்கைக் கூற்றாக வண்ணநிலவன் பதிவு செய்திருக்கிறார். “பொதுவாகவே வாழ்வு கடந்த கால நினைவுகளிலும், நிகழ்காலச் சம்பவங்களிலுமாக அல்லாடிக் கொண்டிருக்கிறது. நினைவிலும் நிஜத்திலுமாக நாட்கள் கழிகின்றன. நிஜம் நினைவுச் சருகாகி மனதை நிறைக்கிறது. இது மனதின் அவஸ்தையா, வாழ்வின் அவஸ்தையா என்பதே புரிவதில்லை. சம்பவங்களின் தொகுப்பு நாளாவட்டத்தில் நினைவுகளாய் செமித்து, நிகழ்காலத்தில் மனமொன்றவிடாமல் சஞ்சலப்படுத்துகின்றன. இச்சலனமே இல்லாமல் காலமும் சம்பவங்களும் உறைந்துபோகக்கூடாதா என்று மனம் ஏங்கிற்று. நிகழ்காலமும் நடப்புலகும் உறைந்து, உலகு பனிச்சிற்பம் போலாகி விடக்கூடாதா?.......எல்லோருமே இப்படி நினைவிலும் நடப்புலகிலுமாக உழன்று உழன்று சஞ்சலப்படுகிறார்களா? ஆனால் அது தன்னை மட்டுமே சுற்றிச் சுற்றி வரும் துக்கமென்று நினைத்துக்கொள்வது அவனுக்கு இதமாக இருந்தது. மற்றவர்கள் ஏதோ முடிவுக்கு வந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த முடிவில் நின்று கொண்டுதான் காரியமாற்றுகிறார்களென்பது துல்லியமாகத் தெரிகிறது. அந்தத் தர்க்கநிலை தன் மனதுக்கு மட்டுமேன் கூடிவரவில்லை என்பது அவனுக்கு வெகு விசித்திரமாக இருந்தது. கடந்த காலத்திய நினைவுகள் தரும் அவஸ்தையை அந்த முடிவு நிர்த்தாட்சண்யமாகச் சுருக்கிவிடும் என்ற யுக்தி தோன்றியது. எல்லோருமே கடந்த காலத்தின் துயர நினைவுகளோடுதான் வாழ்கிறார்கள். ஆனால் நிகழ்காலத்தோடு ஒன்றியைந்திருப்பதுபோல் பாசாங்கு செய்கிறார்கள்.” ‘மனச்சிற்பங்கள்’ கதை வெளியான இதழ் - ஆகவும் பொருத்தமாக, கணங்களின் முழுமையான ‘காலம்’ என்ற பெயரையே தாங்கியதும் இன்னொரு வியப்பு. ஒவ்வொரு உவர்நீர்த்துளியும் கூட்டிணைந்திருப்பதுதானே கடல்? கடல் என்பது அந்த ஒவ்வொரு உவர்நீர்த் துளியும்தானே? கடலிலுள்ள அந்த ஒவ்வொரு உவர்நீர்த்துளியும் தான் கடலல்ல; கடல் முற்றிலும் வேறானது என்று நினைப்பது போன்ற சஞ்சல உணர்வுடன்தானே ஒவ்வொரு மனிதரும் வாழ்ந்து சலிக்கிறோம்! கடலை எண்ணி உவர்நீர்த்துளி தன்னை வேறுபடுத்திக்கொண்டு ஏங்குவதேபோல் நாம் அதைக் கடவுள் என்றாலென்ன! ‘Collective Unconsciusness’ என்றாலென்ன? ஏனோ, மெய்யுணர்வாளர் ஜே.கே. நினைவுக்குள் வருகிறார். ஜே.கே. என்று உலகத்தாரால் அன்புடன் அழைக்கப்பெறும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, இந்த - கணங்களை வளைத்துக் கையகப்படுத்தும் முயற்சியை உறுதிப்படுத்தி வைத்தார். ஒவ்வொரு சொற்பொழிவின் தொடக்கத்திலும் இந்த முயற்சியில் விடாது இறங்கியவர் அவர். அவ்வாறே நம்மைச் செய்து பார்க்கவும் தூண்டியவர். ‘Living in the Present’ என்ற தன் வாழ்வியல் கோட்பாட்டை வெறும் கருதுகோளாகக் கொள்ளாமல், ஒவ்வொருவரும் செயல் வடிவமாக்கிக் கொள்ள, அவர் அவ்வாறு பரிந்துரைத்தார். அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு நம்மைச் சூழ்ந்து நிகழும் ஒவ்வொன்றையும் எழுத்தில் பதிவு செய்து பார்க்க அறிவுறுத்தினார். ‘Conditioning And The Urge To Be Free’ என்ற பொழிவில் முதல் மூன்று பத்திகள் அதாவது ஐம்பத்தாறு வரிகளில் அவர் அந்த வித்தையைச் செய்து காட்டியிருக்கிறார். அதைப் புரிந்து கொண்டால், வண்ணநிலவன் ஆங்காங்கே குறிப்பிடுவதுபோல், விண்மீன்கள் செய்யும் ஒலியையும் நாம் கேட்க முடியும். மரஞ்செடிகளின் மணத்தையும் - ஊரைத் தாண்டிய, பனைவடலிகளின் சொந்தமான தேரிக்காட்டு மணலானது - நிலவொளியில் குளிர்ந்துபோயிருக்கும் பொழுது வெளிவிடும் விவரிக்க முடியாத மணத்தையும்; விடிவதற்குச் சற்று முன்னால் வெளிவிடும் பச்சைப் பனை ஓலைகளின் வாடையையும்; நல்ல மத்தியான வேளையில் வெளிவிடும் - எண்ணெயில் வறுத்த முறுக்கு வற்றலின் மணத்தையொத்த ஒருவிதமான காரநெடியையும் [அதே மணம் தன் தாயின் உடல்மணமாக விளங்கிய ஞாபகத்தையும் - ‘மெஹ்ருன்னிஸா’ கதை); ஆடுவளர்க்கும் கீழ்நடுத்தரக் குடும்பத்து வீட்டு வாசல் பக்கமிருந்து திடீரென்று வீசும் ஆட்டுப்புழுக்கை மணத்தையும் உணர - முகர முடியும். ‘எங்காவது குரைக்கும் நாய்கள், எப்போதாவது கேட்கும் சைக்கிள் மணிச் சத்தம்,’ ‘தோட்டத்தில் பனை ஓலைகள் காற்றில் உராயும் சத்தம்.’ ‘ஆடு, தூணில் கட்டியிருந்த அகத்திக் கீரையை மொறுக் மொறுக்கென்று அவசரத்தோடு கடித்துத் தின்கிற சத்தம்’ முதலான பற்பல ஓசைகளைச் செவிமடுக்கவும் முடியும். அடிவானத்தின் மேலே நிலவு வரும் வேளையில் பூவரச மரங்கள் காற்றில் லேசாக அசைந்து கொண்டிருக்கும் கோலம்; அரசியல் தொண்டன் வீட்டு வாதமடக்கி மரத்தடியில் தொய்ந்துபோன ஒரு நார்க்கட்டிலும், முதுகுப்பட்டை இல்லாத இரண்டு ஸ்டீல் சேர்களும் கிடப்பதும், அந்த வீட்டுக்கு உடையவன், தன்னைப் பார்க்க வருபவர்களை அந்த நாற்காலிகளில் அமர்த்திவிட்டு, தான் அந்த நார்க்கட்டிலின் மிகவும் தொய்ந்துபோயிருக்கும் மத்திய பகுதியில் உட்கார்ந்து சமாளிப்பதும் பிறவும் கண்டுணர முடியும். இந்தக் கண்டுணர்தல்(observation) வண்ணநிலவன் கதைகளில் சற்றுத் தூக்கலாகவே உள்ளமைக்குத் ‘தாய்’ இதழில் வெளிவந்த ‘வலி’ கதை, பானைச் சோற்றுக்கு ஒரு பதம் மட்டுமே. இந்தக் கட்டுரை வெளிவரும்பொழுது முதிய(அறுபது வயதும் அதற்கு மேலும்) வயதில் இருப்போர்க்குத் தெரிந்த ஒன்றை வண்ணநிலவன் மறவாமல் பதிவு செய்திருப்பதையும் இங்கே குறிக்க வேண்டும். இவர்களின் இளம் வயதில் இவர்கள் பார்த்துப் பழகிய இரயில்வே ஸ்டேஷன்களின் ‘ஜீவன்,’ இன்றைக்குள்ள தொடர்வண்டி நிலையங்களில் உயிர்த்துக்கொண்டிருக்கிறதா என்ன? நான் கோவை அரசினர் கலைக் கல்லூரியில் இளங்கலை அரசியல் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் கல்லூரிக்கு மேற்கே இருந்த கோவை இரயில்வே நிலைய ‘ஹிக்கின்பாதம்ஸ் ஸ்டா’லில் ஆக்கபூர்வமாகக் கழித்த கணங்களும்; அங்கே ‘மாணவர் சலுகை’யில் ஆறே ஆறு ரூபாய்க்கு வாங்கிய ‘Complete Shakespeare’(E.L.B.S. வெளியீடு) புத்தகமும் மறக்கக் கூடியவையா? இது “பழசைப் பேசும்” பழக்கமல்ல. ‘டென்ஷனும் அவசரமும்,’ உண்ணும் உணவில்கூடக் கைவைத்துவிட்ட - கைவைக்க விட்டுவிட்ட இன்றைய இளந்தலைமுறைக்கு, இப்படி நீங்களும் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் வாழ்ந்து பார்க்கவும் பதிவு செய்யவும் முடியும் என்று அக்கறையோடு பரிந்துரைக்கிற முயற்சி... அவ்வளவே. வண்ணநிலவன் பதிவிலுள்ள - இரண்டு தலைமுறைக்கு முந்திய(30 ஆண்டுகள் கொண்டது ஒரு தலைமுறை ) இரயில்வே ஸ்டேஷனைப் பார்த்துவிட்டு இக்கட்டுரையை நிறைவு செய்வோம்... “அந்த ஊரைப் போலவே அந்த ஸ்டேஷன் கூட மாறித்தான் போய்விட்டது. ஹிக்கின்பாதம்ஸ் ஸ்டாலில் இப்போது யாரோ இருந்தார்கள். ஸ்டாலுக்கு எதிரே பிளாட்பாரத்தின் கூரையில் தொக்கிக் கொண்டிருந்த ‘இந்த வாரம் ஆனந்த விகடன் வாசித்தீர்களா?’ போர்டைக் காணவில்லை. உடனே மனம் நழுவிக் கீழே விழுந்து விட்டது. அந்த போர்டு இலாமல் அந்த ஸ்டேஷனை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அது இல்லாமல் ஸ்டேஷன் மூளியாகிவிட்டிருந்தது........ கூட்ஸ் வேகன்கள் பின்னோக்கி மெதுவாக நகர்ந்து சென்று கொண்டிருந்தன. பின்புறமிருந்த வேகன்களில் ஒன்றில் ஒரு ரயில்வே தொழிலாளி தொற்றிக்கொண்டு பச்சைக் கொடியை வேகமாக ஆட்டிக் கொண்டிருந்தான். அவன் கொடியை ஆட்டிய வேகத்துக்கும் அந்த வேகன்கள் நகர்ந்து சென்ற வேகத்துக்கும் சிறிதும் இசைவே இல்லாமல் இருந்தது...... அரசமரத்தைச் சுற்றி வட்டமான சிமெண்ட் மேடை இருந்தது. அவ்விடம் பிளாட்பாரத்தின் ஒருகோடிதான் என்றாலும் ஸ்டேஷனுக்குள் இன்னும் அரச மரத்தைப் பேணி வந்தது அவனுக்கு ஏதோவொரு இதத்தைத் தந்தது. எல்லாமே இப்படிப் பழமையும் புதுமையுமாகக் கலந்துதானிருக்கின்றன போலும்... காற்றில் நிலக்கரி மணம் மிதந்து வந்தது. எங்கோ பக்கத்தில் நீராவி இஞ்சின் நின்று கொண்டிருக்க வேண்டும்...... ஹிக்கின்பாதம்ஸ் ஸ்டால்களுக்கும் ரயில்வே ஸ்டேஷன்களுக்கும் விவரிக்கவொண்ணாத மதுரமான தொடர்பு இருப்பதுபோல், ரயில்வே பிளாட்பார வெண்டர்களுக்கும், ஸ்டேஷன்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதுபோல் தோன்றியது.” பார்வை நூல்: வண்ணநிலவன் கதைகள். சந்தியா பதிப்பகம், 52, முதல் தளம், நான்காவது தெரு, அஞ்சுகம் நகர், அசோக் நகர், சென்னை - 600 083, தமிழ்நாடு. E-Mail: piththan@yahoo.com நன்றி: திண்ணை.காம்
'தன்னுணர்வு': பெருஞ்சித்திரனாரின் தமிழாக்கம் - தேவமைந்தன் மிகவும் அண்மையில், புதுச்சேரி - பிரெஞ்சு நிறுவனத்தில் நிகழ்ந்து நிறைந்த மொழியாக்கக் கருத்தரங்கு வரை, மொழியாக்கம் பற்றிய கவலைகள் - பரிந்துரைகள் பற்பல வெளிவந்துள்ளன. சென்னையில் லதா ராமகிருஷ்ணன் முயற்சியில் உருவான மொழிபெயர்ப்பாளர் சங்கக் கலந்துரையாடல்களையும் அவற்றில் பகிர்ந்துகொள்ளப்பெற்ற கருத்தாடல்களையும் நண்பர்கள் வழி அறிந்திருக்கிறேன். மொழியாக்கங்களில் இதுவரையிலும் நாம் அறிந்த வகைகளுக்கப்பால் மொழியாக்கவகை ஒன்றுண்டு. தன் உள்ளத்தில் ஊறிய கருத்துகளின் ஒத்தவகைக் கருத்தாடல் பிறமொழி சார்ந்த அறிஞரொருவரின் நூலிலும் வெளிப்படக் கண்டு கிளர்ந்து, அதைத் தழுவித் தனக்கே உரிய மொழிநடையுடனும் தற்காலத்திற்கேற்ற எடுத்துக்காட்டுகளுடனும் தன்மொழியில் புதிய நூல் எழுதுவதுவே அது. அவ்வகைப்படிப் பெருஞ்சித்திரனார் படைத்த நூல் 'தன்னுணர்வு.' ஆங்கிலத்தில் எமர்சன் உருவாக்கிய 'Self Reliance' என்பதன் தமிழாக்கம். 17-01-1977 அன்று சென்னையில் 'தென்மொழி'யால் வெளியிடப்பெற்றது. வழக்கமான மொழியாக்கத்துக்குத் 'தன்னுணர்வு' வேறுபடுதலை நூலின் தொடக்கத்தில் உள்ள பாடலே காட்டி விடுகிறது. "இடுக நும் பிள்ளையை மாமலை மேல்;விளை யாடுதற்கே விடுக செந் நாய்களின் பாலினை மாந்தி வளர்க அவன்! கெடுக வன் அச்சம்! நரியொடும் நாயொடும் கேண்மையுற நடுக நீ நன் மறம் நெஞ்சில், வினையில், நரம்பிலுமே!" என்பதுவே அப்பாடல். மொழிதல் எவ்வாறு இருந்தால் அது மனிதத்திலிருந்து அறிஞத்துக்கு உயர்வதாய் விளங்கும் என்பதற்கு இப்பகுதி: "நமக்குள் தோன்றும் பொருளை நாம் உள்ளது உள்ளபடியே கூறுவோமாகில், நம் சொல்லிலும், கருத்திலும் மிகுந்த உண்மையும், ஆழமும் மட்டுமன்றித் தகுதியும் செழுமையும் உறுதியாக இருக்கும்......உன் காலத்தில், உன்னைச் சுற்றியுள்ள மக்களுக்கென்று, உன்னுள்ளே பொதிந்து வைத்துள்ள ஆற்றலையும் அதன் நிலையையும் மலர்ந்து பரவச்செய்." வாழ்க்கையின் நோக்கம் எது? ஈகையா.. இலவசத் திட்டங்களா? "ஏழைகளுக்கு உழைப்பதே உன் வேலை என்று சொல்லாதே! அதுவே அறம் என்றும் நினையாதே! அவர் தமக்கிருக்கும் உண்மையான ஆற்றலை மறக்கச் செய்து, உன் ஈகையால் மாய்ந்து போகச் செய்வது, உன் வாழ்வையும் வீணடித்து, அவர் வாழ்வையும் வீணடிப்பது ஆகும். நோயாளிகளும் பித்தர்களும் சோற்றுக்கடைக்காரனுக்கு இரண்டு மடங்கு விலை கொடுப்பதுபோல் அறங்கள், மக்கள்தம் குற்றங்களை மாற்றும் வழியென்று விலை தந்து அவற்றைப் போக்க முயல்கின்றனர். நம் வாழ்க்கையின் நோக்கம் வாழ்க்கையே! ஊரார் மெச்சுதல் வேண்டுமென்பதன்று." மெய்யான துறவியைப் பற்றியோ, அறிஞனைக் குறித்தோ அவர் வாழும் வட்டத்துக்கு முப்பது கல்(மைல்) தொலைவுக்கு அப்பாற்பட்டவர்களே அறிவார்கள் என்று இராமகிருஷ்ணர் கூறினாராம். ஏனென்றால் உருப்படியாக வேலைபார்க்கும் எவரையும் அவரைச் சுற்றியுள்ள சமுதாயம் அவ்வாறு செய்ய எளிதில் விட்டுவிடாது. இலவச மேற்பார்வை பார்த்து, வேண்டாமலேயே திறனாயும். அதைப் பெருஞ்சித்திரனாரின் 'தன்னுணர்வு' இவ்வாறு கூறுகிறது: "உன் கடன் என்ன என்பதை உன்னைக் காட்டிலும் உன்னைச் சுற்றியுள்ள மாந்தர் அறியார்...உலகத்தாரின் விருப்பப்படி நடப்பது மிகவும் எளியதே. அதேபோல் உலகத்தாரை விட்டொதுங்கி, நாம் நினைப்பதுபோல் நடப்பதும் எளிதே! ஆனால் உலகத்தார் நடுவில் இருந்துகொண்டே நம் உள் எண்ணப்படி நடப்பதுதான் கடினம். ஆனால் அதை நிறைவேற்றுபவன் மாந்தரில் மேலானவன். உனக்கு உடன்பாடற்ற செயல்களில் உன்னை ஈடுபடுத்திக் கொள்வது உன் உள்ளத்தின் ஆற்றலைச் சிதற அடிப்பதாகும்." சில ஆண்டுகளுக்கு முன்னால் 'political complex' என்ற கலைச்சொல் சமூக உளவியலாரால் அடிக்கடி சொல்லப்பட்டது. தனக்கெனப் பாதை வகுக்காமல், தன் அரசியல் கட்சித் தலைவன் வகுத்த பாதையை மட்டுமே பின்பற்றுவதும், அவன் வகுத்த கொள்கையையே தன் கொள்கையாகப் பின்பற்றுவதும் சொல்லுவதும், எந்தக் கேள்விக்கும் தன் கட்சித் தலைவன் சொல்லும் பதிலையே சொல்லுவதும் அந்த மனச்சிக்கல் ஆகும். பெருஞ்சித்திரனார் எழுதினார்: "உன் வினைத் திறத்தைக் காட்டி உன்னை அறிமுகம் செய். ஒரு கூட்டத்தைக் காட்டி உன்னைக் காட்டாதே. ஒரு தனிப்பட்ட கூட்டத்துக்கு இணங்கியிருப்பது வெறும் குருட்டுச் செயலே. நீ எந்தக் கூட்டத்தைச் சார்ந்தவன் என்பது எனக்குத் தெரிந்தால் நீ செய்யவிருக்கும் சொற்பொழிவும் எனக்கு முன்பே தெரிந்ததாகவே இருக்கும். நீ பேசத் தொடங்கினால், உன் கூட்டத்தாரின் வழக்கமான எண்ணங்களைத் தவிர, உன் உள்ளத்திலிருந்து வந்ததாக ஒரு சொல்லும் இராதே! நீ ஒரு கட்சிக்கென்று வைக்கப்பெற்ற வழக்குரைஞன் ஆகிவிடக் கூடாது." 'வாக்குத் தவறுதல்' என்று ஒன்றைச் சொல்வார்கள். 'சொன்ன வாக்கைக் காப்பாற்றாதவர்' என்று ஒருவரை, "சொன்ன வாக்கைக் காப்பாற்றாத பேர்வழிகள்" பழிப்பதை உலகியல்பாக நாம் பார்க்கிறோம். சென்னைத் தமிழிலும் சொல்மாறி என்பது 'சோமாரி' என்று வழங்கியது. ஆனால் அதன் உண்மை என்ன? "பிறரிடம் முன்னே ஒன்று சொல்லிவிட்டாய் என்பதற்காக, நீ இப்போது வேறொன்றைச் சொல்ல அஞ்சாதே. உண்மையை எப்பொழுதும் போலியின்மேல் வீசியெறியலாம். முன்பின் முரணாகி விடுமோ என்ற நினைவுப் பிணத்தை உன் உள்ளத்தால் கட்டி இழுத்துத் திரியாதே. முன்பு தவறென்று நீ சொன்னவை இப்பொழுது சரியென்று பட்டால் உடனே ஒப்புக்கொள்." ஒருவகையான ஆதிக்க மனப்பான்மையைச் சிலர் தம்மைச் சூழ்ந்தாரிடையிலும் தமக்குச் சமமானவர் இடையிலும் மிக நுணுக்கமாகக் கடைப் பிடிப்பார்கள். பாதிப்புக்கு உள்ளாகுபவருக்கே அது தெரியாது. பல காலங் கழித்து அது தெரிய வரும்பொழுது உறைக்குமே.. அதற்குக் கொளுத்தும் கோடைவெயிலும் ஈடாகாது. இன்றுள்ள 'மொபைல்' எனப்படும் செல்பேசி நாகரிகத்திலும் அது உள் நுழைந்துள்ளது. அவர்கள், தங்கள் செல்பேசிக் காசைச் செலவழித்து, உங்களிடம் பேசமாட்டார்கள். நீங்கள்தான் அவர்களிடம் பேசவேண்டும். அதற்குமேல் ஒருபடி செல்பவர்களும் உள்ளார்கள். அவர்கள் உங்களுக்குத் 'துண்டிக்கப்பட்ட அழைப்பு'(missed call) அனுப்புவார்கள். நீங்கள் உங்கள் காசைச் செலவுசெய்து அவர்களுடன் பேசவேண்டும். கொஞ்சமாகப் பேசுவார்களா? அவர்கள் காசுக்குச் செலவில்லையே! தாராளமாகப் பேசுவார்கள். உங்கள் பொன்னான பொழுதும், உங்கள் குடும்பத்துக்குப் போய்ச் சேரவேண்டிய காசும், 'மொபைல்' நிறுவனங்களுக்குத்தான் போகும். இதே ஆதிக்க மனப்பான்மையைக் கருத்தாளுமையிலும் பார்க்கலாம்; பணியாளுமையிலும் பார்க்கலாம். உண்மையான ஆற்றலும் மெய்ம்மையும் உள்ளவர்கள் இந்த முறையில் நடந்து கொள்ளக் கூசுவார்கள். தாங்கள் மிகவும் வளர்ந்துவிட்டவர்களாகவும் பெயர் புகழ் பெற்றுவிட்டவர்களாகவும் நினைத்துக்கொண்டு, தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்பவர்கள், மெய்யாகத் தாழ்வு மனப்பான்மையின் சின்னங்கள்...... பெருஞ்சித்திரனாரின் தன்னுணர்வு இவ்வாறு சொல்லுகிறது: "போலி நட்பையும், பொய் வணக்கங்களையும் இரக்கமின்றி வெட்டியெறி. தாங்களும் ஏமாந்துகொண்டு, பிறரையும் ஏமாற்றிக்கொண்டு, உன்னையும் ஏமாற்ற வரும் உன் உறவினர்கள், நண்பர்கள்தம் விருப்பப்படி நடவாதே......" "மாந்தர் ஒருவர்க்கொருவர் ஒருவரைச் சார்ந்துகொண்டும் ஒருவர்பால் ஒருவர் கையேந்திக் கொண்டுமே உள்ளனர். நமது குடும்ப அமைப்பில் பெருமையில்லை? நம் கல்வி, தொழில், திருமணம், கொள்கை முதலிய எதையும் நாம் வரையறுத்துக் கொள்வதில்லை. வலிந்த ஒரு சிலரே அவற்றை வரையறுக்கின்றனர். நாமெல்லாம் சமையலறைக் காவலர்கள் ஆகிவிட்டோம். சூழ்நிலையை எதிர்த்துப் போகும் ஆற்றல் நமக்கில்லை." கடவுள் வழிபாடு குறித்துத் திட்டவட்டமான கருத்துகளைத் 'தன்னுணர்வு' முன்வைக்கிறது: "இப்புடவியெங்கும் நீக்கமற விரிந்து சிறகார்த்து சுடர்வீசிக் கொண்டிருக்கும் ஒரு பேராற்றல் எதுவோ, அதுவேதான் நம்முடைய உள்ளத்திலும், உடலிலும் ஊடுருவிப் பாய்ந்துகொண்டிருக்கிறது.......நமக்குள்ள அறிவு நம்மை நாம் கண்டு கொள்ளவே அன்றி, நம்மை உண்டாக்கிய பேராற்றலை ஆராய்ந்து கண்டு கொள்வதற்காகத் தரப்படவில்லை. அதை ஆராயும்போது அது நிலைத்து விடுகின்றது. அந்தப் பேராற்றலைப்பற்றி நாம் அதிகமாகச் சொல்ல இயல்வது இவ்வளவே." [புடவி=பிரபஞ்சம்] "தனக்கென நன்மை வேண்டுமென்று இறைவனை வேண்டுவது இழிவும், திருட்டுத்தனமும் ஆகும். தனக்குண்டான வினைப்பாடுகளை உண்மையாகச் செய்வதுதான் இறைவனை வழுத்தும் மெய்யான முறை......நாம் இறைவனை நோக்கி வருந்தி வேண்டுவதும் அவனை நொந்து கொள்வதும் நம் நம்பிக்கைக் குறைவையும், உள்ளத்தின் உறுதியின்மையுமே காட்டுகின்றன." "உள்ளம் பேராற்றலின் இருக்கை; அது இறைவனின் படுக்கை. அதை விட்டு விட்டுப் பிறிதோரிடத்தில் இன்பத்தையும் நலத்தையும் வறிதே தேடித் திரிவதால், தன்னுள்ளத்து வீற்றிருக்கும் அரிய ஆற்றல் குன்றி விடுகிறது என்று ஒருவன் அறிந்துகொண்டு அவன் தன் அறிவையும் உள்ளத்தையுமே நம்பி நடப்பானாகில், அவன் வாழ்க்கை வளைவுகளெல்லாம் நேராக்கப் பெறுகின்றன. தன்னையறிந்தவுடன் அவன் நிற்கத் தொடங்குகின்றான்." இறுதியாக, உண்மையான செல்வம் எது என்பதற்குப் பெருஞ்சித்திரனார், எமர்சன் எழுதிய 'Self Reliance' நூலைத் தழுவிக் கருத்துரைத்திருப்பதை அறிவோம்: "செல்வம் என்று பொதுமக்களால் கூறப்படும் ஆரவாரப் பருப்பொருள்கள், சூதாடுபவர்களின் கைகளில் விழுவதுபோல ஒருகால் ஒருசேர வந்து விழும். மறுகால், அவரை விட்டு ஒருசேரப் போகும்.("கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம், போக்கும் அதுவிளிந் தற்று" என்ற திருக்குறளை ஓர்க.) இவற்றைத் துகள்களாக எண்ணு. உன் உள்ளத்தின் வளர்ச்சியும் தூய்மையுமே, உன் உண்மையான செல்வம். அவைதாம் உனக்கு அமைதியைத் தரும்; உன்னை வெற்றி அன்னையின் மடியில் கொண்டுபோய்க் கிடத்தும். உன்னை நீயே அறி; உன்னை நீயாகவே ஆக்கிக் கொள்." **** நன்றி: திண்ணை.காம்
கொழுக்கட்டைச் சாமியார் கதை -தேவமைந்தன் கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டி இன்று சிற்றூர்கள் பல இருக்கின்றன. அவற்றுள் ஒன்றில்தான் கொழுக்கட்டைச் சாமியார் மடம் இருக்கிறது. அவருக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? பொதுவாக, மக்கள் ஒரு பழமொழி சொல்லுவார்கள். நதியின் வரலாற்றையும் சாமியாரின் வரலாற்றையும் விசாரிக்கக் கூடாது என்று. அப்படியே விசாரித்தாலும் கிடைப்பது உண்மையா என்று யாருக்குத் தெரியும்! ஆனால் கொழுக்கட்டைச் சாமியாருக்கு ஏன் அப்படியொரு பெயர் வந்தது என்று ஓர் உள்ளூர் அம்மாள் மூலம் எனக்குத் தெரிய வந்தது. ஆஜானுபாகுவான அவர் வடநாட்டிலிருந்து வந்தவராம். வந்தபொழுது, அவருக்குத் தமிழ் தெரிந்திருக்கவில்லை. வந்தபிறகும் தமிழை முழுமையாகத் தெரிந்துகொள்ளும் விருப்பமும் இல்லை. இந்தச் சனங்களுக்கு 'கொஞ்சம் கொஞ்சம்' தமிழ் தெரிந்தால் போதும் என்று கொழுக்கட்டைச் சாமியார் கணக்குப் போட்டார். நம்ம சனங்களைப் பற்றி அவர் கணக்கு இதில் மட்டுமல்ல, பலவற்றிலும் தவறானது பற்றி இந்தக் கதை, தான் முடிவதற்கு முன் வாக்குமூலம்போல் சொல்லிவிடப் போகிறது... அப்பொழுதுதான் தெரியும், நம்ம தமிழ்ச் சனத்தை ஏமாத்த நினைக்கிறவங்க கதி என்ன ஆகும் என்பது. சும்மாவா பாடினாரு நம்ம எம்ஜியாரு? "தவறு என்பது தவறிச் செய்வது / தப்பு என்பது தெரிந்து செய்வது / தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும் / தப்பு செய்தவன் வருந்தி யாகணும்"ன்னு.. கொ.சா. திருந்தலை..வருந்தவுமில்லை.. கடைசி'ல என்ன ஆச்சு? *** அந்த ஊருக்குக் கையில் காலணாகூட இல்லாமல் அவர் வந்தார். அந்தக் காலத்திய மரக்காணம் சாலையான இந்தக் காலத்திய கிழக்குக் கடற்கரைச் சாலையில், இப்பொழுது புகழ்பெற்றிருக்கும் 'புரோட்டா'க் கடைபற்றி ஒருவரும் கனவுகூடக் கண்டிருக்க மாட்டார்கள். தற்காலம் பிரான்சிலிருந்து வருபவர்கள் ''மெனக்கெட்டுக் கார் போட்டுக் கொண்டு போய்," குறைந்த அளவு பத்துப் புரோட்டாவாவது குருமா மற்றும் பட்டாணிக் கலவையோடு காலிபண்ணி வருகிறார்கள். அதே இடத்தில் - அன்று, கொழுக்கட்டைகளைக் கூடையிலேந்திக்கொண்டுபோய் மரத்தடியில் வைத்து விற்றுப் பிழைத்திருந்தாள் ஒரு பாட்டி. வியாபாரத்துக்குப் போவதற்காக கொழுக்கட்டை சுட்டுவிட்டு குடிசைக்கு வெளியில் வந்தாள் அவள். அங்கே பசியோடு நின்றிருந்தவர், மொழி தெரியாததால், அவர் அந்தப் பாட்டிமுன் கையை ஏந்தினார். பாட்டி உடனே வீட்டினுள் ஓடி("ஓடி" என்பது, எம்.கே.டி. பாகவதர் காலப் படங்களை நினைவூட்டவேண்டும்; இல்லையென்றால், அவ்வாறு நினைவூட்டப் பெறாதவர்கள், சென்ற நூற்றாண்டின் இறுதியில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்!) சூடான கொழுக்கட்டைகளை ஒரு வாழைநறுக்கில் இட்டுக் கொண்டுவந்து அந்த வடநாட்டுக்காரரின் சிவப்புக் கைகளில் தர, அவர் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.(ரொம்பவும் சூடோ?) நன்றியுணர்வு என்று அந்தப் பாட்டி எடுத்துக் கொண்டாள். சாப்பிட்டதும், அவருக்குக் கொழுக்கட்டை மிகவும் பிடித்துப்போனது. பாட்டியிடம் அந்தப் பலகாரம் என்ன என்று இந்தியில் கேட்டார். கொடுத்த பலகாரம் பற்றிக் கேட்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள மொழி தேவையா என்ன?(பிரகாஷ்ராஜ் கவனிக்க) 'கொழுக்கட்டை' என்று அழுத்தந் திருத்தமாகச் சொன்னாள் பாட்டி. அவரே அப்படித்தான் இருந்தார் என்பது, வேறு செய்தி. 'கொல்லுக்கட்டாய்' என்று உரக்கச் சொல்லிப் பார்த்தவர், பாட்டியால் திருத்தப்பட்டு 'கொல்லுக்கட்டை' 'கொள்ளுக்கட்டை' என்றெல்லாம் சொல்லி, மீண்டும் மீண்டும் திருத்தப்பட்டு கொழுக்கட்டை என்று சரியாகச் சொல்ல அரைமணி நேரமாவது ஆகியிருக்கும். இதன் விளைவாக, அந்த ஊரிலேயே தங்கிக் கொண்டு, அவர் திறமையாக 'மேஜிக்' செய்ய ஆரம்பித்து, சனங்களை அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்து மட்டுமல்லாமல் அருகிலுள்ள பட்டணத்திலிருந்தும் ஈர்க்கத் தொடங்கிய காலகட்டத்தில், முதல் 'சிஷ்யை'(தலைமைச் சிஷ்யை)யாக அந்தப் பாட்டிதான் ஆனார்.('ஆனாள்' என்பது, 'ஆனார்' ஆவது.. இப்படித்தான்) தலைமைச் சிஷ்யையே அனுபவசாலி ஆனதால், ஒரு கொழுக்கட்டை விற்று வந்த காசுபோல் பலமடங்கு ஒரு சீடரைச் சேர்த்துக் கொள்வதில் தேறியது. அப்புறமென்ன? மடம் வந்தது. மண்டபம் வந்தது. சீடகோடிகள் தங்குவதற்குப் பெரிய தங்குமிடம் வந்தது. யாருக்கும் தெரியாமல் இன்னும் என்னென்னவோ வந்தன. முன்பே சொன்னதுபோல், 'மொழி'யைச் சிக்கனமாகப் பயன்படுத்தி அருள்வாக்கும் சொல்லத் தொடங்கினார் அவர். அவர் சொல்லும் அருள்வாக்குகளில் கட்டாயம் கொழுக்கட்டை இடம்பெறும். அதை வைத்தே மக்களை - அவரவர்கள் மனதில் இருக்கும் சேதிகளைத் தான் சொன்னதாக அர்த்தப் படுத்திக் கொள்ளச் செய்வார் சாமியார். அப்படியே அவர்கள் குழம்பினாலும், பக்கத்தில் இருக்கும் 'சிஷ்ய'கோடிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு 'வியாக்கியானம்' எடுத்துவிட்டு அசத்துவார்கள். வந்த ஒருவர்கூட அதிருப்தியாகத் திரும்பிச் சென்றதில்லை என்றால் பாருங்களேன்! கொழுக்கட்டைச் சாமியார் என்று அவர் அன்புடன் அழைக்கப்படுவதற்குக் காரணங்களான 'அருள் வாக்கு'கள் சில......... "சாமீய்......எம் புள்ளை கெட்ட சகவாசத்தால சீர்கெட்டு திரியிறான் சாமீய்.. எப்பத்தான் அவன் திருந்துவான்?........" "திருந்துவாம்'மா.. திருந்துவான்..கொழுக்கட்டை நல்லா வேந்ததும் திருந்திடுவான்...போ..போ.. காசுபோட்டுடு.." "சாமி என்ன சொல்றாருங்க?......என்னமோ கொழுக்கட்ட... அத்த இத்த'ன்னுட்டு.." "அதுவா..ஒனக்குப் பக்குவம் இல்ல.. அதான் சாமி வெளக்கமாச் சொல்றது புரியல்ல..கொழுக்கட்டை நல்லா வேந்தாக்காத்தான் நீ அத்தத் தின்னுவே! அத்தப்போலவே ஒம் பையனுக்கு கிரகங்கள்'ல்லாம் கூடி நன்மை செய்யற காலம் வரப்போகுது.. அப்ப அவன் திருந்தீடுவான்'கிறாரு சாமி.. சரி..சரி அந்த உண்டி'ல தாரளமாப் போட்டுட்டுப் போ.. எல்லாம் நல்லா நடக்கும் போ.." (இது பக்கத்தில் உள்ள சீடர் கூற்று) விளக்கவே முடியாத மாதிரி 'சாமி' சொல்லிடுச்சுனா?... கொழுக்கட்டைப் பாட்டிக்கு ஆள் போகும். கொழுக்கட்டை சம்பந்தமான அத்தனை தொழில் நுணுக்கங்களையும் அறிந்தவரல்லவா தலைமைச் சிஷ்யையான அவர்? அப்படித்தான் ஒருநாள் ஆனது... தனக்குப் பிள்ளையே பிறக்கவில்லை என்று முறையிட்ட, பட்டணத்திலிருந்து வந்த பணக்காரப்பெண் ஒருவரிடம் - ''ஒழுங்கா மொறையா கொழுக்கட்டை தின்னா இப்'டியா இருப்ப....?" என்று கொழுக்கட்டை சாமியார் சொல்ல, பட்டணத்துப் பணக்காரப்பெண் அவர் 'வாக்கை' 'அசிங்கமாக'ப் புரிந்துகொண்டு அழ ஆரம்பிக்க, ஆள் போனது. ஓடி வந்தார் மேனாள் கொ. பாட்டி மற்றும் த.சிஷ்யை. ''அட, என்னாத்துக்கும்மா அழற..சாமியார் அப்படியென்ன வாக்குச் சொல்லிப் போட்டாரு?" என்று கேட்க, ப.ப.பெண் அந்த வாக்கைத் தயங்கித் தயங்கிச் சொல்ல, விபரீதம் புரிந்துகொண்டு, சூழ்நிலையை உடனடியாக மாற்றும் விதத்தில் "ஓ!'வென்று உரக்கச் சிரித்து, அதே சமயம், சாமியாருக்குப் பக்கத்திலிருந்த சிஷ்யர்களை "சமாளிக்கத் தெரியாத மடையன்'களா" என்று லேசர் பார்வையில் முறைத்துப் பாட்டி சொன்னதாவது: "அட என்னம்மா..சாதாரணமான விசயம் புரிஞ்சிக்காம..பட்டணத்துல பெறந்து நாலு எழுத்துப் படிச்சுட்டா சாமி வாக்கு விளங்கிடுமா...(ப.ப.பெண் முகத்தில் நம்பிக்கை - இலேசான புன்முறுவல்...இந்த 'சிக்னல்' போதாதா பாட்டிக்கு?).. நம்பணும்'மா, நம்பணும்..நம்பனவங்களுக்குத்தான்நடராசன்...நம்பாதவங்களுக்கு?..(மறந்தே போனது!) சரி..சரி அத்த விடு.. சாமி சொல்லுது.. "ஒழுங்கா மொறையா கொழுக்கட்டை தின்னா" - அப்படின்னா இன்னா தெரியுமா..(பாட்டி மூளையில் பளீர் வெளிச்சம், டிடர்ஜெண்ட் விளம்பரத்தில் வரும் அடுத்த வீட்டு ஆண் சட்டையைப் போல)ஆங்.. ஒவ்வொரு செவ்வா வெள்ளியும் எண்ணத் தேச்சு முழுவோணும்.. கோயிலுக்குப்போய் அரச மரத்த அம்பத்தியோரு தடவை 'கொழந்த பொறக்கணும்'னு தெடமா வேண்டிக்கிட்டு சுத்திச்சுத்தி வரணும்.. குலதெய்வத்துக்கு நேந்துக்கோணும்.. ஏழ'பாழகளுக்கு அன்னதானம் பண்ணோணும்.. இத்தத்தான் சாமியார் 'சூசகமா'ச் சொன்னா புரிஞ்சுக்காம..அவர் பேரே கொழுக்கட்டைச் சாமி..பின்ன எப்படிச் சொல்வாருனு நெனைக்கிறே, நீ போயி........" நன்றியுடன் சிரித்த அந்தப் பட்டணத்துப் பணக்காரப் பெண், ஒரு நோட்டுக்கற்றையை உண்டியில் திணித்துப்போட்டுவிட்டு, கொ.சாமியார் முன் விழுந்து வணங்கி, தன்மேல் அன்புபூண்டு "உரிய" விளக்கம் தந்த தலமைச் சிஷ்யையின் கைகளைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக்கொண்டு காருக்குச் செல்ல, அங்குள்ளோர் அனைவரும் ஆசுவாசப் பெருமூச்சு விட்டார்கள். அப்புறம் கொழுக்கட்டைப் பாட்டி கைகளால் அவர்கள் மொத்துப் பட்டது கிளைக்கதை. இப்படியாக நாள்கள் இனிதே போக, சாமியாருக்கு திடீரென்று கிறுக்குப் பிடித்தது. மண்டபத்தின் சுவர்மேல் ஒருவர் கைவைத்தால் போதும். ஓடிவந்து, 'என்னோட கொழுக்கட்டை!" என்று கூவி அந்த ஆள் சுவர்மேலிருக்கும் தன் கையை எடுக்கும் வரை கலாட்டா பண்ணிவிடுவார். இன்னும் இதுபோல எத்தனையோ தலைவலிகளைக் கொடுக்கத் தொடங்கிய அவர், படிப்படியாக வளர்ந்து மண்டையிடி கொடுக்கவும் தொடங்கினார். தன் சிஷ்யகோடிகளையும் ஏன் தலைமைச் சிஷ்யையும்கூட, "இதெலாம் என் கொழுக்கட்டை.. எல்லாம் வெளிய போங்க!" என்று மூர்க்கமாகத் தாக்கத் தொடங்கவே, அவர்களெல்லாம் கூடி ஒரு தீர்மானத்துக்கு வந்தார்கள். அடுத்த நாள் விடியலுக்கு முன்னால்.. மத்திய அரசுப் பணியிலுள்ள கொ.சா. சீடர் ஒருவர் வந்து என்னை அவசர அவசரமாக அழைத்துச் சென்றார். விவரம் கேட்ட என்னிடம் மூச்சிறைக்க "கொழுக்கட்டை சாமி வேந்துடுச்சு!"(அதாவது முக்தி...கட்டாய ஓய்வோ?!) என்றார். போனேன். மடத்துக்குள்ளோ, மண்டபத்திலோ வைக்காமல். வெளியில் இருந்த வயலருகே அவரைக் கட்டிலின் மேல் வெள்ளைத் துணியொன்றில் போர்த்து(கட்டி!) வைத்திருந்தார்கள். 'அதன்' முன் நின்று கைக்குப்பி வணங்கினேன். கூப்பிடுவதுபோல் இருந்தது. பக்கத்தில் சென்றேன். அந்த மூட்டைக்குள்ளிருந்து "நா'ந்தான்..கொழுக்கட்டை......" என்று ஒரு தீனக்குரல். "பாவிகளா! என்ன செய்தீர்கள்?" என்பதற்குள் அங்கு திரண்டிருந்த சிஷ்யகோ(கே)டிகள் என்னை முரட்டுத் தனமாகத் தள்ளிவிட்டு, கொழுக்கட்டைப் பாட்டி/தலைமை சிஷ்யையின் ஆணையேற்று, அந்தக் கட்டிலோடு அவரைக் கட்டாய சமாதியாக்க(உயிரோடு புதைக்க) எடுத்துச் சென்றார்கள். நொந்துபோய் அங்கிருந்து நான் அகல, அம்மாள் ஒருவர் ஓடிவந்து தடுத்து, சாமியார் சமாதியானதை முன்னிட்டு, கொழுக்கட்டை வினியோகம் நடக்கிறது என்று சொல்லி வாங்கிச் சொல்லுமாறு பணித்தார். போய் வரிசையில் நின்று வாங்கினேன், வாழைநறுக்கில் ஒரு பெரிய கொழுக்கட்டையை வைத்துக் கொடுத்தார்கள். வரிசையை விட்டு வெளியே வந்தேன். அங்கு ஓர் உருவம் விரைவாக என்னை நோக்கி வரவே அருகில் பார்க்க, அதிர்ந்தேன். தலைமைச் சிஷ்யை, தன் 'கோலத்தை' மாற்றிக் கொண்டு, பழைய கொழுக்கட்டைப் பாட்டி ஆகியிருந்தார்கள். என்னருகில் வந்து, காதோடு சொன்னார்கள். "அப்பேன்! ('அப்பன்' என்னும் சொல்லின் திரிபு).. அத்தத் துன்னுடாதே..அது வேகாத கொழுக்கட்டையாக்கும்.." என்று சொல்லிச் சிரித்தார்கள்..சிரித்துக் கொண்டே இருந்தார்கள்.. ** காலை வெயில் உக்கிரமாக முகத்தில் அடிக்க, திடுக்கிட்டு எழுந்தேன். சந்தேகம். "நேற்று ராத்திரி ரொம்ப 'லேட்'டா பொங்கல்தானே சாப்பிட்டேன்.. ஏன் இந்தக் கனவு வந்தது?" "கனவுகள், இரவு உண்ணும் உணவுகளைப் பொருத்துத்தான்('ரு' சரிதானா, சர்சேலில் வாழும் 'புதுவை எழில்'?..) வேறுபடுகின்றன" என்று தீர்க்கமாகத் தீர்மானித்திருக்கும் துணைவியாரிடம் இனிமேல்தான் இந்தக் கனவு பற்றிச் சொல்ல வேண்டும்............... * பின்குறிப்பு: இந்தக் கதையில் அடைப்புக் குறிகளுக்குள் பல சேதிகளைப் போட முதலில் நான் விரும்பவில்லை. நீரோட்டமான வாசிப்புக்கு அது தடை ஆகும் என்றுதான் நம்பினேன். ஆனால், "இவன் வழக்கமாக நிறைய அடிக்குறிப்புகள் போட்டு இலக்கிய, சமூகக் கட்டுரைகள் எழுதுகிறவன்..அந்தப் புத்தியை இதிலும் காட்டிவிட்டான் பார்!" என்று எரிச்சல் அடையக் கூடாது என்றே இந்தக் 'குறைந்தபட்ச இம்சை'யைக் கொடுத்துள்ளேன். வாசித்தவர்கள் பொறுத்தருள்க. **** நன்றி: திண்ணை.காம்