29.6.24

விழியிரண்டும் வெளிச்சம் பெற்று...


நான் இருக்கும் கூட்டுக் குடும்பத்தார் இல்லத்தில், என் புலன | வாட்சப் நண்பரும் பெரியண்ணனுக்கு வினைவலருமான மரமேறும் கலைஞர் திரு. முருகன் குலைகுலையாய் நுங்கு கொண்டுவந்து நடைமேல் போட்டு அத்தனை நுங்குகளையும் நோண்டிக் கொடுத்தார். 
எனக்கு கல்நுங்கு ஆகவும் பிடிக்கும். மனதுக்கேற்ப கல்நுங்குகளும் மென்னுங்குகளும் கிடைத்தன. மகளார் அறிவுரைப்படி தோலுடன் தின்றேன்.
கண்விழிகளில் படலமிட்டிருந்தது. புலனம் | வாட்சப் பார்க்கமுடியவில்லை. என் அண்ணார், மாமா அனுப்புகைகளைச் சற்று நேரம் பார்க்காதிருந்தாலே 'லுக் அவுட் நோட்டீ'சை விடுத்துவைத்துவிடுவார்கள். அந்தக் கவலையிலிருந்தவனுக்கு நுங்குகள் உள்ளே போனதும் விழிகள் பட்டப்பளிச்சென்று படலம்நீங்கின.
'சற்றே நகரும் பிள்ளாய்!' என்று எனக்குள் திணிபட்டிருந்த அறிவியல் நந்திக்கு ஆணையிட்டேன். எனக்குள் கலா Kalavathy P. இருந்து என் உடல் மூலம் தனக்கு மிகவும் விருப்பமான நுங்குகளை இரசித்துத் தின்றார் எனத் தோன்றுகின்றது.

# பனைஇருந்தால்நுங்கூட்டும்செத்தால்கிழங்கூட்டும்

#நுங்கு #பனை #தேவமைந்தன் #பனங்கிழங்கு #palmira #nungu #Roots

6.5.24

Digital life

எவ்வளவோ படிக்கிறோம். எவ்வளவோ எழுதுகிறோம். எவ்வளவோ புத்தகங்கள் வெளியிடுகிறோம். சமூக வலைதளங்களில் பதிவுகள் பல பதிகிறோம். உண்மையாகவே உழைத்து தரவுகள் மிகுந்தவையாக பதியும் பதிவுகளுக்கு மதிப்பில்லை. வெற்று ஆரவாரம், சவடால், கொச்சை, தனிமனிதர் வழிபாடு, பிறந்த நாள், திருமண நாள் , இறப்பு தொடர்பான பதிவுகளுக்கு மட்டுமே பார்வைகள் அதிகம். முன்பெல்லாம் பெண்கள் பதிவிட்டால் அதற்கு அமோகமான ஆதரவு இருந்து வந்தது. இப்பொழுது அதுவும் குறைந்துவிட்டது. பொதுவாகவே வாழ்க்கையின் எல்லா பக்கங்களிலும் சிறந்தவற்றுக்கு இப்பொழுது உரிய மதிப்பு கொடுக்கப்படுவதில்லை. ஒருவரை ஒருவர் உண்மையாக நேசிப்பது என்பது அறவே இல்லை. கூடுமானவரை பேச்சைக் குறைத்துக் கொண்டு சைகைகளிலேயே செயல்களை முடித்துக் கொள்கிறார்கள். எல்லாம் டிஜிட்டல் ஆகிவிட்டன.

28.12.23

நன்று ஆகும் பொழுது......

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்
(திருக்குறள் ௩௭௯ )

நன்றுஆகுங்கால் நல்லவாக் காண்பவர் = நல்லது ஆகும்போது நல்லது நல்லது என உவகை அடைந்து மகிழ்பவர்,
அன்றுஆகுங்கால்
அல்லல்படுவது எவன்? = நல்லதுஅல்லாதது (கெட்டது அல்ல; unpleasant போல) ஆகும்போது புலம்பி வருந்துவது ஏன்?

அதிகாரம் *ஊழ்* என்பதால் - 
ஆகூழ் ~ நல்வினை - பொன் விலங்கு.
போகூழ் ~தீவினை - இரும்பு விலங்கு.

ஆகு + ஊழ். ஆவதற்குக் காரண ஏதுவான வினை/ செயல். 
காட்டு - இந்த அரிசி, மாவுக்கு ஆகி வரும். திருமணமான அவ்விணையருக்கு மகவு ஆகிவருகிறது.
போகு+ ஊழ். போவதற்குக் காரண ஏதுவான வினை/செயல்.
காட்டு: இந்த அரிசி, மாவுக்கு ஆகிவராது.
அன்று அவரிடம் திரண்டிருந்த செல்வம், இன்று போயே போய்விட்டது.
I miss you.
Stop-loss Order. [A stop-loss order is a risk-management tool that automatically sells a security once it reaches a certain price (either a percentage or a dollar amount below the current market price). It is designed to limit losses in case the security's price drops below that price level.]

He lost his spouse. She lost her spouse.

முடிபு: நல்வினைப் பயனாக நன்மை வரும்போது இன்பம் அடைகிறவர், தீவினைப் பயனாகத் தீமை வரும்போது ஏன் துன்பப்பட வேண்டும்?

கொண்முடிபு: 
நன்மையும் வேண்டாம் தீமையும் வேண்டாம்; பொன்விலங்கால் தளைப்பட்டாலும் இரும்புவிலங்கால் தளைப்பட்டாலும் தளை தளையே - என்று செயல்புரியாமல் சோம்பிக் கிடப்பதை விட, நல்லதோ கெட்டதோ எதுவரினும் வரட்டும்... நான் ஓயாது செயல்படுவேன்.

COME WHAT MAY... I SHALL CONTINUE MY UNCEASING ACTIVITIES. 

Courtesy: http://kalapathy.blogspot.com

20.12.23

உலகப் புகழ் பெற்ற சிறுகதை: ஆஸ்கார் வைல்டின் 'மாதிரி கோடீஸ்வரர்' தமிழில்: சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்

மாதிரி கோடீஸ்வரர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
- ஆஸ்கார் வைல்ட்

தமிழில்: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்

பணக்காரராக இல்லாதபோது, அழகாக இருப்பதில் எந்தப் பயனும் இல்லை. காதல் லீலைகள் எல்லாம் வசதிபடைத்தவர்களுக்கானது. வேலை இல்லாதவர்களுக்கான வேலை அது இல்லை. ஏழை என்பவன் எதார்த்தமாகவும் கற்பனைகளில் சஞ்சரிக்காமலும் நடந்துகொள்ள வேண்டும்.
எல்லோரும் வாய்பிளந்து பார்க்கும்படி இருப்பதைவிட, நிரந்தர வருவாய் ஏதாவது இருக்குமாறு பார்த்துக்கொள்வது மிகவும் நல்லது. இவைதான் இன்றைய வாழ்வியல் உண்மைகள். இவற்றைப் பற்றியெல்லாம் ஒருபோதும் யூகி எர்ஸ்கீன் யோசித்துப் பார்த்ததில்லை. பாவம் யூகி! அறிவார்ந்த நிலையில் பார்த்தால், அவன் தேர மாட்டான் என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. அவன் இதுவரையில் வாழ்க்கையில் புத்திசாலித்தனமாகவோ மிகவும் கீழ்த்தரமாகவோ எதையும் சொன்னதில்லை. ஆனால், அவனுடைய விரைப்பான சாம்பல்நிறத் தலைமுடி, எடுப்பானத் தோற்றம், கச்சிதமான உடலமைப்பு எல்லாம் சேர்ந்து பார்க்க அவன் அழகாகயிருப்பான். பெண்கள், ஆண்கள் என எல்லோருடனும் நெருங்கிப் பழகி வந்தான். பணம் சம்பாதிப்பதைத் தவிர்த்து அவனால் எல்லாம் முடிந்தது. அவனுடைய அப்பா விட்டுச் சென்றதெல்லாம் இரண்டே பொருட்கள்: தான் பயன்படுத்திய வீரவாள், 15 தொகுதிகள் கொண்ட ”தீபகற்பப் போரின் வரலாறு” ஆகியவைதான். அந்த முதல் பொருளான வாளைக் கண்ணாடியின் மேல் தொங்கவிட்டான். இரண்டாவதை ஷெல்ஃபில் இருந்த ரஃபின்கைடுக்கும் பெய்லி மேகஸினுக்கும் இடையில் வைத்துவிட்டு வயதான பெரியம்மா வருஷத்துக்கு ஒருமுறை தரும் 200 பவுண்ட்டுகளைக் கொண்டு வாழ்ந்து வந்தான். அவனும் எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்த்துவிட்டான். ஆறு மாத காலம் பங்குச் சந்தையில் முயற்சி செய்து பார்த்தான். காளைகளும் கரடிகளும் நடமாடும் இடத்தில் பட்டாம்பூச்சிக்கு என்ன வேலை? இன்னும் கொஞ்சம் அதிக நாட்கள் தேநீர் விற்றுப்பார்த்தான். பெக்கோ, செஸ்ச்செங் எனச்  சீனத் தேநீர் வகைகள் விற்று அலுத்துப்போனான். அதன் பிறகு, ட்ரை ஷெரி எனும் வெள்ளை ஒயின் விற்றுப்பார்க்கலாம் என்று முயற்சி செய்தான். அதுவும் பலன் தரவில்லை. காரணம் இயல்பாய் இருக்க வேண்டிய அளவு இனிப்பு அதில் இல்லாமல்போனது தான். கடைசியில், அவன் எதுவும் ஆகவில்லை. உற்சாகமான, சர்வலட்சணம் பொருந்திய, எதையும் சாதிக்க இயலாத, வேலை எதுவும் இல்லாத ஒரு கலைஞனாக வலம் வந்தான்.
இருக்கும் பிரச்சனை போதாது என்று, அவன் காதலிக்க ஆரம்பித்தான். அவன் காதலித்த பெண் லோரா மெர்டன். ஓய்வு பெற்ற இராணுவத்  தளபதியின் மகள். இந்தியாவில் பணியாற்றியபோது ஏற்பட்ட கோபமும் அஜீரணக் கோளாறும் இன்னமும் அவரைவிட்டுப் போனபாடில்லை. அவன் காலில் மண்டியிடச் சொன்னால்கூட லோரா செய்யத் தயாராக இருந்தாள். அந்த அளவு அவனை அவள் காதலித்தாள். லண்டன் மாநகரிலேயே மிக அழகானதொரு ஜோடியாக வலம் வந்த இவர்களிடம் பணம் எதுவுமில்லை. யூகியை இராணுவத் தளபதிக்குப் பிடித்திருந்தாலும், தன் பெண்னைத் திருமணம் செய்யும் திட்டத்தை அவர் ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.
'தம்பி, 10,000 பவுன்ட் சொந்தமாகச் சம்பாதித்துக்கொண்டு என்னிடம் வா. அதைப் பற்றிப் பேசலாம்' என்ற அவரது நிபந்தனையைக் கேட்ட யூகியின் முகம் இருண்டு போனது. லோராவிடம் தான் போய் ஆறுதல் பெறவேண்டியிருந்தது.
ஒரு நாள் காலை, லோரா குடும்பம் வசித்து வந்த ஹாலந்து பார்க் பகுதிக்குச் செல்லும் வழியில் அவனுடைய நெருங்கிய நண்பன் அலென் டிரெவரைப் பார்த்துவிட்டுப் போகலாம் என நினைத்தான். டிரெவர் ஒரு ஓவியன். பார்க்கப்போனால், இப்பொழுதெல்லாம் ஒரு சிலரே இந்த நோயிலிருந்து விடுபட்டுவிடுகின்றனர். ஆனால், டிரெவர் ஒரு கலைஞனும்கூட. கலைஞர்களைப் பார்ப்பது உண்மையில் அரிது. தனிப்பட்ட முறையில் அவன் கரடுமுரடான ஆள். சூரியத் தழும்புகளும் செம்பட்டையான தாடியுடனும் வித்தியாசமானத் தோற்றமுடையவன். ஆனால், கையில் தூரிகையை எடுத்துவிட்டால் அவன் உண்மையான மேதையாக மாறிவிடுவான். அவனுடைய ஓவியங்களுக்கு நல்ல கிராக்கி இருந்தது.
யூகியை அவன்பால் முதலில் ஈர்த்தது, தனிப்பட்ட முறையில் அவனுடைய வசீகரம்தான் என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும். டிரெவர் அடிக்கடிச்  சொல்வதுண்டு. “முட்டாளாகவும் அழகாகவும் உள்ள ஆட்களைத்தான் ஓவியனுக்குத் தெரிந்து இருக்க வேண்டும். பார்க்கக் கலையம்சத்தோடு இருக்க வேண்டும். பேசிக்கொண்டிருக்க அறிவுக்கு அதிக வேலையில்லாமல் இருக்க வேண்டும்”. மேலும், “நன்றாக உடுத்தும் ஆண்களும் பார்க்க அழகாகத் தெரியும் பெண்களும்தான் உலகினை ஆள்பவர்கள். குறைந்தது அப்படி அவர்கள் நடந்துகொள்ளவேண்டும்” என்பான். எனினும், யூகியைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்ட பிறகு, அவனுடைய உற்சாகம், குதூகலமான உணர்வு, தாராள குணம், எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாத சுபாவம் ஆகியவையும் டிரெவருக்குப் பிடித்துப் போகவே, எப்பொழுது வேண்டுமானாலும் தன் ஸ்டுடியோவுக்குள் நுழையும் உரிமையை அவனுக்கு டிரெவர் தந்திருந்தான்.
அன்று யூகி உள்ளே நுழைந்தபோது, டிரெவர் ஓர் அருமையான ஓவியத்தை வரைந்து முடித்து, கடைசி நேர மெருகேற்றலில் ஈடுபட்டிருந்தான். அது ஒரு பிச்சைக்காரனின் ஆள் உயர ஓவியம். ஸ்டுடியோவின் ஓரத்தில், தரையிலிருந்து சற்றே உயர்த்தி அமைக்கப்பட்டிருந்த மேடையில் அந்தச் பிச்சைக்காரனே ஓர் உயிரோவியமாய் மாடலாய் நின்றிருந்தான். தேகமெல்லாம் சுருங்கி, முகத்திலும் சுருக்கம் விழுந்து, பரிதாபமான தோற்றத்தில் இருந்தான் அந்தக் கிழவன். அவனுடைய தோள்களின்மீது சாம்பல் நிறத்தில் மூட்டை. எல்லாம் கந்தலும் கம்பளையுமாக. அவனுடைய தடித்த காலணிகள், ஆங்காங்கே ஒட்டு போட்டுத் தைத்திருந்தது தெரிந்தது. சொரசொரப்பான கழி ஒன்றின்மீது ஒரு கையை ஊன்றியபடியும், கிழிந்துபோன தன் தொப்பியை மற்றொரு கையால் பிச்சை கேட்க ஏந்தியபடியும் நின்றிருந்தான்.
உள்ளே நழைந்த யூகி, நண்பனின் கைகளைக் குலுக்கியவாறே,
“என்ன அருமையான மாடல்!” என்று உற்சாகத்தில் கத்திவிட்டான்.
“நானும் அப்படித்தான் நினைக்கிறேன். இவனைப் போன்ற பிச்சைக்காரர்கள் அன்றாடம் கிடைக்கமாட்டார்கள். உண்மையில் ஒரு கண்டிபிடிப்புதான். இவன் ஒரு வாழும் வெலாஸ்கே! இப்படிக் கிடைத்தது என் அதிருஷ்டம்தான். ஓவியர் ரெம்பார்ட்டிடம் சிக்கியிருந்தால், இவனை வைத்து என்னவெல்லாம் செய்திருப்பான்?”
“பாவம் இந்தக் கிழவன்!” பார்க்க எவ்வளவு பரிதாபமாக இருக்கிறான். எனக்கென்னவோ, உங்களை மாதிரி ஓவியர்களைப் பொறுத்தவரை, அவனுடைய முகம்தான் அவனுக்குச் சொத்து. இல்லையா? ” என்று யூகி கேட்டான்.
“நிச்சயமாக, பிறகு பிச்சைக்காரன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றா எதிர்பார்க்க முடியும்?” எனப்  பதிலுக்குக் கேட்டான் டிரெவர்.
ஒரு சோபாவில் வசதியாக அமர்ந்திருந்தபடியே,
“இப்படி ஒரு முறை நிற்பவனுக்கு எவ்வளவு கிடைக்கும்?” என்று விசாரித்தான் யூகி.
“ஒரு மணிநேரத்துக்கு ஒரு ஷில்லிங்”
“சரி, உன் ஓவியத்துக்கு உனக்கு எவ்வளவு கிடைக்கும்?”
ஓ! இதற்கு 200 கிடைக்கும்!”
“பவுண்டுகளா?”
“இல்லை. கினியாக்கள். ஓவியர்கள், கவிஞர்கள், மருத்துவர்கள் இவர்களுக்கெல்லாம் எப்பொழுதும் கினியாக்கள்தான்”.
“சரி, சரி. அப்படி மாடலாக நிற்பவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் கிடைக்க வேண்டும் என்பது என் கருத்து. உங்கள் அளவுக்கு அவர்களும் கடுமையாக உழைக்கிறார்கள்” என்று யூகி சிரித்துக்கொண்டே சொன்னான்.
“அபத்தம், முட்டாள் தனமான கருத்து. வரைவதையும், சாவகாசமாக நாள் முழுவதும் நிற்பதையும் மட்டும் ஏன் பார்க்கிறாய்? யூகி! பேசுவது மிகவும் சுலபம்தான். ஆனால், உடல் உழைப்பு வேலையின் அளவைக் கலையும் எட்டிப் பிடிக்கும் தருணங்களும் உண்டு என்பதை என்னால் உறுதியாகச்  சொல்ல முடியும். சரி. இப்படி நீ அரட்டை அடித்துக்கொண்டிருக்கக் கூடாது. எனக்கு நிறைய வேலை இருக்கிறது. சிகரெட்டைப் பிடித்துக்கொண்டு பேசாமல் இரு” என்று அடக்கினான் டிரெவர். சிறிது நேரம் கழித்து, வேலையாள் ஒருவன் உள்ளே வந்து, டிரெவரைப் பார்க்க, ஓவியத்துக்குச் சட்டம் அமைப்பவர் வந்துள்ளதாகத் தெரிவித்தான்.
“எங்கேயும் போய்விடாதே, இதோ வந்து விடுகிறேன்” என்று சொல்லி வெளியே சென்றான், டிரெவர்.
டிரெவர் அங்கு இல்லாத அவகாசத்தைப் பயன்படுத்திக்கொண்ட பிச்சைக்காரன், அவன் பின்னால் இவைல்ட்மரப்  பெஞ்சில் சற்றே உட்கார்ந்து இளைப்பாறினான். மிகவும் கைவிடப்பட்ட நிலையில் சோர்ந்துபோய் இருந்த அவனைக் கண்டு யூகியால் பரிதாபப்படாமல் இருக்க முடியவில்லை. தன் கால்சட்டைப்பையில் பணம் எவ்வளவு இருக்கிறது என்று துழாவிப் பார்த்தான். ஒரு பொற்காசும் சில செப்புக் காசுகளும் மட்டுமே இருந்தன.
“பாவம் இந்தக் கிழவன் ! என்னைவிட இவனுக்குத்தான் இப்பொழுது இது தேவை. என்ன, இன்னும் இரண்டு வாரகாலத்துக்கு எனக்குச் கோச் வண்டி இருக்காது” என்று நினைத்துக்கொணடான். ஸ்டுடியோவின் அந்தப் பக்கம் இருந்த பிச்சகைகாரனிடம் சென்று பொற்காசை அவன் கையில் கோட்டான்.
அந்த வயதான ஆள் திடுக்கிட்டான். அவனுடைய உலர்ந்த உதட்டில் லேசான புன்னகை தோன்றி மறைந்தது.
“நன்றி சார், நன்றி!” என்றான்.
பிறகு டிரெவர் வந்து விடவே, யூகி விடைபெற்றான். தான் செய்த செயலுக்குச் சற்றே நாணத்துடன் வெளியேறினான். அந்த நாளை லோராவுடன் கழித்தான். அவனது ஊதாரித்தனமான செயலுக்காகச் செல்லமாகக் கடிந்து கொண்டாள் லோரா. வீட்டுக்கு நடந்தே திரும்ப வேண்டியிருந்தது.
அன்று இரவு 11 மணி வாக்கில் பலேட் கிளப்புக்குச் சென்று யூகி, டிரெவரைப் பார்த்தான். புகைபிடிப்பவர்களுக்கான அறையில் உட்கார்நது அவன் வைன் அருந்திக் கொண்டிருந்தான்.
“என்ன அந்த ஓவியம் சரியாக வந்ததா?” என்று நண்பனின் சிகரெட்டைப் பற்றவைக்க உதவியபடியே கேட்டான்.
“முடித்து, சட்டம் போட்டுவிட்டேன், சரி, அது இருக்கட்டும். நீ ஒரு பெரிய வேலை செய்துவிட்டாய். மாடலுக்கு நின்ற அந்த வயதான ஆளுக்கு உன்னை மிகவும் பிடித்துப்போய்விட்டது. நீ யார், எங்கு வசிக்கிறாய், உன் வருவாய் என்ன, உன் எதிர்காலம் எப்படி… என உன்னைப் பற்றி எல்லாவற்றையும் சொல்லவேண்டியிருந்தது.”.
“டேய்! இப்பொழுது வீட்டுக்கு நான் திரும்பும் போது, எனக்காக அவன் அனேகமாகக் காத்திருப்பான். நீ சும்மா ஒரு பேச்சுக்குத்தான் சொல்கிறாய். பாவம் அந்தப் பிச்சைக்காரக் கிழவன். அவனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இவ்வளவு பரிதாபமான நிலையில் இருப்பது மிகவும் கொடுமையான விஷயம். வீட்டில் நிறைய பழையத் துணிகள் வைத்திருக்கிறேன். அதில் ஏதாவது ஒன்றைத் தந்தால் வாங்குவானா? ஏன் வாங்கமாட்டான். அவன் போட்டிருந்த உடை கிழிந்து தோரணமாய்த் தொங்கிக்கொண்டிருந்தது” என்றான் யூகி.
“ஆனால், அந்த உடையில்தான் அவன் அற்புதமாக இருக்கிறான். அவனுக்குக் கோட் போட்டால் எந்த மாதிரியும் என்னால் அவனை வரைய முடியாது. நீ கந்தல்கள் என்பதை நான் காவியம் என்று சொல்வேன். உன் கண்ணுக்கு ஏழ்மையாகத் தோன்றுவது எனக்குக் கலையம்சமாகத்தெரிகிறது. எது எப்படி இருந்தாலும், நீ கொடுக்க விரும்புவதை அவனிடம் தெரிவிக்கிறேன்” என்று டிரெவர் சொன்னான்.
‘அலென், ஓவியர்களாகிய நீங்கள் எல்லோரும் இதயமற்றவர்கள்” என்று யூகி கொஞ்சம் கடுமையான தொனியில் சொன்னான்.
நிதானமாகப் பதிலளித்த டிரெவர்,
“கலைஞனின் இதயம் அவன் மூளையில் உள்ளது. மேலும், எங்கள் வேலை, நாங்கள் பார்க்கும் உலகை வடிப்பதுதான், நமக்குத் தெரிந்த அளவுக்கு அதை மாற்றுவது கிடையாது, புரிகிறதா? அவனவனுக்கு அவனவன் வேலை. போகட்டும், லோரா எப்படி இருக்கிறாள் என்று சொல். அந்த வயதான ஆள் அவளைப் பற்றி அதிகம் விசாரித்தான்”.
“அவளைப் பற்றி அவனிடம் பேசிக்கொண்டிருந்தாயா?” யூகி கேட்டான்.
“ஆமாம். பேசினேன். கறாரான இராணுவத் தளபதி, தங்கமான லோரா, 10,000 பவுண்ட் எல்லாம் அவனுக்குத் தெரியும்”.
“என் சொந்த விஷயங்கள் அத்தனையும் அந்தப் பிச்சைக்காரனிடம் சொல்லிவிட்டாயா? ” என யூகி கோபத்தில் சிவந்தான்.
சிரித்துக்கொண்டே, அமைதியாக, “அடே! நீ சொல்கிறாயே, அந்தப் பிச்சைக்காரக் கிழவன், அவன் இந்த ஐரோப்பாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவன். நினைத்தால், நாளையே தன்னிடம் உள்ள இருப்புக்கு மேல் வங்கிக் கடன் எதுவும் வாங்காமலேயே லண்டன் முழுவதையும் அவனால் வாங்கிவிட முடியும். எல்லா தலைநகரிலும் அவனுக்குச்சொந்தமாக வீடு இருக்கிறது. தங்கத் தட்டில்தான் சாப்பிடுவான். இவ்வளவு ஏன், அவன் விரும்பினால், ரஷ்யா போருக்குப் போவதைக் கூட தடுக்க முடியும்” என்று சொல்லி முடித்தான் டிரெவர்.
“என்னதான் சொல்ல வருகிறாய்?” யூகி ஆச்சரியத்தில் வாய்பிளந்தான்.
“என்ன சொல்கிறேன் என்றால், நீ இன்று ஸ்டுடீயோவில் பார்த்தது பாரன் ஹோஸ்பெர்க். எனக்கு மிகவும் வேண்டியவன். என் படங்கள் போல் மற்றப் பொருட்கள் எல்லாம் விரும்பி வாங்குபவன். அவனைப் பிச்சைக்காரனாக வைத்து ஒரு படம் வரைந்து தரமுடியுமா என்று கேட்டு ஒரு தொகையையும் சென்ற மாதம் கொடுத்திருந்தான். என்ன செய்ய சொல்கிறாய்? கோடீஸ்வரனுக்கு ஏற்பட்ட வேடிக்கையான ஆசை! சும்மா சொல்லக்கூடாது. அவனுடைய கந்தல் உடையில் – இல்லை என் கந்தல் உடையில் – அற்புதமாகப் பொருந்தினான். அந்தப் பழைய உடைகள் எனக்கு ஸ்பெயினில் கிடைத்தன” என்று டிரெவர் விளக்கினான்.
“என்ன? பாரன் ஹோஸ்பெர்க்கா?! என ஆச்சரியத்தில் கத்தினான் யூகி. “அடக் கடவுளே! அவனுக்குப்போய் நான் ஒரு பொற்காசைக் கொடுத்தேனே” என்று சொல்லியவன், ஏமாற்றத்தின் மொத்த உருவமாகச் சோபாவுக்குள் அழுந்தி உட்கார்ந்தான்.
“என்ன? அவனுக்கு ஒரு பொற்காசு கொடுத்தாயா! என்று உரக்கக் கத்திவிட்டுச் சத்தம் போட்டுச் சிரிக்க ஆரம்பித்தான் டிரெவர். இங்கே கவனி. இனி உனக்கு அது கிடைக்காது. மற்றவர் பணத்தில் வாழ்வதுதான் அவனுக்கு வேலையே” என்றான்.
“என்னிடம் சொல்லியிருக்கலாமே, அலென்… இப்படி முட்டாளாகாமல் என்னைத் தடுத்திருக்கலாமே” என்றான் யூகி ஏமாற்றத்துடன்.
“யூகி! முதலில், இப்படிப் பொறுப்பற்ற முறையில் தானம் செய்வாய் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. அழகான பெண் மாடல் ஒருத்திக்கு முத்தம் கொடுத்திருந்தால் என்னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால், அருவருப்பான ஆள் ஒருவனுக்குப் பொற்காசு கொடுத்தாய் என்பதைக் -கடவுள்மேல் சத்தியமாய்ப்- புரியவில்லை. மேலும், யாரிடமும் சகஜமாகப் பேசிக்கொண்டிருக்கக்கூடிய மனநிலையில் இன்று நான் இல்லை. நீ அங்கே நுழைந்தபோது, ஹோஸ்பெர்க்குக்கும் அவன் பெயரைக் குறிப்பிடுவது, பிடித்திருக்குமா என்று சரியாக எனக்குத் தெரியவில்லை. அவன் அரைகுறை ஆடையில் இருந்ததைத்தான் நீ பார்த்தாயே!” என்று அவனுக்குச் சூழ்நிலையை விளக்கினான்.
“என்னை எந்த அளவுக்கு முண்டம் என அவன் நினைத்திருப்பான்!” என்று யூகி நொந்துகொண்டான்.
“அதுதான் கிடையாது. நீ அங்கிருந்து போனபிறகு, மிகவும் கலகலப்பாக இருந்தான். அவனுக்குள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தபடி, தன் சுருக்கம் விழுந்த வயதான கைகளைத் தேய்த்துக்கொண்டான். உன்னைப் பற்றி எல்லா விஷயங்களையும் தெரிந்துகொள்ள ஏன் அவ்வளவு ஆர்வம்காட்டினான் என்பது அப்பொழுது எனக்கு விளங்கவில்லை. இப்பொழுதுதான் உண்மை புரிகிறது. உனக்குப்  பதில் உன் பொற்காசை அவன் முதலீடு செய்வான். கவலைப்படாதே யூகி. ஆறு மாதத்துக்கு ஒரு முறை உனக்கு வட்டியைத் தந்து விடுவான். விருந்தின் முடிவில், ஒரு முதலீடு எப்படி வந்தது என்பதற்குப் புதிய கதை அவனுக்குக் கிடைத்துவிட்டது” என்றான் கேலியாக.
“நான் ஒரு அதிருஷ்டமில்லாத ஜென்மம்” என்று யூகி பொருமினான். “நான் இப்பொழுது உடனே செய்யக்கூடியதெல்லாம், போய் பேசாமல் தூங்குவதுதான். டேய் அலென், இதை யாருக்கும் சொல்லாதே. அப்புறம் இந்த ரோ பகுதியில் என்னால் தலைகாட்ட முடியாது”.
“என்ன பேசுகிறாய்! யூகி உன் தயாள குணத்தைப் பிரதிபலிக்கும் செயல்தான் இது. எங்கும் ஓடாதே. இதோ இன்னும் ஒரு சிகரெட்டைப் பிடி. லோரா பற்றி உன் விருப்பத்திற்கு எவ்வளவு வேண்டுமானாலும் பேசு” என்று டிரெவர் அவனைச் சமாதானம் செய்தான்.
என்ன சொல்லியும் அவனை நிறுத்த முடியவில்லை. யூகி தன் வீட்டிற்கு நடந்தே போனான். மிகவும் சோகமாகக்  காணப்பட்ட நண்பன் சென்ற பிறகும் டிரெவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
அடுத்த நாள் காலை, சிற்றுண்டி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது யூகியின் பணிப்பெண் ஒரு அட்டையைக் கொண்டுவந்து அவனிடம் கொடுத்தாள். அதில், 'திரு. பாரன் ஹோஸ்பெர்க் சார்பாக வந்துள்ள திரு. குய்ஸ்தாவ் நொதேன்' என எழுதியிருந்தது.
“மன்னிப்புக் கேட்கும்படி சொல்ல வந்திருப்பான்” என யூகி நினைத்தான். வந்துள்ள விருந்தினரை மேலே அனுப்பும்படிப் பணிப்பெண்ணிடம் கூறினான்.
வயதான நபர் ஒருவர் சாம்பல் நிற முடியுடன், தங்க நிறத்தில் கண்ணாடி அணிந்து, அறைக்குள் நுழைந்தார். அவருடைய பேச்சில் பிரஞ்சு வாடை கொஞ்சம் வீசியது. “மிசியே எர்க்ஸ்க்சீனிடம்தான் பேசிக்கொண்டிருந்கிறேனா?” எனக் கேட்டார்.
யூகி தலைவணங்கி, ஆமாம் என ஆமோதித்தான்.
“பாரன் ஹோஸ்பெர்க் அனுப்பினார்” என்று சொன்னவர் தொடர்ந்து, “பாரன்….” என எதையோ பேசத் தொடங்கும்முன்,
“சார், தயவு செய்து அவரிடம் என் மனப்பூர்வமான வருத்தங்களைத் தெரிவித்து விடுங்கள்” என சொன்ன யூகிக்கு வார்த்தைகள் தடுமாறின.
வந்தவர் சிரித்துக்கொண்டே, “இந்தக் கடிதத்தை உங்களிடம் தருவதற்குத்தான் என்னைப் பாரன் அனுப்பியிருக்கிறார்” என்று சொல்லி, ஒட்டப்பட்ட கவர் ஒன்றை அவனிடம் அளித்தார்.
அந்த உறைக்கு வெளியே, “யூகி எர்க்ஸீனுக்கும் லோராவுக்கும் வயதான பிச்சைக்காரர் ஒருவரின் திருமண அன்பளிப்பு” என எழுதியிருந்தது. உள்ளே 10,000 பவுண்டுக்கான காசோலை இருந்தது.
அவர்களுடைய திருமணம் நடந்தபோது அலென் டிரெவர்தான் மாப்பிள்ளைத் தோழனாக இருந்தான். திருமண வரவேற்பின்போது நடந்த விருந்தில் கலந்துகொண்ட பாரன், மணமக்களை வாழ்த்திப் பேசினார்.
“கோடீஸ்வர மாதிரிகள் மிகவும் அரிதாகத்தான் கிடைக்கின்றனர். ஆனால், கடவுள்மேல் ஆணையாகச் சொல்கிறேன், மாதிரி கோடீஸ்வரர்கள் கிடைப்பது அதைவிட அரிதாகிவிட்டது” என்று குறிப்பிட்டார்.
……..
ஆஸ்கார் வைல்ட் (1854 - 1900)
புகழ்பெற்ற எழுத்தாளரான ஆஸ்கார் வைல்ட் அயர்லாந்தைச் சேர்ந்தவர். புதினம், சிறுகதை, கவிதை, நாடகம் என இலக்கியத்தின் அத்தனை துறைகளிலும் மிளிர்ந்தவர்.
“எல்லாப்  புனிதருக்கும் ஓர் இறந்தகாலம் உண்டு
எல்லாக் குற்றவாளிக்கும் ஒரு எதிர்காலம் உண்டு”.
“உலகில் இரண்டே துயரங்கள்தான் உள்ளன. ஒன்று, தான் விரும்பியதை அடைய முடியாமல் போவது, இரண்டாவது, தான் விரும்பியதை அடைந்துவிடுவது”.
எனப் பல முத்திரை வாசகங்களை உதிர்த்தவர்.

17.12.23

இறந்த பின்...

இறந்த பின் செய்யப்படும் பந்தம் பிடித்தல், பால் ஊற்றுதல், கருமாதி திதி முதலான எல்லாச் சடங்குகளையும் உளமார வெறுக்கிறேன். அஸ்தியை ஆற்றில் கரைத்தலையும் வெறுக்கிறேன். அன்னதானம் என்ற பெயரில் நடக்கும் பல விளம்பரச் செயல்களையும் வெறுக்கிறேன். மெய்யாகவே பசித்தவர் இடம் தேடிச்சென்று பத்துப் பேருக்குத் தரும் உணவும் உதவியும் மட்டுமே உயர்ந்தவை. இறந்தவர் படங்களை வைத்து அமாவாசை முதலான சிறப்பு நாள்களில் படைத்தல் தீயதிலும் தீயது. இறந்தவர்கள் படங்களை சுவர்மேல் மாட்டுவதை என் துணைவியார் கலாவதி மிகவும் வெறுத்தார். ஒருவர் இருக்கும் வரை இயன்றவரை நன்றாகக் கவனித்தாலே போதும் என்று அடிக்கடி என்னிடம் சொன்னார். என் கருத்தும் அதுவே. இறந்தவர்கள் நினைவான அறச்செயல்களை எந்த நாள் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் விளம்பரமின்றிச் செய்யலாம்.

16.12.23

பனிக்காலமே நல்லது!

"பனிக்காலமே நல்லது."
பனிக்கு+ஆலமே நல்லது.
ஆலம் = கொடிய நஞ்சு (கடும் விஷம்)

இறுமாப்பு

இறுமாப்பு மிகுந்த
விண்மீன்
கறுத்து
எரிகல்லாய்த்
தரம்தாழ்ந்து
பொறுமை நிறைந்த
பூமிமேல் 
உறுத்து வீழ
நேரம் பார்க்கிறது.
- தேவமைந்தன்

16.10.23

அகதியாக அப்பா...

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் பர்மா அகதியாகக் கோவைக்கு வந்தபின் அப்பாவுக்கு ஆறுதல் மிகவும் தேவைப்பட்டிருக்கிறது. மறுகுடியமர்த்தச் சான்றிதழ்(Repatriate certificate) பெறுவதற்காகச் சென்னைக்குச் சென்றிருக்கிறார். ஊழலற்ற அரசு இருந்ததால் போன அன்றே சான்றிதழ் கிடைத்திருக்கிறது. அடுத்து, தனக்குப் பிடித்த சுவாமி விவேகானந்தரின் இந்தப் புத்தகத்தை 29/6/1946 அன்று வாங்கிக்கொண்டு கோவை திரும்பியிருக்கிறார். அதில் தன் பர்மா நிறுவனமான ஓரியண்டல் நிட்டிங் ஃபேக்டரி முத்திரை குத்தியிருக்கிறார். ஏராளமான செல்வம், இரண்டு கார்கள் எல்லாமிழந்து, எங்களை 'ஐராவதி' என்ற கப்பலில் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பிவிட்டு, தன் நண்பர்களான கண.முத்தையா செட்டியார், வெ.சாமிநாத சர்மா முதலானோரோடு சிரபுஞ்சி வழியே நடைப்பயணமாக காஷ்மீர் வழியாக இந்தியா வந்திருக்கிறார் தந்தை இரங்கூன் பி.கே. அண்ணார். இதைத் திண்ணை.காம் வலையேட்டில் கட்டுரையாக எழுதியிருக்கிறேன். திண்ணை.காம் வலையேட்டின் முன்னை ஆசிரியரான திருவாளர் கோபால் ராஜாராம் பெருமைப்படுத்திப் பதிப்பித்தார். பி.கே.அண்ணன் என்று நான் தட்டெழுதியதைத் திருத்தி 'ஒரு மனிதரின் வாழ்க்கை: பி.கே.அண்ணார்' என்ற தலைப்பில் வெளியிட்டார். அப்போது அவர் அமெரிக்கா, நியூ ஜெர்சியில் பணியாற்றினார். என் தந்தை மீதிருந்த அன்பால், நாகரத்தினம் கிருஷ்ணாவின் புகழ்மிக்க நாவல் 'நீலக்கடல்' குறித்த என் வயணமான  கட்டுரையை வெளியிட்டபோது அட்டைப்படமாக என் படத்தை வெளியிட்டார். அகதியான தந்தையைப் பற்றி ஒரு பேராசிரியர் இவ்வளவு ஆழமாக எழுதியிருந்தார் என்ற அன்பாலும் நாகரத்தினம் கிருஷ்ணாவின் 'நீலக்கடல்' குறித்த கட்டுரையைப் பாராட்டுமுகமாகவும் என் படத்தை வெளியிட்டதாக அவர் குடும்பத் திருமணத்தின்போது அறிந்து கொண்டேன்.