9.3.06

சித்தரும் சூஃபியரும்

சித்தர் என்ற தமிழ்ச்சொல்லுக்கு கைகூடுகை பெற்றோர் என்று பொருள். கைகூடுகை என்பது அறிவில் தெளிவு. தெளிவு என்பது விளக்கம், துலக்கம், மன அமைவு, நற்காட்சி, ஆராய்வு என்ற பொருள்களைக் கொண்டது. சித்தி என்ற சொல்லுக்கு கைகூடுகை, வீடுபேறு என்றெல்லாம் பொருள்கள் உள்ளன. சூஃபியர் என்ற சொல் சூஃபி என்ற அரபுமொழிச் சொல்லின் ஆக்கம். அரபுமொழியில் ‘சூஃப்’ என்ற சொல் கம்பளி(wool)யைக் குறிக்கும். பின்னர் அச்சொல்லே ‘கம்பளியை உடையவன்’ (a man of wool) என்ற பொருள் குறிக்கும் ‘சூஃபி’ என்னும் சொல்லை அரபுமொழி இலக்கியத்துக்குத் தந்தது. படிப்படியாக, பாரசீகத்தில் முசுலீம் மெய்ப்பொருளியலும் ஆதனிய மறையியலும் இணைந்தவொரு முறையைப் பின்பற்றுகின்ற ஒருவரை அச்சொல் குறிக்கலானது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சூஃபிய மெய்யுணர்வாளர்களோடு பாரசீக ‘சூஃபியாக்கள்’ என்ற மெய்யுணர்வாளர்களையும் இக்கட்டுரையில் இணைத்தே காணலாம். எண்மாப்பேறு (அட்டமாசித்தி) நுண்மை, பருமை, மென்மை, விண்டன்மை [பொன்போலக் கனமாதல்], விரும்பியதெய்தல், [மற்றவர்களையும் மற்றவற்றையும்] தன்வயமாக்கல், நிறைவுண்மை[கூடுவிட்டுக்கூடுபாய்தல்], ஆட்சியனாதல்[விரும்பியவற்றையெல்லாம் நிறைவுறுத்திப் பட்டறிதல்] என்பவை எண்மாப் பேறுகள். எண்மாப்பேறுகள் கொண்டோர்தாம் சித்தர் - சூஃபியரா? கைகூடுகை என்பதற்கு, பொதுவான மாந்தருக்குக் கிடைக்காத அரிய பேறு என்ற பொருளையே பொதுமக்கள் எப்பொழுதும் கற்பித்து வருகிறார்கள். மாந்தருக்கு இயல்பானவற்றில் உள்ள நாட்டத்தைவிடவும் இயல்புக்கு மீறியவற்றில் நாட்டம் மிகுதி. அதனால்தான் தமிழ்ச்சித்தர்களுக்கு எண்மாப்பேறுகள் போதா என்று அறுபத்து நான்கு வகைச்சித்துக்களை உடைமையாக்கி மனநிறைவடைந்தனர். ஞானவெட்டியான், இயாகோப்பு வைத்தியவாதசூத்திரம் ஆகிய நூல்களும் இதற்கான குறிப்பைத் தருகின்றன. [இதுகுறித்தும் சித்துக்கள் வகைகளின் வயணமும் அறிய: முனைவர் க.நாராயணன், சித்தர் தத்துவம், புதுச்சேரி, 1988, 2003- ப.49+] சூஃபியாக்கள் [பாரசீக சூஃபி மெய்யுணர்வாளர்] பரம்பொருளை ‘உண்மை” என்றே சுட்டுகின்றனர். ‘தன்னுணர்வு கொண்ட விழைவு,’ ‘அழகு,’ ‘ஒளி’ அல்லது ‘எண்ணம்” என்ற முந்நிலையில் அவர்கள் கடவுளை வைத்துச் சுட்டுவதாக அல்லாமா இக்பால் அவர்கள் கூறியுள்ளார். [Dr.Shaik Muhammad Iqbal, The Development of Metaphysics in Persia, London. மேற்கோள்: தேசமானிய, டாக்டர். ஏ.எம். முகம்மத் சகாப்தீன், இறைவனும் பிரபஞ்சமும், கொழும்பு-7. 1995.] ஆதனிய வழியில் மிகுந்த முன்னேற்றம் அடைந்த சூபிய மெய்யுணர்வாளர்களுக்குப் பொதுவான மாந்தருக்குக் கிடைக்காத பற்பல அரிய ஆற்றல்கள் அருளப்பெற்றிருப்பதாகப் பலர் நம்புகிறார்கள். குறைந்த அளவு, தொலைவிலுணர்தல்[Telepathy] திறவோர் காட்சி[Clairvoyance] தொலைவியக்கம்[Telekinesis] ஆகிய அரிய ஆற்றல்களேனும் அவர்களுக்கு இருந்தாக வேண்டும் என்று பெரும்பாலோர் எதிர்பார்க்கிறார்கள். “... அதாவது மனிதத் தன்மைக்கு மீறினவர்களாக...”( பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள், தொகுப்பாசிரியர்; வே. ஆனைமுத்து, 1974. ப.1348.) இடர்களையும் நோய்களையும் நீக்கிக்கொள்ள ‘தர்கா’க்களுக்கும் ‘சியார’ங்களுக்கும் மதவேறுபாடின்றிப் பொதுமக்கள் செல்வதும் வழக்கமாகவுள்ளது. குறிப்பாக மாணிக்கப்பூரில் தோன்றிய நாகூர் ஆண்டகையின் இடமான நாகூர் தர்காவுக்கும்; முத்துப்பேட்டை முதலான இடங்களுக்கும் பயணம் மேற்கொள்பவர்களைச் சொல்லலாம். இவற்றையெல்லாம் பெரியார் அவர்கள் விரிவாகக் கண்டித்திருக்கிறார்கள்.(மேலது: பக்.1372,1379.) பதினெண்மர்தாம் சித்தர்களா? மரபு வழியாக 1.அகத்தியர் 2.போகர் 3.கயிலாயநாதர் 4.கோரக்கர் 5.திருமூலர் 6. சட்டைமுனி 7.கொங்கணர் 8.கூன்கண்ணர் 9.இடைக்காடர் 10.நந்தீசுவரர் 11.புண்ணாக்கீசர் 12.உரோமர் 13.மச்சமுனி 14.கூர்மமுனி 15.கமலமுனி 16.வாசமுனி 17.பிரமமுனி 18.சுந்தரானந்தர் ஆகியோரும் இவர்கள் அல்லாமல் கருவூரார், புலத்தியர், புசுண்டர், இராமதேவர், தன்வந்திரி, கபிலர் முதலானோரையும் சித்தர் என்று நிரற்படுத்துவர். இந்நிரலைக் கூர்மையாக ஒரு முறை நோக்கினால் போதும். மனம் போன போக்கில் எவரோ வகைப்படுத்தியது இது என்று உணரலாம். வேதம், மதம் - இரண்டையும் மறுத்தவர்கள் வேதத்தையும் மதத்தையும் எதிர்த்த சித்தர்களுள் அகப்பேய்ச் சித்தர், சிவவாக்கியர், பாம்பாட்டிச் சித்தர், திருவருட்பிரகாச வள்ளலார் ஆகியோர் மிகவும் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்கள் வாழ்ந்த காலம் நிகழ்குமுகாயம்போல் வேத-மத எதிர்ப்பாளர்களுக்குப் பாதுகாப்புத் தராதது. இவர்களின் கொள்கைத் துணிவு பெரிதும் போற்றத்தக்கது. சித்தருள் சீர்திருத்தச் சிற்பியார் மறுப்பாளராக மட்டும் இல்லாமல் உடன்பாட்டு முறையில் சீர்திருத்தங்கள் பலவற்றுக்கு வித்திட்ட துணிவு வள்ளாலாருக்குத்தான் இருந்தது. அவர் அவ்வாறு ஆற்றியவை:- 1. நாட்டிலும் குமுகாயத்திலும் வீட்டிலும் ஒருமைப்பாடு நிலவப் பாடுபட்டார். 2. சாதி, மத, குல வேறுபாடுகள் ஒழிய எழுத்தாலும் பேச்சாலும் பாடாற்றினார். 3. வகுப்பு வேற்றுமை என்பது புண்ணிய பாவங்களால் இயற்கையாக விளைவது என்ற கருத்துப் பரப்புரையை வன்மையாகச் சாடினார். 4. அறிவுக் கல்வியும் ஆதனியற் கல்வியும் பெற மகளிர்க்கு உரிமை உண்டு என்று வெளிப்படையாக அறிவித்தவர். 5. கோயிலுக்குள் புகலாகாது என்று தமிழருள் பலரை மதக்கோட்பாட்டினர் கருத்துப் பரப்பலாலும் வன்முறையாலும் தடுத்துக் கொண்டிருந்த காலத்தில், உலகில் வாழும் எல்லாரும், சமய-மத வேறுபாடு எதுவுமின்றி, சென்று கூடி வழிபடக்கூடிய நன்னெறி மெய்யியப் பேரறிவுக் கழகத்தை உருவாக்கியவர். 6. கிழக்கிந்தியக் குழுமத்தின் வழி இங்கிலாந்துப் பேரரசு நாவலந்தீவினுள் நுழைந்து அறிவடிப்படையாலும் அதிகார அடிப்படையாலும் மாந்தரை அடிமைப்படுத்திய காலத்தில் ‘கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக, அருள் நயந்த சன்மார்க்கர் ஆள்க!’ என்ற முழக்கத்தை முன்வைத்தவர். 7. உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கத்தை முதன்முதலாகக் கண்டித்தவர். 8. எல்லாவற்றுக்கும் மேலாக, தனிமாந்தன் தன் உடலோம்ப வேண்டிய முறைமைகளையும் ‘நித்திய கரும விதி’ என்ற தலைப்பின்கீழ் வகுத்ததுடன், திருமூலர் வழியில் உடம்பாரையும் உயிராரையும் காப்பதற்கென்றே ‘மூலிகை குண அட்டவணை,’ ‘சஞ்சீவி மூலிகைகள்,’ ‘மருத்துவக் குறிப்புகள்’ என்ற மூன்றையும் ஆராய்ந்து தொகுத்தவர். 9. வள்ளலார், ஆங்காங்கே தூக்கி எறிந்தவை போக, அன்பர்களால் தொகுக்கப் பெற்ற பாட்டுகள் மட்டும் எட்டாயிரத்துக்கும் மேற்பட்டவை. பெரும் பாவலராகவும் தமிழகத்தின் முதல் புரட்சிப் பாவலராகவும் திகழ்ந்திருக்கிறார். 10. பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு ஆவன படைத்தளித்தவர். 11. மேற்குறிப்பிட்டுள்ளனவற்றுக்கெல்லாம் கொடுமுடியாகத் தன் தாய்மொழியாம் தமிழே உலகிலுள்ள மொழிகளுக்கெல்லாம் முதன்மொழி என்பதைச் ‘சத்தியப் பெரு விண்ணப்ப’த்தில் அறிவித்திருக்கிறார். “எந்தையுனைப் பாடி மகிழ்ந்து இன்புறவே வைத்தருளிச் செந்தமிழை வளர்க்கின்றாய்!” என்றுபாடி, “அருச்சனை பாட்டேயாகும்” என்ற சேக்கிழார் முழக்கத்தை மேலும் கூர்மைப்படுத்தியவர். 12. ‘மனுமுறை கண்ட வாசகம்’ இயற்றி விதிக் கொள்கையை அறிவுக் கோட்பாட்டால் வென்று காட்டியவர். [இந்நூலில் மாந்தநேயம், அரசியல் தெளிவு முதலிய ஒட்ப திட்பங்கள் நிரம்பியுள்ளன.] பட்டினத்தார் கூற்றுப்படி, வள்ளலார் சித்தர் ஆவாரா? சித்தர்களின் புறத்தோற்றம் இயல்பானதாகத்தான் இருக்கும், குறிப்பாகவும் சிறப்பாகவும் எதுவும் தோன்றாது என்பதை, “வேர்த்தால் குளித்துப், பசித்தால் புசித்து, விழி துயின்று பார்த்தால் உலகத் தவர்போல் இருப்பர் பற்று அற்றவரே!” (பட்டினத்தார் பாடல்கள்: பொது. பா.19) என்ற பட்டினத்தார் பாடலும் [“மாத்தானவத்தையும்” என்று தொடங்கும் இப்பாடலைத்தான் குமரி முதல் வேங்கடம் வரையிலுள்ள இடு-சுடுகாடுகளில் பணிபுரிவோர் தவறாது பாடுவோர்; ‘பிதாமகன்’ என்ற தமிழ்த் திரைப்படத்திலும் இப்பாடல் இடம்பெறுகிறது] வேறுபாடான தோற்றம் இருக்கக் கூடும் என்பதை, “பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்து, இட்ட பிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி, நரிபோல் உழன்று, நன்மங்கையரைத் தாய்போல் கருதித், தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச் சேய்போல் இருப்பர்கண்டீர்! உண்மை ஞானம் தெளிந்தவரே!” (மேலது, பா.35) என்ற அவர்தம் பாடலும் சித்திரிக்கின்றன. (வளரும்...) (நன்றி: ‘வெல்லும் தூயதமிழ்’ இலக்கிய மாத இதழ், 2037, கும்பம் [மார்ச்சு 2006])

2 comments:

கொடைக்கானல் said...

HIghly informative!

MURUGAN S said...

தமிழ் அன்பரே,

தமிழ் தகவல் தொழில் நுட்பத்தில் வலைதளம் மூலமாக பல அரிய தகவல்கலளை தந்து எங்களை உற்சாகத்தில் ஆழ்த்திகொண்டிருக்கின்றீர்கள். உங்கள் வலைத்தளம் மேலும் மேலும் உயர வாழ்த்துகின்றோம். நாங்கள் புதிதாக அமைத்திருக்கும் இந்த வலைதளத்தினையும் பார்வையிட்டு உங்கள் மேலான கருத்துக்களை எங்களுக்கு அனுப்புமாறு கேட்டுகொள்கிறோம்.

தமிழ் குழந்தை
தமிழ் சிறுவன்
தமிழ் சமையல்ருசி
ஆன்மிகம்
தமிழ் பொதுஅறிவு

அன்புடன்,
தமிழ் குழந்தை