20.12.10

கிரந்தக் கலப்பு: கணிப்பொறிக் காலத்தில் தமிழை அழித்தொழிக்கும் முயற்சி!
- தமிழநம்பி -
1970-ஆம் ஆண்டில் கணிப்பொறி பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்தது. 1980 ஆம்ஆண்டுக்காலப் பகுதியிலிருந்தே கணிப்பொறியில் தமிழைப் பயன்படுத்தி வருகின்றோம். ஆனால், நம் தமிழறிஞர்கள், தமிழ்ப் பேராசிரியர்களில் மிகச் சிலரே கணிப்பொறியைப் பயன்படுத்துகின்றனர். தமிழாசிரியப் பெருமக்களோ, (மிகச் சிறுபான்மையர் தவிர, மற்றெல்லாரும்) பாடத்திட்டத்தில் வந்துள்ள பாடங்களைத்தவிர வேறெதையும் பார்க்கவும் விருப்ப மில்லாதவர்களே! இந்நிலையில், தமிழ்ப்பகைவர் மிக விழிப்பாகச் செயற்பட்டு, கணிப்பொறிப் பயன்பாட்டைக் கொண்டே தமிழை அழித்தொழிக்கும் முயற்சியில் திறக்கரவுடன் முனைந்துள்ளனர். பெரும்பான்மைத் தமிழர்கள் என்ன நடக்கிறதென்றே அறியாதவர்களாக இருக்கின்றார்கள்.
அச்சு நூல்கள் எதிர்காலத்தில் எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்று கூறஇயலாது. எல்லா ஆவணங்களும் கணிப்பொறி வழியே எழுதப்படுகின்ற காலம்வந்துவிட்டது. எல்லா நூல்களுமே கணிப்பொறி வழி எழுதிக் காக்கப்படுகின்றன.இந்நிலையில் கணிப்பொறியையே புறக்கணிக்க நினைப்பது பேதைமை. காலங்காலமாகத் தமிழ்அழிப்பு வினையில் ஈடுபட்டு வருகின்றவர்கள், இந்தச் சூழலைப்பயன்படுத்திக் கிரந்தக் கலப்பின்வழி, தமிழ்ச் சிதைப்புக்கும் அழிப்புக்கும் மிகச் சூழ்ச்சியாக முனைந்துள்ளனர்.

இக் கரவுவினை பற்றித் தமிழர்களிடத்தே எந்த விழிப்பும் இல்லாத நிலைஇரங்கத் தக்கதாகும்! தமிழர்களிடம் இதைப்பற்றிய விழிப்புணர்வைஏற்படுத்துவது இன்றைய இன்றியமையாக் கடமையாகும். இப்பொழுது எழுந்துள்ள இச்சிக்கலை நுட்பமாக அறிந்துகொள்ளாவிட்டாலும் தாய்த்தமிழைக் காக்கும் நோக்கில் எச்சரிக்கை உணர்வுடன் செய்திகளைப் புரிந்துகொண்டு செயல்படவேண்டிய நிலையில் தமிழர்கள் இருக்கின்றனர்.

இதைப்பற்றிப் புரிந்துகொள்ள கிரந்தம் பற்றியும், கணிப்பொறியில் இப்போ தைய தமிழ்ப் பயன்பாட்டு நிலை பற்றியும், ஒருங்குகுறி, ஒருங்குகுறி கூட்டிணையம், போன்றவை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

கிரந்தம்: கிரந்தம் ஒரு எழுத்துமுறை; மொழியன்று. மொழியும் எழுத்துமுறையும் வேறுவேறானவை. தமிழர் உருவாக்கிய இக் கிரந்த எழுத்துக்கள் சங்கதமொழி எழுதவும், சமற்கிருதமொழி எழுத்தமைத்துக் கொள்ளவும் பயன்பட்டன.

அவற்றோடு, இக் கிரந்த எழுத்துக்கள், சமற்கிருதச் சொற்களைத் தமிழில்கலந்து எழுதி மணிப்பவள நடையினால் தமிழுக்குக் கேடுண்டாக்கவும் காரணமாயின.

மேலும், தமிழும் வடமொழியும் கலந்த பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் கிரந்த எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

தமிழ்க் கணிப்பொறி: கணிப்பொறியைத் தமிழ்ப் பயன்பாட்டுக்குக் கொணர்ந்த தொடக்கக் காலத்தில், அவரவரும் ஒரு குறியீட்டு முறையையும், எழுத்துரு(வார்ப்புரு)வையும் பயன்படுத்தினர். இப்படிச் செய்ததால், ஒருவர் எழுதியதை இன்னொருவர் பயன்படுத்த இயலாத நிலை இருந்துவந்தது. அந்தக் குறிப்பிட்ட எழுத்துருவே, இன்னொருவரின் கணிப்பொறியிலும் இருக்க வேண்டும் என்ற நிலையே கணிப்பொறிப் பயன்பாட்டில் இருந்துவந்தது. இணையம் வளர்ச்சிபெற்ற நிலையில் தமிழ்ப் பயன்பாட்டிற்கு இது பெரும் சிக்கலாகவும் தடையாகவும் இருந்துவந்தது.

ஒருங்குகுறி (Unicode): மேற்கூறிய சிக்கலும் தடையும் இன்றி அனைத்துக் கணிப்பொறியிலும் தமிழைப் பயன்படுத்தற்கேற்ற ஒரு வசதி தேவைப்பட்டது. இந்நிலையில், உலகின் பல்வேறு மொழிகளின் எழுத்துக்களுக்கும் எண்களைக் கொடுத்து அவ் வெழுத்துக்களை ஒருங்குசேர்த்து ஒரே ஆவணத்தில் பயன்படுத்தஇயலும் வகையில் அமைந்த ஒருங்குகுறி (அல்லது ஒருங்குறி) முறை இச்சிக்கலுக்குத் தீர்வாக அமைந்தது.

இக்கால், பல்வேறு கணிப்பொறி நிறுவனங்களும் எண்மமுறைக் கருவி நிறுவனங்களும் ஒருங்குகுறியை ஏற்றுக்கொண்டு தம் உருவாக்கங்களில் இக்குறியீட்டு முறையைச் சேர்த்துக்கொண்டுள்ளன. புதியதாகத் தோன்றும் பல உருவாக்க நெறிகளும் ஒருங்குகுறியை அடிப்படையாகக் கொள்கின்றன.

ஒருங்குகுறிக் கூட்டிணையம் (Unicode consortium): உலகிலுள்ள எல்லா மொழிகளின் எழுத்துக்களையும் எவ்வகைத் தடையுமின்றி எல்லாரும் பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்யும் அமைப்பாக ஒழுங்குகுறி கூட்டிணையம் உள்ளது. இவ்வமைப்பில் பல நாடுகளும் தனியாள்களும்கூட உறுப்பினராக உள்ளனர்.

தமிழ்க் கணிப்பொறிக்கான ஒருங்குகுறி குறித்து உரியவண்ணம் அக்கறை கொள்ள வேண்டிய தமிழ்நாட்டரசு தன் உறுப்பாண்மையை உறுதி செய்து கொள்ளாத நிலை வியப்பும் ஏமாற்றமும் அளிக்கக் கூடியதாகும்.

இன்றைய சிக்கல்: இந்திய அரசின் கணிப்பொறிநுட்பத்துறை ஒருங்குகுறி கூட்டிணையத்தில் ஒப்போலை பெற்ற உறுப்பினராக உள்ளது. இத்துறை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்ற 22 மொழிகளையும் இக் கூட்டிணையத்தின் அடைவுப்பட்டியலில் இடம்பெறச் செய்தது; அத்துடன் வழக்கிழந்த வேதசமற்கிருத எழுத்துக்களும் கிரந்த எழுத்துக்களும் அப்பட்டியலில் இடம்பெறவேண்டுமெனக் கருதியது.

இதன் தொடர்பாக, 6.9.2010-இல் 14 பேர் கொண்ட ஒரு குழுவைக் கூட்டியது.

இக்குழுவில் தமிழறிஞர்களோ, கணிப்பொறி வல்லுநரோ, ஒருங்குகுறித் தெளிவறிவினரோ, தொல்லியல் அறிஞர்களோ இல்லை. அந்தப் 14 பேரில்,தமிழ்நாட்டிலிருந்து கலந்து கொண்டவர்கள் இரண்டு பேர். ஒருவர்ஆர்.கிருட்டினமூர்த்தி சாத்திரி; இன்னொருவர் காஞ்சி சங்கரமட ரமணசர்மாஆவர். அக்குழு எடுத்த முடிவினைப் பரிந்துரைத்து இந்திய அரசுத்துறை ஒருங்குகுறி கூட்டிணையத்திற்கு அனுப்பியது.

இறுதியாக, இந்திய அரசு, 68 குறியீடுகள் கொண்ட கிரந்தத்தோடு எ, ஒ, ழ, ற, ன ஆகிய தமிழ்எழுத்துக்கள் உள்ளிட்ட தமிழின் 7 குறியீடுகளையும் இணைத்து இடம்பெறும் குறியேற்றத்தை ஒருங்குகுறி கூட்டிணையத்திற்குப் பரிந்துரைத்துள்ளது.

தமிழ் எழுத்துக் குறியீடுகளோடு கிரந்த எழுத்துக் குறியீடுகள் கலந்தாலும் கிரந்த எழுத்துக் குறியீடுகளோடு தமிழ்எழுத்துக் குறியீடுகள் கலந்தாலும், விளைவு தமிழ்மொழிக்குப் பெருங்கேடாகவே இருக்கும். தமிழ் நூல்களும் இதழ்களும் சிறிதளவு தமிழ் கலந்த கிரந்த எழுத்துக்களாலேயே எழுதப்படும்.

அரிசியில் கல் கலந்ததைப் போலன்றிக் கல்லில் அரிசி கலந்த கதையாகும்.

சமற்கிருத மொழி ஒலிவடிவங்களுக்கு உருவாக்கப்பட்ட வரிவடிவங்களான கிரந்த எழுத்துக்களைக் கொண்டே, அக் கிரந்த எழுத்துக்களை உருவாக்கிய தமிழர்களுக்குச் சொந்தமான தமிழ் வரிவடிவங்கள் புறக்கணிப்புறுமாறும் பயன்பாடின்றிச் செயலிழந்து வழக்கற்றுப் போகுமாறும் செய்யப்படும்.

இவற்றையெல்லாம் எண்ணிக் கவன்ற தமிழறிஞர்கள் - குறிப்பாக இலக்குவனார் மறைமலை, இலக்குவனார் திருவள்ளுவன் போன்றோர் - எடுத்த முயற்சியின் பயனாகத் தமிழ்நாட்டரசு, அறிஞர் கருத்தறிய 3.11.2010 அன்று தமிழ்ப் பல்கலைக்கழத்தின் மூலம் 17 பேர் கலந்துகொண்ட கூட்டத்தை நடத்தியது.

அவர்கள் ஒரு மனத்தோடு எடுத்த தீர்மானத்தின்படி, தமிழக முதல்வர் இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியதன் விளைவாக, ஒருங்குகுறி கூட்டிணையம், 6.11.2010-ஆம் நாள் கூட்டத்தில் கிரந்த எழுத்தோடு தமிழ்க் குறியீடுகளைக் கலப்பது தொடர்பாகத் தீர்மானிக்க இருந்ததை 26.2.2011-ஆம் நாள் கூட்டத்திற்குத் தள்ளி வைத்துள்ளது.

‘தினமணி’யின் குறை: இந்தச் சிக்கலைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், "ஸ,ஷ, க்ஷ, ஜ, ஹ" என்னும் ஐந்து கிரந்த எழுத்துக்களைச் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே தமிழ்நாட்டரசு இந்திய அரசின் கணிப்பொறிநுட்பத்துறைக்கு மடல் எழுதியுள்ளதாகக் குறைபட்டுக் கொண்டு எழுதிய ‘தினமணி’ நாளிதழ், அதன் 9.11.2010-ஆம் நாள் ஆசிரியருரையில் தன் வெளிறை வெளிப்படுத்திக் கொண்டது. தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முதலிய பலரும் உணர்த்திய பின்னரும்கூட ‘தினமணி’ தன் தவற்றுக்கு வருந்தவில்லை.

கலப்புக்கு முனையக் காரணம்: தமிழின் தூய்மையைக் கெடுத்து, வளங்குன்றச் செய்து, சிதைத்து, காலப்போக்கில் தமிழை அழித்துவிடவேண்டு மென்ற எண்ணமே, கிரந்த எழுத்துக் குறியீடுகளோடு தமிழ் எழுத்துக் குறியீடுகளைக் கலக்கப் பரிந்துரைத்ததற்குக் காரணமாக இருக்குமோ என்றே எண்ணத் தோன்றுகிறதன்றோ?

கிரந்தத்தை இந்திய மொழிகள் அனைத்துக்குமான எழுத்தாக ஆக்கி ஒரே வரிவடிவத்தைக் கொண்டு பல இந்திய மொழிகளிலும் மின்னஞ்சல், இணைய இதழ்கள் இடம்பெறச் செய்யலாமென்ற எண்ணமும் காரணமாகக் கூறப்படுகிறது. உலக மொழிகள் அனைத்திற்குமான ஒரே எழுத்துவடிவம் (International phonetic alphabet -IPA) உருவாகிப் பயன்பாட்டில் உள்ள நிலையில், இக் காரணம், பெரிய பூனையும் குட்டிப் பூனையும் போகவர கதவில் பெரிய துளையும் சிறிய துளையுமாக இரண்டு துளைகள் போட்ட கதையை நினைவு படுத்துவதாக உள்ளது.

கலப்பால் விளையும் கேடும் காப்புணர்வின் தேவையும்: ஏற்கெனவே, தமிழரின் விழிப்பின்மையால், சமற்கிருத ஒலிப்புண்டாக்கவெனக் காரணம் கூறி, கிரந்த எழுத்துக்கள் ஸ, ஷ, ஜ, ஹ - வுடன் கூட்டெழுத்துக்கள் க்ஷ, ஸ்ரீ - யும் தமிழிற் கலக்கப்பட்டதால் நேர்ந்திருக்கும் சிதைவினின்றும் தமிழை மீட்கவே, மறைமலையடிகள் தனித்தமிழ் இயக்கம் தோற்றித் தமிழ் மீட்சிக்குப் பாடுபட்டார். மொழிஞாயிறு பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார், பேராசிரியர் இலக்குவனார், அறிஞர் வ.சுப.மா., பாவேந்தர், அறிஞர் அண்ணா போன்றோரின் இடைவிடாத முயற்சியால் தமிழ் மென்மேலும் சிதைவது தடுத்தாற்றப் பெற்று ஒரளவு மீட்சி கண்டுள்ளது.

இப்போது, 68 குறியீடுகள் கொண்ட கிரந்தக் கொத்தில் 7 தமிழ்க் குறியீடுகள் கலந்தால், தமிழ் ‘கிரந்தமொழி’யாக்கப்படும் உலகின் மூத்த மொழியின் வரிவடிவம் கிரந்தமாகிப் போகும். இதனால், பிற்காலத்தில் சமற்கிருதத்திலிருந்து அல்லது சங்கத மொழியிலிருதுதான் தமிழ் பிறந்தது என்றும் சிலர் நிறுவத் துணிந்தாலும் வியப்பதற்கில்லை.

இக் கிரந்த எழுத்துக்கள் தமிழிற் கலப்பதைத் தடுக்கவே, ஒல்காப்பெரும்புகழ் தொல்காப்பியம், "வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடுபுணர்ந்த சொல்லா கும்மே" என்ற நூற்பாவின் வழி காப்புச் செய்ய முனைந்தது. ‘நன்னூல்’ பவணந்தியாரும் தற்பவம் தற்சமம் கூறி இரண்டின் வழியும் கிரந்த எழுத்து வராதிருக்கத் தடையிட்டார். தொல்காப்பியத்திலும், கழக இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகையிலும், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், சீறாப்புராணம், வீரமாமுனிவரின் எழுத்தோவியங்கள், நாலாயிரப் பனுவல்கள் முதலானவற்றிலும் கிரந்த எழுத்துக்கள் இடம்பெறவே யில்லை.

தேவையின்றி வேற்றுச் சொற்களை ஏற்றுக்கொண்டே போவதால் தமிழ், பன்மொழிக் கலவையாக மாற நேர்கிறது. தமிழர் அடையாளமற்ற வரலாறற்ற குடியாக மாறும் பெருங்கேட்டிற்கு வழிசெய்கிறது.

எம்மொழியிலும் எல்லாமொழிப் பெயர்களும், எல்லா ஒலிப்பும் இல்லை. சீனஎழுத்தின் ஒலிப்பு வேறு எந்த மொழியிலுள்ளது? ஒரு மொழி தன் இயல்பிற்கேற்காத ஒலியை ஏற்பின், நாளடைவில் சிதைவுற்று மாற்றமடைந்து வேறொரு மொழியாகிவிடும். இதற்கு, மலையாள மொழியே எடுத்துக் காட்டாகும். தமிழ் என்பதை ‘டாமில், டமில், டாமிள், தமில், தமிள், தாமில், தமிஷ், தமிஸ்’–என்றெல்லாம் தானே ஆங்கிலத்தில் எழுதுகின்றனர்; பலுக்குகின்றனர்! ஆங்கிலம் ஏன் ழ, ற, ண முதலிய தமிழ் எழுத்துக்களை ஏற்கக்கூடாது என்று கேட்பதா?

தமிழரின் இன்றைய கடமை: தமிழில் கிரந்தம் கலந்தாலும் கிரந்தத்தில் தமிழ் கலந்தாலும் சிதைவும் அழிவும் தமிழுக்கு நேர்வது உறுதி என்பதால் உலகெங்கணும் உள்ள தமிழர், ஒருங்குகுறியில் தமிழுக்கு உரிய இடத்தில் கிரந்த எழுத்துக்கு இடமளிப்பதற்கும், கிரந்தத்தோடு தமிழ் எழுத்துக்களைச் சேர்ப்பதற்கும் தம் எதிர்ப்பை மிக உறுதியாக வெளிப்படுத்தி அம முயற்சியைத் தடுக்கவேண்டும்.

கல்வெட்டு, செப்பேடு, ஈடு உரைகள் ஆராய்ச்சிக்குக் கிரந்த எழுத்தின் தேவை குறித்தெல்லாம் தொடர்புடைய பல்துறை அறிஞர் குழு அமைத்து அமைதியாக முடிவெடுக்கலாம்.

தமிழ்நாட்டரசு, இனக்காப்பில் இழைத்த இரண்டகம் தமிழர் நெஞ்சில் மாறாப் பெருவடுவாக நிலைத்திருக்கின்றது. இப்போது, மொழிக் காப்பிலும் கோட்டைவிட்டுப் பழிதேடிக் கொள்ளக் கூடாதென்று நல்லுணர்வோடு வலியுறுத்துகின்றோம்.

செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க

செய்யாமை யானுங் கெடும். – (குறள். 466)

--------------------------------------------------------------

--

தமிழநம்பி

கிரந்தக் கலப்பு: கணிப்பொறிக் காலத்தில் தமிழை அழித்தொழிக்கும் முயற்சி!

ஒருங்குறி(யூனிகோடு) என்றழைக்கப்படும் ஒருங்குகுறியில் இப்பொழுது நிகழ்த்தப்பட்டிருக்கும் கரவுவினை குறித்ததொரு தெளிவான கருத்தாடலை முன்வைத்திருப்பது - "கிரந்தக் கலப்பு : கணிப்பொறிக் காலத்தில் தமிழை அழித்தொழிக்கும் முயற்சி!" என்னும் புதிய கட்டுரை ஆகும்.
இதனைப் படைத்தவர் தமிழநம்பி ஐயா.
தமிழ் மொழி இலக்கியங்களில் ஆழங்காற்பட்டவர்; தூயதமிழியக்கத்தில் பாவலரேறு பெருஞ்சித்திரனாருக்குத் தோள் கொடுத்தவர். சொல்லிக்கொண்டே போகலாம் இவர்தம் வினைப்பாட்டுப் பெருமைகளை. ஐயா விரும்பமாட்டார்.
தூய தமிழ்த்தொண்டுள்ளம் வாழ்க!
நற்றமிழ் 20சக, சிலை - 16.12.2010 இதழில்[பக்கங்கள் 7-10] இவ்வரிய கட்டுரை வெளிவந்துள்ளது.
தமிழநம்பி ஐயாவின் வலைப்பதிவான http://thamizhanambi.blogspot.com/ இலும், நமது இந்த வலைப்பதிவிலும் தேவமைந்தன் வலைப்பதிவான http://httpdevamaindhan.blogspot.comஇலும்/ இக்கட்டுரை இடுகை பெறுகிறது.
தொலைபேசி வேண்டுகொளுக்குச் செவிசாய்த்து, கட்டுரை அனுப்பிய தமிழநம்பி ஐயாவுக்கு என் மனமார்ந்த நன்றி.
For further details view:

15.10.10

சாமிகிரி சித்தர் மறைவும் தொடர்புடையதொரு சிந்தனையும்

பலருக்குச் செவிப்புலனைச் சீர்செய்து வந்தவர் சாமிகிரி சித்தர். என்னைப் போன்ற பிசிராந்தையார் - சோழன் நட்பினருக்கும் தொடர்ந்து தன் எல்லாப் பெருநூல்களையும் சிறுநூல்களையும் காப்பான பதிவுடன் காசுபணம் கருதாமல் அனுப்பி வைத்து வந்தார். நட்பை வணிக நோக்குடன் பார்க்காதவர். என் நண்பரும் பிரெஞ்சுப் பேராசிரியருமான முனைவர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயக்கர் அவர்களின் மாமனார் அவர்களுக்குச் செவிப்புலன் சீர்ப்படுத்துதல் தொடர்பாக என் அண்ணார் மகனார்வழி தொடர்புகொண்டபோது, 'செவிப்புலன் கருவியைப் பயன்படுத்திவிட்டவர்களுக்கு மீண்டும் இயல்பாக அப்புலனை இயக்க இயலாது' என்ற உண்மையை அன்புடன் தெரிவித்தவர். அவரத்தனை ஆற்றல் இருந்தால் ஒவ்வொருவர் எப்படி ஆட்டமாய் ஆடிவிடுவர்! அன்பும் உண்மையும் துணைவியார்பால் பெருமதிப்பும் பேரன்பும் கொண்டு வாழ்ந்தவர் சாமிகிரி சித்தர். என்னைப் போன்றவர்களின் நெஞ்சங்களில் அவர் எப்பொழுதும் வாழ்வார். (படத்துக்கு நன்றி: thats tamil: by oneindia.in)

11.10.10

எத்தகைய உரையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்? - முனைவர் க. தமிழமல்லன்

புன்செய்யில் தோன்றியது சிறிய இலை நெருஞ்சிச்செடி. அதன் பூக்கள் கண்களுக்கு இனிமையானவை. அது முள்ளுடையதைப் போன்று, காதலர் இன்பத்தை மட்டும் செய்தாரல்லர்; துன்பத்தையும் செய்தார். அதனால் என் நெஞ்சம் துன்புற்றது.......... துன்புற்றது. நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக் கட்குஇன் புதுமலர் முட்பயந் தாஅங்கு இனிய செய்தநம் காதலர் இன்னா செய்தல் நோமென் நெஞ்சே. (௨0௩) (அமன்ற - நெருங்கி முளைத்த : கட்கு - கண்ணுக்கு : இன் - இனிய) இப்பாடலை இயற்றியவர் அள்ளூர் நன்முல்லை. தலைவன் தலைவிக்குத் துன்பமும் செய்தான். அது குடும்பத்தில் நிகழ்வது இயல்பு. அதனால் தன் துன்பத்தைத் தலைவி தோழியிடம் சொல்லி வருந்துகிறாள். இதுவும் இயல்பே. கட்குஇன் புதுமலர் முட்பயந்தாங்கு என்று சொல்லும் உவமை அதை வெளிப்படையாக்கி விட்டது. ஆனால் இப்பாடலுக்கு உரை வரைந்தவர்கள் தலைவன் பரத்தை ஒழுக்கமே தலைவிக்குச் செய்த துன்பம் என்று குறிப்பிட்டுள்ளனர். பரத்தையிடமிருந்து திரும்பிய தலைவனின் தூதாகத் தோழி வந்தாள் என்றும் உரையாசிரியர் கூறுகிறார். இப்படிச் சொல்லுதல் வழிவழியாக வந்து விட்டது. இத்தகைய உரைகளை மறு ஆய்வு செய்தல் வேண்டும். வெல்லும் தூயதமிழ் ௨0௪௧, கன்னி, அகுத்தோபர், ௨0௧0. பக். ௧௧-௧௨.

1.8.10

ஆனந்த விகடனுக்கு நன்றி!

ஆனந்த விகடன் மாலை 85 மணி 31, 4.8.10 நாளிட்ட இதழின் பக்கம் 19-இல் ‘விகடன் வரவேற்பறை’யில் நம் இந்த வலைப்பதிவைப் படித்துப் பாராட்டியுள்ள விகடன் ஆசிரியர் குழுவார்க்கும், புகைப்படக்காரர் குழுவார்க்கும் வடிவமைப்புக் குழுவார்க்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மை உழைப்பை நடுநிலையில் நின்று வாசகர்க்கு அறிவித்த ஆனந்த விகடனுக்கு, பத்து ஆண்டுகளுக்கு முன்பே பணிநிறைவு பெற்றும் ஓயாமல், புதிதாகக் கணினி - இணையக் கல்வி பெற்று, பின்னர் இப்பதிவைத் தொடங்கி எளிமையான வடிவமைப்பில் பதிந்து வரும் நான் தெரிவித்துக் கொள்ளும் நன்றியும் உண்மையானதே. அன்புடன், அண்ணன் பசுபதி (தேவமைந்தன்)

19.5.10

பரிதிமாற்கலைஞர் தம் பெயரைத் தனித்தமிழ்ப் பற்றினால் மாற்றிக்கொள்ளவில்லை

ஐயா. வணக்கம். பரிதிமாற்கலைஞர் தம் பெயரைத் தனித்தமிழ்ப்பற்றினால் மாற்றிக்கொண்டு மறைமலையடிகளுக்கு முன்னோடியாக இருந்தார் என்று புதியதலைமுறை கட்டுரையில் கண்டேன். புதிய தலைமுறைக்குப் பிழையான செய்தி போய் விடக்கூடாது. மறைமலையடிகளும் பாவாணரும் இது போலவே நம்பி எழுதியீருக்கின்றனர். வி.கோ.சூரியநாராயண சாத்திரியார் என்னும் பெயரை அவர் தனித்தமிழ்ப் பற்றினால் மாற்றிக்கொள்ளவில்லை. புனைபெயராகவே பயன்படுத்தினார். அதுவும் தனிப்பாசுரத்தொகை என்னும் ஒரு நுாலில் மட்டுமே அப்பெயரைப் பயன்படுத்தினார். அவர் தன் படைப்பின் தன்மையை முழுமையாகப் படிப்பவர் வாயிலாகத் தெரிந்துகொள்ளும் நோக்கத்திற்காகப்பரிதிமாற்கலைஞர் என்னும் பெயரைப் பயன்படுத்தியதாக அந்நுாலில் குறித்துள்ளார். எனவே தமிழ்ப்பற்றால் பெயரை மாற்றிக் கொண்டார் என்பது சரியன்று. அவர் தமிழ்ப்பற்று இரு வகைகளில் சிறந்தது. அவர், பார்ப்பனர்களால் தான் தமிழ் கெட்டது என்பதைத்தமிழ்மொழி வரலாறு என்னும் நுாலில் மறைக்காமல் எழுதியுள்ளார். தமிழ் தனித்தியங்க வல்லது என்னும் கருத்தையும் அவர் வலியுறுத்தினார். ஆனால் தனித்தமிழ்ப்பற்றினால் பெயரை மாற்றிக்கொண்டார் என்னும் செய்தி பரவி விட்டது. அன்புடன், முனைவர் க.தமிழமல்லன்

5.5.10

சிங்காரவேலர் - முனைவர் க.தமிழமல்லன் தமிழர் இனத்தின் தலைவர்தாம் யாரோ? இமிழ்கடல் சிங்காரர் ஏத்து. உரத்தால் பயிர்தழைக்கும் முற்போக்கு வேலர் தரக்கொள்கை நாடுயர்த்தும் தான். புதுவுலகம் காணப் பொதுவுடைமைக் கொள்கை உதவுமெனல் வேலர் உரம். சிந்தனைச் சிற்பியாம் சிங்கார வேலரே நம்தமிழ் நாட்டுக்குத் தூண். பெரியார்க்குச் சிங்கார வேலர் பெரியார் உரியாரின் மாண்பை உயர்த்து. கதிரிருக்க வெண்ணிலவைக் கைதொழுதல் ஆமோ, எதிரிருக்கும் ஏந்தலைத்தான் ஏத்து. மறைமலை யாரைப்போல் மானமீட்பர் வேலர் குறைதீர்க்க வந்தார் குறி. அறிஞர்க் கறிஞராய் ஆற்றல் வினையால் நெறிஞராய் வாழ்ந்தார் நிறுத்து. சிங்கார வேலர்தான் சீர்திருத்தக் காரர்நம் பங்காளர் ஆவார் பகர். பொதுவுடைமைக் கொள்கையை நல்வேகத் தெம்பாய் எதிர்ப்பிருக்கக் காத்தார் அவர். மீனவர்கள் எல்லாரும் மீட்சிபெற்று மேலெழுதல் மானத்தின் வாழ்வாய் மதி. புரட்சிப் பரிசென்றே பொங்கரிமா சிங்காரர் புத்தூழி எண்ணத்தைப் போற்று. Singaravelar photo transparency - Thanks to: http://www.pragoti.org

5.2.10

தங்கப்பாவின் மொழியாக்க நூல் பெங்குவின் பதிப்பு 2010

'LOVE STANDS ALONE' தமிழ்ச் சங்க இலக்கியம்: தங்கப்பாவின் மொழியாக்க நூல் - தேவமைந்தன் திண்ணை.காம் வலையேட்டில் 'மொழிபெயர்ப்புலகில் தங்கப்பா' என்ற விரிவான கட்டுரையில் முன்பே குறிப்பிடப்பெற்ற 'Hues and Harmonies from an Ancient Literature' என்ற மொழியாக்கத்துக்கு மிகப்பல ஆண்டுகளுக்குப் பின் தங்கப்பாவின் ஆங்கிலவாக்கத்தில் குறுந்தொகையில் ஐம்பத்தொன்பது பாடல்கள்; ஐங்கூறுநூற்றில் பத்துப் பாடல்கள்; நற்றிணையில் பதினொரு பாடல்கள்; அகநானூற்றில் ஆறு பாடல்கள்; கலித்தொகையில் மூன்று பாடல்கள்; ஐந்திணை ஐம்பதில் ஐந்து பாடல்கள்; ஐந்திணை எழுபதில் இரண்டு பாடல்கள்; திணைமாலை நூற்றைம்பதில் ஒரு பாடல் - என்று அகப்பாடல்கள் தொண்ணூற்றேழும்: புறப்பாடல்கள்(புறநானூறு) எழுபத்தொன்றும் ஆக நூற்று அறுபத்தெட்டு பாடல்கள், தெளிவான ஆங்கில ஆக்கம் பெற்று பெங்குவின்(இந்தியா)நிறுவனத்தால் வெளியிடப் பெற்றுள்ளன. தலைப்பு, 'LOVE STANDS ALONE.' அருமையானதொரு பாடலின் ஆங்கிலவாக்கத் தலைப்பு. மற்றவர்களாயிருந்தால் 'Love Alone Stands' என்று பொருளே மாறிவிடும்படி பெயர்த்திருப்பார்கள். தங்கப்பாவின் மொழியாக்கத்தைக் கூர்மையாகக் கண்காணித்து, அவ்வப்பொழுது கலந்துரையாடி செம்மையாகப் பதிப்பித்திருப்பவர் அறிஞர் ஆ.இரா. வேங்கடாசலபதி. 'சலபதி' என்று நண்பர்களால் செல்லமாகக் குறிப்பிடப்பெறும் கடின உழைப்பாளி. இந்தப் பெங்குவின் வெளியீட்டில் ஆழமானதோர் அறிமுகமும் எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகம், சென்னையிலும் புதுச்சேரியிலும் சிறப்பான வெளியீட்டு விழா காணப்பெற உள்ளது. புதுச்சேரி வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில், வரும் இருபத்தேழாம் நாள் மாலை வெளியீடு காணப்போவதாக திருவாட்டி தடங்கண்ணி தங்கப்பா கூறினார். ஏலவே, அறிஞர் ஏ.கே.இராமானுஜன் முதலானவர்களின் சங்க இலக்கிய ஆங்கில மொழியாக்கங்களை வாசித்தவர்கள் தவறாமல் படிக்க வேண்டிய ஆக்கம் இது. சென்ற மாத(2010 சனவரி) இறுதியிலிருந்து புது தில்லியிலுள்ள பெங்குவின் பதிப்பகத்திலும் பிற இக்கின்பாதம்ஸ், ஆடிசி போன்ற நூல் விற்பனையகங்களிலும் கிடைக்கிறது. இந்தப் புத்தகத்தை மிகுந்த அக்கறையுடன் பெங்குவின் நிறுவனம் வெளியிட்டிருப்பதைக் கையில் எடுத்துப் புரட்டிப் பார்க்கும்பொழுதே அறியலாம். அதற்கு முன் பிற மொழியாக்கப் புத்தகங்கள் சிலவற்றையேனும் அவ்வாறு பார்த்திருந்தால் இந்த உணர்வு கட்டாயம் வரும். புத்தகம் பற்றிய குறிப்புகள்: LOVE STANDS ALONE (Selections from Tamil Sangam Poetry) translated by M.L. Thangappa. edited by A.R. Venkatachalapathy. translation copyright M.L. Thangappa 2010. introduction copyright A.R. Venkatachalapathy 2010. Penguin/Viking, India. pages: 248. priced: Rs. 399. பதிப்பகத்தின் இணையதள முகவரி: www.penguinbooksindia.com ISBN 9780670084197 ******** karuppannan.pasupathy@gmail.com